உடை மாற்றும் அறை


வர் உள்ளேதான் போனார், அதனால் மீண்டும் வெளியே வராமல் இருப்பதற்கு வழியே இல்லை. உள்ளே இருந்ததெல்லாம் தரைவிரிப்பும் கண்ணாடியும் மட்டும்தான். ஆனால் வாடிக்கையாளர் உடைமாற்றும் அறைக்குள் போய் மூன்று மணி நேரமாகிறது.

உள்ளே என்ன செய்கிறார்? வேறென்ன, எங்களின் ஆடைகளை அணிந்து பார்க்கிறார். முற்பகல் தொடங்கி, நிறுத்தாமல். “உள்ளே ஏதாவது தேவையா, மேடம்?” என்று நான் கேட்டபோதெல்லாம் “உடை மாற்றிக் கொண்டிருக்கிறேன்,” என்று பதில் சொல்லுவார். வாடிக்கையாளர் இப்படிச் சொல்லும்போது மறுபடியும் கேட்பதற்குமுன் கொஞ்சநேரம் பொறுத்திருக்க வேண்டும் – ஏனென்றால் நீங்கள் கேட்கும்போது அவர்கள் மீண்டும் “உடை மாற்றிக் கொண்டிருக்கிறேன்” என்று சொல்லவேண்டி வந்தால், நீங்கள் ஏதோ அவசரப்படுத்துவதாக எண்ணி தர்மசங்கடப்படக் கூடும். மேலும், தங்கள் போக்கில் இயங்கிக் கொண்டிருக்கும்போது நீங்கள் அவசரப்படுத்தியதாகக் குறைசொல்லித் தங்களைத் தொந்தரவு செய்யவேண்டாம் என்று சொல்லக்கூடும்.

உடைமாற்றும் அறையை விட்டு வாடிக்கையாளர் வெளியே வராததுக்கான காரணங்களில் ஒன்று, உண்மையில் உடைகளை அணிந்து பார்த்துவிட்டார்கள், ஆனால் அவை பொருத்தமானதாக இல்லை என்பதால் இருக்கலாம். எனக்கும் அப்படி ஆகியிருக்கிறது: இந்த உலகத்தில் சில உடைகள், அவற்றை அணிந்த உடனேயே நீங்கள் மிகவும் கேவலமாக இருப்பதுபோல உணரவைக்கும். உங்களின் பிரதிபலிப்பு ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே முன்னால் இருக்கும் கண்ணாடியை உடைத்து நொறுக்கவேண்டும் போல இருக்கும். “என்னிடம் வேடிக்கை செய்யாதே” என்ற எண்ணத்தை ஊட்டும் அந்த உடைகள் நீங்கள் எப்போதுமே கோமாளி போலத்தான் இருந்திருக்கிறீர்களோ என்றும் இந்தக் கட்டம் வரையிலான வாழ்க்கையே அவமானமூட்டும் தவறோ என்றும் யோசிக்க வைக்கும்.

முதலில், அத்துடன் முடிந்துவிட்டது என்றுதான் நினைத்தேன். நான் பணிபுரியும் கடையின் உரிமையாளர் வெளிநாட்டிலிருந்து வித்தியாசமான பாணியில் இருக்கும் பெரிய பிராண்டுகளின் நவநாகரீக ஆடைகளை வாங்கி வருவார். உடைகளை அணிந்து பார்க்கும் வாடிக்கையாளர் உடைமாற்றும் அறையிலிருந்து வெளியே வந்து பெரிய கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொள்ளத் தயங்குவதும் வழக்கம்தான். எங்கள் உடைகளும் ஒன்றும் விலை குறைவானவை இல்லை என்பதால், அப்படி நடக்கும்போது தனிமையில் யோசித்து முடிவெடுக்கட்டும் என்று வாடிக்கையாளரை விட்டுவிட்டுப் போய்விடுவோம். நான் மற்ற வாடிக்கையாளர்களுக்கு உதவிக் கொண்டிருந்தேன், உடைக் கிடங்கை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன், மொத்தத்தில் வாடிக்கையாளரை மறுபடியும் சென்று பார்க்கும்வரை நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தேன்.

அதற்குமேல் என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியாதபோது, திரைச்சீலையின் வழியாகக் குரல் கொடுத்தேன். “உங்களுக்கு ஏதாவது வகையில என்னால உதவமுடியுமா?”

“எதுவும் தேவையில்ல,” என்று கொஞ்சம் எரிச்சலுடன் பதில் சொன்னார் வாடிக்கையாளர். “இதைவிடச் சாதாரணமான தினப்படி போட்டுக்கிற உடை எதுவும் உங்ககிட்ட இல்லையா? இது விருந்துக்குப் போட்டுக்கிட்டுப் போறதுபோல இருக்கே. எல்லா இடத்துக்கும் போட்டுக்கிட்டுப் போகமுடியாது.”

“அப்படின்னா?” என்றபடி ஒளி ஊடுருவக்கூடிய வடிவங்கள் அச்சிட்ட இலேசான பட்டாலான உடையொன்றை எடுத்துவந்து கொடுத்தேன். “இது பாரிஸிலிருந்து வந்தது. அழகான நாசூக்கான வண்ணங்களில் வடிவங்கள் அச்சிட்ட உடைகளைத் தயாரிக்கிறார்கள்.”

திரைச்சீலைக்குப் பின்னாலிருந்து கையை நீட்டி உடைதாங்கியைத் திடீரெனப் பற்றி உடையை அறைக்குள் இழுத்துக்கொண்டார். நீண்ட நேரத்துக்கு சரசரவென உடைமாற்றிக்கொள்ளும் சத்தம் கேட்டது. அங்கிருந்து நகர்ந்து சென்று வேறு ஏதாவது வேலை செய்யலாம் என்ற யோசனை எழுந்தாலும் அங்கேயே காத்திருப்பது என்று முடிவு செய்தேன். வாடிக்கையாளர் கடைக்குள் நுழைந்தது முதல் ஒரே பணியாளர்தான் சேவை முழுவதையும் செய்யவேண்டும் என்பது கடையின் கொள்கை. எங்களுடைய உடைகளில் இருந்து பொருத்தமானவற்றை தேர்ந்தெடுப்பது சிரமமென்பதால் வாடிக்கையாளரின் பாணிக்கு ஏற்ற ஒன்றைத் தேர்ந்தெடுக்க உதவி செய்வோம் என்ற பெருமிதம் கொள்பவர்கள் நாங்கள்.

இதைச் செய்வதற்கு, உங்கள் வாடிக்கையாளர் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்துகொள்வதில் இருந்து தொடங்கவேண்டும். அவர்களின் வயது என்ன? உயரம் எவ்வளவு? அவர்களின் ஆளுமை என்ன? உள்ளபடி, வழக்கமான வாடிக்கையாளர் ஒருவருக்கு நான் இங்கிலீஷ் டீ பரிமாறிக் கொண்டிருக்கும் போதுதான் இந்த வாடிக்கையாளர் உள்ளே வந்தார். அதனால் “இதைப் போட்டுப் பார்க்கிறேன்,” என்றபடி திரைச்சீலையை மூடிய கையை மட்டுமே பார்த்தேன்.

“இந்த உடையில் நீங்க வழக்கமா எந்த அளவைப் போட்டுப் பார்ப்பீங்க மேடம்?”

“மறந்து போயிடுது. ஞாபகம் வெச்சுக்க முடியறதில்லை.”

ஒருவேளை அதிகக் கூச்சம் கொண்டவராக இருக்கலாம், எங்கள் கடையின் விளம்பரத்தை ஏதாவது பத்திரிகையில் பார்த்துவிட்டு வருவதற்கே மிகுந்த தைரியம் தேவைப்பட்டதோ என்னவோ. தன்னுடைய உயரம் எடை இவை குறித்த பாதுகாப்பின்மையால் நாங்கள் அவரைப் பார்த்துவிடப் போகிறோமென்பதைத் தாங்கமுடியாமல், அறையைவிட்டுப் பத்திரமாக வெளியே போகும் சந்தர்ப்பத்தை நழுவவிட்டாரோ என்னவோ.

“உங்களுக்குக் கால்சட்டை அணிய விருப்பமா அல்லது ஸ்கர்ட்தான் அதிகமாப் போட்டுக்குவீங்களா மேடம்?”

“சில நேரத்துல ஸ்கர்ட் அதிகமாப் போட்டுக்குவேன், சில நேரத்துல கால்சட்டை.”

சமீபத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் உடைமாற்றும்போது முகம் சீர்குலைந்து போய்விட்டதோ என்னவோ. பரிதவிப்போடு சிலிக்கானை சரிசெய்து கொண்டிருக்கக் கூடும். நான் சிறியவளாக இருக்கும்போது, கடல்கடந்து விடுமுறைக்குப் போயிருந்த பெண்ணொருத்தி உடைமாற்றும் அறையிலிருந்து மறைந்துபோய்விட்டதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அறையின் தரையில் நகர்கதவொன்று இருந்ததால், மனிதர்களைக் கடத்துபவர்களுக்கு நேரடியாக விற்கப்பட்டுவிட்டார். ஒருவேளை இந்தக் கதையைச் சொல்லிப் பயமுறுத்தி என்னுடைய வாடிக்கையாளரை அறையை விட்டு வெளியே வரவைக்கலாமோ? “தயவுசெய்து வெளியே வந்து இந்தப் பெரிய கண்ணாடில பாருங்க!” என்று சொல்வதைக் காட்டிலும் குறைவான அவமதிப்பையே ஏற்படுத்தும் என்பதால் அது உண்மையாகவே நல்ல வாடிக்கையாளர் சேவையாக இருக்கும்.

“ஆஃபீஸ்ல இருந்து வீட்டுக்குப் போய்க்கிட்டு இருக்கீங்களா?”

“நான் போட்டுக்க ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறதுக்கும் இதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?”

அல்லது ஒருவேளை இதற்கு முன்னால் உடைமாற்றும் அறையில் அவமானப்படுத்தப்பட்டதால் இங்கேயே அலைந்துகொண்டிருப்பது மூலம் விற்பனைப் பணியாளர்களைப் பழிவாங்க நினைக்கிறாரோ? இரவில் தெருவில் தனியாக நடந்து செல்லும்போது பின்னால் ஹை ஹீல்ஸ் செருப்பின் சத்தம் கேட்டாலே கிட்டத்தட்ட உறைந்து போய்விடுவேன். வாடிக்கையாளர்கள் எதை அணிந்துகொண்டாலும் எப்போதும் “அழகா இருக்கு!” அல்லது “உங்களுக்கு ரொம்பப் பொருத்தமா இருக்கு!” என்று சொல்வதால் ஏற்படும் குற்றவுணர்வாக இருக்கலாம்.

எட்டு மணி ஆன பிறகும்கூட அங்கேயேதான் இருந்தார் – அது கடை மூடும் நேரம். பலமுறை அவரிடம் கேட்டுப்பார்த்தேன், ஒன்றும் பலனில்லை. நானாகத் திரைச்சீலையைத் திறக்க முடியாது என்பதால், “ஒன்றும் அவசரமில்லை மேடம்,” என்று சொல்லிவிட்டு உட்கார்ந்தேன். அறைக்குள்ளிருந்து வாடிக்கையாளர் சரசரக்கும் ஓசைகளை ஏற்படுத்திக்கொண்டே இருந்தார். அவ்வப்போது “ஓ, என்னதிது!” அல்லது “ஹ்ம்ம்ம்..” என்று முணுமுணுப்பது கேட்கும். அடுத்தடுத்து, ஒவ்வொரு அளவிலும் நிறத்திலும் ஒரு உடை வேண்டுமென்று கேட்டார். கேட்டவற்றை எல்லாம் எடுத்து வருவதற்காகக் கடை முழுவதும் வேகவேகமாகத் திரிந்தபோது எந்த முக்கியமான நிகழ்வுக்காக இப்படிச் சலித்தெடுத்துத் தேர்ந்தெடுக்கிறார் என்பதற்கு என்ன கதை சொல்லுவார் என்று யோசித்தேன். மேனேஜரிடம் கடையின் சாவியைக் கேட்டேன். வாடிக்கையாளருக்குத் தேவையானதைத் தேடி எடுத்துத் தரவேண்டும் என்பதற்காக எல்லோரும் வீட்டுக்குப் போனபிறகும் இருப்பது என்று முடிவு செய்துவிட்டேன். வழக்கமான வாடிக்கையாளர்கள் எந்த நேரமாக இருந்தாலும் தங்களுக்குப் பிடித்தமான விற்பனையாளர் சேவை செய்வதற்கு இருக்க வேண்டுமென்று ஒரு போன் செய்தால் போதும். இதனால் அடிக்கடி விற்பனை நேரம் முடிந்த பின்னரும்கூட ஒரே ஒரு வாடிக்கையாளருக்காகக் கடையைத் திறந்து வைத்திருக்கிறோம்.

கடிகாரம் நள்ளிரவைச் சுட்டிய போது கடையிலிருந்த ஒரு உடை பாக்கியில்லாமல் போட்டுப் பார்த்திருந்தார் என்னுடைய வாடிக்கையாளர். இவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பார்? அவர் கடைசியில் வெளியே வரும்போது தேவை என்பதற்காகத் தேநீர் தயாரித்து சோஃபாவுக்கு அருகில் வைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை – கடைக்கு வரும்போது போட்டுக்கொண்டிருந்த உடையை அணிந்துகொண்டு உடைமாற்றும் அறையிலிருந்து வெளியே வரவில்லை அவர். மாறாக, முதன்முதலில் போட்டுப்பார்த்த உடையை மீண்டும் அணிந்து பார்க்கவேண்டும் என்று கேட்டார். பிறகு, கடையிலிருந்த ஒவ்வொரு உடையையும் மீண்டும் போடவேண்டும் என்று சொன்னார். அதிகாலை மூன்று மணி ஆகும்போது என் உடலின் திறனெல்லாம் போய்விட்டிருந்தது.

காலையில், கடையின் சோஃபாவில் இருந்து உறக்கம் கலைந்து நான் எழுந்தபோது வாடிக்கையாளர் இன்னமும் உடைமாற்றும் அறையில்தான் இருந்தார். இரவு முழுவதும் போட்டுக் கொள்வதற்கான உடையைத் தேடிக் கொண்டிருந்தார். பாவம், தடுமாறிய ஆட்டுக்குட்டி! என் மனம் அவருக்காக இளகத் துவங்கியது. அதிகாலை ஆறு மணிக்கே திறக்கும் பேக்கரிக்குச் செல்வதென முடிவுசெய்து, வாங்கி வந்த பேகல் பன்னையும் கடுமை குறைவான காஃபியையும் திரைச்சீலைக்கு வெளியே வைத்து, “தயவு செய்து எடுத்துக்கோங்க,” என்றேன். அவர் பதிலேதும் சொல்லவில்லை, இருந்தாலும் அடுத்து பார்க்கும்போது காகிதப் பொட்டலம் காணாமல் போயிருந்தது.

மற்ற பணியாளர்கள் வருவதற்கு முன் என்னுடைய ஒப்பனையைச் சரி செய்துகொண்டு பெட்டகத்தில் வைத்திருந்த மாற்றுடையை அணிந்து கொண்டேன். “நேற்று வந்த வாடிக்கையாளரா, இல்லையே?” என்று ஆச்சரியத்துடன் கேட்டவர்களுக்கு “ஆமாம், இன்று சீக்கிரமே திறக்க முடியுமா என்று கேட்டிருந்தார்,” என்று நான் சொன்னதும் நல்லவேளையாக வேறு கேள்வி கேட்டுக் குடையவில்லை. முற்பகலுக்குள் கிடங்கிலிருந்து கொண்டு வந்த உடை முழுவதையும் மீண்டும் போட்டுப் பார்த்துவிட்டார். இருந்தும், இன்னமும் திருப்தி ஏற்படவில்லை. அருகிலிருந்த துரித நாகரிகக் கடையொன்றுக்குச் சென்று அங்கிருந்து ஒரு டஜன் துணிகளை அவருக்காக வாங்கிவந்தேன். கடைக்கு வந்த வேறு சில வாடிக்கையாளர்களைச் சக பணியாளர்கள் கவனித்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிட்டேன். வேறு இரண்டு உடைமாற்றும் அறை இருந்ததால் என்னுடைய வினோதமான வாடிக்கையாளரை ஒருவரும் கவனிக்கவில்லை.

அவருக்காக நான் வாங்கிவந்த உடைகளும் பிடிக்கவில்லை. இறுதியில் அவரை வேறு ஒரு கடைக்கு அழைத்துப்போவது என்று முடிவு செய்தேன், உடைமாற்றும் அறையுடன் சேர்த்தே. எங்கள் முதலாளிக்கு கடையின் அலங்காரத்தை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருப்பது பிடிக்குமென்பது அப்போதுதான் நினைவுக்கு வந்தது. அதனால், உடைமாற்றும் அறைகள் நகரக் கூடியவையாக இருந்தன, அவற்றுக்குச் சக்கரம் பொருத்தப்பட்டிருந்தது.

“நான் கொஞ்சம் வெளியிலே போறேன்னு எல்லாருகிட்டயும் சொல்லிடறியா?” என்று ஒரு பெண்ணிடம் சொன்னபடி கயிற்றை என் தோளில் சுற்றிக்கொண்டேன். கனமாக இருந்தது, ஆனாலும் முன்னால் இழுக்க முடிந்தது. உடைமாற்றும் அறையை இழுத்தபடி ஊருக்குள் நடந்தேன். பட்டப்பகலில் இதுபோன்ற ஒன்றை இழுத்துச் செல்லும்போது மக்கள் வெறித்துப் பார்ப்பார்கள் என்று எதிர்பார்த்தேன், ஆனால் யாரும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. ஏதாவது நிகழ்ச்சிக்கோ அல்லது புகைப்படம் எடுக்கும் நிகழ்வுக்கோ தயாராகிறோம் என்று நினைத்துவிட்டார்களோ என்னவோ. அறைக்குள் இருந்த, இதுவரையிலும் திருப்திப்படுத்த முடியாத வாடிக்கையாளருக்கும் இதுகுறித்து நெருடலாக இருந்திருக்கும்போல. “நீங்க இவ்வளவு சிரமப்பட வேண்டியதில்லை,” என்று சொன்னார்.

“முட்டாள்தனமாப் பேசாதீங்க. இவ்வளவு தூரம் வந்தாச்சு – உங்களுக்கு ஏத்த மாதிரி ஒண்ணைக் கண்டுபிடிச்சே தீருவோம் – சத்தியமாச் சொல்றேன்”, என்று அவருடைய உற்சாகம் குன்றாமல் இருப்பதற்காகச் சொன்னேன்.

“உடைமாற்றும் அறையிலிருந்து முகத்துல சிரிப்போட நீங்க வெளியில வரணும்கிறதுதான் எனக்குத் தேவை!”

என்னுடைய வாடிக்கையாளருக்காகச் சிறப்பான ஒன்றைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்ற முடிவில் இருந்தேன். எனக்குப் பிடித்தமான துணிக்கடைக்கு அவரை அழைத்துச் செல்வது என்று முடிவு செய்திருந்தேன். அதற்காக மேடாக இருந்த தெருக்களின் வழியே போய் உயரமான குன்றில் ஏற வேண்டியிருக்கும். தெருவில் போய்க் கொண்டிருந்தவர்களை உதவிக்கு அழைத்தேன். “திரைச்சீலைக்குப் பின்னால என்ன இருக்கு?” எல்லோருக்கும் தெரிந்துகொள்ள விருப்பமாக இருந்தது. “மதிப்புமிக்க வாடிக்கையாளர் ஒருவர்,” என்று நான் சொன்னபோது “விளம்பரம் தேட வேடிக்கையான வழியா இருக்கே,” என்றார் ஒருவர். ஆனாலும் அவர்களில் பல பேர் குன்றின்மீது அதைத் தள்ளுவதற்கு உதவிசெய்ய முன்வந்தார்கள்.

உடைமாற்றும் அறையை ஒன்றுசேர்ந்து நகர்த்தினோம். பாதை செங்குத்தாக மாறமாற, திரைச்சீலைகள் வேகமாக அசைந்து விலகியபோது உள்ளே இருந்த வாடிக்கையாளரின் வடிவத்தைக் கொஞ்சம் பார்க்க முடிந்தது. வேறு எவரும் கவனித்ததாகத் தெரியவில்லை, ஆனால் அவர் பருமனாக இல்லையென்பதைப் பார்க்க முடிந்தது. சிறிய உருவமாக இருந்தாலும் சின்னஞ்சிறிய உருவம் என்று சொல்லமுடியாது. துல்லியமாகச் சொல்வதென்றால், மனித உருவம்போலவே இல்லை. திரைச்சீலை சூழப் பார்க்கும்போது இதுவரை பார்த்தேயிராத மாறுபட்ட வடிவத்தில் இருந்தார். ஒட்டிக்கொள்வதும் சத்தமாக விழுங்குவதும் நீர் அசைவதும் போன்ற ஒலிகள் அவ்வப்போது கேட்கும். பிறகு திரைச்சீலை சில இடங்களில் காற்றடைத்தது போலவும் சில இடங்களில் குழிந்தது போலவும் ஆனது. இவ்வளவு சிறப்பான உடல் அமைப்பைக் கொண்டவருக்கு ஏற்ற உடை எதுவுமே கிடைக்கவில்லை என்பதில் ஆச்சரியமில்லை.

உடைமாற்றும் அறையைக் குன்றின்மீது தள்ளி வந்ததால் மூச்சு வாங்கியது. இப்போது குன்றின் மறுபக்கம் இறங்க வேண்டியதுதான் பாக்கி. அந்த நேரத்தில் என் கையில் இருந்த கயிறு நழுவி உடைமாற்றும் அறை செங்குத்தான தெருவில், சக்கரங்கள் கடாமுடாவென்று சத்தம்போட, உருள ஆரம்பித்தது. என்னுடைய திறனையெல்லாம் ஏற்கனவே பயன்படுத்திவிட்டபடியால் அதன் பின்னால் ஓடப் பலம் இல்லை. நம்ப முடியாத வேகத்தில் குன்றிலிருந்து சடசடவென்று உருண்டு மேலும் மேலும் சிறியதாக மாறிக்கொண்டே போனது.

“மேடம்,” என்று இயன்றவரை உரக்கக் கத்தினேன். “உங்களுக்குப் பிடிச்சா அந்தத் திரைச்சீலையை எடுத்துக்கோங்க.”

புறப்பட்டுப் போகும் கார் ஜன்னலின் வழியே யாரோ விடைபெறுவதுபோல திரைச்சீலைக்கு நடுவே இருந்து ஒரு கை வெளியே நீண்டு வெகுநேரத்துக்கு என்னை நோக்கி அசைந்தது. திடீரென அந்தக் கை தெருவில் எதையோ வீசியது. ஓடிப் போய் அதை எடுத்தபோது, என்னால் அடையாளம் காண முடியாத கரன்சியாக இருந்தது.

அன்றுமுதல், தெருவில் நடக்கும்போது பார்ப்பவை எல்லாவற்றையும் குறித்து எல்லா வகையிலும் கற்பனை செய்ய ஆரம்பித்தேன். எதுவும் என்னுடைய கட்டுப்பாடற்ற கனவையும் தாண்டிய ஏதோவொன்றாக மாறியது. என் வாடிக்கையாளரின் உடற்கட்டு வழிந்து ஓடக் கூடியதாகவும் விசித்திரமானதாகவும் இருந்தது, நீங்கள் பார்க்கும் விதத்தைப் பொறுத்து நேர்த்தியாக இருந்ததெனவும் சொல்லலாம். புல்வெளியில் விரிக்கப்பட்ட பிக்னிக் போர்வையொன்றை உருவகப்படுத்திக் கொள்ளுங்கள் – அது பூ வடிவங்கள் அச்சிட்ட ஆடைபோல அவருக்குப் பொருத்தமாக அழகாக இருக்குமென்று அடித்துச் சொல்வேன்.


ஆங்கிலம்: யுகிக்கோ மோட்டோயா

தமிழில்: கார்குழலி

[ads_hr hr_style=”hr-fade”]

[tds_info]

ஆசிரியர் குறிப்பு :

யுகிக்கோ மோட்டோயா (Yukiko Motoya) நாவலாசிரியர், நாடகாசிரியர், நாடக இயக்குனர், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர் என்று பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த கலைஞராக இருக்கிறார். பல்வேறு ஜப்பானிய இலக்கிய நாடகவியல் பரிசுகளையும் விருதுகளையும் பெற்றவர். அவருடைய படைப்புகள் திரைப்படங்களாகவும் வெளிவந்து இருக்கின்றன.  

பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி இவற்றில் வெளிவரும் மோட்டோயாவின் படைப்புகளுக்கு மக்களிடையே இருக்கும் பெரும் வரவேற்பை மனதில் கொண்டு ஜப்பானில் வெளிவரும் முதன்மை ஆங்கில நாளிதழான ‘தி ஜப்பான் டைம்ஸ்’ இவருக்கு ‘ஜப்பானிய ஊடகங்ககளின் செல்லக் கண்மணி’ என்ற பட்டத்தைச் சூட்டி மகிழ்ந்தது.

சிறுவயது முதலே அகதா கிறிஸ்டி, ஆர்தர் கானன் டாயில், எடோகவா ரன்போ போன்ற எழுத்தாளர்களின் துப்பறியும் கதைகளிலும் மேங்கா என்ற கிராஃபிக் திகில் கதைகளிலும் அதிக விருப்பம் கொண்டிருந்தார் மோட்டோயா. 2000-ஆம் ஆண்டில் நாடக நிறுவனம் ஒன்றைத் துவக்கி தன் நாடகங்களை மேடையேற்றினார். பத்திரிகைப் பதிப்பாசிரியர் ஒருவரின் உந்துதலால் 2002-ஆம் ஆண்டில் ‘எரிக்கோ டோ ஜெட்டாய்’ என்ற தன் முதல் சிறுகதையை எழுதினார். பிறகு நாவல்களையும் எழுத ஆரம்பித்தார்.

2018-ஆம் ஆண்டில் இவருடைய சிறுகதைகளை அசா யோனேடா ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து ‘தனிமையான உடற்பயிற்சியாளர்’ (The Lonesome Bodybuilder) என்ற தொகுதியாக அமெரிக்காவில் வெளியிட்டார். ‘முட்டாள்தனமான நகைப்புக்குரிய விஷயங்களை அவற்றின் எல்லைவரையிலும் கொண்டு செல்வது மூலம் வாசகர்களின் உள்ளங்களைக் கொள்ளைகொள்கிறார்’ என்று இவரின் எழுத்து குறித்து நியூ யார்க் டைம்ஸ் இதழின் விமர்சகர் எழுதுகிறார். இந்தக் கதையைப் படிக்கும்போது அது உண்மைதான் என்று தோன்றுகிறது.

மொழிபெயர்ப்பாளர்:  

கார்குழலி தற்போது மென்பொருள் நிறுவனமொன்றில் கணினிவழிக் கற்றலுக்கான துறையில் பணியாற்றுகிறார்.  தமிழ், ஆங்கிலம் என இரு மொழியிலும் எழுதும் எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். ‘சந்தமாமா‘ ஆங்கில இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்‘ நாளிதழில் இளம் பருவத்தினருக்காகத் தமிழக வரலாறு பற்றிய சுவையான குறிப்புகளை வாரத் தொடராக இரண்டரை வருடங்களுக்கும் மேலாக எழுதியிருக்கிறார். துலிகா பப்ளிஷர்ஸ், பிரதம் புக்ஸ் போன்ற பதிப்பகங்களின் தமிழ் மொழிபெயர்ப்பாளராக 45-க்கும் அதிகமான புத்தகங்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழக சமூக நலத்துறை, உலக சுகாதார நிறுவனம் (WHO), சேவ் தி சில்ட்ரன் (Save the Children), பன்னாட்டு எயிட்ஸ் தடுப்புமருந்து முன்னெடுப்பு (IAVI) துளிர் (Tulir CPHCSA) போன்ற நிறுவனங்களுடன் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்

 

[/tds_info]

Previous articleஜப்பான் இலக்கிய மரபு: மன்யோஷூ – கொகின்ஷூ – ஹைக்கூ
Next articleரியுனொசுகே அகுதாகவாவின்” சுழலும் சக்கரங்கள்” | மரண விழைவு குறித்த அலைக்கழிப்பின் அழகியல்
Avatar
கார்குழலி தற்போது மென்பொருள் நிறுவனமொன்றில் கணினிவழிக் கற்றலுக்கான துறையில் பணியாற்றுகிறார். தமிழ், ஆங்கிலம் என இரு மொழியிலும் எழுதும் எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். ‘சந்தமாமா‘ ஆங்கில இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்‘ நாளிதழில் இளம் பருவத்தினருக்காகத் தமிழக வரலாறு பற்றிய சுவையான குறிப்புகளை வாரத் தொடராக இரண்டரை வருடங்களுக்கும் மேலாக எழுதியிருக்கிறார். துலிகா பப்ளிஷர்ஸ், பிரதம் புக்ஸ் போன்ற பதிப்பகங்களின் தமிழ் மொழிபெயர்ப்பாளராக 45-க்கும் அதிகமான புத்தகங்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழக சமூக நலத்துறை, உலக சுகாதார நிறுவனம் (WHO), சேவ் தி சில்ட்ரன் (Save the Children), பன்னாட்டு எயிட்ஸ் தடுப்புமருந்து முன்னெடுப்பு (IAVI) துளிர் (Tulir CPHCSA) போன்ற நிறுவனங்களுடன் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்

2 COMMENTS

  1. உளவியல் சொற்களைக் கொண்டு அழகாக பின்னப்பட்டிருக்கிறது கதை! சிறப்பான மொழியாக்கம்!

  2. ஆழ்ந்து படித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.