வாழ்க்கைக்கு வெளியே பேசுதல் -விமர்சனம்

வாழ்க்கைக்கு வெளியே பேசுதல்

சட்டகத்துக்கு வெளியே வரையப்பட்ட ஓவியம்

 

இசை : தற்கால தமிழ்க்கவிதையின் மிக முக்கியமான முகம். இவரது உறுமீன்களற்ற நதி பரவலாகக் கவனத்தையும் பல விருதுகளையும் குவித்த தொகுப்பு, அதன் பின்னர் வந்த சிவாஜி கணேசனின் முத்தங்கள், அந்தக்காலம் மலையேறிப்போனது, ஆட்டுதி அமுதே ஆகிய கவிதைத் தொகுப்புகளும் முக்கியமான கவிதைத் தொகுப்புகள் தாம். அவரது உய்யடா உய்யடா உய், அதனினும் இனிது அறிவனர் சேர்தல், லைட்டா பொறாமைப்படும் கலைஞன், பழைய யானைக் கடை போன்றவை கவிதையியல் கட்டுரைத் தொகுதிகள். இவ்வாறு தொடர்ந்து கவிதையும் கவிதை சார்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கும் இசை அவர்களின் சமீபத்திய தொகுப்பு நாயகன் வில்லன் மற்றும் குணச்சித்திரன். நாம் இப்போது பேசப் போவது அதற்கு முந்தைய தொகுப்பான வாழ்க்கைக்கு வெளியே பேசுதல் தொகுப்பைப்பற்றி.

இசையின் கவிதைகளின் தனித்தன்மை அல்லது ஒழுங்கு என்னவென்றால் பகடி மொழி.

ஆம், அவரது கவிதைகள் பகடி பேசுகின்றன. பகடி என்பது நக்கல், கிண்டல் , கேலி, எள்ளல், நையாண்டி என நிறையச் சொற்களின் மேம்பட்ட வடிவம். ஆனால் இந்தச் சொல்லுக்கெல்லாம் இல்லாத ஒரு கிறக்கமும் பகடிக்கு உண்டு தான்.

நகையுணர்வு என்பது நவீன வாழ்க்கைக்கு மிக அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த வாழ்வு தரும் அழுத்தங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள அது வசதியான ஒன்றாகவும் இருக்கிறது. ஏன் வடிவேலு என்னும் திரைமொழிக் கலைஞன் நம் காலத்து நாயகனாக இருக்கிறார் என்று யோசித்தாலே போதும் என நினைக்கிறேன்.

நமக்கு வடிவேலு நமது அன்றாடங்களின் அத்தியாவசியமான ஒரு கலைஞனாகிவிட்டார். பள்ளிகளில், கல்லூரிகளில், கார்ப்பரேட் நிறுவனங்களில், அரசியலில், ஆன்மீகத்தில் என அத்துணை இடங்களிலும் வடிவேலு மீம்களாக சிரித்தபடி இருக்கிறார்.

தமிழ்த் திரையுலகில் பகடி தவிர்க்கமுடியாத அங்கம். எம்.ஆர் ராதா போல மக்களை, அரசியலை எள்ளி நகையாடியவர்களிலிருந்து வடிவேலு வரைக்கும் நாம் குறிப்பிட்டுச் சொல்ல மிக முக்கியமான ஆளுமைகள் திரையில் இருக்கிறார்கள். நமது கலைகளில், கூத்தில், நாடகங்களில், எல்லா இடங்களிலும் பகடிக்கென ஒரு விதூசகன் இருந்திருக்கிறான். பிரம்மாண்டமான சர்க்கஸ் நிகழ்வுகளில் கோமாளிகள் சிங்கங்களை விடவும் ஈர்ப்பான கதாநாயகர்களாக இருந்திருக்கிறார்கள் எல்லாக் காலங்களிலும்.

நமது இலக்கியத்திலும் பகடி சங்கம் முதல் நவீனம் வரை தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகவே இருந்து வந்திருக்கிறது. இது குறித்து தமிழ்க் கவிதைகளில் விளையாட்டு என்ற பொருளில் பழைய யானைக் கடை என்ற ஒரு கட்டுரைத் தொகுப்பையே இசை எழுதியிருக்கிறார். நவீன கவிதைகளில் பல்வேறு கவிஞர்கள் பகடி மொழியைக் கையாண்டிருக்கிறார்கள் என்றாலும் இசையின் மொழி தனித்துவமானது. இசை தனது கவிதைகளை வாழ்க்கைக்குள்ளிருந்து தான் எடுக்கிறார்.

                     அருகிலிருந்து பார்க்கும் போது வாழ்க்கை சோகமானது; ஆனால், தொலைவிலிருந்து பார்க்கும்போது நகைச்சுவையானது. – சார்லி சாப்ளின்

இதே கருத்தை சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் தென்னாட்டு சார்லி சாப்ளின் என்று புகழப்பட்ட நாகேஷ் அவர்களது குரலில் கேட்டிருக்கிறேன். வாழ்க்கையில் பிரச்சினை என்பது ஒரு சின்ன கல் மாதிரி அதை நாம் கண்ணுக்குப் பக்கத்துல வச்சு பார்த்தோம்னா உலகத்தையே மறைச்சுடும்,  அதையே கொஞ்சம் தூரமா தள்ளி வச்சு பார்த்தால் அது எவ்வளவு சிறியது என்று புரிந்துவிடும், அதையும் தாண்டி அதைத்தூக்கி நம் காலடியில் போட்டுவிட்டோம் என்றால் அதை நாம் சட்டை செய்யவே மாட்டோம், மிதித்துவிட்டுப் போய்க்கொண்டே இருப்போம் என்கிறார். உண்மைதான் இசையின் இந்தக் கவிதை இதைத்தான் பேசுகிறது

 

நான் உன்னிடம்

எவ்வளவோ சொன்னேன்

உண்மையை

அவ்வளவு பக்கத்தில் போய்ப் பார்க்காதே என்று

இப்போதோ

தலை வெடித்துச் சாகக் கிடக்கிறாய்

உண்மைதான் , உண்மையை, சத்தியத்தை, நெருங்கி விடவே கூடாது. 2014 ன் இறுதியில் நான் ஒரு கவிதை எழுதினேன். நெருங்கிப் பழகினால், நொறுங்கி விடுகிறது, பெரிய மனிதர்களின் மீதான பிம்பம் என்று. இன்று வரைக்கும் அப்படித்தான் தொடர்கிறது. ஒரு குறிப்பிட்ட இடைவெளி விட்டுத்தான் உண்மையைத் தொடரவேண்டும் போல.

அவ்வளவுதான்

பாத்ரூமென்றால் அப்படித்தான்

எப்படிக் கழுவினாலும் அழுக்கு நீங்காது

எவ்வளவு நறுமணமூட்டினாலும்

நாற்றம் போகாது

 

சோப்பென்றால் அப்படித்தான்

எவ்வளவு கவனமாக இருந்தாலும்

கைகளில் நிற்காது

 

நாமென்றால் அப்படித்தான்

 

நழுவிக் கீழே விழுந்து விட்டால்

எடுத்து

ஐந்துவிநாடிகள் ஓடும் நீரில் காட்டிவிட்டு

தொடர்ந்து  தேய்க்க வேண்டியதுதான்

 

இசை, இப்படித்தான் நாம் நினைப்பதை எழுதுகிறார், அன்றாட நிகழ்வுகளிலிருந்து அவர் கவித்துவத்தைக் கண்டெடுக்கிறார். நமது சறுக்கல்களிலிருந்து நம்மைத் தேற்ற ஒரு வீராவேசம் கொப்பளிக்கும் தன்னம்பிக்கைக் கட்டுரையோ, கதையோ தேடிப்போக அவசியமில்லை, இந்தக் கவிதை அதைச் செய்யும், கொஞ்சம் நம்மையே சுயபகடிக்கு ஆளாக்கி.

பகடி செய்தல் அவரது பிரத்யேக பாணி என்றாலும் அவரது கவிதைகளில் எப்போதும் மறை பொருளாயிருக்கும் மனிதமும் அன்பும் இசை வெளியே சொல்லி விட்டிருக்காத ஒரு அற்புத மொழி.

போலீஸ் வதனம்

நான்குமுனைச் சந்திப்பொன்றில்

ஒரு போலீஸ்காரரும் ஒரு குடியானவனும்

கிட்டத்தட்ட மோதிக் கொண்டனர்.

குடியானவன் வெலவெலத்துப் போனான்

கண்டோர் திகைத்து நின்றனர்

அடுத்த கணம் அறைவிழும் சத்தத்திற்காய்

எல்லோரும் காத்திருக்க

அதிகாரி குடியானவனை நேர் நோக்கி

ஒரு சிரி சிரித்தார்.

அப்போது வானத்தில் தேவர்கள் ஒன்று கூடும் ஓசை கேட்டது.

“ நகையணி வதனத்து ஒளிநறுங்கீற்றே ! “

என  வாழ்த்தியது வானொலி.

போலீஸ் தன் சுடரை

ஒரு கந்துவட்டிக்காரனிடம் பற்ற வைத்து விட்டுப்போனார்.

அவன்

ரோட்டோரம் கிடந்து பழம் விற்கும் கிழவியிடம் கந்து வசூலிக்க                                                                                                       வந்தவன்.

கிழவி தலையைச் சொரிந்த படியே

“ நாளைக்கு… “ என்றாள்.

ஒரு எழுத்து கூட ஏசாமல் தன்  ஜொலிப்பை

அவளிடம் ஏற்றிவிட்டுப் போனான் அவன்.

அதில் பிரகாசித்துப் போன கிழவி

இரண்டு குட்டி ஆரஞ்சுகளை சேர்த்துப் போட்டாள்.

அது ஒரு குப்பைக்காரியின் முந்தானையில் விழுந்தது.

எப்போதாவது ஆரஞ்சு தின்னும் அவளை

ஒரு பிச்சைக்காரச் சிறுமி வழிமறிக்க

அதிலொன்றை  ஈந்து விட்டுப் போனாள்.

சிறுமியின் காலடியில்

நாய்க்குட்டியொன்று வாலாட்டி மன்றாடியது.

அதிலொரு சுளையை எடுத்து

அவள் அதன் முன்னே எறிய

சொறிநாய்க் குட்டி

அந்த “ஒளிநறுங்கீற்றை“ லபக்கென்று  விழுங்கியது.

 

இந்தக் கவிதை நமது முகத்துக்கும் ஒரு ஒளி நறுங்கீற்றை பச்சக்கென ஒட்டி விடுகிறது. இந்தக் கவிதையைப் படித்த கணம் ஒரு வெளிச்சம் நமது முகத்தில் பரவுவதை நாம் உணர முடியும்.  ஒரு சம்பவம் தான், அதை இசை ஊதிப் பெரிதாக்குகிறார், அதிலிருந்து வாழ்வின் எதார்த்தத்தை உறிஞ்சி எடுக்கிறார் நம்மைப் போலவே. ஆனால் தனது பிரத்யேக மொழிதலின் மூலமாக அவர் வேறோர் உயரத்தில் நிற்கிறார்.

எனக்கு மிகப் பிடித்த ஒரு கவிதை இந்தத் தொகுப்பில் இருக்கிறது.

சின்ன குலுங்கல்

 

உலகம்

ஒரு சின்ன  குலுங்கு குலுங்கிவிட்டு

இயல்புக்கு திருப்பி விட்டது.

சேதாரம் ஒன்றும் பெரிதாக இல்லை.

ஒரே ஒரு கண்ணாடி டம்ளர் உடைந்து விட்டது

எதில் அருந்தினால்

உன் தாகம் தணியுமோ

அந்தக் கண்ணாடி டம்ளர்.

 

எப்போதும் நமது வண்டிதான் பஞ்சர் ஆகும், எப்போதும் நமது கைப்பை தான் தொலைந்து போகும், நேர்முகத்தேர்வில் நமது முறையின் போது தான் நமக்கு ஒண்ணுக்கு முட்டிட்டு வரும், இப்படி எல்லாமே எனக்கு மட்டுமே ஏண்டா நடக்குது ஆண்டவா என நான் கேட்டுக் கொள்ளும் ஒவ்வொரு தருணமும் இந்தக் கவிதையின் தருணம் தான்.

பகடியில், கவிதையில் சமூகத்துக்கான மொழி, சமூகத்துக்கான குரல் இல்லையா என்று கேட்பார்கள். இசையின் கவிதை அதையும் தான் கேட்கிறது. அதையும் தான் பகடி செய்கிறது.

இரண்டு வழிகள்

 

பொதுவழியும்

சிறப்பு வழியும்

ஒன்றாகும் இடத்தில்

என்னய்யா இரைச்சல்?

பொது வழியும் சிறப்பு வழியும்

ஒன்றாவதால்

எழும் இரைச்சல்.

 

இது அரசியல் கவிதையா என்றால் ஆம் என்பேன். சமூகக் கவிதையா என்றால் அதற்கும் ஆம் என்பேன். அரசியல் கவிதையும், சமூகக் கவிதையும் பெருங்குரலில் தான் பேச வேண்டுமா ? கரகரத்த தன் குரலில் அதிரக் கத்த வேண்டுமா ? அப்படி இல்லாமலும் இருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து. ஆகவே தான் இந்தக் கவிதையை அந்த வரிசையில் வைத்துப் பார்க்கிறேன்.

வாழ்க்கைக்கு வெளியே பேசுதல் என்கிற இந்தத் தொகுப்பின் கவிதைகள் அனைத்தும் வாழ்க்கைக்கு உள்ளிருந்து எடுக்கப்பட்டவை தாம். ஆனால் வாழ்க்கைக்குள்ளேயே அந்தந்தச் சூழலின் சூட்டுக்குள்ளேயே இல்லாமல் தள்ளி நின்று பேசுகிறது. வாசிக்கவும் பத்திரப்படுத்திக் கொள்ளவுமான ஒரு தொகுப்பு.


-இரா.பூபாலன்

நூல் : வாழ்க்கைக்கு வெளியே பேசுதல்

ஆசிரியர்: இசை

பதிப்பகம் : காலச்சுவடு

விலை : ₹100

கவிஞர் இசையின் தொடர்புக்கு : [email protected]

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.