வேய்ன் சகோதரிகள்-விளாதிமிர் நபகோவ்

நான் அத்தகைய அற்பத்தனமான தேடுதலில் ஈடுபட்டிருக்காவிடில், கடந்த நான்கு வருடங்களாகத் தொடர்பில் இல்லாத டி.யை அன்றிரவு சந்தித்திருக்க முடியாது. டி.யைச் சந்தித்திருக்காவிடில் சிந்தியாவின் மரணத்தைப் பற்றி எனக்குத் தெரிந்திருக்காது.

ஒரு வார காலக் கடும் பனிப்புயலுக்குப் பிறகான ஞாயிற்றுக்கிழமை கொஞ்சம் மினுமினுவென்றும் கொஞ்சம் சொதசொதவென்றும் இருந்தது. நான் பிரெஞ்சு இலக்கியப் பேராசிரியராய் இருந்த பெண்கள் கல்லூரியை ஒட்டிய சிறிய மலைநகரத்தில், வழக்கமான பின்மதிய வேளை உலாத்தலின்போது, ஒரு வீட்டின் சாரல்தடுப்புப் பலகையில் வரிசையாய்த் தொங்கிய பனிக்கூரிகள்[1] என் கவனத்தை ஈர்க்க, நின்றேன். அவற்றுக்குப் பின்னாலிருந்த வெள்ளைப் பலகையில் அவற்றின் கூரிய நிழல்கள் தெள்ளந்தெளிவாய்த் தெரிந்தன. எனவே பனிக்கூரிகளிலிருந்து சொட்டும் நீர்த்துளிகளின் நிழலும் பார்க்கக்கூடியதாய் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் பார்க்க முடியவில்லை. மேற்கூரை வெளிப்பக்கம் அதிக தூரம் நீட்டிக்கொண்டிருப்பதால் இருக்கலாம் அல்லது நான் பார்க்கும் கோணம் தவறாக இருக்கலாம் அல்லது சரியான பனிக்கூரிலிருந்து விழும் சரியான துளியை நான் பார்க்காது தவறவிட்டிருக்கலாம். கண்கட்டு வித்தை போல, கூர்முனைகளில் நீர்த்துளிகள் மாறி மாறிச் சொட்டுவதில் காணப்பட்ட லயம், என்னை ஏமாற்றிப் பரிகசிப்பதுபோல் தோன்றியது. அப்படியே அடுத்தடுத்த வீடுகளின் மேற்கூரை முனைகளில் தொங்கும் பனிக்கூரிகளைப் பார்வையிடும் ஆர்வம் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக தள்ளிக்கொண்டு கெல்லி சாலையில், சரியாக, சில வருடங்களுக்கு முன்பு டி. குடியிருந்த வீட்டுக்கு முன்னால் நிறுத்தியிருந்தது. நான் பணிபுரியும் அதே பெண்கள் கல்லூரியில் பயிற்றுநராக அவன் பணியாற்றிய காலத்தில் அந்த வீட்டில்தான் தங்கியிருந்தான்.

அந்த வீட்டை ஒட்டியிருந்த கார் நிறுத்தத்தின் கூரை முகப்பில் நீலவண்ண நிழற்பின்னணியில் தெள்ளந்தெளிவான பனிப்படிகக் கூம்புகளை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தபோது, என் தேடலுக்கான பரிசாக ஒரு காட்சி கிட்டியது. ஆச்சர்யக்குறியின் அடிப்புள்ளி அதன் இடத்திலிருந்து சற்றுக் கீழே சறுக்கியது போல் – இளகிச் சொட்டும் துளியை முந்தும் நோக்கோடு அவசரகதியில் ஓடியது போல் – இருந்தது. அந்த இரட்டை மினுமினுப்பு மகிழ்ச்சி அளித்தது என்றாலும் முழுமையான திருப்தி ஏற்படவில்லை. மாறாக, ஒளி மற்றும் நிழல் சார்ந்த என் தேடலுக்கான பசியைக் கூடுதலாகத் தூண்டிவிட்டது. என் ஒட்டுமொத்த இருப்பும் உலகக் கிண்ணத்துக்குள் உருளும் ஒற்றை விழிப்பந்தாக என்னை மாற்றிவிட்டதைப் போன்ற உணர்வுநிலையில் நான் மெய்மறந்து நடந்துகொண்டிருந்தேன்.

நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரின் பின்புற வளைவில் தகதகக்கும் கதிரொளியின் வைரப் பிரதிபலிப்பைக் கண்ணுற்றேன். இளகும் பனி காரணமாக, அனைத்துப் பொருட்களிலும் தெள்ளிய சித்திரத் தோற்றம் தென்பட்டது. ஒன்றன்மேல் ஒன்றாகப் படிந்திருந்த பனித் தோரணங்களிலிருந்து உருகிய நீர், சரிவான தெருவில் சிற்றோடை போல் ஓடி மெதுவாக அடுத்தத் தெருவுக்குத் திரும்பியது. கட்டிடங்களுக்கு இடையில் எப்போதும் கவனத்தை அவ்வளவாக ஈர்த்திராத குறுகிய நடைபாதைகள் இப்போது செங்காவி மற்றும் அடர்சிவப்பு வண்ணப் பொக்கிஷங்களைத் திறந்துகாட்டிக்கொண்டிருந்தன. வரிவரியாய் இருந்த பள்ளங்களில் பனி படர்ந்து அலங்கரித்திருந்த குப்பைத்தொட்டியையும், அதன் மூடியின் மையத்தில் தொடங்கி விளிம்பு வரை பரவியிருந்த உறைபனியின் அலைவரிகளையும் முதன்முறையாகப் பார்த்தேன். கடந்த வெள்ளிக்கிழமை பனி அகற்றும் வாகனத்தின் உலோகத் தடுப்பால் ஒதுக்கிவைக்கப்பட்ட பனிக்குவியல்கள், சாலையோரங்களில் வரிசைகட்டி நிற்கும் இளம் பெங்குவின்களைப் போன்று தோற்றமளித்தன.

மேட்டில் ஏறி, இறக்கத்தில் இறங்கி, மெதுவாய் மங்கிக்கொண்டிருக்கும் தொடுவானம் நோக்கி நேராக என நான் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருந்தேன். என் மொத்தக் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருந்த விஷயங்களின் தொடர்நிகழ்வு, இறுதியில் என்னை, வழக்கமாக நான் உணவருந்தும் இடத்தை விட்டு வெகு தொலைவில் அழைத்துச் சென்றிருந்தது. எனவே ஊர் எல்லையிலிருந்த, இதுவரை நான் உணவருந்தியிராத ஒரு உணவகத்தில் இரவுணவை முடிக்க முடிவு செய்தேன். உணவகத்தை விட்டு வெளியே வந்தபோது எந்த ஆரவாரமும் இன்றி இருள் கவியத் தொடங்கியிருந்தது.

ஈரப்பனித்தரையின் மீது விழுந்திருந்த வாகனத் தரிப்பிட மானி[2]யின்  மெலிந்து நீண்ட நிழல், விநோதமாய் ஒளிரும் சிவப்பு வண்ணத்தோடு, ஒல்லிப் பிசாசைப் போலத் தோன்றியது. நடைபாதை மீது ஒளிர்ந்துகொண்டிருந்த உணவகத்தின் அடையாள விளக்கின் சிவப்பு நிற ஒளி தெறித்துதான் அந்தத் தோற்றம் எனப் புரிந்தது. அதே போன்றதொரு விநோத நிழலை நீல நிற ஒளியில் பார்க்கும் பாக்கியம் கிடைக்கக்கூடும் என்ற எண்ணத்தில் அதே இடத்திலேயே அங்கும் இங்கும் திரிந்துகொண்டிருந்தேன். அப்போதுதான் எனக்குப் பக்கத்தில் ஒரு கார் வேகமாக வந்து நின்றது. அதிலிருந்து டி. போலியான மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபடி இறங்கினான். ஆல்பனியிலிருந்து பாஸ்டன் செல்வதாகவும் போகும் வழியில், தான் முன்பு குடியிருந்த அந்த ஊருக்கு வந்திருப்பதாகவும் சொன்னான்.

ஒருவருக்கு ஒரு ஊரில் வலியும் வேதனையும் தரக்கூடிய, துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்து, பிறகு அவர் அந்த ஊரை விட்டுப் போய்விட்டார் என்று வைத்துக்கொள்வோம். மீண்டும் அவர் அந்த ஊருக்கு வரும்போது அவருடைய உணர்வுகள் எப்படி இருக்கும்? எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வேதனை தருவதாக இருக்கும். பழைய நினைவுகள் அவரை வாட்டி வதைக்கும். ஆனால் தங்களது மீள்வருகையின் போது எதுவுமே நடக்காதது போல், எந்தவித உணர்ச்சிக்கும் ஆட்படாமல் அங்கு வளைய வருபவர்களைப் பார்க்கும்போது எனக்கு வலியும் வேதனையும் உண்டாவதோடு தனிப்பட்ட முறையிலும் வெறுப்பும் எரிச்சலும் ஏற்படும். இதை என் வாழ்க்கையில் பல தடவை கண்டிருக்கிறேன்.   

அவன் என்னை உணவகத்துக்கு அழைத்துச் சென்றான். சற்று முன்பு நான் போன அதே உணவகம். மேம்போக்கான நல விசாரிப்புக்குப் பிறகு இருவருக்குமே என்ன பேசுவது என்று தெரியாமல் கடுமையான மௌனம் நிலவியது. அந்த மௌனத்தைக் கலைப்பதற்காக, அவன் சம்பந்தா சம்பந்தமின்றி சொன்னான், “சிந்தியா வேய்னின் இதயத்தில் பிரச்சனை இருக்குமென்று நான் நினைத்தே பார்த்ததில்லை. அவள் போன வாரம் இறந்துவிட்டதாக என்னுடைய வழக்கறிஞர் சொன்னார்.”

2

அவன் இப்போதும் இளமையோடும், அதே திமிரோடும் அதே கபடத்தோடும் காணப்பட்டான். சிந்தியாவின் தங்கை சிபிலுடன் அவனுக்கு இருந்த மிக மோசமான உறவையோ, சிந்தியா என்னை அழைத்து பாஸ்டனுக்குச் சென்று டி.யைச் சந்தித்துப் பேசுமாறு என்னிடம் மன்றாடியதோ, சிபிலை அவன் சந்திப்பதை நிறுத்த வேண்டும் அல்லது அவன் மனைவியை விவாகரத்து செய்யவேண்டும், எதற்கும் ஒத்துவரவில்லை என்றால் அவனைக் கல்லூரியை விட்டே துரத்தவேண்டும் என்று சொன்னதோ, எதுவுமே அறியாத, அழகும் மென்மையும் கொண்ட அதே மனைவியோடும் அவன் இப்போதும் வாழ்ந்துகொண்டிருந்தான். மிகையுணர்வுக்கு ஆளான சிபிலின் வெறித்தனமான பேச்சின் பரிமாணம் அவன் மனைவியை ஒரு அடங்காப்பிடாரியாக சித்தரித்திருந்தது. நான் அவனை உடனடியாகவே மடக்கிவிட்டேன். அவனோ, எங்களைக் கவலைப்படவேண்டாம் என்றும், சிபிலை விட்டு தான் போய்விட முடிவு செய்துவிட்டதாகவும், கல்லூரி வேலையை ராஜினாமா செய்துவிட்டு மனைவியோடு ஆல்பனிக்குச் சென்று அவனுடைய அப்பாவின் பண்ணையில் வேலைபார்த்துப் பிழைத்துக் கொள்ள இருப்பதாகவும் சொன்னான். சிக்கலான பிரச்சனையாக உருமாறி வருடக்கணக்காக இழுபறியாக இருக்கக்கூடும் என்று அச்சுறுத்திய அந்த விஷயம், எங்களுடைய தொடர்ச்சியான இரகசியக் கலந்துரையாடலால் சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தது.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. மறுநாள் பிரெஞ்சு இலக்கியத்துக்கான அரையாண்டுத் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் பெரிய வகுப்பறையில் நான் என்னுடைய உயர்மேஜையில் அமர்ந்திருந்தேன். சிபில் உயர் குதிகாலணி அணிந்து கையில் பெட்டியுடன் வகுப்பறைக்கு வந்தாள். மற்ற மாணவர்கள் தங்கள் புத்தகப் பைகளை வைத்திருக்கும் மூலையில் பெட்டியை வைத்தாள். தனது மெலிந்த தோளில் ஒரு பக்கமாகத் தொங்கவிட்டிருந்த ரோம அங்கியை அவிழ்த்து மடித்து பெட்டிக்குள் வைத்துவிட்டு இன்னும் இரண்டு மூன்று மாணவிகளோடு சேர்ந்து என்னிடம் வந்து தேர்வு முடிவுகளை நான் எப்போது அவர்களுக்கு அனுப்புவேன் என்று கேட்டாள். எல்லா விடைத்தாள்களையும் வாசித்துத் திருத்த, ஒரு வார காலம் எடுக்கும் என்று சொன்னேன். டி. எடுத்திருந்த முடிவைப் பற்றி அவளிடம் ஏற்கனவே சொல்லியிருப்பானா என்று நான் சந்தேகப்பட்டதும் கூட நினைவுக்கு வந்தது. கடமை தவறாத என்னுடைய இந்தச் சின்னஞ்சிறு மாணவியை எண்ணி எனக்குப் பெரும் வருத்தமும் கவலையும் உண்டாயின. தேர்வு நடைபெற்ற இரண்டரை மணி நேரமும் நான் மீண்டும் மீண்டும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். குழந்தைகளைப் போன்று இறுக்கமாக அணிந்திருந்த சாம்பல் வண்ண ஆடை, அலையலையாக சுருட்டிவிடப்பட்ட கருங்கூந்தல், அப்போது பிரபலமாக இருந்த, சல்லாத்துணி மறைப்புடன் கூடிய, சிறிய, பூப்போட்டத் தொப்பி, அதற்குக் கீழே நவீன பாணி ஓவியம் போன்று தோல்நோயால் உண்டான தழும்புகளோடு கூடிய முகம், தோல்நோய் சிகிச்சைக்கான செயற்கை விளக்கொளியால் கருத்த தேகம் என அழகைக் குலைக்கும் அனைத்து அம்சங்களும் அவளிடம் காணப்பட்டன. எனவே செக்கச் செவேலென்று வெடித்துக்கிடக்கும் உதடுகளுக்கிடையில் வெளிறிக் காணப்பட்ட ஈறும் பற்களும், கருத்த இமைகளுக்குக் கீழே தென்பட்ட நீர்த்த மை நிற நீல விழிகளும் மட்டுமே அவளுடைய அழகை எடுத்துக்காட்டக் கூடியனவாக இருந்தன.

அடுத்த நாள், கன்னாபின்னாவென்று இருந்த நோட்டுப்புத்தகங்களை அகர வரிசைப்படி அடுக்கிவைத்து, குளறுபடியான கையெழுத்துகளை வாசிக்க ஆரம்பித்தேன். எப்படியோ தவறுதலாக வரிசை மாறி முன்னால் வந்துவிட்ட வாலேவ்ஸ்கி மற்றும் வேய்ன் இருவரின் நோட்டுப்புத்தங்களையும் கையிலெடுத்தேன். முதலாவது வெளிப்பகட்டு காட்டும் மிகத் தெளிவான கையெழுத்துடன் அழகாக இருந்தது. ஆனால் சிபிலுடையது எப்போதும் போல ஏகப்பட்டக் கிறுக்கல்களோடு பற்பல சாத்தான்களின் பிடியில் அகப்பட்டது போல கொடுமையாக இருந்தது. அவள் முதலில் வெளிறிய கடினமான பென்சிலால் எழுத ஆரம்பித்திருந்தாள். அழுத்தி அழுத்தி எழுதியதில் தாள் முழுவதும் கருப்பு நிறமானதோடு பின்பக்கமும் அச்சு படிந்திருந்தது. நல்லவேளையாக, கொஞ்ச நேரத்திலேயே பென்சிலின் கூர் உடைந்துபோனது போலும். அடுத்து அவள் அழுத்தமாகவும் மொத்தமாகவும் எழுதக்கூடிய, கிட்டத்தட்ட கரிக்கட்டை போன்ற பென்சிலால் எழுதியிருந்தாள். அவ்வப்போது அதன் மழுங்கிய முனையை வாயில் வைத்து வைத்து எழுதிய காரணத்தால் காகிதத்தில் உதட்டுச்சாயக் கறையும் சேர்ந்திருந்தது. நான் எதிர்பார்த்ததை விடவும் அவளுடைய விடைத்தாள் மிக மோசமாக, அடிக்கோடுகள், வரிசை மாற்றுகள், தேவையில்லாத அடிக்குறிப்புகள் என அவநம்பிக்கையின் அனைத்துக் குறியீடுகளையும் பயன்படுத்தி, அவளால் முடிந்த அளவுக்கு எல்லாவற்றையும் சரியாகச் செய்துமுடிக்க முயற்சி செய்ததைப் போன்று இருந்தது. அடுத்து அவள் மேரி வாலெவ்ஸ்கியின் மைப்பேனாவை இரவல் வாங்கி பிரஞ்சும் ஆங்கிலமும் கலந்து இவ்வாறு எழுதியிருந்தாள்: ‘இந்தப் பரிட்சை முடிந்ததும் என் வாழ்க்கையும் முடிந்துவிடும். விடைபெறுகிறேன், பெண்களே! மதிப்புக்குரிய பேராசிரியர் அவர்களுக்கு, தேர்வில் ‘டி’ வாங்குவதை விடவும் மரணம் சிறந்ததல்ல, ஆனால் டி. இல்லாத வாழ்க்கையை விடவும் மரணம் சிறந்தது என்று நான் சொன்னதாக என் அக்காவிடம் தயவுசெய்து சொல்லிவிடுங்கள்.’

நான் உடனடியாக சிந்தியாவுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தபோது, எல்லாம் முடிந்துவிட்டதாக – காலை எட்டு மணிக்கே எல்லாம் முடிந்துவிட்டதாகச் சொன்னாள். நான் அங்கு வரும்போது சிபில் எழுதியிருந்த குறிப்பை எடுத்துவரச் சொன்னாள். வழியும் கண்ணீரோடு குறிப்பை வாசித்த அவள், பிரெஞ்சு இலக்கியத் தேர்வோடு, சிபில் தன்னைத் தொடர்புபடுத்தி எழுதியிருந்த ஒப்புமை வரிகளில் இருந்த புத்திசாலித்தனத்தை வியந்தாள். சிபிலின் நோட்டுப் புத்தகத்தைக் கீழே வைக்காமலேயே இரண்டு குவளைகளில் மதுவை நிரப்பினாள். சோடா நீரோடு கண்ணீரும் சேர்ந்து தெறிக்க, மீண்டும் அந்தத் தற்கொலைக் குறிப்பை வாசிக்கலானாள். அப்போது அதிலிருந்த இலக்கணப் பிழைகளைச் சுட்டிக்காட்டினேன். சிபில் ‘பெண்கள்’ எனக் குறிப்பிட்டிருந்த பிரெஞ்சு வார்த்தைக்கு ‘வேசி’ என்ற பொருளும் இருப்பதால், மாணவிகள் தவறுதலாக அந்த வார்த்தையைப் பயன்படுத்த நேரிடும் என்று அமெரிக்க அகராதிகளில் ‘பெண்’ என்றே அது மொழிபெயர்க்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டேன். சுவாரசியமற்ற அந்த அற்ப விஷயங்கள் சிந்தியாவை துக்கத்தின் அடியாழத்திலிருந்து பெரும் திணறலோடு மேற்பரப்புக்குக் கொண்டுவந்து சற்றே இலகுவாக்கின. பிறகு தொய்ந்துபோன அந்த நோட்டுப் புத்தகத்தை, சொர்க்கத்திற்குச் செல்வதற்கான கடவுச்சீட்டு போல கையில் இறுக்கமாகப் பிடித்தவாறு, மாடியில் இருந்த சிறிய குளிர்ச்சியான படுக்கையறைக்கு என்னை அவள் அழைத்துச் சென்றாள். அங்கிருந்த இரண்டு காலி மாத்திரைப் புட்டிகளையும், ஆதி முதல் அந்தம் வரை டி. அறிந்திருந்த அழகிய இளம் உடல் அப்புறப்படுத்தப்பட்ட பிறகு, கீழே கவிழ்ந்து கிடந்த படுக்கையையும் ஒரு  போலீஸ்காரரிடம் அல்லது பக்கத்து வீட்டில் வசிக்கும் அன்பான அயர்லாந்துக்காரரிடம் காட்டுவது போல் என்னிடம் காட்டினாள்.  

3

சிந்தியாவின் தங்கை இறந்து நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு, சிந்தியாவை நான் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினேன். அந்தச் சமயம் நான் பொது நூலகத்தில் துறை சார்ந்த ஆராய்ச்சிக்காக நியூயார்க் சென்றிருந்தேன். அவளும் அப்போது அங்கு குடிபெயர்ந்திருந்தாள். ஏதோ ஒரு விநோதக் காரணத்துக்காக (கலையுணர்வு காரணமாக இருக்கலாம் என்பது என்னுடைய தெளிவற்ற யூகம்) குளிர்நடுக்கம் என்றால் என்னவென்றே அறியாத மக்கள் வசிக்கும் ‘குளிர்ந்த நீர் குடியிருப்புகள்’ என்று சொல்லப்படுகிற, நகரத்தின் குறுகிய தெருக்களின் கீழ்த்தளக் குடியிருப்புகளுள் ஒன்றில் அவள் தங்கியிருந்தாள்.

வெறுப்பூட்டும் அவளுடைய நடவடிக்கைகளோ, மற்ற ஆண்களின் கண்களுக்கு கவர்ச்சிகரமாகத் தெரியும் அவளது தோற்றமோ என்னைத் துளியும் ஈர்க்கவில்லை. அவளுடைய தங்கையைப் போன்றே அவளுக்கும் பெரிய நீலநிறக் கண்கள். அவளுடைய அடர்ந்த கரிய புருவங்களுக்கு இடைப்பட்டப் பகுதியும் மூக்குத்துவாரத்தின் இருபக்கப் புடைப்புகளும் எப்போதும் மினுமினுவென்று காணப்பட்டன. அவளுடைய தோல் சொரசொரவென்று ஆண்களுடையதைப் போன்று இருந்தது. வண்ணமீன் தொட்டியைப் பார்ப்பது போன்று குறுகுறுவென்று அவள் நம்மைப் பார்க்கும்போது அந்த ஓவியக்கூடத்தின் துல்லியமான விளக்கொளியில் அவளுடைய முப்பத்திரண்டு வயது முதிர் முகத்தின் குழிகளைக் காணமுடியும். அவளுடைய தங்கையைப் போன்றே அவளுக்கும் தன்னை அலங்கரித்துக்கொள்வதில் பெரும் விருப்பம். ஆனால் அதில் அவ்வளவு நேர்த்தி இருக்காது. அசிரத்தை காரணமாக அவளுடைய பெரிய முன்பற்களில் உதட்டுச்சாயத்தின் சிவப்புக் கறை படிந்திருக்கும்.

அவள் வசீகரமான அடர்நிறத்தில் இருந்தாள். மோசம் என்று சொல்லமுடியாத அளவுக்கு ஓரளவு நன்றாகவும் விதவிதமாகக் கலந்துகட்டியும் உடுத்தினாள். நல்ல உடல்வாகு என்று சொல்லும்படியும் இருந்தாள். ஆனால் யாவற்றிலும் ஏனோதானோவென்ற ஒரு அலட்சியம் இருந்தது. அவளுடைய மெத்தனத்தை நான் அரசியலில் இடதுசாரிக் கோட்பாடுகளோடும், கலையில் மேம்பட்ட கொச்சைத்தன்மையோடும் மறைமுகமாகத் தொடர்புபடுத்தினேன். எதையும் அவள் கண்டுகொள்ளவில்லை. அவளுடைய சுருள் கேசத்தை நடுவகிடு எடுத்து ஓரளவு படியவைத்து பின்னால் சிறு கொண்டையாக உயர்த்தி முடிந்திருக்காவிட்டால், பார்ப்பதற்கு பரட்டையாகவும், வேடிக்கையாகவும் இருந்திருக்கும். அவள் பளீரென்ற நிறத்தில் விரல் நகங்களில் நகப்பூச்சு பூசியிருந்தாள். ஆனால் நகங்கள் மிக மோசமாகக் கடிக்கப்பட்டிருந்ததோடு தூய்மையாகவும் இல்லை.

மிகவும் அமைதியான சுபாவமுடைய, திடீரென்று சிரிக்க ஆரம்பித்திருந்த ஒரு இளம் புகைப்படக் கலைஞனும், தெருவில் சிறிய அச்சுக்கூடம் வைத்திருந்த, வயது மூத்த இரண்டு சகோதரர்களும் அவளுடைய காதலர்களாக இருந்திருக்கின்றனர். கண்ணாடிக்குக் கீழே படியவைக்கப்பட்டிருக்கும் பொருளின் அறிவியல் துல்லியத்துடன், வெளிறிய முழங்கால்களுக்குக் கீழே மெல்லிய நைலான் காலுறையின் ஊடே காணப்படும் கரடுமுரடான கருப்பு முடிகளைப் பயமும் பதற்றமுமாக இரகசியப் பார்வை பார்க்கும்போது அல்லது அவளுடைய ஒவ்வொரு அசைவின்போதும், அவள் பூசியிருக்கும் மட்டமான வாசனைத் திரவியங்கள் மற்றும் களிம்புகளோடு, குளிக்காத அவள் உடலிலிருந்து வீசும் மோசமான வாடையை நுகர நேரும்போது, அவளுடைய காதலர்களின் ரசனையை எண்ணி எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

அவளுடைய அப்பா, அவர்களுக்கென்று இருந்த ஓரளவு சொத்தில் பெரும்பகுதியை சூதாடித் தொலைத்தவர். அவளுடைய அம்மாவின் முதல் கணவர் ஸ்லாவ்[3] வம்சாவளியைச் சேர்ந்தவர். மற்றபடி சிந்தியா வேய்ன் ஒரு நல்ல மரியாதையான குடும்பத்தைச் சேர்ந்தவள்தான். இன்னும் பின்னோக்கி ஆய்ந்தால் ஏதேனும் தீவாந்தரத்தின் அரசர் அல்லது கணியர் வம்சத்தைச் சார்ந்தவளாக இருக்கலாம் என்பது என் யூகம். புதிய உலகத்தில், அற்புதமான இலையுதிர் மரங்களால் சூழப்பட்ட நிலப்பரப்பில் காலூன்றிய அவளது வம்சத்தின் ஆரம்ப கட்டத்தில் தூய திருச்சபைகளை நிறைத்தனர் விவசாய பக்தர்கள். அவர்களைத் தொடர்ந்து வியாபாரத்தில் கைதேர்ந்த வியாபாரிகளும், கல்வியிற் சிறந்தவர்களும் உருவாயினர். லெக்சிங்டன் நீராவிப்படகில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவரும், சிந்தியாவின் சுழல்மேஜைக்கு அடிக்கடி வருகை தருபவருமான டாக்டர் ஜோனாத்தன் வேய்ன் (1780-1839) அவர்களுள் ஒருவர்.

நான் எப்போதும் மரபியல் வரிசையைத் தலைகீழாகப் பார்க்கவே முனைவேன். இங்கு வேய்ன் பரம்பரையை ஆராயும் வாய்ப்பு கிடைத்தபோது கடைசி வாரிசான சிந்தியா மட்டுமே கவனத்துக்கு உரியவளாக இருந்தாள். அதாவது, அவளுடைய கலைத்திறன், அற்புதமான, அழகான ஆனால் அவ்வளவாக விலைபோகாத, அவளுடைய நண்பர்களின் நண்பர்கள் எப்போதாவது வாங்கும் ஓவியங்கள், முக்கியமாக அவளுடைய வரவேற்பறையை அலங்கரித்த அற்புதமான மற்றும் கவித்துவமான ஓவியங்கள் அவளுடைய இறப்புக்குப் பிறகு என்னவாகும் எங்கே போகும் என்று தெரிந்துகொள்ள பெரிதும் விரும்பினேன். மிக நுணுக்கமாகத் தீட்டப்பட்டிருந்த உலோகப் பொருட்களின் ஓவியங்களுள் எனக்கு மிகவும் பிடித்தது, வாகன முகப்புக் கண்ணாடியின் ஒரு பக்கம் ஏடு போல் படிந்திருக்கும் உறைபனியும், கற்பனையான வாகனக் கூரையிலிருந்து வடிந்தோடும் நீர்த்துளிகளும், தெளிவான மறுபக்கத்தின் வழியாக நீலச்சுவாலை போல் ஒளிரும் வானமும் பச்சையும் வெள்ளையுமான தேவதாரு மரங்களும் தீட்டப்பட்டிருந்த, ‘வாகன முகப்புக் கண்ணாடி வழியே’ என்ற ஓவியம்.  

4

சிபிலின் காதலை சிந்தியாவும் நானும் சேர்ந்து முறியடித்துவிட்டது தற்போது சிபிலுக்குத் தெரிந்துவிட்டதாகவும் அதனால் சிபில் தன்மீது கோபமாக இருப்பதாகவும் சிந்தியாவுக்குத் தோன்ற ஆரம்பித்தது. தொல்வழக்கப்படி சிபிலின் ஆன்ம சாந்திக்கான சில பரிகாரங்களை (சிபிலுக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு) அவள் செய்யத் தொடங்கினாள். சிபிலின் கல்லறையை குறைந்த வெளிச்சத்தில் படம்பிடித்து அந்தப் புகைப்படங்களை டி.யின் அலுவலக முகவரிக்கு ஒழுங்கற்ற கால இடைவெளியில் அவ்வப்போது அனுப்பிவைத்தாள். சிபிலின் தலைமயிரைப் போன்றே இருக்கும் தன்னுடைய தலைமயிர்க் கற்றையை நறுக்கி அதைத் தபாலில் அவனுக்கு அனுப்பினாள். அக்டோபர் 23-ம் தேதி, நண்பகல் வேளையில், இளஞ்சிவப்பும் பழுப்புமான வனாந்திரத்தின் சாலையோர விடுதியொன்றில் டி.யும் சிபிலும் தங்கியிருந்த நிகழ்வைக் குறிப்பிடும் விதமாக நியூ இங்கிலாந்து மாகாணத்தின் வரைபடத்தில் அவ்விடத்தை குறுக்குவெட்டுக் கோடுகளால் குறிப்பிட்டு அந்தப் படத்தை அவனுக்கு அனுப்பினாள். பாடம் செய்யப்பட்ட ஸ்கங்க்கை[4]  இரண்டு முறை அனுப்பினாள்.

எதையும் தெள்ளந்தெளிவாகவும் திட்டவட்டமாகவும் பேசத் தெரியாமல் வளவளவென்று உரையாடக்கூடியவளான அவளால், தனக்குள் வியாபித்திருக்கும் விநோதமான ஆன்ம ஒளிவளையத்தைப் பற்றி முழுமையாக விவரிக்க இயலவில்லை. உண்மையில் அது தனிப்பட்ட வகையில் அவளுக்கு மட்டும் நேரும் புதிய விஷயமல்ல. பொதுவாகவே, ஒருவரின் மரணத்துக்குப் பிறகு அந்த ஆன்மா, அமைதியான ஆவியுலகில் ஏற்கனவே இறந்துபோனவர்களின் ஆன்மாவோடு போய் சேர்ந்துகொண்டு, அவ்வப்போது தனக்குப் பிடித்தவர்களைச் சுற்றிச் சுற்றி வருவதைப் பொழுதுபோக்காக வைத்திருக்கும். இங்கே சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இயல்பான அந்த நுண்பொருள் கோட்பாட்டியலுக்குள் சிந்தியா சில விநோதமான நடைமுறைக் கூறுகளைப் புகுத்தினாள். 

அநாதையாய்த் திரியும் பூனைக்குட்டியை பள்ளிச்சிறுமி ஒருத்தி தூக்கி, கன்னத்தோடு கன்னம் இழைத்துக் கொஞ்சி, தன்னோடு எடுத்துச் சென்று, ஏதாவதொரு புறநகர்ப் பகுதியில் உள்ள புதரில் பத்திரமாக விட, அதை அந்த வழியாகச் செல்லும் யாரோ ஒருவர் எடுத்து, அன்போடு தடவிக்கொடுப்பதைப் போலவோ அல்லது இளகிய மனம் படைத்தப் பெண்மணி யாராவது, தன்னுடைய வீட்டுக்குக் கொண்டுசெல்வதைப் போலவோ, தன் விதியை இறந்துபோன நட்புகளின் ஆன்மாக்களே வழிநடத்துகிறார்கள் என அவள் உறுதியாக நம்பினாள்.

சில மணிநேரம் அல்லது தொடர்ந்து பல நாட்கள், சில சமயம் ஒழுங்கற்ற கால இடைவெளியில் மாதக் கணக்காகவோ, வருடக் கணக்காகவோ சிந்தியாவுக்கு ஏற்படும் எதுவும், இறந்துபோன நட்பு அல்லது உறவின் பழக்க வழக்கம் மற்றும் மனநிலை சார்ந்தது என்பது சிந்தியாவின் எண்ணம். அந்த நிகழ்வு ஒருவருடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையே மாற்றிவிடக்கூடிய அளவுக்கு அசாதாரணமாக இருக்கும் அல்லது ஒருவரது வழக்கமான நாளில் கவனிக்கத்தக்க விஷயமாக இருந்து, நாளடைவில் ஒளிவளையம் மங்கி மறைய, அற்ப விஷயமாக மாறிவிடக்கூடிய, சின்னச் சின்ன சம்பவங்களாக இருக்கும். விளைவு நல்லதோ, கெட்டதோ, ஆனால் மூல ஆன்மா எதுவென்று கட்டாயம் அடையாளங்காண முடியும். ஒரு மனிதனின் ஆன்மாவுக்குள் ஊடுருவிச் செல்வதைப் போன்றது அது என்றாள் சிந்தியா.

எல்லாராலும் எல்லா ஆன்மாக்களையும் அடையாளங்காண இயலாது என்பதால் அவளால் அவளைத் தொடர்பு கொள்ளும் சரியான ஆன்மாவைக் கண்டறிவது சாத்தியமில்லை என வாதிட்டு அவளுக்குப் புரிய வைக்க முயற்சி செய்தேன். கையொப்பம் இடப்படாத கடிதங்களையும் கிறிஸ்மஸ் பரிசுகளையும் யார் யாருக்கு வேண்டுமானாலும் அனுப்ப முடியும். ‘வழக்கமான நாள்’ என்று சிந்தியா குறிப்பிடுவது பலவீனமான ஆன்ம ஒளிவளையங்களின் கலவையாக இருக்கலாம் அல்லது காவல் தேவதையின் வழக்கமான செயல்பாடுகளுள் ஒன்றாக இருக்கலாம். கடவுளைப் பற்றி என்ன சொல்வது? சர்வ வல்லமை பொருந்திய சர்வாதிகாரியை மண்ணில் வெறுக்கும் மக்கள், சொர்க்கத்திலும் அதே போன்ற ஒருவரை எதிர்பார்ப்பார்களா? மேலும் போர்கள் பற்றி? எவ்வளவு பயங்கரமான விஷயம்! இறந்த போர்வீரர்கள் உயிருடன் இருப்பவர்களுடன் இன்னமும் சண்டையிட்டுக் கொண்டிருப்பார்களா? தள்ளாடும் வயோதிகர்களின் வாழ்க்கையைக் கட்டுப்படுத்திக் கைப்பற்ற ஆவிக் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்குமா?

ஆனால் சிந்தியா பொதுவிதிகளுக்கும் தர்க்க எல்லைகளுக்கும் அப்பாற்பட்டிருந்தாள். ‘தளபுள’ என்று கொதிக்கும் சூப்பைப் பார்த்தால் “ஐயோ, அது பால் (Paul)” என்பாள். அறக்கொடை நிறுவனத்தின் லாட்டரியில் அவளுக்கு மிகவும் தேவைப்பட்ட, நல்ல தரமான வாக்யூம் க்ளீனர் கிடைத்தால், “அன்புக்குரிய பெட்டி பிரவுன் இறந்துவிட்டாள் என்று நினைக்கிறேன்” என்பாள். 

என்னுடைய பிரெஞ்சு மூளையை அதிகம் எரிச்சலடைய வைத்தது எதுவென்றால் பெட்டி பிரவுனும் பாலும் உயிரோடு வாழ்ந்த காலத்துக்கே அவள் மானசீகமாகச் சென்றுவிடுவதுதான். நல்ல எண்ணத்துடன் அவர்கள் தனக்கு விதவிதமான, விநோதமான, ஏற்றுக்கொள்ள இயலாத பரிசுப்பொருட்களை அள்ளி அள்ளித் தந்தார்கள் என்றும் மூன்று டாலர் காசோலையுடன் கூடிய பழைய பர்ஸை தெருவில் கண்டெடுத்து, அதை உரியவரிடம் (இங்குதான் நடக்க இயலாத, முதிய பெண்மணி பெட்டி பிரவுன் வருகிறார்) சேர்ப்பித்ததில் ஆரம்பித்து, தன்னுடைய முன்னாள் காதலன் (இங்குதான் பால் வருகிறான்) அவனுடைய வீட்டையும் குடும்பத்தையும் தத்ரூபமான ஓவியங்களாய்த் தீட்டுவதற்கான நியாயமான தொகைக்கு பதில் அடிமட்டத் தொகை பேசி அவமானப்படுத்தியது வரை சொல்வாள். இவை எல்லாமே சிந்தியா குழந்தையாய் இருந்தபோது, எடுத்ததெற்கெல்லாம் அறிவுரை கூறி அவளைப் பாடாய்ப்படுத்திய திருமதி பேஜ் என்னும் நல்ல மனம் படைத்த முதிய பெண்மணியின் மரணத்துக்குப் பிறகே ஆரம்பித்தன. 

சிபிலின் குணாதிசயங்கள், வானவில்லின் விளிம்பைப் போல தெளிவற்றவை என்றாள் அவள். சிபிலை நான் கொஞ்சமாவது புரிந்து வைத்திருந்தால், அவளுடைய இறப்புக்குப் பிறகு சிந்தியாவின் வாழ்வில் சின்னச் சின்ன நிகழ்வுகளாக, அவ்வப்போது அவளைச் சூழ்ந்துகொள்ளும் அந்த ஒளிவளையத்தில் சிபிலின் ஆன்மா இருப்பதை என்னால் எளிதில் உணர்ந்துகொண்டிருக்க முடியும் என்றாள்.

சிந்தியாவின் அம்மா இறந்ததிலிருந்தே, அவளும் சிபிலும் தங்களுடைய பாஸ்டன் வீட்டை விட்டுவிட்டு, நியூயார்க் நகரத்துக்குக் குடிபெயர்ந்துவிட விரும்பினார்கள். நியூயார்க்கில் சிந்தியாவின் ஓவியங்களுக்கு நல்ல விலையும் அங்கீகாரமும் கிடைக்கும் என்றும் நம்பினார்கள். ஆனால் அவர்களுடைய பழைய வீடு தன் மென்கரங்களால் அவர்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டுவிட்டது. சிபில் தன் மரணத்துக்குப் பிறகு, அந்த வீட்டை சுற்றுப்புறத்திலிருந்து தனிமைப்படுத்தினாள். வீடு என்ற உணர்விலிருந்து அது சிதைந்து அழியத் தொடங்கியது. குறுகிய தெருவின் எதிர்ப்பக்கம் சாரங்களால் சூழப்பட்டு, இரைச்சலுடன், எரிச்சலூட்டும் ஒரு கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதே வருடம் வசந்த காலத்தில் அந்தப் பகுதியில் பிரசித்தமான இரண்டு நெட்டிலிங்க மரங்கள் பட்டுப்போய் வெள்ளை நிறத்தில் எலும்புக்கூடு போல நின்றன. அறுபது வயதில் ஓய்வு பெற்ற, கால் நூற்றாண்டு காலத்தை நத்தைகள் பற்றிய ஆராய்ச்சிக்காகவே அர்ப்பணித்த திரு. லீவர் அவர்களின் காலைநேர நடைக்குப் பழகிய, ஏப்ரல் மாத மழையில் நனைந்து வித்தியாசமான கருஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும், அழகிய செஞ்சாந்து நிற நடைபாதைக் கற்கள் பணியாட்களால் பெயர்த்தெடுத்து அகற்றப்பட்டன. முதியவர்களைப் பற்றிச் சொல்லும்போது, இறப்புக்குப் பிறகு, உயிரோடு இருப்பவர்களிடம் அவர்கள் காட்டும் ஆதரவும் இடையூறும் சில வேளைகளில் வேடிக்கையாக இருக்கும் என்பதையும் குறிப்பிடவேண்டும்.

சிந்தியா ஒரு தடவை, போர்லாக் என்ற கிறுக்குத்தனமான நூலகரோடு நட்பாக இருந்தாள். அவர் ‘hither’ என்ற வார்த்தையில் உள்ள இரண்டாவது h-க்கு பதிலாக i என்பது போல் விநோதமான எழுத்துப்பிழைகளோடு அச்சாகியிருந்த பழைய புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதிலேயே, தூசு படிந்த தன் வாழ்க்கையின் இறுதிக்காலத்தைக் கழித்தார். சிந்தியாவுக்கு மாறாக, தெளிவற்ற யூகங்களால் உண்டாகும் புளகாங்கித உணர்வால் அவர் ஈர்க்கப்படவில்லை. அவர் தேடியவையெல்லாம் திட்டமிட்டதைப் போல் தோன்றும் தற்செயல்கள் மற்றும் இடைவெளிகளைப் போல் தோற்றமளிக்கும் பிளவுகள் போன்ற முரண்விநோதங்களை மட்டுமே. ஒழுங்கற்ற அல்லது இலக்கண விதிகளுக்கு மாற்றாக இணைக்கப்பட்ட வார்த்தைகள், சிலேடைகள், மாற்றெழுத்துப் புதிர்கள், வார்த்தை விளையாட்டுகள் இன்ன பிறவற்றில் விடாப்பிடியான ஆர்வக்கோளாறுடன் இருந்த சிந்தியா, அந்த பரிதாபத்துக்குரிய கிறுக்கு நூலகருக்கு உதவுவதற்காகக் கொடுத்த உதாரணங்களை, நிகழ்தகவுக் கோட்பாட்டின் அடிப்படையில் பார்த்தபோது, சுத்தப் பைத்தியக்காரத்தனமாகவே எனக்குத் தோன்றியது.

நூலகர் இறந்துபோன மூன்றாம் நாள், அவள் ஒரு சஞ்சிகையை வாசித்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாக அழியாக் கவிதையொன்றின்[5]  (மற்ற அப்பாவி வாசகர்களைப் போலவே அவளும் அதை உண்மையிலேயே கனவில் இயற்றப்பட்டக் கவிதையென நம்பினாள்) வரிகளைக் கண்ணுற்றதாகவும், அதிலிருந்த ‘Alph’ என்னும் வார்த்தை, Anna Livia Plurabelle (மற்றொரு கற்பனைக் கனவிற்குள் ஓடும் அல்லது அதைச் சுற்றிக்கொண்டு ஓடும் மற்றொரு புனித நதியின் பெயர்) என்பதன் ஆரம்ப எழுத்துகளைக் கொண்டு தீர்க்கதரிசனம் காட்டுவதாகவும் அதில் கூடுதலாக இருக்கும் h என்ற எழுத்து, திரு.போர்லாக்கை வசியம் செய்திருந்த அந்த வார்த்தைக்கு வழிகாட்டும் அறிகுறி போல இருப்பதாகவும் அவள் சொன்னாள்.

எனக்கு சரியாக நினைவில்லை, ஏதோ ஒரு புதினமோ, சிறுகதையோ (யாரோ ஒரு சமகால எழுத்தாளருடையதுதான் என்று நினைக்கிறேன்), அதன் ஆசிரியரே அறியாத, கடைசி பத்தியின் முதல் எழுத்துகளை சிந்தியா முறைப்படுத்தினாள். அவளுடைய பொருள்விளக்கப்படி, அது அவருக்கு, இறந்துபோன தாயாரிடமிருந்து வந்திருந்த செய்தி.

5

துரதிர்ஷ்டவசமாக, சிந்தியா இந்த சாதுர்யமிக்கக் கற்பனைகளில் திருப்தியுறாமல் ஆவியுலகக் கோட்பாட்டின் மீது முட்டாள்தனமான வேட்கையைக் கொண்டிருந்தாள். கட்டணம் பெற்றுக்கொண்டு ஆவியுலகோடு தொடர்பு கொள்பவர்களின் அமர்வுகளுக்கு நான் அவளோடு செல்ல மறுத்தேன். மற்ற ஆதாரங்களின் மூலம் இதுபோன்ற விஷயங்களை அவர்களை விடவும் சற்றுக் கூடுதலாகவே நான் அறிந்திருந்தேன். எனினும், சிந்தியாவும், அச்சுக்கூடத்தைச் சேர்ந்த, எந்தவித உணர்வையும் வெளிப்படுத்தாத முக அமைப்புக் கொண்ட, அவளுடைய இரு நண்பர்களும் நடத்தும் கேலிக்கூத்துகளில் கலந்துகொள்ள சம்மதித்தேன்.

அவர்கள் பொறுமைசாலிகளாகவும், கண்ணியமாகவும், வயதில் மூத்தவர்களாகவும் அதே சமயம், சற்றே அச்சுறுத்தும் தோற்றத்தில் இருந்தனர். ஆனால் அவர்களுடைய நகைச்சுவைப் பேச்சினாலும் நாகரிகமான நடத்தையினாலும் நான் மகிழ்ச்சி அடைந்தேன். ஒரு சிறிய கனமில்லாத மேஜையைச் சுற்றி நாங்கள் அமர்ந்திருப்போம். மேஜையில் எங்கள் விரல்நுனி பட்டதுமே அது கிடுகிடுவென அதிர்ந்து நடுங்கத் தொடங்கும். தங்களைப் பற்றி ஆர்வத்துடன் மளமளவென்று சொல்ல முன்வந்த பற்பல ஆவிகளோடு நான் உரையாடினேன். இருப்பினும், நான் எதையாவது தவறாகப் புரிந்துகொண்டுவிட்டால் அவ்வளவுதான், அவை மேற்கொண்டு தங்களை வெளிப்படுத்த மறுத்துவிடும். ஆஸ்கார் வைல்ட் வந்து, வேகமாகவும் தப்பும் தவறுமாகவும் பிரெஞ்சுமொழியில், வழக்கமான ஆங்கிலவாத வார்த்தைகளோடு, எதற்காகவோ சிந்தியாவின் இறந்துபோன பெற்றோரைக் குற்றம் சாட்டினார். சுருக்கெழுத்தில் அதை ‘கருத்துத்திருட்டு’[6] எனக் குறிப்பிட்டேன். குறுக்கே புகுந்த ஒரு ஆவி, ஜான் மோர் என்ற பெயருடைய தானும், வில் என்ற தன் சகோதரனும் சுரங்கத் தொழிலாளிகள் என்றும் 1883-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொலராடோவில் ‘க்ரெஸ்டட் பியூட்டி’ என்ற இடத்தில் ஏற்பட்ட சுரங்கச் சரிவில் மாண்டதாகவும், நாங்கள் கேட்காமலேயே முன்வந்து தகவல் சொன்னது. இந்த விளையாட்டில் அனுபவசாலியான ஃப்ரடரிக் மையர்ஸ் நான் ஓரளவு எழுதியிருந்த கவிதையை வேகவேகமாக ஒப்பித்தான். (சிந்தியா இயற்றும் சிறு பாடல்களைப் போன்று விசித்திரமான ஒற்றுமை இருந்தது)

என்ன இது? சாதுர்யமான கண்கட்டு வித்தையா?

அல்லது குறைபாடுள்ள ஆனால் மெய்யான ஒளிக்கீற்றா?

எது இந்த ஆபத்தான வழக்கத்தை உடைத்து

துன்புறுத்தும் கனவைக் கலைக்கக்கூடும்?

இறுதியாக, பயங்கரமான உறுமலுடன், மேஜை தடதடக்க, லியோ டால்ஸ்டாய் எங்கள் குழுவிற்கு வருகை புரிந்தார். அது அவர்தானா என்று மண்ணுலகில் அவரது தினசரி வாழ்வின் தனித்துவ அம்சங்களால் அவரை உறுதிப்படுத்தச் சொன்னபோது, ரஷ்யாவின் மரக் கட்டுமான வகைகளைப் பற்றியோ அல்லது வேறு ஏதோ (பலகையில் உருவங்கள் – மனிதன், குதிரை, சேவல், மனிதன், குதிரை, சேவல்) எழுத்தால் எளிதில் எழுத இயலாத, புரிந்துகொள்ளக் கடினமான, சரிபார்ப்பு சாத்தியமில்லாத சில சிக்கலான விவரணைகளைத் தந்தார்.

மேலும் இரண்டு அல்லது மூன்று அமர்வுகளில் பங்கேற்றேன். எல்லாமே முட்டாள்தனமாகவும் வேடிக்கையாகவும் இருந்தபோதும், அவர்களுடைய சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகளை ரசிக்கவும், சிந்தியாவின் இத்தகு கொடுமையான வீட்டுக் கொண்டாட்டங்களின்போது தரப்படும் மதுவை அருந்தவும்தான் (போட்ஜியும் புட்ஜியும் மதுவருந்தும் பழக்கம் இல்லாதவர்கள்) நான் அவற்றில் கலந்துகொண்டேன் என்ற உண்மையை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

அவளுடைய வீட்டின் வரவேற்பறை எப்போதும் அழுக்காக, கழுவப்படாத பழைய, வண்ணக்கலவைத் தட்டைப் போல இருந்தது. எனவே அவள், அவளுடைய வீட்டை அடுத்த, திரு.வீலரின் வசதியான வீட்டில், அவளுக்கே உரிய மையவிலக்கு மனோபாவத்துடன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தாள். 

பண்பற்ற, நாகரிகமற்ற, சுகாதாரமற்ற, கேவலத்திலும் கேவலமான வழக்கமாக, விருந்தினர்கள் அப்போதுதான் அவிழ்த்த, உடற்சூடு இன்னும் குறையாத அவர்களது மேல் கோட்டுகள், அமைதியான, வழுக்கைத் தலையரான பாப் வீலரால், அவரது தூய்மையான, அந்தரங்கமான படுக்கையறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவரும் அவர் மனைவியும் படுக்கும் படுக்கையின்மீது குவித்துவைக்கப்பட்டன. மேலும் விருந்தினர்களுக்கான மதுபானங்களைக் கோப்பைகளில் அவர் ஊற்றிக் கொடுக்க, இளம் புகைப்படக் கலைஞன் அவற்றைப் பரிமாற, சிந்தியாவும், திருமதி வீலரும் ரொட்டிகளைத் தயாரிப்பதில் மும்முரமாக இருந்தனர்.

தாமதமாக வருபவர்கள், ஒன்றையொன்று பிரதிபலிக்கும் இரண்டு கண்ணாடிகளுக்கு இடையிலான நீலச்சாம்பல்நிறக் கூடத்தில் தேவையில்லாமல் கூடிக் கூச்சலிடும் ஒரு கூட்டத்தையே பார்ப்பார்கள். சிந்தியா வழக்கமாக அழைப்பு விடுக்கும் பெண்மணிகள் அனைவருமே, திருமணமானவர்களோ, இல்லையோ, ஆனால் அலைபாயும் நாற்பதுகளில் இருந்தார்கள். ஒருவேளை, அங்கு இருப்பவர்களிலேயே தான்தான் இளையவளாக இருக்கவேண்டும் என்று சிந்தியா விரும்பியிருக்கலாம். சிலர் அவர்களுடைய வீட்டிலிருந்தே டாக்சிகளின் மூலம் வரவழைக்கப்படுவார்கள். வரும்போது முழுமையான ஒப்பனையுடனும் அழகான தோற்றத்துடனும் காணப்படும் அவர்கள், நிகழ்ச்சியின் முடிவில் எல்லாவற்றையும் இழந்திருப்பார்கள். 

வார இறுதிக் கொண்டாட்டங்களில் வழக்கமாகக் கலந்துகொள்ளும் சிநேகபாவம் மிக்க குடிகாரர்கள், தங்கள் அனுபவத்தால், உடனடியாகவும், மிகத் துல்லியமாகவும் போதையின் பொதுப்பகுவெண்ணைக் கண்டறிந்து, அதன் அடுத்தக் கட்டத்துக்கு முன்பு அனைவரும் ஒருவருக்கொருவர் பூரண விசுவாசத்தோடு ஒன்றிணைந்து கூட்டாக இறங்குவது, என்னை எப்போதுமே ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.

இணக்கமாகப் பேசிய பெண்மணிகளின் பேச்சில் தெனாவெட்டும், இறுக்கமான ஆண்களிடத்தில் சூலுற்றப் பெண்மையின் நாணமும் தென்பட்டன. வந்திருந்தவர்களுள் சிலர் ஏதாவது ஒரு வகையில் கலையோடு தொடர்புடையவர்களாக இருந்தனர். எனினும் எழுச்சிமிக்க சொற்பொழிவுகள் இல்லை, மலர்க்கீரீடம் அணிந்த தலைகள் இல்லை, முக்கியமாக, குழலூதும் பெண்கள் இல்லை.

ஒன்றிரண்டு இளைஞர்களோடு, வெளிறிய தரைவிரிப்பின் மீது கரையொதுங்கிய கடற்கன்னியைப் போன்ற தோரணையோடும், வார்னிஷ் பூசியது போல பளபளவென்று, வியர்வை பூத்த முகத்தோடும் அமர்ந்திருக்கும் சிந்தியா, ஏதேனும் ஒரு கட்டத்தில் பருப்புகள் அடங்கிய தட்டை ஒரு கையில் கவனமாக ஏந்தியவாறே ஊர்ந்து சென்று, மறு கையால் வெண்சாம்பல் நிற சோபாவில் உற்சாகமும் துடிப்புமான இரண்டு பெண்மணிகளுக்கு நடுவில் வசதியாக அமர்ந்திருக்கும் காக்கரன் அல்லது கார்க்கரன் எனப்படுகிற கலைப்பொருள் விற்பனையாளரின் திடகாத்திரமான காலில் பட்டென்று தட்டுவாள். அடுத்த கட்டத்தில், மகிழ்ச்சியும் ஆரவாரமும் வரம்பு கடந்து பெரும் களேபரமாக வெடிக்கும். கார்க்கரன் அல்லது காரன்ஸ்கி, சிந்தியாவை அல்லது அந்தப் பக்கமாகப் போகும் வேறு ஏதாவதொரு பெண்ணை தோளைப் பற்றி, அறையின் மூலைக்கு அழைத்துச் சென்று, பல் இளித்தபடி, ஆபாசமான நகைச்சுவைகளையோ, அந்தரங்கமான கிசுகிசுக்களையோ சொல்வான். அவளும் தலையாட்டிச் சிரித்தபடி அங்கிருந்து அகன்று செல்வாள். அதற்குப் பிறகு அங்கு பால்பேதமற்ற நெருக்கங்களும், கோமாளித்தனமான சமரசங்களும் சுழன்றடிக்கும். ஒருத்தியின் கணவனை (அவன் அறையின் நட்ட நடுவில் நின்றுகொண்டிருப்பான்) இன்னொருத்தியின் கொழுத்த கை வளைத்திருக்கும் அல்லது யாரோ யாரிடமோ செல்லக் கோபம் காட்டுவார்கள் அல்லது யாரோ யாரையோ விளையாட்டாய்த் துரத்துவார்கள். இவ்வளவுக்கும் மத்தியில் பாப் வீலர் அமைதியான அரைப் புன்னகையோடு, நாற்காலிகளுக்குக் கீழே காளான் முளைத்ததுபோல் ஆங்காங்கே, விருந்தினர்கள் குடித்துவிட்டு வைத்திருக்கும் காலி மதுக்கோப்பைகளை எடுத்துக்கொண்டிருப்பார்.

அதுபோன்றதொரு கொண்டாட்ட நிகழ்ச்சிக்குப் பிறகு நான் சிந்தியாவுக்கு, சாதாரணமாக, ஆனால் நல்ல மாதிரியாக ஒரு கடிதம் எழுதினேன். அவளுடைய விருந்தினர்கள் சிலரைப் பற்றி அதில் விளையாட்டாய்க் கேலி செய்திருந்தேன். மேலும் அவளுடைய விஸ்கியைத் தொடாததற்கு மன்னிப்பும் கோரியிருந்தேன். பிரெஞ்சுக்காரனாகிய எனக்கு தானியத்தை விடவும் திராட்சையே பெரும் விருப்பம் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

சில நாட்களுக்குப் பிறகு, பொது நூலகத்தின் படிக்கட்டில் அவளைச் சந்தித்தேன். மேகமூட்டத்துடன் லேசான தூறலும் இருந்தபோது, கக்கத்தில் இரண்டு புத்தகங்களை இடுக்கிக்கொண்டு, அவளுடைய அம்பர் வண்ணக் குடையை விரிக்கப் போராடிக் கொண்டிருந்தாள். ஒரு நொடி அந்த இரண்டு  புத்தகங்களையும் நான் வாங்கிக்கொண்டு அவளுக்கு ஆசுவாசம் அளித்தேன். ஒன்று ராபர்ட் டேல் ஒவன் எழுதிய ‘இன்னொரு உலகின் எல்லையில் காலடித்தடங்கள், மற்றொன்று ‘ஆவியுலகும் கிறிஸ்தவமும்’ போல் ஏதோ ஒன்று.

என் தரப்பிலிருந்து எந்தத் தூண்டுதலும் இல்லாமல், திடீரென்று உணர்ச்சிக் கொந்தளிப்புடன், வக்கிரமான, விஷம் தோய்ந்த வார்த்தைகளால் அவள் பாட்டுக்கு என்னைத் திட்ட ஆரம்பித்துவிட்டாள். நான் ஒரு போலி பகட்டுக்காரன் என்றும் நயவஞ்சகன் என்றும் வெளித்தோற்றத்தையும் நடவடிக்கைகளையும் கொண்டே மனிதர்களை எடைபோடுகிறேன் என்றும், அந்த கார்க்கரன் இரண்டு வெவ்வேறு தருணங்களில் இருவேறு கடற்பரப்பில் மூழ்கிக் கொண்டிருந்த இரண்டு பேரைக் (தற்செயல் ஒற்றுமையாக இருவரது பெயருமே கார்க்கரன்) காப்பாற்றியவன் என்றும், கூச்சலும் கும்மாளமுமாய் இருந்த ஜோன் வின்டருக்கு பார்வைக் குறைபாடுள்ள சிறிய பெண் குழந்தை இருப்பதாகவும் இன்னும் சில மாதங்களில் அவள் முற்றிலும் பார்வை இழந்துவிடுவாள் என்றும் நான் அன்று காரணமின்றி அவமானப்படுத்திய பச்சை உடையணிந்து, மார்பில் கரும்புள்ளிகளைக் கொண்டிருந்த பெண்மணி, 1932-ஆம் ஆண்டு தேசிய அளவில் அதிக விற்பனையான புதினத்தை எழுதியவள் என்றும் சொன்னாள்.

என்னவொரு விநோதமான சிந்தியா! யாரை அவள் அதிகம் நேசிக்கிறாளோ, யார் மீது மரியாதை வைத்திருக்கிறாளோ, அவர்களிடம் அவள் மிகக் கடுமையாக நடந்துகொள்வாள் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். எதுவாக இருப்பினும் ஏதோ ஒரு தருணத்தில் இருவருக்கும் இடையில் ஒரு எல்லைக்கோட்டை நிர்ணயிப்பது அவசியம். ஏற்கனவே அவளுடைய ஆர்வக்கோளாறான ஒளிவளையங்களைப் பற்றியும் மற்ற முட்டாள்தனங்களைப் பற்றியும் ஓரளவு நான் அறிந்திருந்ததால் அதன் பிறகு அவளைப் பார்ப்பதை முற்றிலும் கைவிட்டேன்.

6

சிந்தியா இறந்துவிட்ட தகவலை டி. என்னிடம் தெரிவித்த அன்று இரவு பதினொரு மணிக்குப் பிறகு நான் வசித்த, இரண்டுதளக் குடியிருப்புக்குத் திரும்பினேன். ஒரு தளத்தில் நானும் மற்றொரு தளத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியரின் விதவை மனைவியும் குடியிருந்தோம். தாழ்வாரத்தை அடைந்ததும், தனிமைப் பயம் பீடிக்க, அடுத்தடுத்து இருந்த இரண்டு ஜன்னல்களின் ஊடாக இரண்டு வகையான இருட்டைக் கண்டேன். ஒன்று இல்லாமையின் இருண்மை. மற்றொன்று தூக்கத்தின் இருள். 

முதலாவது இருட்டைப் போக்க என்னால் ஏதாவது செய்ய இயலும். ஆனால் இரண்டாவது குறித்து எதுவும் செய்ய இயலவில்லை. என்னுடைய படுக்கை எனக்குப் பாதுகாப்பான உணர்வைத் தரவில்லை. அதன் சுருள்வில் அதிர்வுகள் என்னை மேலும் நடுக்கமுறச் செய்தன. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்களுள் மூழ்க முனைந்தேன். முட்டாள்தனமாக என் கவனமெல்லாம் பாடல் வரிகளின் முதல் எழுத்துகளைக் கொண்டு அவை உருவாக்கும் சங்கேத வார்த்தைகள் என்னென்ன என்ற தேடலில் ஈடுபட்டது.

70-ஆம் பாவில் FATE, 120-ஆம் பாவில் ATOM, இருமுறை 88 & 131-ஆம் பாக்களில் TAFT[7] என்ற வார்த்தைகளும் என் கண்களுக்கு அகப்பட்டன. என் அறையிலிருந்த பொருட்களின் தன்மையில் ஏதேனும் மாறுதல் தென்படுகிறதா என்று அடிக்கடி பார்த்துக்கொண்டேன். திடீரென்று அங்கே ஒரு வெடிகுண்டு விழுந்தால் கூட, சூதாட்டக்காரனின் ஆர்வக்களிப்பை விடவும் அதிகமாகவே அதை நான் எதிர்கொள்வேன் (அது எவ்வளவு பெரிய நிம்மதி) என்றும் அதே சமயம், என் அறையின் அலமாரிக்குள் இருக்கும் சின்னஞ்சிறிய புட்டி, துளி அங்குலம் நகர்ந்தால் கூட என் இதயம் வெடித்துச் சிதறிவிடும் என்றும் நினைக்கும்போது எனக்கே வேடிக்கையாக இருந்தது.

எங்கிருந்து வருகிறது என்று அறியவியலாத நுட்பமான ஒலி கூட பெரும் அதிர்ச்சியைத் தரும் வகையில், யாரோ வேண்டுமென்றே பின்னணியில் உருவாக்கியதைப் போன்று சந்தேகத்துக்கிடமான வகையில், அறையின் அமைதி மிக அடர்த்தியாக இருந்தது. போக்குவரத்து சந்தடிகள் ஓய்ந்துபோயிருந்தன. பெர்கின்ஸ் தெருவில் ஏதேனும் கனரக வாகனம் செல்லும் சத்தத்துக்கான என் பிரார்த்தனையும் பயனின்றிப் போயிற்று. மேல்தளத்தில் வசிக்கும் பெண்மணி வழக்கமாய், பெரிய குதிகால் காலணியை அணிந்துகொண்டு டொக் டொக் என்று நடக்கும்போது அந்தச் சத்தம் என்னை எரிச்சலடையச் செய்யும். (அவள் குள்ளமாய் குண்டாய் எப்போதும் சோகம் இழையோடும் முகத்துடன் பார்ப்பதற்கு, பதப்படுத்தப்பட்ட சீமைப் பெருச்சாளியைப் போன்று காணப்படுவாள்) ஆனால் இன்று, கழிவறைக்குச் செல்லும் பொருட்டு இப்போதும் அப்படி நடந்திருந்தால் நிச்சயம் அவளை ஆசீர்வதித்திருப்பேன். விளக்கைப் போட்டும் அணைத்தும், தொண்டையைச் செருமியும், எனக்கு நானே பல முறை சத்தமெழுப்பிக் கொண்டேன். தொலைதூர வாகனம் ஒன்றில் மனக்கண்ணால் ஏறிப்  பயணிக்கத் தொடங்கினேன். ஆனால், கண்கள் சொக்கும் முன்பே அதிலிருந்து இறங்க நேர்ந்துவிட்டது. திடீரென்று ஏதோ காகிதம் கசங்கும் சத்தம் (இறுக்கமான இரவுப்பூவொன்று மலர்வதைப் போன்று கசங்கிய தாள் விரிவதாக கற்பனை செய்தேன்) குப்பைக் கூடையிலிருந்து கேட்டது. என்னுடைய படுக்கையை ஒட்டிய மேஜையில் சின்னதாக டிக் என்ற சத்தமும் கேட்டது. சிந்தியாவின் ஆவி, தன்னுடைய மட்டமான விளையாட்டைக் காட்ட ஆரம்பித்துவிட்டது என்று தோன்றியது. நான் சிந்தியாவை எதிர்த்து நிற்க முடிவு செய்தேன்.

1848-ஆம் ஆண்டு நியூயார்க்கின் ஹைட்ஸ்வில் என்னும் உட்கிராமத்தில் தட்டுதல் மூலம் இறந்தவர்களின் ஆவிகளோடு தொடர்பு கொள்வதில் தொடங்கி, கேம்ப்ரிட்ஜ்ஜின் மசாச்சுசெட்ஸ் மாகாணத்தில் நடைபெற்ற கோரமான தோற்றப்பாடுகள் வரை நவநாகரிக யுகத்தின் ஆவி மற்றும் அமானுஷ்யம் சார்ந்த நிகழ்வுகளை ஒவ்வொன்றாக மனதுக்குள் மதிப்பாய்வு செய்தேன். கணுக்கால் எலும்புகளையும் இன்ன பிற மூட்டுகளையும் பயன்படுத்தி ஆவிகளோடு தொடர்பு கொண்ட (பஃபல்லோ பல்கலைக்கழக அறிஞர்களின் கூற்றுப்படி) ஃபாக்ஸ் சகோதரிகள்; பண்டைய பெரு நாட்டில் ஏற்பட்டது போலவே எப்வர்த் அல்லது டெட்வர்த்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு உண்டான ஒரே மாதிரியான மர்மமான மனநோய்[8]; புனிதமான இசையொலிக்கு ரோஜாக்கள் வீழும், அக்கார்டியன் இசைக்கருவிகள் மிதக்கும் விக்டோரியா காலத்து வெறியாட்டங்கள்; எக்டோபிளாசத்துக்கு[9]  பதிலாக ஈரமான பாலாடை வடிகட்டும் சல்லாத்துணியைப் பயன்படுத்தும் தொழில்முறை மோசடிப் பேர்வழிகள்; ஆவியுலக ஊடகப் பெண்மணி ஒருவரின் மதிப்புக்குரிய கணவரும், சோதனைக்கு உட்படுத்தியபோது, தான் அழுக்கான உள்ளாடை அணிந்திருந்ததைக் காரணமாய்க் கூறி சோதனைக்கு உடன்பட மறுத்தவருமான திரு.டங்கன்; பாஸ்டனில் ஒரு ஓய்வுநேரப் பிரார்த்தனையின்போது, வெற்றுக்கால்களும் துளையிடப்படாத காதுமடல்களுமாய் கண்முன் நின்ற வெள்ளை உருவத்தை, திரைச்சீலை இடப்பட்ட மூலையில் சற்று முன்பு தான் பார்த்தபோது உறக்கத்தில் ஆழ்ந்திருந்த, கருப்பு உடையும் இறுக்கமான பாதணிகளும், தோடுகளும் அணிந்திருந்த பணிப்பெண் மிஸ் குக்தான் என்பதை நம்ப மறுத்த அப்பாவி இயற்கை ஆர்வலர் ஆல்ஃப்ரட் ரஸ்ஸல் வாலஸ்; யூசாப்பியா[10]  என்ற பெரிய, பருத்த உருவம் கொண்ட, சகிக்கவியலாத, வீச்சம் அடிக்கும் முதிய பெண்மணியைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்தபோதும் கூட, தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்ட, குள்ளமாகவும், நோஞ்சானாகவும், ஆனால் சுறுசுறுப்பாகவும், புத்திசாலித்தனத்துடனும் இருந்த இரண்டு புலனாய்வாளர்கள்; குளியல் அங்கி அணிந்திருந்த நிலையில், கண்ணை மூடிக்கொண்டு, இடப்பக்கக் காலுறையைத் தடவிக்கொண்டே தொடைவரை செல்லுமாறு இளம்பெண் மார்கரியின் இனிமையான குரல் வழியே அவரை வழிநடத்திய ஆவி மூலம் அதைச் செய்து, கதகதப்பான தொடை மீது கொழகொழப்பான குளிர்ச்சியான, சமைக்கப்படாத பச்சை ஈரலைத் தொட்ட உணர்வடைந்த, அவமானத்துக்கு ஆளான, ஆவியுலக நம்பிக்கையற்ற மாயவித்தைக்காரர் என வரிசையாக நினைவுகூர்ந்தேன்.

7

உடலற்ற என் இருப்புக்கான சாத்தியத்தை மறுக்கவும் தோற்கடிக்கவும் என் சதைப்பிண்டத்திடம்[11], அதன் குற்றங்களிடம் மன்றாடிக் கொண்டிருந்தேன். ஐயோ! இந்த உச்சாடனங்களே சிந்தியாவின் அமானுஷ்யத்தன்மையின் மீதான பயத்தை அதிகரிக்கச் செய்தன. விடியற்காலையில் மீண்டும் பழைய அமைதி திரும்பி, நான் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தபோது, ஜன்னல் வழியாக செம்பழுப்பு நிறக் காலைக் கதிரொளி, சிந்தியாவால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த என் கனவை ஊடுருவித் துளைத்தது. 

எனக்கு ஏமாற்றமாக இருந்தது. பகல் வெளிச்சம் என்னும் பாதுகாப்பான கோட்டைக்குள் இருக்கும்போது, இன்னும் கொஞ்ச நேரம் கனவு நீடித்திருக்கலாம் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். பிரகாசமான, மிகத் துல்லியமான ஓவியங்களை வரையக்கூடிய சிந்தியா இப்போது அவளே உருவற்றவளாக, தெளிவற்றவளாக இருக்கிறாள். படுக்கையில் படுத்தபடி, வெளியிலிருந்து வரும் சிட்டுக்குருவிகளின் சத்தத்தைக் கேட்டுக்கொண்டே, நான் கண்ட கனவைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.

மனிதர்கள் பேசுவதை ஒலிப்பதிவு செய்து, பின்னோக்கி ஓடவிட்டால் கீச் கீச் என்று சத்தம் கேட்பது போல, ஒருவேளை இந்த சிட்டுக்குருவிகளின் கீச்சுச் சத்தத்தை ஒலிப்பதிவு செய்து பின்னோக்கி ஓடவிட்டால், மனிதர்களின் பேச்சு போல, வார்த்தைகளை வெளிப்படுத்துமோ என்னவோ? யாருக்குத் தெரியும்? நான் என்னுடைய கனவை மறுபடி பகுப்பாய்வு செய்யத் தொடங்கினேன். முன்னாலிருந்து பின்னால், பின்னாலிருந்து முன்னால், குறுக்குவாக்கில், மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக என பல பரிமாணங்களில், சிந்தியாவைப் போன்ற ஏதாவது ஒன்று, விநோதமாக, விசித்திரமாகத் தென்படுகிறதா என்று கடும் பிரயத்தனத்தோடு அதற்குள் தேடினேன்.        

என்னால் கொஞ்சம்தான் ஆராய முடிந்தது. மஞ்சள் நிறத்தில் மேகமூட்டம் போல் சூழ்ந்து என்னை எதையும் யோசிக்கவிடாமல் செய்தது. எல்லாமே தெளிவற்று மங்க ஆரம்பித்தன. சிந்தியாவுடைய கத்துக்குட்டித்தனமான வார்த்தை விளையாட்டுகள், பசப்பும் பாசாங்குமான ஏமாற்றுவித்தைகள், ஆன்மீக வெறியாட்டங்கள் என நினைவடுக்கில் வந்த யாவும் ஏதோ மர்மமான பொருளைத் தருவதுபோல் தோன்றின. எல்லாமே மஞ்சளாகி, மங்கி, மாயமாகித் தொலைந்து போயின.

பின்குறிப்பு – மூலக்கதையான ஆங்கிலத்தில் கடைசி பத்தியின் முதல் எழுத்துகளை வரிசைப்படுத்தும்போது ‘பனிக்கூரிகள் சிந்தியாவால், தரிப்பிட மானி என்னால் – சிபில்!’ என்பதாக இருந்தது அது.


[1] பனிக்கூரிகள் (icicles) – கூரையின் மேற்பரப்பிலிருந்து உருகிச் சொட்டும் நீர்த்தாரைகள் உறைந்த நிலையில் ஒன்றிணைந்து, கூரான கத்திகளைப் போன்று தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கும்.

[2] வாகனத் தரிப்பிட மானி – Car parking meter

[3] ஸ்லாவ் மக்கள் – மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். அவர்களுடைய மொழி ஸ்லாவோனிக் மொழி.

[4] ஸ்கங்க் (skunk) – தமிழில் முடைவளிமா எனப்படும் கருப்பு வெள்ளை நிற விலங்கு. ஆபத்து நேரத்தில் எதிரியின் மீது அது பீச்சும் திரவத்தின் முடை நாற்றம் கடுமையாக, சகிக்கமுடியாததாக இருக்கும்.

[5] அழியாக் கவிதை – கனவில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் ‘குப்ளா கான்’ (அல்லது கனவுக்காட்சி) என்ற கவிதையை எழுதியவர் கவிஞர் சாம்வேல் டெய்லர் கோல்ரிட்ஜ். 1797-ஆம் ஆண்டு ஒருநாள் இரவு தூங்கும்போது (அபின் போதையில் இருக்கும்போது என்றும் சொல்லப்படுகிறது) கவிஞருக்கு இக்கவிதை வரிகள் தோன்றியதாகவும் மறுநாள் அவ்வரிகளை நினைவிற்கொண்டுவந்து கவிதையை இயற்றிக் கொண்டிருக்கும்போது, பக்கத்து ஊரான போர்லாக்கிலிருந்து எதிர்பாராமல் வந்த ஒருவரால் எழுத்து தடைபட்டு பிறகு வரிகள் நினைவுக்கு வராமல் கவிதை முற்றுப்பெற இயலாமலேயே போய்விட்டது என்றும் சொல்லப்படுகிறது. அதனால் விறுவிறுப்பானப் படைப்பாற்றலுக்கு இடையூறு தருபவர்களை ‘போர்லாக்கின் ஆள்’ அல்லது ‘போர்லாக்’ என்று அங்கதமாகக் குறிப்பிடுவது வழக்கமாயிற்று.

[6] கருத்துத்திருட்டு – ஆஸ்கார் வைல்ட் எழுதி 1890-ஆம் ஆண்டு வெளியான புத்தகம் ‘The Picture of Dorian Gray’. சிபில் வேய்ன் என்ற கதாபாத்திரம் அதில் இடம்பெற்றுள்ளது.

[7] வில்லியம் ஹோவார்ட் டஃப்ட் – ஐக்கிய அமெரிக்காவின் 27-வது குடியரசுத் தலைவராக 1909 முதல் 1913 வரை பதவி வகித்தார். பின்னாளில் 1921-1930 வரை ஐக்கிய அமெரிக்காவின் தலைமை நீதிபதியாக இருந்தார். இரண்டு பதவிகளையும் வகித்த ஒரே ஆளுமை என்ற சிறப்பு இவருக்கு உண்டு.

[8] 12-ஆம் நூற்றாண்டு வாக்கில் தென்னமெரிக்காவை (கொலம்பஸால் கண்டுபிடிக்கப்படுவதற்கு முந்தைய அமெரிக்கா) இன்கா பழங்குடிப் பேரரசு ஆட்சி புரிந்தது. இன்கா மக்கள் அனைவருக்கும் பொதுவான, காரணம் புலப்படாத மனநோய் இருந்தது என்று வரலாற்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இன்கா மக்களை மட்டுமன்றி அரச குடும்பத்தையும் இந்நோய் பீடித்ததாகத் தெரிகிறது. தாவரங்களும் தாதுக்களும் அதற்கான சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது.

[9] எக்டோபிளாசம் – அமானுஷ்யக் கோட்பாடுகளின் அடிப்படையில் பிசுபிசுப்பான, அருவருப்பான, மர்மமானப் பொருளைக் குறிக்கும்.

[10] யூசாப்பியா பல்லாடினோ – பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய ஆவியுலகத் தொடர்பாளர். அவரது அமானுஷ்ய நிகழ்வுகள் யாவும் ஏமாற்றுவித்தைகளே என்று நிரூபிக்க முயன்ற பல மாயவித்தைக்காரர்களும் தந்திரவாதிகளும், இறுதியில் யூசாப்பியா ஒரு புத்திசாலி தந்திரி என்ற முடிவுக்கு வந்தனர். 

[11] தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன், மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான். – பரிசுத்த வேதாகமம், கலாத்தியர் அதிகாரம் 6.8

மூல ஆசிரியர் குறிப்பு:

விளாதிமிர் நபகோவ் (1899-1977)

ரஷ்ய-அமெரிக்க எழுத்தாளர், கவிஞர், இலக்கிய விமர்சகர், மற்றும் பூச்சியியல் வல்லுநர். முக்கியமாக வண்ணத்துப்பூச்சிகளைப் பற்றிய இவரது ஆய்வுக் குறிப்புகளும் உலகளாவிய வண்ணத்துப்பூச்சிகள் சேகரிப்பும் இன்றும் விஞ்ஞானிகளால் வியப்புடன் பார்க்கப்படுகின்றன. இவர் தன் எழுத்து மூலம் கிடைத்த வருவாயை வண்ணத்துப்பூச்சிகள் குறித்த ஆராய்ச்சிக்காகவே செலவழித்தார்.

1919-ஆம் ஆண்டு அவரது குடும்பம் இங்கிலாந்துக்குச் சென்றது. நபகோவ் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஸ்லாவிக் மற்றும் ரோமானிய இலக்கியங்களில் பட்டம் பெற்றார். அதன்பின் குடும்பம் பெர்லினில் குடியேறியது. ஒரு பதிப்பகத்தாரின் வேண்டுகோளின்படி ஆலிஸ் இன் வொண்டர்லாண்ட் கதையின் ரஷ்ய மொழிபெயர்ப்புதான் இவருடைய முதல் படைப்பு.

இவரது ‘லோலிடா’ நாவல் மிகப் பிரசித்தமானது. ரஷ்ய மொழியிலும் ஆங்கிலத்திலும் பல படைப்புகளை அளித்துள்ளார். விளாதிமிர் சிரின் என்பது இவரது புனைபெயர். 

1951-ஆம் ஆண்டு எழுதப்பட்ட ‘வேய்ன் சகோதரிகள்’ கதையை New Yorker பத்திரிகை வெளியிட மறுத்து, திருப்பி அனுப்பிவிட்டது. நபகோவ் அதன் எடிட்டருக்கு அக்கதையின் கட்டமைப்பைப் பற்றியும் மறையெழுத்துப் புதிர் பற்றியும் விளக்கி எழுதினார். கடைசி பத்தியின் ஆரம்ப எழுத்துகளைக் கொண்டு கதையின் முடிச்சை அவிழ்ப்பது, ‘இலக்கியத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழக்கூடியது’ என்றும் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் ஏழெட்டு வருடங்களுக்குப் பிறகு The Hudson Review பத்திரிகையில்தான் முதன் முதலாக இக்கதை வெளியானது. 1961-ஆம் ஆண்டு நபகோவும் அவர் மனைவியும் சுவிட்சர்லாந்தின் மாண்ட்ரியூ நகருக்குச் சென்று தங்கினர். தன்னுடைய இறுதிக்காலம் வரை அங்கேயே எழுத்திலும் வண்ணத்துப்பூச்சி ஆராய்ச்சியிலும் கழித்த நபகோவ், தனது 78-வது வயதில் நுரையீரல் பாதிப்பால் இறந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.