விலக்கு


சாலையைக் கடந்து பள்ளிக்குச் செல்ல பச்சை விளக்குக்காக மைலோ பாக்கெட்டை உறிஞ்சிக்கொண்டே லாவண்யா காத்திருந்தபோது தன்னைப் பார்த்துவிட்டுச் சட்டென்று விலகி நான்கைந்து அடிகள் முன்னால் போய் நின்ற அவளைக்  கண்டவுடன் அவளது ப்ளம்ப்பி பேக்சைடில் எட்டி உதைக்க வேண்டும் போலிருந்தது. ‘நயன்தாரானு நெனைப்பு. எக்ஸ்பிரஸ்ல படிக்கிற திமிரு’ என்று மனதுக்குள் திட்டிக்கொண்டே அவளது பெயரை யோசித்தாள். ஆனால் பிடிபடவில்லை. உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து கடந்த ஒன்பது மாதங்களாக சில தமிழ் வகுப்புகளில் பார்த்திருந்தாலும் லாவண்யா அவளுடன் ஒரு முறை கூட பேசியதில்லை.

பள்ளி திறந்து முதல் வகுப்பில் தமிழாசிரியர் “மற்ற பாடங்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை தாய்மொழிக்கும் தர வேண்டும். தமிழை விலக்கக் கூடாது. தமிழ்தான் உங்கள் அனைவரையும் ஒன்றாக இணைத்திருக்கிறது” என்று கூறிய போது ஒரு மாணவன் மேசையைத் தட்டி சத்தமாகச் சிரித்தான். ஆசிரியர் முறைத்ததையும் பொருட்படுத்தாது சிரித்துக்கொண்டே இருந்தான். அதைப் பார்த்த மற்ற மாணவர்கள் சத்தமின்றிச் சிரித்தனர். ஆசிரியர் சொன்னது போலவே தமிழ் வகுப்பு மாணவர்களை விரைவுநிலை, வழக்கநிலை (ஏட்டுக்கல்வி), வழக்கநிலை (தொழில்நுட்பம்) எனத் தனித்தனியாக இணைத்திருந்தது.

அருகே நின்ற இரண்டு மூத்த மாணவர்களில் ஒருவன் நயன்தாராவின் பின்புறத்தைக் காட்டி ஏதோ சொல்ல மற்றொருவன் புன்னகையுடன் தலையை ஆட்டி ஆமோதிப்பதைக் கண்ட லாவண்யா முன்னகர்ந்து அவளுக்கு அருகில் சென்று நின்று கொண்டாள். பின்பக்கத்தில் மாட்டியிருந்த பள்ளிப்பையைச் சரி செய்யும் சாக்கில் முழங்கையால் விலாப்புறத்தில் இடித்த லாவண்யாவை எரித்து விடுவதைப் போல பார்த்தாள் அவள். அவளது சுமாரான முகத்தில் பூவில் இருக்கும் பனித்துளிகள் போலிருந்த குட்டி பருக்களும் உதட்டிற்கு மேலிருந்த பூனை முடியும் லாவண்யாவை ஈர்த்தன. ‘வரலாம்’ என்று பச்சை மனிதன் அழைத்தவுடன் சாலையைக் கடந்து விரைவாக நடந்த அவளை வேண்டுமென்றே இடித்துவிட்டு வேகமாக ஓடிய லாவண்யா திரும்பிப் பார்த்து “இதுதான் எக்ஸ்பிரஸ் வாக்கா?” என்று கேட்டுவிட்டுச் சிரித்தவாறே பள்ளிக்குள் நுழைந்தாள்.

பள்ளி அலுவலகத்தின் முன்புறமிருந்த சிறு செயற்கை குளத்தில் கோய் மீன்கள் நீந்திக்கொண்டிருந்தன. அவற்றைப் பார்க்கும்போதெல்லாம் தொடக்கப்பள்ளியில் நூலக வாசலிலிருந்த மீன் தொட்டி லாவண்யாவின் நினைவுக்கு வரும். அதில் நீந்தும் நான்கைந்து கோய் மீன்களைப் வேடிக்கைப் பார்க்க பள்ளி இடைவேளையின் போது சிறு கூட்டமொன்று தொட்டியைச் சுற்றிக் கூடிவிடும். அப்படி ஒருமுறை பார்த்துக் கொண்டிருந்தபோது “ஏதாவது தப்பு செய்துட்டா இந்த மீன் முன்னாடி கண்ணை மூடி நின்னு மன்னிப்பு கேட்டா கடவுள் மன்னிச்சுருவாருனு எங்க பாட்டி சொல்லுவாங்க” என்றாள் ஒரு சிறுமி. அதை மறுத்து “அப்படி இல்ல. இந்த மீன நினைச்சுகிட்டு நம்ம விஷ்ஷ சொன்னா அப்படியே நடக்கும்னு எங்க அம்மா சொல்லுவாங்க” என்றாள் மற்றொரு சிறுமி. இருவரும் சொல்வதை நம்பலாமா வேண்டாமா என்று லாவண்யாவுக்கு அப்போது குழப்பமாக இருந்தது.   

மாணவர்களும் ஆசிரியர்களும் காலைக் கூட்டம் நடைபெறும் அரங்கிற்குச் சென்று கொண்டிருந்தனர். அவர்களது காலணிச் சத்தமும் பேச்சொலியும் காற்றில் கரைந்து பள்ளி முழுதும் பரவிக் கொண்டிருந்தன. இன்னும் வெளுக்காத வானத்தின் கீழே பள்ளி மைதானம் பரந்து விரிந்து கிடந்தது.  மெதுவாக நடந்து சென்று குளத்தின் முன்பாக கண்களை மூடி லாவண்யா நின்றவுடன் குழுவாக எதையோ சாப்பிட்டுக் கொண்டிருந்த மீன்கள் வேகமாக விலகி ஓடின. வகுப்புத் தோழிகளான மதுமிதாவும் அமெண்டாவும் மூடிய கண்களுக்குள் வந்து புன்னகைத்தனர். எங்கிருந்தோ ஒலித்த விசில் சத்தம் கேட்டுக் கண்களைத் திறந்தவள் ஆங்காங்கே நின்று அரட்டை அடித்துக் கொண்டிருந்த மாணவர்களைக் காலைக் கூட்டத்திற்குச் செல்லுமாறு ஒழுங்குமுறை ஆசிரியர் சொல்லிக்கொண்டிருப்பதைப் பார்த்தாள். 

இன்று முதல் வகுப்பே தமிழ் என்பது நினைவுக்கு வர நான்காவது தளத்தில் உள்ள வகுப்புக்குச் செல்ல குளத்திலிருந்து இருபடி தூரத்திலிருந்த பள்ளி உணவகத்தை ஒட்டிய மாடிப்படிகளில் ஏறத்தொடங்கினாள். நான்காவது மாடியை அடைந்தபோது மூச்சு வாங்கியது. சீருடை வியர்வையால் நனைந்திருந்தது. எதிரே வந்த சீன மாணவி அவளருகில் வந்தபோது மூக்கைப் மூடிக்கொண்டு சற்று விலகி நடந்து கடந்து போனாள். வகுப்பிற்குள் நுழைந்து தனது இருக்கை அருகே பள்ளிப்பையை வைத்துவிட்டுத் திரும்பியவள் கண்ணில் சுவரில் ஒட்டப்பட்டிருந்த திருவள்ளுவரின் படமும் அவரைச் சுற்றிப் பல வண்ணங்களில் எழுதப்பட்டிருந்த குறள்களும் தென்பட்டன. பொய்மையும்…. வாய்மை…. மெதுவாக எழுத்துக்கூட்டி அவள் படிக்க ஆரம்பித்த தருணத்தில் கூட்டம் தொடங்குவதற்கான பள்ளி மணி அடித்தது. 

விழுந்தடித்துக் கொண்டு படிகளில் இறங்கி இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்குக்கு நடந்தபோது அவளுக்கு முன்னால் மிக அருகாமையில் ஒரு சீன மாணவியும் ஓர் இந்திய மாணவனும் ஜோடியாகச் சென்று கொண்டிருந்தனர். அவன் “Wanna b my stead?” என்று சத்தமாகக் கேட்க அவள் You Siao Ah?” என்று சொல்லிவிட்டுச் செல்லமாக அவன் தோளில் தட்டினாள். திரும்பிய அவன் லாவண்யாவைப் பார்த்து அசட்டுச் சிரிப்பு ஒன்றை உதிர்க்க பதிலுக்கு இவளும் ஒரு புன்முறுவலைத் தந்துவிட்டு பார்வையைக் கீழ்த்தளத்திற்குச் செலுத்தினாள். பள்ளி வேலியை ஒட்டி மலர்ந்திருந்த மஞ்சள் நிற கறுப்பு கண் சூசன் மலர்கள் தெரிந்தன. மஞ்சளும் கறுப்பும் இணைந்தால் கொள்ளை அழகுதான் என நினைத்துக்கொண்டே அரங்குக்குள் நுழைந்து தனது வகுப்பு மாணவர்களோடு இணைந்து நின்று கொண்டாள். 

மதுமிதாவும் அமெண்டாவும் அவள் வந்ததைக் கவனிக்காமல் தங்களுக்குள் ஏதோ பேசி சிரித்துக்கொண்டிருந்தார்கள். சுகந்தி அவர்களிடமிருந்து சற்று விலகி நின்று மேடையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். கூட்டம் தொடங்கியது. பள்ளிப் பாடலைப் பாடி முடித்து We, the citizens of Singapore, pledge ourselves as one united people, regardless of race, language or religion …………” என்று உறுதிமொழியைச் சொன்ன போது லாவண்யா மீண்டும் சுகந்தியைப் பார்த்தாள். ‘மாஜூலா சிங்கப்பூரா’ பாடி முடித்து வகுப்புக்குத் திரும்பியபோது லாவண்யாவின் வலது கையைத் தனது கையோடு கோர்த்துக்கொண்டு மதுமிதா நடக்க இடப்பக்கம் அமெண்டா நடந்து வந்தாள். 

உயர்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அன்று வழக்கநிலை (தொழில்நுட்பம்) பிரிவில் தன்னையும் சேர்த்து நான்கே மாணவிகள்தான் என்று அறிந்தபோது லாவண்யாவுக்குப் பயம் தொற்றிக்கொண்டது. அனைவரும் சீனர்களாக இருந்துவிட்டால் என்ற சந்தேகம் கரப்பான் பூச்சி மண்டைக்குள் ஓடுவது போல ஓடி இம்சித்தது. ‘PSLE பரிட்சைக்காக எத்தனை முறை வேண்டியிருப்பேன். என்னை ஏமாத்திட்டியே. உன்னை இனிமேல் நினைக்கக் கூட மாட்டேன்’ என்று கோபமாய் சவால் விட்டிருந்த டேங்க் ரோடு தெண்டாயுதபாணியிடம் சரணடவதைத் தவிர அவளுக்கு வேறு வழியே தெரியவில்லை. நல்ல வேளையாக இம்முறை தமிழ்க் கடவுள் ஏமாற்றாமல் சிறுபான்மையைப் பெரும்பான்மையாக்கி அருள் பாலித்திருந்தார். வகுப்பில் அமெண்டா மட்டும்தான் சீன மாணவி. 

“ஹேய் கேர்ள்ஸ்! பேபியைப் பாருங்க” என்று அமெண்டா ஆங்கிலத்தில் கிசுகிசுத்தவுடன் லாவண்யாவும் மதுமிதாவும் திரும்பி பார்த்தார்கள். ‘பேபி’ எனறழைக்கப்பட்ட சுகந்தி சீனப்பையன் ரேயானுடன் சிரித்து பேசியபடி வந்துகொண்டிருந்தாள். ‘பேபி’…. ‘பேபி’….. அந்தப் பட்டப்பெயர் லாவண்யா மனதுக்குள் வேகமாக இறங்கி ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த நிகழ்வை மேலே இழுத்து வந்தது.   

அன்று பள்ளி முடிந்தபிறகு மதுமிதா, லாவண்யா, சுகந்தி மூவரும் ஒன்றாக அமர்ந்து பள்ளி உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்தனர். காற்பந்து பயிற்சி முடிந்து மூச்சிரைக்க ஓடி வந்த அமெண்டா “ஹாய் கேர்ள்ஸ்! ஹேவ் எஸ்.பேட்?” என்று கேட்க “நோ லா” என்று இயல்பாகச் சொல்லிவிட்டு மதுமிதா சாப்பிடுவதைத் தொடர்ந்தாள். “என்கிட்ட கேட்டால் எப்படி இருக்கும்?” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள் சுகந்தி. “எதற்கு சிரிக்கிறாள்?” என்று கேட்ட அமெண்டாவிற்கு அவள் சொன்னதை ஆங்கிலத்தில் சொன்னாள் மதுமிதா.

அதிர்ச்சியுடன் சுகந்தியைப் பார்த்த அமெண்டா “ஆர் யூ ஸ்டில் எ பேபி?” என்று கேட்டு கொல்லென்று சிரிக்க அவளோடு மதுமிதாவும் இணைந்து கொண்டாள். சிரிக்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தோடு அவர்கள் இருவரையும் பார்த்தாள் லாவண்யா. “சோ வாட்?” என்று எரிச்சலுடன் கேட்ட சுகந்தியைப் பார்த்து இருவரும் இன்னும் சத்தமாகச் சிரித்தார்கள். “எப்ப பார்த்தாலும் இந்தப் பருப்பு சோறையே தின்னா பேபியாவே இருக்க வேண்டியதுதான்” என்று சொல்லிவிட்டு சிரித்த மதுமிதாவுக்குப் புரையேறியது. 

“ஷட் அப் கேர்ள்ஸ். லாஸ்ட் வார்னிங்” என்று சுகந்தி சொன்னதையும் பொருட்படுத்தாமல் இருவரும் சிரித்துக்கொண்டே இருந்தார்கள். “நான்சென்ஸ்” என்று சொல்லிவிட்டு விருட்டென்று அங்கிருந்து எழுந்த சுகந்தி சாப்பாட்டுத் தட்டை எடுத்துக்கொண்டு இரண்டு மேசை தள்ளி போய் உட்கார்ந்து கொண்டாள். 

“கேர்ள்ஸ்! ப்ளீஸ் ஸ்டாப். ஆல் ஆர் வாட்ச்சிங்” என்று லாவண்யா அதட்டும் குரலில் சொன்னவுடன் மிகவும் சிரமப்பட்டு இருவரும் சிரிப்பை அடக்க முயன்றனர்.

“கேர்ள்ஸ்! திஸ் இஸ் நாட் ரைட். கோ அண்ட் சே சாரி டு ஹெர்” என்றாள் லாவண்யா.

“கிரேட் ஐடியா. கம் ஐ கிளாப் ஃபார் யூ” என்று சொல்லிவிட்டு அமெண்டா மீண்டும் சிரிக்க ஆரம்பித்தாள். 

“ஏய் லாவ்ஸ்! என்னாச்சுலா? அவளுக்கு இப்படி சப்போர்ட் பண்றே” என்று கேட்ட மதுமிதாவின் முகம் சட்டென்று மாற அமெண்டாவின் காதுக்குள் ஏதோ குசுகுசுத்தாள். 

“ஏய் லாவ்ஸ்! ஆர் யூ ஆல்சோ எ பேபி?” என்று அமெண்டா கேட்டவுடன் “நோ லா. ஐ ஆம் நாட்” என்று வேகமாக மறுத்தாள் லாவண்யா.

“பேபியை விட நீ ரொம்ப ஸ்கின்னியா இருக்கியா. அதான் டவுட்” என்று நக்கலாகச் சொன்ன மதுமிதாவின் கழுத்தை அப்படியே நெரித்துவிடலாம் போலிருந்தது லாவண்யாவுக்கு.

அமெண்டா பாதி வழியில் ‘பை’ சொல்லிவிட்டு சீன வகுப்புக்குச் செல்ல மற்ற மூவரும் தமிழ் வகுப்பிற்குள் நுழைந்தனர். லாவண்யாவும் மதுமிதாவும் பக்கத்து பக்கத்து இருக்கைகளில் உட்கார அவர்களுக்கு நான்கு மேசைகள் முன்னால் அமர்ந்திருந்த ப்ரணவ் பக்கத்தில் சென்று சுகந்தி அமர்ந்தாள். அமர்வதற்கு முன்பு திரும்பி இவர்களைப் பார்த்து நக்கலாகச் சிரித்தாள்.  “பேபிக்கு ரொம்ப திமிராயிடுச்சு லாவ்ஸ்” என்ற மதுமிதாவின் எரிச்சலை லாவண்யாவால் புரிந்து கொள்ள முடிந்தது. தமிழ் வகுப்பில் ஸ்மார்ட்டாக இருக்ககூடிய மாணவர்களில் ப்ரணவும் ஒருவன். 

அடிக்கடி நின்று விடும் எம்.ஆர்.டி ரயிலைப் போலில்லாமல் அந்த நாள் வகுப்புகளைச் சுமந்து கொண்டு விரைந்து ஓடியது. மதியம் பள்ளி முடிந்து லாவண்யா பேருந்து நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது திடீரென வயிற்றில் சுருக்கென்று ஒரு வலி உதித்து மெல்ல பரவத் தொடங்கியது. பேருந்துக்காக காத்திருந்த சமயத்தில் வயிற்றைப் பிடித்து இழுப்பது போலவும் வாந்தி வருவது போலவும் இருந்தது. இடைவேளையில் சாப்பிட்ட மீ கோரிங்கால் இருக்குமோ என்று எண்ணியவள் கோய் மீன்களை நினைத்துக் கொண்டே பேருந்தில் ஏறினாள். வீட்டை அடைந்து கதவைத் தட்டியவுடன் அவளது அம்மா வந்து கதவைத் திறந்தார்.

“என்னாச்சு லாவண்யா? ஏன் டல்லா இருக்க? உடம்பு சரியில்லையா?” 

“வயிறு லேசா வலிக்குதும்மா.” 

“பசியா இருக்கும். குளிச்சிட்டு வா. சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” 

குளியல் அறைக்குள் நுழைந்து உடைகளைக் கழற்றிவிட்டு சிறுநீர் கழித்தவள் கழுவுவதற்கு குவளையிலிருந்த தண்ணீரை எடுத்தாள். கழுவும் முன் தடவி விட்டு கையைப் பார்த்தாள். பிறகு கையிலிருந்த குவளையை வீசி எறிய அது சுவரில் பட்டு தண்ணீரை நாலாபக்கமும் சிதறி அடித்தபடி கீழே விழுந்தது. குழாயைத் திறந்துவிட்டவள் கொட்டும் தண்ணீரைப் பார்த்துக்கொண்டே நின்றாள். வயிற்று வலி குறைந்து பசிப்பது போலிருந்தது. 

“லன்ச் என்னம்மா?” என்று குளியல் அறையில் இருந்து கத்தினாள்.

“சாம்பார். பீட்ருட் பொரியல்”

“ஓ நோ! ஏம்மா எப்பப் பாத்தாலும் பருப்பு சாம்பாரையே வச்சுக் கொல்றே?  சிக்கன் நக்கட்ஸாவது பொரிச்சுத் தாம்மா. ப்ளீஸ்!” 

“சிக்கன் அடிக்கடி சாப்பிட்டா உடம்புக்கு கெடுதல்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது. ஓவர் க்ரோத் வந்துடும்”   

“ஓவர் க்ரோத்” என்று வாய்க்குள் முணுமுணுத்தவாறு குளியல் அறை கண்ணாடியில் தனது உடலைப் பார்த்தாள். அப்படியே சில நிமிடங்கள் நின்றவள் பின்பு ஷவரைத் திறந்துவிட்டு அதனடியில் நின்றுகொண்டாள்.       

குளித்து முடித்து சாப்பாட்டுத் தட்டுடன் வந்து தொலைக்காட்சி முன் லாவண்யா அமர்ந்தபோது டிஸ்கவரி சானல் ஓடிக்கொண்டிருந்தது. இருபதுக்கும் மேற்பட்ட ஓநாய்கள் ஒன்றாக இணைந்து தங்கள் தொகுதியைச் சேர்ந்த ஒமேகா ஓநாயைத் தாக்கிக் கொண்டிருந்தன. தட்டில் இருந்த சோற்றில் கை அளைய கண்களை எடுக்காமல் அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மாவின் கைத்தொலைபேசி ஒலித்து அவளது கவனத்தைக் கலைத்தது.

“ஏய் எருமை! எப்படி இருக்கே? பிள்ளைகள் நல்லா இருக்காங்களா? அவரு எப்படி இருக்காரு?” 

அம்மா அவருடைய நெருங்கிய தோழி தேவியை மட்டும்தான் எருமை என்று அழைப்பார் என்பது லாவண்யாவுக்குத் தெரியும்.

“யாரு நம்ம காயத்ரியா? எப்போ?” 

“ரொம்ப சந்தோஷமா இருக்கு எருமை” 

“ஏன் தேவையில்லாம கவலைப்படுறே? இப்போல்லாம் இது வெரி காமன்.” 

இப்போது லாவண்யாவின் கண்கள் மட்டும் தொலைக்காட்சியில் லயித்திருக்க காதுகள் அம்மாவின் பேச்சில் குவிந்தன.      

“பிரைமரி ஃபைவ்லேயே வந்துட்டாளேனு நெனைச்சு சந்தோஷப்படு. பிரைமரி சிக்ஸ்ன்னா ரொம்ப கஷ்டம் தெரியுமா?”

“நமக்குள்ள என்ன ஃபார்மாலிட்டி. நீ கூப்பிடாமல் போனாலும் நான் வருவேன்.   ஞாயிற்றுக்கிழமை காலையிலதானே? ஃபேமிலியோட ஆஜர் ஆயிடுவேன்” 

“லாவண்யா வந்துட்டா. சாப்பிட்டுகிட்டு இருக்கா” 

“என்னோட உடல்வாகுதான் அவளுக்கும். நான் பதினைஞ்சு வயசுலதான் வந்தேன். அப்படி பார்த்தா இன்னும் ரெண்டு வருஷம் இருக்கே. மெதுவா வரட்டும். இப்போ என்ன அவசரம்?”

அம்மா தொடர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தார். லாவண்யாவால் சாப்பிட முடியவில்லை. பாதி சோற்றுடன் சாப்பாட்டுத் தட்டை எடுத்துச் சென்று அடுப்பங்கரையில் வைத்தவள் கையைக் கழுவிவிட்டுத் தனது அறைக்குள் சென்று கதவை அறைந்து மூடிக்கொண்டாள். ஒமேகா ஓநாயைத் தாக்கும் மற்ற ஓநாய்களின் ஊளைச் சத்தமும் குரைப்பொலியும் மூடிய கதவையும் தாண்டி அவள் செவிப்பறையைத் தாக்கின.   


  • அழகுநிலா

 சங் கன்ச்சில் சிறுகதைத் தொகுப்பில்  இடம்பெற்றுள்ள இச்சிறுகதை ஆசிரியரின் அனுமதியுடன் ‘பெட்டகம்’ பகுதியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.