கோதையுள் எழுந்த நீலம்

                            வாழ்வில் ஒருசில இலக்கியங்கள் எந்தத் தருணத்தில் வாசித்தாலும் பித்தெழச் செய்து நம்மை வேறோர் வெளிக்குக் கொண்டுசெல்லும். நாலாயிர திவ்யப் பிரபந்தத்திற்கு அத்தகைய ஓர் சிறப்புண்டு. பக்தியில் அகம் வழிந்து நம்மை எல்லையிலா காதலை நோக்கி அழைத்துச்செல்லும். அன்னையாக, அடியவனாக, காதலியாக, தோழியாக, எல்லாமுமாகப் பாட்டுடைத் தலைவனான மாயோனை அணுகிச் சலித்து மீண்டெழும் தருணத்தினைப் பாசுரங்கள் அளிக்கவல்லவை. நம்முடைய சமயத்தில் இறைவனைக் காதலனாக்கி வழிபடுவது எல்லாக் காலங்களிலும் வழக்கில் இருக்கின்றது. அரசனாகவோ இறைவனாகவோ அணுகுவதைவிட என்னவனென அவனுடன் நெருக்கம் கொள்வது நம் பக்திச்செறிவை இன்னும் அதிகமாக்கும். பக்தி இலக்கிய காலகட்டத்தில் பன்னிரு ஆழ்வார்களில் ஆண்கள் பலரும் நாயகி பாவத்தில் திருமால்கண் காதல் கொண்டிருந்தாலும் முழுதாய் திருமாலைக் கொள்கின்ற நற்பேறு பெண்ணாகிய ஆண்டாளுக்கு வாய்த்தது. விஷ்ணுச்சித்தர் வீட்டு நறுந்துழாய் மாடத்தருகில் கிடந்த குழந்தை கோதை எனும் திருப்பெயருடன் வளர்ந்து தான் அரங்கன்கண் கொண்ட காதலை திருப்பாவையென்றும் திருமொழியென்றும் செவ்விலக்கியங்களாகப் படைத்தாள்.

தமிழிலக்கியத்தில் சங்கத்திலும் நவீனத்திலும் காதலுக்கு ஒருபோதும் குறைவிருந்ததே இல்லை. எல்லா படைப்பாளிகளும் ஏதோ ஓரிடத்தில் அகத்தையோ காதலையோ மையாக்கி எழுதுகின்றனர். எனினும் எல்லா அக இலக்கியங்களும் செவ்வியல் பண்பினைப் பெறுவதில்லை. சங்கத்தில் தொலைந்த அகப்பாடல்கள் எத்தனையோ உண்டு. இன்று நம்மிடம் கிடைப்பவை காலத்திலிருந்து தம்மைக் காத்து நிற்கும் இலக்கியங்கள். அதன்படி காலமாற்றத்தினாலும் மொழி கொள்கிற மாற்றத்தினாலும் தன் அழகியலிலும் மொழிச்செறிவிலும் மூலத்திலும் எவ்வித குலைவையும் ஏற்படுத்திக்கொள்ளாததை செவ்வியல் இலக்கியமென வகைபடுத்தலாம். காமம் ஓர் எளிய மானுட உணர்வு; அதனை அழகியலாக உருமாற்றி நல்லதொரு மொழியில் அளிக்கின்றபோது வெறும் உணர்வாகவன்றி ஓர் திறப்பினைத் தருகின்றது. உதாரணமாகக் குறுந்தொகையில் ‘உயிர் தவச் சிறிது காமமோ பெரிதே’ என்கிற அடி உயிரெனும் சிறிய கொழுகொம்பில் காமம் பெருங்கனியெனக் கனிந்துள்ளது என்கிற படிமத்தினை அளிக்கின்றது. இத்தகைய உருவகங்கள் பிரவாகமான மொழியுருவில் கிடைக்கும்போது ஓர் அனிச்சையான செவ்வியல் தன்மை உருவாகின்றது. இரண்டாயிரம் வருடத்திற்கு முந்தைய படிமம் இன்னும் இரண்டாயிரம் வருடங்களுக்குப் பின்னும் பேசப்படுகின்ற நிலையைப் பெறுகின்றது.

கோதையின் பாசுரங்களுக்கும் இதே தன்மை இருக்கின்றது. ஆனால் நவீன இலக்கியவாதிகள் கட்டுடைப்புக் கொள்கையின்படியும் உலகமயமாதலை படியெடுப்பதாலும் தமிழுக்குரிய செறிவையும் அழகியலையும் கண்டுகொள்வதில்லை. இன்று பல யதார்த்தவாதச் சிறுகதைகளிலும் நாவல்களிலும் நிகழ்வுகள் இருக்கிறதேயொழிய அழகியல்கூறுகளோ மொழிச்செறிவோ இல்லை. ஒரு நாவலென எடுத்துக்கொண்டால் அதிகபட்சம் இருநூறு பதங்களைத் தாண்டி ஒன்றுமில்லாமல் முந்நூறு பக்கங்களுக்கும் அந்த இருநூறு பதங்களே சுற்றுகின்றன. ஆங்கிலம் தன்னகத்தே கொண்டிருக்கும் vocabulary இறுக்கத்தினைத் தமிழ் இழந்துகொண்டிருக்கிறது. பெரும்பாலான நவீன இலக்கியவாதிகளிடம் ஐந்நூறு பதங்களைப் (வழக்குச் சொற்களுடன்) பட்டியலிடச் சொன்னால் அவர்களால் இயலாது. இப்படியான சூழலில் நவீன தமிழிலக்கியத்திற்கு செவ்வியல்சார் படைப்புகளைத் தொடர்ச்சியாக அளிப்பவர் ஜெயமோகன். இவரது கொற்றவை, விஷ்ணுபுரம் மற்றும் வெண்முரசு நூல்கள் ஆகியவை தமிழிலக்கியத்தின் சிம்மாசனத்தில் அடுக்கிவைத்துப் போற்றப்பட வேண்டிய செவ்வியல் ஆக்கங்கள்.

ஜெயமோகன்

வெண்முரசு நூல்வரிசையில் நான்காவது நூலான நீலம் ஆண்டாளின் திருமொழியுடன் ஒப்பிடத்தக்கது. அங்கே கோதை தான் அரங்கன்கண் கொண்ட பித்தினை மொழி வழியே யாக்கின்றாள். இங்கே ராதை கொள்கின்ற பித்தை ஜெயமோகன் அதேமொழியின்கால் நமக்குக் கடத்துகின்றார். பக்தி இலக்கிய காலத்தில் சீர்களாகவும் அடிகளாகவும் பொழியப்பட்ட காதல் நவீன இலக்கியகாலத்தில் சொற்களெனக் கோர்க்கப்பட்டு உரைநடை வடிவில்  வந்தடைகின்றது.ராதை கொள்ளும் நீலமென்பது கோதை காதலில் எழுந்த ஊற்று.

கண்ணனென்றதும் நம் நினைவில் எழுவது அடர்மணிநீலம்; விண்ணில் எழுந்த அவன் நீலம் மண்ணில் கடலென நிழலாய் விரிகிறது. அலைகளெனத் தீண்டுகையில் அவனிரு நீலக்கரங்கள் விசைகொண்டிழுத்து அணைக்க முயல்வதைப் போன்றதொரு மயக்கம். இரவில் வானில் படர்ந்த அடரிருள் மீது சிதறிய விண்மீண்கள் கிடக்கின்ற அவன்மேனியில் உதிர்ந்த முல்லைப்பூக்களை ஒக்கும். பீலிவிழியின் நீலமும் குவளையின் நீலமும் அவன் விழிகளையும் பாதங்களையும் ஓர்மை கொள்ளச்செய்யும். நீலகண்டனின் மிடற்றில் இருக்கின்ற ஆலகாலப்படிவு அவன்கண் கொண்ட காதல். இவ்வாறு நீலத்தை வாசிக்கும்போது பிரபஞ்சமெங்கிலும் காணப்படும் நீலவண்ணம் திரண்டு நம் அகத்தினுள் ஓர் மெல்லிய போதையை உருவாக்கி அதில் லயிக்கச் செய்கின்றது.

கோதையின் தந்தை விஷ்ணுச்சித்தர் பாடிய பல்லாண்டு பிரபந்தத்தின் தோற்றுவாயாகும். திருமாலுக்கு கண்ணேறு கழிக்க விஷ்ணுச்சித்தர் மல்லாண்ட திண்தோளுக்கும்  தனக்கும் அவனுக்குமான பந்தத்திற்கும் மார்பில் வீற்றிருக்கும் திருமகளுக்கும் ஆழிக்கும் பணிலத்திற்கும் பல்லாண்டென்கிறார். நீலம் அத்தகையவனைத் தன் உயிரில் மணியாய் அணிகொள்ளப் போகிற ராதைக்குப் பல்லாண்டு பாடுகின்றது. ஆழிமுதல்வன் விரும்பிய பாற்கடலுக்குப் பல்லாண்டென ராதையை திருமாலைக் காதலால் ஏந்துகின்ற பாற்கடலென உருவகப்படுத்துகிறார் ஜெயமோகன்.

நீலத்தில் ராதை ருதுவாக கண்ணன் பிறக்கின்றான். பர்சானபுரியின் ஆயர்மகளாய் கண்ணன்கண் பிச்சியாகச் சுற்றுகிறாள். விஷ்ணுச்சித்தன் மகளோ கண்ணனுக்காக ஆய்ச்சியாக மாறித் தங்கள் குடங்கள் பாலால் வழியட்டும் என்று அகத்தால் ஆயர்பாடியில் வாழ்ந்துகொண்டு பாடுகின்றாள். அவனை மணந்துகொள்ள பாவைநோன்பிருக்கிறாள். தான்மட்டுமின்றி பிற கோபியரையும் சேர்த்துக்கொண்டு  ‘எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்’ என்று ஏழேழ் பிறவிக்கும் இப்பிறவியிலேயே குழுவாக பந்தமுடிச்சிட விழைகிறாள். ஆனால் ராதை காதலையே நோன்பென நோற்பதால் பிறவியைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் கண்ணபித்திலேயே பிறவியைக் கழிக்கிறாள். ராசலீலை கண்டு ‘பரத்தனே’ எனப் பழிக்கிறாள்; தோழியராகச் சுற்றிய கோபியரைக் கண்டு “உங்களுக்கெல்லாம் நாணமில்லையோடி” எனக் கோபிக்கின்றாள். கண்ணனுக்கு அணியென பீலிவிழியைச் சூட்டியவளென்ற உரிமையில் தனக்கே அவனென அவனைத் தாள் பணிக்கின்றாள்.

பாவை நோன்பிற்குப் பின் கோதை தான் கண்ணனை மணந்துகொள்ள மன்மதனை வேண்டுகிறாள். ஊமத்தை மலர்களையும் முருக்கை மலர்களையும் கொண்டு வழிபட்டு              ‘காயுடை நெல்லொடு கரும்பமைத்துக் கட்டி யரிசி யவலமைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால் மன்மதனேஉன்னை வணங்குகின்றேன்’ என்று அனங்கனுக்கு பச்சரிசி அவலும் கரும்பும் கருப்பட்டியும் காய்நெல்லும் படையலிட்டு மந்திரங்கள் ஜபித்து வணங்குகிறாள். ஓர் பக்திகொண்ட அரிவையாக வழிபாட்டின் மூலம் அரங்கனை அடையும் விழைவைக் கொண்டிருக்கிறாள். தன்னைச் சிறுமியெனக் கருதி மணலில் சிற்றில் கட்டியாடி சிதைக்காதே கள்ளமாதவா என்று வேண்டி நடிக்கிறாள். ஒரு கட்டத்தில் தாம் கட்டும் சிற்றிலை உதைத்தாலும் கோபம்வராதெனக் கண்ணனிடம் குழைகின்றாள்.

ராதையும் தோழியரான கோபியரும் யமுனையில்  நீராடுகையில் ராதையிடம் சழக்காட மாறிமாறி உடைகளை உருவி விளையாட நீர் மட்டுமே அணிந்த உடல்களின் நீலத்தின் ஸ்பரிசத்தினைப் பெற்றன. நீர்மருத மலர்கள் மிதந்து சூழ்ந்திட நீரிலாடிய ரங்கதேவி நீலக்கடம்பின் அடியில் கழற்றி வீசிய ஆடைக்குவையைக் காணவில்லை எனப்பதறினாள். ராதை எழுந்துவந்து சருகுகளில் தேடச்சொல்ல அதே குழலிசை கேட்டு லயித்தாள். கடம்பின் மீது கரியோன் அமர்ந்திருப்பத்தைக் கண்டு உடலில் அவன் மட்டும் அறியும் மலர்கள் பூக்க நின்றாள். அவன் கையிலிருந்த ஆடைகண்டு கோபியர்கள் கூவி நீரில் மீண்டும் இறங்கினர். லலிதை மயங்கி நின்ற ராதையையும் உள்ளிழுத்தாள். கண்ணனின் மீது ஒருத்தி கல்லெறிய மற்றொருத்தி இறைஞ்சினாள்; அதட்டல்களும் கெஞ்சல்களும் மாறிமாறி ஒலிக்கக் கண்ணன் கைகூப்பி அடிபணியச்சொன்னான். அவன்முன் பணிந்திட எந்த மடமகள் மாட்டேனென்பாள்?

கோதை ‘குருந்திடைக் கூறை பணியாய்’ என மரத்தில் அமர்ந்திருக்கும் கண்ணனிடம் தோழியருடன் சேர்ந்து கெஞ்சுகிறாள். “கதிரவன் எழும்முன்னரே வந்துவிட்டோம், இனி இந்த பொய்கைக்கு வரமாட்டோம், மீன்கள் கடிக்கின்றன, தாமரைத்தண்டுகள் தேளின் நச்சு போல வலியை உண்டாக்குகின்றன, எங்கள் அன்னையர் இல்லத்தில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள், இங்குள்ள எல்லோரும் என்ன உன் தேவியரா? உன் மாமிகளும் அன்னையரும் கூட உள்ளோம்” என்று கோதையும் தோழிமாரும் துகில் கேட்டு இறைஞ்சுகின்றனர். கோதை பின் தனியே வந்து கண்ணன் கிடைப்பானா என மணல் பரப்பி வட்டங்களிட்டு கூடலிழைத்துப் பார்கிறாள். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருப்பவள் அகத்தால் மதுராவில் அமைகின்றாள்.

‘மாட மாளிகை சூழ்மது ரைப்பதி

நாடி நந்தெரு வின்நடு வேவந்திட்டு

ஓடை மாமத யானை யுதைத்தவன்

கூடு மாகில்நீ கூடிடு கூடலே’

மதங்கொண்ட யானையின் நெற்றிப்பட்டத்தை உதைத்து வீழ்த்தியவன் இந்த மாடங்கள் சூழ் மதுரைபுரியில் என்னைத்தேடி எம்தெரு வந்து என் வாயில் தொட்டு என்னைச் சேர்ந்திட வேண்டுமென வட்டங்கள் கூடுக என்கிறாள்.

நீலத்தில் ராதை எளிய ஆயர்மகளெனினும் நீலவண்ணனை உயிராய் கருதுபவள். எனவே இத்தகைய ஆடல்கண் ஏதும் மனம் செல்லாது யமுனைக் கரையிலும் நீலக்கடம்பின் அடியிலும் இன்னும் அவன் வரச்சொல்லி வராத இடங்களிலெல்லாம் அவனுக்கான தன் பிரேமையை அமர்த்திக் காத்திருக்கின்றாள். அவனைக் காண்கின்ற வரையில் காத்திருப்பாள்; இம்மை மறுமை பற்றியெல்லாம் அறியாத பித்து அது.

‘மென்னடை யன்னம் பரந்துவிளையாடும் வில்லிபுத் தூருறை வான்றன்

பொன்னடி காண்பதோ ராசயி னாலென் பொருகயற் கண்ணிணை துஞ்சா

இன்னடி சிலோடு பாலமு தூட்டி எடுத்தவென் கோலக் கிளியை

உன்னொடு தோழமை கொள்வன் குயிலே உலகளந் தான்வரக் கூவாய்’

கோதை அவனுக்காகக் காத்திருந்து அவன் வருகை காணாது குருகத்திகளும் புன்னைகளும் நிறைந்த சோலையில் கூவும் குயில்த் தன்னை சந்திக்க வர சொல்லென அரங்கனிடம் தூது அனுப்புகின்றாள். பின் அவன் வருகையை எவ்வாறு அறிவது? அணி புனையவேண்டும், ஆடி காணவேண்டும், நாணுதற்கு ஒத்திகை பார்க்கவேண்டும். அதனால் “அவன் வருகையறிந்து கூவு, நான் அதற்குள் என்னைத் தயார்செய்துகொள்வேன், அவன் வருகையின் திசையறிந்தாலே நான் மலர்வேன்” என்று ‘அவன் வரக் கூவாய்’ என்று பத்து பாசுரங்கள் பாடியிருக்கிறாள்.

‘மென்னடை யன்னம் பரந்துவிளையாடும் வில்லிபுத் தூருறை வான்றன்

பொன்னடி காண்பதோ ராசயி னாலென் பொருகயற் கண்ணிணை துஞ்சா

இன்னடி சிலோடு பாலமு தூட்டி எடுத்தவென் கோலக் கிளியை

உன்னொடு தோழமை கொள்வன் குயிலே உலகளந் தான்வரக் கூவாய்’

“அன்னங்கள் விளையாடுகிற வில்லிபுத்தூரில் உறைபவனான கரியோனது பொன்னடிகளைக் காண்பதன் விழைவில் என் இருவிழிகளும் தான்தான் முதலில் காண்பேன் எனச் சண்டையிட்டு உறங்கக்காணோம். எனவே உலகளந்தான் வரவைக் கண்டு நீ கூவினால் அக்காரமிட்ட அடிசிலும் பாலமுதும் உண்ணும் என் மனைக்கிளியை உன்னுடன் நட்புகொள்ளச் செய்கிறேன்” என்று குயிலுடன் ஓர் ஒப்பந்தமிடுகிறாள்.

அடுத்து ஆயிரம் யானைகள் சூழ மாதவன் வந்துத் தம்மைக் கரங்கொள்வதாய் கனா காண்கிறாள் கோதை. இங்கே ஓர் முறைபடுத்தப்பட்ட காதலாகத் தன் காதலை வைக்கின்றாள் கோதை. காதலித்தாலும் இந்த மக்கள் முன் உரிய முறையில் விவாகம் செய்தல்லவா அவனோடு கூடிக்களிக்க வேண்டும் என்கிற எண்ணம் பல பாசுரங்களில் வெளிப்படும். ஆண்டாள் கதையே ரங்கமன்னாரை மணந்து விண்புகுந்ததாக மரபுமீறாத கதைபுலனைக் கொண்டிருக்கும்.

ஆனால் ஆறாந்திருமொழியில்

‘காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி

தீவலம் செய்யக்க னாக்கண்டேன்’ என்று அக்னி வலம் வரும் விழைவைக் கூறும் கோதை கொஞ்சம் கொஞ்சமாக பித்துகொள் ராதையாக உருமாறுகிறாள்.

‘மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்

வெண்பா கீதாயன்

விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே’ கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ என கண்ணனின் பாஞ்சசன்யத்திடம் கள்ளத்துடன் அவன் வாய்ச்சுவையும் மணமும் குறித்து வினவி அறியமுயல்கின்றாள். மேகங்களைக் கண்டு “அவன் நீலம் அறிந்த மேகங்களே! அவனை எண்ணி மருகி நான் விடும் கண்ணீர் என் முலைக்கண்களை நனைக்கின்றது, இது அவனுக்குப் பெருமையோ? வேங்கடத்தில் பொழியும் அவன் நிறமே! அவன் அளித்த காமத்தின்கண் இவ்விரவில் குளிர்தென்றல் தீண்டிட இங்கு நின்றிருக்கிறேன்.வேங்கடம் சென்று சொல்லுங்கள், திருமகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் திருமார்பனுக்குதான் இவ்விளங்கொங்கைகளென்று. சொல்லளித்துவிட்டு மீறி ஒரு பெண்ணை வதைத்தானென்னும் பழி இவ்வுலகத்தாரால் அவனுக்கு வேண்டுமோ? ” என்று பாசுரங்களில் அகத்தன்மையை அதிகரிக்கின்றாள். பின்னர் மதுராபுரியிலும் ஆயர்பாடியிலும் அவன் ஆடியபொய்கையிலும் அவன் நிறமான நடுநிசியிலும் துவாரகைக்கும் கொண்டு தன்னைச் சேர்த்துவிடுமாறு பாடுகின்றாள். கைத்தலம் பற்றுவதெல்லாம் இனி விஷயமில்லை, ஒழுங்காக என்னை அவனிடம் சேர்ப்பித்துவிடுங்களென அவள் பாடுவதைக் கட்டளையெனக் கொள்ளலாம்.

சங்ககாலத்தில் தலைவி உடன்போகுதல் நிகழ்த்தும் மரபுண்டு; அல்லேல் அறத்தோடு நிற்கவேண்டும். அதாவது தலைவி தோழியிடம் உணர்த்தி தோழி தலைவிக்கு மணம் செய்யவேண்டுமென செவிலிக்குச் சொல்லி செவிலி நற்றாய்க்கு உரைத்து நற்றாய் தந்தையிடம் பேசி நிமித்தங்கள் கண்டு மணவிழைவு நடத்துவது முறையாகும். பக்தி இலக்கியகாலம் மெல்ல அத்தகைய அகஇலக்கணங்களைக் கழற்றி சிற்றிலக்கியங்களுக்குள் சென்று மெதுவாக நெகிழ்கின்றன. அங்கே ‘கனாக் கண்டேன் தோழீ நான்’ என்று அறத்தொடு நிற்பவள் இங்கே பொதுநாணங்களைக் களைந்து ‘துவாராபதிக்கென்னையுய்த்திடுமின்’ என்று உரிமையாகப் பாடுகிறாள்.

 

‘உள்ளே யுருகி நைவேனை உளளோ இலளோ வென்னாத

கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த் தனனைக் கண்டக்கால்

கொள்ளும் பயனொன் றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்

அள்ளிப் பறித்திட் டவன்மார்வில் எறிந்தென் அழலை தீர்வேனே’

ஆண்டாள் முழுவதும் ராதையென்றான தருணம் இது. “இங்கே உள்ளேயுருகி நைந்து கரைந்துகொண்டிருக்கும் என்னைப்பற்றி இருக்கிறாளா இறந்தாளா என்று கூட அறியாமல் இருக்கின்ற அந்தக் கொள்ளைக்கார குறும்பனைக் கண்டேனெனில் பயனின்றி என்னிடமிருக்கும் இந்தக் கொங்கைகளை வேருடன் பிடுங்கி அவன் மார்பில் எறிந்து என் துயரைப் போக்கிக் கொள்வேன்” என ராதையின் உச்சந்தனை கோதை கொள்கிறாள்.

ஏனெனில் நீலத்தில் ராதை காத்திருந்து ஏங்கி பின் காணும் கண்ணனிடம் மொழிபவை இவை:

“இனியென்ன சொல்வேன்? எத்தனை சொல்லெடுத்து குருதி பலி கொடுத்தாலும் என் அகம் அமர்ந்த நீலி அடங்கமாட்டாள். என் முலை பிளந்து குலையெடுத்து கடித்துண்டு குடல்மாலை சூடி உன் நெஞ்சேறி நின்றாடினால்தான் குளிர்வாள்” என்றேன். “அவள் கொன்றுண்ணவென்றே ஓர் உடல் கொண்டு வந்தேன். அதுகொள்க” என்றான்.

 

//          கோதை ஏழு பிறவிகளிலும் கண்ணனைக் கொள்வதற்கு விழைவுற்றாள்; பித்தானாள்; பாசுரங்களெனத் தான் கொண்ட காதலை இயற்றினாள். ராதை கண்ணனோடு அன்னையென்றும் காதலியென்றும் வாழ்ந்தாள்; மணம்கொண்ட பின்னரும் ராதையின் ஆன்மா கண்ணனோடு களித்தாடியது; ஊரின் அலரைக் காணாத கட்டற்ற காதல் ராதையினுடையது; ஆழியின் நீலமது; அதில் கண்ணனையும் ஆழ்த்தித் தானும் ஆழ்ந்தாள். கோதை அந்தப் பேராழியில் தன்னைப் புகுத்திக்கொண்ட நீலநதி. நீலமென்பது யுகந்தோறும் ஒவ்வொரு பெண்ணும் காண்கின்ற காதல் கனா; பலரும் மூழ்கி மீள்கின்றனர்; ராதைகளும் கோதைகளும் மீள விரும்பாமல் அதில் ஆழ்ந்துவிடுகின்றனர்.


-வெண்பா கீதாயன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.