வன தேவதை- மொழிபெயர்ப்பு சிறுகதை

 


 

  • ஆங்கிலத்தில்: விளாதிமீர் நபக்கோவ்
  •  தமிழில்: செ. ஜார்ஜ் சாமுவேல்

சிந்தனையில் ஆழ்ந்திருந்த நான் மைக்கூட்டின் அசையும் நிழலின் சுற்றுவட்டக் கோட்டை வரைந்து கொண்டிருந்தேன்.  தூர அறையில் கடிகாரத்தின் மணியோசை கேட்ட நேரத்தில், கனவே காணும் நான், முதலில் மென்மையாகவும், பின்பு ஓசை அதிகரித்தும் ஒலிக்க யாரோ ஒருவர் கதவைத் தட்டுவதாக கற்பனையில் ஆழ்ந்தேன். அவன் பன்னிரண்டு முறை கதவைத் தட்டியபின் எதையோ எதிர்பார்த்து நிறுத்தினான்.

”ஆமாம், இங்கே தான் இருக்கிறேன், உள்ளே வா…”

கதவின் கைப்பிடி கலக்கத்தோடு கூடிய கிரீச்சொலியுடன் திறந்து, ஒழுகும் மெழுகுவர்த்தியின் சுடர் சற்றே சாய்ந்திருக்க, அவன் செவ்வக நிழலிருந்து பக்கவாட்டில் தாவி, விண்மீன்கள் நிறைந்த இரவில் உறைபனியின் மகரந்தத் துகள்கள் சாம்பலாய்ப் படர்ந்திருக்க இங்கு வந்திருந்தான்.

எனக்கு அவனது முகம் ஞாபகம் இருக்கிறது – ஓ, எவ்வளவு நாட்களாக அவனை எனக்குத் தெரிந்திருக்கும்!

அவனது வலது கண் இன்னமும் நிழலுக்கு உள்ளேயிருக்க புகைப் பச்சை நிறமுள்ள இடது கண் விரிந்து அச்சத்துடன் என்னைக் கூர்ந்து நோக்கியது.  அந்த கண்ணின் மணி துருவின் ஒரு புள்ளியைப் போல ஒளிர்ந்தது.  பாசிபடர்ந்த சாம்பல் நிற நெற்றி முகடு, வெளிறிய வெள்ளியைப் போன்ற அரிதான புருவம், பூனை மீசையற்ற வாய்க்கு அருகில் ஏற்படும் விசித்திரமான சுருக்கம் – எப்படித்தான் இவை அனைத்தும் கிண்டல் ஏற்படுத்தும் தொனியில், தெளிவற்ற அதே நேரத்தில் எரிச்சலடையத்தக்க வகையில் எனது நினைவில் பதிந்துள்ளதோ!

நான் எழுந்தேன். அவன் சற்று முன்னோக்கி நகர்ந்தான்.

அவனுடைய கந்தல் கோட் இடப்பக்கத்தில் தவறாக பொத்தானிடப்பட்டிருந்தது.  அவன் கைகளில் ஒரு தொப்பியை- இல்லையில்லை, தொப்பியின் அடையாளமேயில்லாத அது, ஒரு மோசமாக கட்டப்பட்ட கருநிற பொட்டலம்.

ஆம், அவனை எனக்குத் தெரியும் – ஒருவேளை அவன் எனக்கு பிடித்தமானவனாகக் கூட இருந்திருக்கலாம் என்றாலும் எங்கே எப்போது அவனை சந்தித்தேன் என்பது மட்டும் நினைவில் இல்லை.  நாங்கள் அடிக்கடி சந்தித்திருக்க வேண்டும், இல்லாவிட்டால் அந்த செந்நெல்லி உதடுகள், கூர்மையான காதுகள், வேடிக்கையான குரல்வளையை என்னால் இவ்வளவு உறுதியாக ஞாபகப்படுத்த வாய்ப்பில்லை.

அவனை வரவேற்கும் வகையில் முணுமுணுத்தபடி லேசான குளிர்ந்த கைகளைத் தொட்டுக் குலுக்கி, அங்கே கிடத்தப்பட்டிருந்த பழுதுபட்ட சாய்வு நாற்காலியின் பின்புறத்தைத் தொட்டேன்.  அவன் கிளை மீதிருக்கும் காகத்தைப் போல் அமர்ந்து வேகமாய் பேசத் துவங்கினான்.

”தெருக்கள் மிகவும் அச்சமூட்டுபவையாக உள்ளன. அதனால் தான் உள்ளே நுழைந்தேன்.  உன்னை சந்திப்பதற்காகவே நுழைந்தேன். உன்னால் என்னை அடையாளம் காண முடிகிறதா?.  அந்த கிராமத்தில் தான் ஒரு காலத்தில் நீயும் நானும் நாட்கணக்கில் சத்தமிட்டு விளையாடிக் கொண்டிருந்தோம்.  அதை மறந்தே போய் விட்டேன் என்று சொல்வாயா?”.

உண்மையாகவே அவனுடைய குரல் எல்லாவற்றையும் மறக்கச் செய்துவிட்டது.  தலைசுற்றி கிறக்கமாக உணர்ந்தேன் – நான் அம்மகிழ்ச்சியை… முடிவற்று எதிரொலிக்கும் அந்த ஈடு செய்ய முடியாத மகிழ்ச்சியை நினைவு கூர்ந்தேன்.

இல்லை, அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை.  நான் தனித்திருக்கிறேன்…..அது சலனப் புத்தியால் ஏற்பட்ட சித்த பிரமையாக இருக்கும். நிஜமாகவே நம்பமுடியாதபடி ஒல்லியாக ஒருவர் என் பக்கத்தில் உட்கார்ந்து, நீண்ட காதுகளுடைய ஜெர்மானிய கம்பளிக் காலணிகளோடு, மணியோசையைப் போல ஒலிக்கும் குரலில் மெல்லிய ஓசையை எழுப்பும் –  பழக்கப்பட்ட, பொன்னிற சாற்றுப் பச்சை –  மனிதத் தன்மையுள்ள எளிமையான வார்த்தைகள்.

”அங்கேதான் – நீ ஞாபகப்படுத்திப் பார்க்க வேண்டும். ஆம், நான் போக்கிரித்தனம் மிகுந்த முன்னொரு கால எல்ஃப்*.  இங்கே, கட்டாயமாக வெளியேற்றப்பட்ட எல்லோரையும் போல நிற்கிறேன்.

அவன் ஆழமாக மூச்சிழுக்க, ஒளிவட்டம் அசைவதையும், தழைத்து உயரும் மடிப்புகளையும், தொடர்ந்து ஒலிக்கும் செவிகளை இனிப்பூட்டும் இசைக்கு எதிராக, கடல்நுரையாகத் தெறிக்கும் பைன் மரப்பட்டைகளின் மின்னும் ஒளியை மீண்டுமொரு முறை கண்டேன்….அவன் என்னை நோக்கி வளைந்து மென்மையாக என்னுடைய கண்களுக்குள் பார்த்தான்.  “வெண் பிர்ச் மரமும் கரும் பைன் வகையுமான கானகத்தை நினைவு கூர முடிகிறதா?. அவர்கள் அனைத்தையும் வெட்டி வீழ்த்தினர்.  தாங்க முடியாத துயரம் – நேசமிகுந்த எனது பிர்ச்கள் முறிந்து வீழ்வதைப் பார்க்கும் என்னால் என்ன செய்துவிட முடியும்?  அவர்கள் என்னை சதுப்பு நிலத்தை நோக்கித் துரத்த நான் ஊளையிட்டேன், அழுதேன்.  அருகேயிருக்கும் பைன் மரக்காட்டிற்கு விரைந்தேன்.”

நலிந்தேன், தேம்பியழுவதை தடுக்கவும் முடியாமல்.  இம்மாதிரி  விசயங்களுக்கு அரிதாகப் பழக்கப்பட்டிருந்த என்னால், ஐயோ…நீலம் தோய்ந்த சாம்பலே மிஞ்சியிருக்கும் பைன் மரக்காடுகளை இனிமேல் அங்கே பார்க்க முடியாது.  இன்னமும் நெடுந்தொலைவு திரிய வேண்டும்.  இருமையும் குளிரும் நிறைந்த வியக்கத்தக்க அடர் மரத்தை எனக்காகக் கண்டுபிடித்தேன். எப்படியும் அது முன்பு போலில்லை.

விளாதிமீர் நபக்கோவ்

அந்நாட்களில் காலையில் துவங்கி மாலை வரை ஆவேசமாக சீழ்க்கையடித்தும் கைகளைத் தட்டியும் கடந்து செல்பவர்களை பயமுறுத்தியும் குதியாட்டம் போடுவேன்.  உன்னால் நினைவு கூர முடிகிறதா? – எனது வனத்தின் இருளடர்ந்த மூலையில் நீயும், வெள்ளை உடையணிந்த சின்னவளும் வழி தொலைக்க, மரத் தண்டுகளைச் சுழற்றியும், இலைத்திரளின் ஊடாக மின்னியும், பாதைகளை முடிச்சிட்டு இணைக்க முயன்றிருந்தேன். தந்திர விளையாட்டில் இரவைக் கழித்தேன். கண்டிப்பாக அவர்கள் என்னை பழித்துப் பேச வைக்கும் தாந்தோன்றித் தனங்களை வேடிக்கைக்காக மட்டுமே செய்திருந்தேன்.  புதியதும், மகிழ்ச்சியற்றதுமான என்னுடைய இந்த புகலிடத்திற்காக தேம்பினேன்.  இரவும் பகலும் வினோதங்கள் என்னைச் சுற்றி ஒலித்தன.  என் சக எல்ஃப் ஒன்று அங்கே மறைந்திருப்பதாக நினைத்து அழைத்தேன் பின்பு நான் (கூர்ந்து) கேட்டேன்.  ஏதோவொன்று முறிந்தது, ஏதொவொன்று உருண்டது…..இல்லையில்லை, அவை நாங்கள் எழுப்பும் ஒலிகளைப் போலில்லை.   ஒருமுறை, நெருங்கும் மாலையில் புற்களடர்ந்த வெற்றிடத்திற்கு நழுவ, அங்கே என்ன நான் பார்த்தேன்?. சிலர் தலைகுப்புறவும் மல்லாந்தும் படுத்திருந்தனர்.  சரிதான்!… கொப்புகளை குலுக்கியும், கூம்புகளை எறிந்தும், கூவியும், (இலைகளை) சலசலத்தும் நான் அவர்களை எழுப்புவேன், அவர்களை இங்கிருந்து கிளப்புவேன் என நினைக்கிறேன்!….ஒரு மணிநேரம் கடுமையாக முயன்றும் அத்தனையும் பயனற்றுப் போனது.   பின்னர் நான் அருகில் நெருங்கிப் பார்க்க, திகிலடைந்தேன்.  மெல்லிய அடர் சிவப்பு நூலில் தலை சிக்கித் தொங்கும் மனிதனையும், வயிற்றைத் தேடும் குண்டுப் புழுக்களின் குவியலோடிருக்கும் மற்றொருவனையும் கண்டேன்…..என்னால் அதைத் தாங்க முடியவில்லை.  ஊளையிட்டு காற்றில் குதித்த நான் அங்கிருந்து  நீங்கி ஓடினேன்.

”நெடுங்காலம் நான் வெவ்வேறு காடுகளுக்குள் சுற்றித் திரிந்தும் என்னால் அமைதியடைய முடியவில்லை.  அசைவின்மை, சோகம், உயிருறிஞ்சும் சலிப்பு, நினைத்துப் பார்க்காமல் இருப்பதே நல்லதெனும் படியான பேரச்சமாகவும் இருக்கலாம். இறுதியில் என்னுடைய மனதை மாற்றிக் கொண்டு ஒரு நாட்டுப்புறத்தானாக மாறி, முதுகுப்பையைக் கையில் எடுத்துத் திரியும் நாடோடியாக நன்மையைத் தேடி விலகினேன். ரஷ்’ போய் வருகிறேன்.  இங்கே, எனது உறவுக்கார நீர்-தேவதை கரம் நீட்டியது.  பரிதாபமான அவனுக்கும் கூட ஓட்டம் தான்.  அவன் தொடர்ந்து ஆச்சரியத்தோடு, சொல்லிபடியே இருந்தான் – என்ன விதமான காலம் இது,  உண்மையிலே பேராபத்து தான்!….முன்காலங்களில் மனிதர்களை வசப்படுத்தி ஆழத்திற்கு இழுத்து (எப்பேற்பட்ட தோழமைமிக்க ஒருவன்!) வேடிக்கை செய்வான், நதியின் பொன்னான ஆழத்தில் என்ன(விதமான) மயக்கூட்டும் பாடல்களை அவர்கள் மீது பொழிந்து அன்பையும் செல்லத்தையும் கைம்மாறாகக் கொடுத்தான்.  ஆனால் இந்நாட்களில் இறந்தவர்கள்தான் இங்கே மிதந்தபடி, கூட்டம் கூட்டமாக மிதந்து, எண்ணிக்கையில் அதிகமாக வருவதால் இந்த நீர் நிலையின் ஈரத்தன்மை கூட குருதியைப் போல அடர்ந்து வெதுவெதுப்பாக பிசுபிசுத்து அவனுக்கு மூச்சுவிடக் கூட ஒன்றுமில்லாமல் போய்விட்டது….அதனால் என்னையும்  அவனோடு சேர்த்துக் கொண்டான்.  தொலைதூர கடலோடு சேர்வதற்காக மூடுபனி சூழ்ந்த கரையில் என்னைச் சேர்த்து விட்டு  –  போ, சகோதரா, சிநேகமிக்க இலைத்திரளைத் தேடிக்கொள்.  ஆனால் அப்படி எந்தவொரு இடத்தையும்  கண்டுபிடிக்க முடியாமல் அந்நியமான, கல்லாலான திகிலூட்டும் நகரத்தைத் தான் சேர முடிந்தது.  இப்படியாக மனிதத்தன்மை மிக, பொருத்தமான கம்பளிக் காலணிகளும், கஞ்சிபோட்ட  காலரோடும் முழுமையாக ஒரு மனிதனாக மாறி மனிதர்களின் பேச்சையும் கற்றேன்…”.

அவன் மெளனமாக இருந்தான்.  ஈர இலைகளைப் போல கண்கள் மினுமினுத்து, அவனுடைய கைகளை குறுக்காக மடக்கி,  மூழ்கும் மெழுகுவர்த்தியின் அலைவுறும் ஒளியில், இடதுபக்கம் புதுமையாக வாரப்பட்ட வெளுத்த இழைகள் மினுமினுத்தன.

”நீயும் கூட வாட்டமடைவாய் எனத் தெரியும்”, அவன் குரல் மீண்டும் சிணுசிணுக்க… “ஆனால் உன்னுடைய வாட்டம், என்னோடு ஒப்பிடுகையில், தூங்கும் ஒருவனது மூச்சும் கூட புயலாகக் கொந்தளிக்கும்.  மேலும் இதைக் குறித்து சிந்தித்துப் பார்; நம் இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் யாரும் ரஷ்’ ல் விட்டு வைக்கப்படவில்லை. மூடுபனியின் துகள்களைப் போல நம்மில் பலர் சுழற்றி அடிக்கப்பட்டும் உலகின் பல பாகங்களுக்கு சிதறடிக்கப்பட்டனர். துயரார்ந்த நமது சொந்த ஆறுகளில்,  நிலவின் மினுமினுப்பைத் தெறிக்கும் விளையாட்டுக் கரங்கள் இல்லாமல் போய்விட்டன.  தற்செயலாக, வெட்டப்படாத, ஒருகாலத்தில் என்னுடைய எதிரிக்கு உரித்தானதாக இருந்த வெளிர் நீல யாழும், கட்புலனாகாத நிலத்தேவதையான அவனுடைய பாடல்களுக்காக மெளனிக்கும் நீல மணிகளும் அனாதையாக நிலைத்திருக்கும். அவமானப்படுத்தப்பட்ட நிறம் மங்கும் உனது வீட்டை மயிரடர்ந்த அந்த தோழமைமிக்க வீட்டுத் தேவதையும் கண்ணீரோடு கைவிட சருகாக வதங்கும் தோப்புகள், இரங்கத்தக்க ஒளிவீசும், அந்த துயர் மண்டிய தோப்புகள்…..

ஆழங்காண முடியாத உங்கள் அழகிற்கும், நெடுங்கால வசீகரத்திற்கும்!…”ரஸ்’ ஆகிய நாங்கள்தான்” தூண்டுதலாக இருந்திருக்கிறோம்.  நாங்கள் எல்லோரும் தொலைந்தோம், ஒரு வெறி பிடித்த கண்காணிப்பாளரால் நாடு கடத்தப்பட்டு தொலைந்தே போனோம்.

”என் நண்பனே, சீக்கிரம் நான் இறந்துவிடப் போகிறேன், ஏதாவது என்னிடம் சொல், என்னை நேசிக்கிறேன் என்று சொல், வீடற்றுப் போய்விட்ட ஆவியுருவாகிய என்னோடு நெருங்கி உட்கார், உனது கைகளைக் கொடு……”

மெழுகுவர்த்தி தொடர்பிசைவற்று அணைந்து போனது.  குளிர்ந்த விரல்கள் என் உள்ளங்கையைத் தொட்டன.  எனக்கு மிக நெருக்கமான இத்துயரார்ந்த சிரிப்பு முழங்கி, மோனத்தில் உறைந்தது.

நான் விளக்கைத் தூண்டிய போது சாய்வு நாற்காலியில் யாரும் இல்லை….யாருமே இல்லை!…. பைன் மரத்தின், ஈரம் ததும்பிய பாசியின் வியப்பளிக்கும் நுட்பமான நறுமணத்தைத் தவிர வேறு எதுவுமே மீதமிருக்கவில்லை.

குறிப்பு:   எல்ஃப் – நாட்டுப்புற கதைகளில் வரும் கூரான காதுகளும் மாயச் சக்தியும் உடைய ஒரு கற்பனை உயிரி.

 


*இக்கதை “கல்குதிரை” இதழில் வெளிவந்தது. விகடன் நம்பிக்கை விருது பெற்ற “மேன்கஸ்பியஸ்” தொகுப்பில் இடம் பெற்ற மொழிபெயர்ப்பு சிறுகதை. ஆசிரியரின் உரிய அனுமதி பெற்று ‘பெட்டகம்’ பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.