இயர் ஜீரோ- தமிழ் நகைச்சுவை நாவலில் ஒரு புதுப்பருவம்  

என் இதயத்துள் ஓர் உயிர் கொல்லும் காற்று 

தொலை தேசத்தினின்று வேகம் கூடி வீசும்:

நினைவில் தோன்றும் நீல மலைகள் யாதோ,

கோபுரச் சிகரங்கள் யாதோ, பண்ணைகள் யாதோ?

இழந்தழிந்த  நிறைவின்  நிலன் அது,

அதன் ஒளியைத் தெளிவாகக் காண்கிறேன்

நான் களித்துப் பயணித்த நெடுஞ்சாலைகள் 

மீண்டும் வருவதற்கு இல்லாகிப் போனதை.

 

ஷராப்ஷயர் இளைஞன், . . ஹவுஸ்மென்

 

கிராமப்புற பிள்ளைப் பருவங்களுடன் ஒப்பிடும்போது நகர்ப்புறத்தவர்களின் வளர் பருவம் சுவாரசியமற்றிருப்பது போல் தெரிகின்றது. நம் இலக்கியத்தைப் பார்த்தால் போதும், இதற்கு மறு பேச்சே கிடையாது என்றுகூட சொல்லி விடலாம். புல்லினங்கள் கூவி எதிரொலிக்கும் தோப்புகள் நிறைந்த ஆற்றங்கரையின் மாய அனுபவங்களைப் பற்றி நாம் எத்தனை கதைகள் படித்திருக்கிறோம்- காதுவரை தண்ணீரில் மூழ்கிய எருமை மாடுகளாய் ஆற்று நீரில் திளைக்கும் பதின்பருவ விடலைகளின் பாலுணர்வால் கலகலத்துப் போன மூளைகள் பெண்கள் எப்படியெல்லாம் சிறுநீர் கழிப்பார்கள் என்பதைக் கற்பனை செய்து பார்க்கின்றனதடை செய்யப்பட்ட பிரதேசங்களை அசாத்தியமான வகைகளில் வெற்றி கொள்வதாய் கனவு காண்கிறார்கள். அதுவெல்லாம் நகரில் வளர்ந்த நமக்கு அயல்தன்மைஎனும் மெருகு பூசி வருகின்றனவிரிவாக விவரிக்கப்படும் செடிகள், கொடிகள், மரங்கள், புழுக்கள், பூச்சிகள், பறவைகள், வளர்ப்பு பிராணிகள், நகர்ப்புறத்தின் சாமானியத்தன்மையால் ஒரு சிறிதே தொடப்பட்ட, ஆனால் விவசாயச் சமூகத்தின் இயல்பை இன்னும் இழக்காத பண்பாட்டின் வசீகர தாளகதிகள். நகரில் வளர்ந்தவர்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளைச் சுற்றி ஆங்காங்கே தென்படும்  தென்னைமரம், மாமரம் போன்றவை தவிர வேறு மரங்களைக் கண்டறியாதவர்கள், வீட்டு மனை வாரிய விளையாட்டு மைதானத்தில் பீல்டிங் செய்து கொண்டிருக்கும் அலுப்பான கணங்களில் அபூர்வமாய் தென்படும் பட்டாம்பூச்சிகள், வெட்டுக்கிளிகளை விரட்டிச் செல்வது தவிர வேறு பூச்சிகளைக் கூட அறியாதவர்கள்.  

ஆனால் ஒடுக்கப்பட்ட காமத்தின் ஏக்கம், அது நமக்கு மிகவுமே பழக்கப்பட்ட உணர்வு. காலையில் பள்ளி செல்வது (முந்தைய நாள் பார்த்த தெலுங்கு ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியான சித்ரமாலாவில் வீணாய்ப் போன அந்தக் கிழட்டு நடிகர் செழித்த அங்கங்கள் வாய்த்த கதாநாயகியை அனுபவித்தது பற்றிப் பேசிக் கொண்டே பயணம்)மாலையில் எப்போதும் கிரிக்கெட்அவ்வப்போது பாட்மிண்டன் அல்லது டைனிங் டேபிளில் டேபிள் டென்னிஸ், பக்கத்து வீட்டுக்காரர்களின் அந்தரங்க வாழ்வின் சம்போக சாத்தியங்கள் குறித்த ஊகங்கள், லெண்டிங் லைப்ரரியில் காமிக் புத்தகங்கள் மாற்றிக் கொள்வது (அமர் சித்ர கதா, ஆஸ்டரிக்ஸ், டின்டின், பாண்டம், மாண்ட்ரேக், எனிட் ப்ளைடன், ஃபேமஸ் ஃபைவ்ஹார்டி பாய்ஸ், சீக்ரட் செவன்), வீட்டுப் பாடங்கள், இரவுச் சாப்பாடு, வாசலில் இரவு கிரிக்கெட் (ஒன் பவுன்ஸ்), ஈரக் கனவுகள் (வளமையான நாயகியர், கான்வெண்ட் ஸ்கூல் இருந்த இடத்தில் குடி வந்திருக்கும் வசீகரமான சகோதரிகளைப் பற்றிய கனவுகள்). அனுதினமும் இந்தப் பழக்கம் மாறியதில்லை, அது அலுத்ததுமில்லை, இதில் ஒரு சில மாற்றங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கலாம்- விடுமுறைக் காலங்களில் ட்ரேட், காரம், சீட்டு போன்ற போர்ட் கேம்ஸ் விளையாட்டுகளுக்குக் கூடுதல் வலு சேர்த்திருக்கலாம், அல்லது ஆடைகள் துறந்த நாயகியர் பல்வேறு வகைகளில் காட்சி கொடுப்பதை உள்ளூர் பத்திரிக்கைகளில் தேடிக் கத்தரித்து கவனமாக வரிசைப்படுத்தித் தொகுத்த வெங்கட்டின் ஆல்பம் காணக் கிடைத்திருக்கலாம். ஆம், ’விழைவுப் பொருளாக்குதல்’ என்ற பதத்தை அறியாத அந்தப் பருவத்திலேயே எங்கள் விழைவுகளை உயிரற்ற பொருளாக்க ஆரம்பித்துவிட்டோம்.  இது பற்றி எப்போதாவது ஒரு சமயம் குற்றவுணர்ச்சியும் கொண்டதுமுண்டு, எங்களில் சிலர் தினசரி பிரார்த்தனைகளில் அதற்கு மன்னிப்பு கேட்கவும் செய்தோம் (அந்த நாள் ஏதோவொரு பிரியாவிடை கொண்டாட்டம் போல், இன்றைக்கு மட்டும், நாளை முதல் நிறுத்தி விடுகிறேன் என்று எப்போதும் உறுதிமொழி பூண்டோம்). 

எங்களில் யாருக்கும் உண்மையில் தோழியர் கிடையாது, ஆனால் எல்லாருக்கும் யாரோ ஒரு பெண் மீது கண் இருந்தது, அச்சமும் வெட்கமும் வீரியமும் கலந்த  எங்கள் உந்துதல்கள் கட்டிப் போடப்பட்ட காரணத்தால் எப்போதும் ஆற்றல் குன்றி  இறந்தன. நாங்கள் பல்வகைப்பட்டவர்கள், சிலர் சிபிஎஸ்ஈ பள்ளிகளில் படித்தோம், வேறு சிலர் மாநிலக் கல்வி, எல்லாரும் நன்றாகப் படித்தோம் என்று சொல்ல முடியாது, அவரவர்க்கென்று ஒரு ஆசை இருந்தது, நாங்கள் பிறந்து வளர்ந்த குடும்பங்களும் மத்திய வர்க்கத்தின் பல்வேறு தளங்களுக்கு உரியவை, ஆனால் நாங்கள் யாரும் இல்லாமை அல்லது தாள முடியாத வறுமையின் மோசமான வேதனைகள் அனுபவித்தவர்கள் அல்ல; சரித்திரமும் அரசியலும் எங்கள் பிரக்ஞையுள் இம்மியளவும் புகுந்திருக்கவில்லை (பெரியவர்களின் உரையாடல்களைக் கொண்டு ஒன்றிரண்டு அறிந்ததோடு சரி). சுருக்கமாய்ச் சொன்னால், எங்கள் விடலைப் பருவம் எழுபதுகள் மற்றும் எண்பதுகளுக்குரிய, சராசரியான, போதுமான மகிழ்ச்சி கொண்ட, பாலுணர்வுகள் ஒடுக்கப்பட்ட, எங்குமுள்ள  நகர்ப்புற பதின்பருவத்தினர் அனைவருக்கும் பொதுவானதே. 

பிரஷர் குக்கரில் இருப்பது போன்ற பயங்கரமான, ஆனால் மகிழ்ச்சியான பள்ளிக்கல்வி நாட்களுக்குப் பின் நாங்கள் அவரவர் வழியில் போனோம். என்ஜினீயர்கள், அக்கவுண்டண்டுகள், வங்கி மானேஜர்கள் ஆனோம். எங்களில் சிலர் இலக்கியப் பாவனைகள்கூட வளர்த்துக் கொண்டோம், ஆங்கிலத்தில் மட்டுமல்ல, தமிழ் இலக்கியத்திலும். கடந்த காலம் என்பது வேற்றுதேசம் எனச் சொல்வது மிகவும் சரி என்பது போல், இங்கு நடந்ததே அங்கும் நடப்பதை அயல் தேச இலக்கியம் உணர்த்தியது. ஆம், எங்கள் குடியிருப்பில் இருந்த மலையாளி ஒருவரின் அந்தரங்கத்தை அறிய நீண்ட கோலும் கண்ணாடியும் கொண்ட ஒரு கருவியுடன் நள்ளிரவின் இருளில் இரண்டு மாடிக் கட்டிடத்தின் கூரைக்கு ஏறிச் சென்ற துணிகர நாயக நண்பன் ஜெயமோகனின் கிளிக்காலம்கதையில் எங்கு இறக்கி விட்டாலும் பொருத்தமாகவே இருப்பான். அதே போல், நாங்கள் வாழ்ந்த சலிப்பான நகர வாழ்வும் எங்கள் கிராமிய சகோதரர்கள் வாழ்வோடு ஒத்திசைவதாகவே இருக்கும், அதை ஆவணப்படுத்தும் திறமையும் உந்துதலும் எவருக்கேனும் இருந்தால்.  

நம் நிஜ வாழ்வின் தெய்வங்கள் போலல்லாது இலக்கிய தெய்வங்கள் அவ்வளவு சாடிஸ்டிக்காக இல்லை, அவ்வப்போது நம் பிரார்த்தனைக்குச் செவி சாய்க்கவும் செய்கின்றன. ஒரு வழியாய், கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர், அந்தப் பிரார்த்தனைகள், ஆர். அஜய் எழுதிய ஒரு சிறு நாவல், என் வயதினரின் இரு-மொழி பால்ய அனுபவத்துக்குப் பொருத்தமாக, ‘இயர் ஜீரோ’ என்ற தலைப்பிட்ட நாவலாய் கனிந்து வந்திருக்கிறது. 

இயர் ஜீரோவின் களம் சென்னையல்ல, அதற்கு அருகாமையில் உள்ள செங்கல்பட்டு, ஆனால் அது எனக்கு மிகவும் பழக்கமான ஒரு வாழ்வனுபவத்தின் சுளையைக் கச்சிதமாய்க் கைப்பற்றுகிறது. உண்மையில், அந்த வயதில் எனக்கு இருந்த எண்ணங்களை இந்த நாவல் நானே அஞ்சும் வகையில் வெளிப்படுத்துகிறது (என் வாழ்க்கையின் வேறெந்த ரகசியங்கள் இங்கே அம்பலமாகப்  போகின்றன?). இயர் ஜீரோ என்ற தலைப்பில் இதயத்தை வலிக்கச் செய்யும் நாஸ்டால்ஜியா இருக்கிறது, வாழ்வின் இருவேறு சகாப்தங்களுக்கு இடையே விழுந்து மறைந்து விடும் நிலையின்மை கொண்டது போல். வரலாறும் அதன் மீது செஞ்சாயம் பூசியிருக்கிறது (பினோம் பென்னை கமர் ரூஷ் கைப்பற்றியதும் அதன் பின் நடந்த கொடூரங்களும் நினைவுக்கு வருகின்றன), எனவே தலைப்புக்குப் பின் சில பக்கங்கள் படிக்கும்போதே இதில் விவரிக்கப்படும் விஷயம் நிரந்தரமற்றது, குறுகிய காலத்தது என்ற உணர்வு வலுப்படுகிறது.

இரண்டும் கெட்டான் உணர்வு நிலை கதையின் ஆரம்பத்திலேயே வலுவாக நிறுவப்பட்டு விடுகிறது, நாயகனின் முகத்தில் ஒரு புறம் மட்டும் செழிப்பாக வளர்ந்திருக்கும் தாடியும் மீசையும் அவனது நண்பர்களில் ஒருவனான சந்துரு, “…அர்த்தநாரீஸ்வரர் ஆயிட்டியா?” என்று கேலி செய்யக் காரணமாகிறது. ஆண் பெண் கூறுகள் கொண்ட உருவமான சிவபெருமானின் தொன்மத்தை நினைவுபடுத்தும் இந்தக் கேள்வி போலித்தனமான உயர் வழக்கு கொண்டு நம்மை ஏமாற்றுவதில்லை. அடுத்த வரியிலேயே, “இவன வெச்சு சர்க்கஸ் ஷோ பண்ணலாம்…” என்ற கேள்வி வரும்போது நாவல் ஆன்மீகச்  சங்கதிகளில் கை வைக்கப் போவதில்லை என்பது தெரிந்து விடுகிறது. “நீ என்ன ஒம்போதா?”  என்றே இருபால் தன்மையைச் சுட்டும் அக்கேள்வியை பேச்சு வழக்கில் அர்த்தப்படுத்திக் கொள்கிறாம். அதன் பின் கதை ஹேர் ரிமூவல் கிரீம்களை நோக்கி நகர்கிறது, பெண்களின் ப்யூபிக் பிரதேசங்களில் வளரும் முடிக்குச் செல்கிறது. அங்கு குறிப்பிடப்பட வேண்டிய இடம், “அந்த இடத்துல வளர்ற முடி…”.என்று பெயர் சொல்லப்படாமல் கடந்து செல்லப்படுகிறது. சென்ற நூற்றாண்டின் கடைசி இரு பத்தாண்டுகளில் சென்னையிலோ அதன் வெளிப்புறப் பகுதிகளிலோ வளர்ந்த எவருக்குமே இது போன்ற உரையாடல்கள், எதைப் பேசினாலும் அதில் மீண்டும் மீண்டும் பாலுணர்வைத் தேடிப் பற்றிக் கொள்ளும் உந்துதல், ஆகியவை பழக்கமாக இருந்ததிருக்கும்.

ஆனால், அந்த விடலை, இன்று பின்னோக்கிப் பார்த்து, அந்த வயதின் முனைப்புகள் எல்லாம் பாலுணர்வின் கிளர்ச்சியை நோக்கியே திரும்புவதாய்ச் சொல்வதை  குறுகல்வாதம் என மறுக்கலாம்பதின்பருவம் எப்போதும் பால் விழைவின் இனிப்பும் விளையாட்டுப் பேச்சும் கலந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய் இருக்கவில்லை என்று நிராகரிக்கலாம். வெற்றி பெற வேண்டும் என்ற நிர்ப்பந்தம் காரணமாய் போட்டியும் அழுத்தமும் அந்த வயதில் எவ்வளவு கனமான சுமையாய் ஏற்றப்பட்டது என்பதை நினைவுபடுத்தலாம் (எண்ணற்ற டியூஷன் வகுப்புகள், பல்வேறு ஆசிரியர்கள் வெவ்வேறு இடங்கள் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு பாடப் பதிப்புத் திட்டங்கள் (நேரடி வகுப்புகள் மட்டுமின்றி, தபால் வழிக்கல்வி!), இதில் பங்கேற்க மறுப்பவர்களுக்கு எனக் காத்திருக்கும் மிக மோசமான எதிர்காலம். இன்னும் மனம் கனத்த கணங்களில் தன் அம்மாவின் கன்னத்தில் அப்பா அறைந்தது, அல்லது, அம்மா மண்ணெண்ணெய் கொட்டி கொளுத்திக் கொள்ளப் போவதாய் அதிர வைக்கும் ஆவேசம் கொண்டு மிரட்டியதும் அவன் நினைவுக்கு வரலாம். இப்படிப்பட்ட ஆட்சேபனைகளை எதிர்பார்த்துவிட்டது போலவோ என்னவோ, இந்த நாவல் ஆரம்பத்திலேயே அதன் மொழியை மாற்றிக் கொள்கிறது- இரண்டாம் பத்தியில் முக்கியமில்லாதது போல் தோன்றும் வாக்கியத்தில் இது நேர்கிறது: “அப்பன் வேலைக்குப் போவதை நிறுத்தியதிலிருந்து பாத்திரங்கள் வைக்குமிடத்தை பூஜையறையாக்கி விட்டான்.” முதல் பத்தியில் அத்தனை பதின்பருவ கேலிப் பேச்சுக்களையும் இரண்டாம் பத்தியின் முதல் வாக்கியங்களில் உலக அழகி பற்றிய கிண்டலையும் (வாழக்கா மாதிரி மூஞ்சி நீண்டிருக்கு”) படித்த பிறகு, இந்த இறுதி வாக்கியம் அவ்வளவு பொருத்தம் இல்லாமல் இருக்கிறது என்பதால் கிட்டத்தட்ட அதில் வரும் அப்பன்என்பதை அப்பாஎன்றே பிழை திருத்தி படிப்பது போல் வாசிக்க முற்படுகிறோம். ஆனால் அது அப்படியல்ல என்பதை இந்த நாவலின் பிற்பகுதிகள் மிக ஆணித்தரமாகவே தெளிவுபடுத்தும். இப்போதைக்கு, நகைச்சுவை நாவல்கள் நாம் எதிர்பார்க்கும் வகையில் சிரிக்க வைக்கும் கதைகளாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை என்பதையும் நகைச்சுவையும்கூட வெறும் சிரிக்க வைக்கும் வெறும் பேச்சல்ல என்பதையும் நினைவுபடுத்த இது உதவுகிறது. 

இந்த மிகச் சிறிய நாவலில் நிறுத்தற் குறிகள் போலுள்ள, ஆனால் அடிக்கடி தென்படும்நகைச்சுவையான இடங்கள் அத்தனையையும் ஒவ்வொன்றாகப் பேசி வாசிப்பு அளிக்கக்கூடிய நிறைவைப் பாழாக்கப் போவதில்லை, ஆனால் ஒன்று மட்டும் சொல்ல வேண்டும்- அண்ணா நகர் ஆரோவில் ஹவுசிங் போர்டு குடியிருப்பில் இருந்த நானோ என் நண்பர்களில் யாருமோ இப்படித்தான் விளையாட்டாய் பேசிக் கொண்டிருந்தோம் என்று சொல்கிற அளவுக்கு உண்மையாக இருக்கிறது. நாவல் முழுதும் இதைச் செய்வது என்பது சாதாரண வேலையல்ல, பேச்சு மொழி கதை நெடுக எவ்வளவு நன்றாகக் கையாளப்பட்டிருக்கிறது என்பதற்கு இந்த உணர்வுதான் சான்று. 

எளிமையாய்ச் சொன்னால், இந்த நாவல் கதை நாயகனும் அவனது நண்பர்களும் அந்த முக்கியமான ஆண்டின் இடர்ப்பாடுகளைக் கடக்க அடுத்தடுத்து வெவ்வேறு டியூஷன் மாஸ்டர்களிடம் படிப்பது உட்பட தனியாகவும் கூட்டாகவும் வெவ்வேறு உத்திகளைக் கையாளும் மேல்நிலைக் கல்விப் படிப்பின் இறுதி ஆண்டை விவரிக்கிறது. எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் பள்ளிப் படிப்பு முடித்த அத்தனை பேருக்கும் நன்றாகவே தெரிந்த களம்தான் இது. அதிக மதிப்பெண்கள் வாங்குவதற்கான போட்டியே நாவலின் மையச் சரடாக இருந்தாலும், பாத்திரங்களின் தனிப்பட்ட மற்றும், சமூக வாழ்வினுள் ஊடுபாவுவதால் ஒரு பரந்த சித்திரத்தையும் அளிக்கிறது. இத்தகைய கதை சொல்லும் உத்தியின் வழியே, இருபதாம் நூற்றாண்டின் இறுதி தசாப்தங்களில் சென்னையின் புறநகர் வாழ்க்கையை அது வாழப்பட்ட வகையிலேயே உண்மையாய், அதே சமயம், வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தம் வீட்டிலும் வெளியிலும் தொடர்ந்து அளிக்கப்படும் பதின்பருவ திரிபு ஆடியின் கண்ணோட்டத்தில் சற்றே சாய்மானமாகவும் வெளிப்படுகிறது. நகைச்சுவையின்  உக்கிரம் குறையாமல், தொடர்ந்து நாவல் நெடுக விரவியிருக்கும் எண்ணற்ற உரையாடல்களில் கலாச்சார மாற்றங்கள் எந்தவித கூடுதல் முயற்சியுமின்றி ஆவணப்படுத்தப்படுகின்றன. அதற்கு முந்தைய தசாப்தங்களில் பிரபலமாக இருந்த, “தாய்ப்பால் தமிழிருக்க, புட்டிப்பால் ஆங்கிலமிருக்க, கழுதைப்பால் இந்தி எதற்கு,” போன்ற கோஷங்கள் காலாவதியாகி விட்டன. எண்பதுகள் ஹிந்தி மெகா சீரியல்களின் காலம் (புனியாட்டும் நுக்கட்டும் ஒரு புதிய பாதையைத் திறந்து கொடுத்தன), மிகவும் அபத்தமாக தமிழாக்கப்பட்ட வசனங்களுடனும்கூட தொண்ணூறுகளில் அவை மெல்ல மெல்ல மக்கள் மனதில் இடம் பிடித்தன. இதை கேலித்தனமான ஆனால் சீரியஸான தொனியில் நாவல் ஒரு திளைப்புணர்வுடன்  கைப்பற்றுகிறது:

சன் டிவி ஆறு மணிக்கு மேல ஆரம்பிக்கிறான். அதுல புரோக்கிராம் நல்லாருக்காம்”

சொல்ற நீ என்ன, வருமா ஜுனூன் மாதிரி

டிடி டூ நல்லாத்தான் இருக்கு, தேக் பாய் தேக், நுக்கட்”

இப்படியே உரையாடல் தொடர்கிறது, தமிழ் திரை இசையில் நிகழ்ந்த பூகோள மாற்றத்தின் அதிர்வுகளும்கூட பதிவு செய்யப்படுகின்றன. எதிர்கால இசைப் புயல் ஏ. ஆர். ரஹ்மானின் வருகையும், அப்போது கோலோச்சிக் கொண்டிருந்த மேஸ்ட்ரோ இளையராஜா சீக்கிரமே தன் முதலிடத்தை இழக்கப் போவதை அவரது ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பது போன்ற பெரு ஊடக நிகழ்வுகளும் கட்டை விரல் குறிப்புகளாய் பதிவாகின்றன. 

ஹம் ஆப்கே ஹை கோன், பாட்டு நல்லாருக்கு, ஆனால் காதலன் சாங்க்ஸ் கிட்ட கூட வர முடியாது டா”

ஓத்தா அதெல்லாம் கம்ப்யூட்டர் ம்யூசிக்டா, இன்னும் ரெண்டு மூணு வருஷம்தான் நிக்கும். வீரால மொட்ட போட்டிருக்கிற பாட்டு கேட்டேல”

“… ரஹ்மான் சவுண்ட் என்ஜினியர் மட்டும்தான்”

நான் மேலே சொன்னவை நாவலின் முதல் பத்து பதினைந்து பக்கங்கள்தான்.  அஜய்யின் சிரமப்படுத்தாத நடை, நகைச்சுவை வெற்றி பெறத் தேவையான சுருதி பிறழாத உரையாடல்கள் குறித்து ஒரு சுட்டுதல் அளிக்கவே அவற்றை  ஒரு முன்னோட்டமாக இங்கு அளித்திருக்கிறேன். இது போலவே நூறு பக்கங்களுக்கும் மேல் விரியும் நாவல் அதன் போக்கில் கலாச்சார ஒழுக்கங்கள், அரசியல், முதல் சினிமா, விளையாட்டு என்று பல்வேறு துறைகள் குறித்த சில்லறைக் குறிப்புகளையும், வர்க்க பேதங்கள் குறித்த சங்கடங்களையும், எல்லாவற்றுக்கும் மேல், பதின்பருவத்தினர் உள்ளத்தில் அவ்வளவு பூதாகரமாய் எழுந்து நிற்கும் பால் விழைவின் வெளிப்படுத்த முடியாத அழுத்தமும் அவ்விழைவின் அபத்தமான, ஆனால், தோல்வியைத் தழுவும் திரிசம வேலைகளையும் சுட்டிக் காட்டுவதில் அலுப்பதில்லை.  

இரண்டாவது பத்தியின் இறுதியில் கண்ணுக்குத் தெரியாத வகையில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறிய டைம் பாம் பற்றிச் சொல்லியிருந்தேன். ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்லப்படும் நம் இல்லற உறவுகளின் புறப்பரப்புக்கு கீழ் ரத்த ஆறாய் ஓடும் மூர்க்கத்தனம் மற்றும் குரூரத்தை நினைவுபடுத்திக் கொண்டே அந்தக் குண்டு தன் இருப்பை வெளிப்படுத்துகிறது, ஆனால் அது தன் முழு ஆற்றலுடன் ஒரு போதும் வெடிப்பதில்லை; அதன் சன்னமான, அரைகுறை வெடிப்புகள் அவை பலிவாங்கிய பெண்களின் எதிர்ப்பின்மையாலும், சமூக நியதிகளின் மீதான மரியாதை காரணமாகவும் அடங்கி ஒலிக்கின்றன. இந்தப் போராட்டத்தில் விலகி நின்று வாதைக்கு உட்பட்டு பலியாகும் குழந்தைகள் தம்மைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள், அந்தக் கொடுமையைப் பற்றி எதுவும் சொல்ல வேண்டியதில்லை. இதனால்தான் நம் பதின்பருவ நாயகன் பாலியல் சாயங்கள் பூசப்படாத உணர்ச்சிகளை வெளிப்படையாய் காட்டிக் கொள்ளும் இடங்கள் மிகக் குறைவாகவே நாவலில் காணக் கிடைக்கின்றன. அவை அந்நியர்களை நோக்கியே அமைகின்றன என்பதில் வியப்பு இல்லை- நாடார் மளிகைக் கடையைச் சுற்றி வரும் சேட், கையில் காசு இல்லாததால் ராட்டினம் ஏற முடியாத திருவிழாச் சிறுவன்.

குறிப்பிட்ட காலகட்டத்தின் தமிழ் விடலைப் பருவத்தை அவ்வளவு நளினமாகவும் நேர்மையாகவும் ஆவணப்படுத்தும் இனிய நாவல் என்பதால் இது குறித்து எதிர்மறையாய் எதுவும் சொல்லத் தயக்கமாக இருக்கிறது. பாத்திரங்களின் அகவெளியில் ஏற்பட்டும் மகத்தான மாற்றங்களை எதிர்கொள்வதில்லை என்று வழக்கமாகத் தமிழில் செய்யப்படும் விமரிசனத்தையோ இது போன்ற நாவலில் வெளிப்படும் வயதுக்கு வருதல், மன முதிர்ச்சி அடைதல் சித்தரிக்கப்படவில்லை என்ற ரக விமரிசனத்தையோ மனதில் கொண்டு இதைச் சொல்லவில்லை. வயதுக்கு வருதல், என்ற பதம், முதிர்வின்மை என்ற மலினமான இடத்திலிருந்து புறப்பட்டு மனமுதிர்ச்சி என்ற செழிப்பான இலக்கைச் சென்றடைவது என்ற அர்த்தத்தையும் உடனழைத்து வருகிறது.. ஏற்கனவே வயதுக்கு வந்தவர்கள்வாழ்வில் உள்ள அவலத்தை ஒப்பிடும்போது இன்னும் அந்த சந்தேகத்துக்குரிய மரியாதை அளிக்கப்படாதவர்கள் வாழ்வில் உள்ள மகிழ்ச்சியை  இவ்வளவு முரண்பட்ட வகையில் அடுக்கும் நாவல் அம்மாதிரியான சுட்டுதல்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது. இப்படிப்பட்ட மகத்தான லட்சியங்களை அதற்கு அளிக்கத் தயக்கமாய்த்தான் இருக்கிறது என்றாலும் இதுவே அதன் மறைமுகமான செய்தி என்றும்கூட வாதிட முடியும். 

ஆனால் இந்தச் சிறந்த நாவலிலும் சில சிறு குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதில் சிலவற்றுக்குக் காரணம் மோசமான எடிட்டிங்காக இருக்கலாம்- ஏழாவது அத்தியாயத்தில் சலூன் கடை உரையாடல், முதலில் அப்பாவுடன் இங்கு வந்து…” என்று மரியாதை கலந்த தொனிக்கு மாறுகிறது, அது நாவலின் பிற பகுதிகளுடன் ஒரு சிறிதும்கூட பொருந்துவதில்லை. ஆனால் அதைவிடப் பெரிய குறை கடைசி அத்தியாயங்கள் அரக்கப் பறக்க முடிவதுதான், அஜய்க்கே அலுப்பு தட்டி எப்படியோ கதையை முடித்து விட்டால் போதும் என்று எழுதியது போல் இருக்கிறது. கதை நாயகன் தன் விடைத்தாள்களைக் கொடுத்து மாட்டிக் கொள்ளும் இடம் முதல் பொதுத் தேர்வில் அவன் மோசமான மதிப்பெண்கள் எடுப்பது வரையிலான கதை நம்பத்தகுந்த வகையில் சொல்லப்படவில்லை, அது வரை நல்ல விருந்தாக இருந்த கதையில் இது ஒரு கசப்பை விட்டுச் செல்கிறது.  

நாவலின் முடிவில் நாயகன் இனி தான் இணையப் போகும் கல்லூரி முதலாம்  ஆண்டை அவன் எதிர்கொள்ளும் இடத்தில் விட்டுச் செல்ல முனைந்தாலும் நாவல் கடந்த கால நினைவேக்கம் அளிக்கும் அழுத்தத்துடனே முடிகிறது. இதுவரை அவனுக்குத் தடை செய்யப்பட்டிருந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் வாயில் திறக்கிறது. போர்டு எக்ஸாமில் முதல் மதிப்பெண் பெற்றவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும் தன் பள்ளிப் பலகையை நினைத்துப் பார்க்கிறான், அவன் பள்ளியில் வாழ்ந்த வரலாறு கால இருளில் ஒரு சுவடுமின்றி தொலையப் போகிறது. அது போன்ற ஒரு பலகையில் பெயர் பொறிக்கப்பட நேர்ந்தவன், அண்ணா பல்கலைக்கழகத்தைவிடப் பெருமைக்குரிய நிறுவனமொன்றின் வகுப்பறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டவன் என்ற வகையில், இக்கதையின் நாயகன் தோளில் கை  போட்டு, வாழ்க்கை இதைவிடப் பெரியது, அதன் கணக்கில் இதற்கெல்லாம் பெரிய மதிப்பில்லை என்று சொல்ல விரும்புகிறேன். நம் ஒவ்வொருவர் மூளைக்கும் ஒரு தனி மனம் இருக்கிறது, நாம் ஒவ்வொருவரும் ஒரே வயதில், ஒரே சமயத்தில் நம்  திறன்களின் உச்சம் தொடுவதில்லை. நாசமாய்ப் போன அந்தப் பலகையில் என் பெயரை ஏமாற்றத்துடன் பார்த்தவர்கள் பலர் என்னால் கனவுகூட காண முடியாத உயரங்களைத் தொட்டிருக்கிறார்கள். இதில் பலவும் குருட்டு அதிர்ஷ்டம்தான். ஆனால் அதை எல்லாம் நான் சொல்ல வேண்டியதில்லை. அவனே புத்திசாலிதான், இதை தானாகப் புரிந்து கொண்டு விடுவான். 

அவன் மீண்டும் ஜேஜே படிக்கப் போகிறான் என்பது தெரிகிறது, அதன் கூர்மையான, ஆனால் பன்முனைப்பட்ட பகடி அவனது அறிவார்ந்த நகைச்சுவைக்குப் பொருத்தமாகவே இருக்கும். ஜேஜேவை விட வேறொரு நாவல்தான் நினைவுக்கு வருகிறது, அவனை வெற்றி பெற்றவனாக, ஆனால் அவ்வெற்றியின் பரண் சலிக்கச் செய்வதைப் பகடி செய்யும் திறன் படைத்தவனாக என்னால் கற்பனை செய்ய முடிகிறது. அவனை ஒரு ‘இங்கிலிஷ், ஆகஸ்ட்’டாக நினைத்துப் பார்க்கிறேன், ஆனால் அந்த இருள் நகைச்சுவை இயல்பு கொண்ட இளைஞனை விட இவன் இன்னும் கொஞ்சம் முழுமையானவனாக இருக்கலாம். 

ஒரு வேளை  அந்த எதிர்காலத்தைச் சொல்லும் எண்ணம் அவனுக்கு வரலாம். நம் காலத்துக்கான ராபிட் நான்மைத் தொடர் நாவல்களை அவன் எழுதுவானோ என்னவோ, அப்போது அப்டைக்கின் ராபிட்டைக் காட்டிலும் அவை நம்மைச் சிரிக்கச் செய்யலாம். நமக்காக இல்லை என்றாலும், நகைச்சுவைக்கு அதிகம் இடம் கொடுக்காத தமிழ் நாவலின் அவசியத் தேவைக்காகவாவது அவன் இதைச் செய்ய வேண்டும், உடனடியாக. 


-நம்பி கிருஷ்ணன் 


நூல் : இயர் ஜீரோ

ஆசிரியர்: காலத்துகள்

பதிப்பகம் : யாவரும் பதிப்பகம்

விலை : ₹150

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.