மறக்க முடியாத மனிதர்


 தி. ஜானகிராமன் ‘கல்கி’யில் ‘அன்பே ஆரமுதே’ என்ற தொடரை எழுதிக் கொண்டிருந்த போதுதான் அவரது பெயர் அறிமுகமானது. அப்போது அத்தொடரை நான் வாரா வாரம் வாசிக்கவில்லை. அவை என் பள்ளி நாள்கள். அகிலன், நா. பார்த்தசாரதியைப் போல் ஜானகிராமனும் ஒரு தொடர்கதை எழுத்தாளர் என்ற மதிப்பீடுதான் அப்போது எனக்கு இருந்தது.

ஆனந்த விகடனிலா, கலை மகளிலா என்று நினைவில்லை. அவரது ‘சிலிர்ப்பு’ என்ற சிறுகதையைப் படித்தபோது, அச்சிறுகதை என்னை வெகுவாகக் கவர்ந்தது. இப்படித்தான் ஜானகிராமன் எனக்கு அறிமுகமானார். அந்த நாள்களில் கலைமகள், அமுதசுரபி, ஆனந்த விகடன், கல்கி போன்ற வெகுஜனப் பத்திரிகைகளில் கூட அருமையான சிறுகதைகள் வெளியாகின.

ஆனால், ஜானகிராமனின் எழுத்து அகிலன், நா.பா.வின் எழுத்துக்களைப் போல வெகுஜன ரஞ்சகமான எழுத்தல்ல. பா. ஜெயப்பிரகாசம் திருநெல்வேலியில் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராக 1972 – 73ல் பணியாற்றியபோது, அவரது அலுவலக நூலகத்திலிருந்து ‘மோக முள்’ படிக்கக் கிடைத்தது. அது ஒரு அதியற்புதமான வாசக அனுபவமாக இருந்தது. சில நாவல்களைத் திரும்பத் திரும்பப் படிக்கத் தோன்றாது. ‘யதார்த்தம்’ என்ற பேரில் வறட்டுத்தனமான நடையில் எழுதப்பட்ட பல நாவல்களுக்கு இக்காலத்தில் இலக்கிய அந்தஸ்தும் கிடைத்துள்ளன.

ஜானகிராமனின் ஒரு வரி கூட வறட்டுத் தனமானதல்ல. ஜீவன் ததும்பி வழியும் எழுத்து அவருடையது. மோகமுள்ளைப் பலமுறை படித்து விட்டேன். அது ஒரு நவீன உரைநடைக் காவியம். பல வெகுஜன ரஞ்சக எழுத்தாளர்களைப் போல ஜானகிராமன் நிறையவே எழுதியிருக்கிறார். ஆனால், அலுப்பு தட்டாத எழுத்து அவருடையது.

நம்பிராஜன் (விக்ரமாதித்யன்) குன்றக்குடி அடிகளாரிடம் சிறிது காலம் பணிபுரிந்தார். அப்போது அங்கே படிக்கக் கிடைத்த ‘அம்மா வந்தாளைப்’ பற்றி வண்ணதாசனுக்கு நீண்ட கடிதமொன்று எழுதியிருந்தார். அது ஒரு உன்னதமான கடிதம். பிறகு ஒருநாள் தி.க.சி.யிடமிருந்து தபாலில் வண்ணதாசனுக்கு ‘அம்மா வந்தாள்’ வந்தது. அதை வண்ணதாசன், நான், கலாப்ரியா மூவரும் படித்தோம். ஜானகிராமனின் எழுத்து மீதான மதிப்பு உயர்ந்து கொண்டே போயிற்று.

அதன் பிறகு அவரது சிறுகதைகளைத் தேடி எடுத்துப் படித்தேன். தினமணி கதிர் ‘சாவி’யை ஆசிரியராகக் கொண்டு வாரப் பத்திரிகையாக வெளிவந்தபோது, கதிரில் ஜானகிராமனின் ‘செம்பருத்தி’ வெளிவந்தது. ‘அன்பே ஆரமுதே’வும், உயிர்த் தேனும் ஏற்கெனவே புஸ்தக வடிவில் வெளிவந்திருந்தன. 73 வாக்கில் கணையாழியில் ‘மரப் பசு’ தொடராக வெளிவர ஆரம்பித்திருந்தது.


தார்த்தமாக எழுதுகிறேன் என்ற பேரில், தினசரிகளில் வரும் செய்திகளைப் போல், யாந்திரீகமாக, அழகுணர்ச்சியின்றி எழுதும் எழுத்தாளர்கள் இன்று போல் அன்றும் இருந்தார்கள். அகிலனுடைய எழுத்து இதன் சிறந்த உதாரணம். இப்போது எழுதும் ‘இமையம்’ போன்றவர்களின் எழுத்தும் மேற்கண்ட ரகத்து எழுத்தே.

அந்நாளைய ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின், அம்மக்களின் உணர்வுகளையும், அழகையும் தனது அதியற்புதமான ஜீவன் ததும்பும் உரைநடையில் சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் எழுதியவர் ஜானகிராமன். அவரது எழுத்து மனோமயமானது. அதனால் தான் அவரது பயணக் கட்டுரைகளான ‘உதய சூரியன்’,  ‘கருங்கடலும் கலைக்கடலும்’,  ‘நடந்தாய் வாழி காவேரி’ போன்ற கட்டுரைகளில் கூட அவரது மனவுலகின் எழிலில் அருமையாக வெளிப்பட்டுள்ளது. அவரைப்போல் இவ்வளவு அழுத்தமாகவும், அதே சமயம் எவ்வித ரசனைக் குறைவுமின்றி எழுதிய படைப்பாளிகள் தமிழில் வெகு அபூர்வம்.

அவரது சிறுகதைகளாகட்டும், நாவல்களாகட்டும் அபாரமான உருவச் செட்டுடன் அமைந்துள்ளன. அவரது இந்த உருவ அமைதி அவரது கட்டுரைகளில்கூட வெளிப்படுகிறது.

1975 வாக்கில் இயக்குனர் ருத்ரையாவின் அறிமுகம் கிடைத்தது. அவருக்கு தி. ஜானகிராமனின ‘அம்மா வந்தாள்’ நாவலைத் திரைப்படமாக்க வேண்டுமென்று ஆசை. கமலஹாஸனை அப்புவின் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டுமென்று விரும்பினார். இதற்காக எழுத்தாளன் என்ற முறையில் என் உதவியை ருத்ரையா நாடினார். ஜானகிராமனைச் சந்திக்க வேண்டுமென்று முயற்சித்தார்.

அப்போது ஜானகிராமன் புது டெல்லியில் அகில இந்திய வானொலியில் பணியாற்றினார். சிட்டியும் ஜானகிராமனும் நல்ல நண்பர்கள் என்று ருத்ரையாவிடம் கூறினேன். சிட்டி மூலமாக தி.ஜா.வைத் தொடர்பு கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். சிட்டி அப்போது, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஐந்தாவது மெயின் ரோட்டில் புதுமைப்பித்தன் மகள் தினகரியின் வீட்டின் அருகே குடியிருந்தார். அசோகமித்திரன் மூலம் சிட்டியின் முகவரியைக் கண்டுபிடித்து ஒருநாள் சிட்டி வீட்டுக்குச் சென்றோம். சிட்டி உற்சாகமாகப் பேசினர். ‘இன்னும் சில தினங்களில் ஜானகிராமன் சென்னைக்கு வருகிறார். அப்போது சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்’ என்றார்.

அவர் சொன்னது போலவே அகில இந்திய வானொலி வேலையாக தி.ஜா. சென்னைக்கு வந்தபோது, சிட்டி அவர் வந்திருக்கிற விவரத்தைக் கூறினார். ஜானகிராமன் அடையாறு ஆந்திர மகிள சபா கட்டிடத்தில் தங்கியிருந்தார். ஒருநாள் மாலை நானும் ருத்ரையாவும் தி.ஜா.வைச் சந்தித்தோம். காபி தருவித்து எங்களை உபசரித்தார். அம்மா வந்தாளை திரைப்படமாக எடுக்க அனுமதி தந்தார்.

ருத்ரையா அம்மா வந்தாளின் திரைக்கதை வசனத்தை என்னை எழுதச் சொன்னார். பத்துப் பதினைந்து தினங்களில் அம்மா வந்தாளுக்குத் திரைக்கதை வசனத்தை எழுதி முடித்தேன். சென்னையிலிருந்து டெல்லி செல்ல தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் டிக்கெட் எடுத்துக்கொடுத்தார் ருத்ரையா. கதைக்காக முன் பணமாக 10,000 ரூபாய்க்கு தி.ஜா. பெயருக்கு செக் எழுதி என்னிடம் கொடுத்தார். திரைக்கதை வசனம்,  முன்பணச் செக்குடன் நான் டெல்லிக்குச் சென்றேன்.

ஜானகிராமன் அப்போது இந்தியா கேட் அருகே டெல்லியில் ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தில் குடியிருந்தார். அவரது மகன்கள் பட்டாபி, சாகேத ராமன், மகள் உமா யாருக்கும் அப்போது திருமணமாகியிருக்கவில்லை. திரைக்கதை வசன ஸ்கிரிப்டையும், செக்கையும் ஜானகிராமனிடம் கொடுத்தேன்.

டெல்லியில் 10 தினங்கள் இருந்தேன். தி.ஜா.தான் வெங்கட் சுவாமி நாதனை அப்போது முதல் முதலாக அறிமுகப்படுத்தி வைத்தார். தினசரி தி.ஜா.வைச் சந்தித்துப் பேசுவேன். பிறகு நான் சென்னை திரும்பிவிட்டேன். நான் சென்னை வந்தபின் ருத்ரையா ‘அவள் அப்படித்தான்’ பட வேலைகளில் இறங்கினார். ஜானகிராமன், அம்மா வந்தாள் ஸ்கிரிப்டை தனது நண்பரும் இயக்குனருமான ரிஷிகேஷ் முகர்ஜிக்கு அனுப்பி வைத்தார்.

காலம் ஓடியது. ஜானகிராமனும் ஓய்வு பெற்று சென்னைக்கே குடியேறி விட்டார். ஏனோ அம்மா வந்தாள் திரைப்படமாகவே இல்லை. சென்னைக்கு வந்தபிறகு ஜானகிராமன் என்னிடம் 10 000 ரூபாயைக் கொடுத்து ‘ருத்ரையா விடம் கொடுத்து விடுங்கள்…’ என்று அம்மா வந்தாளுக்கான அட்வான்ஸ் தொகையைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். பொதுவாக, திரைப்படத் துறையில் யாரும் அட்வான்ஸைத் திருப்பிக் கொடுப்பதில்லை.

சென்னையில் திருவான்மியூரில் ஹவுஸிங் போர்டு குடியிருப்பில் ஜானகிராமன் குடியிருந்து வந்தார். ‘கணையாழி’ இதழின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தினமணிக் கதிரில் ‘அபூர்வ மனிதர்கள்’ என்ற சிறுகதைத் தொடரை வாரா வாரம் எழுதினார்.

ஒரு தீபாவளி நாள். மாலை ஆறு மணியிருக்கும். நானும் விமலாதித்த மாமல்லனும் சமயவேலும் ஜானகிராமனை அவரது திருவான்மியூர் சென்று சந்தித்தோம். அப்போது அவருக்குச் சற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்தது. நாங்கள் புறப்படும்போது தன் மனைவியிடம் தீபாவளிப் பட்சணங்களைக் கட்டிக் கொண்டு வரச் சொன்னார். என்னிடம் கொடுத்து, ‘வீட்டில் பிள்ளைகளுக்குக் கொண்டு போய்க் கொடுங்கள்’ என்று சொன்னார். இது நடந்தது திங்கள் கிழமையன்று.

புதன் கிழமை மதியம் ஒரு மணி சுமாருக்கு தினமணியிலிருந்து சிவகுமார் போன் செய்தான். ‘உனக்கு விஷயம் தெரியுமா ?’ என்று கேட்டான்.

‘என்ன? ’ என்றேன்.

‘இன்னைக்கிக் காலையிலே ஜானகிராமன் செத்துப்போயிட்டார்’ என்றான். விழுந்தடித்துக் கொண்டு திருவான்மியூர் சென்றேன். ஜானகிராமனைக் கூடத்தில் கிடத்தியிருந்தார்கள். அசோகமித்திரன், ‘கலாமோகினி’ ராஜ கோபாலன் எல்லாம் இருந்தார்கள். ‘இனி ஜானகி ராமனைப் பார்க்க முடியாது’ என்ற உண்மையை எதிர்கொள்வது சிரமமாக இருந்தது.


– வண்ணநிலவன்

குறிப்பு: வண்ணநிலவனின் “மறக்க முடியாத மனிதர்கள்” நூலிலிருந்து எடுக்கப்பட்ட கட்டுரை இது.

ஓவியம்: சுந்தரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.