ப.சிங்காரத்தின் நாவலில் பலகுரல் தன்மை

ப.சிங்காரம் 1920ஆம் ஆண்டு சிங்கம்புணரி கிராமத்தில் பிறந்தவர். 18 வயதில் இந்தோனேஷியாவில் உள்ள மைடான் நகரில் வட்டிக்கடைக்கு ஊழியராகச் சென்றார். மதுரை தினத்தந்தி அலுவலகத்தில் நீண்ட காலம் பணியாற்றி 1997-ல் மறைந்தார். மைடான்-சின்னமங்கலம் (சிங்கம்புணரி) – மதுரை இந்த மூன்று ஊர்களும் அவர் வாழ்வோடு பின்னியிருப்பவை. அவர் எழுதியிருக்கும் ‘கடலுக்கப்பால்’ (1950) ‘புயலிலே ஒரு தோணி’ (1962) இரண்டு நாவல்களிலும் இந்த ஊரின் இயக்கம் – பேறுகால வாசம் என்கிறோமே – அப்படி, மனிதர்களின் வாசத்தோடு படைக்கப்பட்டிருக்கின்றன.

ப.சிங்காரத்தின் எழுத்து சுயம்புவானது. எப்படி புதுமைப்பித்தன் எழுத்தை மற்றொருவர் பின்பற்ற முடியாதோ. அப்படி ப.சிங்காரத்தின் எழுத்தையும் மற்றவர் வசப்படுத்திவிட முடியாத தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. இந்த எழுத்துமுறை தமிழ்ப் பண்பாட்டின் சாரத்திலிருந்து உருவாக்கிக் கொண்டதுதான். இதில் ப.சிங்காரம் என்ற படைப்பாளியின் குணமும் சேர்ந்து தொழிற்பட்டு தனித்துவமான நடையை உருவாக்கியிருக்கிறது. கொங்கு, கரிசல், வண்டல் பிரதேச வாழ்க்கையை அப்படியே கொண்டுவந்தவர்கள் உண்டுதான். ஆனால் பார்வையின் தீட்சண்யம் இல்லாமல் வெளிப்பட்ட படைப்புகளே அதிகம். ப.சிங்காரம் பாண்டி நாட்டு மண்ணையும் மைந்தர்களையும் கண்முன் நிறுத்தியதோடு அல்லாமல் அதில் அவரின் படைப்பு மேதமை வெகு நுட்பத்தோடு வெளிப்பட்டிருக்கிறது.

தெருவில் சாதாரணமாக நடந்து செல்லும் நேரத்திலும் சரி, அவரசமான நேரத்திலும் சரி எதிர்படுபவரின் நடை உடை பாவனைகளைச் சட்டென இரண்டொரு வார்த்தைகளில் சொல்லிவிட்டு விசயத்திற்குப் போய்விடுகிறார். “முழுக்கை பனியனும் சிவப்புக் கொட்டடிக் கைலியும் கட்டை மிதியடியும், புகை வீசும் சுருட்டுமாய் மரக்காயர் நின்றார்” என்று எழுதித்தான் மேலே நகர்கிறார்.

அதேபோல மாந்தர்களிடம் வெளிப்படும் உடல்மொழியை ஓர் அர்த்தத்தோடு கையாள்கிறார். வைரவன் பிள்ளையைச் சந்திக்காரன் செல்லையா. தன் பேச்சை மீறி இராணுவத்திற்குப் போய் வந்தவன். அவனை கடையிலிருந்து விலக்கிவிட நினைக்கிறார்.

“ம்ம்… சரி உக்காரு” இடது உள்ளங்கை மாறிமாறி இரு புருவங்களையும் தடவியது. கண்கள் மூடின. இடது தொடைமீது அட்டணை போட்டிருந்த வலது கால் கடுவிரைவாய்த் துடித்துக் கொண்டிருந்தது.” இந்தத் தோரணையே அவரின் மனநிலையையும் புலப்படுத்திவிடுகிறது.

நொடிப்பொழுதில் எதிர்பட்டு கடந்துவிடுகிற சமயங்களிலும் நோக்கங்களைப் பொறிபோல வெளிச்சமாக்கிவிட்டு நகர்ந்து போய்விடுகிறார். “நடைபாதை இருட்டில் பச்சூலி மணம் கமழ நின்றவள் தோலைக் குலுக்கி நெளிந்தாள். ஒரு சீனன் உற்றுப்பார்த்துவிட்டுப் போனான்” நாம் யூகித்துக் கொள்ளலாம்.

எதேச்சையாகக் காணும் காட்சியை உரையாடலுக்குள் கொண்டுவந்து பல மாயங்கள் நிகழ்த்துகிறார். கிளுகிளுப்பான விசயத்தைச் சொல்லி ஒருசார் தமிழர்களின் நடத்தை பற்றிய விமர்சனமாக வைக்கிறார். பெட்டியடியிலிருந்து பேச்சு கிளம்புகிறது.

“பாவன்னா, கொஞ்சம் எட்டிப்பாருங்க அந்தப் பக்கம். வடக்கத்தி மாடுபோலப் போறாளே மலாய்க்காரி, தெரிகிறதா?”

“யாரவள்?” எட்டிப்பார்த்துவிட்டு உட்கார்ந்தான்.

“யாரவளா?” ‘தங்கத் தண்டைக்காரி’ யாஸ்மின். உடம்பு எப்படி? வயது நாற்பத்தைந்துக்கு மோசமில்லை.”
“என்ன அவ்வளவு வயது இருக்குமா!”

“நல்லாச் சொன்னியக போங்க” வார்த்தைகளைக் குறுக்கி வளைத்திழுத்துச் செட்டிநாட்டுப் பாணியில் பேசலானார். “அவுத்துப் பாத்தா அண்ணாமலையான் தின்னுத்திப் பைபோல இருக்கும். அஞ்சு பிள்ளைக.”
“ஆறு பிள்ளைகள் என்று கேள்வி” தில்லைமுத்து திருத்தம் கூறினான்.

“அடியம்மத்தா! பாத்தியளா பாவன்னா! எந்தப் புத்தில எந்தப் பாம்பு கிடக்குமுனு எப்படிச் சொல்றது!” கண்களை உருட்டினார். “வாத்தியார் மேப்படி சங்கதியகள்ள எம்புட்டுக் கணக்காயிருக்கார். பாத்துக்கங்க.”
“தில்லைமுத்து ஊமைக்கள்ளன்” தங்கையா சொன்னான்.

“சரி சரி, ரொம்பச் சரியனனேன். அது போகுது, பேச்சை விட்ராதியக. என்ன பாவன்னா, நம்ப செட்டி வீட்டு ஆளுக இன்னைக்கும் செம்மறியாட்டு மந்தையாட்டம் அவள்ள போயி விழுறாங்கய?”
“அவ கிடக்கா, நாத்தச்சிறுக்கி. நீங்க பினாங் வியாபாரத்துக்கு வரலையா?
பேச்சு அப்படியே பினாங் வியாபார திட்டத்திற்குள் போகிறது. பேசவந்த பிரச்சனையின் ஊடே அதனைச் சுற்றி நிகழும் இன்னபிற விசயங்களையும் கொண்டுவந்து செறிவாக்குகிறார்.

தகவல்களாகப் போய்விடக்கூடிய எண்ணற்றச் சமாச்சாரங்களைச் செறிவானமொழியில் அனுபவங்களாக மாற்றித் தந்திருக்கும் வித்தை நாவல் முழுக்க அப்பியிருக்கிறது. வேற்றுதேச இடப்பின்னணியில் நிகழ்வதால் தமிழ் மனங்களின் நானாவிநோதங்களைத் – தமிழர் எண்ணங்களின் சாராம்சங்களை – வெளிப்படுத்திக்கொள்ள அதுவே வாய்ப்பாக அமைகிறது. வியாபார நிமித்தமாக புலம்பெயர்ந்த தமிழர்வாழ்வு அற்புதமாக இதற்குக் கைகொடுக்கிறது. யுத்த நெருக்கடி தமிழர்களின் பண்டைய வரலாறுகளை ஆழ்மனங்களிலிருந்த கிளறிவிடுகிறது.
தமிழ்ப் பண்பாடு உருவாக்கிய அனைத்து வெளிப்பாட்டு முறைகளும் அழகியலின் அத்தனை நுட்பங்களும் இவரது இரு படைப்புகளிலும் கூடி வந்திருக்கின்றன. பேச்சு, அறிமுகம், எண்ணம், தோற்றம், பாவம் எனப் பல்வேறு அழகியலை – அவை அப்படியான அழகியல் என்ற வெளிப்படை உணர்வு இல்லாமல் வெளிப்படுத்தியிருக்கிறார்.
மலேயரை கலப்புமணம் செய்துகொண்ட தமிழச்சியின் அடிமனதில் ஓடும் தமிழ் மனத்தை ஒரு வரியில் வென்றெடுக்கிறார்.

“பாண்டியன் நெற்றியைத் தடவினான். இந்த முகத்தில்தானே மலாய்காரி போல் உடை அணிந்திருந்த தமிழ்ப்பெண், “கண்ணு வலிக்கி நேர்ந்துக்கிட ஊர்ல கண்ணாத்தா கோயில்னு இருக்குதாமே, தெரியுமா? என்று கேட்டாள்.’ அந்த இடத்தைக் கடக்கும் பாண்டியனுக்கு ஏனோ நினைவு வருகிறது.
ஆண்டியப்பப்பிள்ளை தான் வட்டிக்கடைக்கு பெட்டியடி ஆளாக வந்த பழைய கதையைச் சொல்லி வரும்போது அண்ணாமலைப் பிள்ளை இடையீடு செய்கிறார். தகவலை நேராக்க. காலக்குறிப்பு பற்றி பேச்சு இவ்வாறு அமைகிறது.

“நான் மூணாங்கணக்கு மைடானுக்கு வரச்சே, பிலவான்ல நாலு நாள் கப்பலைவிட்டு இறங்கக் கூடாதுன்னு சொல்லிப்பிட்டான்.” சோறு நிறைந்த வாயுடன், ‘உப்புகண்டம்‘ அண்ணாமலைப் பிள்ளை கூறினார். “அப்ப, மலாய் டாப்புல கால்ராவோ என்னமோன்னு சொன்னாங்ய, அது, ம்ம்… தொள்ளாயிரத்தி முப்பதோ முப்பத்தி ஒண்ணோ நினைப்பில்லை – கொப்பனாபட்டி நாவன்னா மூணா மார்க்கா நொடிச்ச வருசம்.”
“நாவன்னா மூனா மார்க்கா நெடிச்சது முப்பத்தி ஒண்ணு” அங்கமுத்து தெரிவித்தான். “அந்த வருசந்தான் அவுக பினாங்குக் கடையில பெட்டியடிக்கி வந்தேன்.”

தமிழர்களின் இந்த உரையாடல் முறையே இன்று அழிந்துபோய்விட்டதோ என்று தோன்றுகிறது. எல்லா உரையாடல்களையும் ஒரே மாதிரி ஆக்கிவிட்டன ஊடகங்கள். தமிழரின் உரையாடல் நுட்பங்களை அறிய இதுபோன்ற செவ்வியல் நாவல்களைத்தான் நாடவேண்டியதிருக்கிறது.
தமிழ்ப்பெண்ணை ஜப்பான் மேஜர் தூக்கிச்செல்கிறான். இதுபற்றி கடையில் இருப்பவர்கள் நவீன – புராணிக மொழியில் பேசிக் கொள்கின்றனர்.

“போன வாரம் இந்தியா – ஜப்பான் உறவு மிகமிக ஆபத்தான கட்டத்துக்குப் போய்விட்டது. இம்மி தப்பியிருந்தாலும் யுத்தம்தான். முழு விபரம் வேண்டுமென்றால் மாணிக்கத்தைக் கேள்.” பழனியப்பன் முகம் முறுவலித்தது.
“சொல்லவா?” மாணிக்கம் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

“சொல்லித் தொலை” செல்லையாவின் முகத்தில் மெல்லிய புன்னகை தோன்றி மறைந்தது.
“சரி, வயிற்று மணி அடிக்கப்போகிறது. சுருக்கமாகச் சொல்லி முடிக்கிறேன். போனவாரம் வௌ;ளிக்கிழமை நண்பகலில், சையாம் சாலைக் கனகவல்லியைக் கெம்பித்தாய் மேஜர் கெனியோச்சி இச்சியாமா தூக்கிச் சென்றுவிட்டான்.”

“தொலையட்டும், மூதேவி. நீதான் ராமன் இருக்கிறாயே, கொரில்லாப் படையுடன் போய் மீட்பதுதானே?”
“இது மலேயா ராமாயணம்; நினைவிருக்கட்டும். ராவணன் வாரித் தூக்க வந்தான். சீதை என்ன செய்தாள்? ‘இதோ வருகிறேன், காதலரே! என்னைக் கட்டி அணைத்துத் தூக்கிக்கொண்டு போங்கள்’ என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள். அவனை நியூபீச் அசோகவனத்தில் கொண்டு போய்ச் சிறை வைத்துவிட்டான் லங்கேசுவரன்…”

“சையாம் ரோடுச் சீதை போனால், பட்டாணி தோடுக் கோதை என்று ராமர் பேசாமல் இருந்துவிட்டாரோ?”
நம் ஊர் கதையுலகம் வெவ்வேறு விதமாக மாறியதையும், அதையே சாதகமான விமர்சனமாக வைத்து நகையாடுகிறார். ‘கடலுக்கு அப்பால்’ நாவலில் வேறு சமாச்சாரங்கள் வேறு இடங்களில் தொடப்படுகின்றன. ஒரு பக்கம் மலாய்காரியை தமிழர் கூத்திகளாக வைத்திருக்கிறார்கள். மற்றொரு பக்கம் சின வியாபாரி தமிழ்ப்பெண்ணை கீப்புகளாக வைத்திருக்கிறான். ஒரு கலப்பு பண்பாடு மாறிக்கொண்டிருப்பதை நாவலில் பார்க்க முடிகிறது.

சிங்கம்புணரி பேச்சுமொழி இரு நாவல்களிலும் துள்ளிவிளையாடுகிறது. நாவலின் மிகப்பெரிய பலமாக இதைக் கருதுகிறேன். வியாபார நிமித்தமாக கப்பலில் பிளாங் செல்கிறார்கள். ஆவன்னா தான் இங்கு வந்ததை சொல்லிக்கொண்டு வருகிறார்.

“முவாருக்கு அம்புட்டும் உருப்படாத பயகளாப் போயிக் கடையக் கழுதைப் புரட்டாக்கிப்பிட்டாங்யளே… இந்தப் பயலை மேலாளுக்கு அனுப்பிச்சிப் பார்த்தால் என்ன… வயசு காணாது. நம்ம ஆளுகளும் கர்ருபுர்ரும்மா, ம்ம், இருக்கட்டும், அனுப்பிச்சிப் பார்ப்பம்…”

வட்டிக்கடையில் பற்றுவரவு சரிபார்த்தல் என்பது ஒரு தொழில்மறை. இதில் கணக்கு சரிபார்த்தல் என்ற முறையை உத்தியாகப் பயன்படுத்தி மனிதர்களின் புதிர்களைப், பண்பாட்டு மாற்றங்களைச் சொல்லி – கடைகளுக்கு வரும் நண்பர்களை முன்நிறுத்தி உரையாடலை வேறொரு தளத்திற்குக் கொண்டுசெல்கிறார். சொந்த விவகாரங்களோடு உலக விசயங்கள் பேச்சில் இணைந்து விடுகின்றன.

யுத்தச் சூழல், புலம்பெயர்ந்து வாழும் சூழல், புதிய பண்பாட்டுச் சூழல் எல்லாம் உரையாடலுக்கான அனைத்து சாத்தியங்களையும் திறந்துவைத்தே விடுகின்றன. சிங்காரம் இதனை இலக்கிய வெளிப்பாடாக மாற்றிக்கொண்டார்.
“முத்துசாமி பிள்ளை கைப்பெட்டியை நகர்த்திக் காலைப் பரப்பிக்கொண்டு கோப்பிக்கடை சீனர்களிடம் கேள்விப்பட்ட யுத்த வதந்திகளைக் கூறலானார். ‘பிரிட்டீஷ் படை வடக்கு மலேயாவில் தரையிறங்கி அலோர்ஸ்டார் நகரைப் பிடித்துவிட்டது. ஒரு சீனன் ஜப்பானியச் சிப்பாய் வேஷத்தில் போய், ஜெனரல் யாமஷித்தாவைச் சுட்டக்கொன்றுவிட்டான்.

மற்றப் பெட்டியடிக்காரர்கள் பிளந்த வாயுடன் மூனாவின் சேதிகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர். காளிமுத்துவின் வாய் பாண்டியனின் காதோரம் நெருங்கியது.

“இப்பக் கொஞ்சம் குணமாயிருக்குதண்ணே, எரிச்சல் குறைஞ்சிருக்கு. அந்த மருந்துதான் கிடைக்கல. பணமும் தடவல்.”

இந்தப் பெட்டியடி உரையாடலில் காளிமுத்து கமுக்கமாக தனக்கு வந்த பால்வினை நோய்க்கான மருந்தை சந்தடிசாக்கில் கேட்டுவிடுகிறான்.

போர்ச்சூழல் நிலமை தலைகீழான மாற்றத்தை உண்டாக்கிவிடுகிறது. இதை வாழ்ந்து கெட்டவர் தனது உரையாடலில் வெளிப்படுத்துகிறார்.

“பெரியவுக சொன்னதெல்லாம் அப்படி அப்படியே நடக்குது. பார்த்துக்கிணுதானே இருக்காய்… குப்பை உயருது; கோபுரம் தாழுது. பிளசர்ல போனவன் நடந்து திரியுறான்; நடந்து திரிஞ்சவன் ஏரப்ளான்ல பறக்கிறான்… உங்க தகப்பானரெல்லாம் எப்பேர்ப்பட்ட மனுசன்! சொன்ன சொல் தவறாத சத்தியவான். அவரெல்லாம்… ஹ்ம்… திருவிழாவிலே வேசம்போட்டு ஆடினவன்லாம் இன்றைக்கி உங்க ஊர்க் கடைவீதியில மனுசன்னி உட்கார்ந்திருக்கான்டா… அக்கரைச் சீமைச் சங்கதியும் அப்படித்தான் போச்சு… எல்லாம் காலக் கோலமுடாப்பா…”
தெருக்களும் கடைகளும் அதில் ஊடாடம் மனிதர்களும் இயக்கமும் சொல்லித் தீரமுடியாத விதத்தில் சொல்லப்பட்டுக்கொண்டே வருகின்றன. சிங்காரம் லேவாதேவி கடையில் ஊழியராக வந்ததும், தெருத்தெருவிற்குப் போய் வசூல் செய்யும் வேலை அமைந்ததும் மக்கள் இயக்கத்தை நெருக்கமாக கவனிக்க நேர்ந்திருக்கிறது. இது இந்நாவலின் அடிப்படைக்குப் பெரிய பங்களிப்பாக அமைகிறது.

பெட்டியடி பையனாக வந்து வட்டிக்கடை முதலாளியான வானாயீனாவின் வாழ்க்கையை பாவனையோடு கூடிய நான்குவரி எழுத்தில் சட்சட்டென வளர்த்தெடுக்கிறார். “ஆதியில், மேல்துண்டை இடுப்பில் சுற்றிக்கொண்டு லேவாதேவித் தொழிலில் புகுந்தார். அடுத்தாளானபின், துண்டு இடது கைப்பிடிக்கு உயர்ந்தது; அப்புறம், மேலாளான பிறகு, முழங்கை மடிப்பில் சிறிது காலம் தொங்கியபின், பட்டும்படாமல் தோளைத்தொட ஆரம்பித்தது. வானாயீனா மார்க்கா முதலாளியான பிறகுதான், மேல்துண்டு தோளில் நன்கு படிந்து இருபுறமும் தொங்கத் தொடங்கிற்று.”

புதுமைப்பித்தன் நடையைப்போல எள்ளல்தன்மை மிக்கது என்றாலும் ஒருவித நிதானமும், உள்ளத்தின் விழிப்பும், நுட்பமான விமர்சன தொனியும் கொண்ட எழுத்துவகை சிங்காரத்தினுடையது. புதுமைப்பித்தனைப் போல அவசர அவசரமாக எழுதாமல் சாவகாசத்தோடு எழுதுவதற்கான – நாவல் என்ற கலைச்சாதனத்தைக் கையில் எடுத்ததால் மிகச்சிறப்பான இலக்கியப் படைப்புகளாக உருவாக்கிவிட்டார். பத்திரிக்கையின் தேவையின் பொருட்டு அவசர அவசரமாக சிறுகதைகள் எழுதுவதை சிங்காரம் தவிர்த்ததால் நாவலில் அத்தனை அழகுகளையும் ஆழங்களையும் அவரால் கொண்டுவர முடிந்திருக்கிறது.

தெருவை விவரித்தாலும் அதில் படிந்திருக்கும் காலத்தின் சுவடுகளைச் சொல்லி தொழில் நிமித்தமாக ஓடும் மக்களைக் காட்டுகிறார். இதில் நேற்றைய ஆனந்த நினைவுகளின் அலையோ, நாளைய நிச்சயமற்ற தன்மையிலும் வாழவழிதேடும் முயற்சிகள் துடிப்பதையே நாம் காணும்படி சித்திரமாக்கி விடுகிறார்.
நேரடியாகவோ, ஒன்றைத்தொட்டு நினைவு கூறுதலின் வழியாகவோ செவி வழி கேட்டதாகவோ, புனையப்பட்டு உலவும் செய்தியாகவோ வேறு பல்வேறு மாந்தர்களின் வழி விசயங்கள் பரப்பப்படுகின்றன. விசயங்கள் எழுதப்படுதலை அல்ல மொழியப்படுதலையே உரையாடலில் கொண்டாடி வந்த தமிழ்ச் சமூகத்தின் வெளிப்பாடு இந்த நாவல், தமிழ் மனங்களின் ஊற்றுக் கண்ணைத் திறந்தவர் சிங்காரம். வட்டார மொழி நாவல் முழுக்கப் பெருகி வருகிறது. மதுரை பரப்பும், சிவகங்கை பரப்பும், மலேய, இந்தோனேசிய தேசங்களில் மிதந்தபடியே இருக்கின்றன. இந்த மண் மனத்தை அவர்களின் சிறுசிறு அசைவுகளிலிருந்தும் நீக்கமுடியாதபடி இருக்கிறது. இது 1940ஆம் ஆண்டு சமாச்சாரம் என்பதையும் கணக்கில் கொள்க. இன்றைய வெளிநாட்டு வாழ்முறையிலிருந்தல்ல.
பினாங் போகும் கப்பல் புயலில் சிக்கிக்கொள்கிறது. “மாரியும் காற்றும் கூடிக்கலந்து ஆடிக் குதித்துக் கெக்கலித்தன. அலையோட்டம் தெரியவில்லை. வானுடன் கடல் கலந்துவிட்டது. மழை தெரியவில்லை வளியுடன் இணைந்துவிட்டது. தொங்கான் தாவிக் குதித்து விழுந்து பம்பரமாய்ச் சுற்றுகிறது. வலப்புறம் இடப்புறம். அப்படியும் இப்படியுமாய்த் தாவிக் குதித்து விழுந்து திணறித் தத்தளிக்கிறது. எலும்புகள் முறிவதுபோல் நொறுநொறு நொறுங்கல் ஒலி. தலைக்கமேல் கடல்… இருளிருட்டு, இருட்டிருட்டு, கடல் மழை புயல் வானம். அருவியருவி உப்பருவி கடலருவி. மின்னொளி, கப்பித்தான் பொந்து தாவும் பேயுருவங்கள்…” இவ்விதம் அந்த அனுபவத்தை படைப்பெழுச்சியோடு எழுதிச் செல்கிறார்.

சிங்காரத்தின் இந்த நாவல்களில் நவநவமான அழகியல் வெளிப்பாடுகள் கொட்டிக் கிடக்கின்றன. ‘பகல் இரவாகிப் பகலாகி இரவாகியது’, ‘வாயில் தீயொளி வீசும் சிகரெட்’ இப்படி தெறிப்பான நடை; “மாலையில் குளக்கரை உள்தட்டு நெடுகிலும் நெருக்கமாய் அகல் விளக்குகள் எரிய, எண்ணற்ற தங்க வேல்களால் குத்துண்டதுபோல் தண்ணீர் குழம்பி மின்னும்‘ இப்படியான கவித்துவ காட்சிகள்; ‘எல்லாம் இடங்கால வாய்ப்புகளின் விளைவு’, ‘பாரத மக்கள் அனைவருமே கண்விழிப்பதற்கான முழு முதல் தேவை கடுமையான அதிர்ச்சி வைத்தியம்‘ இப்படி சிந்தனை தெறிப்பு; ‘அத்தறுதி’ முத்துக்கருப்பப் பிள்ளை, இரட்டை வீட்டு முத்துலட்சுமி, சொல்மாரி சோமசுந்தரம், விடாகண்டன் செட்டியார், குங்குமப்பொட்டு உலகளந்த பெருமாள் நாடார் இப்படி அடைப்பெயரோடு உலவும் மனிதர்கள்; ‘காங்கை’, ‘தாவோட்டம்‘, ‘மறுகோளிப்பயல்’ ‘அக்கிரமச்செலவு’, ‘அத்தாப்புவீடு’, ‘பவ்வநீர்’ இப்படி மண்வாசனையோடு வரும் வட்டார கலைச்சொற்கள், ‘ராயல் மன்மத சஞ்சீவி மாத்திரை’, ‘ஸ்கின்கிஸ் சோப்’ என விதம்விதமான விளம்பரப் பொருட்கள். பல விசயங்கள் கலந்து நாவலுக்குப் பேரழகைத் தருகின்றன.
கப்பலில் செல்கிறார்கள். இந்தப் பயணத்தில் மட்டும் எத்தனை கவனமான வரிகள் எழுதப்பட்டிருக்கின்றன என்று பாருங்கள். ‘கடலில் காறித்துப்பிவிட்டு வந்த நல்லக்கண்ணுக் கோனார் கூறினார். ‘கந்தகத் தண்ணி சனியன்’, ‘பக்கங்களில் மொத்து மொத்தென்று மோதிச்சிதறிய கடல் அலைகளின் ஓசை நேரே சீராய் எழுந்து தேய்ந்தெழுந்தது.’ ‘ஆற்றுவாயில் சகதிக் கலங்கலாயிருந்த பவ்வநிர் பச்சைமாகி ஊதாவாகி, நீலமாகி நீல்மைக்கும் கருமைக்கும் நடுமையமான கருநீலமாகி நின்றது.’

தினத்தந்தி என்ற செய்தி நிறுவனத்தில் பணியாற்றிய ப.சிங்காரத்தால் எப்படி இப்படி படைப்புமொழியைச் சாகசமாகக் கையாண்டார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. படைப்பூக்கம் மிக்க ஒரு மகத்தான கலைஞனுக்கு உரிய அங்கீகாரம் தராத இந்தத் தமிழ்ச்சூழல் அவரை மேற்கொண்டு எழுதவிடாமல் முடக்கி அழித்தது. ஒவ்வொரு நாவலும் எழுதப்பட்டு பிரசுரம் செய்ய ஆளில்லாமல் பத்தாண்டு பத்தாண்டு கழித்தே வெளிவந்திருக்கிறது. தமிழனுக்கு இதைவிட என்ன பாக்கியம் வேண்டும்!


2

ப.சிங்காரத்தின் படைப்பு மனம், மனிதமனங்களின் விசித்திரங்களைப் பல்வேறு விதங்களில் வென்றெடுத்திருக்கிறது. சில இடங்களை மட்டும் இங்கே தொட்டுக்காட்டலாம்.

 

உலக அரங்கில் ஜப்பான் தோற்கிறது. இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றி தமிழ் இளைஞர்கள் விலகிக்கொள்ள நினைக்கின்றனர். ராணுவ முகாமிலிருந்து பிரிந்து காட்டுவழியாக வருகின்றனர். தமிழ் படைக்கும் – ஜப்பன் படைக்கும் இடையே போர் நடக்கிறது. 22 தமிழர்கள் மாண்டு போகின்றனர். நல்லடக்கம் நடக்கிறது. இஸ்லாமியத் தமிழனுக்காக லெப்டினட் அப்துல்காதர் தொழுகை நடத்துகிறார்.

மற்ற தமிழர்களை ஐந்து ஜாத்தி மரத்தினடியில் நல்லடக்கம் செய்ய முனைகின்றனர். ஒரு வீரன் சொல்கிறான். “யாருக்காவது திருப்புகழ், தேவாரம் தெரியுமா?” என்கிறான். சுமத்ரா லேவாதேவிக்கடை ஒன்றிலிருந்து போராட வந்த சங்கப்பன் திருப்புகழ் தெரியும் என்கிறான். குரலை உயர்த்தாமல் பாடச் சொல்கின்றனர். வீரமரணம் அடைந்தவர்கள் முன் கை கூப்பி பாடுகிறான்.

“கருவினுருவாகி வந்து
வயதளவிலே வளர்ந்து
கலைகள் பலவே தெரிந்து மதனாலே
கரிய குழன் தங்கள் அடிசுவடு மார்புதைந்து
கவலை பெரிதாகி நொந்து மிகவாடி…..
பகையசுரர் சேனை கொன்று
அமரர் சிறை மீள வென்று…
தோள்களில் துப்பாக்கியை மாட்டியவாறு புதைகுழியைச் சுற்றிலும் கைசுப்பி நின்ற தமிழர்களின் மெய் சிலிக்கின்றன. கண்களில் நீர் சொரிகின்றன. காட்டிற்குள்ளிருந்து வந்த ஈரக்காற்று அவர்கள் முகத்தில் தழுவி சில்லிடுகிறது. படிப்பவர் நமக்கு கண்களில் கரைகட்டுகிறது.
வயிரமுத்துப் பள்ளை பிணாங்கில் வட்டிகடை வைத்திருப்பவர். அவரின் காலைநேர பூசையைப் படித்தால் சிரிப்பு வரத்தான் செய்கிறது.

“பச்சைக் குண்டஞ்சுக்கரை வேட்டியைத் தார்மடிவைத்துக்கட்டி, பனியனுக்குள் உடலைச் சொருகினார். “வேல் மயிலம்! முருகா!” தண்ணீர்மலையான் கோயில் திருநீறு பட்டை பட்டையாய் நெற்றியில் ஏறியது. கோவணாண்டியாய்க் காட்சியளித்த முருகப்பெருமான் படத்துக்குக் கீழே போய் உட்கார்ந்து, கைகூப்பிக் கண்ணை மூடினார். பாட்டுக்கிளம்பியது.

“சீர்சிறக்கு மேனி பசேல் பசேலென
நூபுரத்தின் ஓசை கலீர் கலீரென…
“மரகதம்! அந்தப் பய கருப்பன் வந்திட்டானா?”
“அவர் இன்னும் வரலைப்பா.”
“நூபுரத்தின் ஓசை கலீர் கலீரென…
“மரகதம்! குழாயடியில் சாவிய வெச்சிருக்கனான்னிப்பாரு.”
“கலீர்கலீரென, சேரவிட்ட தாள்கள்…
“காமாச்சி! அந்த கிராணி சம்சாரத்துக்குக் கொடுத்த கைமாத்து வெள்ளி வந்திருச்சா?”
“இன்னமில்லை. நாளைக்குத் தரமுன்னிச்சு.”
“சேகரத்தின் வாலை சிலோர் சிலோர்களும்…
வயிரமுத்துப் பிள்ளையின் திருப்பகழ் முழுக்க வட்டிப்புகழாகத்தான் வெளிப்படுகிறது.

தமிழ்நாட்டில் இருப்பது போன்ற தோற்றத்தை, வியாபாரத்தளங்களின் இயக்கத்தை அந்நில மண்ணில் எழுதும்போது ஒரு கவர்ச்சியைக் கொடுக்கிறது. சைக்கிளை எடுத்து தெருவிற்குக் கொண்டுவருவதுகூட ஒரு வசீகரத்தைத் தருகிறது.

வயிரமுத்துப் பிள்ளையின் மனைவி காமாட்சி, மகள் மரகதம் பினாங்கைப் பார்த்துவிட்டுப் போக வந்தவர்கள். யுத்தத்தில் ஊர்த் திரும்பமுடியாமல் மாட்டிக்கொள்கின்றனர். மரகதம் தினம் மஞ்சள் பூசி குளிப்பதைப் பக்கத்துவீட்டுப் பெண்கள் கேலி பேசுகின்றனர். அம்மா மஞ்சளின் பெருமையைச் சொல்லி, பூசிக் குளிக்க வைத்து விடுகிறாள். சின்ன விசயத்தில்கூட பிறரின் மனம் எப்படி இருக்கிறது என்று சொல்லிவிடுகிறார்.

நல்உணர்ச்சியின் சில உச்சங்கள் ஐரோப்பிய நாவல்களைவிட தமிழ் நாவல்களில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கின்றன. ‘கடலுக்கு அப்பால்’ நாவலில் செல்லையா மரகதத்தின் காதல் தீய்ந்து போகிற நிலையிலும் அவர்களின் இதயங்களில் மேன்மையான அன்பு வெளிப்படுகிறது. இங்கு இதற்கு உதாரணம் தரவில்லை. வாசகர்கள் படித்துப்பார்க்கட்டும்.

வயிரவன் பிள்ளை தன் மகளின் காதலைப் பக்குவமாக ஒழித்துக்கட்டி விடுகிறார். அவர் ஒரு கடுமையான யதார்த்தவாதி. தமிழர்த் தந்தைமார்களின் இதயம் என்று அவரைத்தான் குறிப்பிடவேண்டும். மிகச்சிறப்பான முறையில் உருவான பாத்திரம். அவர் தனது நியாயத்தில் அசைந்து கொடுக்காத நங்கூரமாக இருக்கிறார். காதலுக்கு எதிரி அல்ல அவர். காதலிக்கிறவன் குடும்ப வாழ்க்கைக்குப் பொறுப்பானவன் அல்ல என்று நினைக்கிறார். அவர்மீது வெறுப்பு தோன்றுவதில்லை. இந்தப் பிடிவாதம் ஆகாதுசாமி. விட்டுத்தந்தால் என்ன என்று கேட்க மட்டுமே தோன்றுகிறது. கொஞ்சம் பிசகினாலும் வில்லத்தனம் ஆகிவிடும். சிங்காரம் அவரின் கண்களிலிருந்து பார்க்கத் தெரிந்த படைப்புகில்லாடி. அதனால் ரத்தமும் சதையுமான மாந்தராக நிறுத்திவிட்டார். வயிரமுத்து பிள்ளையின் நியாயத்தைப் பார்க்க வேண்டுமல்லவா!

“இடது கை தலையைத் தடவியது. ‘செல்லையாப் பய இப்படி மோசம் பண்ணிப்பிட்டானே. என்னமெல்லாம் நினைச்சிருந்தம், காலிப்பயகளோட சேந்து பட்டாளத்துக்குப் போனதிலயிருந்து கழுதையாப் போனான். நெஞ்சைத் தூக்கிக்கிணு திரியிறானே, இப்படியிருந்தால் இந்தத் தொழிலுக்கு லாயக்கப்படுமா? எதிரி நாலு போடு போட்டுப்பிட்டாலும், வாயைவிடாமல் காரியத்திலயில குறியாயிருக்கணும். சப்பான்காரன்னா கர்பங் கலங்கும். அவங்யளப் போயிகொன்னு குமிச்சிருக்கானே, என்ன ஏத்தம், ம்ம்ம்… அது பத்தாதுன்னி மில்ட்டேரி தொரையப் பிடிச்சி அடிச்சிருக்காங்ய. நாளைக்கு நம்மள்ளாம் எம்மாத்திரம்? ஒன்னு ஆனாப் போனால் என்னமாச்சும் சொல்ல முடியுமா… இவன் தொழிலுக்கு லாயக்குப்படமாட்டான். டுப்பாக்கி பிடிச்ச பய டப்புடுப்புன்னித்தான் புத்தி போகும். இந்த வயசிலயே நானுங்கிற ஆங்காரம் வந்திருச்சே. அதுனாலத்தானே சண்டைக்கிப் பாய்ஞ்சிருக்கான். இங்லீஸ் படையே சப்பான்காரனைக் கண்டு கால்கிளப்பி ஓடுச்சி. நீ என்ன லாடு கிச்சனர் மகன் கெட்டுப் போனாய்… மறிச்சான்னா, வெலகிக்கிணு போறது. இல்லாட்டி கால்ல விழுந்து கெஞ்சிக் கேக்கிறது. எங்க தாய்பிள்ளையப் போய்ப் பார்க்கணுமினு. நானுன்னி முன்னால நிக்கிறதுக்கு அப்பிடி எத்தினி கோடி சம்பாரிச்சுக் கொடிகட்டிப் பறக்கவிட்டிருக்காய். அப்படித்தான் நீ என்ன பவுண்தாஸ் சேட்டா, இல்லாட்டி ராசாச் செட்டியாரா…
… பணம் சம்பாரிக்கிறதின்னாச் சும்மவாயிருக்கு. பர்மா டாப்புல நான் அடுத்தாளுக்கு இருக்கச்சே, வசூலுக்குப் போன எடத்தில எத்தினி பர்மாக்காரன் கைநீட்டி அடிச்சிருக்கான். வாயைத் தொறப்பானா… ம்ம்ம்… இந்தப் பயன்னாக்கா பெரிய பட்டாளத்து நாய்க்கராட்டம் பாய்ஞ்சிருக்கான். பாய்ஞ்சு என்ன செய்ய? நம்ம பணம்தான் போகும். வீரியமா பெருசு, காரியமில முக்கியம். இந்தத் தொழிலுக்கு அடக்கமில வேணும். நானுன்னி நெஞ்சைத் தூக்கிக்கினு திரியிறதுக்கு இதென்ன கவர்மெண்டு வேலையா… சப்பான்காரன் சங்கதியவும் மில்டேரி தொரை சங்கதியவும் காமாச்சிட்டாச் சொன்னா, ‘இப்பவே அடிச்சி விரட்டுங்க’ன்னி ஒத்தைக் கால்ல நிப்பா. பாவம், நாமள் கூட்டியாந்த பிள்ளை, நம்மளால கெட்டதாயிருக்கக் கூடாதின்னி நாமள் பார்க்குறம்…”

வயிரமுத்துபிள்ளை எங்குபேசினாலும் அவர் அவராகத்தான் இருக்கிறார். ப.சிங்காரம் காதலனாக நின்று அவரைப் பார்க்கவில்லை. அவரை பணம் மீது பற்றுக்கொண்ட எல்லா தந்தைமார்களைப் போல் ஒரு தந்தை என்ற நிலையில் இருந்து பார்த்ததால் நேசித்து எழுதமுடிந்திருக்கிறது. இவரது மகளைக் காதலிப்பவன் தான் செல்லையா. இதில் வயிரமுத்து பிள்ளைக்கும் உள்;ரவிருப்பம். அது ராணுவத்தில் சேரும் முன்புவரை.

‘கடலுக்கு அப்பாலி’ல் வரும் செல்லையாவின் தொடர்ச்சிதான் புயலிலே ஒரு தோணியில் வரும் ‘பாண்டியன்’. செல்லையவின் மனப்போக்கு பணத்தைச் சேமிக்க முடியாது என்ற கணிப்பு ஓரளவு சரிதான். ஆனால் ராணுவத்தில் உயிர்பயம் இல்லாமல் சாகசங்களில் துணிந்து ஈடுபடுகிற வீரனுக்கு பணம் வந்துகொட்டும் என்பதற்குப் பாண்டியன் உதாரணமாக இருக்கிறான். வயிரமுத்து பிள்ளை போன்றவர்களுக்கு இது ஒரு பதில்தான். இந்தப் பணத்தை பாண்டியன் போற்றவில்லை. தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் ஒரு போராட்டத்தில் குதிக்கிறார். லட்சியம் பலரை குறுக வைக்கிறது.

‘புயலிலே ஒரு தோணி’ நாவலில் வரும் சுந்தரம் பணத்திற்காக உடன் போராடிய நண்பர்களைக் காட்டிக்கொடுக்கிறான். உல்லாசமாக இருக்கிறான். மாட்டிக்கொள்கிறான். பாண்டியன் தலைமையில் நான்கு நண்பர்கள் திட்டம்தீட்டி தீர்த்துக்கட்ட சுற்றி அமர்ந்திருக்கின்றனர். திவான் கடையிலிருந்து ‘பண்டித மோதிலால் நேருவை பறிகொடுத்தோமே’ என்ற சுந்தரம்பாள் பாடல் ஒரு முரண் நகையாக ஒலிக்கிறது. சாவு பயத்திலும் சுந்தரத்திற்கு வேறொரு நினைப்பு வருகிறது. “வயிறு கிள்ளுகிறது… சிங்லியோங்கில் பீபியும் ருமீலாவும் காத்திருப்பார்கள்” என்ற நினைவு வருகிறது. இந்த மனத்தை என்னவென்பது? இப்படியான மானிட மர்மத்தை நெருக்கடியான சூழலிலும் வெளிப்படுத்துகிறார்.

தான் செய்த துரோகத்திற்குப் பொறுப்பேற்று சாகும் தருவாயில் வீரனாக இருந்து இந்த மரணத்தை ஏற்றுக்கொள் என்று நிர்பந்தம் செய்கிறார்கள். சுந்தரம் திரும்பத் திரும்ப ‘காப்பாத்துங்கண்ணே’ என்றுதான் கெஞ்சுகிறான். வாழ்ந்துவிட வேண்டும் என்றுதான் உள்ளம் துடிக்கிறது. படைப்பெழுச்சியில் உச்சமாக வெளிப்பட்ட அத்தியாயங்களில் இதுவும் ஒன்று.

பாண்டியனுக்குப் போர்முனையில் மரணம் சம்பவிக்கிறது. இத்தருணத்தில் மனதில் அடியாழத்தில் ஓயாமல் அலையடித்த சின்னமங்கல கிராமத்து நினைவுகளும், மதுரை நகர நினைவுகளும் மிதந்து வருகின்றன. பிறந்த பூமியிலும் புலம்பெயர்ந்த பூமியிலும் நிலைகொள்ள முடியாது புயலில் சிக்கிய தோணிபோல நிஜத்திற்கும் – நினைவிற்கும் அலைவுற்றபடி மரணிக்கிறான்.

இளைப்பாற விரும்பிய ஒரு இளம் போராளியின் மரணம் காவிய சோகத்தோடு முடிவுபெறுகிறது. மரணத்தின் கரங்களில் அமர்ந்துவிட்ட நொடியில் அவன் எதை விரும்பினான் என்பதை அறியமுடிகிறத. கள்ளம்கபடமற்ற அவனது குழந்தைப் பருவம் சிரிப்போடும் வியாபாரத்தில் வெற்றியடைந்த கூவலோடும் வருகிறது. அந்த அழகிய உலகைத்தான் நேசிக்கிறான். தமிழ்ப் பண்பாட்டின் அந்த இழைகளையும் பின்னியபடி அசையும் நாவல் புயலிலே ஒரு தோணி.


சு.வேணுகோபால்

3

போரையும் போர்க்கால சூழலையும் நேர்முகமாகக் கண்டவர் ப.சிங்காரம். அப்போது வயது 20. சாகசத்தின் மீது பேரார்வம் கொள்ளும் வயது. விடுதலையின் மீதும் மானுடத்தின்மீதும் கொள்ளும் தீவிர காதல் வயது. இந்தப் பேரார்வம் காலத்தோடு தன்னை ஓர் அங்கமாக்கிக் கொள்கிறது. நேரடியாகப் போர்முனையில் இல்லையென்றாலும் அந்தக் கனவு ஒரு போர்வீரனைவிட பல்வேறு விருப்பங்களில் ஊடுபாய்கிறது. இதனால் போரைப்பற்றி இன்னும் இன்னும் ஆர்வத்தோடு அறிந்துகொள்ள முயன்றிருக்கிறார். போரிடும் இடங்களிலும் சரி, பின்வாங்கும் இடங்களிலும் சரி, தோல்வியிலும் சரி, வெற்றியிலும் சரி, இந்தப் பின்னலில் மனிதர்களின் செயல்பாடுகளும் சரி ஒரு அசாதாரண எல்லைக்குச் செல்கின்றன. இதையெல்லாம் சிங்காரம் கற்றிருக்கக்கூடும். ஜெர்மன், ஜப்பான், ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து முதலிய நாடுகளில் போரில்கண்ட படிப்பினைகளை வெற்றி தோல்விகளை வரலாற்று உணர்வோடு படித்திருக்கிறார். இதன்சாரம் இந்த நாவலுக்குள் தொழில்பட்டிருக்கிறது.
ஓரிடத்தை மட்டும் இங்கு சுட்டிக்காட்டலாம். விடுதலை இயக்கத்தில் தொடர்ந்து செயல்படாமல் நண்பர்கள் ஒதுங்கிக்கொள்கின்றனர். பாண்டியன் தொடர்ந்து செயல்பட விரும்புகிறான். இதற்கு அவனது வாசிப்பும் ஊக்கத்தைத் தருகிறது. பாபரைப் பறிய நூல் ஒன்றைவாசிக்கிறான். அதில் ஒரு பகுதி அவனைக் கவர்கிறது.
“இந்தியாவில் மொகலாயப் பேரரசுக்கு வித்திட்ட பாபர் எந்த ஊரிலும் இருமுறை ரம்ஜான் பண்டிகை கொண்டாடியதில்லை; ரம்ஜான் கொண்டாடாமல் இருந்ததுமில்லை. கங்கை உட்பட எதிர்ப்பட்ட ஆறுகள் அனைத்தையும் இருமுறை குறுக்கு மறுக்காக நீந்தியிருக்கிறான். எப்போதுமே செயல் பரபரப்பில் ஈடுபட்டிருந்ததால் அவனுக்கு ஒருபோதும் மனக்குழப்பம் தோன்றியதில்லை.”

இப்பகுதி பாண்டியனை புதிய மனிதனாக்குகிறது. பாண்டியன் பாத்திரப்படைப்பின் பொருத்தம் கருதி இதனை வாசிப்பதாக எடுத்துவைக்கிறார். மற்றபடி வாசிப்பு வரலாற்று உணர்வை ஊக்கியிருக்கிறது என்று சொல்ல மட்டும்தான்.

இந்த நாவலில் வரும் பாண்டியனைத் தன்னின் அடையாளமாக வெளிப்படுத்திக் கொண்டார் என்றே நினைக்கிறேன். இன்னின்ன இடங்களில் தான் இருந்திருந்தால் இப்படி வெளிப்படுத்திக்கொள்ள முடிந்திருக்கும் என்று நம்புகிற மனதுதான் இந்தப் பாண்டியன். அதிகார தோரணை கொடுக்கும் ‘சிகரெட் பிடித்தல்’ என்பதைக்கூட சிறுவயது சிங்காரம் கைக்கொண்டிருக்கலாம். பெரும்பாலும் ராணுவ அதிகாரிகள் சிகரெட் பிடிப்பதின் நோக்கம் இதுவாகக்கூட இருக்கலாம்.

ராணுவ முகாமில் பலவேசமுத்துவை ரக்பீர்லால் அடித்து துவம்சம் செய்துவிட்டான் என்று கேள்விப்பட்டதம் பாண்டியன் மின்னல் வேகத்தில் வந்து தாக்குகிறான். வீழ்த்துகிறான். அதே சமயம், கறாரான யதார்த்தத்தையும் நேர்முகமாக சந்திக்கிறான். இந்திய தேசிய ராணுவத்தில் தான் ஒரு கமாண்டோ காப்டன் என்று தன்னை ஜப்பானிய கீழ் அதிகாரியிடம் அறிமுகம் செய்கிறான். அவன் பலத்த சிரிப்பொன்றை வெளிப்படுத்திவிட்டு, “இந்திய தேசிய ராணுவத்தில் கமாண்டோ அணிகளோ காமிகாஸே பிரிவே கிடையாது. உன்னை மீண்டும் மந்தையில் சேர்க்கவே இந்த உபாயம்“ என்கிறான். இதுதான் உண்மையான நிலவரம். நாவலில் சாதாரண ராணுவவீரனாக இருந்து கொரிலா படைக்கே இறுதியில் தலைவனாகிறான் பாண்டியன். இது தீரத்தின் கனவு. அல்லது கொரிலா தலைவனாக இருந்த ஒருவனை பாண்டியனாக்கியிருக்கும் புனைவு. விடுதலைப்போரில் தமிழர்களின் பங்களிப்பை மேம்பட்ட நிலையில் பார்க்கவேண்டும் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு.
இப்படிச் சொல்வதால் பாண்டியன்தான் ப.சிங்காரம் என கொள்ளக்கூடாது. பாண்டியன் அவரது கனவு. பல்வேறு வீரதீர இளைஞர்களின் இணைவு. தான் ஒரு ஆண் என்ற மனநிலை பல இடங்களில் பாண்டியனிடம் வெளிப்படுகிறது. ஒரு ராணுவ அதிகாரி எப்படி வெளிப்படுத்திக் கொள்கிறானோ அப்படி சில இக்கட்டான இடங்களில் முரட்டுத்தனமாகப் பேசுகிறான். ராணுவ நடைமுறையில் கண்டு கேட்டு உணர்ந்த நல்லவனும் கெட்டவனுமான புனைவு பாத்திரம்தான் பாண்டியன். இந்த நூலில் வரும் பாண்டியனை சே குவேராவுடன் ஒப்பிடலாம். மானுடவிடுதலை, சமதர்ம கனவு தீராத தாகத்தோடு இயங்குகிறது. மனிதன் என்ற வகையில் ஆசாபாசங்கள் கூடிய ஒரு லட்சியவாதி, கியூபா விடுதலைக்குப்பின் குவேரா பொலிவியா விடுதலை இயக்கத்திற்குத் தாவுகிறார். போர்முனையில் அவர் என்ன நினைத்தார்? சொல்லப்படாத பகுதி இருக்கலாம். பாண்டியன் கொரில்லா படைக்கு தலைமையேற்று டச்சுப்படைகளை மூன்று இடங்களில் சிதறடிக்கிறான்.

என்றாலும் எளிய வாழ்க்கை முறையிலிருந்து பிரிந்து காட்டில் கிடப்பது அலுப்பையும் அந்நியத் தன்மையையும் உண்டாக்குகிறது. எல்லோரையும் போல அமைதியான வாழ்க்கை வாழவேண்டும் என்று மனது ஏங்குகிறது. போர் முகாமிலிருந்து விடுபட்டு சின்னமங்கலம் செல்லவும் முயல்கிறான். இந்த இடம் முக்கியமானது. வெளியிலிருந்து ராணுவவீரர்களை நாம் பார்ப்பதற்கும், உள்ளிருந்து அவர்கள் பார்ப்பிற்கும் வித்தியாசம் இருக்கிறது. லட்சியவாதிக்குள் ஏற்படும் எளிய ஆசையைத் தொடுகிறார். இதுதான் படைப்பு மனம் என்பது.

பெண்களை பாண்டியன் போன்ற இளைஞர்கள் தங்கள் பேச்சில் புழுபோல பார்த்தாலும் அதே பெண்களை அவர்களுடைய கோணத்திலிருந்து பேசவைத்திருக்கிறார். அவர்கள்படும் துன்பம், ஏமாற்றம், விருப்பம் பற்றியும், அழகு, வெறுப்பு பற்றியும், வாடிக்கையாளர்களின் அசிங்கத்தையும் மனம்விட்டு பேசுகின்றனர். ஆயிஷா, விலாசினி போன்ற பெண்கள் தங்களுக்குப் பிடித்தமான ஆண்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசுகின்றனர்.
தமிழ் நாவல் வரலாற்றில் ‘புயலிலே ஒரு தோணிக்கு’ தனித்த இடம் உண்டு. குடும்பப் பின்னணியில் இயங்கிய நாவல் உலகை பொதுவெளியில் அதுவும் புலம்பெயர்ந்த பூமியில் மானிட உலகை திறந்த முதல் நாவல். தமிழ் நாவல் மரபை உடைத்து புதுமரபைத் தோற்றுவித்த நாவல். எம்.கல்யாணசுந்தரத்தின் ‘இருபது வருடங்கள்’, சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்‘ ராஜம்கிருஷ்ணனின் ‘குறிஞ்சித்தேன்’ டி.செல்வராஜின் ‘தேநீர்’ சுந்தர ராமசாமியின் ‘புளியமரத்தின் கதை’, சா.கந்தசாமியின் ‘சாயாவனம்‘, ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றும் ஒரு நாளே’, அசோகமித்திரனின் ‘பதினெட்டாவது அட்சக்கோடு’ போன்ற நாவல்கள் குடும்பத்திற்கு வெளியே இயங்கினாலும் ஏதோ ஒரு பிரச்சனையை மையமிட்டுச் சுழல்கின்றன. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’யில் பல்வேறு பிரச்சனைகள் நாவல் என்ற மையத்திற்குள் வந்து சுழல்கின்றன. அவை விவாதத்திற்குள்ளாகின்றன.

யுத்தச் சூழலில் மனிதர்களிடம் ஏற்படும் அச்சம், மர்மம், வியூகம், சந்தர்ப்பம் எல்லாம் ஒன்றுதிரண்டு நாவலைக்கொண்டு செலுத்துகிறது. தமிழர்களோடு பல்வேறு தேசத்தவர்களின் ஓட்டங்களை அரவணைத்துப் புத்தம் புதிதான அனுபவ உலகை இந்நாவல் தருகிறது. அதே சமயம் மனதிற்கு நெருக்கமாகவும் இருக்கிறது. இங்கு தமிழர்களோடு தெலுங்கர், கன்னடர், இசுலாமியர், மராட்டியர் கலந்து வாழ்வதுபோல, மலேய, சீன, இந்தோனேசியர்களோடு தமிழர்கள் இயங்குவது இயல்பாகவும் சகஜத்தன்மையோடும் தோற்றம் கொள்கிறது. இது 1940களின் சித்திரம் என்பது மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும்.

இந்த நாவலின் இயக்கம் ஒற்றைத்தன்மையில் இல்லாமல் நாலாபக்கமும் விரிந்து பரவுகிறது. யுத்த பின்னணி உண்டாக்கும் மர்மத்தைச் சிங்காரம் நவநவமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

காதலர்கள், குடிகாரர்கள், வேசையர்கள், ரிக்ஷக்காரர்கள், மலேயகுமரிகள், கடை பையன்கள், சீனச்சிறுவர்கள், விளம்பர நடிகைகள் என எத்தனையோ மனிதர்கள் அவர்களின் வேலைகளோடு நாவலின் ஓட்டத்தில் சாதாரணமாக ஊடாடுகின்றார்கள். இந்தச் செறிவு வேறு எந்த தமிழ் நாவலிலும் கூறவரவில்லை.


4

போர்ச்சூழலில் பல தமிழ் நாவல்கள் வந்துள்ளன. நான் படித்தவரை அந்த நாவல்கள் உண்மையின் அருகில் வர முயற்சிக்கின்றன. காரணம் எழுதியவர்களுக்கு நோடி அனுபவம் இல்லை. நேரடி அனுபவம் இருந்தும் வாழ்க்கை பறிய பார்வை இல்லை. சிறிய அனுபவத்தை மூலாதாரமாகக் கொண்டு கேள்விப்பட்டவற்றை, அறிந்தவற்றைத் தொகுத்துக்கொண்டு கதை ரூபத்தில் சொல்வதாக இருக்கின்றன. இதற்கெல்லாம் அப்பால் விசயங்கள் படைப்பெழுச்சியால் தீண்டப்படாமல் அடுக்கப் பட்டிருப்பதும் ஒரு காரணம். சிங்காரத்தின் எழுத்து உண்மையின் உள்நின்று இயங்குவதாக இருக்கின்றது. அவர் மரபான எல்லா கவசங்களையும் கழற்றி வைத்துவிட்டு எழுதுகிறார்.

எழுத்துக்கான இந்த அடிப்படை அவரின் இயல்பில் பெருகி வருகிறது. தமிழில் எழுதப்பட்ட போர் இலக்கியத்தில் ‘புயலிலே ஒரு தோணி’ போல மற்றொரு மிகச்சிறந்த நாவல் தமிழில் இல்லை. வாழ்க்கையை விமர்சனப் பூர்வமாக அணுகியதால் இந்த வெற்றி சாத்தியமாயிற்ற எனலாம்.

சைலேந்திரனின் ஆட்சியை வீழ்த்தி சோழரின் ஆட்சியை நிலைநாட்டிய தெற்காசிய நாடுகளில் சீனர்களின் செல்வாக்கு உயர்கிறது. சீனர்களுக்குச் சொந்தமான கப்பல், கடைகள், மாளிகைகள் ஓங்குகின்றன. தமிழரின் வீழ்ச்சி நிகழ்ந்தேறுகிறது. 2000 ஆண்டு தமிழ்ச்சமூக அரசியல் வரலாற்றில் சில பேரலைகள் பாண்டியன் வாயிலாக புரளுகின்றன. ஏற்றத்தையும் சரிவையும் சொல்லி விமர்சிக்கப்படுகின்றன. பன்முகக் குரல்களுக்குத் தன்னை திறந்து வைத்த முதல் தமிழ்நாவல் இது.

லேவாதேவி கடை நடத்தும் அனைத்து தமிழ்ச்சாதியினரும் அங்கு செட்டிகளே. செட்டிகளின் வைப்பாட்டி உலகத்தை விதவிதமாகக் காட்டுகிறார். புதுக்கோட்டை, நாட்டரசன்கோட்டை ஊர்களில் செட்டிகளின் தானதருமம், கஞ்சத்தனம், மருமக்களின் ஆர்ப்பாட்டம், தத்தெடுக்கப்பட்டவர்களின் ஜாலம், நிர்வாகத்திறமை, பொறுப்பற்றத்தன்மை, குதிரைப் பந்தயமோகம், காமகளியாட்டம், ஏமாளித்தனம், வைப்பாட்டிகளுக்கு இரைக்கும் கூத்து, ஊதாரித்தனம், கைதூக்கிவிட்டவர்கள் இந்த உலகம் விரிவாகப் பேசப்படுகிறது.

தொழில் நிமித்தமாகப் புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு சொந்தமண்ணின் பண்பாட்டு நிகழ்வுகளும் அந்த மனிதர்களின் விசேசமான குணங்களும் நினைவுகளில் ததும்பியபடியே இருக்கின்றன. பிழைக்கவந்த அந்நிய தேசத்தில் தமிழ் அடையாளங்களோடு வாழ்கின்றனர். இந்த முதல் தலைமுறையிலிருந்து பண்பாட்டு மாற்றம் இரண்டாம் தலைமுறைகளில் தென்படத் தொடங்குகின்றன. அதே சமயம் மலேய, இந்தோனேசிய மண்ணில் இருக்கும் மூன்றாம் தலைமுறை வழிவந்த தமிழர்கள் மனங்களில் சிராவயல் ஜல்லிக்கட்டு, மதுரை தெப்பக்களும், வைகை ஆறு, காரைக்குடி தோட்டங்கள், சந்தைகள், மதுரை மீனாட்சி… இடங்களின் வசீகரம் கொள்கின்றன. ஒருமுறையேனும் தமிழ்நாட்டிற்கு வந்து எல்லாவற்றையும் பார்த்துவிட நினைக்கின்றனர்.

பாண்டியனுக்கு மதுரையும் சின்னமங்கலமும் ஓயாத அலைகளாக புரண்டபடியே இருக்கின்றன. சின்னமங்கலம் கிராமத்தின் சாயலை எல்லாம் கொண்டு வருகின்றன. மதுரை பிழைப்பின் பல்வேறு ரூபங்களைக் கொண்டுவருகின்றன. மதுரை விதவிதமான மனிதர்களால் நிரம்பி இருக்கின்றது. பல்பொடி விற்பவர், சோற்றுக்கடையில் சூடாக கழி உருண்டை சாப்பிட கூவுபவர்கள், தாதாக்கள், மாமாக்கள், மந்திரவாதிகள், கூடை வியாபாரிகள், இட்லிகடைகள், வேசிகள், நாடகக்காரர்கள், சினிமாரசிகர்கள் என யார்யாரோ வருகிறார்கள். சித்திரை நிலவுநாளில் வைகையாற்றில் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருக்கும் கிராமமக்கள், பேருந்துகளின் போட்டா போட்டிகளில் தூசி பறக்க வந்த வண்டிகளில் ஒன்று கண்மாய் நீரில் இறங்கி முந்திச் செல்கிறது.
சின்னமங்கலம் ஊரின் சந்தைபரபரப்பு, பள்ளிச்செல்லும் ஆராட்டம், தெருக்களில் நெல்கிண்டும் பெண்களின் பேச்சு. இளைஞர்களின் கிட்டி விளையாட்டு, கீழத்தெருவிலிருந்து வரும் உருமி சப்தம், செட்டிப் பையன்கள் சடைபோட்டு பூச்சூடு பள்ளிக்கு வரும் கோலம், நந்தவனம், கிறித்துவ தேவாலயம் என எத்தனையோ காட்சிகள் வருகின்றன.

சின்னமங்கலம், மதுரை ஊர்ப்படலம் மதுரைக்காஞ்சி போல இருக்கின்றன. முக்கியமான நிகழ்வுகள், முக்கியமற்ற நிகழ்வுகள் என்று வேறுபடுத்திவிட முடியாத நினைவுகளால் அலையடித்துக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொருவரின் வயதிற்கு ஏற்ப வந்து தாக்குகின்றன. இந்த நினைவுகளில் வரும் மனிதர்கள், இடங்கள் வாழ்க்கை முறைகள் மாறி இருக்கலாம். சிதைந்து உருமாறி இருக்கலாம். அழிந்து போயிருக்கலாம். புதிய பண்பாட்டு முறைகள் தோன்றி இருக்கலாம். குண விசேசங்களில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 1940களின் வாழ்க்கை இந்த கணம் நிகழ்ந்து கொண்டிருப்பதுபோல உயிர்பெற்று அசைகின்றன. மதுரை, சிங்கம்புணரி, சின்னமங்கலம், மெடான், பினாங், சிங்கப்பூர் ஊர்களில் மக்கள் எப்படி இருந்தனர்; எப்படியெல்லாம் தங்கள் அகத்தையும் புறத்தையும் வெளிப்படுத்திக் கொண்டனர்; தமிழர்களின் சொந்தபூமி, புலம்பெயர்ந்த பூமி என்ற இரு உலகங்களில் தங்கள் ஆசாபாசங்களை வெளிப்படுத்திக்கொள்கின்றனர். போர் நெருக்கடியும் நினைவுகளால் நிரம்பிய வாழ்க்கையும் நிச்சயமற்ற – நிம்மதியற்ற நிகழ்கால வாழ்க்கையும் மாறிமாறி உருள்கின்றன.
யுத்தம் என்ற புள்ளியில் மனிதர்களின் முன்பின்னான மனிதர்களின் தலைகீழ் மாற்றங்களை, மனதின் வேடிக்கைகளை ஆழ்ந்த எள்ளலோடு பேசுகிறார். இந்த மனிதர்களின் நிலையற்றத் தன்மை புதிய இருத்தல் பிரச்சனையாக உருவெடுக்கிறது. புயலிலே ஒரு தோணிபோல நிலையற்று நகர்கிறது.

இந்த நாவலை மனித சமூகத்தின் மாபெரும் இயக்கம் என்று சொல்லலாம். முன்னும் பின்னுமாக நிஜத்திலும் நினைவுகளிலும் காலம் மலர்ந்தாலும் அதில் தொழில்சார்ந்த இயக்கம் நிகழ்ந்தபடியே இருக்கிறது. இந்த இயக்கம் பணத்தை நாடியோ அதிகாரத்தை நாடியோ முன்னேற்த்தை நாடியோ புகழை நாடியோ, காமத்தை நாடியோ இயங்கிக்கொண்டே இருக்கிறது. வீழ்ச்சியும் எழுச்சியும் நேர்கின்றன. தீதும் நன்றும் பிறர்தரவாரா என்பதற்கு ஏற்ப அவரவர்களுக்கானப் பலாபலன்களை அவரவர்கள் பெறுகின்றனர். நம் நடத்தைகளுக்கு அப்பாலும் மாயக்கரங்கள் நம்மை தீர்மானிக்கின்றன. இதில் அபூர்வமாக சில உன்னதத் தருணங்களும் எரிநட்சத்திரம்போல வந்து போகின்றன.

மனிதமனமே சந்தைத் தனத்தால் ஆன உலகமாக மாறிவிட்டிருக்கிறது. பிறர் நலன் மங்கியே எங்கும் இருக்கிறது. இதை கலாப்பூர்வமாக ‘புயலிலே ஒரு தோணி’யில் கொண்டுவந்திருக்கிறார் சிங்காரம். வறண்ட பிரதேசத்தில் ஒரு பழக்காட்டை உருவாக்குவது போன்ற அரிய செயலைச் செய்ய பாண்டியன் முனைகின்றான். இது ஒரு விவசாய மனநிலையும்கூட, பாண்டியன் இதற்கு சம்பந்தமற்ற உலகிலிருந்து வந்திருந்தாலும்,
‘கடலுக்கு அப்பால்’ எளிய வாழ்க்கையிலிருந்து கிளம்பிவந்த இளைஞர்களின் தன்னெழுச்சியான இந்திய விடுதலைக் கனவைக் கொண்டது. இந்த இளைஞர்களின் எழுச்சிக்கும் – மூத்தோர்களின் தொழில் முன்னேற்றத்திற்குமான இடையறாத பனிப்போரை திறம்பட வெளிப்படுத்தியிருக்கிறார். நேதாஜியின் மரணமும், ஜப்பானின் தோல்வியும் திகைக்க வைக்கிறது. இராணுவ இளைஞர்கள் வழிகாட்டுதல் இல்லாமல் அவர்களுக்குத் தெரிந்த – விரும்பிய முடிவுகளை எடுத்து நிலைகொள்கின்றனர். சிலருக்கு இது நிலையற்ற சூனியத்தைத் தருகின்றது. யார் வென்றார்கள் என்ற தெளிவற்ற நிலை அந்தத் தேசத்தில் நிலவுகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விடுதலைக்குரலும் ஒலிக்கிறது. இந்த விநோத சூழல்தான் தமிழ் இளைஞர்களைத் திடமான முடிவுகளை எடுக்கவிடாமல் பண்ணுகிறது. மனதின் ஆழத்தில் திரும்பவும் இந்த இங்லீஸ்காரனை வெல்லமுடியும் என்ற நம்பிக்கையும் எழுகிறது. ஆனால் போர் நின்றுவிட்ட முடிவு ஏமாற்றமளிக்கிறது. தோல்வியைப் போரில் நேர்மிகமாகக் கண்டிருந்தால் அடங்கி ஒடுங்கி ஒரு வாழ்வை தேடியிருக்கமுடியும். வென்றிருந்தால் குடும்பங்களில் மதிப்பு கிட்டியிருக்கும். தோற்காமலே பிரிட்டீஸ் ஆட்சியின் கைப்பிடிக்குள் நிற்கவேண்டிய சூழல். யதார்த்தம் ஒரு பக்கம். கனவு ஒரு பக்கம். செல்லையாவின் வீழ்ச்சியை இந்த மாயச்சூழல் செய்கிறது.

வீரத்தனத்தை முற்றாகக் கழற்றி எறிந்துவிட்டு கணக்கு எழுதும் பையனாக அமரமுடியவில்லை. மனமெங்கும் நிரம்பியிருக்கும் காதலையும் துறக்க முடியவில்லை. அவனை யதார்த்தம் தோற்கடிக்கிறது. காதலை இழக்க வேண்டியதாகிறது. போராளிக்கு யதார்த்தம் தரும் மதிப்பின்மையைச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது ‘கடலுக்கு அப்பால்’ நாவல்.

போராளியாகச் சென்றுவந்தவனைக் குடும்பம் என்ற அமைப்பு பொருத்தமற்றவன் என்று வெளியே தூக்கி எறிவதை ‘கடலுக்கு அப்பால்’ நாவல் சொல்கிறது என்றால், போராளியாக இருப்பவனைக் குடும்ப அமைப்பு இழுக்க இழுக்க அவன் பற்றுகளை அறுத்துக்கொண்டு இன்னும் தீவிரமாக பொதுவெளியில் புகுந்து செல்லுதலை ‘புயலிலே ஒரு தோணி’ சொல்கிறது எனலாம். இரு நாவல்களிலும் ஒரு தீவிரத்தன்மை இருக்கிறது. ஒரு போராளி தன் காதலியின் வாழ்க்கைக்காக தன் காதலை தியாகம் செய்கிற மகத்தான காரியத்தை உக்கிரத்துடன் வெளிப்படுத்துகிறது ‘கடலுக்கு அப்பால்’. நண்பர்கள், பணம், போகம், குடும்பம், நிம்மதி, ஊர் என அமர்ந்துவிடுகிறபோது இந்த லௌகீக பந்தங்களைத் தூக்கி எறிந்துவிட்டு சமூக விடுதலைக்காகத் தன்னை ஒரு சுடராக்கிக்கொண்டு விடுதலைத் ஜோதியில் கலக்கிறான் ‘புயலிலே ஒரு தோணி’ நாயகன். கடலுக்கு அப்பால் நாவலில் பேராளியின் காதல் தமிழ் மனங்களின் விதிப்படி தீர்மானிக்கப்படுவது சிதைக்கப்படுகிறது. புயலிலே ஒரு தோணி நாவலில் போராளியின் லட்சியக் கனவு நண்பர்கள் கைவிட்டதால் வீழ்கிறது.


5

புயலிலே ஒரு தோணியை ஒரு பின் நவீனத்துவப் பிரதி எனலாம். தமிழ் இலக்கியப் பரப்பின் மீது நவீன மனிதர்கள் வைக்கும் விசாரணை இந்த நாவல். அறம், ஒழுக்கம், வீரம், கற்பு, அமுதசுரபி எல்லாம் தலைகீழாவிட்ட ஒரு வாழ்க்கை முறையில் பண்டைய இலக்கியம் தரும் உயர்ந்த கருத்துக்கள் நகையாடப்படுகின்றன.
பாண்டியன் தமிழ்ப் பெருமைகளையும் தமிழர் பெருமைகளையும் புரட்டிப் போடவது இழிவு நோக்கம் கருதி அல்ல. இழிந்தநிலையை மாற்றவேண்டும் என்ற ஆழ்ந்த பற்றுடனே பேசுகிறான். நாவலில் அப்படியான பாத்திரத்தையும் ஏற்று தெற்காசிய நாடகளில் காலூன்றி போராடுகிறான்.

வேசையர் உலகை ஜி.நாகராஜனைவிட இன்னும் பட்டவர்த்தனமாகக் காட்டியவர் சிங்காரம். அவர்கள் வெளிப்படுத்தும் மொழியும், உறவுகளும் பூச்சற்று அசலாக இருக்கின்றன. பக்க அளவில் குறைவு என்றாலும் அசல். ஜி.நா., வாழ்க்கை மீது அல்ல – எழுத்தில் வந்த வேசையர் மீது ஒரு பச்சாதாபக்குரலை வெளிப்படுத்துகிறார். வேசையரை வேசையராகவே வெளிப்படுத்துகிறார் சிங்காரம்.

வியாபாரி மனைவி, வெங்கலக்கடைத் தெருக்காரி, மேலமாசி முத்து நாயகி, வடக்காவணி வீதி ரங்கூன் ராஜசுந்தரி, இரட்டை வீட்டு முத்துலட்சுமி, குன்றக்குடி வள்ளி, கப்பல்காரி என எத்தனையோ பெண்கள் பார்வையிலும், பேச்சிலும் நினைவுகளிலும் ஊடாடுகின்றனர்.

எல்லா தாசிகளுக்கும், வேசைகளுக்கும் ஒரு கனவு இருக்கிறது. அன்பான ஆடவனை மணந்து மகிழ்ச்சியோடு வாழவேண்டும் என்ற விருப்பத்தை ஏதோ ஒரு நொடியில் வெளிப்படுத்தி விடுகின்றனர்.
நாவலின் துவக்கமே ஒரு அசாதாரண சூழ்நிலையிலிருந்துதான் விரிகிறது. ஆங்கிலேயர் தோற்று பின்வாங்கி விட்டனர். ஜப்பானியர் நுழைகின்றனர். ஆட்சி மாற்றம் மனிதர்களிடம் பதுங்கி இருந்த ஆசையைக் கிளறிவிடுகிறது. விநோத கூத்தக்களை அரங்கேற வைக்கிறது. இனவெறி, பசிவெறி, காமவெறி, பழிவெறி, ஏழ்மைவெறி, விடுதலை வெறி, மூர்க்கவெறி, பொருள்வெறி, இழிவுவெறி எல்லாம் பீரிட்டு மெடான் நகர வீதிகளைத் தாக்குகிறது. வரலாறு முழுக கட்டுப்பாடு, காவல் இல்லாக் காலங்களில் அடிமை மனிதர்கள், போக்கிரிகள், உதிரிகள், ஏழைகள் எல்லாம் வேறொரு மனிதர்களாகத் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதை இங்கு பார்க்கிறோம். ஜப்பான் வீழ்ந்தபோதும் இதே காட்சியைப் பினாங் நகரில் பார்க்கிறோம்.

ஒரு கொள்ளைக்கும்பல், ‘டியூக் ஹோட்டலிலிருந்து வௌ;ளிக்கலங்கள், கண்ணாடிப் பண்டங்கள், மேசைகள், இருக்கைகள், லினன் விரிப்புகள், வெல்வெட் திரைகள் எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு’ செல்கின்றது. ‘மெடானில் சிக்கிக்கொண்ட அம்பொனிய சிப்பாய்கள் – உடல் நலிவு காரணமாய் வெளியேற முடியாத நிலையிலிருந்தவர்கள் – அடி மிதி தாங்க முடியாமல் அலறுகின்றனர். ‘வௌ;ளைக்கார பெண்களை இழுத்து வந்து துயில் உரிகின்றனர். ஆடை இழந்து அம்மணமான அபலைகள் ‘ஓ மரியா’ ஆயயவோவ் மரியா என்று கத்தக்கத்த கொண்டைப் பிடியாய், கைப்பிடியாய், கால்பிடியாய் புல்விரிப்புக்கு இழுத்துச் செல்கின்றனர். பட்டப்பகலில் ஊரறிய உலகறிய காதறிய கண்ணியறிய பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். கொள்ளை கொலை கற்பழிப்பு’ என நீளும் கலவரத்தை சிங்காரம் மெல்ல விலகி நின்று பார்க்கிறார். அவரின் மரபறிவு தட்டிக் கொண்டுவருகிறது ‘மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இன்றெனில் இன்றால்’ என்ற வாசகத்தை. இந்த மனித உளவியல் வெளிப்பாட்டை ‘எல்லாம் இடங்கால வாய்ப்புகளின் விளைவு’ என்கிறார்.

இது இப்படி என்றால் ஜப்பானிய ராணுவம் தனது அதிகாரத்தைக் காட்டுகிறது. ‘பள்ளியிலிருந்து மேசை நாற்களை ஏற்றிச்செல்கின்றனர். விறகுக்காக ஜன்னல் கதவுகளும், கரும்பலகைகளும் நொறுக்கப்படுகின்றன.’ ‘கொள்ளையர்களை அடக்கவும் மக்களை பயமுறுத்தவும் நடு பஜாரில் ஐந்து பேரின் தலைகளை வெட்டி அடுக்குகின்றனர்.’ இந்தக் காட்சியோடு நிறுத்தவில்லை சிங்காரம். வெட்டிவைக்கப்பட்ட தலைகளின் அடியில் ரத்தம் பெருகி இறுகுகிறது. அந்த தலைகளின் தலைமுடியை ஒரு ராணுவ வீரன் தலைவாரிவிட்டு விளையாடுகிறான். பாண்டியன் இளமைக்கே உரிய துடிப்புடன் தெருக்களில் வலம் வந்தபடி கொடூரங்களை நேர்முகமாகக் காண்கிறான். பாண்டியன் ராணுவவீரனாகும்போது இந்த மூர்க்கத்தனத்தை காரியத்தின் பொருட்டு சில இடங்களில் கையாளுகிறான். கொள்ளையடிப்பவர்கள் யார், கற்பழிப்பவர்கள் யார், கொலை செய்பவர்கள், கண்காணிக்கப்படுபவர்கள் யார் என்பதை சிங்காரம் நேரடியான வார்த்தைகளில் சொல்வதில்லை. விபத்திற்கு முன் பின்னாக வெளிப்படும் சில சொற்களில் யூகித்துக் கொள்ளும்படியாக வைத்திரக்கிறார். உள்ப்பகை, வெளிப்பகை என்பதற்கெல்லாம் வரலாறு உண்டு.


6

பாண்டியன் என்ற கதாமாந்தனின் மெல்லிய இழையின் வழியே மனிதர்களின் அத்தனை முகங்களையும் காட்டுகிறார். பாண்டியனின் சாகசத்தை சொல்வதுமட்டுமே அல்ல நாவல். இந்தோனேசியாவில் அவன் இருந்தாலும் சொந்த மண்ணின் நினைவுகளில் வாழ்ந்தபடியே இருக்கிறான். அந்த வாழ்க்கை புரண்டபடியே இருக்கிறது. எங்கும் காமம் கண்விழித்தபடி இருக்கிறது. சின்னவர், பெரியவர், நல்லவர், கெட்டவர், அறிஞர், சாமானியன், சீனன், பஞ்சாபி, மலையாளி, தமிழன், மலேசியன், வீரன், கோழை, பத்தினி, பரத்தை, காதலி, வைப்பாட்டான், வைப்பாட்டி, காமக்கிழவி என அனைவரும் காமச்சுழலில் உழல்வதையோ, உழன்றதையோ எல்லா திசைகளில் இருந்தும் காட்டுகிறார். இதனை லாவகமாகக் கையாண்டு முன்னேறிய வியாபாரிகளையும், அந்தச் சூழலிலேயே மேடேறாமல் மூழ்கிப்போன முதலாளிமார்களின் வாரிசுகளையும் காட்டுகிறார்.
எழுச்சி, வீழ்ச்சி, குரோதம், நேசம், ஏமாற்றுதல், நம்பிக்கை, காதல், விட்டேத்தித்தனம் என மனிதர்களின் அகக்கோலங்களைத் திறந்து வைக்கிறார். கடல் அலைபோல ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்கும் பல குரல்தன்மைதான் இந்த நாவலின் ஆதார சுருதி.

சின்னமங்கலம் ஊர்த்திருவிழாவில் பெரிய மனிதர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். அவர்களைப் பற்றி எழுதுகிறார். “… பெட்டிக்கடைக்கு அருகே வெற்றிலையும் கையுமாய்த் தென்படுகிறாரே, அவர்தான் சத்தியக்குடி பெரிய அம்பலக்காரர். இந்த வட்டகையிலேயே தலையாய பட்டாதார். அம்பலகாரரின் நிலபுலன்களில் பெரும்பாலானவை உருட்டிமிரட்டியும், அடித்துப்பறித்தும் சேர்த்தவை என்றாலும் பரம்பரையாக வரும் சில பொட்டல் காடுகளும் உண்டு. அவருக்குப் பின்னால் ஏழெட்டுப் பேர் கைகட்டி நிற்கிறார்களே, அவர்களைப் பற்றி எல்லாருக்கும் தெரியும். ஆனால் வாய்விட்டச் சொல்லமாட்டார்கள். சொன்னால் கை காலுக்கு ஆபத்து; மாடு கன்றுக்கு ஆபத்து; வீடு வாசலுக்கு ஆபத்து… தென்புறத்தில், எடுபிடி ஆட்கள் புடைசூழ, கோலா மல்வேட்டி – முட்டைமார்க் பனியன் – டைமன் துண்டு கோலத்தில் நிற்பவரே ‘பவுண்’ ராவன்னாமானா. தாசிகளுக்குப் பவுண் காசுகளாய்க் கொடுப்பவர் அவர்தான். கோயிலுக்கு முன்னால் கைகூப்பி நிற்கிறாரே ஒரு நரைத்தலை மூதாட்டி, அவர் 16-18 வயதுப் பையன்களுக்கு வாரி வாரிபணம் வழங்குவார் என்று கேள்வி. அம்மையாரிடம் வயதை ஏய்க்க முடியாது. முதுகெலும்பைத் தட்டிப் பார்த்தே சரியான வயதைக் கணித்து விடுவாராம்….”

தமிழர்களின் சங்கப்பெருமை பற்றிப் பேசும் நண்பர்கள் இடையே சாதி பிரச்சனை எழுகிறது. அதன் பல்வேறு வேர்களைப் பற்றி எதிர் நின்று சில நண்பர்கள் அலசுகின்றனர். பூசி மெழுகுபவர்களுக்குச் சூடான பதில்கள் தரப்படுகின்றன. சாதி ஒழிய வேண்டிய பல வழிகள் பற்றியும் அலசுகின்றனர்.

ப.சிங்காரம் கதையை நகர்த்துவதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளவில்லை. காலத்தின் நகர்வில் மக்களின் அன்றாட நிகழ்வின் ஊடே ஒவ்வொரு அத்தியாயத்திலும் சமூகத்தில் நிலவும் சிக்கல்களைத் தொட்டு அலசுகின்றனர். நாவலை ஒரு விவாதக்களத்திற்கான ஒரு மேடையாக வெற்றிகரமாக மாற்றிவிடுகிறார் சிங்காரம்.
ஜெர்மனி, ஜப்பான் தோல்வி நோக்கி சரியத்தொடுங்குவதற்கானக் காரணங்களை சீனர்களின் ஆதரவுடன் கம்யூனிஸ்ட் கொரில்லாக்கள் ஊடுருவி புரட்சியில் ஈடுபடுவதை, இந்தோனேசிய இளைஞர்களின் சுதந்திர பிரகடணங்களை விவாதத்திற்கு உள்ளாக்குகிறார். இந்திய இளைஞர்கள் நேதாஜி படையில் இணைந்து பாரதவிடுதலைக்கான போரில் ஈடுபடுவதான ஒரு தோற்றத்திற்கு உள்ளே தனிமனிதர்களின் அக்கிரமங்களைக் காட்டுகிறார். ஜாராங் படை முகாமில் ரக்பீர்லால் சில ராணுவவீரர்களுடன் சேர்ந்துகொண்டு படைமுகாமுக்கு வரும் உணவுப் பண்டங்களையும் துணிமணிகளையும் பதுக்கி கள்ளமார்க்கட்டில் விற்கிறான். பணம் திரட்டி உல்லாச வாழ்க்கையில் ஈடுபடுகிறான். தட்டிக்கேட்ட பலவேசமுத்துவை கொன்றே போடுகிறான். பாண்டியன் ரக்பீர்லாலைக் கொள்கிறான். ப.சிங்காரம் புதுமைப்பித்னைப் போல பொய்மைகளை எங்கும் எக்காரணம் கொண்டும் மறைப்பதில்லை. போட்டு உடைப்பதில் ஆர்வமே வெளிப்படுகிறது. உன்னதமான விடுதலைப்போர் என்று சல்லித்தனங்களை மறைப்பதில்லை. மிகைப்படுத்துவதும் இல்லை.

நேதாஜியின் பள்ளித்தோழராகவும் நம்பிக்கைக்குரிய போர்ப்படைத் தளபதியாகவும் மலையாள தேசத்தைச் சேர்ந்த மாதவன் இருக்கிறான். இவனுடைய தங்கை விலாசினி கணவனாலே கெட்ட சகவாசங்களில் ஈடுபட நேர்கிறது. பல்வேறு அதிகாரிகளுடன் புரள்கிறாள். பல்வேறு அதிகாரிகள் புரட்டி எடுக்கின்றனர். மாதவன், விலாசினி புனைவாக இருக்கலாம். ஆனால் நேதாஜி ராணுவத்தில் இருந்த பல தளபதிகளின் அந்தரங்கம் இவ்வகையானது என்று சொல்லத்தான் விலாசினியை முன்வைக்கிறார்.

நேதாஜிக்கும் ஜப்பான் போக்கிற்கும் இடையே கருத்து முரண் ஏற்பட்டு இதுபற்றி கடிதம் எழுதியதாகவும், அதை ஜப்பான் அதிகாரி யாமசாக்கி வைத்திருப்பதாகவும், விலாசினிக்கும் – யாம சாக்கிக்கும் இருந்த கள்ள உறவை பயன்படுத்தி கடிதத்தை மீட்பதாகவும் ஒரு பகுதி வருகிறது. இதில் இரண்டு விசயங்கள். நேதாஜிக்கு ஜப்பானின் நடவடிக்கைகளில் அதிர்ச்சி இருந்தது என்பதை சொல்ல வருகிறது. யாமசாக்கி போன்ற அதிகாரியைக் கொள்ள கஞ்சா, தண்ணி, டாப்பராகத் திரியும் மொக்தார் என்ற போக்கிரியுடன் இணைந்து செய்கின்றனர். அக்காலத்தில் அதிகாரிகளைக் கொள்ள எவ்விதமான வலைப்பின்னலில் நடத்தினார்கள் என்பதைப் புரிந்துகொள்ளத்தான்.
இன்று பசுவதை தடுப்புச்சட்டம் பற்றி ஊடகங்கள் பரபரப்பான செய்தியைத் தருகின்றன. வடநாட்டில் இதன் பெயரில் அப்பாவி மக்கள், இசுலாமியர் கொல்லப்பட்டதும் நம்மை நடுங்கவைத்தன. அக்காலத்திலேயே பசுகறியை உண்பது குறித்து இந்நாவலில் ஒரு அத்தியாயம் அலசுகிறது. தமிழன் மாட்டுக்கறி மட்டுமல்ல யானைக்கறியும் தின்றான் என்பதற்கான சான்றுகள் விவாதங்களிடையே வருகின்றன.

ஜனகனின் குலகுரு யாக்ஞவல்கி மாட்டிறைச்சி தின்பது குறித்து சொல்லி இருப்பதை பாண்டியன் வாயிலாக முன்வைக்கிறார்.

“மாட்டுக்கறி தின்பது பாபமாக இருக்கலாம். இருப்பினும் பல்லுக்கு மெதுவாக இருந்தால் தின்னவே தின்பேன்” என்கிறான். தின்னலாம் என்பதற்கும் ‘தின்னக்கூடாது’ என்பதற்கும் இருசாரார் உரைவிளக்கம் எல்லாம் தருகின்றார்.

குடவாயில் கீரத்தனார் பசுகறி தின்பது குறித்து சொன்ன,
“கலங்கு முனைச் சீறூர் கைதலை வைப்பக்
கொழுப்பாத் தின்ற கூர்ம்படை மழவர்…”
முழு பாடலை எடுத்துவைக்கிறார். இதற்குமுன் யானைக்கறி தின்றார்கள் என்பதை,
“புலி தொலைத்துண்ட பெருங்களிற்றொழி ஊன்
கலி கெழு மறவர் காழ்க்கோர் தொழிந்ததை…”
என்ற தொண்டியாமூர் சாத்தன் பாடல் வழி எடுத்து விவாதிக்கிறார்.

புதுமைப்பித்தன் கூட இம்மாதிரி இடங்களைத் தொடமாட்டார் என்றே நினைக்கிறேன்.. சிங்காரம் எதையும் விடுவதில்லை. எல்லாவற்றையும் கலைத்துப் போடுகிறார். சிங்காரத்திற்கு இருந்த மரபிலக்கிய அறிவு அவரை பல்வேறு உயரங்களுக்குக் கொண்டு செல்கிறது. இப்படி ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு பிரச்சனை நாவலின் போக்கில் தோதானவிதத்தில் விவாதிக்கப்படுகின்றது.

மொக்தார் என்ற பொறுக்கியை மிரட்டும் இடமும் சரி, சுந்தரத்தை கதறவிடும் இடத்திலும் சரி பாண்டியன் கல்நெஞ்சம் படைத்த கூலிப்படைத் தலைவன்போல் செயல்படுகிறான். இதை ராணுவ நீதி என்று மட்டுமே சொல்ல முடியும்.

டச்சுப்படை தோற்கிறது. அப்படையின் தளபதியாக இருந்த டில்டன் கிழிந்த ஆடையுடன் மணல் அள்ளும் ராணுவ கைதிகளுடன் அல்லாடுகிறான். மதிய உணவு நேரத்தில் தனியாக மரத்தடியில் காய்ந்துபோன சின்ன சோற்று உருண்டையை உண்ணமுடியாமல் உண்ணுகிறான் வயதான ராணுவ அதிகாரி. பாண்டியன் அந்த அதிகாரிக்கு நல்உணவு அளிக்க ஜப்பான் அதிகாரியுடன் பேசுகிறான். மேஜருக்குத் தெரிந்தால் உன் தலை உருளும் என்று தடுத்தும் உதவுகிறான். அத்தோடு தினம் சிகரெட் பாக்கட் தருகிறான். இப்படியொரு மகத்தான காரியத்தை செய்த பாண்டியன்தான் சுந்தரத்தை ஈவு இரக்கம் இல்லாமல் மரணத்தில் தள்ளுகிறான். பாண்டியன் துரோகத்தை மன்னிப்பது இல்லை. ராணுவம் யுத்த காலத்தில் எப்படியெல்லாம் செயல்படும் என்பதான ஒரு புரிதலை இச்சம்பவம் தருகிறது.

ஜப்பானில் குண்டு வீசப்பட்டதால் தெற்காசிய நாடுகளில் இருந்த ஜப்பானிய படை பின்னடிக்கிறது. ‘நாவாப் ஜாடா’ ஆங்கிலேயரால் கைதி செய்யப்படலாம். பாண்டியன் தப்பித்துப் போய்விடுங்கள் என்கிறான். ஆங்கிலேயரிடம் கைதாவதையே பெரிதும் விரும்புகிறேன் என்று சிரிக்கிறான். இவனது உத்தரவின் பேரில்தான் யாமசாக்கியைக் கொன்று நேதாஜியின் கடிதத்தை மீட்கிறான். ‘ஆங்கிலேயர் என்னை கைதி செய்யட்டும். நான் பாசின் பூர் நாவாப் குமாரன். எனது தமையன் மத்திய சர்க்கார் காரியதரிசி. தாய்மாமா ஹைகோர்ட் நீதிபதி’ என்கிறான். நாவாப்பின் விடுதலை என்பது மிகமிக சுலபமான ஒன்று என்பதைக் கோடிடுகிறார். பாண்டியன் போன்ற எளிய வீரர்கள் சிக்கும்போது சித்திரவதைக்குள்ளாகிறார்கள். இந்த முரணை எள்ளலோடு வெளிப்படுத்துகிறார்.

குண்டு வீச்சுக்குப் பின் ஜப்பானின் பணமதிப்பு இழக்க நேரும் என்ற நிலை வருகிறது. உடனே அல்ல என்றாலும் குறுகிய காலத்தில் அவ்விதமே நேரும். இதற்கு இருக்கும் கொஞ்சநாள் மதிப்பைப் பயன்படுத்திக்கொள் என்று கத்தை கத்தையாகத் தருகிறான். அத்தோடு டச்சு பணக்கட்டுகளையும் தருகிறான்.

இந்தப் பணம் வெறும் காகிதமாவதும், வெறும் காகிதம் மதிப்பு பெறுவதுமான இந்த கால விளையாட்டைப்பற்றி விவாதம் வருகிறது. சென்ற ஆண்டு 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஒரே நாளில் மதிப்பிழக்கச் செய்ததும் கத்தை கத்தையாக வெளியேறின. குறிப்பிட்ட காலம் செல்லும் என்ற நிலையில் எல்லா பித்தலாட்டங்களும் நடந்தன. நாவலில் நாற்பதுகளில் பேசப்பட்ட சில விசயங்கள் இன்றைய பிரச்சினைகளுக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கிறது.

இங்கேயே பிறந்து வளர்ந்த டச்சுக்காரர்கள், அந்நியர்களா – இம்மண்ணின் மக்களா என்ற பிரச்சனை எழுகிறது. இந்தோனேசியர்கள் அவர்களை அந்நியர்களாகப் பார்க்கின்றனர். அறிவியக்கத்திற்கும் உணர்வியக்கத்திற்குமான மோதல் உருவாகிறது. இருதரப்பு நியாயங்கள் ஆராயப்படுகின்றன. டச்சு இளைஞன் தன்னை அந்நியனாக பார்க்கப்படுவதற்கு ஒரு பதில் சொல்கிறான். டச்சுக்கொடி பறக்க இந்தோனேசியா தங்கள் கைக்குள் இருக்க விரும்புகிறான். இப்படியான உளவியல் வெளிப்பாடுகள் பிரச்சனையின் பின்னணியிலிருந்து கிளம்புகின்றன.

போர் அறம் என்பது மிகமிக சிக்கலான ஒன்று. மோதிக்கொள்ளும் இருவேறு நாடுகள் அல்லது போராட்டக் குழுக்கள் தாங்கள் வகுத்த பாதையில் வெற்றியடைய வேண்டுமென்று விரும்பி மோதுகின்றன. ஒன்றின் செயல்திட்டம் எதிர் அணிக்கு அறமற்றதாக அமைகிறது. தோல்வியுற்ற துருப்புகள் வெற்றியடைந்தவரின் பல்வேறு இம்சைகளுக்கு ஆளாகின்றன. அவமானத்திற்குள்ளாகின்றனர். வக்கிரமான முறையில் சிதைக்கப்படுகின்றனர். தோற்றக்குழு வென்றிருந்த காலத்தில் இதைத்தான் செய்திருக்கிறது. தோற்றவர்களுக்கு அறமற்றதாகவே தெரிகிறது. மனித குலத்தில் போர் என்ற வடிவம் தோன்றிய அந்த நொடியிலேயே இந்த அறத்தின் வீழ்ச்சி நடக்கத் தொடங்கிவிட்டது.

இதில் இன்னொரு சிக்கல். இணைந்து பணியாற்றிய இரு அணிகளுக்கு இடையே கருத்துமுரண் வரும்போதும் விபரீதம் ஏற்படுகிறது. தங்கள் அணியை எதிர்வரும் காலப்பழியிலிருந்து காப்பாற்றிக் கொள்ளவோ, உடனடி நலத்திற்காகவோ சுயநல அழித்தொழிப்பில் ஈடுபடுகின்றனர்.

மற்றுமொரு சிக்கல். ஒரு போர்க்குழுவிற்குள்ளேயே காட்டிக் கொடுக்கிறவனைத் தேடி அழித்தொழிக்கிற இடமும், கருத்து வேறுபாட்டால் பழிவாங்குகிற இடமும் பேரறத்தின் மாபெரும் வீழ்ச்சியாக நடந்தேறுகிறது. போரின் சந்நிதானத்தில் இதுவும் அவர்களுக்கான போர் அறமாகக் கொள்ளப்படுகிறது.

ஈழப்போரில் பங்குகொண்ட போராளிக்குழுக்களின் உள் விவகாரங்களைப் புரிந்துகொள்ள ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி நாவல் கூடுதலான புரிதலை உண்டாக்குகிறது. ஈழத்து நாவல்களைவிட.
ஈழத்துப்போரை முன்வைத்த எழுதியவர்கள் அதை குழு சார்பாகவோ, இனச்சார்பாகவோ எழுதியுள்ளனர். இது ஒன்றும் தவறு இல்லை. இதற்கான வரலாற்று சமூக காரணங்களும் இருக்கின்றன. ஆனால் தமிழ்ச் சமூகத்தை அல்லது பிற சமூகத்தை, போரை உள் விவகாரங்களை, சற்று விலகி நின்று எழுதும்போது அங்கே நாம் காண இருப்பது மானிட அவலமும் அபத்தமும்தான். இதனை சிங்காரம் தன் படைப்பின் வழி வென்றெடுத்திருக்கிறார்.
உலகப்போரில் தோற்ற ஜப்பானிய ராணுவம் இன்னும் முற்றாக விலகிக் கொள்ளாத நிலை. ஆங்கிலப் படையும் வந்து சேராத நிலை. அடிவாங்கி நொறுங்கிக் கிடந்த டச்சுக்காரர்கள் மீண்டும் எழுந்துவிடலாம் என்ற நம்பிக்கை. போராடிய தமிழ் இளைஞர்கள் சிலரிடம் பணமும் விளையாடுகிறது. பாண்டியனும் அவனது நண்பர்கள் கதிரேசன், சாத்தையா, மாசானம் நால்வரும் கொண்டாட்டத்துடன் பகலில் பேங்காக் நகர கிராமப் பகுதியான நெல்வயலும், தென்னந் தோப்புகளும் விரிந்த பகுதியில் காரில் செல்கின்றனர். கிராமத்து வழியாகக் கார் போகிறது.

‘குடில்களுக்கு முன், காலை நீட்டி உட்கார்ந்து வெற்றிலைமென்று அசைபோட்டுக் கொண்டிருந்த பெண்கள் கள்ளங்கபடின்றிப் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். சிறுவர்கள் பிரப்பம் பந்துகளைத் தூக்கி எறிந்து ராஜா ராஜா விளையாடுகின்றனர்’ என்று இருவரிகளில் அழகான காட்சியைக் காட்டிவிட்டுப் பின்னே கொதிப்பின் உக்கிரமான – கள்ளத்தனம் மிக்க உலகைக் காட்டுகிறார். இந்த இரண்டு நிலைகளை சட்டென பொருத்திப் பார்க்க முடியாதவிதத்தில் தேர்ந்த வாசகன் பொருத்திப் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் வெகுநுட்பமாக எழுதியிருக்கிறார். இந்தக் கலை வெளிப்பாடு நாவல் முழுக்க விரவியிருக்கிறது.

மாலை மூன்லிங் கேளிக்கை விடுதிக்கு வருகின்றனர். இருள் கவ்வுகிறது. விடுதி ஜெகஜோதியாகக் கோலாகலம் கொள்கிறது. பெரும்பெரும் பணக்காரர்கள் வந்து உண்டு மகிழ்கின்றனர். ராணுவ அதிகாரிகள் அழகான வேசையர்களை அணைத்தபடி குடித்துக் கொண்டாடுகின்றனர். பாண்டியன் நண்பர்களும் குடித்துக் கொண்டாடுகின்றனர். தெற்காசியாவைப் பொறுத்தளவில் போர் ஓயத்தொடங்குகிறது. கதிரேசன் உற்சாகத்திலும் உள்ளார்ந்த கடுங்கோபத்திலும் எழுந்து தன்னை ஒரு தீர்க்க தரிசியாக அறிவித்துப் பேசுகிறான்.

சுய இழிவு மொழியால் ஆங்கிலத்தில் தமிழ் இனத்தைத் திட்டுகிறான். பழுப்பு, மஞ்சள், கருப்பு இனத்தவர்களையும் திட்டுகிறான். உடலில் மேல் தோலை அறுத்து வௌ;ளையாக்கிக் கொள்ளுங்கள் என்று இழித்துக் கூறுகிறான். ‘அணுகுண்டு வீசி குழந்தை குட்டிகளை நாசமாக்கிய வௌ;ளை அஞ்ஞானியே மூடுவாயை, தீர்க்கதரிசியின் கொடுஞ்சாபத்திற்கு உள்ளாகி மீளாத்துயரில் உழலக்கடவாய்’ என்று சாடுகிறான். பேச்சு எங்கெங்கோ செல்கிறது. வம்பிழுக்கிறான்.

ஆசிய மக்களின் அடிமை வாழ்வை கதிரேசன் தூற்றுகிறான். வௌ;ளை என்ற நிறம் தவிர மற்ற நிறம் கேவலத்திற்குரியது என்கிறான். மது அருந்தியபடி தீர்க்கதரிசி என்ற போர்வையால் வௌ;ளையர்களைப் புகழ்வதுபோல பழித்துப் பேசும் மொழியை வௌ;ளைக்கார கர்னல் புரிந்து கொள்கிறான். வம்பு இழுத்து ஒரு கலாட்டாவை நிகழ்த்தத் திட்டமிட்டே வந்திருப்பது போலவும் இருக்கிறது. கதிரேசனால் இந்த மோசமான சூழல் உருவாகிறது என்பதும் சரி. ஆங்கிலேய கர்னல் தாக்க வருகிறான். கதிரேசன் ஆவேசம் கொண்டு தாக்கி வீர்த்துகிறான். ‘பகடிக்கே சொந்தக்காரர்’ என்பது இதுதானா? என்று கிண்டல் அடிக்கிறான்.

கேளிக்கை விடுதியில் குடித்து மகிழ்ந்து கொண்டிருந்த மஞ்சள், பழுப்பு, கருப்பு நிறத்தவர்கள் கைத்துப்பாக்கிகளை உருவி எடுத்து வௌ;ளையர்கள் வரிசையைக் குறிபார்க்கின்றனர். எப்படிப் புரிந்து கொண்டார்கள் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. சுதந்திர வெளிப்பாட்டின் ஆழ்மனக் கோவத்திலிருந்து கிளம்பியதாக இருக்கிறது. தன்மானம் அவர்களுக்குள்ளும் பதுங்கி இருந்திருக்கிறது.

பிரிட்டிஸ் சாம்ராஜ்யம், வௌ;ளைத்திமிர், ஆளப்பிறந்தவர்கள் என்ற ஆணவம் ஒரு கணம் நொறுங்கி வீழ்கிறது. விடுதியில் அசாதாரணமான பேரமைதி நிலை கொள்கிறது. ஒரு துப்பாக்கிக் குண்டு யாரிடமிருந்து கிளம்பினாலம் ரணகணம்தான். என்னென்னமோ நிகழ்ந்துவிடும். ஒரே ஒரு குண்டு. அமைதி நீடிக்கிறது.

பழுத்த பக்குவப்பட்ட வௌ;ளைக்கார கிழவன் எழுந்து தோழமை என்று கைவிரித்து வருகிறான். அசாதாரண சூழல் அடங்குகிறது. மெல்ல புன்னகை மலர்கிறது யாவரிடத்தும். ப.சிங்காரம் மனதின் ஆழத்திற்குள் எவ்வளவு தூரம் சென்று பார்க்கமுடியுமோ அவ்வளவு தூரத்திற்குப் போகிறார். பிரச்சனையை புனைவிற்குள் கட்டமைத்து பயணப்பட்டுப் பார்க்கிறார். இந்த இந்த நெருக்கடியில் இந்த இந்த விதமாக வெளிப்படுத்துவான் என்ற சாத்தியப்பாட்டை கண்டடைகிறார்.

கதிரேசன் நுட்பமான எள்ளல் மொழியில் தன் நண்பர்கள் சூழ குடித்தபடி வெளிப்படுத்திக் கொண்டதின் காரணம் என்ன? ஜப்பான் வீழ்ந்துவிட்டது. மீண்டும் ஆங்கில ஆதிக்கம் நுழையப்போகிறது. வௌ;ளைத்தோல் விவகாரம் மேலெழலாம். இளைஞனின் விடுதலைக்கனவு வீழ்ச்சியுறவிருக்கிறது. இந்த ஆதங்கத்தின் வெளிப்பாடாக இருக்கிறது அங்கதம். நான்கு இளைஞர்கள் தங்களை இவ்விதம் வெளிப்படுத்திக்கொண்டவிதம் உலக இலக்கியத்தில் இல்லாதது. தமிழிலும் சரி, பிற இந்திய நாவல்களிலும் சரி இப்படியான ஒரு வெளிப்பாடு இல்லை. இந்த அபத்த தரிசனத்தை உயர்ந்த தரத்தில் வெகு சுழுவாக சிங்காரம் இவ்விடத்தில் வெளிப்படுத்திவிட்டார். நாவல் இலக்கியத்திலே ஒரு பேருணர்ச்சியை அளித்த நாவல் புயலிலே ஒரு தோணி. தமிழில் பேருணர்ச்சியை உண்டாக்கிய ‘சிலப்பதிகாரம்‘, ‘கம்பராமாயணம்‘ என்ற காப்பியங்களோடு ஒப்பிட வேண்டாம் என்று மனம் சொன்னாலும் இப்போதைக்கு இந்த ஒப்பீடே சரியாகத் தோன்றுகிறது.

சிங்காரம் உயிரோடு இருந்திருந்தால் இந்த அத்தியாயத்தை இப்படி எழுதத்தூண்டிய மனநிலை என்ன என்று கேட்டிருக்கலாம். ஒருவேளை தமிழ் மரபிலக்கியம் இந்த வித்தையை எழுதும்படி ஊக்கி இருக்கலாம். வஞ்சப்புகழ்ச்சி எழுத்து வகைக்குத் தமிழ் இலக்கியப் பரப்பிலேயே சிங்காரம் எழுதிய இப்பகுதிதான் உச்சம். நான் படித்த அளவில் ஐரோப்பிய, இந்திய நாவல்களில் இப்படியான ஒரு பகுதி இல்லை. இதனை இன்று பின் நவீனத்துவ எழுத்துவகை என யாரேனும் பெயரிட்டுக் கொண்டாடலாம். படைப்பாளியின் மனம் இசங்களால் ஆனதல்ல. படைப்பு ஊற்றுக்கண்களின் விசித்திரங்களால் உருவாவது. சூழலும் நெருக்கடியும் சிதைவும் கூட இப்பகுதியை இவ்விதம் எழுதத்தூண்டி இருக்கலாம்.


-சு.வேணுகோபால்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.