நோயின் வாசலில் நின்று அல்லது கதவின்
மறு புறம் நின்று
அல்லது அழகான சொற்சேர்க்கையின் நடுவிலிருந்து
அவர்கள் அவனை வழியனுப்புகிறார்கள்
பழைய கிட்டாருக்கெல்லாம் உள்ளே அனுமதி கிடையாது
சுகவீனம் இழந்த தோற்றத்தை கண்ணுறும் குழந்தைகள்
அம்மையின் பின்னே கடவுளைப்போல ஒளிந்துகொள்கிறார்கள்.
பீடித்திருந்த நோய்மையோ அவனுள் தயவு தாட்ச்சண்யமின்றி
சங்ககாலப்பாடலைப் போல செறிவோடுள்ளது
அதன் தீவிரத்திலிருந்து வரும் வலிமிகுயெண்ணங்கள்
ரூபம் தப்பிய களிறாய் மருள
தேனுண்டு திளைத்த வண்டைப்போல மையத்தில் கிடக்கிறான்
அந்த அறை மிகப்பெரிய மலர் போலுள்ளது.
எறும்பின் வாயால் மகளிடம் குனிந்து முத்தம் பெற்றபோதும்
யானை கண்களால் அழும் அளவுக்கு பிரிவுவர்த்தது.
இந்த மழைக்காலத்திற்கு அவன் வெண்கொக்கு எனப்பெயர் சூட்டினான்
துள்ளியத்திலுறைந்த அம்மலர்த்தியானத்தை
நான் வெறுமனே பார்த்துக்கொண்டே யிடிருந்தேன்.
-நிலாகண்ணன்