“மகோனதப் பூக்கள் மலர்ந்த ஞாபகக்குகை: வியாகுலனின் தாய்அணில்”


 புகை வண்டி பயணத்தின் காட்சி  அடுக்குகளை படிமங்களின் கடின வழியிலிருந்து விலகி சுனை நீராக அள்ளிப் பருகும் எளிமையின் செறிவான மொழியில் அமைந்து ஒரு வசீகர ரேகையை நமக்குள் இழையோட விடுகிறது  வியாகுலனின் “தாய்அணில்”. அந்த வகையில் இக்கவிதைத் தொகுப்பு முந்தைய தொகுப்புகளிலிருந்து மாறுபட்ட எழுத்து வகைமை வழி நம்முள்  சீவிய பாளை நீரின் சில்லிப்பாக இறங்குகிறது. இவரது குவியும் அகவயம் உருவாக்கும் சொற்சித்திரங்கள் வாசகனின் நிலப்பரப்பை வெகு எளிதாக பற்றிப் படர்கிறது. ஈர மனப்பரப்பிலிருந்து சிருஷ்டி பெறும் கவிதை விதைகள் நம்மை அழைத்துச் செல்லும் வெளி நமக்கு அந்நியமானதல்ல. அதனால்தான் இக்கவிதை உலகோடு கைகோர்த்து நம்மால் இயல்பாக பயணிக்க முடிகிறது. வேற்று மொழிச்சாயல்கள் படியாத எழுத்துக்கள்.

கவிதை புனைய அவசியமான தனிமை உணர்வை தனக்குள் காப்பாற்றி வருவதே இவர் கவிதைகள் நீர்த்துப் போகாமல் வெளிப்படக் காரணம். நகரத்தார் நிலத்தின் பால் மர வாசமும், காவிரி வண்டல் மண்ணின் விதை நெல் வாசமும் சுமந்து பயணிக்கும் பயணி இவர்; அந்நிலம் சார்ந்த மொழியும், மனமும் இவருடையது. நகர்புரத்தின் இயந்திர சத்தங்களிலிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட உலகிலிருந்தே இயங்குகிறது இவரது எழுத்துக்கள். மொழியை உருக்கி புதிதாக்கத் தெரிந்திருக்கிறது இவருக்கு.தாய் அணில் - கவிதைத் தொகுப்பு

வாழ்வெனும் பொறிக்குள் சிக்கிக் கொள்ளாமல் புறவயப்பட்ட நிகழ்வுகளை காட்சிப் பொருளாக்கி கடந்து செல்லும் கலை மனம் வியாகுலனுடையது. “எந்த ஒரு செயலிலும் செயல்படுபவனின் பிரதான உத்தேசம் மனக்கருவை வெளிப்படுத்துவதே ஆகும்” என்ற தாந்தே வரிகளின் பொருளில் இவர் வெளிப்படுத்தும் மனக்கருவின் சொற்கள் வாசிப்பவனின் சுயங்களோடு முயங்கும் தருணங்கள் அற்புதமானவை. இயற்கையோடு உறவாடியபடி தான் நேசிப்பவற்றையும், தன்னை அலைக்கழிப்பவற்றையும் அநாயசமாக தனது எழுத்துக்குள் கொண்டு வந்துவிடுகிறார் வியாகுலன்.

முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல், மூக்குத்திப் பூ, கரிசாலை, வேம்பு இலைகள் இவற்றுள் உள்ள தனிமங்கள் இடம்பெயர்ந்து, பேரன்பின் குறியீடான “தாய்அணிலின்” கீச்சொலி வழியாக நமக்குள் கடத்தப்படுகிறது. மூதாதையர்களோடு கொண்ட பந்தத்தை சுமந்தபடி சிறிய வேப்பமரத்தை அடர்வன உலகமாகக் கொண்டு, உண்டு, உறங்கி, இணையோடும், குட்டிகளோடும் துரத்தி விளையாடும் “தாய்அணிலின்” வாசனையை நமக்குள்ளும் உணரச் செய்துவிடுகிறது தொகுப்பில் உள்ள கவிதைகள்.

“நான் ஒரு உடும்பு / ஒரு கொக்கு / ஒரு ஒன்றுமே இல்லை” என்ற நகுலன் வரிகளோடு திறக்கிறது வியாகுலன் உலகு. முதல் கவிதையில், தன் குட்டியைத் தேடித் தவிக்கிற தாய் அணிலின் அலைவுறலும் கீச்சொலியும் துல்லியமாக காட்சிப் பெறுகிறது. இந்த அலைவுறலும், தேடலுமே தொகுப்பின் முழுமைக்குமான அடி இழையாக ஓடுகிறது.

“திண்ணை / தூண் / அட்டில் / முற்றம் / படிகட்டு / சாளரம் / வாயில் / மாடமென அணில் அலைவுறும் நிலவெளி எங்கும் நம்மையும் அலைவுறச் செய்து விடுகிறது கவிதையில் பொதிந்துள்ள உணர்வு அலை. நம் வீட்டு நடு முற்றத்தைச் சுற்றிலும் மகோகனி மர ரீப்பர்களில் கருப்பு, வெள்ளை புகைப்படங்களாகத் தொங்கும் வாழ்ந்து முடித்த முன்னோர்களின் நரம்பு புடைத்து முதிர்ந்த கை ரேகைகளின் சாயல் நமக்குள்ளும் படர்ந்துவிடுகிறது; பனை ஓலை நரம்புகளிலிருந்து அசையும் சாமைகளாக மூதாதையர் உலகம் நம் உடலெங்கும் வியாபித்து படலாக பின்னிக் கொள்கிறது இக்கவிதையின் வாசிப்பு வழி.

விபரீத பொறிக்குள் சிக்கி நகரும் வாழ்வைக் கடத்த இறந்த காலத்தின் பசுமைப் பரப்பின் உறைந்த வெளியைக் காட்டுகிறது “சென்ற பிறவியின் பெருங் கலைஞன்” கவிதை.

“தென்னந்தோப்புகளும் பூ சாகுபடியும்

விரியும் நிலப்பரப்பில்

மீண்டும்

அவனது

கற்பனை விரிகிறது.

ஆலங்கட்டி மழை பொழிந்தது என்று

ஆரம்பித்தான்”

கொடூர பல் சக்கர இடுபாடுகளிடையேயும் ஒரு ரோஜாவை மலரச் செய்துவிடும் மகத்தான சூஃபி கலைஞன் “பஷீரின்” உரைநடை வீச்சு இங்கு கவிதைத் தெறிப்பாகியுள்ளது.

பதின்ம வயதின் ஞாபக அடுக்குகள் இளமைக் குகையின் வசீகரம் சிறிதும் மாறாமல் காட்சிப் படுத்தப்படுகிறது ‘அது நிலவு’ கவிதையில்.

கானகத்தைத் தொலைத்த யானையையும் இத்தொகுப்பில் காணமுடிகிறது. குறிப்பிட்டு சொல்லக்கூடிய மற்றுமொரு கவிதை “ரோஸீக்கு மாத்திரை கொடுக்க வேண்டும்” என்ற கவிதை. அந்தக் கவிதை இப்படி முடிகிறது:

“ரோஸ் பேரிளம் பெண் – அவளது

செய்கைகள் குழந்தைகளினுடையவை.

ரோஸ் குழந்தை – அவளது

செய்கைகள் பேரிளம் பெண்ணுடையவை

ரோஸ் முதியவள் – அவளது

கண்கள் மட்டும் குழந்தைகளினுடையவை”

வாசித்து முடிக்கையில் தேன் சிட்டுக்களை தன் கூட்டுக்குள் அடைத்த உடைமர முட்கள் வாசிப்பு வெளியில் தைக்கிறது.

வதை நிலமும், தாவரங்களாய் வதங்கிப் போன மனிதர்களும், அமாவாசை திருடனும், பச்சை மண் மணந்திருக்கும் வீடும் இத்தொகுப்பில் காட்சிகளாய் விரிவுபடுகின்றன. இந்த மனிதர்கள் நம் எல்லோரையும் சுற்றி நிழலுருக்களாக அலைபவர்கள். வெளி உல்கில் அலைவுறும் மனித உருவங்களை மட்டும் தரிசித்து தஞ்சை மண்ணிலும் தஞ்சை வெளியை அறிந்திராத ‘மரியா’ போன்று வாழ்ந்திருக்கும் பெண்களின் உலகம் நம் முன் விரியும் போது சற்று சுவாசம் அடைபடத்தான் செய்கிறது.

“நேசிக்காமல் இருப்பதென்பது ஒரு துரதிருஷ்டம். இன்று நாம் எல்லோரும் இந்த துரதிருஷ்டத்துக்கு இரையாகிக் கொண்டிருக்கிறோம்”, என்ற ‘ஆல்பர் காம்யூ’வின் வரிகளாடு துவங்கும் ‘திருமதி & திரு ‘ கவிதை, சிதைந்து போன மின்சார  ரயிலின் வழித்தடம் போலான வாழ்வை எழுதிப் போகிறது.

“விடியப் போகிற அந்தக் காலையில்

ரயில் நிலையத்திலிருந்த

ஆலமரத்திலிருந்து

கீச்சிட்டபடியே பறவைகள் எழுந்தன”.

க்ளிம்ட் அந்தக் காட்சியை இசைக்க விரும்பினான்.

‘மொசார்ட் அந்தக் காட்சியை வரைய விரும்பினான்’

எனும் மற்றொரு கவிதை அதீத கற்பனையின் காட்சியுருவாக மலர்கிறது.

‘சாவு விளைச்சல்’-கவிதையில் பாலை வெக்கை உருகி ஓடும் வெள்ளாமைக் காட்டிலிருந்து தப்பி மறைகிறது தவிட்டுக் குருவியொன்று.

ரம்மிய கவிதை வீச்சுக்களின் வாசனைப் பரப்பை படிம முடிச்சுக்களின் இறுகிய மொழி ஆக்கிரமித்துள்ள காலத்தில் மலர்ந்துள்ளது “தாய் அணில்”. எளிய சிக்கலில்லாத மொழி நடையும், உள்ளார்ந்த தத்துவ நோக்கும், இசை ஒழுங்கும் கொண்டவைகள் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள். தேவதச்சனின் ‘யாருமற்ற நிழல்’, சுந்தரராமசாமியின் ‘பசுவய்யா கவிதைகள்’, சுகுமாரனின் ‘பயணியின் சங்கீதம்’, ஞானக்கூத்தனின் ‘அன்று வேறுகிழமை’, கல்யாண்ஜியின் ‘புலரி’, தேவதேவனின் ‘மின்னற்பொழுதே தூரம்’ வரிசையில் மலர்ந்துள்ளது வியாகுலனின் ‘தாய் அணில்’.

ஒளி விடும் ஓடை தன் தடம் மாறுவதில்லை. அத்தடத்தின் வழியில் ஒரு பேரிளம் பெண்ணின் முத்தமாகவோ, மூதாதை கிழவியின் தொய்வுற்ற முலை அணைப்பாகவோ, பால் வாடை வீசும் குழந்தையின் நெஞ்சுத் தழுவலாகவோ நம்மை அணைத்து தன் வெப்ப ரேகைகளை படரவிடுகிறது “தாய்அணில்”.


  அறிவழகன்

[ads_hr hr_style=”hr-dots”]

[tds_info]

நூல் : தாய்அணில் ( கவிதைத் தொகுப்பு)

ஆசிரியர்:  வியாகுலன்.

விலை : ₹150

வெளியீடு : அனன்யா

தொடர்புக்கு :

வியாகுலன்

கைப்பேசி: 9442346504

[/tds_info]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.