ஒரு பழைய கதை. ஒரு பெண் தனக்கு முகம் பார்க்கும் கண்ணாடி வேண்டும் என்று கணவனிடம் கேட்கிறாள். கணவன் அதை வாங்கி தன் கடையில் வேலை செய்யும் சிப்பந்தியிடம் கொடுத்து அனுப்புகிறான். சிறிது நேரம் கழித்து அவன் அந்தக் கண்ணாடியோடு கடைக்குத் திரும்பி வந்துவிடுகிறான். அது தன் முகத்தைச் சரியாகக் காட்டவில்லை, வேறொன்றைக் கொண்டுவருமாறு கடைக்காரரின் மனைவி திருப்பி அனுப்பிவிட்டதாகத் தெரிவிக்கிறான். உடனே கணவன் மற்றொரு கண்ணாடியை வாங்கி அனுப்புகிறான். அதுவும் சரியில்லை என்று திரும்பி வந்துவிடுகிறது.
அன்றைய பொழுது முழுக்க கடைக்கும் வீட்டுக்கும் இடையே நடந்து நடந்து ஓய்ந்துவிடுகிறான் சிப்பந்தி. அப்போதும் மனைவிக்குத் திருப்தியான வகையில் கண்ணாடி அமையவே இல்லை. சலித்துப்போன கணவன் கடைசியாக திருப்பி எடுத்துவரப்பட்ட கண்ணாடியை எடுத்து பரிசோதித்துப் பார்க்கிறான். தன் முகம் தெளிவாகவே தெரிவதை அவனால் உணரமுடிகிறது. தனக்குச் சரியாகத் தெரியும் கண்ணாடி தன் மனைவிக்கு மட்டும் எப்படி பிசகாகத் தெரியும் என்று அவனுக்குப் புரியவில்லை.
கடையை அடைத்த பிறகு இரவு வீட்டுக்குச் செல்லும்போது அதே கண்ணாடியோடு வீட்டுக்குச் செல்கிறான் கணவன். அந்தக் கண்ணாடியை ஆவலுடன் வாங்கும் மனைவி அதை எடுத்துக்கொண்டு அறைக்குள் செல்கிறாள். அடுத்த கணமே திரும்பிவந்து அந்தக் கண்ணாடியும் சரியில்லை என்று சோர்வுடன் தெரிவிக்கிறாள். எங்கே வைத்துப் பார்த்தாய், எப்படிப் பார்த்தாய் என்று கேட்கிறான் கணவன். அவனை தன் அறைக்கு அழைத்துச் சென்று கண்ணாடி வைத்திருக்கும் இடத்தைக் காட்டுகிறாள். கண்ணாடி சுவரில் ஒரு கோணத்தில் சாய்வாக வைக்கப்பட்டிருக்கிறது. கண்ணாடியின் முன் நின்று அவள் தன் முகத்தைப் பார்க்கும் கோணமும் சரியில்லை. பிழை எங்கே என்று கணவனுக்குப் புரிந்துவிடுகிறது. அவன் அக்கணமே ஓர் ஆணியை எடுத்து சுவரில் அடித்து, அதில் கண்ணாடியை மாட்டுகிறான். அதன் முன்னால் தன் மனைவியை நேருக்கு நேராக நிற்கவைத்து கண்ணாடியில் தெரியும் பிம்பத்தைக் காட்டுகிறான். எல்லாமே மிகச்சரியாக இருப்பதாக மனைவி பூரித்துப் போகிறாள்.
இராமாயணத்தை தமிழில் இயற்றிய கம்பருடைய வாழ்விலும் இதேபோன்ற நிகழ்ச்சிகளே நடைபெறுகின்றன. கம்பரை நெருங்குபவர்கள் ஒருவரும் அவரைச் சரியாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்வதில்லை.. பிழையான சித்திரத்தை உருவாக்கிக்கொள்கிறார்கள். பிழையான கோணத்தில் அணுகி, பிழையான புரிதல்களை வளர்த்துக்கொள்கிறார்கள். அதையே உண்மையென நம்பி மற்றவர்களிடம் சொல்லிச்சொல்லிப் பரப்புகிறார்கள். ஆனால் கம்பர் அதைப் பொருட்படுத்துவதில்லை. தன் இயல்புப்படியே வாழ்கிறார். இறுதிக்கணம் வரைக்கும் தன் இயல்பிலிருந்து ஒருகணமும் விலகாதவராகவே வாழ்கிறார். யார் உண்மையான சக்கரவர்த்தி, யாருடைய வாழ்க்கை உண்மையான வாழ்க்கை என்னும் கேள்விகளுக்கு அவருடைய ஆளுமையே பதிலாக அமைந்துவிடுகிறது. ஒரு சிற்பத்தைச் செதுக்குவதுபோல கம்பரின் ஆளுமையை தன் நாடகத்தில் (கவிச்சக்கரவர்த்தி) செதுக்கிவைத்திருக்கிறார் அழகிரிசாமி.
சடையப்ப வள்ளலின் வீட்டில் கம்பர் தான் எழுதிய ஏர் எழுபது என்னும் பிரபந்தத்தை அரங்கேற்றுவதை நாடகத்தின் முதல் காட்சியாக வைத்திருக்கிறார் அழகிரிசாமி. அப்போது கம்பர் எழுதி எழுதி திறமையை வளர்த்துக்கொண்டிருக்கும் எளிய கவிஞர். நாடகத்தின் இறுதியில் முழு இராமாயணத்தையும் ஸ்ரீரங்கத்தில் மக்கள் முன்னிலையில் பாடி அரங்கேற்றுகிறார். அப்போது அவர் கவிச்சக்கரவர்த்தியாக உயர்ந்து நிற்கிறார். கவிஞராக இருந்த கம்பர் கவிச்சக்கரவர்த்தியாக உயர்வதை படிப்படியாக பல காட்சிகளின் ஊடாகக் காட்டி நிறுவுகிறார் அழகிரிசாமி.
ஏர் எழுபது பிரபந்தத்தை அரங்கேற்றும் வேளையில் கம்பர் மணமாகாத இளைஞர். அவருக்கு மணம்முடிக்க பெண் தேடிக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறார் அவருடைய தந்தையார். அரங்கேற்றத்துக்கு வந்திருக்கும் குணவீரபண்டிதர் என்னும் புலவர் கம்பரின் பாடல்களைக் கேட்டு மகிழ்ச்சியடைகிறார். சோழ அரசன் அப்பாடல்களைக் கேட்டால் மகிழ்ச்சியடையக்கூடும் என்று அவருக்குத் தோன்றுகிறது. அதனால் தன்னுடன் சோழ நாட்டுக்கு வருமாறு கம்பருக்கு அழைப்பு விடுக்கிறார். ஆனால் கம்பர் தனக்கு அச்சந்திப்பில் விருப்பமில்லை என்று தெரிவித்துவிடுகிறார். கம்பர் தனித்துவமானவர் என்பதும் தனிப்பட்ட சிந்தனைத்திறம் உள்ளவர் என்பதும் அந்த முதல் தருணத்திலேயே வெளிப்பட்டுவிடுகிறது.
சோழன் தன் பரிவாரங்களை அனுப்பி கம்பரை அரண்மனைக்கு அழைத்து வரச் செய்கிறார். கம்பர் அரண்மனைக்கு வந்திருக்கும் அன்று திருக்கடவூர் நிருத்தப் பேரரையன் தன் மாணவிகளை அழைத்து வந்து ஒரு நடனநிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருக்கிறார். கம்பரும் அந்த நடனத்தைக் கண்டுகளிக்கிறார். நிகழ்ச்சி முடிந்ததும் நடனமாடிய பெண்ணுக்கு தன் கால்களில் அணிந்திருந்த சிலம்புகளைக் கழற்றி அன்பளிப்பாகக் கொடுத்தனுப்புகிறார். அன்பளிப்புகளைக் கொடுக்க அரசன் மட்டுமே தகுதியானவன் என்னும் நம்பிக்கை நிலவும் சூழலில் அரசனின் முன்னிலையிலேயே அந்த மரபை மீறிச் சென்று அன்பளிப்பை வழங்குகிறார். அவருடைய தனித்துவமான குணாம்சம் வெளிப்படும் தருணம் அது.
இன்னொரு காட்சியில் ஒட்டக்கூத்தரும் கம்பரும் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். எப்படியோ அன்றைய உரையாடலில் ஒட்டக்கூத்தர் எழுதியிருக்கும் உலா பற்றியதாக மாறிவிடுகிறது. ஏழு வயதுப் பேதைப்பெண் கூட மன்னன் மீது காதல் கொண்டதாக எழுதும் உலா வகைப் பாடல்களை நிராகரித்துப் பேசுகிறார் கம்பர். சோழனை அண்டியிருக்கும் ஒரே காரணத்துக்காக ஒட்டக்கூத்தருக்கு அப்படியெல்லாம் எழுதவேண்டிய ஒரு நெருக்கடி உருவாகிவிட்டது என்று தெரிவிக்கிறார் கம்பர். அரசர்களின் போர்க்களத்தைப்பற்றி பாடல்கள் எழுதுவதைவிட, உழவர்கள் பாடுபடும் நெற்களத்தைப்பற்றி பாடல்கள் எழுதுவதை மேலென்று நினைக்கிறார் கம்பர்.
திருமணப்பருவத்தில் சோழ அரண்மனக்கு வரும் கம்பர் கால ஓட்டத்தில் திருமணம் முடித்து ஒரு மகனுக்குத் தந்தையுமாகிறார். அம்பிகாபதி என்று பெயர்சூட்டப்பட்ட அவனும் சிறந்த கல்விமானாகவும் கவிஞனுமாக வளர்ந்துவிடுகிறான். இடைப்பட்ட காலத்தில், கம்பரின் நடத்தையையும் உயர்வையும் தனித்துவமான குணநலனையும் புரிந்துகொள்வதற்கு ஏதுவாக ஏராளமான காட்சிகள் நாடகமெங்கும் இடம்பெற்றிருக்கின்றன.
அரசனான குலோத்துங்கச் சோழனும் கம்பரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் இரு காட்சிகள் நாடகத்தில் இடம்பெற்றுள்ளன. முதல் காட்சியில் இராமாயணத்தை எழுதி முடித்த செய்தியைத் தெரிவிப்பதற்காக சோழனின் அரசவைக்கு வருகிறார் கம்பர். அவருக்கும் அரசருக்கும் இடையில் நிகழும் உரையாடல் விவாதமாக மாறிவிடுகிறது. தன் சபையில் இராமாயணம் அரங்கேற்றப்படவேண்டும் என்பது அரசரின் விருப்பம். ஆனால் கம்பருக்கு அதில் விருப்பமில்லை. கம்பர் ஆஸ்தான கவியாக தன் அரண்மனையில் வீற்றிருக்கவேண்டும் என்பதும் அவருடைய விருப்பம். அதிலும் கம்பருக்கு நாட்டமில்லை. இறுதியாக, ஆஸ்தான கவி பதவியை ஏற்க மறுத்தால் எங்குமே வாழமுடியாது என்று மிரட்டுகிறார் அரசர். வெறும் இருபத்துநான்கு காத அளவு வரை விரிந்திருக்கும் சோழ நாட்டுக்கு வெளியே உலகம் இன்னும் விரிந்திருப்பதாகப் பதில் சொல்கிறார் கம்பர். விவாதத்தின் உச்சக்கணத்தில் ‘மன்னவனும் நீயோ, வளநாடும் உன்னதோ உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன். என்னை விரைந்தேற்றுக்கொள்ளாத வேந்துண்டோ? உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு’ என்று பாடிவிட்டு வெளியேறிவிடுகிறார்.
இரண்டாவது காட்சியில் கம்பரின் மகனான அம்பிகாபதிக்கும் தன் மகளான அமராவதிக்கும் இடையில் ஏற்பட்ட காதலை அறிந்துகொண்ட சோழஅரசன் இருவருக்கும் மரணதண்டனை விதித்த செய்தியை அறிந்து சோழனைச் சந்திக்க வருகிறார் கம்பர். இருவரையும் மன்னித்து விட்டுவிடும்படி கேட்டுக்கொள்கிறார். காதலிப்பது என்பது மரண தண்டனை அளிக்கும் அளவுக்கு பெரிய குற்றமல்ல என்று அரசரிடம் வாதாடுகிறார். ஆனால் விதித்த தண்டனையை மாற்றமுடியாது என்பதில் உறுதியாக இருக்கும் அரசனின் நிலைபாட்டின் முன்னால் கம்பர் செய்வதறியாமல் திகைத்து வெளியேறிவிடுகிறார். முதல் காட்சியில் மிடுக்கோடும் பெருமிதத்தோடும் வெளியேறும் கம்பர் அடுத்த காட்சியில் மனமுடைந்து கண்ணீரோடு செய்வதறியாமல் வெளியேறுகிறார்.
காட்சிகளை அமைப்பதில் அழகிரிசாமி பேணும் சமநிலைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
அரண்மனையை விட்டு வெளியேறும் கம்பர் கால்போன போக்கில் நடந்து செல்கிறார். வழியில் கிடைப்பதை உண்டு, கிடைத்த இடத்தில் உறங்கி ஒருவித நாடோடி வாழ்க்கை வாழ்கிறார். எல்லா இடங்களிலும் எப்படியோ அவர் கவிஞர் என்னும் உண்மை வெளிப்பட்டுவிடுகிறது. மக்கள் அவரை கைகுவித்து வணங்குகிறார்கள். உணவளித்து ஆதரவு அளிக்கிறார்கள்.
ஒரு காலத்தில் கம்பரின் கையால் சிலம்புகளை அன்பளிப்பாகப் பெற்றுக்கொண்ட நடனக்காரப் பெண்மணியின் மகள் நடனமாடுவதையும் அவர் பார்க்க நேர்கிறது. முதலில் அவரை எளிய வழிப்போக்கர் என நினைக்கும் அந்த இளம்பெண் அவர்தான் கம்பர் என்பதை உணர்ந்ததும் பணிந்து வணங்கி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு ஆசி பெறுகிறாள். அவர் செல்லும் இடமெங்கும் அவருடைய பெயர் பரவியிருப்பதை அவரே பார்க்கிறார். அவரே கம்பர் என உணர்ந்ததும் மக்கள் அவரைப் பாராட்டிப் போற்றுகிறார்கள். அரண்மனை வெளியேற்றத்தால் அவருடைய பெயருக்கோ புகழுக்கோ ஒரு குன்றிமணி அளவு கூட குறை நேரவில்லை. அவருடைய பாடல்கள் எல்லா இடங்களிலும் பரவியிருக்கின்றன.
அம்பிகாபதிக்கும் அமராவதிக்கும் மரணதண்டனை விதிப்பதுதான் தன் குடிப்பெருமைக்கு களங்கம் நேராமல் காக்கும் என்று நம்பும் குலோத்துங்கச் சோழனால் தம் நாட்டின் மீது படையெடுத்து வந்த பாண்டியமன்னனை எதிர்த்து போராடி நாட்டின் பெருமையையும் குடிப்பெருமையையும் காப்பாற்ற முடியவில்லை. நாட்டையும் ஆட்சியையும் உதறிவிட்டுச் செல்லும் மன உரமும் அவரிடம் வெளிப்படவில்லை. மாறாக, போரைத் தவிர்க்கும் விதமாக தானே தன் நாட்டை பாண்டிய மன்னரிடம் ஒப்படைத்துவிட்டு, பாண்டியரின் குடையின்கீழ் ஆட்சி செய்யும் மன்னராக நாட்டின் ஒரு பகுதியைக் கேட்டுப் பெறுகிறார்.
சக்கரவர்த்தியாக ஆட்சி செய்த இடத்தில் ஒரு குறுநில மன்னரைப்போல சுருங்கி வாழ்வதைப்பற்றி எவ்விதமான தாழ்வுணர்ச்சியும் குலோத்துங்கனிடம் இல்லை. ஒவ்வொரு கணமும் குடிப்பெருமையைப்பற்றி ஓயாமல் பேசும் குலோத்துங்கனா அப்படிச் செய்தார் என்று கேட்பவர் அந்த நாட்டில் யாருமில்லை. ஆனால் நாடகத்தில் அக்காட்சியைப் பார்க்கும் பார்வையாளர்களிடம் அக்கேள்வி எழுகிறது. அக்கேள்வி கம்பர், குலோத்துங்கன் இருவரில் யார் சக்கரவர்த்தி என்னும் மற்றொரு கேள்வியை நோக்கிச் செலுத்துகிறது.
அழகிரிசாமி தன் நாடகத்தை ஒரு கவிதைக்கே உரிய புதிரான புள்ளியில் முடித்திருக்கிறார். அந்த நாடகத்தின் வழியாக நாம் பெறும் அந்த அனுபவம் மிகமுக்கியமானது. மண்ணை ஆளும் சக்கரவர்த்திகளால் மண்ணையோ மனிதர்களையோ அதிகாரத்தையோ உதறிவிட்டுச் செல்வது ஒருபோதும் சாத்தியமே இல்லை. அவை அனைத்தும் கவசங்களாக இருந்து அவர்களுடைய சக்கரவர்த்தி என்னும் ஆளுமையைப் பாதுகாக்கின்றன. அவை எதுவும் இல்லாமல் இருப்பது என்பது அல்லது அவற்றை உதறிவிட்டு வெளியேறுவது என்பதை கற்பனையில் கூட நினைத்துப் பார்க்கமுடியாது. ஆனால் கவிஞர்களுக்கு இவை எதுவுமே பொருட்டில்லை. எந்த நேரத்திலும் எதையும் உதறிவிட்டுச் சென்றுகொண்டே இருக்கமுடியும். சென்று கால்பதிக்கும் இடங்கள் அனைத்தும் அவர்களுடைய ஊர்களே. அவர்கள் சந்திக்கும் மனிதர்கள் அனைவரும் அவர்களுடைய அன்புக்குரியவர்களே. அத்தகையோர் எப்போதும் சக்கரவர்த்திகளே. கம்பர் ஒரு கவிச்சக்கரவர்த்தி என்பதை அழகிரிசாமியின் நாடகம் தெளிவாக நிறுவுகிறது.
அந்தக் காலத்தில் எஸ்.வி.சஹஸ்ரநாமம் அவர்களின் சேவா ஸ்டேஜ் குழு வழியாக அரங்கேற்றப்பட்ட இந்நாடகத்தை நேருறக் கண்ட பார்வையாளர்கள் பாக்கியவான்கள். இன்றைய தலைமுறைக்கு அந்த நற்பேறு கிட்டுமோ கிட்டாதோ தெரியவில்லை. ஆனால் இன்றும் அழகிரிசாமியின் நாடகப்பிரதி நூலாகக் கிடைக்கிறது. காட்சியனுபவத்துக்கு வழியில்லை என்றபோதும் வாசிப்பு அனுபவத்தை நாம் அடைவதற்குத் தடையில்லை.