நட்சத்திர கண்கள் மிதந்தலையும் வனத்தின் கதை.


தைகள் காலந்தோறும் சொல்லப்பட்டும், எழுதப்பட்டும் தன்னைத்  தொடர்கின்றன. எழுதுபவன் யார்? ஏன் எழுதுகிறான்? எழுதி என்ன தான் ஆகப்போகிறது?. இவை எல்லாம் எழுதுகிறவனின் விழிப்பு மனம் கேட்கும் கேள்விகள். ஆனால் ஆழ் மனம் அறியும் எழுதாமல் தன்னால் இருக்க முடியாது என்பதை. எழுதி வாழ்க்கையின் இடிபாடுகளையும், துயரங்களையும் அறிவதும், அறிந்தவற்றை கடத்துவதுமே தன் வேலை என்பதை தெரிந்து கொண்ட பிறகு எழுதாமல் இருக்க முடியுமா? இது ஒருவிதத்தில் வரமா? சாபமா? என எழுத்தாளனால்  அறிய முடியாத நூதனம்.வணிக எழுத்தில் இயங்குகிறவர்களுக்கு பெரும் வரமாக இருக்கிறது எழுத்து.. பணம், புகழ் சேர்க்கும் கருவியாகவும் ஆகிறது எழுத்து. ஆனால் நவீன வாழ்க்கையின் சிக்கல்களை எழுத நினைப்பவர்களுக்கு அப்படியில்லாது வேறு மாதிரி ஆகிவிடுகிறது. தன் முன் விரிந்து கிடக்கும் சாபத்தின் நிழல் நீண்டு நெடுந்தூரம் சென்று கொண்டேயிருக்கிறது. என்ன தான் செய்வது எனும் கேள்விக்கு எழுதித்தான் கடக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த வழியுமில்லை என்பதைக் கண்டறிந்த எழுத்தாளர்கள் தன்னுடைய சொற்கள் கொண்டு எழுதிக்கடக்கிறார்கள் சாபத்தை. முப்பது வருடங்களுக்கும் மேலாக எழுத்தியக்கத்தில் பயணிப்பதற்கும், மொழிச்செயல்பாட்டில் உக்கிரமாக இயங்குவதற்கும் பெரும் துணிச்சல் வேண்டும். அப்படியான துணிச்சல்காரர்தான் உதயசங்கர். யாவர் வீட்டிலும் எனும் சிறுகதைத் தொகுப்பில்  துவங்கி இதுநாள் வரையிலும் நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகளை எழுதியிருக்கிறார். இப்போது வெளிவந்திருக்கும் மிகமுக்கியமான தொகுப்பு “துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலர்”. இந்த தொகுப்பில் இடம் பெறும் இருபது கதைகளும் இதுரையிலும் உதயசங்கர் எழுதிய கதைகளில் இருந்து முற்றிலும் வேறு தன்மையிலானவை. தமிழ்ச்சிறுகதை எழுதுதல் முறைக்கும் கூட தனித்தன்மையை தந்திருக்கும் தொகுப்பு இது.

குடும்ப அமைப்பும் அதன் இயங்குதளங்களும் எப்போதும் கதைகளோடுதான் இயங்குகின்றன. இந்த தொகுப்பிற்குள்ளும் குடும்ப அமைப்பிற்குள் பொருந்த முடியாது விலகி சென்ற மனிதர்களின் கதைகள் கட்டித்தரப்பட்டிருக்கிறது. சரக்கொன்றை இருந்த இடம், அப்பாவின் கைத்தடி, கிருஷ்ணணின் அம்மா, கடவுளின் காதுகள் எனும் நான்கு கதைகளும் தன் இருப்பு கேள்விக்குள்ளாகும் போது மனிதனோ, மனுஷியோ அதனை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பேசும்கதைகள் .

தன் பால்யத்தில் பூவரசம் பீப்பி செய்து விளையாடிய பையன்தான் கிருஷ்ணன். “மனிதர்களால்  சட்டென ஒருநாள் மறைந்துவிடமுடியுமா? கிருஷ்ணனின் அப்பா சட்டென ஒருநாள் மறைந்து போகிறார். பிறகு என்ன?. நொங்கு வண்டி தள்ளிக் கொண்டு திரிந்தவன் ஒரே நாளில் குடும்பத்தின் சுமைதாங்கியாகிறான். பலசரக்குக்கடையின் வாசம் படிந்த உடலுடனே அலைகிறான். எல்லாம் அம்மாவிற்காக. அம்மா தான் பணிக்கிறாள். அம்மா தான் அவனை இயக்குகிறாள். எல்லாமே அவனுக்கு அம்மாதான். அம்மா எனும் சித்திரத்தின் மீது கலைகள் ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒற்றைத் தன்மையை, அதன் மீது ஏற்றப்பட்டிருக்கும் பிரமைகளை கலைத்த கதையிது. அன்புமயமானவள், கருணையின் பிறப்பிடம்,தன் குழந்தைகளின் வாழ்விற்காக தன்னையே தத்தம் செய்பவள் என இதுவரையிலும் அந்த கதாபாத்திரத்தின் மீது ஏற்றப்பட்டிருக்கும் சகல பிம்பங்களையும் இல்லாமல் ஆக்குகிறது கதை. கிருஷ்ணன் அம்மாவின் சொல்லிற்காக குடும்பத்தையே சுமக்கிறான். தங்கைகளுக்கு குடும்பம் அமைத்து தருகிறான்.தம்பிகளின் திருமணப் பேச்சு துவங்கும் போது தடுமாறுகிறான். அமம்மா தன்னுடைய கல்யாணம் பற்றி பேசிவிட மாட்டாளா என ஏங்குகிறான்?. கடைசிவரையிலும் அம்மா பேசவில்லை. சிலுவை சுமந்து பழகிய பிறகு, அதை ஏற்றியவர்கள் எப்படியாவது இறக்கி வைக்க மாட்டார்களா எனும் ஏக்கம் எப்படித் தீரும்?. ஏங்கி தவிக்கிறான் கிருஷ்ணன். எழுத்தாளர் கதையை இந்தப்புள்ளியில் வேறு ஒன்றாக உருமாற்றுகிறார். மனப்பிறழ்விற்கு உள்ளாகிறான் அவன். திருமணம் குறித்த பேச்சு வந்தாலே அவனுக்கு வயிறு புரட்டி எடுக்கிறது. சின்ன மேளச்சத்தம் கேட்டால் கூட போதும் வயிற்றுப் போக்கு வந்துவிடுகிறது. அடக்கி வைத்திருந்த கோபதாபங்களை, உணர்வுகளை உடல் இப்படித்தான் வேறு ஏதாவது ஒன்றாக  வெளிப்படுத்தும். கதையை வாசிக்கும் நமக்குள் கிருஷ்ணனின் அம்மா, என்ன தான் நினைத்தாள். கடைசிவரையிலும் ஒரு மகனை மட்டும் ஏன் இப்படி ஆக்கிவிட்டாள் எனும் கேள்வி நீடிக்கிறது. வழமையிலிருந்து விலகிச் செல்லும் புள்ளிகளால் கட்டப்பட்டிருக்கும் கதைத் தொகுப்பு இது என்பதற்கான அடையாளம் கிருஷ்ணனின் அம்மா.

மனிதர்கள் பேசிக்கொண்டேயிருப்பவர்கள்.மனிதப்பேச்சு உலகை மாற்றும். பேச்சு. மறுபேச்சு. எதிர்ப்பேச்சு. இதிலேதான் இயங்குகிறது மனிதகுலம். பேசிப்பழகிய வாய்க்கு பேச்சைத் தவிர வேறு எதுவும் இல்லை. யாரும் பேசிட வாய்க்காத போது மனிதர்கள் என்ன செய்வார்கள். விலங்குகள், பறவைகளுடன் பேசுவார்கள்.

குடும்ப அதிகாரம் பேச்செல்லையை சுருக்கிய போது வேறு வழியில்லாமல் அவர்கள் தனக்குள்ளே பேசிக்கொள்கிறார்கள். “கடவுளின் காதுகள்”கதைக்குள் வருகிற சுப்புலட்சுமி தனக்குள்ளும் பேசிப்பேசி விரக்தியின் உச்சிக்கு போனவள். இளம் பிராயத்தில் தீராத பேச்சு உலகிற்குள் இருந்தவள். பேசி பேசி சின்ன விசயத்தையும் விஸ்தாரமாக விவரிக்கும் ஆற்றல் பெற்றவள். பெண் உலகத்தில் புதிதாக நுழைகிற ஆண் எல்லாவற்றையும் அழித்து எழுதுகிறவன் ஆகிவிட்டால்?. பெண் என்னாவாளோ, சுப்புலட்சுமியும் அப்படியே ஆகிறாள். கதைக்குள் வருகிற அப்பாவை ஒற்றை வரியில் எழுத்தாளர் புரிய வைக்கிறார். எதிலும் திருப்தியுறாதவர். பேசியே பழகியிராதவனும், பேச்சைத் தவிர்க்கவே முடியாதவளும் சேர்ந்து வாழ்கிற விசித்திரத்தை இந்திய குடும்ப அமைப்பு கண்ணுக்குத் தெரியாத நூதனக் கயிறைக் கொண்டு கட்டியிருக்கிறது. கதைக்குள் வருகிற சுப்புலட்சுமி அம்மாள் கணவன் இறந்தபிறகு தனக்குள் பேசிக்கொள்வதையும் நிறுத்திக் கொள்கிறாள். பூஜை அறைக்குள் தஞ்சம் புகுந்தவள் பேசிக் கொண்டேயிருக்கிறாள். யாரோடு பேசுகிறாள் என்பது புரியாத புதிராக இருக்கிறது. மனப்பிறழ்வுக்கு உள்ளாகி விட்டாளோ எனும் வருத்தத்தில் குடும்பம் தடுமாறுகிறது. மருத்துவமனைக்கு போன நாளில்தான் நிலைமையின் தீவிரம் புரிகிறது. டாக்டருடன் பேசவில்லை. மாறாக சுவற்றில் மாட்டியியிருக்கிற கண்ணன் போட்டோவுடன் பேசுகிறாள். இங்கே எல்லோருக்கும் வாய் இருக்கிறது. காதுகள் இல்லை. கேட்கும் இதயமும் , செவிகளும் அற்ற இந்த உலகில் யாரோடு பேச.. சிலர் பூக்களோடு பேசுகிறார்கள். வேறு சிலர் புத்தகங்களோடு பேசுகிறார்கள். சுப்புலட்சுமி கடவுளோடு பேசுகிறாள் என நீங்களும் நானும் நினைக்கிறோம்.அதுதான் இல்லை.

“என்னடா வெங்கி…”

“என்னம்மா பண்ணிகிட்டிருக்கே”

“பேசிக்கிட்டிருக்கேன்”

“யாரோட பேசிக்கிட்டிருக்கே?

“இதுகூட தெரியலையா? கடவுளோட பேசிக்கிட்டிருக்கேன்”

“கடவுளோடயா?”

“அவங்க பேசுறாங்களா?. ஏம்மா ராத்திரியில தூங்குற சாமிகளா தொந்தரவு பன்னுற”

“டேய் நான் எங்க தொந்தரவு பன்னுறேன். அவுங்களுக்குத்தான் தூக்கம் வராம என்னைய கூப்பிட்டு பேசச்சொல்றாங்க. மத்தவங்க மாதிரி இல்லப்பா காது கொடுத்து நான் சொல்றதை கேட்குறாங்க” என்கிறாள்.

கதையை வாசிக்கும் போது நிச்சயம்  இந்த இடத்தை கடக்க முடியாது. இப்படித்தான் ஒவ்வொரு கதையும் விலகி புதிய பாதையில் செல்கிறது. கதைத் தொகுப்பின் கதைகள் முழுவதும் பழகிய பாதையிலேயே பயணிக்கும் கதைகள் அல்ல.

அடுத்த இரண்டு கதைகளும்.இரண்டு தனித்து விடப்பட்ட ஆண்களின் கதைகளைப் பேசுகிறது. சரக்கொன்றை இருந்த இடம் கதையில் வரும் அவர் தன் இனையரை இழந்த பிறகான வாழ்க்கைப்பகுதியை கதையாக்கியிருக்கிறார். சரக்கொன்றையாக அவள் இந்த இடம் கொண்டுவந்த வசந்தம் தொலைந்து கிடக்கிறது வீடு…. வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் கதை அப்பாவின் கைத்தடி. ஊர் மெச்ச வாழ்ந்த குடும்பம் காலச்சூழலால் விழுந்து விட்டால் என்னாகும் என்பதையே அப்பாவின் கைத்தடி பேசுகிறது. காலத்தில் நிகழும் மாற்றங்களை தன்வயப்படுத்தி மேலேற முடியாதவர்கள் இற்று வீழ்கிறார்கள். தான் செய்து வந்த தொழிலை உளப்பூர்வமாக நேசித்தவர்கள் மாற்றத்தை ஏற்கமுடியாமல் தடுமாறுகிறார்கள்.பெருமிதத்துடன் கிளப்புக்கடைகள் அறுபதுகளில் நடந்த நிலம் தெக்கத்தி குறுநகரங்கள். ஊர் தோறும் இந்த சாப்பாட்டுக்கடைகள் உண்டு. கிளப்புக்கடைகளை பவனங்கள் இல்லாமல் ஆக்கின. பவனங்களை ஹோட்டல்கள் அப்புறப்படுத்தின. ஹோட்டல்களை பெரிய பெரிய மால்கள் இல்லாமல் செய்து விட்டன. இது ஒரு சுழற்சி. இது போலான வீழ்ச்சியும் சுழற்சியும் காலம் உருவாக்கிய மாற்றங்கள். இப்படியான மாற்றங்களை நம்ப மறுத்து,தன் கால் அருகே மொத்த  வாழ்வே நழுவிச்செல்வதை நம்ப மறுத்து மீண்டும் மீண்டும் முதல் புள்ளியில் துவங்கி  இற்று விழுகிற அப்பாவின் கதை. அப்பாவின் கைத்தடி. இந்தக் கதைக்குள் வருகிற ரேவதி யாருடனாவது உடன் போக நினைக்கிறாள். பழம் பெருமையும் சாதியப்பிடிவாதமும் உருக்கொண்ட கைத்தடி மட்டுமே அப்பாவிடம் மிச்சமாக இருக்கிறது. ஒவ்வொரு முறை வெளியேறும் போதும் அப்பாவின் கைத்தடி கண்காணிக்கிறது. தடுத்து நிறுத்துகிறது.  ‘ஏன்டி வீட்ட விட்டு ஒடுறதுக்கு நம்ம சாதிக்காரப்பயக எவனும் கிடைக்கலையா?’  என தடுத்து நிறுத்துகிறது. நொறுக்கித் தள்ளுகிறது. அப்பாவையும் அவரின் கைத்தடியை  மட்டும் நம்பி வாழமுடியாத ரேவதிக்கு வீட்டை விட்டு வெளியேறிப் போவதைத் தவிர எந்த வழியுமில்லை. வெளியேறுகிறாள். இந்த குடும்பம் ஜம்பத்தின் நிழல்படாத நிலவெளிக்குள் வாழ்ந்தால் போதும் என்றே வெளியேறுகிறாள். கைத்தடி விழித்துத்தான் இருக்கிறது. வேறுவழியில்லை. இற்று விழுந்த குடும்பத்தில் இருந்து பெண்கள் என்ன தான் செய்வது எனும் பதிலற்ற கேள்விகள் சுழல்கிறது. ரேவதிக்கும் நமக்கும். இது காதல் மிகுதியின் விளைவல்ல. வாழ்ந்து கடக்க வேண்டிய நாட்களைக் குறித்த பெண்ணின் தேர்வு அவ்வளவே. ரேவதிகளின் கதைகளை நீண்ட காலமாகியும் தமிழ்ச்சிறுகதைகள் பேசயிருக்கவில்லை. உதயசங்கர் அப்பாவின் கைத்தடி கதைக்குள் பெண் உலகின் எழுதப்படாத இந்த முக்கியப் பகுதியைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

எழுத்தாளன் எழுத்து முன் வைக்கும் எல்லா சவால்களையும் எதிர்கொள்ளும் ஆற்றல் மிக்கவன். யதார்த்தத்தின் எல்லைகளை உடைப்பதற்கும், அதனை விஸ்தரித்து எழுதுவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.இந்த தொகுப்பின் பலகதைகள் மீயெதார்த்த கதைகளாகவே இருக்கின்றன.புற்று,அந்தர அறை, மாயா மேன்சன், நீலிச்சுனை, கருப்பசாமியின் வனம் எனும் கதைகளின் மொழி தமிழ்ச்சிறுகதை வாசகனுக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது.

இந்த பின்நவீன வாழ்க்கைக்குள் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் சகல கிரித்திரியங்களும் நிறைந்திருக்கின்றன. நித்தத்தை எப்படி நகர்த்துவது என்பதை சம்பந்தப்பட்ட அவனோ, அவளோ முடிவு செய்ய முடியாது. கண்களுக்கு புலனாகாத மாயாவிகள் எங்கிருந்தோ ஒவ்வொரு நொடியையும் இயக்குகிறார்கள். இந்த பெரும் நகரங்கள் தற்கொலைக்குத் தூண்டும் சகல உபாயங்களோடு மட்டுமல்ல, உபகரணங்களோடும் மிதக்கின்றன. அந்தர அறை என்பது வேறு எங்கோ இல்லை. அவரவர் வீடுகளில்தான் இருக்கிறது அல்லது அவரவர் மனம்தான் அந்தர அறை என்பதையே கதை நமக்குள் கடத்துகிறது. மனம் ஒருபோதும் தனித்து சிந்திப்பதில்லை. அது நேர்கோட்டில் வரிசைக்கிரமமாகவும் யோசிப்பதில்லை. பிறகு கதை மட்டும் எப்படி நேர்கோட்டில் நகரும். அறை எண் 24 மாயாமேன்சன் எனும் கதை வரிசையாக சொல்லப்பட்டிருந்தால் வாசகப் பரவசம் ஏற்பட்டிருக்காது. வாழ்க்கைக் காலப்பகுதிகளையே அறை எண்களாக உருமாற்றி கதை கதையாக நகர்த்தியதால் வாசகனின் மனதிற்குள்ளும் முன்பின்னாக நகர்ந்து அவனை அவனையே பார்த்துக்கொள்ளும பெரும் கண்ணாடியாகவும் உருமாற்றம் செய்கிறது. கதை.கதையின் மொழியையும்,கூறல்முறையையும் கதைகளே முடிவு செய்கின்றன. எழுத்தாளன் . வாசகனுக்கும், எழுத்துக்கும் இடையே இயங்கும் ஒருகருவி மட்டுமே.

கனிமவளங்களின் மீதான திருட்டும், பெரும் வணிகக் கொள்ளையும். நாம் கற்பனையே செய்ய முடியாத இடத்திற்கு வந்திருக்கிறது. வளர்ச்சி எனும் பெயரில் உலகம் முழுக்க நடக்கும் திருட்டுக்கள், திருட்டை மறைக்க அதிகார வர்க்கம் நிகழ்த்தும் தந்திரங்கள் வித விதமானவை. ஊடகங்களின் துணை கொண்டு பரப்பப்படும் பரபரப்புகள் இந்தக் கொள்ளையை மறைக்க உதவி செய்யும் நுண்கருவிகள்.பெண்களின் மீதான வன்முறை, கடத்தல்கள் என திட்டமிட்ட காட்சிகள் காட்சி ஊடகங்களின் திரையில் நகர்கிற நேரத்தில் பெரும் வணிக நிறுவனங்கள் மலைகளையும் வனங்களையும் சுரண்டி கொழுக்கும் கதையை விசித்திர திருடர்களாக்கியிருக்கிறார் உதயசங்கர். இந்திய நிலத்தின் ஆன்மாவாக இருக்கிற வனம் சுரண்டலுக்கு உள்ளாவதை கதையாட ஆப்பிரிக்க நிலம் வரை பயணிக்கிறார் எழுத்தாளர். காங்கோவின் கதையைத்தான் சொல்கிறார் ஆனாலும் அது நம்மை இந்திய நிலத்திற்குள் அழைத்து வருகிறது. எழுதப்பட்ட , அல்லது பிரசுரிக்கப்பட்ட தகவல்களுக்குள் பதுங்கியிருக்கும் இடைவெளிகளை கண்டுபிடிப்பது மட்டுமல்ல, அவற்றை பொருத்தமானச் சொற்களால் இட்டுநிரப்பி கதையாக்குவதையும் சமகாலக்கதைகள் கண்டுபிடித்திருக்கின்றன. அது தண்டகாரண்ய  காடுகளைக் குறித்த தகவல்களை மனதிற்குள் திறக்கிறது. அப்படியே அது இந்திய புராணிக சடங்குகள் ,தொல் கதைகள் என பயணித்து, ஒற்றை முலை திருகி ஊர் எரித்த கண்ணகியையும் காட்சிப்டுத்துகிறது. நினைவில் காடுகளைச் சுமந்தலையும் மிருகம் மனிதன் என்பது நிஜம்தானா? எனும் கேள்வியை கருப்பையாவின் வனம் எனும் கதை வழியாக கேட்டு பதில் அளித்தும் பார்க்கிறார்.”காட்டிற்கு கோடிக்கணக்கான கண்கள் முளைத்தன. அந்த கண்கள் கருப்பையாவை உற்றுக் கவனித்தன. கருப்பையாவின் கண்களில் இருந்த காமத்தை உணர்ந்தன. கண்பார்வையில் தெரியாமல் போகுமா காமம். ஒருவிரல் தொடுகையில் உணரமுடியாத காமம், என்ன காமம். காட்டின் அத்தனை கண்களும் யோனியாக மாறின. காடு இன்பத்தில் முனகி அசைந்தது.”. .எழுத்து மட்டுமல்ல வாசிப்பும் ஒரு தனித்த உழைப்புதான். கருப்பையாவின் வனம் கதையை வாசித்துத் தொடர வாசகனுக்கு பெரும் உழைப்பு தேவைப்படுகிறது. நம் அனைவரின் முதாதைகளும் வனமகனாகவோ, வனமகளாகவோ இருந்ததையும், வனத்தை சுமந்தலையும் மனம் நம்முடையது என்பதையே கதை நமக்கு உணர்த்துகிறது. கருப்பையாவின் பிள்ளைகளான நம்முடைய மூதாய் நீலி.வனம் இந்திய நிலப்பகுதியின் ஆன்மா. இந்த வனத்தின் பெரும் காவல்காரி நீலி. வனக்காவலர்களின் தைரியமும் துணிச்சலும் நீலியிடம் இருந்து கைவரப்பெற்றவை. கண்கள் அசையாது காக்க வேண்டும் காடுகளை, எனவேதான் கண்களுக்குள் இருக்கும் பாப்பா அசையாது வனத்தை சுற்றித் திரிகிறோம் நாம். கண்கள்  அசையாது கிடக்கும் மனிதக்கூட்டம் காட்டிடம் தஞ்சமடைகிறன என கதையாடிப் பார்க்கிறார் தன்னுடைய நீலிச்சுனை கதைக்குள் உதயசங்கர். காடெல்லாம் கண்கள் முளைத்திருக்க காடே நீலிதான். அமாவாசை கரும் இருட்டில் உயிரான மரங்களை திருடவரும் திருடர்களை தன் நீலிச்சுனையில் ஜலசமாதி ஆக்கிவிட்டாள் அவள் எனும் கதை நமக்குத் தேவையாக இருக்கிறது. தொல்கதைகளையும்,, விசித்திரமான சடங்குகளைள்யும் வெறும் அறிவுக்கண் கொண்டு உற்றுணர முடியாது. நீலிகளும், வனமகளிரும் ஒரு குறியீடு. கார்ப்ரேட் கயவாளிகள் அவ்வளவு எளிதில் நம் வனத்தை அழிக்கவோ, நிர்மூலமாக்கவோ முடியாது எனும் நம்பிக்கையை தரவேண்டியது காலம் கலைஞர்களுக்கு இட்டிருக்கும் கட்டளை என்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது. காடு மர்மங்களும், விசித்திரங்களும் நிறைந்திருக்கும் ஒரு விரிந்த பெருநிலம். காடெங்கும் படர்ந்திருக்கும் புற்றுக்குள் பதுங்கியிருக்கும் இச்சாதாரி நாகங்களைக் குறித்த பௌரானீக கதையே புற்று. அவை யாவும்அழகு ததும்பும் பெண்கள் எனும் கதையும் கூட வனத்தையும்,வாழ்க்கையையும் புரிந்து கொள்ள போதுமானதாக இருக்கிறது. ஒருவிதத்தில் இது பெண் உடல் குறித்த அரசியலைப் பேசிய கதையும் தான்.

இப்படி பெண்களின் உடலரசியலைப் பேசிய கதைதள் ஆன குரல்கள், மரப்பாச்சிகளின் நிலவறை, அன்னக்கொடி, பூனைக்கனவு ஆகியவையும் இந்த தொகுப்பின் முக்கியக் கதைதள். பூனை எனும் மிருதுவான அந்த குட்டி உயிரிக்கும் பெண்களுக்குமான பந்தத்தை பலரும் எழுதியிருக்கிறார்கள். உதயசங்கரின் பூனைக்கனவு மிருகங்களுடனான பெண்களின் பிரியத்திற்குள் ஆண் மனம் அடைகிற விசித்திர உணர்வை நுட்பமாக கதையாடுகிறது. திருமணம். அதிலும் குறிப்பாக ஏற்பாட்டுத் திருமணத்திற்குள் ஆண்-பெண் எனும் இரு எதிர் இனைவுகளுக்கும் இடையேயான முரண்கள் வெளிப்படுவதற்கு பெரிய காரணங்கள் தேவையில்லை. சின்ன புள்ளியில் துவங்குகிற முரண், இருவரும் சேர்ந்தே வாழ முடியாத அளவிற்கு வளர்ந்து விடுகிறது. இந்த பூனைக்கனவு கதை ஒருவிதத்தில் பெரும் காலமாக ஆண்களுக்குள் இயங்கும் பெண் உடல் உளவியலைக் குறித்துப் பேசுகிறது. பெண்களை, மிகக்குறிப்பாக மனைவியை உடமையாக நினைக்கும் ஆண் மனதைக் கட்டுடைத்திட்ட கதையிது. இந்தக் கதைக்குள் வருகிற அவனுக்கு மியாவ் எனும் பூனைக்குரல் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. இது அவனுடைய சிக்கல் மட்டுமில்லை. அவனுடைய அப்பாவிற்கும் இருந்திருக்கிறது. கதை வாசிக்கும் போது இந்த மனக்கோளாறு ஆண் உலகெங்கும் பரவியிருப்பதான உணர்வு ஏற்படுகிறது. அன்னக்கொடி பாலியல் தொழிலாளிகளின் மன அவசம் குறித்த கதை. ஜி.நாகராஜன் எழுதிய அவர்களின் கதைக்குள் வருகிற அன்னலட்சுமியின் வாழ்வது குறித்த பெரும் ஏக்கமே கதையாகிறது. பண்டமாக மாற்றப்பட்ட தன் உடலை பவித்ரமாக ஆராதிக்கும் ஒருவன் வராமலா போவான் எனும் மனநிலைக்கும் பாலியல் தொழிலாளிகள் எப்போதாவது வரவே செய்கிறார்கள். இந்தக்கதைக்குள்ளும் கூட ஒரு அம்மை நோய்வாய்ப்பட்டவனை மீட்கிறாள் அன்னக்கொடி. அவனும்  கூட நோய்மையிலிருந்து மீளும் வரை ஆண் வசனங்களை அடுக்குகிறான். நோய்மைக்குள் அவனுக்குள்  இருந்த ஆண் பதுங்கியிருப்பதும், முழுக்க சொஸ்தப்படுத்தப்பட்ட பிறகு அவனுக்குள் விழிக்க சந்தர்ப்பம் பார்த்திருந்த ஆண் மனம் விழிக்கிறது. பிறகெனன்ன பணத்தை வைத்துவிட்டு வெளியேறுகிறான். கதை முடிகிறது. புதுமைப்பித்தனின் அம்மாளு இல்லை அன்னக்கொடி. இருப்பை இருத்திக்கொள்ள என்ன செய்ய வேண்டுமோ அதையே செய்கிறாள். அப்படித்தான் செய்வாள்.

மரப்பாச்சிகளின் நிலவறை எனும் கதை ஒரு குறியீட்டுக்கதை. பெண்கள் மரப்பாச்சி பொம்மைகளை விளையாட்டுத் தோழிகளாக வைத்திருக்கிறார்கள். இதைக்குறித்த கதையை பலரும் எழுதியிருக்கிறார்கள். உதயசங்கரின் மரப்பாச்சிகளின் நிலவறை அவற்றிலிருந்து முற்றாக விலகிச் செல்கிறது.ஆண் மனதிற்குள் வேட்கையுடனும், விழிப்புடனும் இருக்கும் பெண் உடலின்மீதான பெரும் விருப்பத்தை கதையாக்குகிறது. பெண்நிர்வாணத்தின் மீதான ஆணின் விருப்பமே விதவிதமான மரப்பாச்சிப் பொம்மைகளை சேகரிக்கிறது. பெண் உடலின் மீதான ஈர்ப்பு என்பது நீண்ட காலமாக தொடரும் ஆண் மனதின் விசித்திரச்செயல் இந்தக்கதைக்குள் வருகிற அவன் மட்டுமல்ல, அவனுடைய அப்பாவும், அவனுடைய அப்பாவின் அப்பாவும் கூட மரப்பாச்சிகளை சேகரித்து ரசிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பதாக கதையாக்கியிருக்கிறார் எழுத்தாளர். இது ஒருவிதமான மனப்பிளவுண்ட சமூகத்தைப்பற்றிய குறியீடுதான். உயிரான பெண் உடலைக் காட்டிலும் பிரதிமைகளின் மீதான மயக்கம் ஒரு நீடித்துக்கிடக்கும் தொடர்ச்சியே. அவற்றை  பதுக்கி வைப்பதும் பிறகு அவற்றை ரகசியமாக ரசிப்பதுமான உளவியலை விஸ்தரிக்கும் போது போர்னோ படங்களை பார்த்து ரசிக்கும் குரூரத்தையும் கூட வாசகனுக்குள்  விஸ்தரிக்கிறது கதை. பெண் உடலின் மீதான ஈர்ப்பால் நகரும் மனம் அதை காதலாக புரிவதும், பிறகு அதனால் தான் கொல்லப்படலாம் எனும் மன உணர்வே குரல்கள் கதை. குரல்கள் கதைக்குள் வருகிற செந்திலுக்கு குரல்கள் கேட்டுக் கொண்டேயிருக்கின்றன. ’ஒடிரு ,ஒடிரு.. உன்னை கொல்லப் போறாங்க, ஒடிரு,ஒடிரு…’  எனக்கேட்டுக் கொண்டேயிருக்கிறது. ஹாருகி முரகாமி தன்னுடைய நேர்வேஜியன் வுட் நாவலில் மனப்பிறழ்விற்கான மருத்துவமாக விலங்குகளற்ற, கதவுகளற்ற சுதந்திரமான சூழல் கொண்ட மருத்துவமனையை வடிவமைத்திருப்பார். இப்படியான மனப்பிறழ்வு குறித்த புரிதலுக்குள்ளாகாத சமுகமாக இருக்கிறதே நம்  சமூகம் எனும் குறிப்புணர்த்தலாகவும் இந்தக்கதையை வாசிப்புக்கு உள்ளாக்கலாம்.

சமகாலம் முன்வைக்கும்  சவால்களை எதிர்கொண்டு எழுத்தாக்குவது மிகப்பெரிய சவால். இந்த சவாலை தொடர்ச்சியாக எதிர்கொண்டு கடப்பவர் உதயசங்கர். இந்த தொகுப்பிலும் மிக எளிதாக கதைகளில் வாசகனுக்குள் சமகால வலிகளை கடத்துகிறார். தானும் கடக்கிறார். பெரும் போதை மயக்கத்தில்  உலகமே புரண்டால் என்னாகும். இரவை குடியால் துளிதுளியாக நகர்த்தி மிதக்கிறது இளையோர் உலகு. தன்வீட்டிலிருந்து கிளம்பி போகும் திசைகுழம்பி தன்வீட்டிற்கே திரும்புகிற குடிநோயாளிகளின் உளச்சிக்கலை பேசிய கதை ஹேங்க் ஓவர். இந்த கதைக்குள் வந்த கருணாகரனின் கதையை தனித்த கதையாகவும் எழுதியிருக்கிறார். குடியை எப்படி துவங்குகிறான். பிறகு அது எப்படி அவனை ஆட்கொள்கிறது. குடிநோயாளிகள் எப்படி உருவாகுகிறார்கள் என்பதையே கருணாகரனின் கதை சொல்கிறது. சமீபகாலங்களில் விவாத்தற்குள்ளாகும் வாசக இடைவெளி குறித்த தர்க்கத்தையும் கூட கதைக்குள் உதயசங்கர் எழுதிப்பார்க்கிறார். ஐந்துவிதமான சாத்தியங்களை எழுதுகிறார். எந்த வரிகளையாவது பின்தொடர்ந்து அவரவர் போக்கில் கதை எழுதிக் கொள்ளுங்கள். இதல்லாது வேறு சாத்தியங்கள் இருந்தாலும் வாசகனே எழுதட்டும் என முன்வைத்து கதாசிரியனை கதைக்குள்ளிருந்து வெளியேற்றுகிறார். இதுவும் புதிய கதை கூறல்முறை தான்.

நித்தமும் ஏதோ ஒருபுள்ளியில் ஆணவப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.  கடுங்காலம் நோய்த்தொற்றாக நம்மை அச்சுறுத்தும் நாளிலும் சாதி வன்மம் தொலையவில்லை

நம் காலத்தின் மறக்கவியலா கொடூர நிஜமான இளவரசனின் மரணத்தை எப்படி மறக்க, கடக்க. எந்த கொடுஞ்செயலையும் பிறிதொரு வன்மப் படுகொலையால் மட்டுமே மறக்கும் நிலைக்கு ஆளாகியிருக்கும் சூழலை தன்னுடைய துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலர் எனும் கதையின் ஊடாக நமக்கு நினைவூட்டுகிறார் எழுத்தாளர். தனக்கு புகழும் ஐஸ்வர்யமும் சேரக் காரணமாக இருந்த மகளை தலைவேறு  முண்டம் வேறாக்கிட சாதிப் பெருமிதம் காரணமாக இருக்கிறது என்பதை இன்னும் எத்னை கதைகளில்தான் எழுத நாங்கள் என்றே எனக்கு கேட்கத் தோன்றுகிறது. கதைக்குள் வெட்டுண்ட தலையின் ரோஜா மலரின் இதழ்கள் வாழ்ந்த நாட்களையும் பட்ட கதைகளையும் சொல்வதாக கதைக்கு வடிவம் தந்திருக்கிறார். இந்தக்கதையிலும் கூட இரண்டு ரோஜா இதழ்கள் சொன்ன கதையை எழுத்தாளர் நமக்குச் சொல்லவில்லை. வாசகனின் மனதிற்குள் நிச்சயமாக இரண்டு இதழ்களும் கதைகூறிக்கடக்கும் என்பதே உண்மை.

எழுத்தாளர் கதைக்குள்ளாக வாசகனுக்கு தந்திருக்கும் இடத்தை மதித்து நானும் கூட இந்த கதைத்தொகுப்பின் முக்கியமான சிலகதைகள் குறித்த அபிப்பிராயத்தை சொல்லாமல் கடக்கிறேன். கதைகளில் மட்டுமல்ல. கட்டுரைகளிலும் வாசகனுக்கான உரிமையையும் இடத்தையும் மதித்து இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். சமகாலத்தின் எழுத்தாளர்களையும் வசீகரிக்கும் தேர்ந்த மொழியால் கட்டப்பட்டிருக்கும் கதைத்தொகுதி துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலர் எனும் சிறுகதைத்தொகுப்பு என்பதைச் சொல்லாமல் எப்படி கட்டுரையை முடிக்க…!


  ம.மணிமாறன்.

[ads_hr hr_style=”hr-dots”]

[tds_info]

நூல் : துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலர் ( சிறுகதைத் தொகுப்பு)

ஆசிரியர்:  உதயசங்கர்.

விலை : ₹200

வெளியீடு : நூல் வனம்

தொடர்புக்கு : கைப்பேசி: 91765 49991

[/tds_info]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.