Wednesday, Aug 10, 2022
Homeபடைப்புகள்நூல் விமர்சனம்மக்சீம் கார்க்கியின் “தாய்” – நாவல் மதிப்பாய்வு.

மக்சீம் கார்க்கியின் “தாய்” – நாவல் மதிப்பாய்வு.


தாய் – நாவலின் முதல் பக்கத்தின் முதல் வரியே, ‘உலகம் முழுவதும், பைபிளுக்கு அடுத்தபடியாக மொழிபெயர்க்கப்பட்டு கோடிக்கணக்கானவர்களால் வாசிக்கப்பட்ட நாவல்’ என்பதாக, பிரமிக்க வைத்து, சிலிர்க்க வைக்கிறது!!

இந்நாவலின் முதல் பதிப்பு 1904ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நிர்க்கதியான வாழ்க்கை நிலையையும், அவர்களது உழைப்பு, முதலாளிகளாலும், ஆட்சியாளார்களாலும் சுரண்டப்படுதலையும், நேர்மையற்ற அந்த ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவே எப்போதும் செயல்படும் அரசு அதிகாரிகள் மற்றும் வழக்கு மன்றங்களின் சார்பு நிலையையும், இந்நாவலில் இடம்பெறும் காட்சிகளும், கதாபாத்திரங்களும் கண்முன்னே நிறுத்துகின்றன.

அழுக்குகளும் சேறும் சகதியும் சூழ்ந்த குடியிருப்புகள், அங்கேயே பிறந்து எந்தவிதமான நோக்கமுமின்றி வளர்ந்து, வாழ்க்கை முழுவதும் ஆலையில் முதுகு நோக வேலை செய்து, அன்றாடம் குடித்து, தம் மனைவியோடும் பிள்ளைகளோடும் சண்டைகளிட்டு, அவர்களை அடித்து உதைத்து, இப்படியான அழுக்கு வாழ்விலேயே ஊறிப்போய் எந்தவிதமான மாறுதலையும் ஏற்படுத்திக்கொள்ளும் உணர்வற்று, இறுதியில் நோயோடு மடியும் தொழிலாளர் வர்க்கம் குறித்து தொடக்கத்தில் பேசுகிறது இந்நாவல்.

ஒரு பெண், தன்னை மணம் புரிய பெண் கேட்டு வரும் எவனாவதொரு ஆடவனை மணந்துகொண்டு, பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு வாழ்நாள் முழுவதும் அவனுக்குப் பணிவிடைகள் செய்யவேண்டும் என்பதே அவளுக்கு விதிக்கப்பட்டது என்ற  பிற்போக்கு எண்ணமுடைய தகப்பனுக்கு மகளாகப் பிறந்த பெலகேயா நீலவ்னா தான் இந்நாவலின் நாயகி – தாய்…!!

முரடனும், குடிகாரனுமான ஆலைத்தொழிலாளி மிகயீல் விலாசவ்வுக்கு மனைவியாகும் நீலவ்னா, தன் கணவன் குடியால் குடல் கெட்டு இறக்கும்வரை அவனிடம் அடி உதைகளோடு பல கொடுமைகளை அனுபவிக்கிறாள்.   இவர்களது ஒரே மகன் பாவெல் விலாசவ். தனது   பதினான்கு வயதில், தன்னை உதைக்க எத்தனிக்கும் தன் தந்தைக்கு, கையில் சுத்தியலை தூக்கிக்காட்டி ”என்னைத் தொடாதே!” என்று தடுக்கிறான்.

நீலவ்னா, தனது முரட்டுக்கணவன் மரணப்படுக்கையில் கிடக்கும்போதும், மருத்துவரின் சிகிச்சைக்கு அவனை இணங்கச்சொல்லி அவனிடம் கண்ணீரோடு மன்றாடுகிறாள்.  அவனோ வழக்கமான தனது முரட்டுதனத்தோடு மறுத்து, இறந்துபோகிறான்.

தன் தகப்பனின் மரணத்தால் சற்றும் கலக்கமடையாத பாவெல், முதல்முறையாக மது அருந்திவிட்டு வீடு வந்து, வாந்தி எடுக்கும்போது, அமைதியாகக் கண்ணீர் சிந்தும் தாய் நீலவ்னா, “நீ குடிக்க ஆரம்பித்தால், என்னை எப்படிக் காப்பாற்றுவாய்..?  உன் அப்பா உனக்கும் சேர்த்துக் குடித்துத்தீர்த்துவிட்டார்… என்னைப் படாத பாடுபடுத்தினார்…  நீ குடிக்காதே… உன் தாய் மீது கொஞ்சமேனும் பரிவு காட்டக்கூடாதா…?”  என்று துக்கத்துடன் மென்மையாகக் கேட்கிறாள்.

தனது தாயின் அந்த வருத்தம் தோய்ந்த அன்புமிக்க வார்த்தைகளால் தன் நிலை உணர்ந்து தெளியும் பாவெல், ஒழுங்காக ஆலைப்பணிக்குச் செல்வது, பணியிலிருந்து வீடு திரும்பிய பிறகு வாசிப்பது என, நாட்கள் செல்லச்செல்ல  நேர்மறையான மாற்றத்துக்கு உட்படுகிறான்.  தன் மகனது மாற்றத்தை நுணுக்கமாகக் கவனிக்கும் தாய் நீலவ்னா, மகிழ்ச்சியடைந்தாலும்,  தன் மகன் தடை செய்யப்பட்ட புத்தகங்களை எங்கோ சென்று எடுத்துக்கொண்டு வந்து வாசிக்கிறான் என்றறிந்து சற்று கவலைக்கும் உள்ளாகிறாள்.

தனது மகனை சந்திக்க, இரவு வேளைகளில் தன் வீட்டுக்கு வரும் அவனது புதிய தோழர்களை இன்முகத்தோடு எதிர்கொள்ளும் தாய், வாழ்நாள் முழுதும் தம் உடல் வருத்தி உழைப்பை மட்டுமே கொடுத்து, அதற்கான பலனை கொஞ்சமும் அனுபவிக்காமல் முதலாளிகளால் முற்றிலும் சுரண்டப்பட்டு மடியும் தொழிலாளர்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்யவேண்டிய புரட்சிகரமான பணிக்கு தங்களை அர்ப்பணித்துக்கொள்ளும் அத்தோழர்களது உயர்ந்த நோக்கத்தை, அவர்களது பல்வேறு உரையாடல்கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்கிறாள்.  தானும் அவர்களது உரையாடல்களில் பங்குகொள்வதோடு அந்த புரட்சிகரமான செயல்பாடுகளுக்கு தன் மகன் பாவெல் ஒரு தலைவன் போல விளங்குவ்தை அறிந்து பூரிப்பும் பெருமையும், சிறிது அச்சமும் கொள்கிறாள்!!  அத்தோழமைகளில் ஒருத்தியான சாஷா, தன் மகனை விரும்புவதையும் தாய் புரிந்துகொள்கிறாள்.

அவளது வீட்டுக்கு வருகிற தோழர்கள் தடை செய்யப்பட்ட புத்தகங்களை கொண்டு வருவதும், விவசாயிகளோடு நேரடித்தொடர்பில் இருக்கிற சில தோழர்கள் அப்புத்தகங்களையும், பாவெலும் அவனது தோழர்களும் அவ்வப்போது எழுதித் தயாரிக்கும் புரட்சிகரமான வாசகங்களைக் கொண்ட துண்டுப்பிரசுரங்களையும் எடுத்துச் செல்வதுமாக இருக்கிறார்கள்.  இவர்களது செயல்பாடுகளை சந்தேகிக்கும் போலீசார் அவ்வப்போது பாவெல் வீடு புகுந்து சோதனை என்ற பெயரில் மிரட்டல் விடுத்துச் செல்வதும் தாய்க்குப் பழக்கமாகிப் போகிறது.

தன் மகன் முதல் முறை கைது செய்யப்பட்ட பிறகு, தோழர்களின் துண்டுப்பிரசுரங்களை ஆலைக்குள் பணியில் இருக்கும் தொழிலாளர்களிடம் கொண்டு சேர்க்க, அங்கே உணவு எடுத்துக்கொண்டு போய் விற்கும் மரியாவுக்கு உதவியாள் போல, அவளுடன் சென்று அப்பணியை நிறைவாகச் செய்கிறாள், தாய் நீலவ்னா. இச்செயலால், தன் மகனுடைய தோழர்களின் வியப்புக்கும் பாராட்டுதலுக்கும் உள்ளாகிறாள்.

பாவெலும் அவனது தோழன் அந்திரேய்யும், விடுதலையான பிறகு, மற்ற தோழர்களுடன் சேர்ந்து தங்களது விழிப்புணர்வு செயல்பாடுகளின் ஒரு பகுதியாக மே தினக்கூட்டத்தை நடத்துகிறார்கள்.  பாவெலும், அந்திரேய்யும் கொடி பிடித்து முன் நடத்திச் செல்லும் எழுச்சிமிகு அத்தொழிலாளர் கூட்டத்தில் தாயும் அவர்களுடன் செல்கிறாள்.  அவ்விரு தோழர்களும் அங்கே போலீசாரால் கைது செய்யப்படுகிறார்கள்.   தாய் நீலவ்னாவும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலையால், பாவெலின் தோழன் நிகலாய் இவானவிச் அவளை தனது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான்.

அங்கே, நிகலாய்யின் சகோதரி சோபியாவின் அறிமுகம் கிடைப்பதோடு, தாய் நீலவ்னா தன் வீட்டில் ஏற்கனவே சந்தித்த நதாஷா, மற்றும் சில தோழர்களையும் மீண்டும் சந்திக்கிறாள். துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டுக்கொடுக்கும் லுத்மீலாவோடும் மேலும் சில தோழர்களோடும் அறிமுகமாவதுடன், பயணங்கள், தோழர்களோடு சந்திப்புகள் என, அவர்களது செயல்பாடுகளில் முழுமையாகப் பங்கேற்கிறாள்.

தோழர்கள் வேண்டாம் என்று தடுத்தாலும் வலியச் சென்று அத்தோழர்களின் புரட்சிகரமான பணிகளில் பங்கேற்கும் தாய், தனது மகன் சிறையில் இருப்பதால் அது குறித்து சற்று வருந்தினாலும், அவன் ஒரு உன்னதமான பணிக்காகவே சிறையில் இருக்கிறான் என்பதில் பெருமிதம் கொள்வதோடு, தானும் அப்பணியில் ஈடுபட்டுள்ளதை எண்ணி மகிழ்ந்து கொள்கிறாள். விவசாயத்தோழன் ரீபின், போலீசாரால் அடித்து உதைக்கப்பட்டு கொண்டு செல்லப்படும்போது, தன் மகனைப்போல அவனைப் பாவித்து மவுனமாகக் கண்ணீர் சிந்தும் தாய், பிறகு தோழர்களோடு அவன் சிறையில் இருந்து தப்பிக்க உதவுகிறாள்.

இறுதி விசாரணைக்காக பாவெலும், அவனது தோழர்களும் வழக்கு மன்றத்தில் முன்னிறுத்தப்படுகிறார்கள்.  அங்கே, தனது மகன் பாவெலின் தைரியமும் உறுதியும் மிகுந்த உரையைக் கேட்டு மனமகிழ்கிறாள், தாய் நீலவ்னா.

வழக்கு மன்றத்தில், தன் மகன் பாவெல் பேசியவற்றை அச்சிட்டு, அதை தொழிலாளர்களிடமும், மக்களிடமும் கொண்டு சேர்க்கவேண்டிய பணியை மிகுந்த விருப்பத்தோடு ஏற்கும் தாய் நீலவ்னா, லுத்மீலாவின் உதவியோடு அவ்வுரையை அச்சுப்பிரதிகளாகப் பெற்றுக்கொண்டு இரயில் நிலையத்துக்குச் சென்று காத்திருக்கும்போது, உளவாளி ஒருவனால் அடையாளம் காணப்பட்டு போலிசிடம் பிடிபடும் நெருக்கடியான சூழலில், அப்பிரதிகளை அங்கேயே மக்கள் முன்பு வாரியிறைத்து, ”தனது ஆன்மாவை விற்றுவிடாத ஒரு தொழிலாளியின் நேர்மை நிறைந்த பேச்சுதான் என் மகனின் பேச்சு.  அந்த வாசகத்தின் தைரியத்தைக் கொண்டே நீங்கள் அதை அறிந்து கொள்வீர்கள். ஜனங்களே! ஓரணியில் பலத்த மாபெரும் சக்தியாக ஒன்று திரளுங்கள்!  எதைக்கண்டும் நீங்கள் பயப்படாதீர்கள்!  இப்போது நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையை விட எதுவும் கொடுமை வாய்ந்ததாக இருக்கப்போவதில்லை…” என்று குரல் உடைந்து கதறுகிறாள்.  இதனால் மேலும் ஆத்திரமடையும் போலீஸ் தாய் நீலவ்னாவை அடித்துத் துன்புறுத்தி இழுத்துச்செல்வதோடு இந்நாவல் முடிவுறுகிறது.

முன்னேயெல்லாம் திருடினான் என்பதற்காக மனிதர்களைச் சிறையில் தள்ளினார்கள்;  இப்போதோ நியாயத்தை எடுத்துச் சொன்னால் உள்ளே போடுகிறார்கள்.” என்ற சாப்பாட்டுக்காரி மரியாவின் வார்த்தைகள் இன்றைய காலச்சூழலுக்கும் பொருந்துகின்றன.  மேலும், “பெண்ணாகப் பிறந்தாலே இந்த கழிசடைப் பிழைப்பு தான்!  தனியாய் வாழ்வது சங்கடமென்றால், எவன் கூடவாவது வாழ்வது அதைவிடத் தொல்லையாய் இருக்கிறது!”  என்ற அவளது உரையாடலில் அடித்தட்டுப் பெண்களின் அவலமான வாழ்க்கை நிலையை நாவலாசிரியர் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நாவலில்  மனதைத்தொட்ட மற்றொரு கதாப்பாத்திரம், தாய் சந்திக்கும் முஜீக் என்று குறிப்பிடப்படும் ருஷ்ய விவசாயி ஸ்திபான் என்பவனின் மனைவி, தத்யானா. மோசமான வாழ்க்கைச்சூழலால் தன் இரு குழந்தைகளையும் இழந்த தத்யானா, சிறை சென்ற தோழன் ரீபினைப் பற்றி அறியும்போது, “கல்யாணம் பண்ணுவதில் அர்த்தமே இல்லையென்று தான் நான் சொல்வேன்.  எந்தவித இடைஞ்சலுமின்றி நல்வாழ்க்கைக்காக போராடவேண்டுமெனில் தனியாக இருந்தால்தான் ஒரு மனிதன் சத்தியத்தை நாடி முன்னேறிச்செல்ல முடியும்” என்று கூறுகிறாள்.

”நான் நேசிக்கும் இந்த உலகத்து அருமையான ஜனங்களுக்கு பரம எதிரியானவரிடம் தான் என் மகன் வளர்கிறான்.  என் மகன் எனக்கே எதிரியாகக் கூட வரக்கூடும்.  அவனை நான் பார்த்தே எட்டு வருடங்கள் ஆகின்றன!” என்று தான் பெற்ற மகன் மற்றும் தன் கணவன் பற்றி தாய் நீலவ்னாவிடம் பகிர்ந்துகொள்ளும் லுத்மீலா மற்றொரு புரட்சித்தாயாக மனதில் உயர்ந்து, கண்கலங்க வைக்கிறாள்.

வெவ்வேறு குடும்பப் பின்னணியிலிருந்து வரும் இந்நாவலின் கதாப்பாத்திரங்கள், உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தை விழிப்புணர்வடையச்செய்து உயர்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுக்காக ஒன்றிணைந்து செயல்பட தமது வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள்.

தாய் நீலவ்னா போலீசிடம் பிடிபடுவதோடு நிறைவடையும் நாவல், நாம் எதிர்பாரா வண்ணம் சட்டென முடிந்துவிட்டது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

உயர்ந்த கொள்கைக்காக, நேர்மையான புரட்சிப்பாதையில் பயணிக்கத் துணியும் ஒரு இளைஞனின் எளிய, ஏழைத்தாயான நீலவ்னா, தனது வாழ்க்கையில் பல்வேறு உடல், மன வேதனைகளுக்கு உள்ளாகி, எந்தவொரு சுகத்தையும் அனுபவித்திராதபோதும், ஒரு சராசரிப் பெண்ணாக உலகாயதமான ஆசைகளுக்கும் விருப்பங்களுக்கும் ஆட்படாமல்,  தன் மகன் ஏற்ற பாதையின் நோக்கத்தைப் புரிந்துகொள்வதோடு, தன் வயதையும் சிரமங்களையும் பொருட்படுத்தாமல், தானும் ஒரு புரட்சிப்பெண்ணாக உருமாறித் தன் மகனின் புரட்சிப்பாதையில் செல்லும் தியாகத்தாயாக இந்நாவலில் வாழ்ந்துள்ளாள்!!

இந்நாவலை, மிக இயல்பான காட்சிகளால் வடிவமைத்துள்ள புரட்சியாளார் மக்சீம் கார்க்கியின் எழுத்து பிரமிப்பூட்டுவதாக உள்ளது.   தாய் – நாவலின் கதாப்பாத்திரங்கள் அனைவரையுமே நம் வாழ்வில், நம்மோடு பயணிப்பவர்கள், உலாவுகிறவர்கள் போல, உயிர்ப்பாக வடித்திருக்கிறார், மக்சீம் கார்க்கி!!  ஒவ்வொரு அத்தியாயமும் நம் கண்முன்னே நடப்பதான உணர்வை, வாசிக்கும்போது ஏற்படுத்துகிறது!

ஏறக்குறைய நூற்றுப்பதினைந்து வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டு வெளிவந்துள்ள இப்புதினத்தில் இடம்பெறும் உரையாடல்களும், காட்சிகளும், இன்றைய காலச்சூழலுக்கும் பொருந்துவதாக இருப்பதோடு, உழைக்கும் மக்களின் போராட்டம் மிக்க வாழ்வியலையும், சமூக அவலங்களையும் வாசிப்போரின் உள்ளத்தைத் தொடுமளவு உணர்த்துகிறது.

புரட்சியாளர் லெனினின் பேரன்பைப் பெற்ற மக்சீம் கார்க்கியின் இந்த அற்புதமான படைப்பை, தமிழில் மிக எளிய நடையில்  உயிரோட்டத்துடன் மொழிபெயர்த்துள்ள திரு. ரகுநாதன் அவர்களும் பாராட்டுக்குரியவர்!!


  • சுமதி அறவேந்தன்

நூல் :  தாய் (மொழிபெயர்ப்பு நாவல் )

ஆசிரியர்:  மக்சீம் கார்க்கி

தமிழில்:  தொ.மு.சி . ரகுநாதன்

விலை : ₹350

பதிப்பகம் :  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் / கவிதா பதிப்பகம்

பகிர்:
Latest comments

leave a comment

error: Content is protected !!