அத்தியாயம் 1
ராம் அந்த மூத்திரச் சந்தின் கடைசி கோடிக்குக் கால்களை அகல விரித்து அவசரமாக நடந்து சென்றான். கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தை அவ்வப்போது உயர்த்தி பார்த்துக்கொண்டும் நடந்தான். நிமிடங்கள் என்னவோ நிமிடமாகத்தான் நகரப்போகிறது. அவன் பார்ப்பதால் கருணைகொண்டு நிதானித்து நகரப்போவதில்லை. அது அவனுக்கும் தெரியும். ஆனால் மனம் படபடப்பில் இருக்கும்போது அது அவனது பழக்கமாக மாறிப்போயிருந்தது. சாலையின் இரு புறமும் அடைத்து நின்றன கடைகள். மிகச்சிறிய அளவில், வாசல் முழுவதும் சாமான்களால் நிரப்பப்பட்டு, சாலையின் கணிசமான பகுதியை ஆக்கிரமித்தபடி அவை திறந்து கிடந்தன. இந்தக்கடைகளுக்கு நேரம் காலம் என்பதே கிடையாது என்பது போல் எப்போதும் விரிந்து கிடக்கும். அவற்றில் விவஸ்தையில்லாமல் ஒருவர் மேல் ஒருவர் விழுந்தபடி கூட்டத்திற்கும் குறைவிருக்காது. பல நேரம் அவன் அவர்கள் பிருஷ்டத்தில் இடித்தபடிதான் தன் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும். இடிபட்டவர்களும் பாதிப்பைக் காட்டமாட்டார்கள், இடித்தவர்களும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள். எல்லோர் உடலிலும் ஒரு அமானுஷ்யமான வியாபார நாடி மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும்.
அது பாரிஸ் கார்னரில் ஒரு ஒட்டுச்சந்து. அந்த ஒட்டுச்சந்து மெதுவாக ஓடிச்சென்று நிற்கும் இடத்தில்தான் அவன் அலுவலகம் இருந்தது. சுமார் இருநூறு வருடத்தை வென்று நின்றுகொண்டிருக்கும் சிகப்புக்கலர் கட்டடம். பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்டது. பல ஆங்கில நிறுவனங்கள் தங்கள் காலத்தைக் கழித்துவிட்டுச் சென்ற பின்னர், சலிசான வாடகைக்கு எடுக்கப்பட்டு, சிறு சிறு அறைகளாகப் பிரிக்கப்பட்டு தற்போது சுமார் இருபது கம்பெனி போர்டுகளைச் சுமந்திருக்கும் கட்டடம்.
அந்தச்சந்தில் மட்டும் பல நேரங்களில் மாட்டின் சாணி தெருவெங்கும் சிதறிக்கிடக்கும். எப்போது மாடுகள் அங்கு வந்தன, இந்தக்கூட்டத்தின் நடுவே அவை எப்படி நடந்து சென்றன, தற்போது அவை எங்கே கட்டப்பட்டிருக்கின்றன என்பதெல்லாம் சிதம்பர ரகசியம். இதுவரை ராம் சாணியைத்தவிர ஒரு மாட்டையும் கண்களால் பார்த்ததில்லை. அது சில நேரங்களில் இது மாட்டுச்சாணி தானா அல்லது…? சீ… என்ன நினைப்பு உடல் அருவருப்பால் கூசி நிற்க இன்னும் அதிக ஜாக்கிரதையாகத் தாண்டிச்செல்வான்.
அந்த சிகப்பு கட்டடத்தின் முன் ராம் வந்து நின்றபோது அவன் திருப்பிப்பார்த்த கைக்கடிகாரத்தின் பெரிய முள் ஒன்பதைத் தொட்டுவிட அதன் பக்கம் ஆடிக்கொண்டிருந்தது இப்பவோ இல்லை அப்பவோ என்று இல்லாத வாயில் இளிக்கும் பற்களை ராமிற்குக் காட்டியபடி.
அப்பாடா, நேரத்திற்குள் வந்துவிட்டேன். இன்று சீசர் வாயில் விழுந்து புறப்படவேண்டாம் என்று நினைத்துக்கொண்டே ஒரு நீண்ட பெருமூச்சை வெளியிட்டான். அந்தக்கட்டடத்தின் நான்காவது மாடியின் ஈசான மூலையில் இருக்கும் ஒரு இருட்டு அறைதான் அவன் அலுவலகம். அந்த அறைக்குப்பின் வேறு சில இருட்டு அறைகள் என்று சற்றே நீண்டு செல்லும் பாதை இருந்தது. கோடிக்கணக்கில் பணப் பரிவர்த்தனைகள் இந்த இருட்டு அறைகளில் நிமிடத்தில் நடந்து முடிந்து விடும். நடந்ததும் தெரியாது, நடத்தியவரும் தெரியாது, நடத்தப்பட்டதற்கான காரணமும் தெரியாது. சில நாட்களில் பட் பட் என்று பெரிய தொப்பையைச் சுமந்து செல்லும் சிரமத்தைக் காட்டியபடி போலீஸ் பூட்சுகள் அங்குமிங்கும் தன் நடமாட்டத்தைக் காட்டும். ஏதோ ஒரு இருட்டு அறையில் சமாதானமோ இல்லை சால்ஜாப்புக்களோ வீசப்பட்டு நோட்டுக்களின் கணத்தின் அதிகரிப்போடு மேலும் டபார் சத்தம் இட்டபடி பூட்ஸ் அணிந்த கால்கள் கீழே சென்றுவிடும்.
சத்தம் ஒன்றும் அந்த கட்டடத்திற்கு அதிசயம் அல்ல. கிரீச் கிரீச் என்று சத்தமிட்டபடி இஞ்ச் இஞ்ச்சாக மேலே நகர்ந்து செல்லும் பழைய கால லிப்ட். வெவ்வேறு அறைகளுக்கு நாள் முழுவதும் வருவதும் போவதுமாக இருப்பவர்கள் போனசாக மற்ற அறைகளுக்குக் கொடுத்துச்செல்லும் பரிசு. தவிர வெவ்வேறு வித தொண்டை கமரல்கள். பான் பராக்கின் அதீத உபயோகம் பலருக்குக் கொடுத்த பரிசு. இவற்றைத்தவிர அங்கும் இங்கும் அதீத வேகத்தில் பாய்ந்து ஓடும் எலிகளும் அவற்றைப் பிடிப்பதற்குக் கூக்குரலிட்டபடி துரத்தும் வெள்ளை கறுப்பு கருப்பு வெள்ளை என்று வித விதமான பூனைகளும்.
லிப்ட் முன் ராம் சென்று நின்றான்.
“ஷிட்” இன்னும் சில பல சமர்த்தாக இருப்பவர்கள் பேசக்கூடாத வார்த்தைகள் வந்து விழுந்தன. அந்த லிப்ட்டின் கிரில் கேட்டில்
“Out of Order – வெலை செய்யாத்” என்ற போர்ட் ஊசலாடிக்கொண்டிருந்தது.
“இது வேற பிராணன் எடுக்குது. என்றைக்குத்தான் இது சரியா வேலை செய்யுமோ. பவர் கிடையாது, ரிப்பேர் இல்லை மெயிண்டனஸ் இல்லை …. யூஸ்லெஸ் ஃபெல்லோஸ்” முகமறியாத பல நபர்களைத் திட்டிக்கொண்டே அவசரமாக மாடிப்படிகளைத் தாண்டத் தொடங்கினான்.
ராம் மாடி ஏறுவதைப்பார்த்திருந்தால் அவன் வயதை மிகச் சுலபமாகக் கணித்திருக்க முடியும். நேரத்திற்குள் செல்ல வேண்டும் என்ற உந்துதலில் இரண்டிரண்டு படியாகக் கால்களை வைத்து அவன் ஏற முயல, இரண்டு முயற்சிக்குப்பின் லேசாக மூச்சு வாங்கத் தொடங்கியது. கொஞ்சம் பெரியதாக வெளிக்காட்டத் தொடங்கியிருந்த வயிற்றின் மீது பிடித்தபடி அமர்ந்திருந்த பாண்ட் பெல்டை லேசாகத் தளரவிட்டுக்கொண்டு மூச்சை இழுத்து விட்டான். இப்போது அவன் வயதைச் சரியாகச் சொல்ல முடிந்திருக்கும். அதே. அவன் முப்பதுகளை முடித்துவிட்டு நாற்பதின் தொடக்கத்திலிருந்தான். முன் வழுக்கை லேசாக எட்டிப்பார்க்கத் தொடங்க, முன் கேசத்தை எண்ணை விட்டுப் படிய வாரி, இடது வகிடெடுத்து வழுக்கை பளபளப்பு டாலடிக்கா வண்ணம் இழுத்து வாரி மூடி வைத்திருந்தான். அவன் பெண்களை வெறிக்கப்பார்க்கும் பார்வையே அவனுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பதைப் பார்ப்பவருக்கு உணர்த்தும்.
அவசரமாக மூச்சை வாய் வழியே வெளியே விட்டபடி நான்காவது மாடியை அடைந்தான்.
கதவைத் திறக்கும்போதே சீசரின் அழுத்தமான குரல் கேட்டது. ஒரு பழைய கிழிந்து போன குஷன் நாற்காலியில் ஆயாசமாக அமர்ந்து கை நகங்களை அழகு பார்த்துக்கொண்டிருந்த ஷீலா கதவைத்திறந்த சத்தம் கேட்டு நிமிர்ந்தாள்.
“ராம் நீ ஐந்து நிமிடம் லேட். பாஸ் மீட்டிங் தொடங்கிவிட்டார். எப்போதும் போல் உனக்கு இன்றைக்கும் டோஸ்”
நேரம் ஆன பட படப்பிலும் ராம் மேஜைக்கு அருகே, சற்றே குனிந்த நிலையில் அமர்ந்திருந்த அவளின் மிகப்பெரிய அளவில் தெரிந்த மார்பகங்களைத் தன்னை மறந்து பார்க்கத் தவறவில்லை.
“ஷீலா, இந்த லிப்ட் காலை வாரி விட்டுடிச்சு” பார்வை மயக்கத்தின் காரணமாக லேசான கலக்கம் குரலில்.
“போ…போ… சீக்கிரம். இன்னும் லேட்டாக்காதே” ஷீலா அவன் பார்ப்பதைப் பொருட்படுத்தாமல் துப்பட்டாவை இன்னும் சற்றே சரிய விட்டாள்.
சீசரின் குரல் உள்ளேயிருந்து பிரிட்டிஷ் பீரங்கி போல் குண்டு போட்டது.
“ராம். வந்துட்டியா? வந்ததே லேட். அங்கே என்ன மேன் பண்ணுற?”
அவசரமாக ராம் உள்ளே நுழைந்தான்.
டிஜிடல் போர்ட் அருகே சீசர் நின்று கொண்டிருந்தார். அதில் ஏகத்திற்குப் புள்ளிகளும் சுழிகளும் போடப்பட்ட எண்களும் அவற்றின் பக்கம் கேள்விக்குறிகளும் இருந்தன.
“சாரி, க்ருஷ். லிப்ட் படுத்திடுத்து. அதான் ஐந்து நிமிடம் தாமதம்”
க்ருஷ் என்று நேரில் செல்லமாக அழைக்கப்படும் கிருஷ்ணகுமாருக்கு அவர் இல்லாத நேரங்களிலும் அவர் முதுகிற்குப் பின்னால் கூறப்படும் பெயர் சீசர். இது ராம் மற்றும் அவன் தோழர்கள் அவருக்கு வைத்திருக்கும் செல்லப்பெயர் என்பதை அறிய ஒரு புள்ளி அளவு மூளை இருந்தால் கூடப் போதும். அந்தப்புள்ளியை விடச் சிறிது அதிகமான மூளை இருந்தால் இந்த நாமகரணத்தின் காரணம் அவரின் எக்கோவுடன் ஒலிக்கும் அதி சத்தமான குரல் மட்டுமே என்று தோன்றினால் அது தவறு. அதுவும் ஒரு காரணம். ஆனால் முக்கியமான காரணம் ஒரு நாய் போல் தவற்றை மோப்பம் பிடிக்கும் அவர் திறமையே.
கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி
“நோ ராம் யூ ஆர் லேட் பை எயிட் அண்ட ஹாப் மினிட். சொல்வதைச் சரியாகச்சொல்” என்றபடி ஒரு ஏளனப்பார்வையை வீசினார்.
பதில் என்ன சொல்வது, மன்னிப்புக்கேட்க தேவை உண்டா அல்லது எப்போதும் போல் ஒரு அசட்டுச்சிரிப்பினால் சமாளிக்க இயலுமா என்று ராம் யோசித்து முடிப்பதற்குள்,
“பையா, நேரத்தை வீணடிச்சது போதும். உட்கார். இந்த மாச பட்ஜெட் டிஸ்கஷன். உன் பங்கு…..”
ராம் சுதாரித்து அமர்ந்தான். பக்கம் அவனைப்போல் அவன் நண்பர்கள் சிலரும் நண்பர்கள் அல்லாத சிலரும் முகத்தில் விளக்கெண்ணெய் வழியவிட்டபடி அமர்ந்திருந்தனர்.
க்ருஷ் என்ற கிருஷ்ணகுமார் அந்த இன்சூரன்ஸ் கம்பெனியின் ஒரே முதலாளி. நிறுவனத்திற்குத் தனியாகப் பெயர் எதையும் தேடாமல் கிருஷ்ணகுமார் அண்ட் கோ – இன்சூரன்ஸ் சர்வேயர்ஸ் அண்ட் இன்சூரன்ஸ் ஏஜெண்ட்ஸ் என்று கேனத்தனமாக பெயரிட்டும் வியாபாரத்தில் கொழிப்பவர். ஒரு நாளில் சிட்டியில் நடைபெறும் நூறு விபத்து சொச்சம் சம்பந்தமான உரிமை கோரல்கள் சர்வே செய்யப்பட, இவரிடம் கொடுக்கப்படும். விபத்துகள் மட்டுமே இல்லை. இதே சதவீதத்தில் இறப்புக்களுக்கான க்ளெய்ம்ஸ், தீ விபத்தில் நேர்ந்த இழப்புகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இதை இவர் எப்படிச் சாத்தியப்படுத்தினார் என்பது யாரும் அறியாத ரகசியம். ஆனால் அவர்களின் நடுவே உலாவி வரும் ஒரு கூற்று ‘சின்ன வயதில் மிக அழகாகவும் இப்போது சற்றே சுமாரான அழகாகவும் இருக்கும் அவர் மனைவி தான்’ எனும் பேச்சு. இதில் சில நேரங்களில் அந்த மனைவி அழகானவள் என்று சொல்லப்படாமல் மிக அதிகப் பணம் குவிந்து கிடப்பவள் என்று மாற்றுக் கருத்தும் உலா வருவதுண்டு. ஆனால் க்ருஷின் வளர்ச்சிக்கு எந்த மாற்றுக் காரணம் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதில் அவர் மனைவியைச் சம்பந்தப்படுத்தி ஏதாவது ஒரு காரணம் நிச்சயம் இருக்கும். சற்றே யோசித்துப்பார்த்தால் வெற்றி பெற்ற ஒருவரைக் காயப்படுத்துவதற்கு அவர் மனைவியைத் தாழ்த்திப் பேசுவது போன்ற எளிதான ஒரு வழி வேறு இருப்பதாகத் தெரியவில்லை.
க்ருஷ் மிகச் சத்தமாகக் கூச்சலிட்டார். அவர் இவ்வாறு பேசும்போது அது அவரின் பதைபதைப்புத் தன்மையைக் காட்டுகிறது என்பதை ராம் வேலைக்குச்சேர்ந்த சில தினங்களிலேயே புரிந்து கொண்டு விட்டான். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் வாயை மூடி மௌனம் காத்தால் தப்பிக்க முடியும் என்ற யுக்தியும் அவனுக்குப் பிடி பட்டுப்போயிற்று. அதனால் இப்போது வாயை இறுக மூடிக்கொண்டே அமர்ந்திருந்தான்.
க்ருஷ் டிஜிடல் போர்டில் எழுதப்பட்டதைச் சுட்டிக்காட்டியபடி கத்திக்கொண்டிருந்தார்.
“பாருங்க, இது போன மாசத்திற்கான டார்கெட். இதைச் சாதிக்க முடிஞ்சுதா? இல்லை. இதோ போன மாசத்திற்கான ஆக்சுவல்ஸ். அறுபது சதவீதம் கூட எட்டவில்லை. சரி, போன மாசம் ஏதோ சந்தர்ப்பங்கள் சரி இல்லைன்னே வெச்சுக்குவோம். அதுக்கு முன் மாசத்தின் டார்கெட் வெர்சஸ் ஆக்சுவல்ஸ் பாருங்க. டிஸ்கஸ்டிங். என்ன பாக்குற, சொன்னது புரியலியா. காரி துப்ப தோணுது. அதைத்தான் ஆங்கிலத்தில் பாலிஷ்டாக சொன்னேன். இப்படியே போச்சுன்னா, இன்னும் சில மாசத்திலே கம்பெனியை இழுத்து மூடிட்டுப் போக வேண்டியது தான். ஒண்ணு தெரிஞ்சுக்குங்க. அப்படி நடந்துச்சின்னா என்னை விட உங்க பாடு அதோகதிதான். இதைப்பத்தி யோசிச்சிருந்தீங்கன்னா தீயா வேலை செஞ்சிருப்பீங்க…”
பல கேட்கச் சகிக்காத வார்த்தைகளுடன் க்ருஷ் தொடர்ந்து திட்டிக்கொண்டிருந்தார்.
ராம் பொறுமையாகக் காத்திருந்தான். இது அனைத்தும் அவர்களின் ஊக்கத்தொகையைக் குறைப்பதற்கும், இந்த மாதத்திற்கான வேலை பட்ஜெட்டை உயர்த்துவதற்கும்தான் என்பது அவனுக்குத் தெரியும். இதனால் ஏற்படக்கூடிய பாதிப்பைப் பற்றி யோசிப்பதை அவசரமாகத் தள்ளி வைத்தான்.
“ராம், உன் பெர்ஃபார்மென்ஸ் ரொம்ப பாதடிக். இதப் பாரு உனக்கு டார்கெட் இந்த மாதம் கொறஞ்சது பத்து புது பாலிசி பிடிக்கிற. போன ரெண்டு மாசமா நீ உனக்குக் கொடுத்த டார்கெட்டை அசீவ் செய்யலை. அதனால உனக்கு இந்த காலாண்டுக்கான ஊக்கத்தொகை எதுவும் கிடையாது”
ராமிற்கு அம்மாவின் மருத்துவத் தேவைக்கு வாங்கிய கடன், மளிகைக்கடன், நண்பர்களிடமிருந்து வாங்கியிருந்த கைமாற்று, க்ரெடிட் கார்ட் ட்யூ தேதி, நாயர் கடை சிகரெட் மற்றும் டீ கடன் பாக்கி என்று எல்லாம் சுழலாகச் சுற்றத்தொடங்கியது.
“மீட்டிங் முடிந்து விட்டது. ஆல் ஆப் யு மே டிஸ்போஸ் இனி உங்கள் இன்றைய வேலைக்கு நீங்கள் திரும்பலாம்.”
பீரங்கி குரலில் அறிவிப்பைத் தொடர்ந்து சீசர் மிலிட்டரி நடையில் அந்த அறையை விட்டுக்கிளம்பினார்.
மதன் ராமின் அருகில் வந்தான்.
“என்னடா, சீசர் தன் வேலையை காட்டுது பார். ஒண்ணு தெரியுமா. ஷீலாவோட நான் பேச்சுக்கொடுத்துப் பார்த்தேன். இந்த மாசம் மட்டும் அவளை இருபது தடவை செக் டெபாசிட் செய்யப் பாங்கிற்கு அனுப்பி இருக்கார். ஆனால் நம்ம கிட்ட மட்டும் மூக்கால அழுது நம்ம வயத்திலே இல்ல அடிக்கிறார். ராம், கனகா கிட்ட நான் இந்த மாச ஊக்கத்தொகையிலே புது மொபைல் வாங்கித் தரேன்னு ப்ராமிஸ் வேற பண்ணி இருக்கேன். தொலஞ்சேண்டா”
ராமிற்குக் கனகா யார் என்று தெரியும். நிச்சயமாக மதனின் மனைவியாக இருக்க முடியாது என்பதை யார் வேண்டுமானாலும் சுலபமாக யூகிக்க முடியும். காரணம் மனைவிக்குப் பொருள் வாங்கித்தராமல் போகும் சந்தர்ப்பத்தைப்பற்றி யாரும் மதன் அளவிற்குப் பாதிக்கப்பட்டுப் பேச மாட்டார்கள். இந்தக் கனகா மதனின் இந்த மாதக் காதலி. பீச் பார்க் திரை அரங்கு என்று ஏதோ ஒன்றில் சந்தித்ததாகச் சொல்லியிருந்தான். மாறிக்கொண்டே இருக்கும் அவன் காதலிகளைப்பற்றியும் அவர்களை அவன் சந்தித்த விதம் பற்றியும் பல நேரம் மதனுக்கே கூட நினைவில் இல்லாமல் போகும்.
ராம் பெருமூச்சு ஒன்றை விட்டான்.
அத்தியாயம் 2
ராம் தன் மேஜையின் மேல் குப்பையாகக் குவிந்து கிடந்த தாள்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்து அதில் அவனுக்குக் கொடுக்கப்பட்ட பத்து பாலிசி டார்கெட்டிற்கு ஏதாவது தேருமா என்ற நப்பாசையில் தேடிக்கொண்டிருந்தான்.
“ராம், பாஸ் தன் அறைக்கு உன்னை கூப்பிடுது” ஷீலா தேவையில்லாமல் மிக அருகே அவளின் பவுடர் வாசம் அவன் மூக்கை எட்டும் தூரத்தில் நின்று அவனிடம் கூறினாள்.
அவனுக்குத் தெரியும். ஷீலா அவன் அவளிடம் நெருங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். அவனுக்கு மட்டும் என்ன அதைச் செய்வதில் இஷ்டமில்லாமல் இருக்குமா? என்ன அதனுடன் வரக்கூடிய கஷ்டம் அவனை அவளிடமிருந்து ஒதுக்கி வைத்தது. பாஸுடன் ஷீலாவிற்கான நெருக்கம் இந்த ஆபிஸ் மட்டுமல்ல அந்த சிகப்பு பிரிட்டிஷ் கட்டடத்திலிருந்த அனைத்து இருபது நிறுவனங்களும் அறிந்த ஒரு உண்மை. அதனால் அவள் அவனைப்பற்றி பாஸிடம் தாறுமாறாகக் கூறிவிடக்கூடிய அபாயம் இருந்ததால் அவளிடம் மிகச்சமத்தாக நடந்து கொள்வான். சில நேரங்களில் “தங்கச்சி” என்று கூறும் முக பாவங்களைக் காட்டியதும் உண்டு.
அவசரமாக க்ருஷின் அறைக்குள் நுழைந்தான். அவனுக்காகவே காத்திருந்தார் போல் அருகில் வந்ததும் ஒரு சில காகிதத்தை அவன் முன் எடுத்து வீசினார்.
“உனக்கெல்லாம் சம்பளத்தையும் கொடுத்து உன் வேலையையும் நானே செய்ய வேண்டி இருக்கு. என் தலை எழுத்து. இந்தா பையா, உன் இந்த மாச டார்கெட்டிற்கான ஒரு அப்ளிகேஷன். யாரோ ரேகாவாம்.நகைகளைக் காப்பீடு செய்யணுமாம். போ. என்ன ஏதுன்னு பாத்துட்டு வா. ஆனா ஒண்ணை நினைவில் வெச்சுக்க, இது நிறைய ப்ரீமியம் கொண்டு வந்தாலும் உன் டார்கெட்டிற்கு நீ மிகவும் கீழே தான் இருப்பே. மைண்ட் இட்”
அவசரமாக நன்றி கூறிவிட்டு காகிதக்குப்பைகளை கைகளில் அள்ளிக்கொண்டு வெளியே வந்தான். அதில் கடவுளின் படத்தைக் கைகளில் தாங்குவது போன்ற ஒரு பாவமும் தெரிந்தது. காரணம் மிகவும் லாபகரமானது என்று பார்த்தால் அது நகைகளுக்கான காப்பீடுகள் தான். என்றோ நடக்கப்போகும் திருட்டை நினைத்து இந்த காப்பீடுகள் எடுக்கப்படுகின்றன. ஆனால் அவற்றில் கம்பெனி மீது போடப்படும் க்ளெய்ம்ஸ் மிகவும் குறைவாகவே இருக்கும். ஆனாலும் பயம் சோறுபோடும் வரை இவ்விதமான காப்பீடுகள் தொடர்ந்து செய்யப்பட்டுக்கொண்டே தான் இருக்கும். அதிகமான காப்பீட்டு பிரீமியம் தனக்குக் கொடுக்கப்போகும் லம்பான கமிஷன் அவன் நாற்பது வயது உடம்பில் அதிக சுறுசுறுப்பைக் கொண்டுவந்தது.
ஷீலா ஓரக்கண்ணால் அந்த அறையின் கதவுகளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். கண்கள் மட்டுமின்றி அவள் காதுகளும் அதிகப்படியான வேலையைச் செய்திருந்தன, அதற்கு அவளின் பேச்சே சாட்சியாக இருந்தது.
“என்ன ராம், பாஸ் உனக்கான வேலையையும் சேர்த்தே பாக்குறாரா லக்கி மேன்?” குரலில் ஏளனம் கொப்பளித்தது.
ஷீலா மட்டுமல்ல, அந்த நிறுவனத்திலுள்ள அவனுடைய சில நண்பர்களுக்கும் பல நண்பர்கள் அல்லாதவர்களுக்கும் இந்த எண்ணம் இருந்து வந்தது. ராமிற்கும் க்ருஷ் அவன்மேல் கொண்ட சற்றே தூக்கலான பாசம் புரியும். அதற்குக் காரணம் அவனைப் பொறுத்தவரையில் அவன் குடும்ப சூழ்நிலையும் அதனால் அவருக்கு ஏற்படும் பச்சாதாபமும் என்றே எண்ணிக்கொண்டிருந்தான். மிகவும் பணக்கஷ்டத்திற்கு உள்ளாகித்தான் தன் எஞ்சினியரிங் படிப்பை முடித்தான். அரியர்ஸ் என்று பலரும் முடிக்காதிருந்த நிலையில் அதிகமாக மதிப்பெண்கள் எடுத்துத்தான் முடித்தான். ஆனால் அவன் போதாத காலம் அவன் படிப்பை முடிப்பதற்கும், எஞ்சினியரிங் படித்தவர்கள் வேலை கிடைக்காமல் கழிப்பறை கழுவும் வேலைக்குக்கூட மனுபோட, கைகளில் டிகிரி சர்டிபிகேட்டுடன் அவன் திகைத்து நின்றிருந்தான். அதிர்ஷ்டவசமாக கிருஷ் அவன் முன்னே ஆபத்பாந்தவனாகத் தோன்றினார். பல வருடம் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் வேண்டிய குப்பையைக்கொட்டி அதற்கும் மேலாகத் தனியாக நிறுவனம் தொடங்குவதற்கான காண்டாக்டுகளையும் பிடித்து, க்ருஷ் இந்த நிறுவனத்தைத் தனி ஒருவனாகத் தொடங்கினார். காப்பீடுகள் எடுப்பது முதல், சர்வேயர், பிக்சர், என்று பல முகத்தோடு சக்கைபோடு போடத்தொடங்கி இருந்தார். அப்போது அவருக்குத் தேவையாக இருந்தது ராமைப்போன்ற ஒரு டிகிரி படிப்புடன் அவர் சொன்னதைக்கேட்டு அடங்கி இருக்கக்கூடிய ஒருவன். அவர் எதிர்பார்த்த அத்தனை தேவைகளையும் ராம் பூர்த்தி செய்ய, அவரிடம் ஆறு மாத ட்ரெய்னியாக சேரும்படி கூறினார். ராம் முதல் தேர்வை மிக அதிக மதிப்பெண்ணுடன் பூர்த்தி செய்ய, நிறுவனத்தின் ஒரு பகுதியாக மாறிப்போனான். க்ருஷ் சொன்னதைப்போல நிறுவனத்தின் வாகனக் காப்பீடு மற்றும் இதர பொருட்கள் காப்பீடுகளுக்கான சர்வேயராக வேலையைத்தொடர்ந்தான். நிச்சயமாகக் க்ருஷ் கொடுத்த சம்பளத்தில் எந்த குறையும் இல்லை. ஆனால் ஒரே பிள்ளையாக அப்பா தவறிப்போன பின் குடும்பச் செலவுகள் அவன் தலையில் விடிந்தது. காலை எழுந்ததும் ஒரு கைப்பிடி வித விதமான மாத்திரைகள், மதியம் சாப்பாட்டின் அளவைப்போலவே குவியலாய் மற்றும் சில மருந்துகள், தூக்கம் வருவதற்கு ஒரு மருந்து, காலை விழிப்பதற்கு ஒரு மருந்து, நடக்க ஒரு மருந்து, படுக்க ஒரு மருந்து என்று எதையோ காரணம் சொல்லி அம்மா தினமும் ஒரு செலவு வைக்க, பல நேரம் அவன் சம்பளம் மாதத்தின் முதல் வாரத்திலேயே காணாமல் போய் விடுகிறது.
ஏதோ ஒரு புதிய செண்டின் நறுமணத்துடன் மதன் அருகே வந்தான். காலையில் அவனிடத்தில் இந்த மணம் இல்லை என்பது ராமின் தீர்மானம். புதிதாக ஏற்பட்ட அந்த மாறுதலுக்கான காரணம் அப்போது புரிந்தது.
“புதுசா ஒரு காப்பீட்டுக்கால். முடிச்சுட்டு வரேன்.” அவன் முகத்தில் நிலவியிருந்த சந்தோஷம் அந்தக்காப்பீட்டுக்குச் சொந்தக்காரர் ஒரு பெண் என்பதைத் தெளிவாகக் கூறியது.
“என்ன ராம், சீசர் கொடுத்தாரா? நிச்சயமாக ஒரு திராபை க்ளைய்ண்டாகத்தான் இருக்கும். என்சாய்” என்றபடி ஷீலாவின் காதுகளில் எதையோ கூற அவளுக்கு மிக அருகில் சென்றான்.
ராம் உடைகளைச் சரி பார்த்துக்கொண்டு ரேகாவைப் பார்க்கக் கிளம்பினான். ஷீலாவின் அருகில் வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் சாவியை அள்ளிக்கொண்டான். க்ருஷ்ஷிடமிருந்த மனிதாபிமானம் சொந்த வண்டி இல்லாதவர்களுக்கென ஆபீசில் ஒரு ஸ்கூட்டர் பூல் ஒன்றை அமைத்து வைத்திருந்தார். வேலை காரணமாகப் போகவேண்டி இருந்தால் அதை எடுத்துக்கொண்டு போகலாம். வண்டியைக் கிளப்பும்போது இருந்த மைலேஜ் மீட்டர் எண், திரும்ப வந்ததும் உள்ள எண் என்று அனைத்தையும் குறித்துக் கொடுக்கவேண்டும். அவ்வப்போது அவை க்ருஷ்ஷின் நேரடிப் பார்வைக்கு எடுத்துச்செல்லப்படும்.
வண்டியை மெதுவாகச் செலுத்திக்கொண்டே இருபுறமும் பார்த்துக்கொண்டே நகர்ந்தான். அவன் கைகளிலிருந்த காகிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விசாலத்தை அவ்வளவு எளிதாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. சிலர் கூறியதைக்கேட்டு இடதுபுறம் திரும்பினான். பத்து வீடுகளைக் காட்டிவிட்டு தெரு சடாரென்று ப்ரேக் அடித்து நின்றிருந்தது. அந்த பத்து வீடுகளில் அவன் தேடிய எண் கொண்டது இல்லை. தன் பத்து வருட ஸ்கூட்டரை லேசாக யு டர்ன் செய்து முதலிலிருந்த இடத்திற்கு வந்தான். வலது புறமாக வண்டியைத் திருப்பினான். அந்தத்தெரு நீண்டுகொண்டே சென்றது. ஒரு புறம் எண்கள் அதிகரிக்க, எதிர் புறம் அவை குறைய, அவன் தேடிய எண்ணிற்கு ஒன்றும் அருகாமையில் கூட இல்லாமல் போயிற்று.
வெய்யில் ஏறத்தொடங்கி இருந்தது. கழுத்தில் கசகசப்போடு கூடிய வியர்வை எரிச்சல். தன் விதியை நொந்துகொண்டான். மிகவும் நேரமாகிவிட்டால் அதற்கும் சீசரின் சத்தம் அதிகமாகவே இருக்கும்.
“என்ன பையா, ஆபீஸ் நேரத்திலே ஊர் சுத்தக்கிளம்பிட்டியா. ஷீலா அரை நாள் லீவ் மார்க் பண்ணு”
இதிலிருந்து விடுபட்டு வர நிறையப் பேச வேண்டி இருக்கும். அதற்கான தெம்பு இன்று ராமிடத்தில் இல்லை.
கைப்பேசியை எடுத்து க்ருஷ்சின் நம்பரை ஒத்தி எடுத்தான்.
“ம்” ஒரு உருமல் மட்டுமே எதிர்புறத்தில் கைப்பேசி எடுக்கப்பட்டதை உணர்த்த்கியது.
“பாஸ், நீங்கக் காலையிலே கொடுத்த விலாசத்தை தேடி அலஞ்சுகிட்டிருக்கேன். கண்டு பிடிக்க முடியலை” ஹோம் வொர்க் செய்யாமல் ஸ்கூல் டீச்சரிடம் பேசும் ஒரு குழந்தையின் தொனியிலிருந்தது அவன் பேச்சு.
“முட்டாள். அவங்ககிட்ட போன் பண்ணி கேக்க மாட்டியா?”
போனா? நம்பர்? கைகளிலிருந்த காகிதத்தை இப்படியும் அப்படியும் திருப்பிப்பார்த்தான். எந்த நம்பரும் அங்கு இல்லை.
“அப்படி எந்த நம்பரும் இல்லியே”
க்ருஷ்சிற்கு தான் தவறே செய்திருந்தாலும் அதை லேசில் ஒத்துக்கொள்ளும் சுபாவம் இல்லை.
“நான்சென்ஸ். நீ இல்ல கிளம்பும் முன் கேட்டு வாங்கிக்கிட்டிருக்கனும். வேலையிலே துளிகூட அக்கறை இல்லாத இவனுங்களை வெச்சுக்கிட்டு நான் படற பாடு….” அவரிடம் இருந்த ஒரு காகிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நம்பரை வாட்ஸ் ஆப்பில் அனுப்பினார்.
வண்டியை ஒரு மரத்தின் நிழலில் நிறுத்திவிட்டு ராம் வந்திருந்த நம்பருக்கு போன் செய்தான். ஒரு முறை அடித்து ஓய்ந்தது.யாரும் எடுக்கவில்லை. மறுமுறையும் அடித்து ஓய்ந்தது. அப்போதும் யாரும் எடுக்கவில்லை. மூன்றாவது முறை அடித்தபோதும் யாரும் எடுக்கவில்லை.
“ஷிட்” எல்லா விதத்திலும் அல்லல் கொடுத்த அந்த நாளை திட்டிக்கொண்டே வண்டியைத் திருப்பினான்.
“ட்ரிங்….ட்ரிங்…..” கைப்பேசி மதுரமாக குரல் கொடுத்தது. வண்டியை ஓரங்கட்டிவிட்டுக் கூப்பிடும் நம்பரைப் பார்த்தான். மூன்று முறை மிஸ்ட் கால் காட்டிய அதே நம்பர்.
“ஹலோ”
எதிர்ப்புறத்தில் மிக அமைதியான குரலில் ஒரு வீணையின் தந்தி மீட்டல் போல் ஒலித்த ஹலோ, ஏனோ அவனுக்குக் கிளர்ச்சியை உண்டாக்கியது.
“ரேகா அம்மாங்களா” அவன் மனதில் சுமார் ஐம்பது வயது பெண்ணின் பிம்பத்தை உருவகப்படுத்தி இருந்தான்.
“ம்…..ரேகா தான், அவங்க அம்மா இல்லை”
ராமின் முகத்தில் காரணம் இல்லாமல் வெட்கம் வழிந்தது.
“ஒ, சாரி, நான் ரேகாவா என்பதைத்தான் அப்படிக்கேட்டேன். காப்பீட்டு நிறுவனத்திலிருந்து உங்க காப்பீடு சம்பந்தமா பேச இப்போ வரலாமா?”
எதிர்புறத்தின் இரண்டு நிமிட மௌனம் அவனுக்கு பாரமாகத் தெரிந்தது.
“அப்படீங்களா. நீங்க ரெண்டு மூணு முறை கூப்பிட்டீங்க போல. நான் குளிச்சிகிட்டு இருந்தேன். அதான் எடுக்க முடியலை. இப்போ எங்கே இருக்கீங்க. உடனே வந்தா கொஞ்சம் காத்திருக்கணும். இன்னும் உடை கூட மாற்றவில்லை. அதான் கேட்டேன்”
ராமிற்கு ஜிவ்வென்றது. இந்த உடை கூட போடலை என்று ஒரு பெண் இதுவரை அவனிடம் பேசியதில்லை. முதல் முறை போனில் பேசும்பொழுது இவ்வாறு பேசும் இந்தப்பெண் என்ன சற்றே மறை கழண்ட கேசாக இருப்பாளோ?
“இல்லீங்க…” லேசான தடுமாற்றத்துடன் தொடர்ந்தான்
“உங்க வீட்டைத்தான் தேடிகிட்டிருக்கேன் ஒரு மணி நேரம்” அந்த ஒரு மணி நேரம் என்பதைக் கடைசியில் நிறைய இடைவெளி விட்டு அழுத்திக்கூறினான்.
“அய்யோ, அப்படீங்களா. இதுதாங்க பிரச்சனை. யாராலயும் கண்டுபிடிக்க முடியாத ஒரு டொக்குலே வீட்டைக்கட்டி வச்சிருக்காரு. ஆள் நடமாட்டமே கிடையாது. சரி சொல்லுங்க நீங்க இப்போ எங்கே இருக்கிங்க?”
ராம் பக்கத்தில் இருப்பவை சிலவற்றைக் கூறினான்.
“ஓ புரிஞ்சுடுத்துங்க. நீங்க அப்படியே நேரா வந்து….” அவள் வழியைக்கூறினாள்.
“சரிங்க, நான் வந்துடறேன்” ராம் கைப்பேசியைத்துண்டித்து விட்டு ஸ்கூட்டரைக் கிளப்பினான். அவள் உடை மாற்றத்தேவையான அந்த சொற்ப விநாடிகளுக்குள் சென்று விட வேண்டும் என்று ஸ்கூட்டரின் வேகத்தை அதிகப்படுத்தினான்.
அவள் கூறியது போல் ஒரு பிரதான தெருவின் பின்புறம் யார் கண்ணிலும் படாத வண்ணம் அமைந்திருந்தது அந்த வீடு. தூரத்திலிருந்தே அந்த வீட்டின் உதிர்ந்து நின்ற வெளிப்பூச்சுகள் வீட்டின் மேல் காட்டப்படாத அக்கறையை உணர்த்தியது. தனி வீடாக ஒரு காம்பெளண்ட் சுவருக்குள் அது ஒளிந்து கண்ணாமூச்சி ஆடியது. வீட்டின் உள் செல்ல அமைக்கப்பட்டிருந்த இரும்பு கேட் கீல் இறங்கி அவன் திறக்க முயன்றபோது புதிதாக வயலின் இசைக்கப் பயில்பவர் போல் பல குரல் எழுப்பியது. வீட்டைச்சுற்றி புற்களும் வேண்டாத செடி கொடிகளும் படர்ந்து கிடந்தன. இதற்கு நடுவில் தன்னந்தனியாக ஓர் ஓரத்தில் சிகப்பு ரோஜாக்கள் பூத்துக்கிடந்தன. வாசல் கேட்டிலிருந்து உள் செல்ல அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் பாதை ஆங்காங்கே பெயர்ந்து நடு நடுவே கோரைப் புற்களை வளர விட்டிருந்தது. வீட்டின் காலிங் பெல் அருகே பாஸ்கர் AVL என்று பல வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட நீல நிற போர்ட் இப்போது வெளிர் நீலத்திற்குத் திட்டு திட்டாக வெளுத்து, பாஸ்கரின் பல எழுத்துகளை முழுங்கி நின்றது.
“யார் இந்த பாஸ்கர்? ரேகாவின் கணவனா இல்லை தகப்பனா?”யோசித்துக்கொண்டே ஒலி பொத்தானை அமுக்கினான்.
உள்ளே அவசரமான நடை சத்தம் கேட்டது. மற்றும். ஒரு முறை அழுத்தினான்.
“வரேன்…..வந்துகிட்டே இருக்கேன்” அதே வீணை மீட்டல் குரல் மங்கலாக உள்ளிருந்து ஒலித்தது.
திறக்கப்பட்ட கதவு அவன் வாழ்கையில் பல இன்னல்களுக்கான நுழைவாயில் என்பது அவனுக்கு அப்போது தெரியாது.
அத்தியாயம் 3
கதவைத்திறந்த பெண் ராமின் கண்களுக்கு ஒன்றும் அவ்வளவு அழகானவளாகத் தெரியவில்லை.
என்ன வயது இருக்கும்?
சுமார் நாற்பது?
கல்யாணம்?
கழுத்தில் மெல்லியதாக ஒரு சங்கிலி மட்டும்.
கால்களில் மெட்டி?
இல்லை.
“உள்ளே வாங்க. நீங்கதானே அந்த காப்பீட்டு நிறுவனத்திலிருந்து எனக்கு போன் செய்தீங்க?”
ராம் ஷூவை வாசலில் கழற்றி வைத்துவிட்டு சாக்சுடன் உள்ளே சென்றான்.
“ஆமாங்க. ஏதோ வேல்யுபள்ஸ் காப்பீடு செய்யணும் அப்படின்னு கூப்பிட்டிருந்தீங்களாம். நான் ராம். அந்த நிறுவனத்தில் வேலை பார்க்குறேன். காப்பீடு செய்யப்போகும் பொருள் என்னன்னு சொன்னீங்கன்னா அதற்கான காப்பீட்டுத்தொகை எவ்வளவுன்னு கணக்கிட்டுச்சொல்லிடுவேன்”
அவள் மெல்லியதாகச் சிரித்தாள். அப்போது அவள் ராம் கண்களுக்கு திடீரென்று அழகாகத்தெரிந்தாள்.
“அய்யோ, இப்படி அவசரப்படுறீங்க. இருங்க குடிக்க ஏதாவது எடுத்தாரேன். இஞ்சி டீ போடவா?”
ராமின் மனதில் எதோ தந்தி அடித்தது. அவனுக்குப்பிடித்த இஞ்சி டீயை அவள் கூறியது எதேச்சையான ஒன்றா?
‘வேண்டாம் ராம், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கிளம்பிடு. ஏதோ வம்பில் மாட்டிக்கப்போறேன்னு தோணுது’
அப்போது அவள் சரியவிட்ட துப்பட்டா ராமின் முடிவை மாற்றியது.
“அட, அதெல்லாம் ஒண்ணும் வேணாங்க. ஜில்லுனு குடிக்க தண்ணி ஒரு டம்ளர் கொடுங்க”
அவள் நிதானமாக இடையை ஆட்டி ஆட்டி நடந்தபடி உள்ளே சென்றாள். ராமின் இதயம் அதிகமாகத் துடிக்கத்தொடங்கி இருந்தது. அவள் அவனுக்குக் கொடுத்த தண்ணீர் டம்ளர் தேவையில்லாமல் அவள் கைகளை விட்டு அவன் கைகளில் செல்ல வெகு நேரம் எடுத்துக்கொண்டது.
ராம் படபடப்பு அடங்கச் சற்றே நிதானமாகத் தண்ணீரை நிறுத்திக் குடித்தான்.
“சரி, இப்போ டீடேய்ல்ஸ் சொல்லுங்க. யார் காப்பீடு எடுக்கப்போறாங்க, பொருள் என்ன, எதற்கான காப்பீடு…..?”
அவள் செல்லமாகச் சிணுங்கி அவனை நிறுத்தினாள்.
“அட, கொஞ்சம் மெதுவாகத்தான் சொல்லுங்க. நான் ரொம்ப ஸ்லோங்க. இவர் கூட என்னை அப்படித்தான் கேலி பண்ணுவாரு”
ராமிற்கு பக் என்றது. இவரா…? அப்படி என்றால் கல்யாணமானவரா?
“யாருங்க? வாசலில் போர்ட் போட்டிருக்கே பாஸ்கர்ன்னு.. அவரா?
“ஆமாங்க. ஏதோ வேலையா வெளியே போயிருக்கார். நான் தனியாத்தான் இருக்கேன்”
தனியாத்தான் இருக்கேன் இங்கு எதற்காக? சரி, பாலிசி டாக்குமெண்ட்ஸ் கையெழுத்திட இருக்கமாட்டார் என்ற அர்த்தத்தில் இருக்கலாம்.
“சொல்லுங்க மேடம், எதைக் காப்பீடு செய்யப்போறீங்க?”
“கொஞ்சம் நகைகளைத்தான். பாத்தீங்க இல்ல இந்த வீடு எப்படி ஒரு அந்தகாரத்திலே இருக்குதுன்னு. இவர் வாரத்துலே இரண்டு நாள் மட்டும்தாங்க என் கூட தங்குவார். மீதி நாட்களெல்லாம் வேலை விஷயமா பாண்டிச்சேரியில் தாங்க. நகைக்காக திருடன் வந்துடுவான்னு பயமே என்னை சாகடிக்குதுங்க. பாருங்க, அதை நினைச்சு என் இதயம் எப்படி பயத்துலே துடிக்கிதுன்னு”
அவன் பார்வை அவள் கைகளைத்தழுவி அது சென்று நின்ற இடத்தில் தேங்கி நின்றது. சுதாரித்துக்கொண்டான்.
“ஆமாங்க. சேப்டி முக்கியம் தான். சரி எவ்வளவு பவுன், என்ன விலை இருக்கும்ன்னு சொன்னீங்கன்னா அதுக்கு காப்பீடு செய்துடலாம். நகை காப்பீட்டுக்கான பார்மகளை நாளை எடுத்தாரேன். ஒரு ஐடி ப்ரூப், ஒரு அட்ரெஸ் ப்ரூப் மட்டும் ரெடி பண்ணி வெச்சுக்குங்க”
ராம் மனத்திற்குள் ஏக சந்தோஷம். நாளை மறுபடியும் வர வேண்டும் என்பதும் ஒரு காரணமாக இருந்தாலும், நகைகளுக்கான காப்பீட்டு ப்ரீமியம் சாதாரணமாக அதிகமாகத்தான் இருக்கும்.
ரேகா அசௌகர்யமான ஒரு கோணத்தில் எழுந்தாள்.
“என்ன விலை இருக்கும்ன்னு எனக்கு தெரியலீங்க. நகைகளைக்கொண்டாறேன். நீங்க பாத்து சொல்லுங்க”
ராம் காத்திருந்தான். உள்ளே சென்ற ரேகா நிதானமாக ஒரு நகைப் பெட்டியை எடுத்துக்கொண்டு வந்தாள். திறந்தாள். உள்ளே சிறியதும் பெரியதுமான கழுத்து சங்கிலிகளும் வளையல்களும் தொங்கட்டான்களும். ராம் அவற்றைச் சற்றே உற்றுப்பார்த்தான். அவை லேசாகக் கறுத்திருந்தன. கைகளில் ஒரு வளையலை எடுத்துப்பார்த்தான். சத்தியமாக அது ஒரு அடாசு. மற்ற நகைகளும் தங்கம் இல்லை.
மெதுவாக நகைகளைப் பெட்டியில் வைத்தான். அவளைப் பார்த்தான். பெரிய விழிகள் விரித்த நிலையில் சற்றே அழகாகக் கூடத் தெரிந்தாள்.
“பச்….”
“என்னங்க, நிறைய போகுமா?”
ராம் தான் எடுத்துவந்த காகிதங்களை ஒன்று சேர்த்து எழுந்து செல்ல ஆயத்தமானான்.
“மேடம்….”
“அய்யே நல்லா இல்லீங்க இந்த மேடம்ந்னு நீங்க கூப்பிடுவது. வெறும் ரேகான்னு சொல்லுங்க.”
அவனுக்கு ரேகா என்று கூப்பிட சற்றே தயக்கமாக இருந்தது. ரேகா அல்லது மேடம் என்று இரண்டையும் விட்டுக் கூப்பிட்டுச்சொல் இல்லாமல் பேசத்தொடங்கினான்.
“இல்லீங்க, இவை எதுவுமே தங்கம் இல்லீங்க. அதான் ஃபேக் நகைங்க. உங்களுக்கு பாத்தாலே தெரிஞ்சு இருக்குமே”
அவள் முகத்தில் அப்போது தோன்றிய உணர்ச்சிகள் நிஜமாக இல்லாதிருந்தால் அவளைப்போன்ற ஒரு சிறந்த நடிகையைத் தமிழ்ப் பட உலகம் கண்டிருக்காது.
“என்ன….. என்ன…. என்ன சொல்றீங்க…? அத்தனையும் பித்தளையா…. தங்கம் இல்லையா….? இதோ இதைப்பாருங்க, எங்க மொத கல்யாண நாளுக்கு அவரு ஆசையா என் கழுத்துல மாட்டினது…. இதோ இதைப்பாருங்க…. ஒரு நாள் நான் வெச்ச இறால் கொழம்பு மீன் கறி நல்ல இருந்திச்சின்னு என் கைகளிலே மாட்டின வளையலு…. எல்லாம் ஏமாத்தா….? உண்மையாத்தான் சொல்றீங்களா? அட நீங்க என்னங்க? தங்கம் தரம் பாக்க உங்களுக்கு தெரியுங்களா இல்லை தட்டிக்கழிக்க சும்மாச்சும் சொல்றீங்களா?”
அவள் முகம் முழுவதும் பரபரப்பும் ஏமாற்றமும் அப்பிக்கிடந்தது. ஆனால் அவள் கூறிய இறால் குழம்பும் மீன் கறியும் அவனுக்கு மிகவும் விருப்பமான ஒன்று. அவனுக்குப்பிடித்ததெல்லாம் இவள் கூறுவது தெய்வ சங்கல்பமோ? ராம் எழுந்து நின்றுகொண்டபடியே பேசத்தொடங்கினான்.
“நம்பிக்கை இல்லையினா ஆசாரி கிட்ட எடுத்துகிட்டு போய் நான் சொன்னது சரியான்னு பாருங்க. ஆனால் பாருங்க, என்னால் எதுவும் செய்ய முடியாது”
ஒரு நிமிடம் மிகவும் பாவமாகத் தெரிந்த அவளைக்கட்டி ஆறுதல் கூறத் துடித்த கைகளை பாண்ட் பாக்கெட்டில் அழுத்தமாகப் பொருத்திச் சமாளித்தான்.
இன்று அவன் நினைத்தது போலவே நாள் சரியாகத்தான் இல்லை. அவசரமாக வாசலைத்தாண்டி வண்டியைத்திருப்பி ஆபீசுக்கு விரைந்தான். கண்களில் பரிதாபமாக வாசல் கதவைப் பிடித்தபடி அவள் நின்று கொண்டிருந்த காட்சி வந்து வந்து போய்க் கொண்டிருந்தது.
வண்டியை பார்க்கிங்கில் விட்டு விட்டு லிப்ட் அருகில் சென்றபோது, எங்கிருந்தோ மதன் வந்து இணைந்து கொண்டான்.
“என்ன பாஸ் கணக்குலே டார்கெட் அசீவ்டா?” அவன் குரலில் பொறாமை ஏகத்திற்கு வழிந்தது.
“பச்….. தண்டம். சரியான திராபை கேஸ். வெறும் கில்ட் நகைகள். நேரமும் வீண் பெட்ரோலும் வீண்” ராம் குரலில் பரிதாபம் வழிந்தது.
மதன் அவன் கைகளை மெதுவாகப் பிடித்தான்.
“ராம், இந்த மாசக்கடைசிக்குள்ளே கடன் பாக்கியை செலுத்தனும்னு சொன்னே? ஊக்கத்தொகையை நம்பிக்கிட்டு இருந்தே அது ஊத்திக்கிச்சு. இப்போ இந்த மாச டார்கெட்டும் வராம …..? என்ன செய்யப்போறே?”
எதை ராம் நினைக்க வேண்டாமென்று கஷ்டப்பட்டு மறந்துவிட முயற்சிதானோ இப்போது அந்த சிந்தனையை மதன் முன் கொண்டு நிறுத்தினான்.
“தெரியலை. கை கால்ல விழுந்து ஒரு மாத தவணை தான் கேட்கணும்”
மதன் இதற்குத்தான் காத்திருந்தார்போல் ஆரம்பித்தான்.
“இதோ பாரு, நான் பாலிசி எடுத்த ஒரு கேஸ். க்ளெய்ம்க்கு வந்திருக்கு. சீசரைப்பத்தி தான் தெரியுமே. யார் பாலிசி எடுத்தாங்களோ அவங்க க்ளேய்ம் செடில்மெண்ட் பாக்கக்கூடாது. அதுனால இது உன்னாண்ட வரும். கொஞ்சம் பாத்து செய். எதுனா கிடைக்கும்”
மதன் பற்றி ராம் நன்கு அறிவான். பல நேரங்களில் அவன் க்ளேய்ம்ஸ் என்று வரும்போது காப்பீட்டுக்காரர்களுக்கான உதவிகளைச் செய்து நிறுவனத்தை ஏமாற்றுவது. அவனின் ஜாலி கொண்டாட்டங்களுக்கும் இந்தப்பணம் தான் செலவு செய்யப்படுகிறது என்பதும் அவனுக்குத்தெரியும்.
ராம் ஒன்றும் ராமனோ இல்லை புத்தனோ அல்ல. பல நேரங்களில் பல யுத்திகளை மனம் யோசித்திருக்கிறது. ஆனால் செயல் படுத்தப்படவில்லை. காரணம் பயம். மனம் முழுவதும் இருட்டாய் பரவிக்கிடந்த பயம். மாட்டிக்கொண்டுவிட்டால் என்ற பயம். அதுவே அவனைப்பல நேரங்களில் நல்லவனாக மற்றவர்களுக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது.
“வேண்டாம் மதன். அதெல்லாம் தப்பு”
மதன் நிறுத்தாமல் தொடர்ந்தான்.
“இங்கே பாரு. அது ஒரு பெரிய விபத்து. ஹம்மர். எஸ் யூ வி. கார் ஓனர் பையன் ஓட்டி வந்திருக்கான். எங்கே போய் இடிச்சான்னு தெரியலை. கார் மொத்தமா நசுங்கி கிடக்கு. இதோ பாரு.”
விபத்து நடந்த இடத்திலிருந்து அவன் கைப்பேசிக்கு அனுப்பப்பட்ட புகைப்படத்தில் ஹம்மர் தன் ஹம்மரை எல்லாம் இழந்து ப்ளம்பர் உடைத்த தண்ணீர் டாங்க் போல் தரையோடு சிதிலமாகக் கிடந்தது.
ராம் ஆச்சரியத்துடன் பார்த்தான்.
“இப்படி ஒரு டாமேஜ் எப்படி சாத்தியமாச்சு?”
மதன் பிடித்துக்கொண்டான்.
“அதே தான். ஓனர் பெரும் பணக்கார புள்ளி. ஆனாலும் புல் க்ளேய்ம் வேணுமாம். இந்த படத்தைப் பார்க்கிறப்போ அதுக்கு சான்சே இல்ல. அதான், முடிஞ்சவரை ஹெல்ப் பண்ணு. எதாவது கை நிறையத் தேரும்.”
ராம் மிகவும். சிரமப்பட்டுச் சரி என்று சொல்ல நினைத்ததைக் கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்திக்கொண்டு, கதவைத்திறந்து கொண்டு க்ருஷ்ஷிடம் நடந்ததைக் கூறச்சென்றான்.
அத்தியாயம் 4
ராமிற்கு உறக்கம் பிடிக்கவில்லை. கடன் பற்றிய கவலை. மேலும் அவ்வப்போது மனதில் வந்து சென்ற ரேகாவின் உருவம்.
எதிர்பாராத அந்த நேரத்தில் அவன் கைப்பேசி சிணுங்கியது.
“சே, இந்நேரத்தில் யாரு?” எரிச்சலுடன் போனை எடுத்தவனுக்கு மெல்லிய சுகமான அதிர்ச்சி.
“ஹலோ சொல்லுங்க”
“ரொம்ப சாரிங்க. டிஸ்டர்ப் செஞ்சுட்டனா? எனக்கு முடியலீங்க. ஆறுதலா பேசி உதவி செய்வீங்கன்னு தான் போன் செய்தேன்”
ராம் மூளையில் மணி அடித்தது.
‘அவனிடம் என்ன உதவி எதிர்பார்க்கிறாள்? பணமா, நட்பா இல்லை அதற்கும் மேல் ஏதாவதா?’
“என்னங்க இந்த நேரத்துலே? எதுனா பிரச்சனையா? சொல்லுங்க”
அவள் விசும்பத்தொடங்கினாள்.
“என்னால் தாங்க முடியலீங்க. எப்படி ஏமாந்திருக்கேன் பாருங்க. யார் கிட்டியாவது என் கதையை சொன்னாத்தாங்க மனசு ஆறும். நீங்க நல்லவரா தெரியறீங்க. உங்களை நம்பலாம் போலத் தோணுது. அந்த ஆளை எதுனாச்சும் செய்யனுங்க. நாளைக்கு ஞாயிறு. உங்களுக்கு லீவ் தானுங்களே? இங்க ஒரு நடை வரமுடியுமா? ப்ளீஸ்? தவிர ஒரு உதவியும் வேணுங்க.”
அந்த ப்ளீஸ் கொஞ்சலில் அவன் யோசிக்காமல் மண்டையை ஆட்டினான்.
“என்னங்க பதில் காணும். வர்ரீங்களா?”
அவளால் அவன் தலையாட்டலைப் பார்க்க முடியாது என்பது உறைத்தது.
“வரேங்க. ஆமாம், உங்க வீட்டுக்காரர் இருக்க மாட்டாரா?”
அவள் அடிக்குரலில் பேசினாள்.
“மாட்டார். புதன் மற்றும் வெள்ளி மட்டும் தாங்க அவர் சென்னையிலே இருப்பார்”
இது போன்ற பல தேவையற்ற தகவல்களை அவள் ஏதோ ஒரு தேவைக்காகக் கூறுவது போல் உணர்ந்தான்.
காலை பத்து மணி அளவில் வருவதாகச் சொல்லிவிட்டு போனைத் துண்டித்தும் தூக்கத்தை இழந்தான். அவன் வாழ்க்கையில் இது வரையில் அவன் அம்மாவைத்தவிர வேறு எந்தப்பெண்ணும் இருந்ததில்லை. இருபது வயதில் வந்த ஒரு காதல், அரைகுறையாக முடிந்தது. பல பெண் பார்க்கும் படலத்திற்குப்பின் ஒன்று அமைந்தது. ஆனால் நிச்சயம்செய்து முடித்த அடுத்த நாள் அம்மா பாரலல் அட்டாக் வந்து சுருள, சர்வ நிச்சயமாக அந்தப் பெண் இவன் வேண்டாம் என்று கல்யாணத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி இட்டாள். அதன் பின் இன்று வரை ஒரு பெண்ணும் அவன் அருகில் வந்ததில்லை. இன்று இந்த ரேகாவை நினைக்கும்போது இது அதுதான் என்று மனது கூறியது. பட்சி கூறியதை உள் மனது நம்பாமலும் வெளி மனது உற்சாகத்துடனும் நம்பி மகிழ்ந்தது.அவன் தூங்காமலேயே பொழுதும் விடிந்தது.
அன்று விடுமுறை. ஸ்கூட்டரை எடுக்கச்செல்ல முடியாது. ஆட்டோ பிடித்து அவள் வீட்டு வாசலில் இறங்கினான்.
‘இன்று குளித்து முடித்திருப்பாளா?’ மனம் தேவையற்ற சிந்தனையைத் தொடர்ந்தது.
“வாங்க. ரொம்ப சாரிங்க லீவ் நாளைக்கெடுத்திட்டேன். உட்காருங்க. உங்க கிட்ட ஒரு யோசனை கேட்கணும். மொதல்ல இஞ்சி டீ எடுத்தாறேன்” பதிலை எதிர்பார்க்காமல் உள்ளே சென்றாள்.
அவன் இன்று நிதானமாக வீட்டை ஒரு பார்வையிட்டான். சாமான்கள் அங்கங்கே இறைந்து கிடந்தன. பல மாத நாவல்கள் சோபாவின் அருகே பிரித்த நிலையில் கிடந்தன. சுவரில் அவள் கணவனுடன் சிரித்துக்கொண்டே நிற்கும் புகைப்படம் ஒன்றும் தொங்கியது. சட்டென்று அவனுக்கு உறைத்தது. இவள் கணவனுக்குக் குறைந்தது அறுபது வயது இருக்கும் போல் அல்லவா தெரிகிறது. இவளுக்கு நாற்பது என்று வைத்துக்கொண்டால், வயது வித்தியாசம் அதிகம் தான். உருண்டையான அவன் முகத்தில் கண்கள் இரண்டும் கோலி குண்டுகள் போல் கீழே வெடித்து விழும் அபாயத்தோடு இருந்தன.
“இந்தாங்க டீ எடுத்துகுங்க” அவள் கைகள் அவன் கைகளோடு உரச, அவன் டீ கோப்பையை அவசரமாகக் கைகளில் எடுத்தான்.
“நீங்க ஒரு உதவி செய்யணுங்க….. செய்வீங்களா?”
பதில் என்ன சொல்வது என்று அவன் யோசிப்பதற்குள் அவள் தொடர்ந்தாள்.
“என்னை ஏமாத்தின இவரைப் பழி வாங்கணும். அதுக்கு உங்க உதவி தேவை”
ராம் புரியாமல் விழித்தான்.
“இதில் நான் என்னங்க பண்ண முடியும்?”
“முடியும். என் யோசனைப் படி செஞ்சீங்கன்னா நிறைய பணமும் கிடைக்கும். “
ராம் நிமிர்ந்து உட்கார்ந்தான்.
“எனக்கும் இவருக்கும் நிறைய வயசு வித்தியாசங்க. நான் உண்மையா சொல்றேன். விரும்பி ஒண்ணும் இவரைக்கட்டிக்கில. பணம் நிறைய வெச்சிருக்காரு. சரின்னு சொன்னேன். இப்பப்பாருங்க, அதையே ஏமாத்தி இருக்காரு. எனக்கு ஐம்பது பவுன் நகை தர்றதா சொல்லித்தான் என்னைக் கட்டிக்கிட்டாரு. “
ராம் மெதுவாக
“அதெல்லாம் சரிங்க. என்கிட்ட இதையெல்லாம் எதுக்கு சொல்றீங்க?”
“உங்களைப் பார்த்தா……” நிறுத்தினாள்.
ராம் சட்டென்று உறைந்தான்.
“ப்ரதர் போல என்று முடிக்கப்போறாளோ?” கவலையோடு கேட்கக் காத்திருந்தான்.
அவள் தொடர்ந்தாள்
“ரொம்ப நல்லவர் போல தோணுதுங்க. நீங்கக் காப்பீட்டு நிறுவனத்திலும் இருக்கீங்க. அதனால் நான் நினைச்சதை உங்களால நிச்சயம் செய்ய முடியும்.”
அவன் பதிலுக்குக் காத்திராமல் உள்ளே சென்று ஒரு காப்பீட்டுக் காகிதத்தை எடுத்து வந்தாள்.
“பாருங்க. இது என் கணவரோட கார் காப்பீடு. நீங்க அதையும் செய்வீங்க இல்ல? இது அடுத்த வாரம் முடியுது. அதே கம்பெனியில் செய்யத் தேவை இல்லைன்னு நான் படிச்சேன். இந்த காப்பீட்டை நீங்க ரேனியூவல் செய்து தர முடியுமா?”
ராம் நிம்மதிப்பெருமூச்சு விட்டான். இவ்வளவுதானா. ஒரு பிசினஸ் கிடைக்கப்போகிறது. அதை ஏன் அவன் மறுக்கப் போகிறான்?
“ஒண்ணும் பிரச்சனை இல்லீங்க. புதன் கிழமை அவர் இங்கே இருப்பாரில்ல. அப்போ பார்ம் எடுத்தாரேன். கையெழுத்திட்டு ப்ரீமியம் செக்கும் கொடுக்கட்டும்.”
அவள் மெதுவாக மற்றும் ஒரு பாலிசியின் நகல் பேப்பரைக் கைகளில் எடுத்தாள்.
அட, இன்னும் ஒன்றா? ஆசையுடன் காத்திருந்தான்.
“இது இவர் பேரில எடுத்த டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசி காபி. ஒரு கோடிக்கு எடுத்திருக்காரு.”
அவன் கைகளிலிருந்த டீ கப் லேசாக ஆடி பின் நின்றது.
“ஒரு கோடியா” அவன் கேட்காமலேயே அவன் பார்வை கேட்டது.
“ஆமாங்க. ஆனா இன்னும் ரெண்டு வருஷம் பாலிஸி டேர்ம் இருக்கு”
“ஓ சரி ” மேலே என்ன சொல்ல என்று புரியாமல் காத்திருந்தான்.
“இந்த வகை டெர்ம் லைப் பாலிசிக்கு நாமினேஷன் கொடுக்கலாமா?”
ஓ இதுதான் கேள்வியா?
“நிச்சயமாக. இதுக்கு கொடுக்கலியா?”
“ஆமாம். புதுசா கொடுத்தா பாலிஸிகாரருக்கு தெரியப்படுத்துவாங்களா, அதுக்கும் பணம் செலுத்தணுமா?”
“அட, அதெல்லாம் வேண்டாங்க. எவ்வளவு முறை வேண்டுமானாலும் நாமினேஷன் மாத்தலாம். பணம் செலுத்த தேவையில்லை”
“அப்போ இந்த கார் இன்ஷயூரன்ஸ் பேப்பர்ஸ் கூட இதோட நாமினேஷன் பார்மையும் சேர்த்து வெச்சு கையெழுத்து வாங்கிட்றீங்களா?”
ராம் சட் என்று நிமிர்ந்து உட்கார்ந்தான்.இதன் பின் என்ன இருக்கிறது? அவன் எதற்காக இதில் அவள் கணவன் கையெழுத்தை வாங்க வேண்டும்?
“அதுலே என் பெயரை நாமினியா போட்டு கையெழுத்து வாங்கிடுங்க”
அவனுக்கு லேசாகப் புரியத்தொடங்கியது.
“நீங்கத் தப்பா ஏதோ யோசிக்கிறீங்க. நான் கிளம்பறேன்”
எழுந்து நின்றான்.
“பாதிக்குப் பாதி, சரியா வருமா?”
ஐம்பது லட்சம். லேசாகத் தலை சுற்றியது.
“வேணாங்க. எனக்குச் சரிப்படாது. வேற ஆளைப்பாருங்க”
“அதுகூட நானும்” கூறியபடி மிக நெருங்கி நின்றாள்.
அவள் கூந்தலின் ஷாம்பூ நறுமணம் மிகச் சுகமாக இருந்தது. அவள் கைகள் ஜில்லென்று குளிர்ச்சியைத்தந்தது.பெண்ணின் அருகாமை மயக்கத்தைக் கொடுத்தது.
எழுந்தவன் மறுபடியும் அமர்ந்தான்.
“நீங்க என்ன சொல்ல வர்ரீங்கன்னு புரியலை.”
அவள் ஏளனப்புன்னகை, உனக்குப்புரியும் என்பது எனக்கும் தெரியும் என்ற பாணியிலிருந்தது.
“டெர்ம் பாலிசியில் இவர் சாவிற்குப்பிறகு அந்த ஒரு கோடி நாமினியான எனக்குத்தானே வரும், அட நமக்குத்தானே வரும்”
அவள் நமக்கு என்று சொன்னது அவனுக்குப் பிடித்திருந்தது.
“அட, அதுக்கு அவர் சாகனுமில்ல?”
“சாகடிச்சா?”
“யாரு?”
“நீங்க…. இல்லை. நாம “
இவளையா அவன் ஒன்றும் தெரியாதவள் என்று நினைத்தான்? அவள் அருகாமை சற்றே பயத்தைத் தந்தது. இவ்வளவு சாதாரணமாகக் கொலை செய்வதைப்பற்றி யாரும் பேசுவதை அவன் கேட்டதில்லை.
அது சரி, ஒரே நாள் சில மணி நேரப் பழக்கத்தில் எப்படி ஒரு அன்னியனிடம் கொலை செய்வது பற்றி ஒருத்தியால் பேச இயலும்? எந்தக் காரணத்தால் இவள் என்னைத் தேர்வு செய்திருக்கிறாள்?
அவன் மனம் எச்சரிக்கை மணி அடித்தது.
“ஓடிப்போய்விடு”
ராம் எழுந்து நின்று
“இதெல்லாம் சரி இல்லீங்க. வேற யார் கிட்டேயும் இப்படித் தப்பு தப்பா பேசாதீங்க. நான் கிளம்பறேன். “
சற்றே நிறுத்திவிட்டு “மோட்டார் காப்பீட்டு படிவம் மட்டும் வேணும்னா கொண்டு வந்து தரேன்” என்று கூறிக் கிளம்பினான்.
ரேகா அவன் பேச்சைக்கேட்டாற்போல் கூடத் தெரியவில்லை.
“பழி வாங்கனுங்க. பணமும் நகையும் தர்றதா சொல்லி ஏமாத்தினார் பாருங்க. நான் என்ன இளிச்சவாயா? எதுக்காக இந்த வயதானகிழவனை கட்டிக்கிட்டேன் சொல்லுங்க? உங்களைப்போல ஒருத்தரைக் கட்டி இருந்தால் சுகமா வாழ்ந்திருப்பேன். உங்களைப்போல் என்ன உங்களையேன்னு வெச்சுகுங்க, நாம சந்தோஷமா இருந்திருக்க மாட்டோமா? இப்ப கூட பாருங்க, ஒரு கோடி….. அது கையிலே இருந்தா நீங்க வேலைக்குக் கூடப் போக வேண்டாம். ஆனா…..? இது எல்லாம் எப்ப நடக்கும், இந்த மனுசனை ஒழிச்சுக் கட்டினாத்தானே? என்ன நான் சொல்றது?”
ராம் யோசிக்கத் தொடங்கினான்.
அத்தியாயம் 5
யோசிக்க யோசிக்க ராமிற்கு இதைச்செய்வதில் தவறேதும் இருப்பதாகத் தோன்றவில்லை.
‘ஆமாம், இவள் சொல்வது போல் அவன் இவளை ஏமாற்றி இருக்கிறான். இவள் பழி வாங்க நினைப்பது சரிதான்.’
‘சரி, ஆனால் கொலை? அது மிகவும் தவறானதாயிற்றே?’
‘தவறு தான். ஆனால் அது யார் செய்யப்போகும் தவறு? நான் பண்ணப்போவதில்லை. பின் ஏன் தயக்கம்?:
‘நாளை மாட்டிக்கொண்டால்?’
‘யார்?’
‘நீ’
‘மாட்டாத வண்ணம் யோசித்து காரியத்தை முடி. கொஞ்சம் நினைத்துப்பார். நீ இந்த மாதக்கடைசிக்குள் செலுத்த வேண்டிய கடன் பாக்கிகளை. ஐம்பது லட்சம் இருந்தால் அவற்றை தூசு தட்டுவது போல் தட்டி விட்டுப் போய்க்கொண்டே இருக்கலாமே”
‘ஆனால் இந்த ரேகாவை எப்படி நம்புவது? ஏமாற்றி விட்டால்? பணம் அவள் கைகளில் அல்லவா கிடைக்கும்?’
‘முட்டாள். ஒரு படிக்காத பெண். இவளை உன்னால் சமாளிக்க இயலாதா? உன்னுடன் சேர்ந்து வாழ்வதற்கும் தயாராக இருக்கிறாள். ஆனால் ஒருமுறை கல்யாணம். ஆகிவிட்ட இந்த நாற்பது வயது பெண் உனக்குத் தேவையா?’
‘வேண்டாம். ஆனால் வேணும்வரை அனுபவி. பின் உதறிவிட்டு பணத்தோடு சென்றுவிடு?’
‘எப்படி?’
‘அதைப் பின் யோசிக்கலாம். இப்போது நீ மாட்டிக்கொள்ளாமல் இந்தக்கொலையை எப்படி அரங்கேற்றுவது….. யோசனை செய்’
அவன் யோசிக்கத் தேவையே இல்லாமல் அவள் அவன் என்ன செய்ய வேண்டும் என்று விவரித்தாள்.
“இந்த மோட்டார் இன்சூரன்ஸ் பேப்பர்களின் நடுவே இந்த நாமினேஷன் பேப்பரை வெச்சு கையெழுத்து வாங்கிட்டா போதும். அதை முதலில் ரெஜிஸ்டர் பண்ணிடுவோம். அப்புறம் ஒரு வாரத்துக்குள்ளே ஒரு வெள்ளிக்கிழமை இவர் அதி காலை பாண்டிச்சேரி கிளம்புவார். விடிஞ்சும் விடியாத அரை இருட்டு. அப்போ இவர் கார் ஆக்சிடெண்ட் ஆகும். அதுலே இவர் ஸ்பாட்டில் காலி. அப்புறம்….. அப்புறம்…..”
ரேகா மோகனமாகச் சிரித்தபடி அவன் அருகே நெருங்கி வந்தாள். எதிர்பாராத அந்த நேரத்தில் அவன் உதட்டில் அழுத்தமான ஒரு முத்தம்.
ராமின் முதல் முத்தம். டீ வாசனையோடு கலந்து இருந்தது. அவளை இறுக அணைத்துக்கொண்டான்.
“அவசரத்தைப்பார். சார் நாம நினைச்சது எல்லாம் சரியா முடியட்டும். அப்புறம் சார் பாடு கொண்டாட்டம் தான்.”
ராம் அவளை அணைத்த போதே அவள் கூறிய அனைத்திற்கும் சம்மதத்தைத் தெரிவித்து விட்டான். அவளை மறுபடியும் அணைக்க முயல
“ம்ஹூம். இப்போ நான் வேறொருத்தன் மனைவி. இப்ப செஞ்சா தப்பு. அபீஷியலா விதவை பட்டத்தோடு நாம் இணையலாம்”
முதல் அனுபவத்தின் மயக்கத்திலிருந்து ராம் வெளியே வர முடியாமல் திணறினான்.
“சரி சாப்டுகிட்டே பேசலாம்”
சாப்பாட்டு மேஜை மேல் சாப்பிட்ட பல உணவுகள் சிந்திக் கிடந்தன. சமையலறை ஒழுங்காகப் பராமரிக்கப்படாமல் ஒரு வித அழுகிய நாற்றத்துடன் இருந்தது. ரேகா வேலை செய்வதற்கு ஏற்றவள் இல்லை என்பது தெரிந்தது. லேசாக ராமிற்கு அவள் மீது இருந்த மயக்கம் குறைந்தது.
‘இவளையா….?’
‘பச்….இவளை என்ன ஐம்பது லட்சத்திற்கு யாரை வேண்டுமானாலும் தாங்கிக்கொள்ளலாம். ஆனால் இவளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உனக்கும் பெப்பே காட்டிவிட்டு கம்பி நீட்டி விடுவாள்.’
ரேகா அவன் யோசிப்பதைப் புரிந்து கொண்டவள் போல்
“நமக்குக் கல்யாணம் ஆகட்டும். வீட்டை நான் சரியா கவனிச்சுப்பேன்” என்றபடி சாப்பாட்டைத் தட்டில் எடுத்து வைத்தாள்.
அவற்றில் பல ராமிற்கு பிடித்தமான உணவு வகைகள்.
இதுவும் எதேச்சையாக நடப்பது தானா?
“சரி. இதைப்பற்றி நான் இன்னும் கொஞ்சம் தெளிவா யோசனை செய்யணும். டேர்ம் இன்சூரன்ஸ் பாலிஸியின் விதிகளின் படி யாரை வேண்டுமானாலும் நாமினியாகப் போட முடியும். ஆனால் நாளை கேள்விகள் எழுப்பப்பட்டால் அந்த நபரின் தேர்வு அபத்தமான ஒன்றாகத் தெரியக்கூடாது.”
ரேகா அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“என் மேல நம்பிக்கை இல்லை அதானே?”
“இல்லை…. அப்படி இல்ல…..”
“பின்ன எப்படி? மனைவி இருக்க எதற்காக மூன்றாவது நபர்? என் பெயரே இருக்கட்டும்”
“இல்லை ஒரு காரணமாகத்தான் சொல்றேன். நாளைக்கு கொலைன்னு சந்தேகம் ஏற்பட்டா உன் மேல தான் முதல் பார்வை இருக்கும்”
ரேகா ஹே என்று ஒரு அலட்சிய சத்தம் செய்து அவள் கவலைப்படவில்லை என்பதை உணர்த்தினாள்.
“நீ புதன் அன்று அவரை அவர் ஆபீசில் போய் பார்த்து மோட்டார் இன்சூரன்ஸ் பேப்பரில் கையெழுத்தை வாங்கிக்க. எல்லாம் நடந்து முடியும் வரை நாம சந்திக்காம இருப்பது நல்லது”
ராம் தலையசைத்தான்.
“கார் இன்சூரன்ஸ் பேப்பருடன் நாமினேஷன் பார்மிலேயும் கையெழுத்தை வாங்கிடறேன். அந்த பேப்பர்களுக்கு நடுவே வைத்துச் சொல்லாமலேயே செஞ்சுட்றேன். ஆனால் ஒரு வேளை மோகன் எல்லாத்தையும் படிச்சுப்பார்த்தால்?”
“கவலைப்படாதே. அவனுக்குப் பொறுமை கிடையாது. படிக்க மாட்டான்.”
இன்னும் அதைப்பற்றி நிறையப் பேசினார்கள்.
இன்னும் இரண்டு வாரங்கள் இருவரும் சந்திக்கக்கூடாது என்பதும் முடிவானது. பழைய மகாபலிபுரம் ரோடில் இருந்த அவன் அலுவலகத்தின் விலாசத்தையும் அவனுடைய தொலைப்பேசி எண்ணை வாங்கிக்கொண்டு மறுபடியும் ஒரு முத்தத்தைப் பரிசாகப்பெற்றுக் கிளம்பினான்.
அன்று இரவு முழுவதும் இதைப்பற்றி யோசித்தான். எப்படி மோகனைக்கொல்வது? அவன் மாட்டிக்கொள்ளாமல் செய்ய வேண்டும்.
கார் ஆக்சிடெண்ட் மிகவும் சரி. யாரும் சந்தேகப்பட மாட்டார்கள். விடியற்காலை இருட்டில் இடித்தது யார் என்று ஒருவருக்கும் தெரியப்போவதில்லை. ஆனால் அதற்கு வண்டி ஒன்று தேவை. அவனால் கார் நன்றாக ஓட்ட முடியும். ஆனால் தப்பித்தவறி அவன் அந்த விபத்தில் சிக்கிக்கொண்டால்? உயிரைப்பணையம் வைக்க முடியாது. சரி அப்போது இப்படிப்பட்ட வேலை செய்பவர் ஒருவரைப்பிடித்தால்? வேண்டாம். நாளை அவன் ப்ளாக்மெயில் செய்யக்கூடும். ஒருவரைத்தாண்டிச் செல்லும்போதே ரகசியம் தன் தன்மையை இழந்து விடுகிறது. இங்கே ஏற்கனவே இருவர். இதில் மூன்றாவதாக ஒருவர் சரி படாது.
மோகனை நேரே சென்று பார்த்து விட்டு முடிவு செய்யலாம் என்று தீர்மானித்தான்.
“ஹலோ, ஆம் ஐ டாக்கிங் டு மிஸ்டர் மோகன்?”
ஆபீஸ் போனிலிருந்து அழைத்தான்.
“யெஸ். ஹூ இஸ் இட்?” குரல் ஏகத்திற்கு கர கரப்பாக இருந்தது.
“நான் இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுகிறேன். உங்கள் கார் பாலிசி இன்னும் ஒரு வாரத்தில் முடிகிறது. அதை செய்வதைப்பற்றி…..”
“பச்…. வேஸ்ட் ஆப் டைம். அதற்கெல்லாம் நேரமில்லை. செய்துவிட்டு பணம். எவ்வளவு என்று கூறினால் வயர் டிரான்ஸ்பர் செய்து விடுகிறேன்.”
“உங்கள் நேரம் பொன்னானது. புரிகிறது. ஆனால் படிவங்களில் நீங்கள் கையெழுத்திட வேண்டும். அவற்றை நான் உங்கள் ஆபிசுக்கோ அல்லது வீட்டிற்கோ கொண்டு வருகிறேன்.”
அவசரமாக மோகன் பதிலளித்தான்.
“வீடு வேண்டாம். ஆபீஸ்”
“நாளை மறுநாள் அதாவது புதன் வரலாமா?”
“ம்….. காலையில் வந்துவிடுங்கள்”
ரேகா அவனிடம் சொல்லி இருந்தாள். மாலை ஆபீஸ் மூடும் நேரத்தில் செல்லும்படி. காரணம் புதன் அவன் ரேகாவுடன் இருக்கும் தினம். வீட்டிற்குச் சீக்கிரம் போக வேண்டும் என்ற அவசரத்தில் இருப்பான்.
“சாரி, காலை வேறு ஒருவரைச் சந்திக்கச்செல்ல இருக்கிறேன். மாலை ஐந்து மணி அளவில் வருகிறேன். ஒரு இரண்டு நிமிட வேலை அவ்வளவுதான்”
ஓர் உறுமலை ஒப்புதலாக அளித்து மோகன் லைனைக் கட் செய்தான்.
அடுத்து ரேகாவிற்கு போன் செய்து புதன் மோகனை சந்திக்கப் போவதைத் தெரிவித்தான்.
மோகனின் அலுவலகம் பழைய மகாபலிபுரம் ரோட்டிலிருந்த ஒரு சின்ன தெருவினுள் இருந்தது. பாலிசி ரேனியூவல் என்பதால் ராம் ஸ்கூட்டர் எடுத்துச்செல்ல முடிந்தது. மிக நிதானமாக இரண்டு பக்கமும் பார்த்துக்கொண்டு சென்றான். மோகன் பாண்டிச்சேரி செல்ல எடுக்க வேண்டிய பாதையை மெதுவாகக் கடந்துசென்றான். எந்த இடம் விபத்திற்குச் சரியாக வரும்? இடது பக்கத்திலிருந்து சடாரென்று எதிர்பாராமல் வந்த ஒரு சந்து மிகச்சரியாக இருந்தது. தெரு விளக்குக் கம்பம் பல்பை இழந்து மொட்டையாக நின்றது. ஒரு வேளை அவன் நினைத்தபடி சனிக்கிழமை வீட்டிலிருந்து கிளம்பும்போது விபத்தை நடத்த முடியாமல் போனால் இந்த இடம் சரியாக வரும். இடத்தைத் தேர்வு செய்துவிட்டு மோகன் ஆபீசுக்குள் அவன் நுழைந்த போது நேரம் சரியாக ஐந்து.
ரிசப்ஷனில் காத்திருந்தான். மோகன் அறுபதைத்தாண்டிய தோற்றத்தில் அவசரமாக வந்தான். லேசாக முதுகு கூன் இட்டிருக்க, இன்னும் உடலைக்குறுக்கிய படி நடந்து வந்தான். ரேகாவிற்கு நிச்சயம் பொருத்தமற்றவன். ரேகாவின் மீது பரிதாபம் வந்து போனது.
“எங்கே கையெழுத்து?” கைகளில் பேனாவுடன் எதையும் படிக்காமல் கையெழுத்திட்டான்.
“எப்போ பாலிசி கிடைக்கும்?”
“இரண்டு நாள். தபாலிலே வந்துவிடும்”
“ஆபீசுக்குத்தானே”
“நீங்கக் கொடுத்திருக்கும் முகவரிக்குத்தான்.”
“அப்பச் சரி அது ஆபீஸ்தான்”
ராமின் வேலை ஒரே நிமிடத்தில் முடிந்து விட்டது. மோகன் கேள்வியே கேட்காமல் நாமினேஷன் பார்மிலும் கையெழுத்திட்டுக் கொடுத்து விட்டான்.
ராம் ஆபீஸ் திரும்பும் வழியிலிருந்த பி.சி.ஓ வில் நிறுத்தி ரேகாவை அழைத்தான்.
“முடிந்து விட்டது”
“இடம்?”
“பார்த்தாச்சு”
மிகச்சிறிய வார்த்தைகளுடன் பேச்சு முடிந்தது.
இதற்கு அடுத்த இரண்டு நாட்களுக்குள் கார் பாலிசி ரேனியூவல் முடிந்தது. ரேகா பெயர் நாமினேஷன் பதிவுசெய்யப்பட்டது. ஆனால் ராம் தூக்கத்தைத் தொலைத்து நின்றான்.
“ராம், என்ன கண்ணெல்லாம் சோர்வா இருக்கு., தூங்கலியோ?”மதன் அவ்வப்போது கேட்டு விட்டுச்சென்றான்.
ப்ச் என்று சொல்லிவிட்டு ராம் சென்றுகொண்டே இருந்தான். அவனின் சிந்தனையில் விபத்தை எப்படிச் செய்வது என்பதிலேயே இருந்தது. தூக்கம் மறந்த ஓர் இரவில் அதற்கான வழி பல்பு போல் பளிச்சிட்டது.
“முருகா, ஷெட் வேலை எப்படி போகுது?”
கார் ரிப்பேர் ஷாப் என்ற போர்ட் தொங்கிக்கொண்டிருந்த அந்த கீக்கிடமான பத்துக்கு பத்து அறையை ஒட்டி இருந்த திறந்த வெளியில் பல பழைய கார்கள் அடைத்துக்கொண்டு நின்றன.
“வா சார், இன்னா இந்த பக்கம். ஏதானு ஆக்ஸிடெண்ட் கார் ரிப்பேர் வேலையா? இன்னாதுக்கு நேர வந்தே? கால் போட்டு இருக்கலாமில்ல. வந்திருப்பேனே”
ராம் நாற்காலி ஒன்றை இழுத்துப்போட்டுக்கொண்டு அமர்ந்தான்.
“இல்லை முருகா இது பெர்சனல் வேலை. நான் கார் ஒண்ணு எடுக்கலாம்ன்னு இருக்கேன். ஆனா கார் ஓட்டி நிறைய நாள் ஆயிடுத்து. அதான் ஏதானு பழைய கார் இருந்தா ஓட்டிப் பார்ப்பேன்”
முருகனுக்குத்தெரியும். ராமை நல்ல விதமாகக் கவனித்துக்கொண்டால் இன்னும் நிறைய விபத்தில் நசுங்கி நிற்கும் கார்கள் அவனிடம் ரிப்பேருக்கு அனுப்பப்படும்.
“இன்னா சார், உனக்கில்லாததா? அதோ அங்கே நின்னுகினு கிடக்குது பார். அதெல்லாம் கண்டம் சார். பார்ட் பார்டா கழட்டி விக்க வெச்சிருக்கேன். எடுத்துப் போய் ப்ராக்டீஸ் பண்ணு. இன்னா ப்ராப்ளம்”
ராம் சற்றே தயங்கி பின்
“முருகா எதாவது அடி கிடி பட்டதுன்னா?”
“அது ப்ராப்ளம் இல்ல சார். ஆனா பிசி ரோட்டுக்கு போகாதே.போலீஸ் பிடிச்சுக்கும்”
நன்றி சொல்லிவிட்டு நாளை வந்து காரை எடுத்துப்போவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
வழியில் பி சி ஓ விற்குச்சென்றான்.
“எல்லம் ரெடி. அடுத்த சனிக்கிழமை காலை.”
“ம்…. வேற?”
“நாளை மெயின் ரோடில் இருக்கும் சாந்தி ஸ்டோருக்கு சாயந்தரம் ஏழு மணிக்கு வா. சாமான் வாங்குவது போல் பாசாங்கிடு. நான் வந்து ஒரு மாத்திரை தரேன். அதை இரவு மோகனுக்கு கொடுத்துவிடு ஒண்ணே ஒண்ணு போறும்”
“என்ன மாத்திரை?”
“மெதுவாக வேலை செய்யும் ஒரு தூக்க மாத்திரை. காலையில் வண்டி ஓட்டும்போது மோகன் மேல் அது வேலையைத் தொடங்கும். ஒரு வேளை விபத்தில் உயிர் போகாமல் போனாலும் தூக்கத்திலிருந்தால் சுலபமாக வேலையை முடிக்க முடியும். ஒரே ஒரு மாத்திரை மட்டும் கொடு ஜாக்கிரதை” போனைத் துண்டித்தான்.
சொன்ன நேரத்தில் ஸ்டோரில் அவள் காத்திருந்தாள்.
“என்ன மருந்து இது?”
அவள் கையில் கொடுக்கப்பட்ட நான்கு மாத்திரைகள் கொண்ட பட்டையைத் திருப்பிதிருப்பிப் பார்த்தாள்.
“என் அம்மா எடுத்துக்கும் மாத்திரைதான். எடுத்து வந்தேன். நன்றாகத் தூக்கம் வரும் ஆனால் உடனேயில்லை. சாப்பிட்டு எட்டு மணி நேரத்திற்குப்பின் வேலையைத் தொடங்கும் ஜாக்கிரதை. ஒன்று போதும்.”
சொல்லிவிட்டுக் கிளம்பினான். அவள் கையில் கொடுக்கப்பட்ட மாத்திரை பட்டையைத் திருப்பி திருப்பிப் பார்த்தபடி நின்றிருந்தாள்.
அவள் வீட்டிலிருந்து மோகன் பாண்டிச்சேரி செல்லக்கூடிய பாதையில் மெதுவாக ஸ்கூட்டரை ஓட்டினான். மாத்திரை இரவு எட்டு மணிக்குக் கொடுத்தால் அதன் பாதிப்பு காலை ஐந்து மணிக்குத்தொடங்கி விடும். உத்தேசமாக மோகன் மிகவும் தூக்கம் வயப்படும் நேரம் ஐந்து இருபது.
அந்த நேரத்தில் அறுபது மைல் வேகத்தில் மோகனின் கார் இருக்கக்கூடிய இடத்தை சற்றே சுற்றி வந்தான். சரியான ஒரு நெளிவு கிடைத்தது. அவன் தன் கார் நிறுத்தி இருக்க வேண்டிய தொலைவையும் கணக்கிட்டான். எல்லாம் மிகச்சரியாக அமைந்தது.
இன்னும் செய்து முடிக்க வேண்டிய ஒரு வேலை – வங்கியில் எக்ஸ்க்ரோ கணக்கு ஒன்றைத்தொடங்க வேண்டும். இந்த ரேகாவை நம்ப முடியாது. ஆனால் இப்போது அதை விட மிக முக்கியமாக அவன் சிந்திக்க வேண்டியது – இன்று அவன் சென்ற அதிக கிலோமீட்டருக்கான கணக்கு பற்றித்தான். நாளைக் காலை சீசர் அதைக்கேட்காமல் விடமாட்டார்.
இவை எல்லாவற்றையும் தாண்டி, அவன் அந்த வெள்ளிக்காகக் காத்திருந்தான்.
அத்தியாயம் 6
வெள்ளிக்கிழமை. ராம் பதட்டத்திலிருந்தான். பேனா வைத்திருந்த இடத்தை மறந்தான். ஷீலா புது உடையில் அட்டகாசமாக இருப்பதைக் கவனிக்காமல் சென்றான்.தேவையில்லாமல் முகம் கழுவினான்.
ராம், ஜாக்கிரதை. சாதாரணமாக இரு. யாரும் சந்தேகிக்கும்படி நடக்காதே. அவ்வப்போது மனதிற்குள் சொல்லிக் கொண்டான். மாலைக்குள் செல்ல வேண்டிய இரு வாடிக்கையாளர்கள் வீட்டிற்குச் சென்று வந்தான். ஆபீஸ் டைம் முடிந்ததும் அனைவரிடமும் சிரித்துப்பேசி விட்டுக் கிளம்பினான்.
முதல் முறை கொலை செய்யப்போகும் பரபரப்பு இப்போது அவனிடம் துளியும் இல்லை. கிடைக்கப்போகும் பணம். பற்றிய சுகம் மட்டுமே தனித்து நின்றது.
ஐம்பது லட்சம்……. ஒரு கையில் ஐந்து விரல்களையும் மறு கையை குவித்து ஜீரோ போல் செய்து ஐம்பதின் அழகை ரசித்தான். வீட்டிற்கு வந்து அம்மாவிற்கு நிதானமாக இட்லி செய்து பின் ஊட்டி விட்டான். தானும் ஆறு இட்லிகளைச் சிரமமின்றி உள்ளே தள்ளினான்.
அம்மா உறங்கிவிட்டதை நிச்சயம் செய்து கொண்டான். டயபர் கட்டி இருந்ததால் இரவு அவர் எழுந்து பாத் ரூம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. காலையில் திரும்பி வந்து பார்த்துக்கொள்ளலாம். அவன் வெளியே போகப்போவது அவளுக்குத் தெரியக்கூடாது.
வெளிக் கதவை மெதுவாகச் சாத்தினான். காரை இரண்டு தெரு தள்ளி ஒரு திறந்த வெளியில் வேறு பல கார்களுக்கு நடுவே நிறுத்தச் செய்திருந்தான். பெட்ரோல் டாங்க் நிரப்பப்பட்டு இருந்தது. மெதுவாக ஊர்ந்து சென்று ரேகா வீட்டிற்குச் சற்றே அருகில் நிறுத்தினான். அங்கிருந்து அவள் வீட்டை அவனால் நன்றாகப் பார்க்க முடிந்தது. அவள் வீட்டின் முன் அவனால் இரு வாரங்களுக்கு முன் இன்ஷ்யூர் செய்யப்பட்ட கார் நின்றிருந்தது. மோகன் வந்துவிட்டான். கொஞ்ச நேரம் எரிந்த விளக்கு மங்கலாகி இரவு விளக்கு ஆனது. ராம் மெதுவாகக் கண்களை மூடிக்கொண்டு தூங்கத்தொடங்கினான். அவன் கைக்கடிகாரத்தில் மூன்று மணிக்கு அலாரம் செட் ஆகியிருந்தது.
அலாரம் அடித்தது. அது அடிக்க வேண்டிய தேவை இல்லாமல் அவனுக்குப் பல மணி நேரம் முன்பே முழிப்புத்தட்டி இருந்தது.
ரேகா வீட்டு விளக்கு பளிச்சிடுவதற்குக் காத்திருந்தான்.
நேரம் நான்கு மணி. விளக்கு எரியத்தொடங்கியது. ஜன்னல் பக்கம் யாரோ வந்து எட்டிப்பார்ப்பது தெரிந்தது. ரேகாவாகத்தான் இருக்கும். அவள் தூக்க மாத்திரையைச் சரியாகக் கொடுத்திருக்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டான்.
நேரம் நாலு முப்பது. வெளிக் கதவு மெதுவாகத்திறந்து வெளிச்சத்தை வெளியே கக்கியது. மோகன் ரேகாவின் உதட்டில் ஒரு முத்தத்தைப் பதித்து வாசல் கிரில் கதவைச் சத்தம் போட்டுத் திறந்தான். அதிகாலை நிசப்தத்தில் கறுப்பு போர்ட்டில் சாக் எழுப்பும் க்ரீச் சத்தம் போல் உடலைக் கூச வைக்கும் சத்தம். ராம் மெதுவாகக் காரைக் கிளப்பினான். அந்த பழைய கார் ஜில்லிப்பில் தன் உடலை கெட்டிப்படுத்தி நின்றது. இரண்டு முறை, மூன்று முறை…. கர் என்ற சத்தம் மட்டும் வந்தது. ரேகா அவசரமாகத் திரும்பிப் பார்த்தாள். அவள் உடல் அசைவிலேயே அவள் பதட்டம் தெரிந்தது. மோகனும் சத்தத்திற்குத் திரும்பி அலட்சியமாக அதற்கு அக்கறை காட்டாமல் தன் காரைக் கிளப்பினான்.
மோகன் கார் முப்பதைத்தொட்டு, நாற்பதைத் தொட்டு பிரதானம் சாலை வந்ததும் அறுபதுக்குச் சென்றது.
ராம் கார் பாட்டரி லேசாகச் சூடு கண்டு உடலை இளக்கியது. ராம் மோகனைப் பின் தொடர்ந்தான்.
மோகனின் கார் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. லேசான தொய்வு கூட காணப்படவில்லை. ஒரு வேளை ரேகா தூக்க மாத்திரையைக் கொடுக்க மறந்திருப்பாளோ? அப்படி என்றால் அவனைப் பக்கம் சென்று முகத்தை அழுத்திக் கொல்வது முடியாத காரியம். என்ன செய்யலாம்?
ராம் கொலை செய்யப்போவதைப் பற்றிய பயம் துளியும் இல்லாமல் தெளிவாக யோசித்தான். அப்படி யோசிப்பது லேசாக எதையோ சாதித்தது போன்ற பரவசத்தைக் கொடுத்தது.
இன்னும் பத்து நிமிடம். ராம் தேர்வு செய்து வைத்திருக்கும் இடம் வந்துவிடும். ராம் வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தினான். ஒருவரும் இல்லா வெறிச்சோடிய தெருவில் இரண்டு கார்கள் மட்டும் ஒன்றைத்தொடர்ந்து ஒன்று என்று சென்று கொண்டிருந்தன.
ராம் வண்டியின் வேகத்தை அதிகரித்தான்.
முன்னால் சென்று கொண்டிருந்த மோகன் கார் வேகம் குறைந்தது.
என்ன காரணம்? வீட்டிலிருந்து பின்னால் தொடர்ந்து வரும் கார் மோகன் மனதில் சந்தேகத்தைக் கிளப்பி இருக்குமோ? காரை ஓரம் கட்டப்போகிறானோ? இப்போது பின்னே சென்று இடித்துத்தள்ளி விடலாமா?
ராம் இன்னும் வேகத்தை அதிகரித்தான்.
மோகன் கார் நின்றுவிடக்கூடிய அபாய வேகத்திற்கு வந்து திடீரென்று மதம் கொண்ட யானையைப் போல் வேகமாக ஓடத் தொடங்கியது. தாறுமாறாக ரோட்டிற்குக் குறுக்காகவும் பின் நேராகவும் மாற்றி ஓடி கடைசியாக அந்த ரோட்டோரத்து பெரிய மரத்தில் ஒரு மோதல் மோதி, நசுங்கிய முன் பகுதியில் புகை விட்டுக்கொண்டே நின்றது.
ராம் அவசரமாகப் பின்னால் திரும்பிப் பார்த்தான். கண்ணுக்கெட்டிய தொலைவிற்கு ஒரு ஈ காக்காய் இல்லை. காரை ஓரம் நிறுத்தினான். மோகன் அருகில் சென்று பார்த்தான். பல்ஸ் பிடித்துப் பார்க்கத் தேவையில்லாமல் அவன் சுத்தமாக இறந்திருந்தான்.
ராம் காரைத்திருப்பி தன் வீட்டிற்கு விட்டான். அப்போது நேரம் காலை ஐந்து மணி லேசாக விடியத்தொடங்கி இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆவின் பால் வண்டிகள். அவசரமாக யாரும் பார்ப்பதற்கு முன் காரைக் கொண்டு நிறுத்தி, பூட்டி சாவியை பாக்கெட்டில் திணித்தபடி வீட்டு வாசல் கதவின் பூட்டை திறந்தான்.
கைகளில் ரத்தம் படியாமல், பெயரில் கொலைக் குற்றம் ஒட்டாமல் அவன் எதிர்பார்த்து நடந்து முடிந்து விட்டது. இனி பாலிசி தொகையைப் பெற வேண்டும். ரேகாவைச் சென்று பார்ப்பதை இரண்டு வாரம் தவிர்க்க வேண்டும். இப்போது போலீஸ் அவளுக்கு மோகன் இறந்துவிட்ட விஷயத்தைச் சொல்லி இருப்பார்கள். ரேகா என்ன செய்து கொண்டிருப்பாள்? வராத கண்ணீரைக் கண்களில் வரவழைக்க முயன்று கொண்டிருப்பாள். அவன் மனதில் அப்போது தோன்றிய அவள் முகம் மிகவும் அசிங்கமாக இருந்தது.
இனி…. க்ளெய்ம்…. எஸ்க்ரோ…. பங்கீடு…. முடிந்தால் ரேகா…. கல்யாணம்…. நோ…… வேண்டாம்….. ஒரு மாதம் மட்டும்….. பின்….. பின்…..
சந்தோஷமாக இருந்தது. ஆனால் ரேகாவின் வாசத்தை விட ரூபாய் நோட்டுக்களின் மணம் நாசியை நிறைத்தது.
அத்தியாயம் 7
ராம் தன் இடத்தில் அமர்ந்துகொண்டு அன்றைக்கான வேலையைப் பார்ப்பது போல் பாவனை காட்டிக் கொண்டிருந்தான்.
“ராம், பாஸ் வரச்சொன்னார்.” ஷீலா காதில் காற்றோடு சொல்லிச்சென்றாள்.
என்னவாக இருக்கும்? ராம் மதன் இருக்கையைத் திரும்பிப் பார்த்தான். காலியாக இருந்தது. ஓ, பாலிசி விஷயமாகக் காலையிலேயே போய் விட்டானா?
கதவைத் திறந்து உள்ளே சென்றபோது க்ருஷ் யோசனையில் தலையைச் சொரிந்து கொண்டிருந்தார்.
“யெஸ் பாஸ்….”
“ராம், இந்த கார் இன்சூரன்ஸ் பாலிசி நீ தானே எடுத்தே?”
ராமிற்கு ஒரு நிமிடம் இருதயம் வெளியே விழத்துடித்து பின் இருந்த இடத்திலேயே தங்கியது.
என்னவோ ஆயிரம் பாலிசி எடுத்தவன் போலவும் அதனால் எதைப்பற்றிக் கேட்கிறார் தெரியவில்லை எனும் பாவனையில்
“எது பாஸ்?” முகத்தைப் பாவமாக வைத்துக் கேட்டான்.
“அதான் பையா, இரண்டு வாரம் முன் எடுத்த மோகன் பாலிசி”
சட்டென்று நினைவு வந்தது போல் முகத்தைப் பிரகாசமாக்கினான்.
“யெஸ் சார்….நினைவு வந்திடுச்சு. நகை காப்பீடுன்னு போய் கார் காப்பீடாக மாறிய கேஸ் தானே? அதுக்கு என்ன சார்?”
“பையா, க்ளெய்ம் ஒண்ணும் வரலை. ஆனால் பாலிசி டிரான்ஸ்பர் செய்ய படிவத்தை எடுத்துப்போய் அவர் மனைவியின் கையெழுத்துதை வாங்கி வா”
ராமிற்கு திக் என்றது. இப்போது அவளைச்சென்று பார்ப்பது….. சரியாக வராது.
“எதுக்கு சார் இப்போ அவசரம். யார் உரிமையுள்ளவர்னு தெரிஞ்ச பின் செய்யலாமே”
“பையா இது அவசரம். அந்த அம்மா, பேர் என்ன ஆங்….ரேகா, அவங்க கையெழுத்திட்ட க்ளெய்ம் பார்ம் உடனே வேண்டும்.”
ராம் புரியாமல் விழித்தான்.
“பையா, அப்போதான் அந்த அம்மா மேல கேஸ் ஸ்ட்ராங் ஆகும். இன்னும் பத்து வருஷம் சேர்த்து உள்ளே தள்ளலாம்”
ராம் தலை சுற்றத் தொடங்கியது.
“என்ன புரியலையா. நம்ம பாலிசி கவர் பண்ணிய கார் நேற்று விபத்திற்கு உட்பட்டிருக்கு. ஆள் ஸ்பாட்டிலேயே காலி. ஹார்ட் அட்டாக். பார்த்தால் விபத்து போலத்தான் தெரிஞ்சிருக்கு. ஆனால் ஆடோப்சி ரிபோர்ட்டில் அந்த ஆள் ரத்தத்தில் தூக்க மருந்து ட்ரேஸ் கண்டுபிடிக்கப் பட்டிருக்கு. சந்தேகத்தின் பெயரில் விசாரித்தேன். டெர்ம் பாலிசி ஒரு கோடி எடுத்திருக்கிறார். நாமினி யார் தெரியுமா நம்ம ரேகாதான். சரி மனைவி தானேன்னு பார்த்தால், அவ மனைவி இல்லை. சேர்த்துகிட்டவளாம். அதான் அவள் மீது சந்தேகம் விழுந்திருக்கு. ஒரு வேளை இது ப்ளாண்ட் மர்டரா இருக்குமோன்னு ஒரு கோணம். அதான் அவகிட்ட இந்த பாலிசி படி இறப்பிற்கு இரண்டு லட்சம் காப்பீடுன்னு சொல்லி அவளோட மேரேஜ் சர்டிபிகேட் வாங்கு. க்ளெய்ம் பார்ம்மிலும் மனைவின்னு போடச்சொல்லி வாங்கி வா. அப்புறம் என்ன நடக்குதுன்னு வேடிக்கைப் பார்”
ராம் லேசான தடுமாற்றத்தோடு வெளியே வந்தான். அவன் அம்மாவிற்கு அந்த மருந்தைக் கொடுத்தபோதே டாக்டர் சொல்லி இருந்தார் .
” ராம், மாத்திரை சைஸ் ரொம்ப சிறிசு தான். ஆனால் ரொம்ப எபெக்டிவ். ஜாக்கிரதை, அம்மா தெரியாம ரெண்டு போட்டுண்டுடப் போறாங்க. அப்புறம் ஹார்ட் அட்டாக் தான். “
அப்படி என்றால் ரேகா ஒன்றிற்கு மேல் மாத்திரைகளைக் கொடுத்திருக்க வேண்டும். அவன் தெரிந்துகொண்ட வரையில் ஒரே ஒரு மாத்திரை மிகக் குறைந்த அளவு என்பதால் ரத்தப் பரிசோதனையில் தெரியாது.
“முட்டாள், படித்துப் படித்துச்சொன்னேன். ஒன்றே ஒன்று கொடு என்று. இப்போது பார். “
அவனுக்குள் பயம் துளிர் விட்டது.
புலி வாலைத் தொட்டு விட்டான். இது தொடருமா?
தொடராது என்று உள்ளுணர்வு கூறியது. அவன் கடைக்குச்சென்று புதிதாக அந்த மாத்திரையை வாங்கவில்லை. பாலிசி விஷயமாக இரு முறை ரேகாவைச் சந்தித்து இருக்கிறான். அதில் இருவருக்கும் உறவு இருந்தது என்ற பேச்சு எழாது. இவன் அதற்குப்பின் பேசியதெல்லாம் பி.சி.ஓவிலிருந்து தான்.
நிச்சயமாகச் சந்தேகம் வராது. ஸ்கூட்டரில் ரேகாவிடம் கையெழுத்து வாங்கக் கிளம்பினான்.
ரேகா வீட்டு வாசலில் ஸ்கூட்டர் ஒன்று நின்றிருந்தது. அவன் ஆபீஸ் ஸ்கூட்டரில் எழுதியிருக்கும் அதே க்ருஷ் என்ற பெயர் நம்பர் ப்ளேட்டில். மெதுவாக ஸ்கூட்டரை மறைவிற்கு எடுத்துச்சென்று வீட்டைக் கண்காணித்தான்.
எதிர் பார்த்தது போலவே ரேகா யாரோ ஒரு ஆணுடைய தோளில் சாய்ந்தபடி வெளியே வந்தாள். ஆனால் எதிர்பாராதது ……
அது மதன்.
ராமிற்குச் சட்டென்று புரிந்தது. ரேகா அவனிடம் நடந்து கொண்ட விதம், அவனுக்குப் பிடித்தவற்றைச் செய்தது, அவன் பணத்தேவையை அறிந்து தூண்டில் போட்டது…….. மதன் செல்லும்வரை காத்திருந்தான்.
சிறிது நேரம் இடைவெளி விட்டு பின் கதவைத் தட்டினான்.
“நீ சாதிச்சுட்டடா….. நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா.”
ராம் அவளை அணைக்கத் தயாரானான்.
“இரு….. பணம் கையில் வரட்டும். வட்டியும் முதலுமா வாங்கிக்க”
ராம் முகத்தில் ஏமாற்றத்தை வழிய விட்டான்.
“சரி வந்த முக்கிய காரணம்…. கார் காப்பீட்டின் கீழும் உனக்கு இரண்டு லட்சம் கிடைக்கும். இந்தா இந்தப் படிவத்தில் கையெழுத்துப் போடு. உன் கல்யாண சர்டிபிகேட் ஒண்ணும் கொடு. இதற்குத்தேவை”
அவனுக்குத் தெரியும், அவள் மதனைக் கேட்காமல் கையெழுத்திட மாட்டாள் என்று.
“அட, நம்ம காட்டுல மழை தான். இரு, குடிக்க இஞ்சி டீ எடுத்தாரேன்”
உள்ளே சென்று மதனுடன் பேசினாள்.
ராம் காத்திருந்தான்.
படிவத்தில் கையெழுத்திட்டு தன் தலை எழுத்தை அவள் எழுதிக்கொண்ட பின்
“அது சரி, நான் ஒரு மாத்திரை தானே போடச் சொன்னேன். மேலே போட்டியா?”
சற்றே தடுமாறி
“அது…. ஆமாம். ரொம்ப சிறிசா இருந்திச்சில்ல. அதான். ஏன் எதுனா பிரச்சினையா?”
“சே…. சே… அதெல்லாம் இல்ல. ஆமாம், மதனை உனக்கு எப்படித் தெரியும்?”
சட்டென்று முகம் வெளிறினாள்.
“மதனா…. அது யாரு?”
ராம் மெதுவாகத் திரும்பினான்.
“இப்ப வந்துட்டு போனானே அவன்”
அதற்குப்பின் அவள் பேசிய பேச்சுக்களைக் காதில் வாங்காமல் சட்டென்று கிளம்பினான்.
இவள் நிச்சயம் கம்பி எண்ணப் போய் விடுவாள். மதன் இதில் மாட்ட வாய்ப்புண்டு. ரேகா இன்சூரன்ஸ் கம்பெனியிலிருந்து ராம் உதவி செய்தான் என்று நிச்சயமாகக் கூறுவாள். ஆனால் மதன் பற்றியும் அவனைப் பற்றியும் தெரிந்தவர்கள் நிச்சயம் அவனைத்தான் கைகாட்டுவார்கள். தவிர ரேகாவுடன் பல நாள் தொடர்பிலிருந்ததை அவன் போன் ரெகார்ட் காட்டிக்கொடுக்கும்.
ஆனால் இப்போது இவற்றை விடச் சில முக்கியமான வேலை இருக்கிறது
முக்கியமாக இந்த மாத டார்கெட்டிற்காக நிறைய பாலிசி எடுக்கவேண்டும்.
ரேகாவின் குரல் தெரு முனை வரை கேட்டுக்கொண்டிருந்தது.
தனக்கு வரப்போகும் ஆபத்தை உணராமல் ரேகா கத்திக்கொண்டு நின்றாள்.