தி.ஜானகிராமனுடன் ஓர் உரையாடல்


வணக்கம்,

கனலி-யின் தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழில் தி.ஜானகிராமனின் நேர்காணல் ஏதேனும் வெளியிட கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தோம்.  ஏற்கனவே  ‘சொல்வனம்’  இணைய இதழ் வெளியிட்ட தி.ஜானகிராமன் சிறப்பிதழில் தி.ஜானகிராமனும்   வெங்கடசாமிநாதனும் ஆல் இண்டியா ரேடியோவில் இணைந்து பேசிய சிறப்பான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது . அதைத்தவிர தி.ஜா-வின் நேர்காணல்கள் எதையும் கண்டறிய முடியவில்லை.  ஏதேனும் ஒரு முறையில் தி.ஜானகிராமன் உடனான நேர்காணலை வெளியிட்டால்  சிறப்பாக இருக்குமென நாங்கள் கருதியபோதுதான் ஒரு மாற்று  எண்ணம் மனதில் உருவாகியது.  தி.ஜானகிராமன் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள் சிலவற்றில் இருக்கும் அவரின் கருத்துக்களை எடுத்துக் கொண்டு அதற்குரிய கேள்விகளை  தயாரித்து ஓர் உரையாடல் வடிவத்தை  உருவாக்கலாமென தீர்மானித்தோம் . அப்படியாகவே இந்த நேர்காணலை உருவாக்கி இருக்கிறோம். நூறு சதவீதம் பதில்கள் அவரின் கட்டுரைகள் மற்றும் முன்னுரைகளில் இருந்து எடுக்கப்பட்டவையே.  கேள்விகள் மட்டும் கனலி இணைய இதழ் ஆசிரியர் குழுவினரின் முயற்சி. 

இனி , தி.ஜானகிராமனுடன் ஓர் உரையாடல்:

 

  • இலக்கியப் பணி என்று எதையெல்லாம் சொல்லலாம்.? அதற்கும் எழுதுவதற்கும் என்ன தொடர்பு? 

இலக்கியப் பணி என்று எதைச் சொல்வது? நான் வாழும் வாழ்க்கையின் ரசனையை எனக்கு எளிதாகக் கைவரும் எழுத்தின் மூலம் வெளிக்காட்டுகிறேன். இதில் சேவை என்பதோ, பணி என்பதோ இடமே பெறவில்லை. என்னுடைய இன்பங்கள் நான் துய்க்கும் சோக உணர்வுகளை நான் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவே நான் விரும்புகிறேன். சுற்றிலும் உலகம் சிறியதும் பெரிதாக வியப்புகள் நிறைந்தாக இயங்கிறது. அதைப் பார்த்துக் கொண்டிருப்பதே ஆனந்தம் தான். அதைத்தான் நான் பகிர்ந்து கொள்கிறேன் என் எழுத்து மூலம்.

  • கலைப்படைப்புகளை  எப்படி பார்க்கிறீர்கள்? 

எல்லோரும் நாட்டியம் ஆடுவதில்லை. எல்லோரும் சங்கீதம் பாடுவதில்லை. எல்லோரும் வயலினோ, மிருதங்கமோ வாசிப்பதில்லை. சிலருக்குத்தான் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது. அந்தச் சிலரிலேயே ஓரிரண்டுபேர் செய்யும் பொழுது நமக்கு மெய் மறந்துவிடுகிறது. தெய்வத்தையே கண்டு விட்டாற்போல புல்லரித்துப் போகிறோம். வேறு பலர் செய்யும் பொழுது, நமக்கு இந்த அனுபவம் ஏற்படுவதில்லை. ஒரு சமயம் நாம் பிரமிக்கலாம். மலைக்கலாம். வியக்கலாம். நுட்பமான ரசானுபவம், தன்மறதி போன்ற உணர்வு நிலைகள் வருவதில்லை. கலைஞர் உணர்வு மயமாகி ஆகி ஆடும்போதோ, வாசிக்கும் போதோ, தானாக ஒரு முழுமையும் ஓர் ஒருமையும் அந்தக் கலைப்படைப்பில் நிறைந்து, நம்முள்ளேயும் பரவி நிரம்பும். உணர்வு இல்லாமல் இயந்திர ரீதியில் படைக்கிறவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் சாமர்த்தியத்தையும் அசகாய சூரத்தனத்தையும் காட்டி நம்மைப் பிரமிக்க வைக்க முடியும், ஆனால் மெய்மறக்கச் செய்ய இயலாது. நான் இந்த நோக்கில்தான் எந்தக் கலைப் படைப்பையும் பார்க்கிற வழக்கம்.

  • சிறுகதை என்றவுடன் உங்கள் மனதில் வரும் எண்ணங்கள் என்னென்ன? அதன் வடிவம் எப்படி இருக்க வேண்டுமென்பதில் உங்கள் கருத்துக்களை அறிய ஆவல்…! 

எந்தக் கலைப்படைப்புக்கும் முழுமையும் ஒருமையும் அவசியம். அவை பிரிக்க முடியாத அம்சங்கள். சிறுகதையில் அவை உயிர்நாடி. ஓர் அனுபவத்தைக் கலைவடிவில் வெளிப்படுத்த சிறுகதையில் இடமும் காலமும் குறுகியவை. எனவே எடுத்துக்கொண்ட விஷயம் உணர்வோ, சிரிப்போ, புன்சிரிப்போ, நகையாடலோ முறுக்கேறிய, துடிப்பான ஒரு கட்டத்தில்தான் இருக்கமுடியும். சிறிது நேரத்தில் வெடித்துவிடப் போகிற ஒரு தெறிப்பும், ஓர் அவசரத் தன்மையும் நம்மை ஆட்கொள்ள வேண்டும். தெறிக்கப் போகிறது பட்டுக் கயிறாக இருக்கலாம். எஃகு வடமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தெறிப்பும் நிரம்பி வழிகிற துடிப்பும் இருக்கத்தான் வேண்டும். இந்தத் தெறிப்பு விஷயத்திறகுத் தகுந்தாற்போல் வேறுபடுவது சகஜம். கதையின் பொருள் சோம்பல், காதல், வீரம், தியாகம், நிராசை, ஏமாற்றம், நம்பிக்கை, பக்தி, உல்லாசம், புதிர் அவிழல் அல்லது இவற்றில் சிலவற்றின் கலவைகளாக இருக்கலாம். அதற்குத் தகுந்தபடி அந்தத் தெறிப்பு பஞ்சின் தெறிப்பாகவோ, பட்டின் தெறிப்பாகவோ, எஃகின் தெறிப்பாகவோ, குண்டு மருந்தின் வெடிப்பாகவோ சத்தம் அதிகமாகவோ குறைந்தோ மௌனமாகவோ மாறுபடும். எனக்கு வேறு மாதிரியாக இந்த அனுபவத்தை விளக்கத் தெரியவில்லை. பல சமயங்களில் சிறுகதையைப் பற்றி நினைக்கும் போது, நூறு அல்லது ஐம்பது கஜ ஓட்டப்பந்தயத்திற்கு ஆயத்தம் செய்து கொள்ளுகிற பரபரப்பும், நிலைகொள்ளாமையும் என்னைக் கவ்விக் கொள்கிறதுண்டு. இது ஒரு மைல் ஓட்டப்பந்தயமல்ல. சைக்கிளில் பல ஊர்கள், வெளிகள், பாலங்கள், சோலைகள், சாலைகள் என்று வெகுதூரம் போகிற பந்தயம் இல்லை. நூறு கஜ ஓட்டத்தில் ஒவ்வோர் அடியும் ஒவ்வோர் அசைவும் முடிவை நோக்கித் துள்ளி ஓடுகிற அடி அசைவு. ஆர அமர,வேடிக்கை பார்த்துக் கொண்டு செல்லவோ வேகத்தை மாற்றிக் கொள்ளவோ இடமில்லை.

  • ஒரு சிறுகதைக்கு அவசியம் அல்லது அவசியமில்லாதவை என்று எவையெவை இருக்கலாமென என்று கருதுகிறீர்கள்.? 

சிறுகதையில் சிக்கனம் மிக மிக அவசியம். வளவளப்புக்கு இடமே கிடையாது. வளவளப்பு என்றால் அதிகச்சுமை. ஓடுவது கஷ்டம்.

  • இலக்கியப் பிரிவில் சிறுகதை என்கிற வடிவத்தின் வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள்.?

கடந்த 100 ஆண்டுகளில் சிறுகதை வளர்ந்துள்ள போக்கைப் பார்த்தாலே இது தெரியும். வெறும் புற நிகழ்ச்சிகளில் தொடங்கி நுட்பமான மனதத்துவ ஆராய்ச்சி வரையில் அதன் பொருள் இப்பொழுது விரிந்திருக்கிறது. மேலெழுந்த வாரியான கவனத்திற்குப் புலப்படாத அக உணர்வுகள், நினைவோட்டங்கள், அடிமன நிலைகள் வெறும் கண்பார்வைக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கும் மன உந்தல் இவை எல்லாம் இன்று சிறுகதைப் பொருளாக வந்துள்ளன. ஆனால் எதைச் சொன்னாலும் ஓங்கி நிற்கும் ஒருமை அவசியம். ஒருமையுள்ள சிறுகதை முடிய வேண்டிய இடத்தில் தானாக முடிந்துவிடும். முடிகிற எல்லையைக் கடந்தால் ஒருமைக்கோப்புக்கும் ஊறுவிளையத்தான் செய்யும். பந்து எல்லையைக் கடந்து ஓடினால் கிரிக்கெட்டில் ஒன்றுக்கு நாலாக ரன் கிடைக்கும். சிறுகதையில் கிடைப்பது பூஜ்யம்தான்.

என்னை ஒரு நண்பர் கேட்டார். சிறுகதை, நாவல் எழுதுகிறவன் பெரிய இலக்கிய கர்த்தர்களின் நூல்களைப் படிக்க வேண்டுமா என்று. அவசியமில்லை என்று நான் சொன்னேன். அது எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் சொல்லவில்லை. இயற்கையாகவே அபாரமாக எழுதும் மேதை படைத்தவர்களை, புது வழிவகுக்கும் ஆற்றல் படைத்தவர்களை மனதில் வைத்துக்கொண்டு சொன்னது. என்னைப் போன்றவர் நிறைய படித்தால்தான் நல்லது. செக்காவ், மாப்பஸான், போ, மாம், தாகூர், கு.ப.ரா. புதுமைப்பித்தன், லா.ச.ரா, ஸீன் ஓகாஸி, ஜாய்ஸ், ஸ்டீஃபன் க்ரேன், ஹென்றி ஜேம்ஸ், போவன், காவபாட்டா போன்ற வெவ்வேறு சிறுகதை ஆசிரியர்களைப் படித்தால், சிறுகதைக்கான பொருள்களை நாடுவதில் எத்தனை சாத்தியக் கூறுகள் உண்டு என்பதும், சிறுகதை உருவத்தில் எத்தனை நூறு வகைகள் சாத்தியம் என்பதும் தெரியும். உருவம் என்று சொல்லும் போது ஆரம்பம், இடை, முடிவு மூன்றும் தெள்ளத் தெளிவாகத்தான் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதும் இந்தக் கதைகளைப் படித்தால் தெரியும். இந்த மூன்றும் தெளிவாகத்தெரிவதும், தெளிவில்லாமல் பூசினாற் போல் இருப்பதும் சொல்லுகிற விஷயத்தைப் பொறுத்தவை. ஒரு மரத்தின் நிழல் கருக்காகக் கத்தரித்தாற் போலும் விழலாம். பூசினாற் போலும் விழலாம். அது விளக்கின் தூரம், ஒளி முதலியவற்றைப் பொறுத்தது. உருவம் சரியாக அமைவது நம்முடைய உணர்வின் தீவிரத் தன்மையைப் பொறுத்தது. என்னுடைய அனுபவத்தில், உணர்ச்சியோ, சிந்தனையோ போதிய தீவிரத்தன்மை பெறும்போது, உருவமும் தானாக ஒருமைப்பாட்டுடன் அமைந்துவிடுகிறது. உணர்ச்சியின் தீராத தன்மை எப்போது, எந்தக் கால அளவில் போதிய அளவுக்குக் கைகூடும் என்று சட்டம் போடுவதில்லை. அது ஒவ்வொர் ஆசிரியரின் திறமையைப் பொறுத்தது. ஒருவருக்கு ஒரு மணியிலோ, ஒரு நிமிஷத்திலோ கைகூடுகிற தீவிரத்தன்மை, ஊறும்தன்மை, எனக்குக் கிட்ட ஒரு வாரமோ, ஒரு வருஷமோ பிடிக்கலாம். எனக்கு ஒரு கதையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், திடீரென்று வேறு ஒரு கதை தோன்றிச் சில நிமிஷங்களில் அதை எழுதி முடித்ததுண்டு. யோசித்துப் பார்த்தால், அந்தக் கதைக்கான வித்து மனத்தில் விழுந்து எத்தனையோ வருஷங்கள் ஆகியிருக்கும். தோட்டத்து மண்ணில் எப்பொழுதோ உதிர்ந்த விதையொன்று, மண்ணுள் பல காலம் உறங்கி, திடீரென்று ஒரு மழை அல்லது நைப்பிற்குப் பிறகு முளைப்பது மாதிரிதான் அது. உணர்ச்சியைக் குறுகிய காலத்தில் தீவிரமாக அனுபவிக்கப் பழக்கியும் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். எழுத்து தொழிலாகி, பத்திரிகைகள் பெருகிவிட்ட இந்த நாளில் இப்படிப் பழக்கிக் கொள்வது அவசியம் என்பதில் தவறில்லை.

  • ஒவ்வொரு முறையும் சிறுகதை எழுதும் போது உங்களுக்கு ஏற்படும் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ள முடியுமா? 

என் அனுபவத்தை மீண்டும் ஒருமுறை சொல்ல ஆசைப்படுகிறேன். எந்த அனுபவத்தையும் மனசில் நன்றாக ஊறப்போடுவதுதான் நல்லது. பார்த்த அல்லது கேட்ட ஓர் அனுபவம் அல்லது நிகழ்ச்சியைப் பற்றி உணர்ந்து சிந்தித்துச் சிந்தித்து ஆறப்போடத்தான் வேண்டும். இந்த மன நிலையை ஜே. கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி சொல்லும் “ Choice-less Awareness” என்ற நிலைக்கு ஒப்பிடத் தோன்றுகிறது. ஒரு நிகழ்ச்சியைச் சுற்றி சித்தம் வட்டமிட, வட்டமிட, அதன் உண்மை நம் அகத்தின் முன்னே மலரும். கதை உருவு முழுமையுடன் வடிவதற்கு என் அனுபவத்தில் இதுதான் வழி. அனுபவம் நம்முள்ளில் தோய்ந்து ஒன்றி பக்குவநிலைக்கு வருமுன் அவசரப்பட்டு எழுதினால் உருவம் மூளிப்பட்டு விடுகிறது. பழக்கத்தில் இது தெரியும்.

  • நிறைய புகழ்பெற்ற சிறுகதை எழுதியுள்ளீர்கள்.  இன்று புதியதாக சிறுகதை எழுத வருபவர்களுக்கு நீங்கள் சொல்லும் முக்கியமான அறிவுரை என்ன?

நான் சிறுகதை ஆசிரியனும் இல்லை. சிறுகதை வாத்தியாரும் இல்லை. (சிறுகதை எழுது என்று யாராவது என்னைக் கேட்டால் எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கிவிடும்.!) நான் எழுதிய நூற்றுக்கு மேற்பட்ட கதைகளில் ஒன்றோ இரண்டோதான் சிறுகதை என்ற சொல்லுக்குச் சற்று அருகில் நிற்கின்றன. மற்றவைகளைச் சிறுகதை என்றால் சிறுகதை என்ற சொல்லுக்கே இழிவு செய்கிற மாதிரி. இப்படியானல் ஏன் இத்தனை நாழி கதைத்தாய் என்று கேட்காதீர்கள். தோல்வி பெற்றவர்கள்தான் உங்களுக்கு வழி சொல்லமுடியும்.

  • மோகமுள் நாவலுக்கு வருவோம்.  ‘மோகமுள்’ நாவல் எழுதுவதற்கு  ஏதேனும்  தனிப்பட்ட அனுபவங்கள் காரணமா? 

கல்லூரியில் எனக்கு இணைபிரியாத நண்பன் ஒருவன் உண்டு. எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் தெய்வமாக வணங்குவான். அதை ஒரு தனி மதமாக வளர்த்திருந்தான் அவன். அவனோடு நெருங்கிப் பழகப் பழக என் உள்ளத்தில் சபலத்துக்கும் தூய்மைக்கும் மூண்ட ஓயாத சண்டைகள்.

நான் குடியிருந்த தெருவில் ஒரு கிழவர் ஐம்பத்தைந்து வயதில் ஒரு பதினாறு வயதுக் கட்டழகியை (அழகான பெண்கள் யார் யாருக்கோ போய்ச் சேர்வதைப் பாருங்கள்)க் கலியாணம் செய்து கொண்டு வந்து முப்பத்திரண்டு வயதுப் பிள்ளையை அவன் மனைவி குழந்தைகளுடன் வீட்டை விட்டு விரட்டி, சரியாக ஒரு வருஷம் புது மனைவியோடு தனிக்குடுத்தனம் செய்துவிட்டு, திடீரென்று ஒருநாள் சிவபதம் அடைந்து விட்டார். அதை ஒரு வருஷம் பார்த்துக் கொண்டிருந்த ஆற்றாமை-

தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு கிராமம். அங்கே ஒரு மிராசுதார் . சிறு பையனாக இருக்கும் பொழுதே முப்பது வேலிநிலத்துக்கு வாரிசாகிவிட்டான். தகப்பனார் இறந்து, நிலம் கைக்கு வந்ததுமே, பண்ணை முறையை உதறி எல்லா நிலங்களையும் குத்தகைக்குவிட்டு விட்டுச் சுகவாசியாக வாழத் தொடங்கினான். சுகவாசியென்றால் வேறொன்றுமில்லை. திண்ணையில் பெரிய கலியாண ஜமக்காளத்தை விரித்து, ஊரில் உள்ள சின்னவர் பெரியவர்களையெல்லாம் சேர்த்துக் கொண்டு சீட்டாட்டம். ஓயாத ஒழியாத சீட்டாட்டம். அரையில் வேட்டி நழுவியதைக் கூட உணராத சீட்டாட்டம். மற்ற நேரங்களில் திண்ணையில் மரச்சாய்வு நாற்காலியைப் போட்டு, சட்டத்தை நீட்டி அதன்மேல் காலைப்போட்டு, எப்பேர்ப்பட்ட பெரியவர்கள் வந்தாலும் (ரெவின்யூ இன்ஸ்பெக்டர், தாசீல்தாரைத் தவிர) அந்தக் காலை மடக்காமல், எழுந்து கொண்டுவிடாமல் படுத்திருப்பான். வம்பளப்பான். இந்த மாதிரி எத்தனையோ ஜன்மங்கள் தஞ்சாவூர் ஜில்லாவில் இருக்கின்றன. (மற்ற ஜில்லாக்கள் அவ்வளவாக எனக்குப் பழக்கமில்லை). இந்த ஜன்மங்கள் ஒன்றிரண்டைப் பார்த்த குழப்பம் –தஞ்சாவூரில் நான் படிக்கும்பொழுது ஒரு நாள் நாலைந்து வடக்கத்தியர்கள் தம்புராவைத் தூக்கிக் கொண்டு வாசலோடு போனார்கள். என் தகப்பனாரும் நானும் திண்ணையில் நின்று கொண்டிருந்தோம். எங்கள் வாசலண்டை வந்த அவர்கள் என் தகப்பனாருக்குக் கும்பிடு போட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார்கள். ஹாலில் உட்கார்ந்தார்கள். தம்புராவை மீட்டினான் ஒருவன். பெரியவர் ஒருவர் பாட ஆரம்பித்துவிட்டார். ஒரு மணி நேரம் உலகப் பிரக்ஞை அழிய அழியப் பாடினார் அவர். அவர் மகனும் சேர்ந்து கொண்டான். அந்தமாதிரி சாரீரங்களை நான் இதுவரையில் கேட்டதில்லை. அவ்வளவு கனம், அவ்வளவு இனிமை, அவ்வளவு சுருதி உணர்வு, விண்ணுக்கும் பாதாளத்துக்கும் அனாயாசமாக ஓடி, ஓடிப் பாய்கிற ஆற்றல்! கட்டி விழுந்த குழந்தையின் முனகல் போன்ற சில கர்நாடக வித்வான்களின் குரல்களும் நினைவில் வந்தன. பல வருஷங்கள் கழித்து, பிழை பொறுக்காமல் வடக்கத்தியர்களின் குரல்வளத்தைப் பற்றி ஒரு பிரபல கர்நாடக வித்வானுடன் தர்க்கம் செய்ய நேர்ந்தது. ‘குரல் இருந்தால் மட்டும் போதுமா’ என்று ஒரே வார்த்தையில் அலட்சியப் புன்னகையோடு அவ்வளவையும் ‘பைசல்’ செய்துவிட்டார் அவர்! ஒரு கிணற்றில் இத்தனை தவளைகளை எப்படி அடைத்திருக்கிறார் பகவான் என்று அப்போது ஓர் ஆச்சரியம் ஏற்பட்டது. அந்த ஆச்சரியம் –

என்னைவிட எட்டு வயது அதிகமான ஒரு பெண். நன்றாகப் படித்தவள். நல்ல வடித்தெடுத்த அழகு. அடிக்கடி அவளோடு பேசிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. ஆழ்ந்த அமைதியும், புத்திக் கூர்மையும், எதையும் கண்டு வியந்துவிடாத அழுத்தமும் நிறைந்த அவளை மரியாதையாகப் போற்றத் தொடங்கினேன். கடைசியில் அது மோகமாக மாறி, அவள் அதைத் தெரிந்துகொண்டு, என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போய், ஒரு வருஷம் கழித்து யாரோ ஒரு மின்சார என்ஜினீயரைக் கலியாணம் பண்ணிக் கொண்ட செய்தியைக் கேட்டது –

இந்த எல்லாமாகச் சேர்ந்து, கொதித்து “மோகமுள்” என்ற நாவலாக ஆகிவிட்டது. முக்கியமானவற்றைச் சொல்லியாயிற்று.

  • புரிகிறது.  இப்படிப்பட்ட அனுபவங்கள் இருந்தாலும்,  ”மோகமுள்”  போன்ற நாவலை எழுதியப் போது  மனதளவில் எப்படி உணர்ந்தீர்கள்?

எப்படி அதை எழுதினேன் என்று கேட்டால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த எல்லா ஞாபகங்களும் உள்ளே கிடந்தன. ஒருநாள் ஒரு வாரப் பத்திரிகையிலிருந்து மூன்று பேர்கள் வந்து ‘ஒரு தொடர்கதை எழுதுங்களேன்’ என்றார்கள். நாலைந்து தடவை வந்தார்கள். இந்த ஞாபகங்கள், என் ஆசைகள், நப்பாசைகள், நான் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தேனோ, பார்த்த மனிதர்கள் பாத்திரங்களாக எப்படி மாறவேண்டும் என்று விரும்பினேனோ, எல்லாமாகச் சேர்ந்து நாவலாக உருவாயின. மறுபடியும் எப்படி என்றால் அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. ஏதோ உட்கார்கிறோம், எழுதுகிறோம். சில சமயம் தரதரவென்று எழுதமுடிகிறது. சில நாளைக்கு ஒரு வரிகூட எழுதமுடியவில்லை. நாட்கணக்கில் எழுதவே முடிவதில்லை. எழுத வந்தால்தானே! நாலு நாட்கள் வந்து நாட்கள் மண்டையை உடைத்துக் கொண்டு, கடைசியில் அழாத குறையாக, படுத்து விடுகிறது. காலையில் எழுந்திருக்கும் பொழுது பளிச்சென்று கோவில், சினிமாவுக்குப் போகிற ஸ்திரீகள் ‘குக்’கரில் வைத்துவிட்டுப் போகிற அரிசி மாதிரி, எல்லாச் சிரமங்களும் விடிந்து, தானாக எண்ணங்கள் பக்குவமாகி இருக்கும். வேகமாக, பேனா அதை எழுதிவிடுகிறது. அவ்வளவுதான்.

  •   “மோகமுள்”  நாவலில் கதை என்கிற வடிவம் சரியாக வரவில்லை என்கிற விமர்சனம் உள்ளதே ? 

இந்த நாவலில் கட்டுக்கோப்பான கதை இல்லையென்று பலரும் சொல்லியிருக்கிறார்கள். ஒரு சாமான்யன் ஒரு குழந்தையையோ ஒரு பூவையோ ஒரு நாய்க்குட்டியையோ தன் நெஞ்சோடு வாரியணைத்துக் கொள்வது போல விதவிதமான அனுபூதிகளை – உணர்ச்சிகளை, எண்ணங்களை, கதாபாத்திரங்களை கட்டித் தழுவிக் கொள்வதில் ஏற்படும் ஒரு பிரத்தியேக அனுபூதிதான் எனக்கு இருக்கிறது.

 இந்த நாவலில் நாவலின் உத்திகள் இல்லை. பரிணாமம் இல்லை. இத்தியாதி விமர்சனங்களுமிருக்கின்றன. அந்த விமர்சனங்களைப் பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் முன்னால் உந்திய வயிறும் ஒட்டிய பிருஷ்டமும் சூம்பிப்போன கால்களுமாகப் பிறந்துவிட்டது என்பதற்காக தன் குழந்தையை ஒரு பிச்சைக்காரிகூடக் குப்பைத் தொட்டியில் வீசி எறிவாளா?

  • உங்கள் பெரும்பாலான நாவல்கள் தொடர்கதைகளாக வெளிவந்தவை தான். இதனால் அதன் இலக்கியத் தன்மை  குறித்து வரும் விமர்சனங்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்? . உங்களின் கருத்துக்களை அறிய ஆவல்.

 தொடர்கதை எழுதுவதைப் பற்றி விமர்சகர்கள் நல்ல அபிப்பிராயம் சொல்வதில்லை. எனக்குக்கூட அந்த அபிப்பிராயத்தில் சிறிது சார்பு உண்டு. ஆனால் நான் எழுதின மூன்று நாவல்களும் தொடர்கதைகளாக வந்தவைகள்தான். பாத்திரத்தில் பச்சைத் தண்ணீரில் கிடக்கிற காய்கறிகளை வேக வைக்க, தொடர்கதை எழுதச் சொல்லும் பத்திரிகாசிரியரின் தூண்டுதல் நல்ல தீயாக வந்து உதவிச் சமைத்துக் கொடுக்கிறது. நெருப்பை ஜாக்கிரதையாகப் பயன்படுத்துவது நம் பொறுப்பு.

என்ன, சமையல் உபமானமாகவே இருக்கிறதே என்று நீங்கள் கேட்கிறீர்களா? முன் ஜன்மத்தில் தவசிப் பிள்ளையாக இருந்தேனோ, என்னவோ, யார் கண்டார்கள்.

”அம்மா வந்தாள்”  வெளிவந்த போது சில சர்ச்சைகள் வெளிவந்தது கூடவே விமர்சனங்களும்.

  •  “அம்மா வந்தாள்” நாவல் பற்றி நினைத்தவுடன் மனதில் வரும் எண்ணங்கள்? 

அம்மா வந்தாளைப் பற்றி நான் ரகசியங்கள் ஏதும் சொல்ல இல்லை. நூல் தான் முக்கியம். எப்படி ஏன் எழுதப்பட்டது என்பது யாருக்கும் முக்கியமில்லை என்பது என் துணிபு. கலைப் படைப்பு என்ற ஒரு நோக்கோடு அதைப் பார்ப்பது நல்லது. பலர் அதைத் தூற்றி விட்டார்கள். நான் ‘பிரிஷ்டன்’ என்றும் சொல்லி விட்டார்கள். நம்முடைய நாட்டில் கலை, பிரஷ்டர்களிடமிருந்து தான் பிறந்து வருகிறது என்று கூற விரும்புகிறேன்.

‘அம்மா வந்தாள்’ நான் கண்ட கேட்ட சில மனிதர்கள், வாழ்க்கைகள், பாத்திரங்கள் இவற்றிலிருந்து வடிக்கப்பட்ட ஒரு முயற்சி, மனதுக்குள் ஏற்படும் விசித்திரமான அனுபவங்கள், பலவற்றைப் பார்த்து ஊறி வெகு காலமாக அனுபவித்த சில உணர்வுகள் கடைசியில் எப்படியோ உருவம் பெறுகின்றன. நாம் உருவம் கொடுப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அம்மா வந்தாளின் ஒவ்வொரு பாத்திரத்திலும், நான் பார்த்த ஏழெட்டுப் பாத்திரங்களின் சேஷ்டைகள் ஒருமித்து இருக்கின்றன. அந்த அம்மாள் நான் கண்ட ஐந்தாறு பெண்களின் கலவை. அகண்ட காவேரி, வேத பாடசாலை, சென்னையின் பெரிய மனிதர்கள், ஸம்ஸ்கிருதமும் வேதாந்தமும் படிப்பது, தஞ்சை மாவட்டத்துப் பெரிய மிராசுதார்களின் லெளகீக அடாவடிகள் இப்படி எத்தனையோ சேர்ந்து எப்படியோ ஓர் உருவமாக வந்தன.

மையக் கருத்தைப் பற்றி, நான் என்ன சொல்ல வேண்டும்? இது நடக்குமா, நடக்காதா என்று விமரிசகர்கள் கூறுவார்கள். அவர்களைப் பற்றி நான் எப்போதுமே கவலைப்படுவதில்லை. இரண்டு மூன்று அளவுகோல்களை வைத்துக் கொண்டு படைப்பாளியின் விசித்திரமான அனுபவங்களை அளக்க முற்படுகிற பேதை விமரிசகன், அவனுக்குப் பலம் பழங்காலம், கலை அமைதி பற்றி ரசிகனுக்குத் தெரியும். கலை உலகம் ஒரு மாய லோகம். அதையும் வாழ்க்கையின் புற உண்மைகளையும் ஒன்றெனக் குழம்பிக் கொள்ளக் கூடாது.

  • சாகித்ய அகாதெமி விருது பெற்ற  “சக்தி வைத்தியம்” சிறுகதைத் தொகுப்பு பற்றி?

இந்த சக்தி வைத்தியம் என்கிற சிறுகதைத் தொகுப்பு மற்ற தொகுப்புகளைப் போல சில சேஷ்டைகள் அடங்கிய தொகுப்பு தான் வேறு எதுவுமில்லை. மனித நடமாட்டம் அற்ற இடங்களில் பல வர்ணங்களும் அமைப்புகளும் சின்னச் சிறு பூண்டு வகை பூக்கள் பூப்பெதுண்டு. ஏன் பூக்கிறோம், யாருக்காக என்று அவைகளுக்குத் தெரியாது. ஒருக்கால் அவை தெரிந்துக் கொள்ள விரும்பவில்லை போல.


4 COMMENTS

  1. மிகச் சிறந்த முறையில் நேர்காணலை தொகுத்துள்ளீர்கள். வாசிக்கும்போது தி.ஜா அவர்களை நேரில் கண்டு எடுத்தது போல் உள்ளது. மறைந்த எழுத்தாளர்களை நேர்காணல் செய்யும் புதிய உத்தியை தொடங்கி வைத்துள்ளீர்கள். இனி, வரும் காலங்களில் எல்லோரும் இந்த உத்தியை பின்பற்றக் கூடும். கனலி குழுவிற்கு வாழ்த்துகள்!

  2. மிகவும் நல்ல முயற்சி. நன்றாக இருந்தது. நன்றிகள் கனலிக்கு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.