உணர்வு

         வள்ளியம்மாள் தனது கணவன் மகாராஜாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து இரண்டு நாட்கள் ஆயிற்று. பெரிதாக வீட்டை விட்டு வெளியே வராதவள் பலவித டெஸ்ட்கள், ஸ்கேன் என்று இரண்டு நாட்களில் மருத்துவமனைக்குள் மகாராஜாவுக்குத் துணையாக அலைந்திருந்தாள். வார்டில் கொசுக்கடி, சக நோயாளிகளின் அலறல் என தூக்கமின்மையால் கண்கள் சோர்வடைந்திருந்தன. எனினும் இருபதுகளின் பாதியில் இருக்கின்ற உடல் பொலிவு அவளது மண் நிற தேகத்தை அழகாகக் காட்டியது. வார்டின் இருபது பெட்களும் இருபது விதமான நோய்களால் நிரப்பப்பட்டிருந்தன. மகாராஜா ஓரத்து பெட்டில் வாந்தியெடுத்து வந்த சோர்வுடன் சரிந்து படுத்திருந்தான். பக்கத்துப் பெட்டில் பொன்னுச்சாமி தாத்தா அனைத்தையும் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தபடி பாட்டி பாட்டிலைப் பிடிக்க ஜூஸை சிறுசிறு மடக்குகளாக முழுங்கினார்.

               இந்த இரண்டு நாட்களில் மகாவுக்கு மஞ்சள்காமாலை கல்லீரலில் ஏதோ பிரச்சனை என்பதைத்தாண்டி வள்ளிக்கு ஏதும் பிடிகிடைக்கவில்லை. பகல் பதினோரு மணி, வெளியே மழை பெய்துகொண்டிருந்தது. காலை உணவாக பார்சல் இட்டலியைப் பிரித்துத் தரையில் அமர்ந்தாள். ஆஸ்பத்திரியின் டிஸ்இன்ஃபெக்ட்டட் மொழுகிய தரையின் வாடை, வெளியே பெய்யும் மழையின் ஈரம், நோய்களின் வீச்சம் எல்லாம் தேங்காய்ச்சட்னியில் கலந்து மூன்றாவது துண்டு இட்டலியை விழுங்கும்போது அந்த மணத்தின் கடினத்தை உணர்ந்தாள். பொன்னுச்சாமி தாத்தாவின் மூக்கையும் அதே மணம் எட்டியதற்கு அடையாளமாய் பெருமூச்சு விட்டு கண்ணை மூடித் திறந்தார்.

               ஒருவழியாக இரண்டு இட்டலிகளைத் தின்று மூன்றாவது இட்டலியைப் பொட்டலமாக்கி கவரில் கட்டிவிட்டு கைகழுவ எழும்போது காபி ஃபிளாஸ்க்குடன் அத்தை மதியைக் கூட்டி வந்திருந்தாள். மதிக்கு மூன்று வயது. வள்ளிக்குத் திருமணமாகி இரண்டு வருடம் கழித்து மதி பிறந்தாள். இன்னும் பள்ளி செல்லவில்லை. அடுத்த வருடம் கான்வென்ட்டில் சேர்க்கலாமென்று போன மாதம்தான் மகாவும் வள்ளியும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

          அத்தை,”இப்பதான் காலை சாப்பாடு சாப்டுதியா? பெறவு எப்படிடி என் மவன நல்லா கவனிச்சுப்ப? நீ தெடமா இருக்க வேணாம்? ரெண்டு பேருக்கும் காபி போட்டு கொண்டாந்துருக்கேன். குடிங்க” . வள்ளி, “யத்த, அவரு சத்த நேரம் முன்னாடிதான் வாந்தியெடுத்தாரு, கழுவிவிட்டுட்டு லெமன்சூஸ் போட்டு கொடுத்துட்டுல்ல சாப்புட ஒக்காந்தேன்என்றபடி மூன்று கிளாஸில் காபி எடுத்துயத்த, இந்தாங்கஎன்று நீட்டினாள். மற்றொரு கிளாஸை பக்கத்து பெட் பாட்டியிடம்பாட்டி, ஒங்களுக்குதான்என்று தந்தாள். கட்டிலோரத்தில் ஏறி அமர்ந்து மதியை மடியில் ஏற்றிக் கொண்டு இரண்டு மடக்கு காபி குடிக்கும்போதே மதிஅம்மா, எதக்கு காபி”  என்று கையை குறுக்கே நீட்டியதும் மதிக்கும் காபியை ஊதி ஊட்டிவிட்டாள்.

              அத்தை பாட்டியிடம் பேச ஆர்வம் கொண்டாள். “மதினிக்கு எந்தூரு?” பாட்டிசிரிவைகுண்டொம், உங்களுக்கு“. “எனக்கு வாக்கப்பட்டது திருத்து, பொறந்தது விட்டிலாபுரம், இவ எங்கண்ணேன் மவதான், மவள சாத்தூர்ல கெட்டிக் கொடுத்துருக்கேன்என்றாள். பாட்டி கண்களை விரித்துபக்கத்தூரு புள்ளையா? நம்ம புள்ளைக நம்ம புள்ளைகதான் என்னமா கவனிச்சுக்குதுகஎன்று வியந்தாள். அத்தைஅண்ணனுக்கு என்ன செய்யுது மதினி?” என்றாள். பாட்டிஅடிக்கடி சொவ்ம்யில்லாம போயிடும், நரம்பு நோவுவயசாகிதில்லஎப்படியும் கெட்டின தாலியோட நான் முன்னாடி போயிகிருவன்.. எஞ்சாமிஎன்று தாத்தாவின் தலையை வருடியபடி கண்களில் நீர்கட்டியது. அவரது விரல்கள் மெதுவாக பாட்டியின் விரல்களைத் தொட்டது. “சும்மா கெடங்க மதினிஎன்னத்த பேசிக்கிட்டுநம்மபோனா யாரு பாப்பாகரொம்ப காலத்துக்கு ரெண்டு பேரும் சொகமா இருப்பியளாக்கும்என்று அத்தை அதட்டலாகச் சொன்னாள்.பாட்டி கண்ணீரைத் துடைத்தபடிஎனக்கும் அதேன் ஆசரெண்டு மவனுவளப் பெத்தேன்ஒருத்தன் மெட்ராசு இன்னொத்தன் திருப்பூர்னு பொண்டாட்டி புள்ளயளோட தொழிலுக்கு போய்ட்டானுவஅவனுவள நம்பக்கூடாதுனு வயல நம்பி வாழுதோம்கடைசி வர இவுகளுக்கு நான் ஒருகொறையும் வச்சிடக்கூடாதுஎன்று அவர்பக்கத்தில் அமர்ந்து மௌனமானாள்.

            மதி வள்ளியை விளையாட அழைத்து தொல்லை செய்து கொண்டிருந்ததை வார்டுபாய் மாரியப்பன் வேலையினூடே கவனித்தான். அவனாகவே வந்து மகாராஜாவப் பார்த்துஅண்ணேன், நான் மாரியப்பன், இங்கனதான் வேலை செய்யுறேன்உங்க பாப்பாவா அண்ணேன்என்று மதியைக் காட்டி கேட்டான். மகாராஜாஆமாங்க, ஏம்மா மதிய இங்க கொண்டா… ” என்று வள்ளியிடமிருந்து மதியை இழுத்து அணைத்துஎந்தங்கம்என்று கன்னத்தில் கொஞ்சி முத்தமிட்டுமாமாகிட்ட விளையாடுறியா பாப்பாஎன்றான். மதி உதட்டைப் பிதுக்கிப்பா, உன் மீச்ச கிச்சுக்குதுஎன்றாள். வள்ளியும் அத்தையும் அதை நின்றபடி ரசித்தனர். குழந்தைகள்தான் எத்தனை அழகு. அதிலும் பெண்குழந்தைகளின் நளினமான குறும்புகளைப் பார்க்கும்போது எல்லா துன்பங்களும் மறைந்து விடும். நெற்றியில் விழுந்துகிடக்கும் சிட்டுக்குருவி முடி, சின்னக்காதுகளில் சின்ன ஜிமிக்கி, பூச்செண்டு மாதிரி தேகம், வாழைப்பூ கற்றை போலக் குவிந்த பிஞ்சுவிரல்கள் என ஒவ்வொன்றாக ரசிக்கலாம்.

              வள்ளி பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடித்து ரிசல்ட் வரும் முன்பே அத்தை பெண் கேட்டு வந்தாள். தேர்வு சமயத்தில் அவள் தேர்வு எழுதத் தினமும் ஆட்டோவில் அழைத்துச் சென்று விட்டு கூட்டிவருவான். ஆட்டோவின் ரியர் வ்யூ மிரரில் அவள் மகாராஜாவை கொஞ்சம் பார்த்துக் கொண்டு அவன் பார்க்கும் நேரங்களில் படிப்பதுபோல பாவனை காட்டிக்கொண்டு வருவாள். அவளுக்கு அந்த கண்ணாடி விளையாட்டு மிகவும் பிடித்திருந்தது.

               பரிட்சை முடிந்து அத்தை வந்து பெண்கேட்ட சமயத்தில் மகா குறுக்கே புகுந்துசின்னப்புள்ளையப் போய் கல்யாணம் பண்ணனும்ங்கிறிங்கஒரு டிகிரி ஏதாவது படிக்கட்டும்நான்தான் ஆட்டோ ஓட்டுறேன்….என் பொண்டாட்டி டிகிரி படிச்சிருக்கானா எனக்குதானே பெருமஎன்று பேசினான். அத்தை உறுதி மட்டும் செய்துகொண்டாள். அச்சமயத்தில் வள்ளிக்கும் மகா பேசியது பெரிய ஏமாற்றமாக இருந்தது. ஒரு பெண்கள் கல்லூரியில் இயற்பியல் பிரிவில் அவனே உடன் வந்து சேர்த்துவிட்டான். அது தனியார் கல்லூரி எனினும் பெண்களுக்குப் பாதுகாப்பானது. தினமும் கல்லூரிக்கு அழைத்துச் செல்வான்; கூட்டி வருவான்; ஓரிரு வார்த்தைகள் பேசுவான். அதைத்தாண்டி அணுகமுடியாதவனாகவே இருந்தான். கட்டுப்பாடான கல்லூரியாக இருந்தபோதும் சகமாணவிகளின் காதல் கதைகளைக் கேட்டு வள்ளிக்கு சலிப்பும் ஏக்கமும் மிஞ்சியது. அளவாகப் படித்து அளவான மதிப்பெண்கள் பெற்றாள். தேர்வுக்கு மகா சொல்லும் ஆல் தி பெஸ்டே லவ் யூ அளவிற்கு உவகை அளிப்பதாக இருந்தது. அவனது மன இறுக்கம் அவளையும் அத்துமீறிட இயலாமல் செய்தது. இளங்கலை இயற்பியல் முடித்தபின் ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டில் நைட்டியுடன் இருக்கும்போது அம்மாவைக் கூட்டிவந்து பூ வைத்துத் தட்டு மாற்றி நிச்சயம் முடித்தான். அடுத்த இரண்டு வாரத்தில் கல்யாண தேதியை முடிவு செய்து திருச்செந்தூரில் திருமணம் செய்தார்கள். ஆட்டோவை நகரத்திற்குள் ஓட்டினால் இன்னும் வருமானம் வருமென்றும் ஸ்கூல் ட்ரிப் நிரந்தர வருமானம் தருமென்றும் திம்மராஜபுரத்திற்கு குடிவந்தார்கள்.

          மகாவுக்கு குடிப்பழக்கம் உண்டு. அவன் பதின்ம வயதுகளில் ஆட்டோ ஓட்டும்போது உடல் அசதிக்காகப் பழகியது. தினமும் இரவில் ஒரு ஆஃப் குடித்துவிட்டு படுத்துறங்கி மறுநாள் வழக்கம்போல எழுந்து வேலைக்குக் கிளம்பிவிடுவான். திருமணமாகி வள்ளி வந்தபிறகு இரவில் அவன் குடிக்கும்போதே ஆட்டுக்கறிக்குழப்பு, கோழி வறுவல், மீன்குழம்பு, மீன்வறுவல் என ஏதாவது சமைத்து வந்து இட்டலியுடனோ சோறுடனோ விரவி ஊட்டிவிடுவாள். அன்றைய நாளின் சவாரிகளைப் பற்றிப் பேசிவிட்டு உறங்கிவிடுவான். அவன் தேகக் கருமை, அதன்மீது படர்ந்திருக்கும் சுருள்முடி, சவரம் செய்யாத மீசை தாடி முகத்திற்குள் இருக்கும் குழந்தைத்தனம் முதலியவற்றை நாணத்துடன் ரசித்துவிட்டு அவன்மேல் கைபோட்டுத் தூங்க முயல்வாள். கணவனாக இருந்தாலும் அவனை அவளாகப் போய் தொடுவதற்குத் தயங்கினாள்.

              சில இரவுகளில் அவனாகவே கட்டிப்பிடித்து முத்தமிட்டு மீசைதாடியினால் கூச்சம் ஏற்படுத்தி விளையாடுவான். தொடர் விளையாட்டுகளால் அவ்வப்போது கூடல்கள் நிகழ்ந்தன. முடிந்ததும் எழுந்து புகைபிடிக்கப் போய்விடுவான். கூடலுக்குப் பிறகு தனியாகக் கட்டிலில் கிடப்பதைப் போன்ற வாதை ஏதுமில்லை. மகா மீது அத்தனை காதல் இருந்தாலும் கூடல் முடிந்தபின் அவன்மீது ஒரு பெரும் வெறுப்பு உருவாகும். தானாகக் கண்களில் நீர் பெருகி தலையணையை நனைக்கும். ஏன் இந்தக் கூடல் நிகழ்ந்தது வழக்கம்போல உறங்கியிருக்கலாமென்றே அவளுக்கு ஒவ்வொரு கூடலிலும் தோன்றியது. அவனுடன் இருந்த கடைசி கூடல் வரை கட்டில் தனிமையால் கூடல்களை வெறுத்தாள். ஆனால் ஒருபோதும் அது தனக்குப் பிடிக்கவில்லை என்பதை அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. மதி பிறந்த பிறகு அவளுக்குக் கொஞ்சம் நிம்மதி கிடைத்தது. பெரிதாகக் காமம் இல்லாமல் அவன் மதியுடன் விளையாடித் தூங்கிப் போய்விடுவான். ஆனால் மதியை அத்தை வீட்டில் விட்டுவிட்டு பகலில் சில சமயம் வந்து கூடிவிட்டுடிரிப் இருக்குடிஎன்று சொல்லிவிட்டு ஆட்டோ எடுத்துக்கொண்டு கிளம்புவது வள்ளிக்கு இன்னும் நரகமாக இருந்தது. அன்றைய நாட்களில் அவளுக்கு வேலை ஓடாது, மதியைத் திட்டுவாள், அத்தை சாதாரணமாக ஏதாவது சொன்னால் கூட அழுகையாக வரும்; பிறகு அவன் அவள்மீது கொண்டிருக்கும் அந்த வெளிப்படுத்தாத காதலை நினைத்து ஆசுவாசமடைவாள்.

               
       இதையெல்லாம் ஏன் யோசிக்கிறோம் என்று திரும்பினாள்.மாரியப்பன் மதியை வாசலுக்குத் தூக்கிச் சென்று விளையாடிக்கொண்டிருந்தான். அத்தைஇந்தாடி, இங்கயே கெடந்து நீயும் சீக்காகி படுத்துட்டா யாரு பாக்க….கொஞ்சம் வீட்ல போய் குறுக்கச் சாச்சிட்டு வாவேன்என்றாள். “யத்தஎன்று வள்ளி ஏதோ சொல்ல வரஅடியே முப்பது வருசமா எம்மவன நான்தான் பாக்குறேன்பெறகென்னகெளம்புடிஎன்று அதட்டினாள். சேலையைச் சரிசெய்தபடி மாரியப்பனைப் பார்த்து கொஞ்சமாகச் சிரித்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டாள். வீட்டைத் திறந்து நேராகப் படுக்கையறைக்குச் சென்று மொபைலை சார்ஜ் போட்டுவிட்டுப் படுத்தாள். கடும் உடல் அலுப்பில் படுத்துக் கண்ணை மூடுவதே ஒருவித விடுதலையாக இருந்தது. யோசனைகள், நினைவுகள் போன்றவை எட்டமுடியாத அளவிற்குச் சோர்வு அவள் உடலையும் மனதையும் கட்டிப்போட்டிருந்தது. எங்கிருக்கின்றோம் என்பது தெரியாமலேயே உறங்கிப் போனாள்தற்செயலாக விழிப்பு வந்தது. அறைமுழுக்க இருள்; எழுந்து லைட் போட்டுவிட்டு கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஏழரையைத் தாண்டியிருந்தது. பதட்டத்துடன் இவ்வளவு நேரம் எவ்வாறு தூங்கினோமென கடகடவென்று பாத்திரங்களைக் கழுவி எடுத்தபடி கிளம்பினாள். மொபைலில் ஐந்து மிஸ்டு கால்கள். இரண்டுமுறை அத்தை,ஒருமுறை மகா, மேலும் இரண்டுமுறை பெயர் தெரியாத எண். பதறிப்போய் அத்தைக்கு அழைத்தபடியே வீட்டைப் பூட்டிவிட்டு பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தாள். மீண்டும் மீண்டும் அடித்தும் அத்தை அழைப்பை எடுக்காதது இன்னும் படபடப்பை உண்டாக்கி வியர்க்க வைத்தது. மயக்கம் வருவது போல உணர்ந்தாள்; பேருந்து வந்து தொலையாதா என்றிருந்தது.

                ஒருவழியாகப் பேருந்து வந்தது. ஏறியமர்ந்தாள்; க்ருஷ்ணா கேட்டீனுக்கு டிக்கெட் எடுக்கும்போது அழுகை முட்டிக்கொண்டு வந்தது; மகாவின் மொபைலை அழைத்தாள். அது சுவிட்ச் ஆஃப்பில் இருந்தது. பிறகு அந்த பெயர் தெரியாத எண்ணை அழைத்தாள்; மறுமுனையில் ஆண் குரல். “சொல்லுங்க, மாரியப்பன் பேசுறன்என்றான். குரல் உடைந்து போய்தெரியாம தூங்கித் தொலைச்சிட்டேன்ங்க, நிறைய மிஸ்ட்டு கால் பாத்தேன்அத்த எடுக்கலைஅதான் புது நம்பரா இருக்கேனு போனடிச்சேன்என்றாள். அவன்பயப்படுறமாதிரி ஒண்ணுமில்லிங்க, அண்ணன் கொஞ்சம் சீரியஸ் ஆய்ட்டாப்டிபெரிய டாக்டரெல்லாம் வந்து பாத்து சரி பண்ணிட்டாங்கஇப்போ தூங்குறாக,,,நீங்க பொறுமையா வாங்கஅம்மா பாப்பாவ கடைக்கு கூட்டிட்டு போயிருக்காங்கபோன விட்டுட்டு போய்டாங்க போலஎன்றான். சற்று அமைதியாகிதேங்க்ஸ்ங்கஎன்றாள். அவன்பரவாயில்லங்கஒன்னுமன்னா பேசுறோம்னா ஒதவதானே இருக்கோம்அண்ணனுக்கு ஒன்னும் ஆவாது பாத்துக்கிடுங்கநான் வைக்கிறேன்என அழைப்பைத் துண்டித்தான். கிருஷ்ணா கேட்டீனிலிருந்து ஹைகிரவுண்டுக்கு பேருந்து பிடித்து வந்து சேர்ந்தாள். அவன் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தான்.

               பிறகு அத்தை மதியுடன் வந்து ஆறுதல் படுத்திவிட்டுஅந்த தம்பி இல்லனா தெகச்சு போய்ருப்பேன்டிகட்டா நின்னு பாத்துக்கிடுச்சுஎன்று மாரியப்பனை நிரம்பப் பாராட்டிவிட்டு மதியை அழைத்துக் கொண்டு வீட்டிற்குக் கிளம்பினாள். வள்ளி வழக்கம்போல தரையில் பெட்ஷீட் விரித்துப் படுக்க ஆயத்தமானாள். “ஏங்கஎன்று ஒரு குரல் கேட்டது. மாரியப்பன் ஒரு கேரிபேக்கை நீட்டினான். “இதுல கொசுவத்தியும் ஓடோமாசும் இருக்குநீங்களும் தடவிட்டு அண்ணனுக்கும் பூசிட்டு படுங்கசுருளை ஏத்தி தலைமாட்டு பக்கம் வச்சுக்கிடுங்கஇல்லனா கொசு பிச்சுறும்என்றான். மீண்டும்ஐயோ இதெல்லாம் எதுக்குங்க…”என்று சொல்ல கையில் திணித்ததும்தேங்க்ஸ்என்று சொல்லி வாங்கிக்கொண்டாள். அன்றிரவு ஓரளவிற்கு நிம்மதியான தூக்கம் கிட்டியது.

             மறுநாள் காலை வழக்கம்போல அன்றைய நாள் துவங்கியது. மதியம் மாரியப்பன் உணவு இடைவேளையில் கிளம்பும்போது அத்தையிடம் வந்துஎன் வீடு சாந்திநகர் தான்மாகிளம்பனும்னா சொல்லுங்கநானே கொண்டு விட்டுட்டு போறேன்என்றான். அத்தைநான் இப்போ கெளம்பலஇவதான் கெளம்பனும்தம்பிகூட போறியாடிஎன்றாள். வள்ளி முழித்தபடியத்தஅதுவந்துஎன இழுத்தாள். அத்தைசட்டுபுட்டுனு கூடைய எடுத்து வச்சிக்கிட்டு கெளம்புடி, தம்பி சாப்ட போகாம நமக்காக காத்திருக்குது பாருஎன்றாள். மறுபேச்சு பேசாமல் மகாவைப் பார்த்தாள். அவனும் சிரித்துப் போகச்சொல்லி சொன்னான். கூடை மற்றும் வாட்டர்கேனை எடுத்துக்கொண்டு மாரியுடன் நடந்தாள். டிவிஎஸ் எக்ஸ்எல்லை எடுத்துக்கொண்டு ஏறச் சொன்னான். வெயில் கொளுத்தியதை எக்ஸ்எல் சீட்டு காட்டிக்கொடுத்தது. சேலைத் தலைப்பால் முக்காடு போடும்போது கூடை தவறப்பார்த்தது. அவன் அதை வாங்கி முன்னால் வைத்துக்கொண்டான். இருவரும் கிளம்பினார்கள்.

             கொஞ்ச தூரத்துக்குப் பேசவேயில்லை. பிறகு அவனாகவேஏங்க நீங்களும் அண்ணனும் லவ் மேரேஜுங்களா?” என்றான். அவள்ம்ம், அத்தமவன்என்றாள். “அப்போ லவ்வாதான் இருக்க முடியும்நீங்க டிகிரி முடிச்சிருக்கிங்கனு அத்த சொன்னாங்கஎன்ன சப்ஜெக்ட்?” “பிஎஸ்ஸி பிஸிக்ஸ்” “ஆனாலும் உங்களுக்குப் பெரிய மனசுங்க, டிகிரி முடிச்சிட்டு அண்ணனை லவ் பண்ணிறிக்கிங்களே?”என்றான். சற்று காட்டமாகஅவுகதான் காலேஜ் படிக்க சொன்னாவஎன்றாள். சற்று தூரம் மீண்டும் அமைதி நிலவியதுஅவனே மீண்டும் ஆரம்பித்தான். “அண்ணன் ரொம்ப குடிப்பாங்களோ?” அவள்ம்ம்மட்டும் சொன்னாள். வண்டியை ஒரு சர்பத் கடையோரம் நிறுத்தி இறங்கச்சொன்னான். “தம்பி, ரெண்டு நன்னாரி சர்பத், ஐஸ் இல்லாமஎன்றான். அவள்ஐயோ எனக்கு வேணாம்என்றாள். “அட….குடிங்கஅடிக்கிற வெயிலுக்கு தெம்பு வேணாமா?” எனவும் வாங்கி கடகடவென குடித்து முந்தானையால் வாயைத் துடைத்துக்கொண்டு ஜாக்கெட்டிலிருந்து மணிபர்ஸை எடுத்தாள். அதற்குள் அவனே காசைக் கொடுத்துவிட்டு வண்டியில் ஏறச்சொன்னான்.

            அவள் வீடு வந்தது. “வாங்க, உள்ளாற வந்து தண்ணியாவது குடிச்சிட்டு கெளம்புங்கஎன்றாள். உள்ளே வந்தபிறகு தனியாக வீட்டில் இருக்கும்போது அழைத்தது தவறோ என்று தோன்றியது. போனியில் தண்ணீர் கொண்டுவந்து தந்தாள். அவன் கல்யாண போட்டோவைப் பார்த்துஅப்போ இருந்தாப்லயே இப்பயும் அதேமாதிரி அழகா இருக்கிங்க…” என்று பாராட்டினான்.மெல்லியதாக சிரித்துப் பேச்சை மாற்றும் விதமாகவீட்டம்மா என்ன செய்றாவ?” என்றாள். அவன்எனக்குக் கல்யாணம் ஆவலிங்க, அம்மா நான் சின்னப்பிள்ளயா இருந்தப்பவே சுருக்கு போட்டுருச்சு, அப்பா குடிச்சே போய்ச்சேந்தாருஅவரோட சோலிதான் எனக்குக் கெடச்சுருக்குதங்கச்சிய பன்னெண்டு வர படிக்கவச்சு சொக்காரப்பயலுக்கு நாலுமாசம் முந்திதான் கெட்டிக்கொடுத்தேன்என்றான். “நீங்க பொறுப்பானவகசீக்கிரம் கல்யாணச்சோறு போடுங்க….எங்கள கூப்டுவியல்லஎன்றாள். “கண்டிப்பா, அண்ணன் அம்மாவெல்லாம் வெறும் வார்த்தையா?!! எங்கம்மா மாதிரியே இருக்காங்கஅவங்க வாழ்த்தாமயாஎன்றான். எழுந்து போனியைத் தந்துவிட்டு கிளம்பினான்.

                  மாலை ஆறு மணிபோல குளித்து முடித்து சேலையில் கொசுவத்தைச் சொருகியபடி கண்ணாடியைப் பார்த்தாள். ஆம், மாரி சொன்னதுபோல கல்யாண போட்டோவில் இருப்பதைப்போலவே சிறிய பெண்ணாக இருந்தாள். மதிக்கு அம்மா என்று சொன்னால் கூட யாரும் நம்பமாட்டார்கள். ஒருநாள் கூட மகா தான் அழகாக இருப்பதாகச் சொல்லியதில்லை. ஐந்நூறு பூ வாங்கி வருவான். “நீங்க வச்சிவிடுங்களேன்” “நீ என்ன சின்னப்பிள்ளையா இத ஒரு ஆள் வச்சிவிட….நீயே வச்சிகவேன்என்பான். புதுப்புடவை வாங்கி வருவான். மறுநாள் கட்டி அவன் கண்ணில் படுமாறு சுற்றிக்கொண்டிருப்பாள். “நேத்து வாங்குன சேலல்லஅழகா இருக்கியேஎன்று ஒருமுறையாவது பாராட்டிவிடுவான் என்று சேலையைக் கழற்றிப்போடும் வரை எதிர்பார்ப்பாள். அவனுக்கு அது புதுச்சேலையா என்பது கூட நினைவில் இருக்காது. எங்காவது விசேஷங்களுக்குச் செல்லும்போது கூட பைக்கில் உட்கார்ந்தால் பட்டு கசங்கிவிடும் என்று ஆட்டோவில் அழைத்துச் செல்வான். ஆனால் பட்டு, நகை அலங்காரம் பற்றி வாயே திறந்ததில்லை. சிலசமயம் வேறு பெண்களையாவது அவ்வாறு ரசிக்கிறானா என்று நோட்டமிடுவாள். அதிலும் அவளுக்குத் தோல்வியே எஞ்சும். இவன் இப்படித்தான் என்று தெரிந்தாலும் அவளுக்கு எதிர்பார்ப்பு இருந்துகொண்டுதான் இருந்தது. சினிமா நடிகைகளைக் கூட அவன் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

             பேருந்தில் ஏறி அமர்ந்தாள்; டிக்கெட் வாங்கியபிறகும் கண்டக்ட்டர் தன்னையே பார்ப்பது போல இருந்தது. சட்டெனச்சீ, அவரு இப்படி இருக்கும்போது நமக்கேன் தப்புத்தப்பா தோணுதுஎன்று தன்னைத்தானே திட்டி உணர்வற்றவள்போல முகத்தை வைத்துக்கொண்டு குனிந்தபடி இருந்தாள். ஹைகிரவுண்டில் இறங்கியதும் பரணி டீ ஸ்டாலில் மாரியப்பன் டீ குடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தாள். அவனும் பார்த்து சைகையில் அழைத்தான். அருகே சென்றதும்இந்த சேலை உங்களுக்கு அழகா இருக்குங்கஇந்த நாலு நாள்ல கட்டாத சேலைலஎன்றான். “ம்ம்என்று சொல்லிக் குனிந்து நின்றாள். இன்னொரு டீ என்று சொல்லிவிட்டுஏன் ஆஸ்பத்திரி, வீடு, ஆஸ்பத்திரினு மாறிமாறி அடைஞ்சு கெடக்குறீங்ககோவிலுக்கு எங்கயாச்சு போய்ட்டு சாமியப் பாத்துட்டு வரலாம்லஎன்றான். அவள்அத்தயும் அதத்தான் சொல்லுது, எங்கிட்டு போவஎன்றாள். “நான் வேணும்னா அம்மாட்ட சொல்லி கூட்டிப்போறேன், அம்மாவும் வரட்டும்நாளைக்கு சிவங்கோவில் போய்ட்டு வருவோம்என்றான். அத்தையையும் அழைத்தது அவளுக்குச் சற்று தைரியத்தையும் அவன்மீது கொஞ்சம் நல்லெண்ணத்தையும் வரவழைத்தது.

               வார்டுக்குள் நுழைந்ததும் மாரியப்பன் மற்றொரு நோயாளியை வேறோரு வார்டிற்கு மாற்ற வீல்சேரை எடுத்துக்கொண்டு சென்றான். வள்ளி வந்து மகாவின் கால்மாட்டில் அமர்ந்தாள். மகா அவன் பாட்டுக்கு மதியுடன் விளையாடிக்கொண்டிருந்தான். பாட்டி தாத்தாவுக்கு உடலைத் துடைத்துக்கொண்டிருந்தாள். ஒல்லியான கருப்பான தேகம் இறுகிச் சுருங்கி நரம்புகள் அனைத்தும் புடைத்திருந்தன. உடலெங்கும் வெள்ளை முடிகள். தலையில் ஆங்காங்கே வெள்ளைமுடிக்கு நடுவே சிலகருப்பு முடிகள் தென்பட்டன. நெற்றியில் ஐந்தாறு வரிகள். மூக்கின் இருபக்க சுருக்கங்களுக்குள் இடுங்கிய கண்கள். மேல்நோக்கி பார்த்தபடி இருந்தன. கூரிய மூக்கிற்குக் கீழ் வெள்ளைமீசையும் சவரம் செய்யப்படாத தாடியுமாகப் படுத்திருந்தார். அவரது கண்களின் அசைவுகள் மட்டுமே அவருக்குள் இருக்கின்ற உயிர்ப்பை உணர்த்தின. அவருடைய மெல்லிய அசைவுகளைக் காண மிகவும் கூர்ந்து நோக்கவேண்டியிருந்தது. வெயிலில் முற்றி வீழ்ந்த பெருங்கிளை போல இருந்தார்.

            அத்தை கீழே அமர்ந்து சாத்துக்குடி பிழிந்துகொண்டிருந்தாள். மாரியப்பன் நேரே வந்துஅம்மா, நாளைக்கு நான் உங்களலாம் கோவிலுக்கு கூட்டிட்டு போறேன், சாயங்காலம் கெளம்பியிருங்கநாளைக்கு நா லீவ், ஆட்டோ அமத்திட்டு வர்றேன்போவோம்என்றான். “இவன வுட்டுட்டு எல்லாரும் போகமுடியாது, தம்பிவேணுமினா வள்ளியையும் மதியையும் கூட்டிக்கிட்டு போய்ட்டு வாங்கஎன்றாள். வள்ளியத்த, நீங்க வரலனா நா போவல” “அட என்னடி, ஒனக்கு தாலி கெட்டிதான்அதுக்காக கோவிலுக்கு போமாட்டேம்பியா, சோவாரவா போறவேபுருசனுக்குதானே வேண்டப் போறமதியக்கூட்டிட்டு நாளைக்கு போயிட்டு வாநா இவனுக்கு சொவமாக நம்மூரு கொடைக்கு கிடாய் நேந்துருக்கேன்அன்னால நீ போயிட்டு வாடிஎன்றாள். வள்ளி தலைமட்டும் ஆட்டினாள். மகாஎன்னைக்குதாம்புள்ள தனியா போய் பழகுவலஎங்குட்டாவது போவணும்னா மொகரை இப்படி வாடிப்போயிடுதுதம்பி வர்றாம்ல கூடபொறவென்னஎன் மதி சிங்கக்குட்டி வேற வருதுஎன்ன செல்லம் கோவிலுக்கு போறியா கண்ணு?” மதிஷிங்கம் போஹுதுஎன்று ஈகாட்டி கண்ணை விரித்தாள். “அடித்தங்கம்என்று கன்னத்தில் முத்தமிட்டான்.

               மறுநாள் காலையில் வள்ளி காபியும் மகாவுக்கு பாலும் வாங்கிவிட்டு வரும்போது மெயின் கேட் பக்கத்தில் மாரியப்பன் கையில் ஒரு பாலிதீன் பையுடன் நின்றான். வள்ளி பார்த்ததுமேஇன்னைக்கு லீவ்னீங்கஎன்றாள். “ஆமா, இதத் தரவந்தேன், இந்தாங்க, இதுல லக்ஸ் சோப்பும் சன்சில்க் சாம்பூவும் இருக்கு……. கோவிலுக்கு…” என்று இழுத்தான். அதன் நோக்கத்தைத் தெரிந்துகொண்ட வள்ளிக்கு உள்ளுக்குள் ஆத்திரமும் எரிச்சலும் வந்தது.உடன் கத்தி அழவேண்டும், அவனைச் செருப்பால் அடிக்க வேண்டும், கையில் இருக்கும் சூடான பால் தூக்கினை எறிய வேண்டும் என்றெல்லாம் எண்ணங்கள் தோன்றின. ஆனால் முகத்தில் துளிச்சலனமும் இல்லாமல் இறுக்கத்துடன் வாங்கிக்கொண்டாள். சரியென்றும் சொல்லாமல் மாட்டேனென்றும் சொல்லாமல் தலைகுனிந்தபடியே சென்றாள்.

            வார்டிற்குள் சென்று கூடையில் துண்டிற்கு அடியில் அதை ஒளித்து வைத்தாள். கண்களில் நீர் தேங்கிநின்றது. அத்தையிடம் சொல்லிவிடலாம்; மகாவிடமே சொல்லிவிடலாம். அத்தை இதைப் புரிந்து கொள்வாளா? நம்பாமல் ஏளனம் செய்வாளா? மகா ஒருமுறை எதிர்வீட்டு சுடலைமுத்து கோலம்போடும்போது கேலி செய்ததற்கே அடி நொறுக்கி அவன் வீட்டை காலி செய்ய வைத்தான். இந்த நிலையில் சொன்னால் எவ்வாறு எடுத்துக்கொள்வான்? தன்மீது ஏதும் குற்றம் சுமத்துவானா? அன்று டிவிஎஸ் எக்ஸலில் ஏறியது எவ்வளவு பெரிய தவறாகிவிட்டது. அழவும் முடியவில்லை; கணவனுக்கு உடல்நலம் சரியில்லை என்றால் வேறொரு ஆணின் பார்வை எல்லா இடங்களிலும் இப்படித்தான் இருக்கிறது. கண்களில் நீர் தேங்கி நிற்க காபியை கிளாஸில் ஊற்றாமல் நின்று கொண்டிருக்க அத்தைஎன்னடி ஆச்சு, வாடிப்போய் இருக்றஎன்றபடி வந்தாள். கண்களில் நீரைப் பார்த்துஏம்டி காலங்காத்தால அழுவுற….உம்புருசனுக்கு ஒண்ணும் ஆவாதுசீக்கிரமே டிஜார்ஜ் பண்ணலாம்னு பெரிய டாக்டர் சொல்லிட்டாககண்ணத் தொடச்சிட்டு காபிய ஊத்துஎன்றாள். மகாசரியாகிடுவேம்டிஇனிமே குடிக்கவும் மாட்டேன்போதுமா தாயிஎன்றான். சிரிக்க இயலாமல் சிரித்தபடி காபி ஊற்றினாள். மகாவுக்கு கிளாஸில் பாலை ஆற்றிக் கொடுத்தாள். கிளாஸை மகா வாங்கும்போது வள்ளிக்கு விரல்கள் நடுங்கின.

             மதியம் வீட்டில் குளிக்கச் செல்லும்போது கூடையில் இருந்த லக்ஸையும் சன்சில்க் சாஷேயையும் பார்த்தாள். தலைக்கு ஷாம்பூ போட்டால் அந்த வாசனையில் தலைவலி வரும் என்கிற தீவிர நம்பிக்கை கொண்டிருந்தாள். தலைக்குச் சீயக்காயும் உடம்புக்கு மகா பயன்படுத்தும் ஹமாமும் மஞ்சளும் தாண்டி எதுவும் பயன்படுத்தியதில்லை. கல்லூரியில்ஷாம்பூ போட்டு எப்படிறி குளிக்கிறீகஅந்த வாடைக்கே ஒமட்டிட்டு தலவலி வருதுஎன்று ஏளனம் செய்தவள் ஷாம்பூவை எடுத்துக்கொண்டு குளிக்கப்போனாள். ஒவ்வொரு கோப்பை தண்ணீரையும் தலையில் விடும்போதுகல்யாணபோட்டோ ல இருந்தமாதிரியே இருக்றீங்க” “மதிக்கு அம்மானுலாம் சொல்லவே முடியாது” “இந்த சேலல அழகா இருக்கிறீங்க” “அண்ணன் குடுத்துவச்சவர்“…… இப்படியாக மாரியப்பனின் பாராட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து ஒருவித கதகதப்பை அவளுக்குத் தந்துகொண்டிருந்தன.

              மாலையில் மதியுடன் மாரியப்பன் உடன்வர கோவிலுக்குச் சென்றாள். மகாராஜா, ரோகிணி நட்சத்திரம் என்று அவன் பெயரில் அர்ச்சனையை முடித்து தீபாராதனைத் தட்டில் இருபது ரூபாயை வைத்து தீபத்தைத் தொட்டு கும்பிட்டு வகிட்டில் குங்குமம் வைத்து விபூதி பூசி மதிக்கும் பூசிவிட்டாள். அர்ச்சனை பூக்களையும் குங்குமம் விபூதியையும் கவரில் வாங்கி கூடைக்குள் வைத்துக்கொண்டாள்மாரியப்பன் நிதானமாக வள்ளியைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவளுக்கு அவன் பார்ப்பது தெரிந்தும் கவனிக்காதவளாய் இருந்தாள். மாரியப்பன் மதியை வாங்கிக்கொண்டுமதி பாப்பாக்கு அக்கா, அண்ணன் கூடலாம் வெளையாடப் புடிக்குமாஎன்று கேட்டான். மதி தலையாட்டியபடிஆமாவெளாட்டுநானுக்கா…” என்று கைகொட்டிச் சிரித்தது.

            வண்டியை எடுத்துக்கொண்டு சிவன்கோவில் கீழத்தெருவில் விட்டான். அங்கிருந்த சித்ரா அக்காவிடம்இவங்கதான் என் சொந்தக்காரப்பொண்ணு, வள்ளிநான் சொன்னனேஇவுக வீட்டுக்காரரதான் ஆஸ்பத்திரில சேர்த்துருக்குக்காகொஞ்சம் மதியப் பாத்துக்கோமார்கெட் வரப் போய் சாமான் வாங்க வேண்டிருக்குபாப்பாவ பாத்துக்கிடுங்கவள்ளி மெலிதாக சிரித்துஐயோ, புதுஎடத்துலலாம் இருந்துக்கிட மாட்டாஎன்று மதியின் கைபிடித்து தன்பக்கம் இழுத்தாள். மதிம்மாவெளாட்டுநானுநீ போ…” என்று கைகளை உருவிக்கொண்டு சித்ரா அக்கா வீட்டு ஹாலிற்குள் நுழைந்தாள். சித்ராக்கா வள்ளியைப் பார்த்து சிரித்துநல்லாதான் ஒட்டிக்கிறாநான் பாத்துக்கிறேன் பாப்பாவநீங்க போய்ட்டு வாங்கஎன்றாள். “வாங்க வள்ளிஎன்று சித்ராக்காவிடம் விடைபெற்றுக்கொண்டு வண்டியைக் கிளப்பினான். மதி அம்மாவை மறந்து அங்கிருந்த இரண்டு குழந்தைகளோடு பந்து, பொம்மைகள் என்று விளையாடலானாள்.

               இருவரும் சித்ராக்கா வீட்டிற்கு இரவு ஒன்பது மணிபோல திரும்பினர். சித்ராக்கா மதிக்கும் இரவு உணவு கொடுத்து தயார் செய்து வைத்திருந்தாள். சித்ராக்கா வீட்டிலிருந்து மதி வரமாட்டேனென்று அடம்பிடித்தாள்ஒருவழியாகச் சமாதானம் செய்து ஆஸ்பத்திரிக்குத் திரும்பினர். வண்டியை நிறுத்தியதும் வண்டியின் கண்ணாடி பார்த்து மீண்டும் வகிட்டில் அழுந்த குங்குமமும் நெற்றியில் விபூதியும் பூசி மதிக்கும் விபூதியிட்டுக் கொண்டாள். மாரியப்பன் எதுவும் பேசாமலேயே விடைபெற்றான். அவளுக்கு அது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. வார்ட் வாசலில் மதியிடம் தங்கம், நீ வெளையாடுனத ஆச்சிட்ட சொல்லக்கூடாது, திட்டுவாசரியா என்றதும் மதி சமர்த்தாக சரியென தலையாட்டினாள். அத்தை அவசர அவசரமாக வீட்டிற்குக் கிளம்பிக்கொண்டிருந்தாள். அவளிடம் பிரசாதப் பொட்டலத்தையும் பூக்களையும் நீட்டினாள். அத்தை மகாவுக்கும் வள்ளிக்கும் பூசிவிட்டுரெண்டுபேரும் சொகமா இருப்பியஒரு கொறையும் வராதுஎன்று ஆசிர்வதித்துவிட்டு மதியை இடுப்பில் வைத்துக்கொண்டு வெளியேறினாள். பக்கத்துப் பெட்டில் பாட்டிஎங்கொலசாமி” “என்னப்பெத்தாருஎன்று முனகியபடி தாத்தாவின் கால்களை அமுக்கிக்கொண்டிருந்தாள். வள்ளி அப்பார்வையை வலிய விலக்கிக்கொண்டு தரையில் பெட்ஷீட்டை விரித்துப் படுத்து மற்றொரு பெட்ஷீட்டால் போர்த்திக்கொண்டாள். கண்களை இறுக மூடிக்கொண்டாள்; மாரியப்பனுடனான காட்சிகள் வரிசையாக வந்தன. அப்போதும் பாட்டியின் குரல் இடைஞ்சலாகக் கேட்டுக்கொண்டிருந்தது.


-வெண்பா கீதாயன்

2 COMMENTS

  1. நல்ல கதை. பூடகமாக விடப்பட்டுள்ள சங்கதி கதைக்கு தேவையான உணர்ச்சியை கடத்தியுள்ளது. இன்னும் சொல்ல கதையில் பல பலமான இடங்களுண்டு. நல்ல வாசிப்பாக இருந்தது.

  2. ஆனால் சர்ச்சைக்குள்ளமான ஒரு தமிழ் குறும்படத்தின் வேறொரு நகலாக தெரிகிறது.(கதைக்களம் மட்டும் வேறு).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.