காட்டிலிருந்த விலங்குகள் எல்லாம் சேர்ந்து, காட்டை இழுத்துப் பூட்டிவிட்டன. இனி மனிதர்களால் நுழைய முடியாது.
வீட்டில் பூட்டுப்போட்டு பொருட்களைப் பாதுகாப்பது போல, காட்டைப் பாதுகாக்க வேண்டும் என்பது விலங்குகளின் நீண்ட கால ஆசை. அது நிறைவேறிய மகிழ்ச்சியை விலங்குகள் கொண்டாடின. புலி இசைக்க, பறவைகள் பாடியது. யானைகள் நடனமாடியது.
வானத்தைக் கூரையாக்கி காற்றில் சுவரெழுப்பியிருந்தன. பெரிய கதவில் சிறிய பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு விலங்காக வந்து பூட்டை தடவிப் பார்த்தன. இழுத்துப் பார்த்தன. ஆட்டி பார்த்தன. பூட்டு பூப்போல எடையில்லாமல் இருந்தது.
”நூறு நூறு யானைகள் வந்து உடைத்தாலும் பூட்டு உடையாது” என்றது, சிங்க ராஜா.
மனிதர்களால் காடு அழிவதைத் தடுக்க காடு பூட்டப்பட்டது. அதன் சாவி சிங்க ராஜாவிடம் இருந்தது. கள்ளச்சாவி யாராலும் தயாரிக்க முடியாது. ஏனெனில் சிங்க ராஜாவின் வால் தான், காட்டின் பூட்டைத் திறக்கும் சாவி.
மனிதர்கள் மீது விலங்குகளுக்கு கடும் கோபம். அதனால் மலையிலிருந்து தவழ்ந்து வரும் மேகங்கள், காட்டின் சுவரைத் தாண்டிச்செல்ல முடியாதபடி தடுத்துவிட்டன. நதியில் ஓடும் தண்ணீரும் காட்டை கடந்து செல்லவில்லை. உணவுகள் செல்லவும் வழியில்லை.
[ads_hr hr_style=”hr-fade”]
நாட்கள் சென்றது. விலங்குகள் எந்தக் கவலையும் இல்லாமல் வாழ்ந்தன.
“டப்… டப்… டப்… டப்…” என காட்டின் கதவு தட்டப்பட்டது.
ஒட்டகச்சிவிங்கி கதவிலிருந்த ஜன்னல் வழியாகப் பார்த்தது. மனிதர்கள் கூட்டம் கூட்டமாக நின்றிருந்தனர். சிங்கராஜாவைப் பார்க்க வேண்டுமெனத் தூது அனுப்பினர்.
சிங்க ராஜா தாடியைத் தடவியபடி யோசித்தது. ”சரி… வரச்சொல்லுங்கள்” என்றது.
”ராஜா… நீங்க காட்டப் பூட்டுனதால எங்களுக்கு நல்ல காத்து வரல, நல்ல தண்ணி இல்ல. மழை இல்ல. சாப்பிட எதுவும் இல்ல. எங்கள காப்பாத்துங்க. காட்டை திறந்து விடுங்க” என மனிதர்கள் கெஞ்சினார்கள்.
உடல் மெலிந்து பரிதாபமாக இருந்த மனிதர்களைப் பார்த்து, சிங்க ராஜா இரக்கம் கொண்டது. காட்டை திறந்து விட்டது. மனிதர்கள் காட்டிற்குள் சென்றதும், விலங்குகளை வெளியே துரத்தியடித்தனர். காட்டிற்கு வேறொரு பூட்டைப் போட்டு பூட்டினர். ஊருக்கும் ஒரு கதவையும், பூட்டையும் போட்டனர்.
அப்போது தான் மனிதர்கள் ஏமாற்றி காட்டை அபகரித்துக் கொண்டது விலங்குகளுக்குத் தெரியவந்தது. விலங்குகள் கண்ணீரோடு காட்டை விட்டுச் சென்றன. ஊரில் பச்சை என்ற நிறமே இல்லை. அந்தளவிற்கு மனிதர்கள் ஊரைக் கெடுத்து வைத்திருந்தனர். கொஞ்ச நாள் போனது.
”டப்… டப்… டப்…” கதவு தட்டப்பட்டது. மீண்டும் மீண்டும் தட்டப்பட்டது. இந்த முறையும் மனிதர்கள் தான் கதவைத் தட்டினர்.
காடு காணாமல் போயிருந்தது. மரங்கள் வெட்டப்பட்டன. கட்டிடங்கள் கட்டப்பட்டன. நதிகள் மறிக்கப்பட்டன. மலைகள் பள்ளங்களாக மாறின. மழையின்றி அனைத்தும் காய்ந்து போயின. உணவும், ஆரோக்கியமும் இல்லாமல் மனிதர்கள் வாடினர்.
காடு ஊராக மாறியிருக்க, இன்னொரு பக்கம் ஊர் காடாகி இருந்தது. காட்டிலிருந்து துரத்தப்பட்ட விலங்குகள் சோர்ந்து போய்விடவில்லை. கிடைப்பதை உண்டு களமிறங்கின.
பறவைகள் வெகு தூரம் பறந்து சென்று மர விதைகளைக் கொண்டு வந்து தூவின. யானைகள் மரங்களைக் கொண்டு வந்து நட்டு வைத்தன. எப்போதாவது வரும் மழையினை, மற்ற விலங்குகள் சேகரித்து வைத்தன. ஒவ்வொரு விலங்கும் ஒவ்வொரு வேலையைச் செய்தன. மரங்கள் வளர்ந்தன. காடு உருவானது. விலங்குகளுக்கு வேண்டிய உணவு கிடைத்தது. விலங்குகள் மகிழ்ச்சியாக வாழ்ந்தன.
இதையறிந்து வந்த மனிதர்கள் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தனர்.
“டப்… டப்… டப்…”
– பிரசாந்த்.வே
தொடர்ந்து எழுதுங்க பிரசாந்த்.வே. நல்வாழ்த்துக்கள்
நன்றி தோழர்…
நாடில்லாமல் காடு வாழும், காடில்லாமல் நாடு வாழாது. காட்டுவளமே நாட்டுவளம் என்பதை உணர்த்தும் அருமையான கதை. பாராட்டுகள்.