யாம் சில அரிசி வேண்டினோம். – நாவல் விமர்சனம்


“…………..த்தா………………..ல இங்கியே இப்பியே உன்னை சுட்டுப் பொதச்சி, காணாப் பொணமாக்கிடுவேன் பாத்துக்கோ ” இப்படியான,நெஞ்சை அறுக்கும் சுயத்தை காயப்படுத்தும் வன்மம் கொண்ட வார்த்தைகளை இதற்கு முன் யாரும் என்னிடம் பேசியதில்லை. உண்மையில் நான் அதிர்ந்து தான் போனேன் “
என்னை நோக்கி துப்பாக்கியை நீட்டியவாறு ஒரு காவலதுறை அதிகாரி பேசிய கடுஞ் சொற்கள் இவை. அதுவும் மிக இயல்பாக பேசினார்.அப்படிப் பேசுவதில் அவருக்கு எந்தத் தயக்கமும் இருந்ததாகவும் நான் உணரவில்லை”
ஒரு யூடியூப் வலைதளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் பேசிய இந்த காணொளியைப் பார்க்க நேர்ந்தது.

நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ மனநிலையிலிருந்து தன்னை முற்றிலுமாக துண்டித்துக் கொள்ளாத அல்லது விரும்பாத அரசு என்னும் நிறுவனம், கட்டியெழுப்பி ஆராதித்து வருகிற அதிகாரம் அதை நிலைநிறுத்திட குடிமக்களிடம் உண்டாக்கி வைத்திருக்கிற அச்சம், இவற்றை எல்லாம் கணக்கச்சிதமாக நிறைவேற்றிட பாடுபடும் காவல்துறை, நிர்வாகத் துறை, நீதித்துறை என அத்தனை உறுப்புகளும் அரசுக்கு கீழ்படிதலுள்ள நல்ல பிள்ளைகள்(?) தான்.

அந்த அரசை கேள்வி கேட்டோ எதிர்த்தோ எழும்பும் குரல்களை “பாராளுமன்ற மெஜாரிட்டி” (ஜனநாயகம்)யின் துணைக் கொண்டே நசுக்குகிறார்கள்.

கவசிநாதனின் குரல் இன்னும் மென்மையானது. தன் வாழ்க்கையில் யாரிடமும் எதிர்த்தோ, அதிர்ந்தோ பேசிப் பழக்கப்படாத கவசிநாதனின் குரல் முதல் முறையாக கொஞ்சம் அழுத்தத்தோடு வெளிப்பட்டது அந்த மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரியின் முன்னால்தான். அது ‘நான் யார் தெரியுமா? என்னோட பின்னணி என்னன்னு தெரியுமா? ’வகையறா ஆதிக்க குரல் அல்ல.

வாழ்க்கையின் அடுத்த கணத்தை நகர்த்துவதற்கு இன்னொருவரிடம் கையேந்தி நிற்பது தான் எத்தனை இழிவானது. அச்செய்தி வைத்திருக்கும் சாவியை எடுத்துக் கொண்டு போய்த்தான் எனக்கென்று காலம் வைத்திருக்கும் புதிரின் பழுப்பேறிய காக்கி உறையைத் (வேலை வாய்ப்பு அலுவலகக் கடிதம்) திறக்க வேண்டும். அந்த உறைக்குள்ளே நானும் என் குடும்பமும் வயிறாரச் சாப்பிடுவதற்கான தானிய மணிகள் இருக்கலாம். என்னுடைய சுயமரியாதை இருக்கலாம். என்னுடைய எதிர்காலம் இருக்கலாம். ஏன் நானே கூட இருக்கலாம் என்கிற எதிர்பார்ப்பிலிருந்து எழுந்த “எப்போ சார் வரும்?” என்கிற சுயபரிதாபத்தின் ஒடுங்கிய குரல்.

அந்தக் குரலேக் கூட போதுமானது தான். ஒரு அதிகாரியின் ஈகோ வைத் தூண்டிட, அந்த ஈகோ “தான் என்கிற தனிமனித பிம்பத்தின் மீது கல்லெறிந்ததால் புறப்பட்டதல்ல. இந்த இடத்தில் “தான்” என்பது மிகப் பெரிய பலம் வாய்ந்த அரசின் அங்கம். அதை எப்படி கவசிநாதன் தொடலாம்? என்பதிலிருந்துதான் அந்த மாவட்ட அதிகாரியின் கோபமும் கண்மூடித்தனமான தாக்குதலும் நிகழ்கிறது.

நூற்றாண்டுகளாய் குடிகளின் மீது நாம் உண்டாக்கி வைத்திருந்த அச்சம் கொஞ்சம் கூட இல்லையே இந்த யூஸ்லெஸ் க்கு? அதெப்படி ஒருவன் சோறு இல்லாமல் சுயமரியாதை இல்லாமல் கூட இருக்கலாம்.ஒரு அரசாங்க அதிகாரியின் மீது , தனது எல்லாம் வல்ல அதிகாரத்தின் மீது அச்சம் இல்லாமல் இருக்கலாமா? கவசிநாதனின் இந்த நடவடிக்கை கண்ணாடி அறைக்கு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் வாடி வதங்கிய கண்களில் ஒரு தீக்குச்சியை உரசிப் போட்டு விட்டால் என்னாவது? கூடாது கூடவே கூடாது.ஊழியர்களின் எஜமானர் விசுவாசம் கவசிநாதனின் மீது “பொய்ப் புகாரை ” வெகு நேர்த்தியாக தயார் செய்து விட்டது.

“புத்தி எதனா கீதா? வேலை போட்டுத் தற எம்ப்ளாய்மென்ட் ஆபிசுக்கே போய் கலாட்டா பண்ணிக்கீற”என்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தயாரிக்கப்பட்ட பொய்ப் புகாரை அச்சு பிசகாமல் ஒப்புவிக்கிறார் காவல்துறை துணை கண்காணிப்பாளர். குற்றம் சாட்டப்பட்டவரை விசாரிக்காமலேயே ’நீ ஏன் இந்த குற்றத்தை செஞ்சே?’ என்று கேட்டு ஒரு அரசாங்க அதிகாரியை ’நீ கேள்வி கேட்பியா? ’ என்று நாசூக்காகி மிரட்டிச் சொல்லிச் செல்கிறார் துணை கண்காணிப்பாளர்.

நிச்சயம் கவசிநாதன் கலங்கித் தான் போயிருப்பார். அச்சமும் பற்றிக் கொண்டிருக்கும்.மக்களால் மக்களுக்காக நடத்தப்படுவதே மக்களாட்சி அதாவது குடியாட்சி என்று நிறையப் புத்தகங்களில் படித்திருந்த வரிகளை இனி சந்தேகப்படத்தான் வேண்டியிருக்கும். நானும் மக்களில் ஒருவன் தானே, எனக்காகத் தானே,என் வாழ்வை மேம்படுத்தத் தானே அரசும் அலுவலகங்களும் அதிகாரிகளும்?
பிறகேன் இப்படி அனைவரும் கைகோர்த்துக் கொண்டு பழிதீர்க்க அலைகிறார்கள் என நொந்து கொள்ளும் கவசிநாதன் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிந்து விட்டு ஆண்டுக் கணக்கில் காத்திருந்து வாழ்க்கையே பெரும் சுமையாகிப் போன ஒரு பெருங் கூட்டத்தின் பிரதிநிதி.

கேட்பாரற்று கிடக்கும் லட்சக்கணக்கானவர்களில் ஒருவன். சுழலுக்குள் சிக்கித் தவிக்கும் கவசிநாதனை காக்க வந்த அந்தப் பெரியவர் தான். நடந்த அத்தனைக்குப் பின்னாலும் சத்தமில்லாமல் நடந்துக் கொண்டிருந்த ஆடுபுலி ஆட்டத்தை அவனக்கு உணர்ந்துகிறார். “தலையறுப்பது வேந்தர்க்கு இன்பம் : நமக்கோ அது உயிரின் வாதை ” என்று ஆற்றுப்படுத்தும் பெரியவர். வேந்தர்க்கு எதிராக எப்படி நீதிக்கான் சாட்டையை சுழற்றுவது என்பதையும் கற்றுத் தர தொடங்குகிறது கவசிநாதனின் அதிகாரத்திற்கெதிரான அறத்தின் போர்.

”ஆபிசருங்கன்னா சாமிதானே? கொறப்பாட்டை வேற யாருகிட்ட சொல்ல முடியும்?”என கோரிக்கைகளும் இறைஞ்சுதல்களுமே தங்களின் இயல்பாகிப் போன பீடி சுற்றும் கவசிநாதனின் அம்மாவுக்கு வேலை வாய்ப்பு அதிகாரி என்பவர் சாமிக்கும் மேலானவர் என்பது தெரியவில்லை.

”பொளப்ப பாருன்னா எதுனா புஸ்தகங்கள படிக்கிறது, படிச்சுட்டு வந்து உணக்கறமா பேசறத, அது இப்ப எங்க கொணாந்து உட்ருச்சி பாத்தியா ?” என்று தன் மகனின் மீதான எச்சரிக்கை உணர்வோடு புலம்புவதைத் தவிர வேறெதையும் செய்து விட முடியாத கையறு நிலையில் அநேக அப்பாக்களைப் போலவே கவசிநாதனின் அப்பாவும்.

பூரணி, இதிகாச நாயகர்களின் தனிமை வாசத்தையும் மிஞ்சிடும் அரசாங்க வேலைக்கான தனது பதினான்கு வருட காத்திருப்பையும் சகித்துக் கொண்டே… அலமாரி அடுக்குகளில் ஒளித்து வைத்திருக்கும் சில்லறைக் காசுகளை அவ்வப்போது எடுத்துக் கொடுத்து கவசிநாதனின் தேநீர் தவிப்பிற்கு ஆதரவு கரம் நீட்டுபவள். கவசிநாதனின் அன்பிற்கு பரிசாக இரண்டு பிள்ளைகள் முனிரத்னம், ராமோஜி.

தனக்கோட்டி மாமா பொருளீட்டு வாழ்க்கையின் காலடிகளுக்குள் மிதிபட்டவனகாக இருந்தாலும் அந்த நெருக்கடிகள் அனைத்திற்கும் ஆரத்தழுவி மருந்து போட்டன கவசிநாதனின் இந்த உணர்வு பூர்வமான உறவுகள். இப்படியான உறவுகளை சந்தோஷப்படுத்தி பார்க்கத்தானே கவசிநாதனின் இத்தனை போராட்டமும்.இது ஏன் அரசுக்கு புரியவில்லை? அரசு அதிகாரியின் வாழ்க்கை கோப்புகளோடே முடிந்து விடுமா? அவருக்கும் மனைவி குடும்பம் பிள்ளைகள் இருக்க மாட்டார்களா?

’நான் மிகச் சாதாரணமானவன் தானே..கொஞ்சம் பொறுமையாக என் கேள்விகளைக் கையாண்டிருக்கலாமே அந்த அதிகாரி’ஆயிரம் முறையாவது இப்படி யோசித்திருப்பான் கவசிநாதன்.

முடியாமல் தான் போலிஸ் கோர்ட்டு கச்சேரி எல்லாம். நமது சண்டை யாரோடு என்பதை புரிய வைத்து அந்தச் சண்டையில் நாம் எங்கு நிற்கிறோம் ? நமது பலம் என்ன? எதிராளியின் பலம் என்ன? எங்கிருந்து அடிப்பார்கள்? யாரை வைத்து அடிப்பார்கள்? என்பதைப் பற்றிய ஆழமான புரிதல்கள் பெரியவருடான பலகட்ட சந்திப்புகளில் சாத்தியமானது.

காவல் துறை ஆய்வாளர் முதற்கொண்டு மாவட்ட ஆட்சியர் வரை எல்லோரிடத்திலும் ஒரே மொழியிலான (அதிகார மொழி) எதிர்வினை யைக் கண்டு கவசிநாதன் குழம்பிப் போய் நிற்கும் போதெல்லாம் பெரியவர் தான் தடுத்து நின்று ஆடக் கற்றுத் தருகிறார்.

”38 வயசாகுதுன்னு வெட்கமே இல்லாம சொல்ற.. உனக்கு தகுதியோ திறமையோ இல்ல.. ஒரு under achiever .. ஆனா சலுகையை மட்டும் எதிர்பார்க்கறே .. அத அந்த அதிகாரி சுட்டிக் காட்டினா அவரையே திட்ற…” சமூகநீதியைப் பேசியே ஆட்சியைப் பிடித்து 60 ஆண்டுகளாக நாட்டை ஆளும் திராவிடத் தலைவர்களின் புகைப்படங்கள் மாட்டப்பட்டிருந்த அந்த அறைச் சுவர்களில் பட்டு தெறித்த வார்த்தைகள் அந்த தலைவர்களின் நோக்கங்களுக்கே எதிராக இருந்தன.

”அப்படின்னா இங்க வீக்கர் செக்ஷனுக்கு இடமே இல்லையா? ” என பெரியவரின் குரல் உயர்ந்தது.
ஆட்சியர் அறையை விட்டு வெளியே வந்தவர்களுக்கு ஒன்று மட்டும் உறுதியாக உணர்த்தப்பட்டு விட்டது.
‘எங்களுள் ஒருவர் மீது எங்களிடமே புகார் தர வருவாயா? நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போமா?என்பதே அது.

இனி மனு கொடுப்பதாலோ கெஞ்சிக் கொண்டிருப்பதாலோ எதுவும் நடந்து விடப்போவதில்லை. எளியவர்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் மட்டும். அங்கே தஞ்சம் புகுவதைத் தவிர வேறு யாராலும் நம்மை காப்பாற்றி விட முடியாது என கவசிநாதன் திடமாய் நம்பி வழக்காடு மன்ற கலாச்சாரத்திற்கு நான்கைந்து வாய்தாக்களுக்குள் தன்னை பொருத்திக் கொள்கிறான்.
கவசிநாதனின் வழக்கறிஞர் முருகையன் நீதியின் மாண்பைக் காக்க தனது ஆற்றல் அறிவு முழுவதையும் ஒன்று திரட்டி கவசிநாதனின் மனசாட்சியாக அந்த நீதிமன்ற அறைக்குள் வாதாடுகிறார்.

அந்த நீதிமன்ற அறையும் அங்கே நிகழ்த்தப்படுகிற வாதப் பிரதிவாதங்களும் பல நூற்றாண்டுகளாக ஏதுமற்ற எளியவர்களுக்கும் அதிகாரத்தின் சர்வ வல்லமைகளுக்கும் ஓயாமல் நடந்து வருகிற முடிவற்ற போரின் “சினேரியோ” வாகத்தான் தெரிந்தது.. “நான் இவங்களப் போல ஏழைங்களுக்க் நிறைய உதவிகள் செஞ்சிருக்கேன்” இது வேலை வாய்ப்பு அதிகாரியின் கரிசனம்.

“உங்க கர்ணப் பரம்பரை கதையெல்லாம் இங்க தேவையில்லை.. “அவங்க ஏழைங்க” ன்னு பேசும்போதே “நீங்க யாருன்னு தெரியுது. பிரதிவாதியைத் தாக்கிய செயலுக்கு உங்களோட ஆதிக்க மனநிலை தான் முதலும் முடிவுமான காரணமாக இருக்க முடியும்.” என அதிகாரத்தின் பின்னால் வன்மத்துடன் ஒளிந்திருந்த அத்தனை ஏற்றத் தாழ்வுகளையும் முருகையன் வெளிக் கொண்டு வருகிறார்.

எத்தனை பிறழ் சாட்சிகள்! எத்தனை பொய்கள் ! தன்னை மீறி வெளிப்பட்டு விடும் சில உண்மைகள் என ஒவ்வொன்றும் கவசிநாதனை உலுக்கி எடுத்தன.

நீண்ட நெடிய வழக்காடு மன்ற பரிபாலனைகளுக்குப் பிறகு ஒருவழியாக தீர்ப்பும் வந்தது. இவ்வளவு இழப்புக்குளுக்குப் பிறகான போராட்டமும் அந்த வேலை வாய்ப்பு அதிகாரியை தண்டித்து விடவில்லை.. கவசிநாதனை விடுதலை செய்திருக்கிறது அவ்வளவே.

கவசிநாதன் மனம் ஆற்றுப்படவில்லை..  ‘என் சுயமரியாதை உணர்வு நசுக்கப்பட்டதை பற்றி அரசுக்கு அக்கறையில்லையா? ஏன் இருக்க வேண்டும்? அதிகாரத்தின் முன் சரணாகதி அடைந்து மண்டியிட்டவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளாதது யார் குற்றம்? நீ தேடிப் பிடித்து அவர்களிடம் கேட்டிருக்க வேண்டும். உன்னை யார் பிராது கொடுக்க சொன்னது?’

கவசிநாதனின் காதுகளில் அதிகாரத்திடம் தோற்று கூனி குறுகிப் போயிருந்த ஆயிரமாயிரம் வலுவிழந்தவர்களின் குரல்கள் கேட்டுக்கொண்டே இருந்தன. மனம் நிலை கொள்ள வில்லை.
“முயற்சியோ போராட்டமோ செய்யலேன்னா நம்ம உயிர் அறுபடும் இதுதான் நம்மோட நிலைமை” பிழைத் திருத்தலுக்காகவே நடந்து முடிந்த அத்தனை போராட்டமும் என்பதை பெரியவர் உணர்த்திவிடுகிறார்.

அதிகாரம் என்பது தனி வகைமை, அதன் எல்லைகளுக்குள் அவர்களின் ஈகோவைச் சீண்டாத கோரிக்கைகளும் இறைஞ்சுதல்களும் அனுமதிக்கப்படுகின்றன. சில நேரங்களில் நிபந்தனைகளுக்குட்பட்ட ஆர்ப்பாட்டங்களும்… கவசிநாதன் அரசாங்கத்திடம் வேலை கேட்கிற இடத்தில் இருக்கிறான். நாம் தான் கொடுக்கிற இடத்தில் இருக்கிறோம் என்பதாகத் தான் தொடங்குகிறது. இந்த ஆடுபுலி ஆட்டம் அது கேட்கிற இடத்தில் இருப்பவனின் சாதி மதம் மொழி இனம் வர்க்கம் என ஒவ்வொன்றைப் பொருத்தும் புதுப் புது பரிமாணங்களை எடுக்கும். சமூகப்படிநிலையின் கடைசி அடுக்கிலிருந்து வருகிற குரல் என்றால் ஒடுக்குகிற வேகமும் வன்மமும் அதிகமாகவும் இருக்கும்.

இன்றும் சிறைச்சாலைகளில் வாடும் சிறைவாசிகளில் பெரும்பான்மையானோர் தலித்துகளாகவும் இசுலாமியர்களாகவும் இருக்கிறார்கள் என்பதே நமது நீதிமுறைமையின் அளவுகோல்.

உலகத் தரமான நாவல்கள் என கொண்டாடப்பட்ட Uncle toms cabin Roots ( ஏழு தலைமுறைகள்)அனைத்துமே அதிகாரத்தை எதிர்த்து நடத்திய போராட்டப் புனைவுகளே!

‘யாம் சில அரிசி வேண்டினோம்’  நாவலும் அத்தகைய ஒரு போராட்ட வரலாற்றைப் தான் நிறுவுகிறது.

கவசிநாதன் எந்த இடத்திலும் தான் இன்ன சாதி என்கிற கழிவிரக்கத்தால் யாரொருவரிடமும் கருணையை வேண்டி நிற்கவில்லை.


– கவின் பாலா

[tds_info]

நூல்: யாம் சில அரிசி வேண்டினோம்

ஆசிரியர்: அழகிய பெரியவன்

பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம்

விலை: ₹250

[/tds_info]

1 COMMENT

  1. அருமையான விமர்சனம்…கலங்கவைக்கிறது… கவசிநாதனைப் போல இங்கு எளிய மக்கள் இப்படியான அதிகாரிகளின் அவமதிப்புக்கும், அலட்சியத்துக்கும், அராஜகத்துக்கும் ஆளாகிறார்கள் என்பதே இன்றைய நிதர்சனம்… தங்களின் விமர்சனத்தின் ஊடாக ‘யாம் சில அரிசி வேண்டினோம்’ நாவல், நிகழ்கால அரசாங்கம், அதன் பல்துறை அதிகாரிகள், வழக்கு மன்றம், போன்றவற்றின் சார்பு நிலையை, மனிதநேயமற்ற அடாத போக்கை கண்முன் நிறுத்தும் மேலுமொரு சாட்சியாக உள்ளது என்று உணர்ந்து கொள்ள முடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.