உருவாஞ் சுருக்கு


நாகமணி கெணத்துல குதிச்சிட்டா. யாராவது காப்பாத்த வாங்களே’’ என்ற குரல் கேட்டு ஆலமர நிழலில் சீட்டாடிக் கொண்டிருந்த நானும் நண்பர்களும் ஓடினோம்.

மதிய நேரம் என்பதால் தெருவில் ஆட்களின் நடமாட்டம் அதிகம் இருக்கவில்லை. தன் மூன்று வயது பேத்தியை சிறுநீர் கழிக்கக் கூட்டி வந்த ஆராயி பாட்டிதான் நாகமணி குதித்ததைப் பார்த்து கத்தியிருக்கிறாள். சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த எங்களைக் கண்டதும் ’’அவள காப்பாத்துங்கடா சாமி. உங்களுக்குப் புண்ணியமா போகும்’’ படபடப்போடு சொன்னாள்.

கிணறு நாங்கள் நீச்சல் பழகிய இடம்தான் என்றாலும் பத்து வருடங்களுக்கு மேலாக யாரும் பயன்படுத்துவதில்லை. மேட்டூர் அணைக் குடிதண்ணீருக்காக ஊருக்குள் டேங்க் கட்டுவதற்கு முன் இந்தக் கிணற்றுத் தண்ணீரைத்தான் எல்லோரும் குடித்தார்கள். அப்போதெல்லாம் கிணற்றைச் சுற்றி ஆட்களின் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும். குடி தண்ணீர் கிணறு என்பதால் மீன் வளர்க்கவோ நீச்சல் அடிக்கவோ அனுமதிக்க மாட்டார்கள். தெரு குழாய்கள் வந்து பெண்கள் தண்ணீர் எடுப்பதை முற்றிலுமாக நிறுத்தியதும்தான் ஊர் இளைஞர்கள் எல்லாம் நீச்சல் அடிக்க முடிந்தது. சில மாதங்களுக்குப் பிறகு அவர்களும் நீச்சல் அடிப்பதை நிறுத்தி விட்டார்கள்.மழை காலங்களில் முக்கால்வாசி நிறைவதும் வெயில் காலத்தில் கால்வாசியாகக் குறைவதாகவும் இருக்கும். ஆனாலும் பயன்பாடு இல்லாததால் நீர்வரத்துக் குறித்து யாரும் அக்கறை காட்டுவதில்லை.

எங்களுக்குள் யார் குதிப்பது என்று ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டோம். இருந்த ஆறு பேரில் எல்லோருக்குள்ளுமே ஒரு சின்னத் தயக்கம் இருந்தது. எனவே நான் நடப்பது நடக்கட்டும் என்ற எண்ணத்தோடு  ‘’ ரொம்ப நேரம் காக்க வச்சிடாதீங்கடா.சீக்கிரம் கயிறு போடுங்க’’ சொல்லியபடியே குதித்தேன்.

கண்களை அகல விரித்துப் பார்த்தேன். இளம் பச்சை நிறம் எங்கும் வியாபித்திருக்கிறது. அடர்த்தியான இருளில் மாட்டிக்கொண்டது போல சில கணங்கள் திக்குத் தெரியாமல் தவித்தேன். சுவாசிக்க முடியாமல் மூச்சு முட்டியது. காதுகள் இரண்டும் அடைத்துக் கொண்டு தலை சுற்றியது. யாரோ கீழே இருந்து இழுப்பதைப் போல கிணற்றின் ஆழத்திற்குச் சென்று கொண்டே இருக்கிறேன். என் கைகளையும் கால்களையும் வேகமாக அசைத்து தண்ணீருக்கு மேலே வந்து ஒருமுறை ஆழமாகக் காற்றை இழுத்து மூச்சு விட்டேன். வாய்க்குள் போயிருந்த நீரை காறி உமிழ்ந்தேன். இப்போதுதான் இயல்புக்குத் திரும்பியதை உணரமுடிந்தது.

ஏதோ புதிதாக நீச்சல் பழகியவனைப் போல கொஞ்ச நேரத் தடுமாற்றம் இருந்தது. பின் சுதாரித்துக் கொண்டு மீண்டும் தண்ணீருக்குள் மூழ்கி நாகமணியைத் தேடினேன். கிணற்றின் பாதியாழத்தில் சென்று தேடியபோது என்னுடைய கால்களின் மேல் நாகமணியின் முந்தானை மோதியது. அதைப் பிடித்து இழுத்தபடியே இன்னும் உள்ளே ஆழமாகப் போனபோது அவள் மூச்சுத் திணறலோடு மேலே வரத் தன் கைகளையும் கால்களையும் அசைத்தபடியே உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாள். அவளுடைய தலைமுடியை என் வலது கையில் கொத்தாகப் பிடித்து பலத்தை எல்லாம் திரட்டி மேலே இழுத்தேன். ஈரநிலத்தில் பிடுங்கப்படும் செடியைப் போல லாகவமாக என்னோடு வந்தாள்.

தண்ணீருக்கு மேலே வந்ததும் அவளின் உடல் சிலிர்த்துக் கொண்டு நடுங்கியது. பயத்தில் மேல் மூச்சு வாங்கியபடியே ‘’அய்யோ அம்மா காப்பாத்துங்க’’ என்று கத்திக் கூப்பாடு போட்டாள்.

’’இவ்வளவு பயமிருக்கறவ என்ன மசுருக்கு சாகப் போனாளாம்’’ மேலே இருந்து யாரோ ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

அதைப் பொருட்படுத்தாமல் பயத்தில் என்னுடைய கழுத்தை தன் இரண்டு கைகளாலும் இழுத்துப்பிடித்தாள். கால்களை என் இடுப்பின் மீது வளைத்து பின்னி நெருக்கினாள். என்னால் கைகளையும் கால்களையும் அசைக்க முடியாமல் தடுமாறினேன். இருவரும் சேர்ந்து மீண்டும் தண்ணீருக்குள் மூழ்கினோம். மறுபடியும் மூச்சுத் திணறல் வந்து இறந்து விடுவோம் என்பதைப் போலத் தோன்றியது.

என்னுடைய கைகளை விரித்து கழுத்தை இறுக்கிப் பிடித்திருந்த அவளின் கைகளை விலக்கி விட்டேன். அவள் பயத்தில் இன்னும் தீவிரமாக என் உடலைப் பற்றிக் கொண்டாள். அவளின் பிடியிலிருந்து விடுபட்டால்தான் என்னால் நீந்த முடியும் என்பதை அவளால் உணர முடியவில்லை. இருவரும் கிணற்றின் ஆழத்திற்குள் ஒரு கூழாங்கல்லைப் போல வேகமாகச் சென்று கொண்டிருந்தோம். என் கைகளை எப்படியாவது அவளின் பிடியிலிருந்து எடுத்து விட என்னுடலை பாம்பு போல விதவிதமாக வளைத்துப் பார்த்தேன். அவளின் உடும்புப் பிடியிலிருந்து என்னால் விலக முடியவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் தாமதித்தால் மூச்சு விட முடியாமல் இருவரும் சேர்ந்து செத்துவிடுவோம் என்று தோன்றியது.

இவளைக் காப்பாற்ற வந்து இவளால் நானும் உயிர் விட வேண்டுமா என்ற எண்ணம் வந்ததும் வெறி கொண்டவனைப் போல என் பலம் முழுவதையும் திரட்டி என் இரண்டு கால்களையும் அவள் பிடியிலிருந்து உருவினேன். அவளின் இடுப்புப் பகுதியில் என் வலது காலால் ஓங்கி உதைத்தேன். வலி தாங்க முடியாமல் என் கழுத்தை நெருக்கிய அவளின் பிடி தளர்ந்தது. என்னுடைய இந்தச் செய்கை அவளை அதிர்ச்சியடையச் செய்தது. மிகுந்த கலவரத்தோடு அவள் திருப்பிப் போட்ட கரப்பான் பூச்சியைப் போல கைகளையும் கால்களையும் அசைத்தபடியே நீரின் ஆழத்துக்குள் போனாள். இப்போது என்னால் இயல்பாக நீந்த முடிந்தது. அவளின் உடல் உள்ளே செல்லும் வேகத்திற்கு இணையாக நானும் சென்று மீண்டும் முடியைப் பிடித்து இழுத்துக் கொண்டு மேலே வந்தேன்.

நீருக்குள் நிகழ்ந்த மரணப் போராட்டத்தில் இருவருமே மிகவும் களைத்துப் போயிருந்தோம். இந்தமுறை தண்ணீருக்கு மேலே வந்ததும் அவள் இன்னும் படபடப்பாக இருந்தாள். ஆனால் சத்தம்போட்டுக் கத்தவில்லை. எதையாவது பற்றிப் பிடித்துவிடும் ஆவேசத்தில் அவளின் கைகள் மீண்டும் என்னுடைய கழுத்தை நோக்கி வந்தது. இந்த முறை சுதாரித்துக்கொண்டு என்னுடைய முதுகை அவளிடம் காட்டினேன். அவள் பின் பக்கமாக என் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். என்னுடைய வயிற்றுப் பகுதியில் அவளுடைய கால்கள் பின்னியிருந்தன. பன்னாங்குட்டி தூக்குபவனைப் போல முதுகில் சுமந்தபடியே நீந்தினேன்.

கிணற்றின் சுவற்றில் ஏதேனும் ஓட்டைத் தென்படுகிறதா எனச் சுற்றிலும் நீந்தியபடியே தேடினேன். ஒரு இடத்தில் என்னுடைய மூன்று விரல்கள் நுழையும் அளவிற்கு சந்திருந்தது. அதை எனது வலது கையால் எட்டிப் பிடித்து விரல்களை உள்ளே நுழைத்து சோர்ந்துபோய் நின்றேன். மூக்கிலும் வாயிலும் பெருமூச்சு விட்டபடி மேலே பார்த்தேன். கிணற்றைச் சுற்றி ஆட்கள் வேடிக்கைப் பார்த்தபடி நின்றிருந்தார்கள்.

”டேய் சீக்கிரமா கயித்தப் போடுங்கடா. உள்ள கைபிடிக்க வசமா எதுவுமில்ல’’ என்று சத்தமா கத்தினேன்.

’’கயிறு வாங்கப் போயிருக்காங்க. கொஞ்சம் பொறுத்துக்கடா’’ கோவிந்தன் திரும்பக் கத்தினான்.

நாகமணி நத்தையின் ஓட்டைப் போல என் முதுகின் மீது கிடந்தாள். அவளின் மூச்சுக் காற்று என்னுடைய இடது காது மடலில் உஷ்ணமாகத் தீண்டியது. இதயத்தின் படபடப்பு முதுகில் மெல்லிய அதிர்வை உருவாக்கியது. அவளின் இரு மார்புகளும் என் தோள்பட்டைகளில் இலவம்பஞ்சு பொதியைப் போல அழுத்துவதை உணர்ந்த போது என்னுடல் ஒரு கணம் சிலிர்த்துக்கொண்டது.

இந்த இருபத்தைந்து வயதில் இது வரை ஒரு பெண்ணின் விரல் கூட என்னைத் தீண்டியதில்லை. என்னுடைய உடல் முழுவதும் அதிர்ந்தது. சூழலை மறந்த பித்து எனக்குள் உருக்கொண்டது.

கைவலிப்பதைப் போலப் பாசாங்கு செய்து வலது கை விரல்களை எடுத்துவிட்டு இடது கைவிரல்களைப் பாறையிடுக்கில் நுழைத்து தற்செயலாகத் திரும்புவது போல அவளைப் பார்த்தேன். வசீகரமான பொன்நிறம். அவளின் காதோரங்களில் இருந்த பூனை முடிகள் பயத்தில் சிலிர்த்து நின்றன. கழுத்து நரம்புகள் அவள் விட்ட மேல் மூச்சில் நீண்டு சுருங்கின. மஞ்சள் நிறத்தில் வெள்ளைப் பூக்கள் இருக்கும் சேலைக் கட்டியிருந்தாள். அது அவள் உடலோடு ஒட்டி இன்னொரு தோல் போலத் தெரிந்தது. அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தால் என்னையும் அறியாமல் ஏதேனும் செய்து விடுவேனோ என்ற பயத்தில் தலையைத் திருப்பிக் கொண்டேன்.

என் தோளின் மீது பயந்து கிடந்தவள் மெல்ல எழுந்தாள். அவளாலும் என்னை நேர் கொண்டு பார்க்க முடியவில்லை. கணவன் அல்லாத மற்றொரு ஆணை எல்லோர் முன்னிலையிலும் அணைத்தபடி இருப்பது அவளுக்குள்ளும் ஒருவித தயக்கத்தையும் வெட்கத்தையும் உருவாக்கி இருந்தது. பயத்தால் மயங்கியவள் போல மீண்டும் என் தோள் மீது சாய்ந்துகொண்டாள்.

’’கயிறு வந்திருச்சா’’ மீண்டும் கத்தினேன்.

’’நம்ம ஊர்லயாருட்டையும் சேந்து கயிறு இல்ல. கந்தமாயா வீட்டுத் தோட்டத்தில்தான் இருக்காம். வாங்கப் போயிருக்காங்க’’ லட்சுமணன் கத்தினான்.

நாகமணிக்குக் குழந்தையில்லை. சுந்தரம் அண்ணனைத் திருமணம் செய்து எப்படியும் ஐந்தாறு ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம். முதல் இரண்டு ஆண்டுகள் இருவரும் சந்தோசமாகத்தான் இருந்தார்கள். குழந்தைப் பற்றி எல்லோரும் கேட்க ஆரம்பித்ததும்தான் குடும்பத்துக்குள் அடிக்கடி சண்டை வர ஆரம்பித்தது. நாகமணி சிலமுறை கோபித்துக்கொண்டு அவளின் அம்மா வீட்டிற்குப் போய்விடுவாள். அண்ணனும் அவர் அம்மாவும் போய் சமாதானம் செய்து கூட்டி வருவார்கள்.

குழந்தைக்காக வேண்டி மருத்துவமனைகளுக்கும் கோவில் குளங்களுக்கும் நாகமணி சுந்தரம் அண்ணனைக் கூட்டிக் கொண்டு அலைந்தாள். ஆனால் ஒரு பயனுமில்லை. அண்ணனின் அம்மா அவருக்கு இரண்டாவது திருமணம் செய்யப் போவதாக எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு திரிந்தாள். ஆனால் அதற்கு அண்ணன் சம்மதித்தாரா எனத் தெரியவில்லை. அவர் ஊருக்குப் பக்கத்தில் இருந்த நூல் மில்லில் வேலை செய்கிறார். திருமணத்திற்கு முன்பெல்லாம் அண்ணனிடம் குடிப் பழக்கம் இருந்ததில்லை. ஆனால் இந்த மூன்று வருடமாக அவர் வேலை முடித்து வீட்டிற்கு வரும் போதே அதிக போதையில்தான் வருவார். பெரும்பாலான இரவில் சண்டை வருவதும் நாகமணியைச் சந்தேகப்பட்டு அடிப்பதுமாகத் தான் கழியும். அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் மனசு கேட்காமல் தடுக்கப் போனால் அவர்களையும் திட்டினார். அதனால் இவர்களின் குடும்பச் சண்டையில் யாரும் தலையிடுவதில்லை. இந்த முறை என்ன நடந்தது என்று தெரியவில்லை இப்படி தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்குத் துணிந்து விட்டாள்.

நேரம் கடந்துகொண்டே இருந்தது. ஆனால் சேந்தி கயிறு இன்னும் வந்த பாடில்லை. கிணற்றுக்குள் இருக்கும் ஒவ்வொரு நிமிசக் காத்திருப்பும் பல மணிநேரம் இருப்பதைப் போல உணர வைத்தன. நீண்ட ஆழத்தில் தென்படும் நிசப்தமும் அதிக நாட்கள் தண்ணீர் தேங்கிக் கிடந்தால் உண்டான துர்நாற்றமும் ஒருவிதக் குமட்டலை உண்டாக்கி விடும் போல இருந்தது. ஆனால் எதையும் பொருட்படுத்தாத ரசவாத மாற்றம் எனக்குள் உண்டாகிக் கொண்டிருந்தது.

அவளின் உடல் சூடு தண்ணீருக்குள் மூழ்காத அரை முதுகு வரைப் பரவி என் உடலுக்குள் மின்சாரப் பாய்ச்சலை ஏற்படுத்தியது. அவளின் மார்பை ஒரு முறை அழுத்தி விடலாமா என்ற சபலம் தோன்றியது. இந்த எண்ணம் என் தலைக்கேறியதும் என்னுடைய குறி விரைத்துக் கொண்டது. என் இடுப்பிற்குக் கீழே பின்னியிருந்த அவளின் கெண்டைகாலில் எதிர்பாராமல் அது லேசாக மோதியது. அதை உணர்ந்து கொண்டாளோ அல்லது தற்செயலாகச் செய்தாளோ கால்களை இன்னும் கீழே இழுத்துக் கொண்டாள். பின் காறி சுவற்றின் மீது துப்பினாள். அது என் முகத்தின் மீது உமிழ்ந்ததைப் போல இருந்தது. உயிரைக் காப்பாற்ற வந்த இடத்தில் உடல் இச்சை தோன்றுவதை நினைத்துக் குற்றவுணர்வுக்கு ஆளானேன். இந்தச் சூழலிலிருந்து விடுபட்டு ஓடிவிட வேண்டும் போலத் தோன்றியது.

’’அடேய்… கயிறு வந்துருச்சா’’ ஒட்டு மொத்த வெறுப்பில் கத்தினேன்.

’’தா ஆச்சுடா. இன்னும் கொஞ்சம் பொறுத்துக்க’’ மேலிருந்து பதில் வந்தது.

எனக்கு அவளிடம் ஏதேனும் பேச வேண்டும் போலத் தோன்றியது. நான் அவளிடம் பேசி நான்கு ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என்பது நினைவிற்கு வந்தது. ஆனால் இந்த நேரத்தில் அவளிடம் என்ன கேட்பதென்று தெரியவில்லை. மெதுவாகத் திரும்பிப் பார்த்தேன். அவளுக்குள் இருந்த பதட்டம் கொஞ்சம் தணிந்து இயல்புக்கு வருவது போலபட்டது

’’என்னாச்சு அண்ணி, ஏ இப்படிப் பண்ணிக்கத் துணிஞ்சிட்டிங்க’’

அவள் பதில் சொல்லாமல் மெளனமாக இருந்தாள். அந்த அமைதி எனக்குள் பதட்டத்தைக் கூட்டியது. என்னுடைய அத்துமீறல் காரணமாக கோபத்தில் பேச மறுக்கிறாளோ என நினைத்தேன். ஆனாலும் தற்கொலை செய்ய முயல்பவள் நான் முதல் முறை கேட்டதும் காரணத்தைச் சொல்லி விடுவாள் என்று நினைப்பது எவ்வளவு பைத்தியக்காரத்தனம் என்றும் தோன்றியது.

மீண்டும் அதே கேள்வியை அவள் மேல் ஆழ்ந்த அக்கறையோடு இருப்பவன் போலக் கேட்டேன்.

இந்த முறையும் மெளனம்தான் பதில் என்றாலும் அவள் கண்ணீர்த் துளிகள் என்னுடைய முதுகின் மீது சூடாக வீழ்ந்தது. நான் மிகுந்த சங்கடத்தோடு அவளைச் சமாதானம் செய்ய முயற்சித்தேன்.

’’சேந்து கயிறு வந்திருச்சு போடவா’’

’’சீக்கிரமாகத் தூக்கி உள்ள போட்டுத் தொலைங்கடா’’

’’சின்னப்பையன் அவள எவ்வளவு நேரமா தூக்கிட்டு இருப்பான்’’ பலருடைய குரல்கள் சன்னமாகக் கிணற்றுக்குள் கேட்டது.

’’ராஜா ரெண்டு கயிறு போடறோம். ஒன்ன அக்காவோட இடுப்புல கட்டீறு இன்னொன்ன கெட்டியா புடிச்சுக்கச் சொல்லு’’ கோவிந்தன் கயிறை உள்ளே போட்டபடியே கத்தினான்.

முதலில் பிடிப்பதற்காகக் கயிறு ஒன்றைப் போட்டார்கள். பாறை இடுக்கிலிருந்து விலகி கயிறை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டேன். அவளையும் என் முதுகிலிருந்து இறக்கி கயிற்றைப் பிடித்துக்கொள்ளச் சொன்னேன். பயத்தில் கொஞ்சம் தயங்கினாள். நான் தைரியம் சொல்லி கயிறைப் பிடிக்க வைத்தேன். இடுப்பில் கட்டவேண்டிய கயிறையும் மேலேயிருந்து வீசினார்கள். அதில் உருவான் சுருக்கெல்லாம் போட்டிருந்தார்கள். நான் அவளின் கால்களிலிருந்து இடுப்புக்கு கயிற்றை மாட்டிவிட்டு முடிச்சை இறுக்கிவிட்டேன்.

பிடிகயிற்றை கெட்டியாகப் பிடிக்கச் சொல்லிவிட்டு மேலிருந்து இழுத்தார்கள்.

முதலில் கொஞ்சம் பயந்தவள் பின் தைரியமாக கயிறைப் பிடித்துக் கொண்டாள். மேலிருந்த ஆட்கள் கயிற்றை இழுத்தார்கள். கிணற்றுக்கு மேலே பாதி தூரம் போனவள் என்ன நினைத்தாளோ, எதனைப் பார்த்துப் பயந்தாளோ தெரியவில்லை. கயிற்றின் பிடியை விட்டு மீண்டும் தண்ணீருக்குள் விழுந்தாள்.

நான் பதறியடித்துக் கொண்டு மீண்டும் நீருக்குள் மூழ்கி அவளைத் தேடினேன். இடுப்பில் கட்டப்பட்டிருந்த கயிறை மேலேயிருந்து இழுத்ததால் அவள் அதிக ஆழத்திற்குச் சென்றிருக்கவில்லை. நான் அவளின் வலது கையைப் பிடித்து இழுத்தேன். இருவரும் மேலே வந்தோம்.

அவள் அதிகம் பயந்து போனவள் போல ’’அய்யோ அம்மா….அய்யோ அம்மா’’ என சத்தமாகக் கத்தினாள். என்னுடலை ஆரத்தழுவி மேலும் கீழுமாக உந்தினாள். அப்போது என்னுடைய முகத்தில் அவளின் மார்புகள் மோதின. பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பவளைப் போல நடந்து கொண்டாள். அவளின் ஆவேசத்தில் உடலுறவின் அசைவுகளை என்னால் உணர முடிந்தது. அவள் அதை வேண்டுமென்றே செய்வதைப் போலத் தோன்றியது. என்னால் அதை விலக்கவும் முடியாமல் அனுபவிக்கவும் முடியாமல் தவித்தேன்.

மேலிருந்து பார்ப்பவர்களுக்கு ஏதோ பயத்தில் தான் இப்படி நடந்து கொள்கிறாள் என்பதைப் போன்ற நுட்பமான நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள். இது அவளைக் காப்பாற்றியதற்கான கைமாறா இல்லை யாரையாவது பழி வாங்குவதற்கான வழியா என ஒன்றும் விளங்கவில்லை.

அவளைத் தேற்றி மீண்டும் கயிறைப் பிடிக்கும்படி சொன்னேன். அவள் முதல் முறையாக என் கண்களைப் பார்த்தாள். அதன் தீவிரம் தாங்காமல் என் பார்வையை விலக்கிக் கொண்டேன்.

நான் என்ன சொல்வதென்று தெரியாமல் இருவரும் பிடித்திருந்த கயிற்றை விட்டு விலகிக் கொண்டேன். மேலிருந்து ஆட்கள் இழுக்க ஆரம்பித்தார்கள். என்னை இன்னொரு முறை திரும்பிப் பார்த்தாள்.

கைக்கெட்டும் தூரம் போனதும் இரண்டு பேர் தூக்கி நாகமணியைத் தரையில் போட்டார்கள். அவள் மேலே போனதும் கூச்சலும் குழப்பமாகச் சத்தம் கேட்டது. உள்ள நான் இருப்பதை மறந்து விட்டார்களோ என எண்ணும்படி யாருடைய தலையும் தென்படவில்லை.

அடே… கயித்தப் போடுங்கடா’’ கத்தினேன்.

’’அத்த அக்காவ சுந்தரம் மாமா அடிச்சிட்டிருக்காருடா. இங்க ஒரே கலவரமாக இருக்கு. இருடா வரோம்’’ இப்போது சீனி கத்தினான்.

சுந்தரம் அண்ணன் மேலே இருந்து நடந்த எல்லாவற்றையும் பார்த்து இருப்பாரா என்ற சந்தேகம் வந்ததும் எனக்குப் பகீரென்று ஆனது. இனி அண்ணனுக்கு  நாகமணியோடு இணைத்துப் பேச நான் கிடைத்து விட்டேன் என்றுத் தோன்றியது. இன்னும் ஆழமாக இங்கு நடந்ததை யோசித்த போது நாகமணி அண்ணனின் ஆண்மையைப் பரிகாசம் பண்ணும் நாடகத்தில் என்னையும் ஒரு கதாபாத்திரமாக மாற்றி விட்டுச் சென்று விட்டாளோ எனவும் தோன்றியது. ஒரு உயிரைக் காப்பாற்ற வந்தவனுக்கு இது தேவைதானா என்ற கசப்பு தோன்றியது. நாகமணியின் இடுப்பில் போட்ட உருவாய் சுருக்கு போல எதிலோ சிக்கிக் கொண்ட ஒரு உணர்வு எழுந்தது. நான் பற்றியேறும் கயிறுக்காகக் காத்திருக்கத் தொடங்கினேன்.


  •  பிரசாத் ரங்கசாமி

2 COMMENTS

  1. யதார்த்தமும் வலி நிறைந்ததாகவும் உள்ளது. வாழ்த்துக்கள் சிவா.

  2. உருவாஞ்சுருக்கு கதை இயல்பான எடுத்துரைப்பு. வாழ்த்துக்கள் பிரசாத் ரங்கசாமி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.