தனது நிலத்தை வரைந்த தி.ஜானகிராமன்


னது நிலத்தை வரைந்த எழுத்தாளர்கள் நிஜத்தில் பேரனுபவமான வாசக ஆதரவைப் பெற்றவர்கள். தி.ஜானகிராமனும் புனைவுகளை இருள் என்ற குறைந்த ஒளியில் ஒரு நெசவு மாதிரி ஒரு கனவைக் கட்டிக்காப்பது மாதிரி அறிவு தளத்திலிருந்து விலகி உணர்வு தளத்திலேயே தனது எழுத்தின் பாதைகளை அமைத்துக் கொண்டவர். மொழியால் அமையப்பெற்ற கலையை விலக்கி கலையால் அமையப்பெற்ற மொழியைக் காதலோடு பார்த்த கண்கள் அவருடையது.

 1963-ல் வெளிவந்த அவரது மூன்று நெடுங்கதைகளான கமலம், அவலும் உமியும், தோடு இம்மூன்று கதைகளும் தான் அவரது மோகமுள், அம்மா வந்தாள், மரப்பசு ஆகிய நாவல்களுக்கான மூல வித்தாக அமைந்திருக்கின்றன. இந்தக் கதைகளுக்கெல்லாம் அடிநாதம் அன்புதான். துணை என்பது ஒவ்வொரு உயிருக்குமான அங்கம் என்பதே இவரது களங்களாக அமைந்திருக்கிறது. கயமை கள்ளத்தனம் தண்டனைக்குரியவனாக இருந்தாலும் தி.ஜானகிராமன் கட்டமைக்கிற அடிப்படைக் காரணம் தனித்துவமான அடையாளம் பெற்று தமிழ் இலக்கியச் சூழலின் சோம்பல்வாசகச் சூழலை மாற்றிக் காட்டியது என்றுதான் சொல்லவேண்டும்.

                காற்று யாரையேனும் கேட்டுக்கொண்டு வீசுமா

                நிலவு யாரையேனும் கேட்டுக்கொண்டு தோன்றுமா

                சூரியன் யாரையேனும் கேட்டுக்கொண்டு உதிக்கிறதா?

அப்படிதான் தி. ஜானகிராமனின் கதாமாந்தர்களினூடே உதிக்கின்ற காதலும் காமமும். மாப்பாசான் சொல்வது மாதிரி தானடைந்த உணர்ச்சியின் அதே உயரத்தில் வாசகனையும் உட்கார வைத்தவை இம்மூன்று நெடுங்கதைகளும். உரையாடல்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கப்பெற்றக் கதைகளாக இருந்தாலும் குறைந்த ஒளியில் வரையப் பெற்ற சித்திரங்கள் மாதிரி வாசகன் கதாப்பாத்திரங்களின் விரல்களைப் பற்றிக்கொள்கிறான். மொழியும் கதைப்போக்கும் இசையமைதியைப் பெற்று வரையரைகளற்ற எதிர்வினைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்ற கதாப்பாத்திரங்களோடு உறவாடும் மனசாட்சிகளின் அதிர்வுகளாகத்தான் மனித வாழ்வின் சேதனங்களும் அசேதனங்களும் ஒருசேர முளைவிட்டுக்கொண்டே இருக்கின்றன.

இவரது படைப்புப் பயணத்தை காலக்கட்டங்களுக்குள் வகைப்படுத்திவிட முடியாது. சிறுகதைகளுக்குள் நெடுங்கதைகளையும் நெடுங்கதைகளுக்குள் புதினங்களுக்கான மூலங்களையும் படைப்பின் அங்கமாகக் கொண்டிருந்தவர்.

மனிதர்களின் மனச்சித்திரங்களைத் தனது புறவயமான எழுத்தின் மூலம் பதிவு செய்த படைப்பாளிகள் முக்கியமானவர்கள். ஒரு காலக்கட்டத்திய மனிதர்களை, அவர்களின் வாழ்வை புழங்குதளத்தை வெளிப்படுத்தியவர்கள். அந்த வகையில் தஞ்சை மாவட்டத்து பிராமணர்களின் வாழ்வையும் இசை மரபையும் பதிவு செய்த ஆளுமை தி.ஜானகிராமன்.

பலவிதமான குணச்சித்திரங்கள் அலைவுறும் கதாமாந்தர்களோடு தி.ஜானகிராமனின் படைப்புலகம் அமைந்திருக்கிறது. வெறுமனே கருத்து, நீதிபோதனைகள் இவைகளையெல்லாம் புறந்தள்ளி அழகியல் மற்றும் கலையைச் சார்ந்து இயங்கும் எழுத்து இவருடையது.

தமிழின் யதார்த்த எழுத்துமுறையில் இசை மொழியோடு கூடிய தனித்த அடையாளத்தை உளச்சித்தரிப்பு , பாத்திரப்படைப்பு, கதை சொல்லும் த்வனி, நடை இப்படி படைப்பின் கூறுகள் கைவரப் பெற்றதால்தான் காலம் முன்னிறுத்தும் படைப்பாளியாக தி.ஜானகிராமன் இருக்கிறார்.

நாழி ஓடுகளின் அடுக்குகளைப்போல் கதாபாத்திரங்களின் பூர்வமென்பது பந்தங்களால் உருவாகியிருக்கிறது. காதலும் காமமும் உறவும் பிரிவுமாக ஒவ்வொரு நெடுங்கதையிலும் நாழிப்பாசி அக்ரஹாரத்து வீடுகளில் பூத்தபடியிருக்கிற இக்கதைகளின் வித்தகம் அதன் கதைசொல்லும் முறையையும் கலையையும் மேன்மையுறச் செய்வதோடு வாசக அனுபவத்திற்கான மதிப்பையும் பெற்றுத்தருகிறது.

குடும்ப சமூக உறவுகளை முன்வைத்து இவர் உருவாக்கிய கேள்விகளுக்கு இன்றளவும் விடை தெரியாத புதிர்களாகிப் போன நமது துரதிர்ஷ்டமான யதார்த்தத்தையும் வாசிப்பின்போது கவனத்தில் வைத்துக் காலம் மீதும் இடைவெளி மீதுமுள்ள கருத்துக்கள் வாழ்வின் அனுபவங்களோடும் கதைத்தன்மையுடன் வெளிப்படுத்துபவையாகத் திகழ்கின்றன.

அவருடைய சூட்சும யதார்த்தம் என்பதும் கதையில் மறைந்துள்ள இன்னொரு கதையைக் காண்பதாகவும் இருக்கிறது. இந்த வித்தகக் கதைத்தன்மைக் கைவரப்பெற்ற ஜானகிராமனின் கதைசொல்லும் த்வனியில் இருண்மையோ குழப்பமோ இல்லை. மாறாக தெளிவும், மறைமுகமாக அர்த்தச் சிதறல்களும் கொண்டிருக்கின்றன. நவீனமயமான வாழ்வில் நாம் தொலைத்தவற்றில் முக்கியமான ஒன்று அன்பு. இவருடைய கதைகளில் முதன்மையானவர்கள் அன்பைத் தேடுகிறார்கள்.

கமலம், அவலும் உமியும், தோடு இந்த மூன்று நெடுங்கதைகளும் இதற்கு பலமான சான்றாகக் கொள்ளலாம். இந்த மூன்றுகதைகளும் வாசிப்பனுபவம் பெறுகிறவனுக்கு ஏற்படுத்துகிற இனம்புரியாத உணர்வு முக்கியமான ஒன்று. இப்படி இனம்புரியாத உணர்வில்தான் படைப்பாளியும் வாசகனும் தீண்டும் இடத்தை ஒரு சிறகைப்போல இக்கதைகளில் விரிவடைகிறது.

 வெறும் மொழி அலகுகளையோ வெற்று விவரணைகளையோ சற்றும் ஏற்காமல் கதை அலகுகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கி கதையாடலையும் அழகியலையும் காதலோடு எழுதியிருக்கிறார். ஒரு படைப்பு தனது களத்திற்குள் தொன்மத்தையும் கதையாடலையும் அழகியலையும் ஒரு தாய் தனது குழந்தையை சுமப்பது மாதிரி சுகமாக சுமக்கத் துவங்குகிறதோ அப்போதே அந்தப் படைப்பு அந்த பிரதி இலக்கிய அந்தஸ்த்தை அடைந்துவிடுகிறது. ஜானகிராமனின் நெடுங்கதைகளையும் அப்படித்தான் சொல்ல வேண்டும்.

இந்த நெடுங்கதைகள் முடிவை நோக்கிப் போவதில்லை. திடீரென்று அறுபட்டது போலான முடிவது. எதுவும் முடியாதது என்பதை சூசகமாக உணர்த்துகின்றது. துல்லியமான முடிவுகள் எதையும் எந்தப் பாத்திரத்தின் மீதும் திணிக்காமல் யதார்த்த வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடக்கலாம் என்பதைப் பாசாங்கற்று புனைவாக்கியதில் தி.ஜானகிராமனின் படைப்பாளுமை தனித்துவமானது. அதனால்தான் இக்கதைகளின் சம்பவங்களுக்கு சாட்சியாக நின்று வாழ்வு எதிர்கொள்ளும் விஷயங்களைக் கதைகளாக மாற்றியுள்ளார். வாழ்வு வாழ்க்கை என்று இரண்டு பதங்களைப் புதுமைப்பித்தன் சொல்வார். தி.ஜானகிராமன் வாழ்வை எழுதியவர். தன் தீர்மானங்கள் லட்சியங்கள் விதிகள் பிரச்சாரங்களுக்கு கலையை உருமாற்றுவது இந்த வேலையெல்லாம், ஜானகிராமன் என்ற கலைஞனிடம் இல்லை. உரையாடலுக்கான மறைமுக பின்புலத்தை தக்கவைத்திருப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. அந்தப் பின்புலம் வாசிக்கும் நமக்கு தெரியவும் கூடும் தெரியாமலும் போகும். அது வாசிக்கப்போகும் நம்மிடம்தான் இருக்கிறது. எழுதுபவரிடம் ஒருபோதும் அது இல்லை.

ஒரு படைப்பாளி பர்சனலாகவும் கமிட்மெண்ட் கொண்டிருக்க வேண்டும். சோசியலாகவும் கமிட்மெண்ட் கொண்டிருக்க வேண்டும் என்று ஆத்மாநாம் கூறுவார். இது இந்தக் கலைஞனுக்குப் பொருந்தக்கூடிய ஒன்று. கதைகளில் வெறும் சமூகம் மட்டுமே இல்லாமல் கலை உதிரிகளாக நிறைய பாத்திரங்கள் உலவுகிறார்கள் ஸ்திரத் தன்மையை ஜானகிராமன் ஸ்தாபிக்கிறார். சிறிது வெளிப்படையான ஆனால் கலை அழகோடு காணக்கிடைக்கும் இக்கதைகளின் மொழி அதன் மையமான உறவுச்சிக்கல்களையும் வெளிப்படுத்துகிறது. இதுவே இவரது கதைகள் வெளிப்பாட்டு அடிப்படையில் தன்னை மாற்றிக்கொண்டு புதிய புதிய வாசகர்களை இன்றளவும் சென்று சேர காரணங்களாகிறது.

இந்தக் கதாப்பாத்திரங்கள் வாழ்வின் மனசின் சாரம்சங்களின் சலனங்கள்தான். இன்னொன்று ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்குள்ளும் தொடரும் ஒரு ஹாஸ்ய உணர்வு, ஒருவிதமான ஆனந்தத்தன்மை தொடர்வதையும் வாசிக்கும்போது உணரமுடியும் ஒரு கதை சொல்லியாக தி.ஜானகிராமன் சில அம்சங்களைக் கொண்டிருக்கிறார். உறவுகளைக் கொண்டாடி அர்த்தங்களை உருவாக்குகிறார். வாழ்வின் சாரத்தை அதன் சாரம்சங்களோடு தனிமையோடு உறவாடவிடுகிறார். இதன் மூலமாகவே முக்கியமான தனது நிலப்பரப்பையும் வரைகிறார்.

இதனால் தான் தமிழ் நாவல்களின் உளச்சித்தரிப்புக்கு என்று இருக்கிற ஒரு பெரும் பரப்புள் தி.ஜானகிராமனின் நெடுங்கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அன்பு, காதல், காமம், ஏக்கம், வன்மம் எல்லாமும் நிரம்பிய மனிதர்கள் தாங்கள் தொலைத்துவிட்ட ஒன்றைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். தஞ்சை மாவட்டத்து அச்சு அசலான வாழ்வு, நடைமுறை, உணவு, திண்ணைப் பேச்சு என்று தான் அடைந்த மனக்கிளர்ச்சியை வாசகர்களுக்கும் தந்திருக்கிறார். அதனால்தான் உணர்ச்சித்தளமும் அறிவுத்தளமும் இந்த நெடுங்கதைகளுக்குள் சமநிலைக்கு உட்படுத்தப்பட்டு எழுத்து வித்தகம் அதன் கதை சொல்லும் முறையையும் கலையையும் மேன்மையுறச் செய்வதோடு வாசக அனுபவத்திற்கான மதிப்பையும் பெற்றுத் தருகிறது.

பூங்காவிலுள்ள அன்னங்களுக்கு

ஆகாயம் முழுவதும்

சொந்தமாயிருக்கும்

அவற்றின் இறக்கைகள்

வெட்டப்படாதிருந்தால்.

இப்போது

அவை உலவுகின்றன தினமும்

அதே விதமாகச் சிற்றடி வைத்து.

(ஜென் கவிதை)

இந்த ஜென் கவிதையின் தத்துவங்களோடு கமலம் நெடுங்கதையில் வருகிற பெரிய அதிகாரி வீட்டுக்கு சமையல் வேலைக்குப் போகிற சுப்பக்காவின் பிள்ளை சாமிநாதனையும் பெரிய வீட்டுப் பெண்ணாக வருகிற கமலத்தையும் பொருத்திப் பார்க்க முடிகிறது. கதைப் போக்கின் மேலெழும் ஆர்ப்பரிப்பும் அதன் அடியாழத்து அமைதியையும் நித்தியமான சாஸ்வதத்தோடு ஸ்தாபித்திருக்கிறார்.

ஒருபுறம் அறியப்படுகிற உலகமாகவும் மறுபுறம் உள்ளாழத்துக்குள் இருண்டு கிடக்கிற புனைவாக இவரது கதைப்பிரதிகளைச் சொல்லவேண்டும்.

பிணியில் ஒரு பனிநாரை

மறைந்திருக்கிறது ஒரு குளிர்காலத்துப் புல்.

தன் வடிவிலேயே மறைத்துக் கொள்கிறது தன்னை.

என ஜென் மரபில் தோய்ந்த டோஜன் குருவால் எழுதப்பட்ட கவிதையைப் போல தி.ஜானகிராமனின் கதாமாந்தர்களும் வாசகர்களும் அவரவர்களுக்கானத் தனிமையைத் தன் வடிவிலேயே மறைத்துக் கொண்டிருப்பதும் இவரது கதைப் பிரதிகளின் வெற்றி, பெரும் வாசகப் பரப்பு, தனித்துவம் எல்லாம்.

கதைவெளியின் தளங்கள் காதல் காமம் உறவுச்சிக்கல் என்கிற சொல்லடுக்குகளில் தொடர்ந்தாலும் புதிய புதிய தளங்களை வாசிக்கும் நமக்கு கொடுத்துக்கொண்டேதான் இருக்கின்றன. இந்த வித்தையான கதைத்தன்மை அவரது புனைவின் பாதையாகவே உருவெடுத்து இந்த நெடுங்கதைகளிலிருந்து மோகமுள், அம்மா வந்தால், மரப்பசு, செம்பருத்தி போன்ற புதினங்களை தமிழ் நாவல் கலைக்குப் பெற்றுத்தந்தது.

விமர்சகர் வெங்கட்சாமிநாதன் சொல்வது போல ஜானகிராமன் படைக்கும் உலகம் லக்ஷியவாதிகளால் நிறைந்தது. அவர்கள் தாம் தமக்கு விதித்துக் கொண்டுள்ள லஷியங்களை காக்க எப்போதும் வாழ்க்கையை வதைக்கும் யதார்த்தங்களையும் சூழ்நிலையையும் போராடிக்கொண்டிருக்க வேண்டிருக்கிறது. இதனடிப்படையிலேயே இவரது அவலும் உமியும், தோடு போன்ற நெடுங்கதைகளின் கதாப்பாத்திரங்களும் இருக்கிறார்கள். காலம் இடம் சம்பாஷனைகள் உறவு என்ற உத்திகளை மட்டுமே வைத்து நிறைய எழுத்து விளைச்சளைக் காட்சி ரீதியான தனது கலாஉத்தியாக மாற்றியிருக்கிறார்.

 கல்லூரி காலங்களில் ‘சுருதி’ என்ற சிறுபத்திரிக்கையைத் துவங்கியபோது அதன் முதல் இதழை அப்போதைய முன்னோடிப் படைப்பாளிகளுக்கு நேரடியாக நானும் துரை.அறிவழகனும் கொண்டுபோய் கொடுத்தோம். வாழ்வின் மறக்கவியலாத பயணங்களில் அதுவும் ஒன்று.

சென்னை தி.நகரில் தாமோதரரெட்டித் தெருவில் வைத்து அசோகமித்திரனிடம் கொடுத்தபோது எங்களது பிராயத்தைப் பார்த்து இதெல்லாம் ஏன் செய்கிறீர்கள் ரொம்ப கஷ்டமான காரியம். படிப்பை பாழாக்கிவிடும் என்றார். திருவனந்தபுரத்தில் வைத்து நகுலனிடம் கொடுத்தபோது இனிமேல் இதழை எனக்கு அனுப்பவேண்டாம் கண்பார்வை பலமில்லாமல் போய்விட்டது என்றார். வலங்கைமான் பக்கத்தில் கீழவிடளைக்கருப்பூரில் வைத்து தி.ஜானகிராமனிடம் கொடுத்தபோது அமைதியும் அன்பும் தவழ அதனை புரட்டிப்பார்த்தார். வாஞ்சையோடு பேசினார். அந்த வயோதிகமான அன்பும் அமைதியும் குறும்பும் தவழ்ந்திருந்த அந்த முகத்திற்கு இன்றைக்கு நூறு வயசு.


– வியாகுலன்

1 COMMENT

  1. வடிவ நேர்த்தியாலும் சிறந்த ஆளுமைகளின் பங்களிப்பாலும் அழுகு பெறுகிறது. வியாகுலனின் தனது ஞாபக அடுக்கிலிருந்து வரைந்துள்ள தி. ஜா. வின் முகம் சிறப்பு. வாழ்த்துக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.