3.தெப்பக்குளம்
அதிகாலை ஏழு மணி. மாரியம்மன் கோவில் அருகில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. அதுவும், இன்று மரியம்மன் கோவிலில் எந்த விசேசமும் இல்லை. இன்று புதன்கிழமை வேறு. இதேநேரம் வெள்ளிக்கிழமை என்றால் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும், அந்த தியாகராசர் கல்லூரி முன் உள்ள விநாயகர் கோவிலில் கூட்டம் அலைகடல் எனத் திரண்டு விடும். தற்சமயம் புதிதாக அக்கோவில் சக்தி கொண்டுத் திகழ்கின்றது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அந்தச் சாலையில் வாகனங்கள் சிரமப்பட்டுச் செல்ல வேண்டும். அதுவும் இல்லாமல் சிக்னல் வேறு அருகில் உள்ளதால், வாகனங்கள் வரிசைக்கட்டி நின்று விடும். இதுவும் கூட்டம் அதிகமாக உள்ளது போல் தோற்றமளிக்கச் செய்து, அக்கோவிலில் மக்கள் கூட்டம் அதிகரிக்க காரணமாகியது என்றும் சிலர் கூறுகிறார்கள். தெய்வம், சாமி என்பவை சக்தி வாய்ந்தவை எனும் போது அதன் அமானுசியம் வியப்புக்குரியதே.
மாரியம்மன் கோவிலுக்கு எதிரில் உள்ள தெப்பக்குளத்தைப் பலரும் சுற்றிக் கொண்டு வந்தனர். இல்லை. இல்லை. அவர்கள் நடந்துக் கொண்டிருந்தனர். அவர்கள் திருமலை நாயக்கர் தொப்பை போன்று வீங்கிப் பெருத்த தங்கள் தொப்பையை, அவர் உருவாக்கிய தெப்பக்குளத்தைச் சுற்றி வந்தே கரைக்க முயன்றனர். தெப்பக்குளம் பலருக்கும் உடற்பயிற்சி கூடமாகத் திகழ்ந்தது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக உடற்பயிற்சிகள் மேற்கொண்டிருந்தனர். ஒருவர் பின்புறமாக ஓடிக் கொண்டிருந்தார். ஒருவர் குதித்துக் குதித்து குதிரையைப் போன்று ஓடினார். ஒருவர் சிறிது தூரம் நடந்தும், அதன் பின் சிறிது தூரம் ஓடியும், பின்பு நடந்தும் பயிற்சி செய்துக் கொண்டிருந்தார். அதனைப் பார்த்தவர்கள் சிரித்தே சென்றனர். அப்படி சிரித்தாலும் நிஜம் என்பது ஒன்று உள்ளதல்லவா? உடல் பருமன் காரணமாக உயர் இரத்த அழுத்தம், இதயக்கோளாறு, சர்க்கரை நோய் போன்றவை ஏற்படுகின்றன என்ற உண்மையை உணர்ந்து தானே ஆக வேண்டும்.
தெப்பக்குளத்தின் உள்ளே சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் கையை காலை ஆட்டி பயிற்சி செய்துக் கொண்டிருந்தனர். காலை இத்தனை வேடிக்கையானதாகவும், வியப்பானதாகவும் இருந்தது.
இயற்கை வியப்பானது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான மேகங்கள். தெப்பக்குளத்தின் நேர்மேலே வானத்தில் மேகங்கள் விதவிதமாக தோன்றி, தெப்பக்குளத்தின் அழகை அதிகரிக்கச் செய்தபடி இருந்தன. நேற்று வெண்மேகங்கள் திரண்டு நின்று அழகுப்படுத்தின. இன்று கார்மேகங்கள் திரண்டு நின்று தெப்பக்குளத்தை அச்சுறுத்தின. சூரியன் மெல்ல கண்விழிக்க, மேகங்கள் நகர்ந்து சென்றன. சைரன் காரில் வரும் மந்திரிக்கு வழிவிடும் பிற வாகனங்கள் போல் மேகங்கள் ஒதுங்கிச் சென்றன. அதிகாலை அற்புதமானது. அதனை ரசிக்கத் தெரிந்தவர்கள் பாக்கியவான்கள்.
தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய தெப்பக்குளம், இந்த மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் ஆகும். இது வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் என்று அழைக்கப்படுகின்றது. தெப்பக்குளம் 304.8 மீட்டர் நீள அகலம் கொண்டது. தெப்பக்குளத்தின் நடுவில் நீராழி மண்டபம் ஒன்று உள்ளது. அங்கு தோட்டத்துடன் கூடிய விநாயகர் கோவில் உள்ளது. இந்த தெப்பக்குளத்திற்கு சுரங்கக் குழாய்கள் மூலம் வைகை நதியில் இருந்து நீர் தெப்பக்குளத்திற்கு வருகின்றது. அநேகமான மாதங்கள் நீர் அற்று வறண்டு தெப்பக்குளம் பலருக்கும் விளையாட்டு மைதானமாகவே திகழும். அதுவும் கிரிக்கெட் விளையாட்டு பிரதானம்.
அதன் மேற்கு புறம் மீனாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியின் எதிர்புறம் தெப்பக்குளத்தை ஒட்டி உள்ள சிமண்ட் கற்கள் பதித்த நடைப்பாதைக்கு அருகில் வடக்கு தெற்காக சிலர் பாவு முனைய ஆரம்பித்து இருந்தனர். அவர்கள் பேசும் மொழி புரியாமல் சிலர் அவர்களைக் கடந்து சென்றனர். அவர்கள் சௌராஷ்டிரா மொழி பேசினார்கள். அவர்கள் நெசவைத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்தனர். பட்டுநூல் நெசவில் சௌராஷ்டிரா மக்கள் புகழ்பெற்று திகழ்ந்தனர். சௌராஷ்டிரா மக்கள் , மன்னர் திருமலைநாயக்கர் காலத்தில் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள்.
உண்மையில் அவர்கள் குஜராத்தில் வாழ்ந்து வந்தனர். சோமநாதபுரம் கொள்ளை அடிக்கப்பட்ட போது, மாலிக்காபூரின் படையெடுப்புக்கு பயந்து, அங்கிருந்து குடிபெயர்ந்து இந்தியாவின் தெற்கே நோக்கி நகர்ந்தனர். அப்படி நகர்ந்தவர்கள் ஆந்திராவை வந்தடைந்தனர். பின், திருமலை நாயக்கர் காலத்தில் மதுரைக்கு வந்து சேர்ந்தனர் என்பது வரலாறு. இங்கே, அவர்களின் பட்டு நூல் தொழில் மிகவும் பிரபலம். கால மாற்றத்தில், நவீன இயந்திரங்களின் வரவு, இன்று சிலரே நெசவு நெய்கின்றனர். தற்சமயம், அம்மக்களில் பலரும் உணவகங்கள் நடத்திக் கொண்டு வருகின்றனர். சௌராஸ்டிரா மக்கள் பொங்கல் செய்வதில் பிரபலமானவர்கள். அவர்கள் செய்யும் புளியோதரை மிகவும் சுவையானது. புளியோதரையின் சுவை நாவில் பல நாட்கள் நிற்கும்.
மணி 7.30 ஆனது. மாருதி 800 வண்டி ஒன்று பாவு முனையும் இடத்திற்கு அருகில் வந்து நின்றது. வண்டியில் இருந்து ஆறடி உயரமுள்ள ஒருவன் இறங்கினான்.
அவன் வண்டியில் இருந்து இறங்கிச் செல்லும் போது அங்கு தரையில் பாவு முனைபவர்கள் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனைத் தட்டிவிட்டுச் சென்றான். உண்மையில் , அவன் மண்ணெண்ணெய் கேனை பார்க்கவில்லை. அவன் முகத்தில் ஏதோ பதட்டம் தென்பட்டது. அவன் முகத்தில் வழிந்து ஓடிய வியர்வையை துடைத்தப்படி அமர்ந்திருந்தான்.
அவன் நன்றாக ஆறடி உயரத்திற்கு வளர்ந்திருந்தான். அவன் தாடி வைத்திருந்தான். அவன் வெள்ளைச் சட்டையும், காக்கி பேண்டும் அணிந்து இருந்தான். அவன் சட்டையை இன் செய்ய வில்லை. சட்டையை இன் செய்து , தலையில் தொப்பி வைத்தால் போலீஸ்காரன் போல் தெரிவான். ஆனால், இப்போது அவன் ஒரு முரடன் போல் தோற்றமளித்தான்.
மண்ணெண்ணெய் கேன் கீழே விழுந்திருப்பதைக் கவனித்த பாவு முனைபவர்களில் ஒருவர் வேகமாக ஓடி வந்து கேனை எடுத்து நிமிர்த்தி வைத்தார். கேனில் இருந்து கொஞ்சம் மண்ணெண்ணேய் தரையில் வழிந்து ஓடியிருந்தது.
“ஏங்க! பார்த்து வரக் கூடாதா? நம்ம கேன் தட்டி விட்டீங்களே எடுத்து வைக்கக் கூடாதா? நம்ம கேன்னுன்னா இப்படி இருப்பீங்களா?”
“அதான் தூக்கி வச்சிட்டீல்லே. போ! போய் வேலையை பாரு.”
அவனின் குரல் தடிமனில் கொஞ்சம் பயந்து போனவன், “ரவுடி பசங்க. மனசாட்சி இல்லாதவங்க. நமக்குன்னு வந்து சேர்ந்திருக்கானுங்க” எனத் தனக்குள்ளே சொல்லிக் கொண்டு நகர்ந்தான்.
அவனுக்கு காதில் விழுந்தாலும் விழுந்திருக்கலாம். அவன் கோபத்தை கார் டிரைவரிடம் அவன் காட்டினான்.
“டேய். வண்டியை நிறுத்தி தொலைடா. நான் சொல்றப்ப. ஸ்டார் பண்ணினா போதும். இன்னும் நேரம் இருக்கு.,” எனக் கத்தினான். அதன்பின், தெப்பக்குளம் சுற்றுச் சுவற்றில் ஏறி அமர்ந்து கொண்டான்.
மணி எட்டு ஆகியது. பாவு முனைபவர்கள் தங்கள் வேலையை முடித்து கம்பு, வாளி, மண்ணெண்ணெய் கேன், பாவு நூல் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு சென்றனர். இப்போது, அந்த மாருதி 800 வண்டி மட்டும் நின்றிருந்தது. எதிரில் இருந்த பெண்கள் பள்ளிக்கு மாணவியர் சீருடையில் நடந்து சென்றனர். வாகனங்கள் சாலையில் மிகுதியாகக் காணப்பட்டன. பள்ளிக்கு செல்லும் வாகனங்கள், வேலைக்கு செல்பவர்கள் என பலரும் வேகவேகமாக சாலையில் விரைந்து சென்று கொண்டிருந்தனர்.
இப்போது, வண்டிக்குள் இருந்து டிராபிக் போலீஸ் சீருடை அணிந்த மற்றொருவன் இறங்கினான். அவன் சிவப்பு நிறத்தில், உண்மையிலே போலீஸ் போல் இருந்தான். தாடி வளர்த்திருந்தவன் இன்னும் டிரைவர் இருக்கையில் அமர்ந்து இருந்தான். அவனும் பதட்டத்துடன் காணப்பட்டான்.
போலீஸ் உடையில் இருந்தவன் காமராசர் சாலையில் இருந்து அனுப்பானடி நோக்கிச் செல்லும் கார்களைக் கை காட்டி நிறுத்தினான். கார்களின் ஆர்சி புக், இன்சூரன்ஸ் போன்றவற்றை கேட்டு பெற்று சரி பார்த்தான். பைக்குகள், ஆட்டோக்கள் வழக்கம் போல் விரைந்து சென்றன. எப்போதும் ஆட்டோக்களையே நிறுத்திச் சோதனை செய்யும் போலீஸ் இன்று வழக்கத்திற்கு மாறாக மகிழுந்துகளைச் சோதனை செய்வதைக் கண்டு வியந்து சென்றனர். சிலர் ஏதோ பிரச்சனை என்று பயந்து சென்றனர். இன்னும் சிலர் விபரீதம் ஏதோ நடக்கப் போகின்றது என நினைத்துக் கடந்தனர்.
மணி எட்டு முப்பது.
வெள்ளை நிற சுவிப்ட் கார் காமராசர் சாலையில் இருந்து உள்ளே நுழைந்தது. தெப்பக்குளத்தின் சுற்றுச் சுவரில் அமர்ந்திருந்தவன் எழுந்து வந்தான். போலீஸ் உடை உடுத்தியவன். அந்த வெள்ளை நிறக் காரை நிறுத்தினான்.
“சார் ஸ்கூல் டிரிப் சார். குழந்தைகள் இருக்காங்க.,”
“துரை வண்டிய விட்டு இறங்க மாட்டீங்களோ!”
“இல்லை. சார். எட்டு முப்பதுக்கு ஸ்கூலில் பசங்க இருக்கணும். இப்பவே நேரம் ஆச்சு. பக்கத்தில்தான் ஸ்கூல்.,”
“இந்த வண்டி யாருடையது?”
“சார். காமாட்சி அப்பளக் கம்பெனி ஓனர் சுந்தராஜன் தான்.”
“ஓ! இப்ப அப்பளக்கம்பெனி ஓனர் எல்லாம் கஞ்சா கடத்தல் பண்றாங்களா?”
”சார். அவர் தங்கமானவர். சார். என் ஓரிஜினல் லைசன்ஸ் வாங்கி வச்சுக்கங்க. இந்த பசங்களை ஸ்கூலில் விட்டுட்டு வந்துடுறேன். அப்புறம் பேசிக்கலாம்.”
“போனைப் போடுடா..உங்க ஓனருக்கு!” என்று கத்தினான் சுற்றுச்சுவரில் இருந்து இறங்கி வந்தவன்.
“ சார். என் போனில் அவுட் கோயிங் போகாலை சார். நேத்து இருந்து.. ஒன்லி இன் கம்மிங் தான் சார். நான் நம்பர் சொல்றேன். நீங்க கூப்பிடுங்க, சார்! அதுக்குள்ளே இந்த பெம்பளை பசங்களை ஸ்கூலில் விட்டுட்டு வந்துட்றேன்.”
“என்ன பசங்க பசங்கன்னு வண்டியை எடுத்துட்டு போயிடலாம்ன்னு நினைக்கிறீயா?”
“சார். இவன் கிட்ட என்ன பேச்சு. வண்டியை விட்டு இறங்குடா…” என்றவாறே திண்டில் இருந்து இறங்கியவன் கார் டிரைவரை இழுத்தான். கார் டிரைவர் வண்டியில் இருந்து இறங்கினான்.
”சார். அவனைப் பின்னாடி உட்கார வைங்க. ஸ்டேசனுக்கு வண்டியை விடுவோம்.” என்று அவன் கூறினான்.
போலீஸ் சீருடையில் இருந்தவன் டிரைவரை அழைத்து, மாருதி 800 வண்டியில் ஏற்றிக் கொண்டார். சுவறில் இருந்து இறங்கி வந்தவன் வெள்ளை நிற வண்டியை ஸ்டார் செய்து ஓட்டத் தொடங்கினான். வண்டி தெப்பக்குளம் ஸ்டேசன் நோக்கி சென்றது. அங்கு நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.
“பார்த்தியா? பார்க்க டீசண்டா இருக்காங்க. கஞ்சா கடத்துறானுங்களாம். இப்படி அவனுங்க பிள்ளை குட்டிய வச்சிகிட்டு அசிங்கப்படுத்தினா தான் அறிவு வரும். போலீஸ்ன்னா சும்மாவா?”
”பணக்காரன்னு பார்த்தா திருட்டு பயலுகளா இருக்காங்க!”
“காலம் கெட்டுக் கிடக்கு. எவன் நல்லவன் எவன் கெட்டவன்னு தெரியலை.”
“பாவம்! அந்தக் குழந்தைகளை ஆட்டோவில் பள்ளிக்கு அனுப்பி வைத்திருக்கலாம்”
“ குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள். பள்ளிக்கூடத்துக்கு போற பசங்களை இப்படி வேனில் ஸ்டேசனுக்கு கூட்டிகிட்டு போகலாமா?”
இப்படி விதவிதமான குரல்கள். அந்த கார் உண்மையில் போலீஸ் ஸ்டேசன் சென்றதா?
அதோ வண்டி போலீஸ் ஸ்டேசன் நெருங்கி விட்டது.
காத்திருப்போம். என்ன நடக்கிறது?
தொடரும்…
-க.சரவணன்
ஓவியம்:அப்பு சிவா