ரியுனொசுகே அகுதாகவாவின்” சுழலும் சக்கரங்கள்” | மரண விழைவு குறித்த அலைக்கழிப்பின் அழகியல்


“…

சாதல்

ஒரு கலை, மற்ற எல்லாவற்றையும் போல

அதையும் நான் சிறப்பாகவே செய்கிறேன்”

  • சில்வியா பிளாத்.

அமெரிக்க கவிஞர் சில்வியா பிளாத், ஹெம்மிங் வே, விர்ஜினியா வூல்ஃப், ஆத்மாநாம் என்று மனசிதைவுக்கு ஆட்பட்டு தற்கொலை செய்துகொண்ட படைப்பாளிகள் உலகெங்கும் பலர் உண்டு. அவர்களின் கூர்மதியும், நுண்ணுர்வு கொண்ட மென்மையான மனமுமே அம்முடிவை நோக்கி அவர்களை உந்தித் தள்ளியிருக்கக்கூடும். தன் எழுத்தில் சோர்வின் துளிகூட வெளிப்படுத்தாத ஹெம்மிங்வே போன்றார் ஒரு ரகமென்றால் தொடர்ச்சியாக அத்தகைய எண்ணங்களை தன் எழுத்தில் தொடர்ந்து இடம்பெறச் செய்த சில்வியா பிளாத் போன்றோர் மற்றொரு ரகம். இதில் அகுதாகவா இரண்டாம் ரகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்.

ஜப்பானிய சிறுகதை எழுத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ரியுனொசுகே அகுதாகவா தன்னுடைய முப்பத்தைந்தாம் வயதில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஜப்பானிய நவீன இலக்கியத்தின் இன்றைய வளர்ச்சிக்கான விதையை இட்டவர் என்று அகுதாகவாவைக் கூற முடியும். ‘அகுதாகவா புறப்பட்ட புள்ளியிலிருந்துதான் நானும் புறப்பட்டேன்’ என்று முன்னுரையில் குறிப்பிடும் முரகாமியின் புனைவுகளை வாசித்தவர்களுக்கு அவற்றில் அகுதாகவாவின் தாக்கம் இருப்பதைக் கண்டுகொள்வதில் அதிக சிரமம் இருக்காது.

தன்னுடைய இருப்பு சார்ந்த கேள்விகள் அகுதாகவாவைத் தொடர்ந்து துரத்திக்கொண்டிருந்திருக்கின்றன. இளமையில் மனம் பிறழ்ந்த அம்மா, வியாபாரம் நொடித்துப் போன அப்பா, தத்துப்பிள்ளையாக வளர்ப்பு என்று தன் வாழ்வின் தொடர்ச்சியான அலைக்கழிப்புக்கான காரணங்களையும் அவற்றிலிருந்து தன்னை விடுவித்து அமைதிப்படுத்திக்கொள்ளும் பல்வேறு திறப்புகளையும் தேடித் திரிந்திருக்கிறார். அத்தகைய முயற்சியின் ஒரு வெளிப்பாடாகவே இவருக்கு எழுத்து இருந்திருக்கிறது. சில நேரங்களில் அதுவே அவரை எழுதவிடாமலும் செய்திருக்கிறது. தன்னுடைய தற்கொலைக்கு முன்பு, தற்கொலையைப் பற்றி எழுதப்பட்டு, அவர் தற்கொலை செய்துகொண்ட பிறகு கிடைத்த இத்தொகுப்பிலிருக்கும் “ஒரு மூடனின் வாழ்க்கை குறிப்பு” கதை அவ்வகையில் முக்கியமான ஒன்று. அகுதாகவா  தன்னுடைய மொத்த வாழ்வையும் ஐம்பத்தோர் சிறு குறிப்புகளுக்குள் அடைத்த கதை என அதைச் சொல்லலாம்.  புத்தகங்கள், அம்மா, தான் வளர்ந்த வீடு, நேசித்த நகரம், தேடிக்கொண்டிருந்த சுயம், தன்னை ஆட்கொண்டிருந்த வியாதி என்று விரியும் கதையில் வரும் குறிப்புகளில் ஓரிடத்தில் “வாழ்வின் மீதான சோர்வுதான் மரண விழைவைவிட அதீதமானது” என்று குறிப்பிடுகிறார்.

தன் தாயைப் போன்றே தானும் பிற்காலத்தில் மன நலம் பாதிக்கப்பட்டு விடுவோம் என்பதை சிறுவயதிலேயே மிகவும் அழுத்தமாக நம்ப ஆரம்பித்திருக்கிறார்.

“என்னை உறக்கத்தில் கழுத்தை நெரித்துக் கொல்லத் தயார் எனும் கருணை மிக்கவர் எவரேனும் உண்டா?”- அகுதாகவாவின் மிகவும் புகழ்பெற்ற, இச்சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக் கதையாகிய ‘சுழலும் சக்கரங்கள்’ கதையின் கடைசி வரி இது. இத்தொகுப்பின் வழியே அகுதாகவாவைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் ஒருவர் இவ்வரியிலிருந்தே தொடங்குவது சரியாக இருக்கும்.

நேரம் தவறாமை, சுறுசுறுப்பு, உழைப்பு, ஒட்டுமொத்த மானுட சமுதாயத்தையே உலுக்கிப் போட்ட ஹூரோசிமா நாகசாகி அணுகுண்டு வீச்சுக்குப் பின்னரும்கூட தளராது எழுந்து வந்த ஜப்பானிய தேசத்தின் தன் முனைப்பு எல்லாம் உலகமறிந்தவை. இப்படி ஜப்பானைப் பற்றியும் ஜப்பானியர்களைப் பற்றியும் பொதுவில் கட்டமைத்துவைக்கப்பட்டுள்ள சித்திரங்களுக்கு மாறாக அவர்களின் அக மனதை உலுக்கிக்கொண்டிருக்கும் அலைக்கழிப்பையும் எதிலும் பற்று கொள்ளவியலாத தன்மையையும் ஜப்பானின் நவீன இலக்கியம் தொடர்ந்து பதிவு செய்துகொண்டு வருகிறது. அதைத் தொடங்கிவைத்தவர் என்று அகுதாகவாவைக் கூற முடியும்.

இத்தொகுப்பில் வெளிப்படும் வாதையும் அலைக்கழிப்பும் தாழ்வுணர்ச்சியும் தான் வெறுக்கும் சமூகத்தின்பால் இருக்கும் பயமும் தன் இருப்பு சார்ந்து வெளிப்படும் கேள்விகளும் தனியொரு எழுத்தாளனுடையவை என்று புறமொதுக்கிவிட முடியாது. இத்தகைய துரத்தும் கேள்விகளிலிருந்து தப்பித்துக்கொள்ளும் ஒரு மார்க்கமாகவே ஜப்பானிய சமூகம் அயராத உழைப்பைக் கையில் எடுத்துக்கொண்டிருக்கிறதோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.

எதையும் பற்றிக்கொள்ளவியலாமல் வாழ்வின் அர்த்தமின்மையால் ஆட்பட்டு நிற்கும் இப்படியான இருண்மை சூழ்ந்த மனம், ஒன்று அதிலிருந்து விடுபட்டு வெடித்துக் கிளம்பி முற்றிலும் வேறொன்றாக உருமாறி நிற்கும். இல்லை, தன்னையே இரையாக்கித் தின்று செரித்து செத்து மடியும். ஒட்டுமொத்தமாக ஜப்பான் என்னும் தேசமாக முதல்நிலையைப் பற்றி வந்து தப்பிவிட்டதாகத் தெரிந்தாலும் தனிமனிதனாக அதிலிருந்து விடுபட்டு வெளிவருவது அவ்வளவு சுலபமில்லை என்பதை அகுதாகவாவை வாசிக்கும்போது புரிந்துகொள்ள முடிகிறது.

ஆறு கதைகள் கொண்ட சிறு தொகுப்பு. இவையே அகுதாகவாவின் இலக்கிய இருப்பினைப் புரிந்துகொள்ள போதும் என்ற அளவில் மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளாக உள்ளன. இவற்றில் சுழலும் சக்கரங்கள், ஒரு மூடனின் வாழ்க்கைக் குறிப்பு ஆகிய இரு கதைகளும் எழுதப்பட்ட வகையிலும் அவற்றின் பேசுபொருளை முன்வைத்தும், இன்று ‘தன்வரலாற்றுப் புனைவு’ என்று கொண்டாடப்படும் வகைமையின் முன்னோடி எனலாம். அக்காலத்தில் ஜப்பானில் இத்தகைய கதைகளை “I Novel” என்று வகைப்படுத்தியுள்ளனர்.  எழுத்தாளன் தன் வாழ்வைப் பற்றி கூர்ந்த அவதானத்தோடு புனைவுக்கும் தன்னுடைய வாழ்வுக்கும் அதிக இடைவெளியில்லாமல் எழுதும் கதைகள் என்று இவற்றைப்  புரிந்துகொள்ளலாம்.

சிலந்தி இழை, ஞானி, ராஷோமோன், மூங்கில் காட்டினுள்ளே ஆகிய நான்கு கதைகளும்  தொன்மக் கதைகளின் மேல் தன் தனித்துவமான பார்வையை முன்னிறுத்திப் புனைந்து எழுதப்பட்ட கதைகள். ராஷோமோன், மூங்கில் காட்டினுள்ளே ஆகியவை புதிர்த்தன்மை கொண்டவை. குரசேவாவின் மிகவும் புகழ்பெற்ற ராஷோமோன் திரைப்படம் இவருடைய ராஷோமோன் மற்றும் மூங்கில் காட்டினுள்ளே என்னும் இரண்டு கதைகளை மூலமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது.

ராஷோமோன் கதையில் வரும் போரினால் சிதைக்கப்பட்ட கோட்டையையும், வேலைப்பாடுகள் கொண்ட தூணையும், பெரிய கதவையும் பிணங்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் மாடியையும் அவரின் அக உலகோடு இணைத்து வாசிக்க இயலும். இருத்தலின் பொருட்டு தீமையைக் கைக்கொள்வதா அல்லது ஒரு சாமுராயைப் போன்று நேர்மை வழுவாமல் செத்து மடிவதா என்ற அகப்போராட்டத்தில் சிக்கி உழல்கிறான் கதையின் நாயகன். இதுவும் ஜப்பானில் தொன்மாக வழங்கப்பட்ட கதையைச் சற்று மாற்றி வேறொரு பரிமாணத்தில்  சொல்லப்பட்டிருக்கும் கதையே. அதே நேரத்தில், சின்னச் சின்ன குறியீடுகளின் வழியே அவருடைய சமகாலத்தின் நிலையற்ற புறச் சூழலையும் அவை தனிமனிதனின் அகத்தில் ஏற்படுத்தும் குழப்ப நிலையையும் காட்சிப்படுத்திய விதம் இக்கதையை மிக முக்கியமான கதையாக நிலை நிறுத்துகிறது.

ஒவ்வொரு கதையும் எழுதப்பட்ட வகையில் தொள்ளாயிரத்தின் ஆரம்ப காலகட்டத்திலேயே பல்வேறு வடிவ மாதிரிகளை முயன்று பார்த்தவையாக உள்ளன. அவற்றை வெறும் பரிசோதனை முயற்சி என்றில்லாமல் அவ்வடிவங்களைக் கதைகளின் ஆன்மாவே தீர்மானித்திருப்பதே ஒரு நூற்றாண்டு கழித்தும் அவை தம் புதுமை மாறாமல் நிலைபெற்றிருக்கக் காரணமாக இருக்கிறது.

அகுதாகவா அன்றைய காலத்திய பிற நாட்டு இலக்கியங்களோடு நல்ல பரிச்சயம் கொண்டவராக இருந்திருக்கிறார். கதைகளின் இடையில் வரும் குறிப்புகள் வழியே இவற்றை நாம் உணர்ந்துகொள்ள முடியும். தஸ்தாவஸ்கியின் குற்றமும் தண்டனையில் வரும் ரஸ்கோல் நிக்காவிடமிருந்த தடுமாற்றத்தை சுழலும் சக்கரங்களில் வரும் நாயகனிடத்திலும் நாம் உணர முடியும். அந்நாயகனே அகுதாகவாதான் என்றுணரும்போது அவ்விலக்கியங்கள் அவரிடம் ஏற்படுத்திய தாக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

அகுதாகவாவின் இக்கதைகளின் வழியாக அவரின் புனைவுலகை தொகுத்துக்கொள்ள முற்படும்போது, தன் வாழ்வின் மீது கவிந்திருக்கும் இருளை விளங்கிக்கொள்ளத் துளி வெளிச்சத்தை, பொருளின்மை கொண்டு வந்து சேர்க்கும் வெற்றிடத்தை நிரப்பிக்கொள்ளத் தேவைப்படும் சிறு பனித்துளியைத் தேடி காலமெல்லாம் அலைகழிந்து ஓய்ந்த ஒருவன், தான் கடந்து வந்த பாதை பற்றி எழுதிய பயணக்குறிப்புகள் என்ற பிம்பமே மனதில் எழுந்து வருகிறது.

அகுதாகவாவை மிகவும் நுணுக்கமாக வாசித்து அவரின் ஒட்டுமொத்த புனைவுலகைப் பற்றிய சித்திரத்தை ஆறே கதைகளில் கொண்டுவந்து சேர்த்தமைக்கும் நூற்றாண்டு கால இடைவெளியை உணரவிடாமல் செய்த இயல்பான மொழிபெயர்ப்புக்காகவும் கணேஷ்ராமை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அதேபோல அட்டைப்படத்திலிருந்து உள்ளடக்கம் வடிவமைப்பு என்று அதீத கவனமெடுத்து இதைப் புத்தகமாக்கியிருக்கும் நூல்வனம் பதிப்பகத்தைப் பாராட்டாமல் இக்கட்டுரையை முடிப்பது முறையன்று.


கார்த்திக் பாலசுப்பிரமணியன்

[tds_note]

நூல் : சுழலும் சக்கரங்கள்

ஆசிரியர்: ரியுனொசுகே அகுதாகவா

தமிழில் : கே.கணேஷ் ராம்

விலை : ₹ 180

வெளியீடு : நூல் வனம்

தொடர்புக்கு : கைப்பேசி: 91765 49991

[/tds_note]

 

கார்த்திக் பாலசுப்ரமணியன் இவர் 1987 ஆம் வருடம் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் பிறந்தார். கல்லூரிப் படிப்பை கோவையில் முடித்தவர், பணியின் நிமித்தம் நொய்டா, ஜோகன்ஸ்பர்க், சிட்னி போன்ற நகரங்களில் வசித்திருக்கிறார். தற்போது சென்னையில் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். மென்பொருள் நிறுவனம் ஒன்றில் தலைமை தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிகின்றார்.

நூல்கள் :

1. ‘டொரினா’ – சிறுகதை தொகுப்பு – யாவரும் வெளியீடு ( 2017 )

2. நட்சத்திரவாசிகள் – நாவல் – காலச்சுவடு வெளியீடு (2019)

 

 

 

1 COMMENT

  1. அகுதகவாவின் படையில் சிறுகதை மட்டுமா வேறு படைப்புகள் இல்லையா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.