பசித்த மானிடம் – வாசிப்பனுபவம்


புசித்துக் கொண்டிருக்கும்போதே பசித்தும் இருக்கின்ற பசிகள் வயிற்றுப் பசியைக் காட்டிலும் மோசமானவை. காமமும், அதிகாரமும் அப்படியானவை. உடலைத் தின்று வளரும் இரைகள் அவை. இலக்கியப் படைப்புகள், பொதுவெளியில் பேசத் தயங்குகிற விடயங்களைப் பிரதிகளுக்குள் பேசப்படுபவையாக உருமாற்றி, அதன் வழி ஒரு விவாதத்தை அல்லது ஒரு உரையாடலை, குறைந்த பட்சமாக ஒரு கவன ஈர்ப்பையேனும் முன்னெடுப்பவை. இப்படிப்பட்ட இலக்கிய வெளிக்குள்ளேயே காமம் குறித்த விசாரணைகள் மிக மேலோட்டமாகவோ அல்லது மிக நாசூக்காகவோ மட்டுமே பெருவாரியாகக் கையாளப்பட்ட பேசுபொருளாக இருந்து வருகின்றது. காமத்தை தம் பிரதான பேசு பொருளாக்கி, பாசாங்குகள் துறந்து அதனைப் பேசிய படைப்பாளிகள் என நாம் யோசித்துப் பார்க்கையில் மீண்டும் மீண்டும் ஜி.நாகராஜன், தஞ்சை பிரகாஷ், தி.ஜானகிராமன், இன்னும் சமகாலத்தையும் கணக்கில் எடுக்கிற பட்சத்தில் சாரு நிவேதிதா என அந்த வட்டம் மிகக் குறுகியதாகவே இருக்கிறது. (வட்டத்திற்குள் இன்னும் சிலரையும் சேர்க்கலாம். இருப்பினும் உடனடி நினைவிற்கு வருகின்ற பெயர்களாக இவை இருப்பதால் இப்படிச் சொல்ல நேர்கிறது.) சிறுகதைகள் பல எழுதியிருப்பினும், நாவல் என்ற வகையில் தனது எழுத்துலக வாழ்வில் கரிச்சான் குஞ்சு அவர்களால் எழுதப்பட்ட ஒரே நாவல் ‘பசித்த மானிடம்’ எனும் போதிலும் அதன் மையப் பொருளென காமத்தை எடுத்துக் கொண்டதையும் அதனை அணுகியிருக்கும் விதத்தையும் கணக்கில் கொண்டு தாராளமாக இப்பட்டியலில் அவரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

மனித வாழ்வில் காமத்தின் பங்கு நுட்பமானது. அது ஒரு முடிவற்ற புதிர்ப் பாதை. பலரும் அதனின்று பலவாறான தயாரிப்புகளுடன் வெளியேறுவதாக நினைத்து, உண்மையில் தமது இயக்கம் மையத்தை நோக்கிய நகர்வென்றே கூட அறியாமல் பல வேளைகளில் பயணிப்பதும், துவக்கத்திற்கே மீண்டும் வருவதும், பின் எது தான் துவக்கமென அயர்ந்து நிற்பதுமான அலைகழிப்புகள் நிரம்பிய ஆதார உணர்ச்சியாக  இருக்கிறது. திளைத்தவர்களால் கூட அதன் சூட்சுமங்கள் இன்னதெனச் சொல்ல இயலாததே அதற்கொரு நிரந்தர புதிர்த்தன்மையை வழங்கி விடுகிறதெனத் தோன்றுகிறது.

பசித்த மானிடம் வெளிப்படையாக ஒரு பால் உறவை முன்வைத்த புனைவு என அடையாளப்படுத்தப்படுகிறது. வாசிக்கையில் அது வெறும் பரபரப்பிற்காக இடைச்செருகலென சேர்த்துக் கொள்ளப்பட்டதாக நிச்சயமாக அல்ல என்பதை உணர முடியும். காமத்தை ஒரு அதிகாரத்தின் கருவியாக ஆக்க முனைகிற மனிதனின் முனைப்பையும், இச்சையின் வாயில் அகப்பட்ட இரையென மதிகெட்டலைந்து வாழ்வின் தடத்திலிருந்தே அவன் தொலைந்து போவதையும் நெருங்கி இருந்து அலசிப் பார்க்கிற படைப்பாகவே அது இருக்கிறது. அது காமத்தின் எல்லா பரிமாணங்களையும் ஆராய்கிற முனைப்பின் வெளிப்பாடாகவே ஒரு பால் உறவு குறித்த பகுதிகளை நாம் உள்வாங்கிட வேண்டும். மனிதனின் காமத்தினால் அவன் வந்தடையும் கடைநிலையை, அவனது சுய அழிவின் சித்திரத்தை இரு கதை மாந்தர்களின் கதைகள் வழியே விரிவாக முன்வைக்கிறது.

தோப்பூரைச் சேர்ந்த கிட்டா, கணேசன் இருவரின் சிறு பிராயம் முதலாக நடுவயது வரையிலான வாழ்க்கைச் சித்திரத்தை வரைந்து காட்டுகிறது நாவல். இருவருமே காமப் பெரும்புனலின் கரைபுரண்டோடும் சுழிப்பில் மிதக்கும் இரு தக்கைகளே. அதில் கணேசனெனும் தக்கையின் மீது பல உயிர்களின் இச்சை இளைப்பாறிக் கொள்கிறது. வேண்டியமட்டும் மூழ்கியெழுந்து தாகம் தணித்துக் கொள்கிறது. இதை மிக நேரடியாகவே புரிந்து கொள்கிற கிட்டா தனக்கு மறுக்கப்படுவதும், கணேசனுக்கு அபரிமிதமாகக் கிடைக்கப் பெறுகிறதுமான வாய்ப்புகளையும் சமூக மதிப்பையும் கண்டு உள்ளுக்குள் குமைந்து, அதன் விளைவாகத் தனக்குள் ஒரு வெறுப்பின் விருட்சத்தை சிருஷ்டித்துக் கொள்கிறான். அது அவனை நிம்மதியை உறிஞ்சிச் செழிக்கிறது. அவனை மூர்க்கனாக்குகிறது. ஒப்பீட்டின் விடம் தடவிய கூர் அம்பை தனக்குத் தானே குத்திக் கொண்டு இதயத்தை ரணமாக்கிக் கொள்கிறான் கிட்டா. வாழ்நாள் முழுவதும் துரத்துகிற ஒரு கொடுங்கனவாக உடன் வருகின்ற அந்த வெறுப்பின் சாரம் அவனது ஆளுமையையே குலைத்துப் போடுகிறது. அங்கீகாரத்திற்கும், மரியாதைக்கும் ஏங்கிச் சாகிற (தான் ஒருமையில் அழைக்கப்படுவதைக் கூட தாங்க இயலாத) அற்பனாகவே அவன் எஞ்சுகிறான். தொட்டது துலங்கும் வியாபாரம், சமூக அந்தஸ்து என அத்தனையும் இருந்து உள்ளுக்குள் வியாபிக்கிற அவனது அக வெறுமையால் சுய வெறுப்பே மிஞ்சுகிற ஒரு பரிதாபத்திற்குரிய ஜீவனாகவே அவன் வாழ்கிறான்.

நேர்மாறாக ஒரு சராசரி மனிதன் மிகையெனத் தெரிந்தும் ஏங்குகிற ஒரு கனவு வாழ்க்கை கிடைக்கப் பெற்றவனாகவும், சகலரும் தம்மை இழக்கத் தயங்காத கவர்ந்திழுக்கிற வனப்பும் நிரம்பிய ஒரு ஆண்மகனாகவும் கணேசன் இருக்கிறான். கிராமத்து வாத்தியாரின் வீட்டிற்குத் தத்துப் பிள்ளை போல வருகின்ற அவன் வெகு சீக்கிரமே மொத்த ஊருக்கும் செல்லப் பிள்ளையாவதும், ஊரின் பெண்கள் வயது பேதமின்றி அவன் மீது அன்பைப் பொழிவதும், கிட்டாவின் மனதில் கனன்று கொண்டிருக்கும் பொறாமைத் தீயின் வேகங் கூட்டுகிற பெருங்காற்றாகின்றன. நேர் கோட்டில் நகராமல் கலைத்துப் போட்ட காலவரிசையில் சொல்லப்படுகின்ற கதை, நமக்கு அவ்வப்போது இவ்விரு கதைமாந்தர்களின் வாழ்க்கையும் எந்தெந்த புள்ளிகள் இணையாகப் பயணிக்கின்றன, எங்கே வெட்டிக் கொள்கின்றன, எங்கே மறைமுகமாகப் பாதிக்கின்றன என வெளிப்படுத்துவதுமாக ஒரு வளமான வாசிப்பனுபவத்தைத் தருகின்றது.

ஒரு தஞ்சை பிரகாஷின் சிறுகதையில் ஒரு கதாபாத்திரம் “We are the worst hypocrites in the world” என்று நம் சமூகத்தின் மீதான ஒரு வரி விமர்சனமாகச் சொல்லிச் செல்லும். இப்புதினத்தை வாசித்த போது இவ்வரி பல இடங்களில் மனதிற்குள் எழுந்து வந்தது. கதையில் வருகின்ற பெண்களின் பாத்திரப் படைப்புகள் பாசாங்கற்றதாக இருக்கிறது. தமது உடலின் விழைவுகளை இயல்பென எதிர்கொள்கின்ற சுதந்திரம் இப்பாத்திரங்களுக்கு புனைவிலேனும் கிடைக்கின்றது. ஆண்-பெண் உறவு சார்ந்த சமூகப் புனிதங்களை விமர்சிப்பதாயும் அல்லாமல், அதே வேளையில் கதாபாத்திரங்களின் செயல்பாடுகளை ஆமோதித்திடும் வகையிலும் அல்லாமல் இரண்டிற்கும் வெளியிலிருந்து அணுகும் ஒரு சாட்சி மாத்திரமான நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டு அதனின்று இறுதி வரையிலும் வழுவாமல் பயணித்திருக்கிறார் கரிச்சான் குஞ்சு. கணேசனின் வாழ்க்கையில் எதிர்படுகின்ற பெண் பாத்திரங்களாக வருகின்ற பத்மா, சுந்தரி, டாக்டரம்மா, குருடியாக வருகின்ற கோதை போன்ற பாத்திரங்கள் எவ்வித தயக்கங்களின்றி தமது உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்துகிறவர்களாகவே (பத்மா நீங்கலாக) இருக்கிறார்கள். குறிப்பாக சுந்தரியுடன் கணேசன் பகிர்ந்து கொள்கிற நாட்கள் குறித்த பகுதிகள் கத்தி மேல் நடப்பதைப் போன்ற தருணங்கள் நிறைந்தவையாக இருக்கின்றன. குறிப்பாக நாவல் வெளியான காலத்தோடு இதனைப் பொருத்திப் பார்க்கையில் இதனை தெளிவாகவே விளங்கிக்கொள்ள முடியும். கிட்டாவின் வாழ்க்கையில் வந்து போகின்ற பூமா பாத்திரமும் ஏனைய பெண் பாத்திரங்கள் போலவே இருக்கின்றது.

கிட்டா கணேசன் என்ற இரு மனிதர்களுக்குமான இணைப்புப் புள்ளிகள் எனும் விதத்தில் அம்முவின் பாத்திரம் இருக்கின்றது. போலவே அவளுடைய அக்காள் மாச்சியும் கதையின் போக்கும் விரிவும் நிகழ்கின்ற ஒரு புள்ளியாகவே இருக்கின்றாள். சந்தேகத்தைச் சுமந்தே அலையும் அவலம் நிறைந்த ஒரு வாழ்க்கை வலைக்குள் கிட்டா தன்னைச் சிக்க வைத்துவிட்ட ஆற்றாமையும், தனக்குத் தெரிந்தே மாச்சியையும் கிட்டாவினுடையவளாகிப் போன அசூயையும் முழுக்க கிட்டாவின் மீதே நீங்கா வெறுப்பாகப் படிகின்றது.

கிட்டா பாத்திரத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் அவனாலேயே எழுதப்பட்ட கதையாக இருக்கின்றது. தன்னையும் வதைத்து, சார்ந்தோரையும் வதைக்கிற ஒரு அவலமான பாத்திரமாகவே அவன் இறுதி வரை இருக்கின்றான். கிட்டாவின் வாழ்க்கை முழுவதுமாகவே ஒரு நிறைவற்ற வாழ்க்கையாகவே எஞ்சுகிறது. தானும் நிறைவடையாமல் தன்னைச் சார்ந்தவர்களும் நிறைவடையவிடாமல் இருப்பது போன்ற பாத்திர வார்ப்பே அவனுடையது. கிட்டாவின் கதையைப் பொறுத்தவரையில் பூமா ஒருத்தி தான் நிறைவைக் கண்டவளாக இருக்கிறாள். அந்த உறவிலும் கூட அவனுக்குத் தன்னிறைவு கிட்டுவதில்லை. ஒருவேளை இப்பாத்திரத்தின் குணாம்சத்தை உணர்த்துவதற்கெனவே கரிச்சான் குஞ்சு இதற்கு ‘கிட்டா’ என பெயரிட்டாரோ என நினைக்கத் தோன்றுகிறது.

இதற்கு நேர்மாறாக போகித்த வாழ்க்கையும், பின் அதனைத் தொடர்ந்த ’துறந்த’ வாழ்க்கை நிலையையும் சரி விமர்சனங்களற்று ஏற்று வாழ்வின் இழுப்பிற்குத் தன்னை முழுமனதாக ஒப்புவித்த ஒரு மனிதனாகவே கணேசன் இருப்பதைக் காண முடிகிறது. அற, ஒழுக்கப் பார்வைகளைத் தவிர்த்து விட்டுப் பார்க்கையில் தன்னளவிலும் சரி, தன்னைச் சார்பவர்களையும் சரி ஏதோ ஒரு விதத்தில் மகிழ்ச்சிப்படுத்துகிற, நிறைவு கொள்ளச் செய்கிறவனாகவே அவன் கதை நெடுகிலும் வருகின்றான். அவனது வாழ்க்கை முற்றிலும் அவனது இச்சைகளாலும், பெருக்கெடுக்கும் காமத்தினாலுமே வழிநடத்தப்படுவதாகவும் இருக்கின்ற போதிலும், ஒரு நீர்ச் சுழலுக்கு முழுமையாகத் தன்னை ஒப்புவித்த ஒரு எடையற்ற இறகு, சுழிப்பின் ஆழத்திற்குள் இழுபட்டு சிறிது நேரம் கழித்து மேலெழும்பி வருவதைப் போலத் தனது வாழ்க்கையின் எழுச்சிகளையும், வீழ்ச்சிகளையும் ஏறக்குறைய ஒருங்கே பாவித்து வீழ்ந்த ஆழங்களிலிருந்து மேலெழும்பி வருவதாகவே கணேசனின் பாத்திர வார்ப்பு இருக்கிறது. எந்த வித விமர்சனங்களோ அல்லது புகார்களோ இன்றி வாழ்க்கையை வாழ்வதற்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்கிறான்.

இப்படிப்பட்ட ஒரு மேம்பட்ட மனோநிலை எய்த அவனுக்கு உதவுவதாக அல்லது அதனை நோக்கிய உந்துதலாக கதைக்குள் வருகிற மிக முக்கியமான இன்னுமொரு பாத்திரம் காவலர் பசுபதி. மிகுந்த சுவாரஸ்யத்தன்மை கொண்ட பாத்திர இணையராக இவர்கள் இருக்கின்றனர். குருவென கணேசனைக் கருதி தன்னை சீடனாகத் தாழ்த்திக் கொள்கின்ற பசுபதியையே ஒரு கட்டத்தில் தனக்கு ஞானம் போதிக்க வந்த குருவாகப் பாவிக்கத் துவங்குவதாக வளர்கின்ற இந்த அழகிய முரண், கதையோட்டத்திற்கு இன்னும் செறிவு சேர்க்கின்றது. கணேசனுக்குக் கிடக்கின்ற மேலதிகமான தனிமைப் பொழுதுகள் எல்லாமே பசுபதி அவனிடம் பகிர்ந்துகொள்கிற ஆன்மீக விசயங்களை அசை போட்டு தன்னை புடமிடும் காலங்களாக அவன் மாற்றிக் கொள்கிறான். அதுவே அவனுக்குப் பற்றற்ற வாழ்க்கைப் பார்வையையும் வழங்குகிறது.

இன்னும் சொல்லப் போனால் கணேசனின் கதையைப் பொறுத்தவரையில் அவனை வாழ்வின் பெரும்பகுதியை தன்னுள் அமிழ்த்தி மூழ்கடித்த காமம் தான் ஒரு கட்டத்தில் அவனது மீட்சியின் துவக்கப் புள்ளியாகவும் உருமாற்றம் பெறுகின்றது.  அதுவே இப்பாத்திரத்தினுள் நிகழும் மிகப் பெரிய சாயல் மாற்றம். அதுவே ஒட்டு மொத்தமான நமது வாசிப்பு அனுபவத்தின் மைய தரிசனத்தின் ஒரு முக்கியமான பகுதியும் கூட. ஒதுக்கித் தள்ளத் தள்ள ஒட்டிக் கொள்கிற காமம் மையத்தையே வியாபித்துக் கொள்கிறது. மானுட வாழ்வில் காமத்தைக் குகையென உருவகித்துக் கொண்டால் அந்த குகையின் மறுமுனை தான் நம்மை வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு இட்டுச் சொல்லும் எனக் கொள்கிற பொழுது, இருக்கின்ற ஒரே வழி அதன் வழியாகச் சென்று விடுவது தான். குகையை உட்புகுந்து கடந்து விடுவதன் வாயிலாகவே அடுத்த கட்ட நகர்வு அவனுக்குச் சாத்தியப்படுகிறது.

நாவலின் புனைவுவெளி முழுவதும், வருகின்ற கணேசன், கிட்டா உள்ளிட்ட ஆண் பாத்திரங்கள் பலரும் (காவலர் பசுபதி மற்றும் பத்மாவின் கணவர் ஆகிய பாத்திரங்கள் இதில் விதிவிலக்குகள்) தங்களது காமத்தால் உந்தப்படுபவர்களாகவும், அதன் விழைவாக எடுக்கின்ற சில அவசர முடிவுகளும், நடவடிக்கைகளும் அவர்களது வாழ்க்கையின் போக்கையே மடை மாற்றி விடுவதைக் காணலாம். கூடவே உடற்  தேவையால் உந்தப்படுகின்ற பெண்களையும் நாவலுக்குள் நாம் மீண்டும் மீண்டும் சந்திக்கின்றோம்.

கட்டற்ற பாலியல் வேட்கை நிறைந்த மனிதர்கள் கதை வெளியெங்கும் விரவிக் கிடக்கின்றனர். மிக முக்கியமாகக் காமத்தை ஆண்கள் கையாளுகின்ற விதத்திற்கும், அதையே பெண்கள் கையாள்கின்ற விதத்திற்கும் இருக்கின்ற நுட்பமான வேறுபாட்டைப் பதிவு செய்து அதை உளவியல்பூர்வமான விசாரணைக்கும் உட்படுத்துகிறது பசித்த மானிடம். ஆண்களைப் பொறுத்தவரையில் மையப்பாத்திரங்களாக வருகின்ற கிட்டா மற்றும் கணேசனுக்கு இடையே கூட இந்த அணுகல் மிக அதிகமான வேறுபாடுகளுடன் வெளிப்படுவதைப் பார்க்கலாம் . இருவரையும் காமம் ஒரு தணியாத தாகமாகத் துரத்துகிறது. கிட்டா அதற்கு ஏங்கியே காய்கின்றான். கிட்டா தனது காமத்தை தன் வாழ்க்கையின் ஏறக்குறைய எல்லா தருணங்களிலுமே அதிகாரஞ் செலுத்தக்கூடிய ஒரு கருவியாகவே பாவித்து அதனைப் பெண்கள் மீது பிரயோகிக்க எத்தனித்து அதன் வழி தனது மேலாதிக்கத்தை நிறுவிட முயல்கின்றான். தொடர்ந்து அதில் தோற்றும் போகிறான். அத்தொடர் தோல்விகளே அவனது கர்வத்தை ஊதித் தள்ளி அவனையும் சாய்க்கிறது.

கணேசன் மித மிஞ்சிய போகத்திற்குள் அமிழ்கின்றான். கிட்டாவைக் காட்டிலும் அதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாகவே அவனுக்கு வாய்க்கின்றன. இருப்பினும் ஒரு தருணத்தில் கூட அவன் தனது காமத்தை அதிகாரம் செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகவோ, அதன் வழியாக தன்னோடு உறவு கொள்பவர்களை மேலாதிக்கம் செய்யவோ முயலாதவனாகவே இருப்பதைப் பார்க்க முடிகிறது. என்ன தான் வெளிப் பார்வைக்கு அவன் காமப் பிசாசாகத் தெரிந்தாலும், தனது தொழுநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் முகமாகச் செல்லும் மருத்துவமனையின் வெளிநாட்டு கன்னியாஸ்திரிகளைத் துவக்கத்தில் பக்திப் பரவசத்தோடு காணும் கண்கள் நாளாவட்டத்தில் பழைய பழக்கத்தில் காமப் பார்வை வீசத் துவங்கியதும் துணுக்குற்று, வெட்கி சிகிச்சையையே துறந்து ஓடுகிறவனாகவும் இருக்கின்றான்.

பெண் பாத்திரங்களைப் பொறுத்தவரையில் உலகின் கற்பு நெறி பேசும் கண்களுக்கு அவர்கள் மீறுபவர்களாகத் தெரிந்தாலும், ஒரு கட்டத்தில் அவர்கள் சூழல் யதார்த்தம் உணர்ந்து போதுமென சட்டென முடிவெடுத்து சில உறவுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கத் தயங்காதவர்களாக, அந்த அளவிற்கு சுயதெளிவு மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள். இத்தெளிவு கணேசனைத் தவிர கதைவெளிக்குள் வருகின்ற ஏனைய ஆண் பாத்திரங்களுக்கு இல்லாத ஒரு குணாதிசயமாக இருக்கிறது.

பாசாங்குத்தனங்கள் துளியுமில்லாத, சமூக அறங்களின் கட்டுப்பாடுகளினின்று தம்மைத் துண்டித்துக் கொண்ட அல்லது விடுவித்துக் கொண்ட பாத்திரங்களையே நாம் மீண்டும் மீண்டும் பசித்த மானிடத்திற்குள் சந்திக்க நேர்கிறது. பாத்திரங்களுக்கிடையேயான உறவுகள் மிக அகவயமானதாகவும், ஒழுக்கலாறுகள் குறித்த கவலைகள் அதிகம் அற்றதாகவும் இருக்கின்றது. இப்படியான ஒரு எழுத்துமுறையும், கதைசொல்லலும், பாத்திரப்படைப்பும் இன்றளவிலும் புரட்சிகரமானது என்றே அடையாளப்படுத்தத் தக்கதாக இருக்கின்றது. காலத்தின் பெருநிலத்தில் எண்ணிக்கை என்பது எப்பொழுதும் ஒரு பொருட்டே அல்ல என்பதற்குப் பசித்த மானிடம் இலக்கியப் பரப்பிற்குள் அடைந்திருக்கும் இடம் சான்று பகரும் என்றென்றும். தலைமுறைகளைத் தாண்டி ஒரு தனித்துவமான படைப்பாக இது வாசகனோடு மிகக் காத்திரமான உரையாடல்களை இன்னும் பல்லாண்டுகள் நிகழ்த்தும்.


  – வருணன்

[ads_hr hr_style=”hr-dots”]

[tds_info]

நூல் : பசித்த மானிடம் (நாவல்)

ஆசிரியர்:  கரிச்சான் குஞ்சு

பதிப்பகம் : காலச்சுவடு

விலை : ₹325

[/tds_info]

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.