திரோபியர் தானேஸ்


பெரிய பெரிய மலைகளைக் கடல் அணைத்தபடி புரள்கிறது.

ஒரு வாரம் கழித்து அவள் சொன்னது போலவே  பூங்காவிற்கு வந்தேன். இன்று என்னவோ எனக்கு முன்னதாகவே காத்திருந்தாள் எங்களது வழக்கமான புன்னகையைப் பரிமாறிக்கொண்டோம்.  அங்கிருந்து வெகு அருகிலுள்ள அவளது குடியிருப்புக்கு அழைத்துப் போனாள், அது உண்மையிலே நல்ல அமைதியான இடம்.  அவளுடைய மனநிலைக்கு ஏற்ற வீடுகள், ஏதோ அவள் இங்கு குடியேறிய பிறகுதான் இப்படியான சூழல் பரவியிருக்கலாம் என்பது போலத் எனக்குத் தோன்றியது.

அவளுடைய அறை வெகு அம்சமான முறையில் அமைந்திருந்தது.

ஒழுங்கற்ற  பொருட்கள் இருந்தாலும் எனக்கு அழகாகவே தெரிந்தது. அவளுடைய அறையைப் பார்த்தால் யாரும்  தனித்திருக்கிறாள் என்று சொல்ல மாட்டார்கள் அவ்வளவு பொருட்கள். ஒரே பொருட்களையே நிறைய வடிவங்களில் வாங்கிக் குவித்திருந்தாள். ஆறேழு கொசுமட்டைகள், பத்திற்கும் மேற்பட்ட காலி உருளை மீன்தொட்டிகளென, எந்த பழைய பொருட்களையும் வெளியே வீசாதவளாக வாழ்ந்திருக்கிறாள் என்பதைப்  பார்த்ததுமே புரிந்துவிடக் கூடும். எனக்காகப் புது கோப்பையை அலமாரியில் இருந்து எடுத்து வந்தாள். நான் அவள் என்னவெல்லாம் செய்கிறாள் என்பதை   கவனித்துக்கொண்டிருந்தேன். வேகவேகமாக ஓடிப்போய் குளியலறையில் சுடுத்தண்ணீரை இயக்கிவிட்டு குளிக்கச் சொன்னாள், அதற்குள் சமையலை  முடித்துவிடுவதாக வாக்கும் கொடுத்தாள். குளியலறையில் வெண்ணிற புதுத்துண்டொன்று தொங்கிக்கொண்டிருந்தது. அதன் மீதீருந்த சிறு பூச்சுருள் மாதிரியான பின்னப்பட்ட, எண்ணிக்கையற்ற உருளைகள் என்னை சுயநினைவுக்கு உந்தித்தது. கருநீல வாளி நிறைய நிரம்பியிருந்த வெந்நீரை கலக்கி மேனியில் ஊற்றினேன்.  இதமான சூடு மேனியில் படிந்திருந்த பழைய பிம்பத்தை இலகுவாகக் கீழிறக்கி, தரையில் தண்ணீர் விழுகிற சப்தங்களுள் மெல்லியதாய் உடைந்து நீர் தேங்குகிற குழிகளினுள் ஒன்றொடு ஒன்றாய் மோதி சப்தங்களை காட்டு வண்டுகளில் மொழிகளின் பின்னிப்பின்னி சுழன்றுக்கொண்டிருந்தன. மெல்ல  ஈரத்தலையை இருகைகளால் கீழிருந்து மேல் அள்ளி வெற்று சுவற்றை அன்னார்ந்து பார்த்தேன். நூறாண்டு கால பல்லியொன்று மெல்ல என்னுள் நுழைந்து  கிளறியது. ஆமாம் அத்தனையும் அரூபங்கள், அரூபங்கள், அரூபங்கள்தான்.


அப்போது நான் தென்கிழக்கின் மத்தியில் உள்ள பிரபல நிறுவனத்தின் நிரந்தரமற்ற பணியாள். எனக்குத் தெரிந்ததெல்லாம் மாயோவியத்துவ சிந்தனை மட்டுமே அதைத் தவிர்த்து எதோடும் பழக, சிந்திக்கத் தொடர்பற்ற மூளையோடு இருந்தேன். எனக்குத் துணையாக தந்தை உயிரோடு இருந்தார். அவருக்குத் துணையாக என்னை நான் உயிரோடு வைத்திருந்தேன். சமயங்களில் பணி தவிர்த்து  என்ன செய்வதென்று தெரியாத பொழுதுகள் வரும் அப்போதெல்லாம் எனது அரூபக் கனவுகளைப் பற்றி சிந்திக்கத் தொடங்கிவிடுவேன். தந்தை அடிக்கடிச் சொல்வார் ‘உன்னுடைய எந்த அரூபக் கனவுகளும் என் மாதிரி உனக்கு உணவுகளைப் பறிமாறாது. நல்ல உடை தேர்வு செய்ய என் மாதிரி கடை கடையாக அலையாதென்று.

எனக்கு அரூபங்களின் மீது துளிர்விடத்தொடங்கியதும் அதை முதலில் என் காதலியிடம்தான் வெளிப்படுத்தினேன். அவளுக்கு நன்கு எடுப்பான மார்புகள். உன்னை மார்புகளற்ற பெண்ணாக பார்க்கத் தோன்றுகிறதென்றேன். தனது சிறுவயது புகைப்படத்தை நான் பார்க்க விரும்புகிறவனாக எண்ணி அதைக் காண்பித்தாள். எனது அரூபத்தின் தொடக்கத்திலே காதலும் பிரிந்தது அதுவொரு அரிதான மயக்கத்தைக் கொடுத்தது. கனவுலகமும் அரூபப் பின்னணி இசைக் கோப்புகளும்  தங்களை இன்னும் மிகைப்படுத்தி என்னை விளையாடப் பற்றிக்கொண்டன. வாழ்வியலோடு அரூபத்தை இணைக்கும்போது அதுவொரு தீராத  போதையானது வழக்கமான விஸ்கியை விட ஏதோ ஒரு கூடுதலை வழங்கி,  அப்போதெல்லாம் அரூபங்கள் போதையாகப் பொழிந்தன.

திரோபியர் தானேஸ் தென்கிழக்கின் விசாலமான முக்கிய மருத்துவமனை தந்தைக்கு  உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது அங்குதான் சேர்த்தேன் அப்போதுதான் திரோன்ஸியை முதல் முதலாகப் பார்த்தேன். அவரது கால்களின் காயங்களுக்கு மருந்துகளிட்டுக் கொண்டிருந்த திரோன்ஸியை, தந்தை எனக்குக் காண்பித்து, உன்னுடைய  எந்த அரூபங்களும் எனது காயங்களுக்குக் கட்டுகளிடவோ அல்லது என்னைத் தூக்கி இடம்மாற்றவோ இல்லை இதான் நிஜம் புரிகிறதா என உரக்கக் கூறினார்.

நான் அவளை அசட்டுத் தன்மையோடு பார்த்தபோது அதிர்ந்தேதான் போனேன். ஆமாம் அவளுக்கு ஒரு மார்புதான் இருந்தது. அப்போதைக்கு நான் அரூபங்களுக்கு அடுத்தபடியாக நிறைய சிந்திக்கத் தொடங்கியதும் இரசிக்கத் தொடங்கியதும் பெண் மார்புகளைத் தான். அதில் இவளுக்கு ஒரு மார்பு மட்டுமே இருந்தது எனக்கு பலதரப்பட்ட மயக்கங்களைத் தந்தது. அதெப்படி  ஒரு மார்பு மட்டும் நன்கு செதுக்கியபடி பொலிவாக இருக்கும் அவளது கன்னங்களுக்கு ஒரு மார்பில்லாத தோற்றம் அத்தனை பொருத்தம் கூட இல்லை ஆனால் அதை கொஞ்சமும்  பொருட்படுத்தாதவளாகவே இருந்தாள். எனக்கு அந்த மருந்தகமே அத்தனை கிளர்ச்சியூட்டக் கூடியதாக அவளால் உணர்ந்தேன். எல்லா சமமான இருமார்புள்ள பெண்களையும் பார்க்க சலிப்பாகி அவள் மட்டுமே முழுக்க நிறைந்தாள். அந்த விடுதியின் எல்லாப் பெண்களையும் விட திரோன்ஸிக்காகவே அதிகம் செலவழித்தேன்.

அவள் தனது வருகை நேரத்தை வெகுசரியாகப் பின்பற்றுகிறவளாக இருந்தாள். நோயாளிகளிடம் கனிவோடும், தனிமையில் முறைத்த முகத்தோடும் இருப்பவளாக  இருந்தாள். அவளது முகக்  கோணங்களை கவனித்தேன், அதுவொரு “இரகசிய முகம்” அதற்கென்று நிறைய குழப்பமிருந்தாலும் எப்போதும் கண்கள் சிரித்தபடியே இருந்தன. அவளுக்கு அந்த விடுதியில் பெயர் 172, எல்லோரும் அப்படித்தான் அழைப்பார்கள். யாரிடமும் அதிகம் பேசமாட்டாள். ஒரு அரூபம் அந்த மருத்துவனைக்கு வேலை பார்க்கத் தினமும் வந்து போவதாக நம்பத்தொடங்கினேன்.

துல்லியமான  இரட்சிப்பைத் தருகிற வனவிலங்கின் அசைதலோடு நடப்பாள். எல்லா கணங்களிலும் இருக்கிற குழப்பம் அவளது நடையிலும் இருக்கும். நான் அதை  இரசிப்பேன் அவளைப் பின்பற்றுகிறவனாக அதாவது 172 க்குப் பின்னேயே 173 போல தொடர்ந்தேன்.

மெல்லிய சிலந்தி நூலொன்றில் தொங்குகிற  இலை மாதிரி அந்தரத்தில் அவளுக்காக வேண்டத்தொடங்கினேன். ஒவ்வொரு நிகரான வேண்டுதலுக்கும் ஒரு பலனிருக்கும் என்று அம்மா சொல்வாள். நாம் வேண்டுதல்களின் வழியே வாழத்தொடங்கும் போது, “இயற்கை” நாம் வேண்டுவதற்காகவே நம்மை வாழ வைக்கும் என்பாள்.  அதன் விசையானது நமக்கு நிச்சயம் சாதகமாக அமையும் என்கிற அவளது வார்த்தைகள் எத்தனை உன்னத தனமானது என்பதை திரோன்ஸி விஷயத்தில் அமைந்தது. அது  எனக்கொரு   நல்ல வேடிக்கையும் கூட. அன்று அவள் தந்தைக்கு சிகிச்சையளிக்க வந்தபோது பலத்த சோர்வில் இருந்தாள். என்னாகிற்று எனக் கேட்டேன். எதையும் சொல்ல விரும்பாத அவள் கடந்த பிறகு நானே அவளது அறைக்கு போனேன், அதற்கான தைரியம் எனக்கு எப்படி வந்தது என்பது இப்போதுவரை நம்பமுடியாததுதான்.

வெகு நேர்த்தியாக அவள் முன் அத்தனை நடுக்கத்தோடு நின்றேன்.

”உங்களிடம் ஒன்று கேட்கலாமா?”

அவள் என்ன என்பது மாதிரி பார்த்தாள் எனக்கு அதை எதிர்கொள்ளத் தெரியவில்லை. வேகவேகமாக அதற்கு மேல் பேச முடியாது வெளியேறினேன்.


பிறகு அவள் நாள்தோறும் மருந்திட வருவதும், நான் புன்னகைப்பதும், பதிலுக்கு அவள் சிரிப்பதுமாக எங்களின் உறவு தொடங்கியது. ஒருமுறை அவ்வாறு சிரிக்கும்போது எனது தந்தை எங்களைப் பார்த்துவிட்டார்.

அவள் போனதும், “பார் மகனே நீ காண்கிற விவரிக்கிற அரூபக் கனவுகள் எதுவும் இத்தனை ஆத்மார்த்தமான புன்னகையைத் தராது பதிலுக்கு நீயும் அவைகளுக்கு  உண்மையான புன்னகையைக் கொடுக்க முடியாது” என்றார்.

அதை கேட்டதும் உண்மையிலே கலங்கி போனேன் அவரது பேச்சு என்னை அரூபங்களின் உள்ளிருந்து வெளியேற்றுவதாய் இல்லாமல், திரோன்ஸி ஒரு மனுஷி மாற்றாக அரூபமல்ல என்பதைப் புதைப்பது போல இருந்தது. அவர் சொன்னது போலவே என்னை எந்த அரூபமும் சிரிக்க வைத்ததில்லை அதை நான் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். மாயாவித்தானமான அவைகளின் இம்சை மற்றும் துயரத்தை மட்டுமே அரூபமாக வைத்து உணர்ந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்தது. இப்போது 172 எனக்கு இயல்பான பெண்ணா அல்லது என்னை சிரிக்க வைக்கிற அரூபமா என்கிற முறைக்குத் தள்ளப்பட்டேன், என்னால் அதை மிகச்சுலபமாகத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.


ழக்கம் போல அன்று தந்தை ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தார். எனது அரூபக் கற்பனைகளை நான் மெருகெற்றிக்கொண்டிருந்தேன். அப்போது யாரோ என்னைக் கவனிப்பது மாதிரிபட்டது. திரோன்ஸி எங்களுக்கான அறையின் வாசலில் சோர்வாக நின்றபடியே என்ன செய்கிறாய் என்பது போல பார்த்தாள். நான் எழுந்து நின்றேன். ’தேநீர் அருந்த வருகிறாயா?’  எனக் கேட்டாள். எனக்கு அந்த குரல் உண்மையிலே அத்தனை மயக்கமாக இருந்தது. தந்தையை எழுப்பி ‘அரூபங்கள் பேசும் தேநீர் கூட அருந்த அழைக்கும்’ என கூறலாம் போல தோன்றியது.

பிறகு நானும் அவளும் விடுதிக்கு அருகிலுள்ள சிற்றுண்டிக்குப் போனோம். எனக்கு அது உண்மையிலே இயல்பற்ற பொழுதுதான் என் வாழ்வின் அத்தனை இரகசியமான நேரமும் கூட எங்களுக்கான தேநீர் வந்ததும் கேட்டாள்.  அன்று ஏதோ கேட்க அறைவரை வந்து திரும்பிச் சென்றாயே என்னவென்று மீண்டும்  எதிர்கொள்ள முடியாத அதே கணம் எனக்குக் கிடைத்தது, ஆனால் இம்முறை ஓடவில்லை. பதிலுக்கு கேட்டேன்.

”உன்னுடைய இன்னொரு மார்பு எங்கே?”

’இவ்வளவுதானா’ என சிரித்தபடியே  ’இதை நீ அன்றே கேட்டிருக்கலாமே’ என்றாள். அவள் வெகு இயல்பாக இருந்தாள். எனக்குத்தான் நடுக்கம் வேறு என்னதான் வரும் ஒரு இயல்பான பெண்ணை அரூபமாக்கிக் கொண்டாடுகிறவனுக்கு. நான் மீண்டும் கேட்டேன், ”நீ இன்னும் சொல்லவில்லை. எங்கே இன்னொரு மார்பு?”  எவ்வித அதிகபட்சமான கசங்கலும் இல்லாமல் சொன்னாள். ’அதுவொரு  விபத்து ஒருவன் என் மார்பைத் திருகிக்கொண்டிருந்தபோது மறந்து அவனிடமே கொடுத்து வந்துவிட்டேன். ’

எனக்கு வேடிக்கையாக இருந்தது. அது சரியான பதில் இல்லை என்பது தெரியும். அவள் என்னை  பொருத்தமட்டில் அரூபம்தானே’ பிறகு எப்படியான பதிலைக் கொடுப்பாள் என தேற்றிக்கொண்டேன். அவளே பிறகு சொன்னாள்’ உனக்குத் தெரியுமா இப்படி ஒரு மார்போடு வாழ்வது உண்மையிலே நன்றாக இருக்கிறது எந்தக் கூட்டத்திலும் தோள் பைகளை எளிதே விடுவிக்க முடிகிறது, சமயங்களில் குறுகலான சந்துகளில் எளிதே நுழைந்து விடுகிறேன், என்னவொன்று இதற்கான உள்ளாடைகளை நானே சரி செய்யவும் குப்புறப் படுக்கவும்தான் சற்று சிரமம் மற்றபடி எல்லாம் இயல்பாகி விட்டது.  பெண்களுக்கு ஒரு மார்பே போதுமென்று தான் நினைக்கிறேன்’ என சொல்லி சிரித்தாள்.

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவளது இயல்பு என்னைக் கலவரமடைய வைத்தது. அரூபங்களைச் சிந்திப்பதற்கும் அரூபமாகவே வாழ்வதற்கும்  இடைப்பட்ட “வாழ்வு” பெரும் வியப்பானதுதான் என்று தோன்றியது.

அன்றிரவு தந்தை உணவுண்ணும் போது மீண்டும் சொன்னார். அரூபங்களை நீ  தேடியலைவது எனக்கு வேடிக்கையானது, “ மகனே அரூபங்களை தேடும் போது  நிறைய அலைக்கழிக்கப்படுகிறாய் உன் மூச்சு உனதல்ல  என்பதை மறுக்க கூடியவனாக நேரிடுகிறது. உன் உடலை, உன் தேடலை நீயே வெறுக்க விரைவில் பழகிக் கொள்ளக் கூடியவனாகிறாய். ” அவர் கூறுவது  ஒருவிதத்தில் உண்மைதான். சமயங்களில் நான் யோசிப்பேன் எந்த விதமான நோக்கத்தில் பயணிக்கிறேன், முட்டாள்தனமான வாழ்வை ஏந்தி நடப்பதை சமயங்களில் வெறுத்துத்தான் இருக்கிறேன். எனக்கு நானே சொல்கிற சமாதானங்களை நானே நம்ப நிறைய பாடுபட்டிருக்கிறேன். என் தந்தையிடம் இல்லாவிட்டாலும் என்னிடமாவது அதை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். எனக்கு குழப்பங்கள் தலைதூக்கும் போது நான் எதையாவது பற்றிக்கொண்டு அழத் தோன்றும். இந்த வாழ்வே ஒரு ‘அரூபம்தான்’ அதைப் பற்றிக்கொள் அதோடு அழு அதுவே உன் கண்ணீர் துடைக்கும் எனத் தோன்றும். ஆனால் நான் மீண்டும் பழைய மாதிரி அரூபங்களின் வழியே போய் விடுவேன்.

அன்றைய நாட்களில் திரோன்ஸிதான் எனது நீள்வலி நீக்கி அவளைக் கொண்டாடுவதற்காக எல்லா முறைகளையும் சிறுமைத்தனத்தோடு செய்யத் தொடங்கினேன். அடிக்கடி பேசத் தொடங்கினோம் எங்களிடம் பகிர நிறைய இருப்பதாக நம்பினோம், அதையே நாங்களும் மேற்கொண்டோம். எனக்காக அவளும் அவளுக்காக நானும் அந்த விடுதியிலே நேரங்களை ஒதுக்கினோம். என்னைப் பார்க்க வேண்டுமென்றால் விடுதிக்கு வெளியிலுள்ள பூங்காவிற்கு வருவாள். எப்போதும் அவளுக்காக நான்தான் காத்திருப்பேன். அவள் அந்த தாதியர் உடையை மாற்றிவிட்டு  வருவாள். அப்போதெல்லாம் அவளது தட்டையான நெஞ்சுப் பகுதியில் கூடுதலான அழகு முறையில் “வண்ணநூல்கள் பின்னப்பட்ட ஏதாவது ஒரு வரைபடம்” இருக்கும். அந்தத் தட்டையான நெஞ்சை அழகாக வைத்திருப்பாள் எப்போதும் அதைக் கவனிப்பேன், இனமற்ற சிரிப்பை கொடுப்பேன். அவளும் கூட நான் கவனிப்பதைப் பார்த்துப் பதில் புன்னகை தருவாள் அவளோடு பேசும்போது சமயங்களில் உறைந்து போய் ஏதோ சிந்தனைக்குள் போய் விடுவதாகச் சொல்வாள்.  ’நமக்குள்  சரி, தவறான வார்த்தைகளே இல்லை அப்படிப் பேசுகிறோம், நாம் வார்த்தைகளின் மேல் அமர்ந்து பயணிக்கிற பறவைகள்’ என்பாள்.

எனக்கு அதன் பொருள் புரிய நேரம் அதிகமாகும். ஆனால் அவள் அப்படிப் பேசும் போது அவளது வார்த்தைகளினுள் ‘ஒளிர்கிற பிரகாசத்தைக்’ கவனிக்கத் தவறமாட்டேன். எப்போதும் எங்களுக்கு நிறைய நேரம் பேசக் கிடைக்காதபோதும் விரைவிலே கிடைக்கிற நேரங்களை உணர்வுள்ளதாகப் பரிமாறினோம். எங்களின் ஒவ்வொரு நாள் பிரிதலுமே எங்களின் நிறைவற்ற பேச்சோடுதான் முடியும். அப்படியானப் பிரிதல்தான் எங்களுக்கும் கூட அதிக ஆர்வத்தை மறுநாள் சந்திக்கக் கொடுப்பதுமாக இருந்தது. இப்படியான நாட்களின் இடையே தந்தை வேகவேகமாக குணமாகி வந்தார். நாங்கள் தானேஸ்ஸை விட்டு வெளியேறுகிற காலம் வந்தது, திரோன்ஸி அவரை நன்கு கவனித்தாள். மருந்தகத்தில் இருந்து எப்போதும் நாங்கள் கிளம்பலாம் என தெரிந்தது. அவளுக்குமே கூட அது தெரியும். ஆனால் நாங்கள் கிளம்பப்போகிறோம் என்கிற வருத்தம் அவளிடம் வெளிப்படுத்தவில்லை எப்போதும் போல சிரித்தபடியே அத்தனைப் பொறுப்பாக வேலைகளைச் செய்தபடியே இருந்தாள். எனக்கு அவளுடைய அதிகபட்சமாக அந்த இயல்பு குறையாநிலை தடுமாற வைத்தது. என்னால் அவளது அமைதியை எதிர்கொள்ள முடியவில்லை. அரூபக் கனவுகளை விட ஒரு நேரடியான அரூபப் பெண்ணை எதிர்கொள்ளமுடியாது நிறையவே திணறினேன்.

மறு நாள் அவளே கேட்டாள், “ நீ என்னை மீண்டும் சந்திக்க வருவாயா ?”

”நிச்சயமாக” என்றேன்.

அவள் ”கூடாது ”என்றாள்.

எனக்குப் புரியவில்லை ஒரு இடி விழுவதற்கு என் தலை ஆயத்தமானது. ஆனால் அதற்குள்ளே தொடர்ந்தாள் ஆனால் நாம் ஒருமுறை சந்திக்க வேண்டும் ஒரே ஒருமுறை என்னுடன் நீ இருக்க வேண்டும். இப்படியான நேர சிரமங்கள் ஏதுமின்றி நாம் ஒருநாள் முழுக்க பேசவேண்டும். அவள் சொல்ல வருவது எனக்குப் புரிந்தது. எனக்குமே கூட அதில் விருப்பம்தான் ஆனால் அந்த ஒருநாள் வரைமுறைதான் எனக்கு  உடன்பாடற்றதாக  இருந்தது.

மார்பு புறம்  தொங்கியிருந்த துணிப்பையைத் திறந்து தபால்  ஒன்றை எடுத்து நீட்டினாள். நீங்கள் இன்றே கிளம்பலாம் அதற்கான அறிவிப்பு நேற்றே வந்து விட்டது.  நான் அதை வாங்கியதும் அதே சலனமில்லாத புன்னகையோடு சொன்னாள்  சரியாக  ஒரு வாரம் கழித்து இங்கு வா நாம் சந்திக்கலாம்  காத்திருப்பேன்.


குளித்து தயாராகி வரும்போது சரியாகத் தேநீர் வைத்திருந்தாள். நான் மேலாடை ஏதும் அணியாமலே அவளோடு அமர்ந்து தேநீர் அருந்தினேன். அவள் அருந்திய தேநீர் கோப்பைக்குக் கைப்பிடி கூட முறிந்திருந்திருந்தது. நித்திரை கொள்ளாது இரவெல்லாம்  விழித்திருப்பாள்   போல கன்னம் நன்கு வீங்கியிருந்தது. பூங்காவில் நாங்கள் பேசிய பேச்சின் துளி கூட அந்த அறைக்குள் இல்லை பேசவே நிறைய தடுமாறினோம் அதிக நேரம் அமைதியாகவே பார்த்தபடி இருந்தோம். சட்டென எழுந்து போய் உள்ளறையை சாத்திக்கொண்டாள். சிறிது நேரம் கழித்து வெளியே வந்தாள் வேறு உடை அணிந்திருந்தாள். அது அவளது தட்டையான மார்பை இன்னும் தட்டையாகக் காட்டியபடி இருந்தது இம்முறை அதன் மேல் எந்த வரைபடமும் இல்லை.

 முதலில் யார் அந்த  விளையாட்டைத் தொடங்கினோம் என்று தெரியவில்லை, ஆனால் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் அவளது தட்டையான மார்புக்குதான்  நான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென.  அதற்காகவே அதிகமான இசைவுகளை கொடுப்பவளாக படுக்கையில் இருந்தாள். என்னை அவளது இன்னொரு நேர்த்தியான இயல்பான மார்பினை அதிகமாக தொடக் கூட அனுமதிக்கவில்லை. அவளுடைய அந்தத் தட்டையான மார்புப் பகுதியை நான் தொடும்போதெல்லாம் அவளது அத்தனை ஆசுவாசமான கிளர்ச்சியையும், துடிப்பையும் என்னால் உணர முடிந்தது அப்படி அவள் துடிக்கும் போதெல்லாம் பயப்படத் தொடங்கினேன் அதையெல்லாம் அவள் பொருட்படுத்தவேயில்லை எவ்வளவு முடியுமோ அவ்வளவு இயக்கினாள் எனக்கு அதிர்வாய் இருந்தாலும் அவளை அப்போது அவ்வளவு பிடித்திருந்திருந்தது. நாங்கள் எங்களை மாறி மாறி வாரியணைத்தபடி பின்னியிருந்தோம். அவளுடைய தட்டையான மார்பின் மேல் எனது முகத்தைப் புதைத்தபடியே இறுக்கிக்கொண்டாள். அது எனக்கு அவளது தீராத துன்பத்தையும், அதன் மீதிருந்த இயலாமையையும், தவிர்க்கப்படுகிற, கவனிக்கப்படாத வலியை அரூபத்தோடு விளக்கியது. அவளது கூந்தலை வாரி வாரி அளந்தபடி இருந்தேன், மெல்ல அவள் உறங்கியதும் கைகளைத் தவிர்த்து உடைகளை அணிந்து அவளுக்குத் தெரியாமலே சென்றுவிடலாமென தோன்றியது. அவ்வாறே எழுந்து நகர்ந்தபோது எனக்காக அவள் சமைத்த சமையல் மணத்துக்கொண்டிருந்தது. அவளை திரும்பி கூட கவனிக்காமலே மெல்ல வெளியேறி கதவினைச் சாத்தி வீதியைப் பார்த்தேன். மழை பெய்து ஓய்ந்திருந்தது சாலையின் எல்லா புறங்களிலும் தண்ணீர் தேங்கியிருந்தது. ஒரு நுட்பமான அமைதி.  மீண்டும் கதவினை திறந்து உள்ளே போய் அவளின் நெற்றியில்  ஒரு முத்தமிடலாம் போல தோன்றியது பதிலுக்கு அவளும் அணைத்து என்னோடே இருந்துவிடு என்று சொன்னால் எப்படி சமாதானம்   செய்வதென்றே தெரியாமல்   தயங்கியபடியே தெருவில் இறங்கிப் புகைத்தபடியே நடந்தேன். வீடு வந்ததும் கனத்த மனதோடு அழைப்பு மணியை  இயக்கினேன்.. தந்தை தாழ்திறக்க வரவில்லை பதட்டமடைய மீண்டும் மீண்டுமென அழுத்தினேன் ஒருவிதமான படபடப்பு    தொற்றிக்கொண்டது  வேகவேகமாக வீட்டின் பின்புற ஜன்னலை திறந்து பார்த்தேன். படுக்கையில் தந்தை அசைவற்று கிடந்தார்.

வறண்டு குரல் மறந்த நாவில் இருந்து பலத்து கத்தினேன் ”அப்பா …அப்பா  …”

வெடுக்கென கண்களை தந்தை  திறந்து பதறிப்போய் சுற்றும் முற்றும் எதையோ தேடினார். எனக்கு திரோன்ஸி விழித்த பிறகு என்னை தேடுவது மாதிரியே இருந்தது.


– ச.துரை

ஓவியங்கள்: இயல்

Previous articleபெரு விஷ்ணுகுமார் கவிதைகள்
Next articleநேத்ரா
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments