சுநீல் கங்கோபாத்தியாயின் “தன் வெளிப்பாடு” நாம் வெளிப்படும் தருணம்

வாசகனோடு உரையாடலொன்றை நிகழ்த்தவோ படைப்புடன் அந்தரங்கமாக நம்மை உணரச் செய்யவோ தலையணைத் தண்டி நாவல்கள்தான் தேவையென்ற எந்தக் கட்டாயமும் கிடையாது. தேவையென்னவோ கூர்ந்த அவதானிப்பும், கரிசனமும், முதிர்வும் வாய்க்கப்பெற்ற எழுத்தாளனின் படைப்பும், அதை அக்கறையுடனும் உள்வாங்கும் வாசக மனமும் தான். சுநீல் கங்கோபாத்தியாயின், “ஆத்ம ப்ரகாஷ்” எனும் இந்த வங்க நாவல் (1966) அத்தகையதொரு படைப்பு என நிச்சயமாகச் சொல்லலாம். இந்நாவலை நேஷனல் புக் டிரஸ்ட் 1996 ஆம் ஆண்டு தமிழில் வெளியிட்டுள்ளது. சு.கிருஷ்ணமூர்த்தி அதை மொழிபெயர்த்திருக்கிறார். அவருடைய மொழிபெயர்ப்பின் வாயிலாகவே “ஆத்ம ப்ரகாஷ்” நமக்கு “தன் வெளிப்பாடு” யென அறிமுகமாகிறது.

“Poetry is My First love. It was quite by chance that I got acclaim as a novelist” என்று சொல்லும் சுநீல் அடிப்படையில் ஒரு கவி. 50, 60 களில் வங்கத்தின் தொடக்ககால மோஸ்தர்களின் பாணியை நகலெடுத்துக் கொண்டிருந்தவர்களின் படைப்புகளைப் புறந்தள்ளிவிட்டு புதிய சிந்தனையுடனும் எழுச்சியுடனும் வந்த அன்றைய இளங்கவிகளில் மிக முக்கியமானவர். இது அவருடைய முதல் நாவல்.

நாவல் உரையாடுகிறது எனக் கொண்டால், அந்த உரையாடல் எம்மாதிரியான வாசகனுடன் என்பதும், எத்தகையது என்பதும் அவசியமாகிறது. 1966 இல் இந்நாவல் வெளிவரும்போது சுநீலின் வயது 33. நாவலின் நாயகனுடைய வயது 31. அவனுடைய பெயரும் “சுநீல்” தான். சுநீல் தன்னுடைய சமகாலத்தையே எழுதியிருக்கிறார். அதில் ஆச்சரியமென்னவென்றால் எண்பதுகளின் முடிவிலும், தொண்ணூறுகளின் துவக்கத்திலும் பிறந்த ஆண்களுடைய வாழ்வோடு இந்நாவல் இன்றும் ஒத்துப்போவதுதான். இயல்பாகப் பேசிப்பழகும் சுபாவமுடைய படித்த, நேர்த்தியும் – அழகும் வாய்க்கப்பெற்ற பெண்களிடத்தில் பழக எழும் ஆசை, அவர்களுடைய இயல்புத்தன்மை காரணமாக நாம் அடையும் சங்கட உணர்வு. எங்கே நம் விருப்பத்தைச் சொன்னால் கேலிக்கூத்தாகிவிடுவோமோ என்று உணர வரும் தாழ்வுணர்வு. இயல்பு / வெளிப்படைத்தன்மை இவற்றின் எல்லை என்ன? வரையறை என்ன? அதைத் தீர்மானிப்பது எது? போன்ற கேள்விகள். அது உண்டாக்கும் குழப்பங்கள். உறவுச் சிக்கல்கள். கூடவே இலக்கில்லாத ஓட்டத்திலும் தறுதலைத் தனத்துடனும் நாம் நடுத்தர வயதை மின்னல் வேகத்தில் நெருங்குகிறோமோ என்று தோன்ற நம் இளமையின் மீதே வரும் அசூயை கீழான மதிப்பீடுகள் என அத்துனையுடனும் உழண்டு கொண்டிருப்பவர்களுடன் தான் இந்நாவல் உரையாடுகிறது. நாயகன் சுநீலினுடைய குரலில் நாவல் விரிகிறது. ஒருவகையில் அவனது வாக்குமூலமே இந்நாவல்.

சுநீல் நமக்குச் சொல்வது அவனுடைய அன்றாடத்தை, அவன் வாயிலாக அவனுடைய நண்பர்களான சேகர், அவினாஷ், சுவிமல் போன்றவர்களின் அன்றாடத்தையும் அன்றாடத்தில் ஒரு அருகாமைத் தன்மை இருக்கிறது. அதுவே நம்முடைய சாத்தியங்களையும், பலவீனங்களையும் மெல்லச் சிரித்தபடியே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

அவர்கள் அனைவரும் படித்த ஓரளவு வசதியும் உள்ள மத்தியத் தர வங்காள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். வாழ்வில் இலக்கற்றவர்கள். அரசியல் சார்பற்றவர்கள். அனைவரும் புகைக்கக் கூடியவர்கள். தினந்தோறும் மது அருந்துபவர்கள். கஞ்சா இழுப்பவர்கள். சூதாடுபவர்கள். வேசியின் வீட்டில் பொழுதைக் கழிப்பவர்கள். மேலோட்டமான பார்வையில் இது களியாட்டத்தை மையப் படுத்துவது போல ஓர் சித்திரத்தைத் தந்தாலும், நாவல் அத்தகைய தன்மையை உடையதல்ல!

அவர்கள் அனைவருமே குழந்தைப் பருவத்தில் பாக்கிஸ்தான் பிரிவினையையும், இரண்டாம் மகா யுத்தத்தையும் பதின்ம வயதில் வங்கத்தின் பிரிவினையும் சந்தித்தவர்கள். அதன் பொருட்டு நகர் வாழ்க்கைக்குத் தன்னை புதிதாகப் புகுத்திக் கொண்டவர்கள். அன்பின் போதாமை, தனிமை, இடப்பெயர்வு, பட்டணவாழ்வின் சூழல் என்றெல்லாம் அவர்களுடைய மனதில் வெறுமையைச் சேர்க்கிறது. வெறுமையையும் இயலாமையையும் உடைப்பதின் மூலம் கடந்து விடலாம் என்று எண்ணுகிறார்கள். எளிதில் உடைவதும் உடைபடுவது சமூக விதிகள் தானே, அதையே அவர்களும் உடைக்கிறார்கள். அது வெறுப்பாகவோ, புரட்சி தத்துவ விசாரமாகவோ வெளிப்படவில்லை அவர்களுடைய போக்கில் தன்னியல்பாக நடந்தேறுகிறது.

நமது இளமையில் நமக்குச் சாத்தியமான செயல்கள் மூலம் நம்மைப் பெரியவனாகக் காட்டிக்கொள்ள முயலும். குறுகுறுப்பை இயல்பாகவே நாம் பெற்றிருப்போம். அந்த வயதில் அதற்குத் துணைபுரிய நம்மை நோக்கி ஒரு நண்பன் வருவான். அப்படி சுநீலைத் தேடி வந்து சேரும் நண்பன்தான் சேகர். அவனது கட்டற்ற தன்மையையும், துடுக்குத் தனத்தையும் நாவல் முழுவதிலும் காணமுடிகிறது. அவனிலிருந்து உந்தப் பட்டவனாகவே சுநீல் கல்கத்தாவைச் சுற்றி வருகிறான். அதன் சந்து பொந்துகள், புனிதங்கள், அபத்தங்கள் அத்துணையையும் தன் சொந்த அனுபவத்தின் மூலமாகக் கற்க முயல்கிறான்.

நாவலின் துவக்கம் இப்படித்தான் அமைகிறது! நேற்றைய போதையின் சுவடு மாறாமல், காலைத் தூக்கத்திலிருந்து சுநீல் விழித்தபோது “சேகரைக் காணவில்லை என்ற முறையிடலோடு சேகரின் தம்பி பரிதோஷ், சுநீல் வீட்டிற்கு வந்து நிற்கிறான். இது சுவாரசிய திருப்பத்திற்கான முடிச்சோ; விபரீதத்திற்கான துவக்கமோ அல்ல. நாவலுக்கான ஒரு துவக்கம் அவ்வளவே!

சொல்லப்போனால் வயதடைவை சித்தரிக்கும் நாவல் கூட அல்ல, அந்த வயதிற்குப் பின்னான ஆளுமை முதிர்வைச் சொல்ல முனையும் நாவல். சுநீலின் ஆளுமை வெளிப்படும்போது நமக்கு சுநீலை பிடித்து விடுகிறது. அவன் நாயகன் என்பதாலல்ல! அவன் களியாட்டத்தில் ஈடுபடுகிறான் என்பதாலும் அல்ல. அது அவனுடைய அன்றாடம். அன்றாடத்தில் அவனுக்கு என்ன கொண்டாட்டம் இருக்கிறது? சுநீல் அவனுடைய இயல்பான பலவீனத்தாலும் அவனுக்குள் கசியும் நேசத்தாலும் நமக்கு நெருக்கமாகிறான்.

சுநீல் வெவ்வேறு தருணங்களில் இரண்டு பெண்களைக் காதலிக்க முயன்று இருக்கிறான். அதில் தோற்றிருக்கிறான். ஒரு கட்டத்தில் தன்னுடைய தறுதலைத் தனத்தின் மீது சலிப்புற்று அதிலிருந்து விடுபட நினைக்கிறான். அதற்கும் காதலையே நம்புகிறான். ஒரு பெண்ணிடம் நிபந்தனையின்றி காதல் செய்வதன் மூலம் தன்னை பரிசுத்தமாக்க முடியுமென்று உணர்கிறான். யமுனாவை காதலிக்கிறான். அது கைகூட வேண்டும் என்று கூட அவசியம் கிடையாது. நிபந்தனையற்ற அன்பு, அதுவே அவன் இலக்கு. முயல்கிறான் அதிலும் தோற்கிறான். இருந்தும் காதலை நம்புகிறான். அவன் யார் மீதும் வெறுப்பு கொள்ளவில்லை. சோர்ந்த நிலையில் வேர்க்கடலை உண்ணும்போது, நீ உன்னைக் கொடுத்து என் உயிரை வளர்க்கிறாய் என்று என்னும் சுநீல் யாரை வெறுத்துவிடப் போகிறான்.

ஒரு கட்டத்தில் சேகர் கிடைத்து விடுகிறான். சில சச்சரவுகள், வம்பு வழக்குகள் வந்து விலகுகிறது. பல நாட்களுக்குப் பின் நண்பர்கள் கூடுகிறார்கள். மீண்டும் குடிக்கிறார்கள். காசு போதாமலாகிறது. ஒரு விளையாட்டை விளையாடுகிறார்கள். சிக்னல் விழும்போது ஓடிப்போய் வண்டியின் முன் நின்று எதாவது ஒரு காரணம் சொல்லி காசு வாங்கவேண்டும். ஒவ்வொருவரும் முயற்சித்து வெற்றி அடைகிறார்கள். சுநீல் முறை வரும்போது நண்பர்கள் சுநீலை ஒரு காரை நோக்கித் தள்ளுகிறார்கள். காரினுள் “சுநீல் அண்ணா என்றபடி யமுனா. உடன் சுநீலால் நிராகரிக்கப்பட்ட அவளுடைய யமுனாவின் அக்காவும். எந்த தயக்கமும் இன்றி சுநீல் “பர்ஸ் தொலைஞ்சு போச்சு என்று காரணம் சொல்லி 5ரூ கேட்கிறான் இரண்டு ரூபாய்தான் இருக்கிறது என்று அவள் சொல்ல வண்டி கிளம்புகிறது. “சே…………. கேவலம்! ஒரு அஞ்சு ரூபாயை வாங்க முடியவில்லையே!” என்ற ஏமாற்றத்துடன் சுநீல் திரும்பும் போது சுநீலுக்கு பதிலாக ஒரு வறண்ட புன்னகையை நாம் விடுகிறோம். காரணம் சுநீல் விடைபெற்றுப் பல பக்கங்களுக்கு முன் நின்று கொண்டான். “தன் வெளிப்பாடு சுநீல் வெளிப்படுவது மட்டும் அல்ல ஏதோ ஒரு புள்ளியில் நாம் வெளிப்படுவதை நமக்கு உணர்த்துவதும் தான்.

நாவல் முடிவில் சுநீலின் வீடு தேடி பரிதோஷ் மீண்டும் வருகிறான். சேகரைக் காணவில்லையென்ற புகாரோடு,  அன்றாடம் தன ஆட்டத்தை மீண்டும் துவங்குகிறது.

 

நூல் : தன் வெளிப்பாடு (மொழிபெயர்ப்பு நாவல்)

ஆசிரியர்: சுநீல் கங்கோபாத்தியாய்

தமிழில்: சு.கிருஷ்ணமூர்த்தி

வெளியீடு: நேஷனல் புக் டிரஸ்ட்


-இரா.சிவசித்து

4 COMMENTS

  1. நாவளுடைய ஆன்மாவை பிடித்தது போல ஒரு கட்டுரை மிக அருமை

  2. நாவலை படிக்க தூண்டும் வகையில் அமைந்த விமர்சனம் நண்பா…….

  3. தன் வாசிப்பனுபவத்தை நமக்கும் கடத்தி புத்தகத்தைத் தேடி வாசிக்கத் தூண்டும் அருமையான விமர்சனம். சிறப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.