நேற்று மதியம் அவர்கள் செய்தது இதுவே
அவர்கள் என் அத்தையின் வீட்டைத் தீ மூட்டினார்கள்
தொலைக்காட்சியில் வரும் பெண்கள் செய்யும் வகையில்
ஒரு ஐந்து பவுண்ட் தாள் போல
குறுக்கே மடிந்து நான் அழுதேன்.
என்னை நேசிப்பதை வழக்கமாயுள்ள பையனை அழைத்தேன்
என் குரலைச் ‘சரி செய்ய’ முயன்றேன்
நான் ஹலோ என்றேன்
அவன் சொன்னான், வார்சன், என்ன பிரச்சனை, என்ன நடந்தது?
நான் பிரார்த்தித்துக் கொண்டே இருக்கிறேன்,
என் பிரார்த்தனைகள் இப்படித்தான் தோற்றமளிக்கின்றன
பிரிய கடவுளே
நான் இரு நாடுகளிலிருந்து வருகிறேன்
ஒன்று தாகத்தோடு இருக்கிறது
இன்னொன்று தீ பற்றி எரிகிறது
இரண்டுக்கும் நீர் தேவை.
பின்னர் அந்த இரவில்
ஒரு நிலப் பட ஏடொன்றை நான் என் மடியிலிருத்தி
முழு உலகையும் என் விரல்களால் வருடியபடி
எங்கே வலிக்கிறது
எனக் கிசுகிசுத்தேன்.
அது பதிலளித்தது
எல்லா இடங்களிலும்
எல்லா இடங்களிலும்
எல்லா இடங்களிலும்
வீடு
வீடு சுறாவின் வாயாக இல்லாத வரையில்
யாரும் வீட்டை விட்டுச் செல்வதில்லை
முழு நகரமும் ஓடிக் கொண்டிருப்பதை நீங்கள் கண்ணுறும்போது
நீங்கள் எல்லை நோக்கி மட்டுமே ஓடுவீர்கள்
உங்களை விட விரைவாக ஓடும் உங்கள் அண்டை வீட்டார்
தங்கள் தொண்டையில் குருதியின் வாசனையைச் சுவாசிக்கிறார்கள்
உங்களோடு பள்ளிக்குச் சென்ற,
பழைய தகரத் தொழிற்சாலைக்குப் பின் உங்களை முத்தமிட்டுத் தலை சுழல வைத்த, அந்தப் பையன்
தன் உடலை விடப் பெரிய ஒரு துப்பாக்கியை ஏந்திக் கொண்டிருக்கிறான்
வீடு உங்களைத் தங்க அனுமதிக்காத போது மட்டுமே
நீங்கள் வீட்டை விட்டுச் செல்கிறீர்கள்.
வீடு உங்களை
உங்கள் பாதங்களில் நெருப்பு பற்ற
வயிற்றில் குருதி கொதிக்கத்
துரத்தாத வரை யாரும் வீட்டை விட்டுச் செல்வதில்லை
கத்தி, அச்சுறுதல்களை
உங்கள் கழுத்துள் பொசுக்கும் வரை
இது, நீங்கள் இப்படிச் செய்வோம் என, ஒரு போதும் நினைக்காத ஒன்று
அப்போதும் கூட நீங்கள் தேசிய கீதத்தை உங்கள் மூச்சின் ஆழத்தில்
சுமந்து சென்றீர்கள்
உங்கள் கடவுச் சீட்டை மட்டும் விமானநிலையக் கழிவறையொன்றில்
விம்மிக் கொண்டே கிழித்தீர்கள், ஏனெனில் ஒவ்வொரு
வாய்க் கொள்ளளவுத் தாளும்
நீங்கள் திரும்பிச் செல்ல மாட்டீர்கள் என்பதைத் தெளிவாக்கியது.
தண்ணீர் நிலத்தைக் காட்டிலும் பாதுகாப்பானது என்றில்லாதவரை
யாரும் தங்கள் குழந்தைகளைப் படகில் ஏற்ற மாட்டார்கள் என்பதை
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்,
புகைவண்டிகளுக்கடியே
தொடர்வண்டிப் பெட்டிகளுக்குக் கீழே
யாரும் தங்கள் உள்ளங்கைகளைப் பொசுக்கிக் கொள்வதில்லை
பிரயாணித்த மைல்கள் பயணத்தையன்றி வேறொன்றைக் குறிக்கும் வரை
செய்தித் தாளை உண்டபடி ஒரு சரக்குந்தின் வயிற்றுப் பகுதியில்
இரவும், பகலும் யாரும் பயணிப்பதில்லை.
யாரும் வேலிகளுக்கு அடியே ஊர்ந்து செல்வதில்லை
யாரும் அடி வாங்கவோ
பரிதாபத்துக்குள்ளாகவோ விரும்புவதில்லை
எவரும் அகதி முகாம்களையோ
அல்லது விடப்பட்ட இடத்தில் உங்கள் வலியுண்ட உடல்
உடற் பரிசோதனைக்கு உட்படுத்தப் படுவதையோ
அல்லது சிறையையோ
ஏனெனில் சிறை,
பற்றி எரியும் நகரத்தை விடப் பாதுகாப்பானது என்றோ
ஒரு இரவுச் சிறைக் காவலர்
உங்கள் தந்தையைப் போலத் தோற்றமளிக்கும்
ஒரு சரக்குந்து முழுதுமான ஆண்களைவிட மேல் என்றோ
தேர்வு செய்வதில்லை
யாராலும் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது
யாராலும் அதை ஜீரணிக்க இயலாது
யாருடைய தோலுக்கும் அவ்வளவு திடமிருக்காது
இந்த
தாயகம் திரும்ப வேண்டிய கருப்பர்கள்
எங்கள் நாட்டை உறிஞ்சி வறண்டதாக்கும்
அகதிகள்
அசுத்தமான புலம் பெயர்ந்தோர்
தஞ்சம் தேடுபவர்கள்
உதவி வேண்டி நீளும் கைகளுடைய நீக்ரோக்கள்
விசித்திரமான காட்டுமிராண்டித்தனமான வாசனையோடு உள்ளார்கள்
தங்கள் நாட்டைக் குழப்பமாக்கினார்கள், பின் இப்போது
எங்கள் நாட்டை அப்படியாக்க விழைகிறார்கள் —
எப்படி இந்த வார்த்தைகள்
இந்த அழுக்கான பார்வைகள்
உங்களைப் பாதிக்காமலிருக்க முடிகிறது
ஒரு வேளை ஒரு அங்கம் கிழித்தெறியப்படுவதை விட
இந்த அடி மெல்லியது என்பதாலிருக்கலாம்
அல்லது இந்த வார்த்தைகள்
உங்கள் கால்களுக்கிடையே
பதினான்கு ஆண்கள் இருப்பதை விட மென்மையானவை என்பதாலிருக்கலாம்
அல்லது இந்த அவமதிப்புகள்
இடிந்த துண்டுகளை விட
எலும்பை விட
துண்டுகளாயிருக்க கூடிய உங்கள் குழந்தையின் உடலை விட
விழுங்கிக் கொள்ள எளிதானவையாக இருக்கலாம்.
நான் வீட்டிற்குப் போக விரும்புகிறேன்,
ஆனால் வீடு ஒரு சுறாவின் வாயாக இருக்கிறது
வீடு ஒரு துப்பாக்கியின் குழலாக உள்ளது
வீடு உங்களைக் கரைக்குத் துரத்தாத வரை
அல்லது வீடு உங்களிடம்
வேகமாக நட
உன் உடைகளை விட்டுச் செல்
பாலைவனத்தை ஊர்ந்து கட
பெருங்கடல்களூடே உழன்று செல்
மூழ்கு
உயிர் காத்துக்கொள்
பசியாக இரு
யாசி
உன் மதிப்பை மற
நீ உயிர் பிழைத்திருப்பதே அதி முக்கியம்
எனச் சொல்லாத வரை, யாரும் வீட்டை விட்டுச் செல்வதில்லை
வீடு ஒரு களைத்த குரலாகி, உங்கள் காதுகளில்
விட்டுச் செல்,
என்னை விட்டு ஓடிப் போ இப்பொழுது
நான் என்னவாகி இருக்கிறேன் என எனக்குத் தெரியாது
ஆனால் எந்த ஒரு இடமும்
இங்கிருப்பதை விடப் பாதுகாப்பானது
எனச் சொல்லாதவரை யாரும் வீடு நீங்குவதில்லை.
வார்சன் ஷையர் (1988 – ), பிரிட்டானியக் கவிஞர், செயற்பாட்டாளர் மற்றும் ஆசிரியர். கென்யாவில் பிறந்து பிரிட்டனில் வாழும் இவர் லண்டனின் முதல் இளம் அரச கவி. இவரது எழுத்துக்கள், போரால் சிதைந்த பிரதேசங்களில் இருந்து வரும் அகதிகளின், புலம் பெயர்ந்தவர்களின் காயங்களைப் பேசுகின்றன. குடும்ப சிக்கல்கள், பெண் வெறுப்பு, பாலியல் வன்முறை, உடல் குறித்த உளச் சிக்கல்கள் போன்றவற்றை விவாதிக்கின்றன.
சிறப்புப் படைப்புகள்: Teaching My Mother How to Give Birth, Her Blue Body, Our Men Do Not Belong to Us
.