(எம்) மாடத்து (டி) தெக்கேப்பாட்டு வாசுதேவன் நாயர் [முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்.]

(எம்) மாடத்து (டி) தெக்கேப்பாட்டு வாசுதேவன் நாயர்

னது இலக்கிய வாழ்க்கையில் கூடலூரிடம்தான் நான் மற்றெல்லாவற்றையும் விடக் கடமைப்பட்டிருக்கிறேன். வேலாயுதேட்டன், கோவிந்தன்குட்டி, தாயம் விளையாட்டுக்காரன் கோந்துண்ணி மாமா, காதறுந்த மீனாட்சி அக்கா போன்றவர்களின் ஊரான கூடலூரும், அம்மா, அப்பா, சகோதரர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், அடுத்த வீட்டுக்காரர்கள் போன்றவர்களும் எனக்கு மிகவும் பிரியமான கதாபாத்திரங்கள்தான். என் சிறிய அனுபவ மண்டலத்தில் உட்பட்ட ஆண்கள் பெண்களின் கதைகள் தான் என்னுடைய இலக்கியத்தில் முழுமையாக உள்ளன. மேலும் சொல்வதென்றால் அவைகள் எல்லாம் எனது கதைகளே எனவும் கூறலாம்.”

தனிமைத் துன்பங்களை இனிய இசைக் காவியங்களாக மாற்றியவரும், மலையாள இலக்கிய உலகில் புதுமையைப் புகுத்தியவருமான எம்.டி.வாசுதேவன் நாயர் தான் ஒரு சமயம் மேற்கண்டவாறு எழுதினார். ஆனால், இந்த அழியா கதாபாத்திரங்களை ஆராதனை செய்துகொண்டும், நேசித்துக் கொண்டும் எம்.டி. என்ற எழுத்தாளரிடம் உறவு கொள்ள முயல்பவர்கள் முற்றிலும் தோற்றுதான் போவார்கள். எம்.டி.யின் கதாபாத்திரங்கள் அவரிடமுள்ள நன்மை தீமைகளில் ஒரு பாகத்தை மட்டுமே உட்கொண்டுள்ளன. ஆயிரம் துதிபாடிகளின் உறவைவிட தனது எல்லா நிறை குறைகளோடும் தன்னை விரும்பும் பத்து பேர்களின் உறவைத்தான் எம்.டி. விரும்புகிறார்.

மலையாள மொழி உள்ள இடங்களிலெல்லாம் மறையாத ஒரு நினைவாக மாறிய பிரபல எழுத்தாளரான எம்.டி.வாசுதேவன் நாயரை உங்களுக்கு என்னைவிட நன்றாகவே தெரிந்திருக்கலாம். நான், பரிபூரணமான உணர்ச்சிக் கொந்தளிப்புள்ள, தன்னிடத்திலேயே மிக்க வைராக்கியமுள்ள, நட்பின் சிகரமான மாடத்து தெக்கேப்பாட்டு வாசுதேவன் நாயரைத்தான் இங்கே அறிமுகப்படுத்தப் போகிறேன். இரத்தம் சிந்தி வெளிறிப்போன இரவுகளையும், வெயிலால் வெந்துபோன பகல்களையும் உருவகப்படுத்துகின்ற, இன்றும் தனிமையில் பறக்க ஆசைப்படுகின்ற அசாதாரணரான ஒரு சாதாரண மனிதரைத்தான் அறிமுகப்படுத்தப் போகிறேன்.

பொன்னானி தாலுக்காவிலுள்ள கூடலூர் என்ற கிராமத்தில் நல்ல பழக்கமும் பாரம்பரியமுமுள்ள ஒரு குடும்பத்தில் 1933-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ம் தேதி எம்.டி.வாசுதேவன் நாயர் பிறந்தார். தந்தையின் பெயர் புன்னையூர்குளம் டி.நாராயணன் நாயர்; தாயின் பெயர் மாடத்து தெக்கெப்பாட்டு அம்மாளு அம்மாள். தந்தை சிலோனில் வியாபாரம் செய்துகொண்டிருந்தார். நான்கு சகோதரர்களில் இளையவர் வாசு. மலைக்காவு ஆரம்பப்பள்ளி, குமார நல்லூர் பள்ளி, பாலக்காடு விக்டோரியா கல்லூரி ஆகிய இடங்களில் அவர் தன் படிப்பைப் பெற்றுக்கொண்டார். பட்டாம்பி உயிர்நிலைப்பள்ளியில் நான்கு மாதமும், சாவக்காடு உயிர்நிலைப் பள்ளியில் இரண்டு நாட்களும் தற்காலிக ஆசிரியராகப் பணிபுரிந்தார். மூஸ்ஸது சகோதரரர்களின் எம்.பி. டியூடோரியல் கல்லூரியில் ஆசிரியராக இருக்கும்போதே கிராம சேவகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தளிப்பறம்பு பயிற்சி நிலையத்திலும் சில காலம் கழித்தார். அது பிடிக்காமையால் மீண்டும் எம்.பி. டியூடோரியல் கல்லூரியிலேயே சேர்ந்துவிட்டார். பின் 1968-ல் ‘மாத்ருபூமி’ வார இதழின் ஆசிரியர் ஆனார். 1968-ல் என்.வி.கிருஷ்ணவாரியர் ராஜினாமா செய்ததும் ‘சீ்ஃப் எடிட்டர்’ ஆனார். கோழிக்கோடு செயிண்ட் பெண்கள் பள்ளியில் ஆசிரியையாக இருந்த பிரமீளாதான் இவர் மனைவி. சிதாரா என்ற ஒரே மகள். வீட்டின் பெயரும் மகளுடையதுதான்.

பி.எஸ்ஸி. தேறியதும் வேலைக்கு விண்ணப்பங்களை அனுப்பிவிட்டு நிராசையுடன் வீட்டில் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த காலம் அது. அப்போது அவர் தன் தந்தையின் வீட்டில்தான் தங்கியிருந்தார். மூன்று சகோதரர்களும் அங்கேயே இருந்தார்கள். வாழ்க்கைத் திருப்பத்திற்கு வழிகோலிய அந்த இரவைப் பற்றிய நினைவை ஒரு பொக்கிஷமாகவே இன்றும் எம்.டி. பாதுகாத்துக் கொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சிதான் என்ன?

அன்றிரவு வீட்டின் நடுத்தளத்தில் எல்லோரோடும் சேர்ந்து சாப்பிட அமர்ந்தார் வாசு.

அப்போது, “பெரிய பிள்ளைகளைப் பற்றி எனக்கொன்னும் கவலையில்லை. அவர்கள் என்னுடைய அந்தஸ்தையும் அனுமானத்தையும் கெடுத்துவிட மாட்டார்கள். ஆனால் வேண்டாததையெல்லாம் எழுதிக் குவித்துக்கொண்டு பத்தாயத்தின் மேலே வசிக்கும் நீதான் எனக்கேற்பட்ட ஒரு சாபம். உனக்காக நான் செய்யும் செலவையெல்லாம் – ஒவ்வொரு பைசாவையும் கூட – கடலில் எறிவதைப் போல்தான் நான் நினைக்கிறேன். இந்த வீட்டிற்கும் நாட்டிற்கும் ஓர் அவமானச் சின்னம்தான் நீ” என்று கூறிய தந்தையின் வார்த்தைகள் சிறிது அதிகமான கொடூரமாகவே இருந்தது. கையிலிருந்த முதல் கவளத்திலேயே கண்ணீரின் சுவையுள்ள அந்த உருண்டையை பாத்திரத்திலேயே போட்டுவிட்டு பத்தாயத்தின் மேலே ஏறிச் சென்று படுத்துவிட்டார்.

எம்.டி.யின் மூத்த சகோதரரின் மனைவியும், எம்.டி.யின் அன்பிற்குகந்த மூத்த சகோதரரும் கீழே இறங்கிவரும்படி மிகவும் வலியுறுத்தினார்கள். ஆனால், அவர் கீழே இறங்கி வரவேயில்லை. துக்கத்தைவிட ரோஷம்தான் அப்போது அவர் மனதில் நிரம்பியிருந்தது.

அடுத்த நாள் சூரியோதயத்திற்கு முன்பே இரும்புப் பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவருக்கு ஆறு மைல்களுக்குப்பாலுள்ள பஸ் ஸ்டாண்டுதான் லட்சியமாக இருந்தது. அந்தப் பயணத்துக்கு இரண்டு ரூபாய் கடன் கொடுத்த ஒரு ‘மாராரை’ இந்தப் பெரிய மனிதர் இன்றும் நினைத்துப் பார்க்கின்றார். அடக்கமுடியாத அந்தக் கோபம் தூண்டிய நீண்டதொரு பயணத்தை முடித்துவிட்டு மீண்டும் திரும்பி வந்த மாடத்து தெக்கேப்பாட்டு வாசுதேவன் நாயர் ஊருக்கும் வீட்டிற்கும் அன்பிற்குரியவராகி விட்டிருந்தார்.

“தங்கள் வாழ்க்கையில் அதிக ஆனந்தத்தை அனுபவித்த நிமிடம் எது?” என்றதற்கு, தகர்ந்த ‘நாலுகட்டு’களை தாஜ்மகாலாக மாற்றிய எம்.டி. “ஒன்றில்லை, பல உண்டு. ஒரு புத்தகம் எழுதி முடித்து இறுதியில் ஒரு முடிவு கோடிட்டு, வெறுமனே ஒரு கையெழுத்திட்டு மடித்து வைக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியின் விலைமதிப்பற்ற நிமிடங்களில் மூழ்கிவிடுவேன் நான். முதன்முதலாக ஒரு பத்திரிகையில் என் பெயர் அச்சடித்து வந்தபோது அடைந்த மகிழ்ச்சியைப் பற்றி இன்றும் எனக்கு நினைவுண்டு. வாழ்க்கையில் எப்போதாவது கிடைக்கும் மகிழ்ச்சியினுடையதும் சுய திருப்தியினுடையதுமான அந்த சில நிமிடங்களை அனுபவிக்காத எழுத்தாளர்கள் யாரும் இருக்க முடியாது. அது வெகு தூரத்திலில்லாமல் வேறு எங்கேயோ உண்டு என்னும் நம்பிக்கையையல்லவோ நம்மைக் கசப்புகளின் நடுவே நடத்திச் செல்கிறது!” என்று சொன்னார்.

எம்.டி. தன் வாழ்க்கையில் தனிமையில் அமர்ந்து அழுத நிமிடங்கள் நிறைய உண்டு. வாய்விட்டுச் சிரிக்கும் சிரிப்புக்கிடையே அழுகின்ற இந்த இருளின் இதயத்தை (இருட்டின்டெ ஆத்மாவை) நாம் அவ்வளவு சுலபத்தில் அறிய முடியாது. தனிமையில் தனது எல்லாத் துன்பங்களையும் உள்ளுக்குள் ஒதுக்கிவிடும் எம்.டிக்கு வாய்விட்டு உரத்து அழவும் தெரியவில்லை.

“போலிச் சிரிப்பால் முகத்தை அலங்கரிக்க என்னால் முடியவில்லை. அதனால் என்னிடம் அதிக நெருக்கம் காட்டுபவர்கள் கூட மிகவும் குறைவு. ஏராளமானவர்கள் என்னை ஓர் அகந்தைக்காரனாகவே கருதுகின்றனர்” என்று ஒரு சமயம் எம்.டி. எழுதினார்.

இந்த அகந்தைக்காரன் மனதின் உள்ளறைகளிலுள்ள சலனங்களைப் புரிந்துகொண்டவர்கள் வெகு சிலரேயாவர்.

தனிமையும் மகிழ்ச்சியின்மையும் உருவகப்படுத்தியதுதான், எம்.டி.யிடமுள்ள தனித்தன்மை. காரணம் ஒன்றுமில்லாமல் சொந்த வீட்டிலேயே அந்நியனாகவும், வயிறு நிறைந்த உணவென்பது ஒரு பெரிய கனவாகவும் இருந்த வாசுவின் இளம் வயது நினைவுகள், யாரையும் கண்ணீர் விடச் செய்யும். கர்க்கடக (ஆடி) மாதத்தில் பிறந்த வாசுவிற்குப் பிறந்த நாள் விருந்து உண்ணுவதற்கான பாக்கியமே ஏற்படவில்லை.

ஒரு முறை தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “என் பிறந்த நாளுக்கு எனக்குக் கஞ்சி வேண்டாம், சோறுதான் வேண்டும்” என்று அவர் தம் தாயிடம் கேட்டாராம்.

அப்போது வீட்டில் ஒரு மணி நெல் கூட இல்லாத நேரம். இருந்தும் அந்தத் தாய் மூன்று ரூபாய் கடன் வாங்கி ஓர் ஆளை நெல் வாங்க அனுப்பினார். மதியம் இரண்டு மணிக்குப் பிறகுதான் நெல் வந்தது. அது சோறாகவும் கறிகளாகவும் மாறியபோது மணி நான்காகிவிட்டது. அதற்குள் வாசுவின் பசியெல்லாம் மரத்துவிட்டது. விருந்தைப் பற்றிய அவருடைய கனவு அவருடைய மனதிலேயே இறந்துவிட்டது. அவர் சாப்பிடவில்லை. அந்த மகிழ்ச்சியற்ற சிறு பையன் இன்றும் எம்.டியிடம் வாழ்ந்துகொண்டிருக்கிறான்.

திருமணத்தைப் பற்றி நான் கேட்டேன். அதிகம் பேர்களுக்குத் தெரியாத அசாதாரணமான அந்தத் திருமணத்தைப் பற்றிய கதையை எம்.டி. சொன்ன வார்த்தைகளாலேயே கீழே எழுதுகிறேன்.

“எனது திருமணத்துக்கு அழைப்பிதழ் அடிக்கவில்லை. சடங்குகளும் இல்லை. என்னோடு எம்.பி. டியூட்டோரியல் கல்லூரியில் வேலை செய்துகொண்டிருந்த ஒரு பெண்ணுடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. புத்தகத்தின் மூலம் ஏற்பட்ட அந்த நட்பு மிக நெருக்கமாயிற்று. ஆபீஸில் வேலை செய்துகொண்டிருக்கும்போதே அவர் எனக்கு ஒரு குறிப்பு அனுப்பினார். தன் தாயுடன தகராறு என்றும், ஓய்.டபிள்யூ.ஸி.ஏ.விலோ வேறெங்காவதோ ஓர் அறை ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் அந்தக் குறிப்பில் கண்டிருந்தது. அந்தப் பேப்பரைக் கிழித்தெறிந்துவிட்டு, ‘என் பிளாட்டிற்கு வந்து தாங்கள் தங்கலாம்’ என்று அப்போதே பதில் எழுதினேன். அவர் வந்தார். என் வீட்டின் சொந்தக்காரனுக்கு பிரமீளாவை, ‘இது என்னுடைய மனைவி’ என்றுதான் நான் அறிமுகப்படுத்தினேன். மறுநாள் முதற்கொண்டு வதந்திகள் கிளம்பின. யாரெல்லாமோ, ‘ரிஜிஸ்டர் செய்ய வேண்டாமா?’ என்று உபதேசம் செய்தார்கள். கோயிலுக்குக் கொடுக்காத மரியாதையைப் பதிவாளருக்கு மட்டும் கொடுக்க என் மனம் ஒப்பவில்லை. அதனால் ரிஜிஸ்டரார் ஆபீஸுக்கும் போகவில்லை.”

எம்.டி.யை விட பிரமீளாவுக்கு நான்கு வயது அதிகமாகும்.

“திருமணத்திற்கு முன்பே எம்.டி.யிடம் நெருங்கிப் பழகி அவரைப் பற்றித் தெரிந்துகொண்டிருப்பீர்களே. அன்றைக்கும் இன்றைக்கும் என்ன வித்தியாசத்தை எம்.டி.யிடம் கண்டீர்கள் – காண்கிறீர்கள்?” என்று நான் மிஸஸ் எம்.டி.யிடம் கேட்டேன்.

“காதலர்கள் திடீரென்று கணவன் மனைவியராகிவிட்டால் உண்டாகக்கூடிய மாற்றங்கள் மட்டுமே எங்கள் சூழ்நிலையிலும் நேரிட்டுள்ளது. எங்களுக்கு மட்டுமேயுள்ள ஓய்வு நேரங்களில் இப்போதும் கூட, நாங்கள் பழைய காதலன் காதலியாகவே மாறுவோம்” என்பது பிரமீளா அவர்களின் பதில்.

இலக்கியவாதியான எம்.டி.வாசுதேவன் நாயரைத்தான் தான் அறிந்தவளென்றும், எழுத்தாளர்களிடம் தனக்கு அக்காலத்தில் பெரும் நடுக்கமே இருந்ததென்றும் அவர் கூறினார். ஓர் எழுத்தாளருக்கு ஏற்படக்கூடிய எல்லா பலவீனங்களையும் நன்றாகவே அறிந்துள்ள அவர், தனது மகள் ஓர் எழுத்தாளனை மணக்க ஒப்புக்கொள்ள முடியாது என்னும் பிடிவாதம் தன்னிடம் உள்ளது என்றும் கூறினார்.

“Married life-ஐ விட Married loneliness தான் எனக்கு அதிகம் அனுபவப்படுகிறது. அதனால் எனது மகளுக்கு நூறு பங்கும் Married life-தான் உண்டாக வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.”

கணவரை ஒருபோதும் தான் கட்டுப்படுத்த முயலவில்லை என்கிறார். அட்ஜெஸ்ட் செய்ய முயலும், மனைவியின் கட்டுப்பாட்டில் வாழ்ந்து, வாழ்க்கையில் மகிழ வேண்டிய நேரங்களையெல்லாம் இழந்துவிட்டு, ஐந்து மணியானதும் மனைவியினுடைய சிறையில் வாழும் கணவர்களை தான் விரும்பவில்லை யென்றும் தனக்கு அவர்களிடம் பரிதாபமேயுள்ளதென்னும் அபிப்ராயம் உள்ளவர்தான் மிஸஸ் எம்.டி.வாசுதேவன் நாயர். “வீட்டிற்கு வெளியேயுள்ள எம்.டி.யின் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படுவதுண்டா?” என்று நான் மிஸஸ் எம்.டி.யிடம் கேட்டேன்.

“அவரோட out-door life பற்றி எனக்குக் கவலையில்லை. பிரிவினால் ஏற்படக்கூடிய விரகதுன்பம் மட்டும்தான் உள்ளது. அதாவது தனிமைத்துன்பம். அன்னியோன்னியமுள்ள நம்பிக்கைதான் எங்களின் திருமண வாழ்க்கையின் வெற்றி” என்று அவர் பதில் கூறினார்.

எம்.டி.யைத் தவிர எஸ்.கே.பொற்றெகாட்டும் தனக்கு பிடித்தமான எழுத்தாளர் என்கிறார் அவர். மிஸஸ் எம்.டி.யும் ஆங்கிலத்தில் கதைகள் எழுதுவதுண்டு. வைக்கம் முகம்மது பஷீரின் மூன்று, நான்கு கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அவர் எம்.டி.யின் நாவல்களையும் சிறுகதைகளையும் இப்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார். ‘மஞ்சு’, ‘இருட்டின்டெ ஆத்மாவு’ ஆகியவைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பும் வந்துள்ளன. பிரார்த்தனையே தன் மனதின் சக்தி என்று கருதும் இந்தப் பாக்கியசாலி குடும்பத் தலைவிதான், எம்.டி.யின் சக்தியென்றும் நான் கருதுகிறேன்.

எம்.டி.யின் இதயத்தில் குடியேறிய நண்பர்களைப் பற்றி நான் ஆராய்ந்தேன்.

“பெயரைக் குறிப்பிட நான் விரும்பவில்லை. ஒருவர் இன்றில்லை. மற்றொருவர் ஓர் எழுத்தாளர். மற்ற இருவர் கோழிக்கோட்டிலுள்ள என் இரு நண்பர்கள். அவர்கள் வியாபாரிகள்தான் என்றாலும் எனக்கு உற்ற நண்பர்களாவர். ஆயுள் முழுக்க அவர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கக் கூடிய நிலையில் அவர்கள் என்னை நேசிக்கின்றனர்; உதவி செய்கின்றனர்.”

தன் மனைவியுடன் தாராளமாகவே பிணங்குவதுண்டு எம்.டி. ஆனால் அந்தப் பிணக்குகள் அதிக நேரம் நீடிப்பதில்லை. ஒரு சண்டையும் கடக்காத குடும்பங்கள் ‘ஸ்னோபு’களின் குடும்பங்களில்  வேண்டுமானால் காணலாம் என்று எம்.டி.கருதுகிறார். தன்னைச் சுற்றிக் காணுகின்ற பல விஷயங்களிடமும் இந்த மனிதருக்கு வெறுப்புண்டு.

“வாழ்க்கை எனக்குப் பிடித்துவிட்டபடியால் தற்கொலை செய்துகொள்வதை நான் விரும்பவில்லை. அதனால், எல்லா வெறுப்புகளையும் உள்ளுக்குள்ளேயே ஒதுக்கி வைத்துள்ளதால், அல்ஸரை வரவழைத்துக்கொண்டு நான் வாழ்கிறேன்.”

“அசாதாரணமாக மனதில் ஏதாவது தோன்றுவதுண்டா?” என்று நான் கேட்டேன்.

மீசையை விரல்களால் தடவியவாறு, சூனியத்தில் எதையோ நோக்கி, “இங்கே ஒரு பெரிய யுத்தம் நடக்க வேண்டும். பாம்பர் விமானங்கள் இங்குள்ள பெரிய நகரங்களையெல்லாம் சுட்டுச் சாம்பலாக்க வேண்டும். அதில் நான் உட்பட அனைவரும் சாம்பலாக வேண்டும். இப்பூமி ஒரு பெரிய சுடுகாடாக மாறவேண்டும். அதன்பின் புதியதொரு மக்களும் அரசும் உண்டாக வேண்டும். அவர்களுக்குத்தான் மனித வாழ்க்கையின் விலை என்னவென்பது தெரியும். இப்போது போலியாக உபயோகிக்கக்கூடிய அரசின் புனர்நிர்மாணம் தொடங்கிய வார்த்தைகளின் பொருளும் அப்போதுதான் புரியும். வருங்காலத்தில் ஏதாவதொரு தலைமுறைக்காவது தன் சொந்த நாட்டை நேசத்துடன் நினைக்கவும் முடியும். இதுதான் என்னுடைய ஒரு கனவாகும்” என்று எம்.டி.கூறுகிறார்.

வெளியிலிருந்து தன்னைக் காண வரும் நண்பர்கள் யாரும் இல்லையென்றால், ஆபீஸ் முடிந்ததும் வீட்டிற்கு வந்துவிடுகிறார். எம்.டி. இரண்டு மூன்று கிளப்களில் அங்கத்தினர் என்றாலும் வருடத்தில் ஒருமுறை கூட அங்கே செல்வது அபூர்வம். நகரத்திலுள்ள இரண்டு மூன்று நண்பர்கள் எப்போதாவது அழைத்துச் செல்லும்போதுதான் மாலை நேரங்களை அவர் வெளியே கழிக்கிறார். அவர்கள் யாரும் இலக்கியவாதிகளல்ல. அவர்களுடன் சேர்ந்துள்ள நிமிடங்களையெல்லாம் மறக்கக்கூடியதாகத்தான் எம்.டி. கருதுகிறார். அவர்களுடைய பேச்சில் இலக்கியம் சற்றும் இருக்காது.

“பகல் முழுவதும்தான் ஆபீஸில் இலக்கியத்தோடு கட்டிப்புரண்டு கொண்டிருக்கிறேன். மாலையிலும் அது வேண்டுமா?”

எம்.டி. தினந்தோறும் மது அருந்துவதில்லை; எப்போதாவது அருந்துவதுண்டு. சில சமயம் மாதக்கணக்கில் கூட மதுவைத் தொடுவதில்லை என்று சொல்லும்படி இருக்கும். சில சூழ்நிலைகளில் இரண்டு மூன்று நாட்கள் அடுத்தடுத்து அது நடந்து கொண்டுமிருக்கும். வேலை செய்யும்போது ஒருபோதும் குடிப்பதில்லை. ஒரு கடுமையான வேலையை செய்து முடித்ததும் சில சமயம் குடிக்கத் தோன்றுமாம்.

“சகோதரி உங்களை எப்படியழைத்துப் பேச்சுக்கொடுப்பார்கள்?”

“அப்படியொன்றும் பிரத்யேகமாக அழைப்பதில்லை. நானும் அவரை பிரத்தியேகமாக அழைப்பதில்லை.”

சிதாராவை வீட்டில் அழைப்பது ‘பாப்பா’ என்றுதான். எம்.டி. ‘எடி’ என்று பாச உணர்வுகளுடன் அழைக்கிறார். படிப்பில் சிதாரா முதலிடம் பெறுவதைப் பெரிய பிரித்யேகமாக எம்.டி. கருதுவதில்லை. அதற்கு தன் சொந்த அனுபவமே காரணம். சிறிய வகுப்புகளில் எப்போதும் முதலிடம் பெறுபவர்கள், கல்லூரியை அடைந்ததும் முட்டாளாகிவிடுகின்றார்கள் என்பதைத் தான் கண்டதுண்டு என்றும் எம்.டி. கூறுகின்றார்.

வாழ்க்கை ஓர் அர்த்த சூனியமானது என்று எம்.டி. கருதவில்லை. ‘வாழ விதிக்கப்பட்ட நிலைக்கு – அதற்கான ஓர் அர்த்தத்தைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியைத்தான் ஒவ்வொரு மனிதனும் நடத்துகிறான். அடுத்தவர்கள், தங்களுக்கு வேண்டியதையெல்லாம் சேர்த்துக் கொடுப்பதை வைத்தே அல்லல் இல்லாமல் வாழலாமென்று கருதுவது முட்டாள்தனமென்று கூட அவர்கள் நினைக்கிறார்கள்’ என்று அல்கட் ராசியிலுள்ள கைதியின் கதையை அவர் விவரித்து விளக்கினார்.

“வருமானங்களிலும், இடம் பொருள்களிலும் வந்த மாற்றம் தங்களின் சுதந்திரத்தையோ, குணத்தையோ, நடவடிக்கைகளையோ கட்டுப்படுத்தியதுண்டோ?”

தனிமைத் துன்பங்களைக் கலையின் அழியா முத்திரைகளாக மாற்றிய எம்.டி. என்னை நோக்கிவிட்டு, “இல்லையென்று முடிவாகக் கூறினால் அது ஹிப்போக்ரஸியாகும். என் உள்மனதிற்குள் நான் பழைய ஆள்தான். ஆனால் பல சமயங்களிலும் பல இடங்களிலும் நடிக்க வேண்டியுள்ளது. பழைய சுதந்திரம் எனக்கு கிடைக்கவில்லை என்பதும் உண்மைதான். பல ஆண்டுகளுக்குப் பின் என்னைக் கண்டதும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது வி.பி.சி? நான் என் குணத்தில் மாறியிருக்கின்றேனா? ஆனால், வாழ்க்கைச் சுகங்களில் மட்டும் சில சில்லரை மாற்றங்கள் வந்துள்ளன. அதனால் முடிந்தமட்டில் பழைய வாசுவை நிலைநிறுத்தவே நான் முயற்சிக்கிறேன்” என்று கூறினார்.

எம்.டி வாசுதேவன் நாயருக்கு ஒருபோதும் மாற்றம் வராது.

தனிமைத் துன்பங்களில் தவமிருந்து வாழக்கூடிய – திமிர் பிடித்தவரென்று தவறாகக் கருதக்கூடிய – எம்.டி.யிடம் ஒரு அசாதாரண தனிமனிதத்துவம்தான் உள்ளது. நட்பு என்ற வார்த்தைக்கு மேலும், ஓர் அர்த்தம்கூட உண்டென்பதை எம்.டி.யிடம் உள்ள உறவுதான் எனக்குக் கற்றுக்கொடுத்தது.

இங்கே, எழுத்தாளனின் சொந்த – அந்தரங்க வாழ்க்கை விஷயங்களையல்லவா நான் எழுதிவருகிறேன்! அதன்படி, மற்றெல்லோருடைய காதலுறவுகளையும் வெளியே கொண்டு வந்துள்ளேன். ஆனால் அதைப்பற்றி எம்.டி.யிடம் மட்டும் என்னால் கேட்க முடியவில்லை. இதுபற்றி உங்களுடைய கேள்வியை நான் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அதனால், சில வார்த்தைகளின் மூலம் நான் தெரிந்துகொண்டதைத் தெளிவில்லாமலேயே ஒதுக்குகிறேன்… பதினான்காவது வயதில், எம்.டி. காதலின் உருவத்தைக் காண்கிறார். இன்னும் கொஞ்சம் வயதானபோது – காதலின் போதை படர்ந்த போது – தான் அதன் உண்மைநிலை புரிந்தது. உடல் துண்டுதுண்டுகளாக நறுக்கப்பட்டாலும், கடைசித்துளி இரத்தமும் உடம்பிலிருந்து ஒழுகிவிட்டாலும் மிஞ்சியிருப்பதுதான் காதல் என்று அன்றுதான் அவர் புரிந்துகொண்டார். அந்தப் பெண் யார்? அதுவொரு பெரிய மெய்சிலிர்க்க வைக்கும் கதையாகும். தாமதம் செய்யாமல் அந்தக் கதையை எழுதுவதாகவும் எம்.டி. சம்மதித்துள்ளார்.

“அறியாத அற்புதங்களையெல்லாம் கர்ப்பத்தில் வைத்துள்ள மகா சமுத்திரங்களை விட, அறிகின்ற நீலா நதிதான் எனக்குப் பிடித்தமானது” என்று கூறும் மாடத்து தெக்கேப்பாட்டு வாசுதேவன் நாயர் ஒரு அற்புத மனிதர்.

வார்த்தைகளுக்கு அழவைக்கக்கூடிய சக்திகூட உண்டென்று எனக்கு முதன்முதலில் புரியவைத்த பிரபல எழுத்தாளரே – அன்பு நண்பரே – உங்களிடமுள்ள ஒரு பெரிய மனிதரை அறிமுகப்படுத்துவதில் நான் தோற்றுவிட்டிருக்கிறேன்.

***

புனைபெயர்: எம்.டி.வாசுதேவன் நாயர்

இலக்கியச்சேவை: இவரின் சிறுகதைகளும் நாவல்களும் தன் சொந்த குடும்பத்திலிருந்தும், சொந்த சமூகத்திலிருந்தும் தேடிக் கொண்டதாகும். சிறுகதைகளில் ‘குட்டி யேட்டத்தி’, ‘இருட்டின்டெ ஆத்மாவு’, ‘ஓப்போல்’, ‘பந்தனம்’, ‘வானப்பிரஸ்தம்’ முதலியன குறிப்பிடத் தகுந்தவை. நாவல்களில் ‘நாலு கட்டு’, ‘காலம்’, ‘ரண்டாமூழம்’ ஆகியவை குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டியதாகும். இவருடைய கதைகளில் பல திரைப்படங்களாகியுள்ளன. மத்திய, மாநில அகாதமி பரிசுகளும் பெற்றுள்ளார். ‘மாத்ருபூமி’ வார இதழில் ஆசிரியராக இருந்தவர். ஞானபீட அவார்டு பெற்றவர். இவரின் பல கதைகளும் நாவல்களும் பல இந்திய மொழிகளிலும் அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.


தமிழில் :குறிஞ்சிவேலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.