குணப்படுத்துவதே கலையின் நோக்கம்


கென்ஸாபுரோ ஓஏ:

இலக்கியத்திற்கான நோபெல் பரிசினை வென்ற இரண்டாவது ஜப்பானிய நாவலாசிரியர். ஆசியா கண்டத்திலே மூன்றாவது எழுத்தாளர். கென்ஸாபுரோ ஓஏ எழுதிய புத்தகங்கள் இலக்கியத் தரமாகவும் மனிதநேயம் கொண்டதாகவும் இருப்பதாலே இவருக்கு நோபெல் கழகம் 1994-ஆம் ஆண்டிற்கான பரிசினை கொடுத்து கவுரவித்தது.

பார்கிலே பல்கலைக்கழகத்தில் ஜப்பானிய மேற்படிப்பு மையம் ஏற்பாடு செய்திருந்த மாருயுமா பேருரையாற்ற வந்திருந்த கென்ஸாபுரோ ஓஏ அவர்களை ஹாரி கிரெய்ஸ்லர் சந்தித்து பேட்டி கண்டார்.

இடம்: பார்கிலே வளாகம்.

தேதி: ஏப்ரல் 16, 1999.


பார்கிலேக்கு வந்தது குறித்து மகிழ்ச்சி. நீங்கள் எங்கே பிறந்தீர்கள்? எங்கே வளர்ந்தீர்கள்?

ஜப்பான் தீவுக்கூட்டத்தில் ஒரு தீவில் 1935-ஆம் ஆண்டு நான் பிறந்தேன். எனக்கு ஆறு வயது ஆகும் போது அமெரிக்காவிற்கும் ஜப்பானிற்கும் போர் மூண்டது என்பதை நான் இங்கே குறிப்பிட வேண்டும். எனக்கு பத்து வயது ஆன போது போர் நிறுத்தப்பட்டது. ஆக எனது குழந்தைப் பருவம் போர்காலத்திலேயே கழிந்தது. இது என் வாழ்வில் முக்கியமானதொன்று.

உங்கள் குடும்பத்திலேயே நீங்கள்தான் முதல் எழுத்தாளரா?

சற்றே சிக்கலான கேள்வி. நான் பிறந்த தீவில் என் குடும்பத்தினர் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். எனது மூதாதையர்களில் பலர் பத்திரிகைத் துறையில் பணியாற்றி இருக்கிறார்கள். அவர்கள் புத்தகங்களும் எழுதி வெளியிட்டிருந்தால் அவர்கள் தான் எங்கள் குடும்பத்தில் முதல் எழுத்தாளர்களாக இருந்திருப்பார்கள். எனது அதிர்ஷ்டமோ, அவர்களது துரதிஷ்டமோ அவர்கள் எதையும் வெளியிடவில்லை. ஆக எழுதியதை வெளியிட்ட முதல் எழுத்தாளன் நான்தான். ஆனால் என் அம்மா ”நம்ம குடும்பத்து ஆம்பளங்க எல்லாம் சொன்னதையே தான் திரும்பத் திரும்ப எழுதிக்கிட்டிருக்கீங்க” என்று அடிக்கடி சொல்லுவார்.

“நினைவு கூற முயற்சிக்கும் செயல் புதியதாக உருவாக்கும் செயல், இரண்டும் ஒன்றை ஒன்று உரசிக் கொள்வதாலே, நான் நாவல்களை எழுத ஆரம்பித்தேன்’’, என்று ஒரு நேர்காணலில் காரணம் கூறியிருக்கிறீர்களே.

உண்மைதான். நான் சொன்னதோடு இன்னும் கொஞ்சம் சேர்க்க விரும்புகிறேன். முறையான கற்பனையோடு கற்பனை தளத்திலிருந்து இயங்கிக் கொண்டு கற்பனையை நோக்கி எழுத ஆரம்பிக்கின்றேன்.

இளமையில் என்னென்ன புத்தகங்களை படித்தீர்கள்?

ஒன்பது வயது வரை நான் நிறைய புத்தகங்கள் படித்ததில்லை. எனது பாட்டி சொன்ன கதைகளில் மெய்மறந்துபோன காலம் அது. அவர் எங்களது குடும்பத்தைப் பற்றியும், எங்களது ஊரைப் பற்றியும் சொல்லிக் கொண்டு இருப்பார். எனக்கு அப்போது அது போதுமானதாக இருந்தது. புத்தகங்கள் தேவைப்படவில்லை.

ஒரு நாள் எனது பாட்டிக்கும் எனது அம்மாவிற்கும் ஏதோ விவாதம் நடந்தது. மறுநாள் அதிகாலையிலே அம்மா எழுந்து, ஒரு கிலோ அரிசியை எடுத்து மூட்டை கட்டிக் கொண்டு (நாங்கள் அரிசிப்பிரியர்கள்) எங்கள் தீவில் உள்ள ஒரு சிறிய நகரத்திற்கு காட்டுவழியாக சென்றுவிட்டார்கள். அவர்கள் திரும்பிவந்த போது இரவு அதிக நேரம் ஆகிவிட்டது. என்னுடைய தங்கைக்கு ஒரு பொம்மையும், எனது தம்பிக்கு தின்பண்டமும் கொடுத்தார்கள். எனக்கு இரண்டு புத்தகங்கள் கொடுத்தார்கள். சிறிய வடிவில் ஆன புத்தகங்கள். பகுதி ஒன்று பகுதி இரண்டு. அது மார்க் ட்வெய்ன் எழுதிய ‘ஹக்குள்பெர்ரி ஃபின்’ எனக்கு அப்போது மார்க் ட்வெய்னையும் தெரியாது. டாம் சாயரும் தெரியாது. ஹக்குள்பெர்ரி ஃபின்னும் தெரியாது. ”குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற மிகச் சிறந்த நாவல் இது. இப்படித் தான் உனது அப்பா சொன்னார்.” என்று எனது அம்மா சொன்னார். (ஒரு வருடத்திற்கு முன்னர்தான் அப்பா இறந்து போனார்.) பிறகு ”உனக்காகவே இப்புத்தகத்தை வாங்கி வந்தேன். அரிசியை வாங்கிக்கொண்டு அதற்கு இதைக் கொடுத்த பெண் என்னிடம் ‘கவனமாய் இரு. இந்த நாவல் எழுதியவர் ஒரு அமெரிக்கர் இப்போது ஜப்பானுக்கும் அமெரிக்காவிற்கும் சண்டை நடந்து கொண்டிருக்கிறது. பள்ளி ஆசிரியர் உன் பையனிடமிருந்து புத்தகத்தைப் பிடுங்கிக் கொண்டு போய்விடபோகிறார். உன் பையனிடம் சொல்லி வை. இந்தப் புத்தகத்தை எழுதியவர் யார் என்று ஒருவேளை ஆசிரியர் பார்க்க நேர்ந்தால், உன்பையன் உடனே ட்வெய்ன் என்பது ஜெர்மன் எழுத்தாளர் ஒருவரின் புனைபெயர் என்று சொல்ல வேண்டும்.’ என்று சொன்னார்”, என்று என் அம்மா சொன்னார்.

எனக்கும் எனது அம்மாவிற்கும் நடந்த முதல் இலக்கிய உரையாடல் அதுதான். அதுவே கடைசியாகவும் ஆனது.

உங்களது நோபெல் பரிசு உரையில் ‘தி ஒண்டர்புல் அட்வெண்ட்சர்ஸ் ஆப் நில்ஸ்’ என்ற புத்தகத்தை படித்ததாக குறிப்பிட்டு இருக்கிறீர்களே.

சுவீடன் நாட்டு பெண் எழுத்தாளர்  செல்மா லேகர் லோகிப் எழுதியது அப்புத்தகம். சுவீடன் நாட்டு குழந்தைகள் இவர்களது நாட்டைப் பற்றி தெரிந்து கொள்ள எழுதப்பட்டது. இப்புத்தகத்தில் ஒரு குறும்புக்காரர் ஒரு சிறிய வாத்து மீது ஏறிக் கொண்டு சுவீடன் முழுதும் சுற்றிப் பார்ப்பார். மிக மிக சுவாரசியமான புத்தகம். ஆக எனது குழந்தைப்பருவத்தில் இந்த இரண்டு புத்தகங்களைத்தான் நான் மீண்டும் மீண்டும் படித்தேன். அதில் எழுதப்பட்ட எல்லா வார்த்தைகளுமே எனக்கு ஞாபகமிருக்கின்றன.

இரண்டாவதாக குறிப்பிடப்பட்ட புத்தகத்தில் ஒரே ஒரு வரி மட்டும் உங்களுக்கு மிகவும் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த ஊர் சுற்றி வீடு வந்தபின் சொல்கிறாரே, ”நான் மீண்டும் மனிதனாகிவிட்டேன்” என்று.

கதாநாயகன் மந்திரசக்தியின் மூலம் சின்னஞ் சிறிய பையனாகிவிடுகிறான். தான் மீண்டும் பழைய உருவம் பெற முடியும் என்ற நம்பிக்கையை இழந்துவிடுகிறான். ஊர் சுற்றிவிட்டு வீடு திரும்பும்போது, ரகசியமாக அடுப்பங்கரையினுள் நுழைகிறான். அவனை அவனது அப்பா பார்த்து விடுகிறார். கதாநாயகனின் மனதில் தன மீதே ஒரு இனம் புரியாத பாசம் பிறக்கிறது. பிறகு என்ன? மற்ற மனிதர்களை போல அவனும் வளர்ந்து விடுகிறான். உடனே ”அம்மா! நான் மீண்டும் மனிதன் ஆகிவிட்டேன்” என்று சந்தோஷத்தில் கூச்சலிடுகின்றான். இந்தவரி எனக்கு உன்னதமான வரியாக இன்றும் தோன்றுகிறது.

விளிம்பு நிலை எழுத்தாளர் என்று உங்களை நீங்களே பிரகடனப்படுத்தியிருக்கிறீர்கள். அப்படி சொல்லிக் கொள்வதின் பொருள் என்ன?

நான் தீவில் பிறந்தவன்தானே. ஜப்பான் என்ற தீவுக்கூட்டம் ஆசியா கண்டத்தின் விளிம்பில் தானே இருக்கிறது. பெரும்படிப்பு படித்த நமது நண்பர்கள் ஆசியா கண்டத்தின் மத்தியில் தான் ஜப்பான் இருக்கிறது என்று நம்புகிறார்கள். உலகத்தின் மையமே ஜப்பான் தான் என்று ரகசியமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நானோ விளிம்பு நிலை எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன். விளிம்பு நிலை மாவட்டத்தில், ஆசியாவின் விளிம்பில் உள்ள ஜப்பானில், இந்த பூலோக உருண்டையின் விளிம்பில், நான் இதை கர்வத்தோடுதான் சொல்கிறேன்.

இலக்கியம் என்பது விளிம்பு நிலையில் இருந்து கொண்டு மையத்தை நோக்கி எழுதப்படுவதுதான். இதனால் மையத்தையும் விமர்சனத்திற்கு உள்ளாக்கலாம். நமது கொள்கை, நமது பாடுபொருள், நமது கற்பனை எல்லாமே விளிம்பு நிலை மனிதனை பற்றியதே. மையத்திலிருந்து எழுத நினைப்பவனால் ஒன்றும் எழுத முடியாது. விளிம்பு நிலையில் இருந்து கொண்டு மனிதனின் கதையை சொல்லும் போது மையத்தின் அதாவது பொதுவான மனித மனம், மனிதனின் தனி இயல்பு ஆகியவைகளைப் பற்றியும் சொல்லலாம். எனவே விளிம்பு நிலை என்ற சொல்லை உபயோகித்து என் கொள்கையைப் பற்றி கூறியிருக்கிறேன்.

நீங்கள் எழுதிய ‘எ ஹீலிங் ஃபேமிலி’ என்ற நாவலில், ஃபிளானரி ஓகானர் சொல்லியிருக்கிற எழுத்தாளனின் பழக்கதோஷம் பற்றியவற்றை எடுத்தாண்டு இருக்கிறீர்கள். அந்த பழக்கதோஷத்தை பற்றி சொல்ல முடியுமா?

எந்தக் கலைஞனுக்கும் பழக்கதோஷம் என்ற சொல்லை உபயோகப்படுத்துவது உசிதமில்லை. எனவே ஃபிளானரி ஓகானர் அந்த சொல்லுக்கு என்ன பொருள் கொடுத்தாரோ அதையே நானும் கையாள விரும்புகிறேன். அதை அவரது ஆசிரியர் ஜாக் மரித்தென் என்பவரிடமிருந்து கற்றுக் கொண்டார் என்று நினைக்கிறேன். ஜாக் மரித்தென் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் அப்போது இருந்தார். ஃபிளானரி 1935 -ல் பிறந்தார் என்று நினைக்கிறேன். போர் முடிந்தவுடன் தனது ஆசிரியரோடு கடிதம் மூலமாக தொடர்பு கொண்டார். அதில் தாமஸ் அகுய்னாஸ் அவர்களின் கருத்து பற்றி நிறையவே சொல்லியிருக்கிறார் மரித்தென். ஜாக் மரித்தெனுக்கு தாமஸ் அகுய்னாஸின் எழுத்து வேதவாக்கு.

பழக்க தோஷம் என்பதற்கு என்ன பொருள் தெரியுமா? எழுத்தாளன் என்ற முறையிலே நான் தினந்தோறும் எழுதுகிறேன். பத்து, இருபது, முப்பது, ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக எழுதும் பழக்கம் எனது பண்பாகவே மாறிவிடுகிறது. இதை நான் உணரலாம். உணராமலும் இருக்கலாம். எது எப்படியோ நான் மீண்டும் எழுத்தாளனாக மறுஜென்மம் எடுக்கிறேன். அல்லது பழக்கத்தால் நான் ஏதாவது எழுதலாம். ஒரு போர்வீரன், ஒரு விவசாயி, ஒரு மீனவன் கூட மனமதிப்பால் மறுஜென்மம் எடுக்கின்றான். எல்லாம் பழக்கத்தினால்தான். மனிதர்களாகிய நாம் பிறக்கிறோம். மீண்டும் பிறக்கிறோம். ஏதாவது ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், நமக்கு இதுவரை கிடைத்திராத அனுபவத்தினால் ஏற்படக்கூடிய மனப்பாதிப்பை நேருக்கு நேர் சந்திக்கின்ற தைரியம் பிறக்கும். இதுவே ஃபிளானரி  ஓகானரின் சித்தாந்தம் ஆகும். நான் அந்த அம்மையாரின் மாணவன்.

உங்களது மகனின் பிறப்பு உங்களின் எழுத்திற்கு ஒரு திருப்புமுனை ”இருபது ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், எனது முதல் மகன் மூளை பாதிக்கப்பட்டு பிறந்தான். இது எனக்கு பெருத்த அடி. இருந்தும் எழுத்தாளன் என்ற முறையிலே நான் ஒன்றை நிச்சயம் சொல்ல வேண்டும் குறையோடு பிறந்த குழந்தையை வளர்த்து ஆளாக்க எனது குடும்பம் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும் என்பதே என் எழுத்தின் மையக் கருவாகும்” என்று எழுதியிருக்கிறீர்களே!

உண்மைதான். அப்படிதான் எழுதியிருக்கிறேன். எனது இருபத்து எட்டாவது வயதில் எனது முதல் மகன் பிறந்தான். இருபத்து எட்டாவது வயதிலே ஜப்பானில் பிரபலமாக பேசப்பட்ட எழுத்தாளன் ஆகிவிட்டேன். அப்போது நான் பிரெஞ்சு இலக்கிய மாணவன். ஜான்போல் சார்தர் அல்லது (மோரிஸ்) மர்லோ போன்டியின் பாணியிலேயே எழுதினேன். இவருடைய படைப்பிலக்கியதை பற்றித்தான் நான் அதிகமாக பேசியிருக்கிறேன். பெருத்த குறையோடு எனது மகன் பிறந்தபோது, நான் நம்பிக்கையிழந்து போயிருப்பதை உணர்ந்தேன். ஒரு இரவு ஊக்க சக்தி தேவைப்படுவதை உணர்ந்து, நான் எழுதிய புத்தகத்தைப் படிக்க விரும்பினேன். அதுவரை நான் ஒரே ஒரு புத்தகம்தான் எழுதியிருந்தேன். அதை நான் முதல் முறையாக (புத்தக உருபெற்றபின்) பெருத்த குறையோடு எனது மகன் பிறந்தபோது, நான் நம்பிக்கையிழந்து போயிருப்பதை உணர்ந்தேன். ஒரு இரவு ஊக்க சக்தி தேவைப்படுவதை உணர்ந்து, நான் எழுதிய புத்தகத்தைப் படிக்க விரும்பினேன். அதுவரை நான் ஒரே ஒரு புத்தகம்தான் எழுதியிருந்தேன். அதை நான் முதல் முறையாக (புத்தக உருபெற்றபின்) படித்தேன். சில நாட்களுக்குப் பிறகு அப்புத்தகமே என்னை எந்த விதத்திலும் ஊக்குவிக்கவில்லை என்பதையும், அது மற்றவரையும் ஊக்குவிக்காது என்பதையும், உணர்ந்தேன். ஆக, நானும் உதவாக்கரை, என் புத்தகமும் உதவாக்கரை. மனம் உடைந்து போனேன். ஜப்பானில் ஒரு அரசியல் பத்திரிகையின் ஆசிரியர், ஆட்டோமிக் பாம் விழுந்த இடமான ஹிரோஷிமா செல்லச் சொன்னார். ஹிரோஷிமாவில் அந்த ஆண்டு ஆட்டோம் பாம் எதிர்ப்பு இயக்கவாதிகள் ஒன்று கூடினர். அந்தக் கட்டத்திலே சீனர்களுக்கு, ரஷியர்களுக்கும் கருத்து மோதல் நடந்தது. அங்கே சென்ற பத்திரிகை நிருபர்களில் நான் மட்டுமே எந்தக் கட்சியையும் சாராதவன். எனவே நான் இரண்டு பேரையுமே விமர்சித்தேன்.

ஹிரோஷிமா விபத்திலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் தங்கி சிகிச்சை பெறும் மருத்துவரான (ஃபூமியோ) ஷிஜிடோவையும் கண்டுபிடித்தேன். அவரோடும், அங்கே இருந்த நோயாளிகளோடும் உரையாடியதில், ஏதோ ஒரு சக்தி என்னை கொஞ்சம் கொஞ்சமாக ஊக்குவிப்பதை உணர்ந்தேன். அந்த சக்தியை எப்படியாவது தொடர வேண்டுமென்று என்று நினைத்து, டோக்கியோவிற்கு திரும்பினேன். என் மகன் பிறந்திருக்கும் மருத்துவமனைக்குச் சென்று, அவனை காப்பாற்றுவது குறித்து அங்கிருந்த மருத்துவர்களிடம் பேசினேன். அதன்பிறகுதான் ஹிரோஷிமா என்ற புத்தகத்தை எழுதினேன். அது எனக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. நான் மீண்டும் பிறவி எடுத்தேன் என்றும் சொல்லலாம்.

ஹிரோஷிமா பாதிப்பாளர்கள், அவர்களுக்கு மருத்துவம் செய்யும் மருத்துவர்கள். இவர்களின் சந்திப்பே உங்களை உங்கள் சோகத்திலிருந்து வேறொரு தளத்திற்கு உந்தித் தள்ளியது என்று சொல்கிறீர்களா?

ஆமாம். ஷிஜிடோ என்னிடம் சொன்னார் தப்பிப் பிழைத்தவர்களுக்கு எங்களால் ஏதும் செய்ய இயலவில்லை. அவர்களுக்கு வந்திருக்கும் நோயைப் பற்றி இன்றுவரை எங்களால் ஒன்றும் தெரிந்து கொள்ள முடியவில்லை. இருந்தாலும் எங்களால் என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டுதான் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் ஆயிரம் பேர் இறக்கின்றனர். இருந்தாலும் நாங்கள் எங்கள் வேலைகளை செய்து கொண்டுதான் இருக்கிறோம். அவர்களுக்கு உதவி தேவைப்படும் போது செய்ய வேண்டியது எங்களது கடமையாயிற்றே. இப்போது உங்கள் குழந்தைக்கு உதவி தேவைப்படுகிறது. உங்களது உதவி உங்கள் பையனுக்கு மட்டுமே தேவைப்படுகிறது என்பதை அறியுங்கள். எனக்குப் புரிய ஆரம்பித்தது. டோக்கியோ திரும்பினேன். என் மகனுக்கும், என் மனைவிக்கும் உறுதுணையாக நின்றேன்.

ஊனமுற்ற மகனை வைத்து ‘ ஏ பெர்சனல் மேட்டர்’ என்ற நாவலை எழுதினீர்கள். ஹிரோஷிமாவை பற்றி எழுதியது ” ஹிரோஷிமா நோட்ஸ்” என்று இருக்கிறது. இந்தப் புத்தகத்தில், ஹிரோஷிமா மருத்துவர்கள் அட்டோம் பாம் ஏற்படுத்திய கடுந்துயரத்தை அவர்களது கற்பனையிலேயே தொடர்ந்து பார்க்கின்றனர். இன்னும் அதை ஆழமாக பார்ப்பதனால், அவர்களோடு இவர்களும் மிகப்பெரிய நரகத்தினுள் விழுந்து இருப்பதை உணர முடிகிறது. இந்த இரட்டிப்பு பாதிப்பினால் உண்மையாகவும், நேர்மையாகவும் செயல்பட முடிகிறது என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். மருத்துவர்களிடம் இந்த இரட்டிப்பு பாதிப்பை உணர்ந்த நீங்கள், உங்கள் நாவலின் கதாநாயகனான பேர்ட்டின் குழப்பத்தை வாசகர்களுக்கு உணர்த்த முடிந்தது என்று சொல்கிறீர்களா?

அதில் என்ன சந்தேகம்? மனிதர்களின் இரட்டை வேடமும், புரியாத புதிராக ஜொலிப்பவர்களே என் கதைகளுக்கு நாயகர்களாக இருந்தார்கள். இதெல்லாம் பிரெஞ்சு மொழியில் ஆரம்பித்த ‘உளதாயிருத்தல்’ (எக்ஸிஸ்டென்ஷியலிசம்) கொள்கையிலிருந்து பிறந்தவையே. ஆனால் அன்றிலிருந்து இரட்டிப்பு என்பதற்கான பொருளை புரிந்து செயல்பட முடிந்தது. உண்மையானவனாய் இருக்க வேண்டிய நிலையும் தெரிந்தது. இந்த சொல்லு ஜான் போல் சார்த்திடமிருந்துதான் எடுத்தாளுகின்றேன். இன்று நான் வேறொரு சொல்லை உபயோகப்படுத்துகின்றேன். எளிமையான சொல். அதுதான் நிமிர்ந்த மனிதன். ஐரிஷ்நாட்டு கவி யேட்ஸ் தன் கவிதையில் ”நிமிர்ந்து நிற்பவன் இளைஞன்” என்கிறாரே அதேபோலத்தான். நேராக நிமிர்ந்து நிற்பவன். இம்மாதிரி இளைஞனாக நான் வாழ ஆசைப்படுகிறேன்.

உணர்ச்சிகள் இடையே நம் குறைகளை கூறல் என்பது ஒரு எழுத்தாளன் தைரியமாகவும் போற்றத்தக்கதாகவும் செய்யவேண்டிய காரியம் என்று லயோனல் டிரிவ்லிங் சொல்லியிருக்கிறாரே. இதைத்தானே நீங்கள் ஏ பெர்சனல் மேட்டர் என்ற புத்தகத்தில் செய்தீர்கள்!

ஆமாம். அப்படித்தான் செய்ய வேண்டும் என்று தோன்றியது. அப்போது நிமிர்ந்து நிற்பவனின் மகத்துவத்தை நான் உணரவில்லை. என்னைப் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது. ஏன் செய்யக் கூடாது? நான் மீண்டும் பிறக்க போவதில்லை. ஆகவே கடலுக்கு அருகில் இருக்கும் தருணத்தில் நான் என்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். என் மகனையும் காப்பாற்ற வேண்டும். எனவேதான் நான் அப்புத்தகத்தை எழுதினேன்.

உங்கள் மகன் இசையமைப்பாளராகி விட்டார். உங்கள் குடும்பத்தினர் அவர் மீது காட்டிய பாசமும், நேசமும் அவரை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. அது எப்படி சாத்தியமானது என்பதை சொல்ல முடியுமா?

4 அல்லது 5 வயது வரை, எனது மகன் தனது உணர்ச்சிகளை எங்களுக்கு உணர்த்த முடியாத நிலையிலேயே இருந்தான். குடும்ப உறவுகளைப் பற்றி அவனுக்கு ஒன்றுமே தெரியாமல் போய்விடுமோ என்று கூட பயந்தோம். அவன் தனித்துவிட்டவனை போலவே இருந்தான். பசும்புல் தரையில் கிடக்கும் கூழாங்கல்லைப் போல ஒரு நாள் வானொலிப் பெட்டியில் இருந்து கேட்ட பறவையின் குரலை ரசித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. உடனே நான் ஜப்பான் வாழ் காட்டுப் பறவைகளின் குரல்களை கொண்ட ஒலிப்பேழை ஒன்று வாங்கினேன். அதிலிருந்து தேர்ந்தெடுத்த 50 பறவைகளின் கூக்குரல்களை பதிவு செய்தேன். அதில் ஒரு பறவையின் கூக்குரல் ஒலித்தவுடன் ஒரு பெண்ணின் மெல்லிய குரல் அந்த பறவையின் பெயரை உச்சரிக்கும். உதாரணத்திற்கு…”தடா- டடா… குயில் தடா- டா… சிட்டுக்குருவி. இது குயில், இது சிட்டுக்குருவி” என்று சொல்லும். மூன்று ஆண்டுகளுக்கு இந்த ஒலிப்பேழையை அடிக்கடி ஒலிக்க வைத்தேன். இப்பேழை ஒலிக்கும் போதெல்லாம் எப்பொழுது பார்த்தாலும் கத்திக்கொண்டும் அழுது கொண்டிருக்கும் எனது பையன் அமைதியாகி விடுவான். அமைதி அடையச் செய்ய இந்த ஒலிப்பேழையை நான் இயக்க வேண்டியதாயிற்று. எனது மனைவி அவளது வீட்டு வேலைகளை கவனிக்க வேண்டும். நானும் எனது வேலையை ஆறு வயது ஆனபோது கவனிக்க வேண்டும். எனவே இந்த பறவைகளின் கூக் குரலோடு நாங்க மூவரும் வாழ்ந்தோம்.

எனது மகனுக்கு ஆறு வயது ஆனபோது, வேனில் காலத்தில் நாங்கள் எங்கள் மலை வீட்டிற்கு போனோம். எனது மனைவி வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தார். சுத்தம் செய்து முடிக்கும் வரை சற்று வெளியில் போய் வரலாமே என்று நினைத்து, என் மகனை தோளில் தூக்கி வைத்துக்கொண்டு அருகில் இருக்கும் ஒரு சிறு காட்டுக்குள் நுழைந்தேன். அங்கே ஒரு சிறிய ஏரி இருக்கிறது. அங்கே இருந்த ஒரு ஜோடி பறவைகளில் ஒன்று குரல் கொடுத்தது. அது குரல் கொடுத்ததும், அங்கே மெல்லிய ஆனால் நன்றாகப் புரியும் குரலில் அது ஒரு நீர்க்காகம் என்று கேட்டது. நான் ஆடி போய்விட்டேன். காட்டில் மீண்டும் அமைதி. நான் கேட்டது உண்மைதானா அல்லது பிரமையா என்று தெரிந்து கொள்ள மீண்டும் ஏதாவது பறவை பாடாதா என்று ஏங்கினேன். கடவுளை வேண்டிக் கொண்டேன். என் மகன் மீண்டும் வாய் திறந்து பேச மாட்டானா என்ற ஏக்கம் அதிகரித்தது. ஒரு ஐந்து நிமிடம் கழித்து குரல் கொடுத்த பறவையின் மனைவி கூக்குரலிட்டது. எனது மகனும் உடனே அது ஒரு நீர்க்காகம் என்றான். மகிழ்ச்சியில் திளைத்த நான் மகனை மீண்டும் தூக்கிக்கொண்டு வந்து சேர்ந்தேன். நடந்தவற்றை என் மனைவியிடம் சொன்னேன்.

வேறு ஏதாவது பறவையின் குரல் அங்கே ஒலிக்காதா என்று பல மணி நேரம் காத்திருந்தோம். அந்த இரவில் எந்தப் பறவையும் கத்தவில்லை. எங்களால் தூங்க முடியவில்லை. மறுநாள் அதிகாலையிலேயே எங்கள் வீட்டு ஜன்னலுக்கு நேரே இருந்த மரத்தில் ஒரு சிட்டுக்குருவி கத்தியது. அது ஒரு சிட்டுக்குருவி என்றான் என் மகன். பிறகு எல்லாம் ஆரம்பமானது. பறவைகளின் குரலை நாங்கள் கொடுத்த போதெல்லாம் எனது மகன் வாய் திறந்து பேசினான். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பறவைகளின் குரல்களை பதிவு செய்து அவன் காதுகளில் விழ செய்தோம். அவனும் சரியாக அந்தப் பறவையின் பெயரைச் சொன்னான். அன்றிலிருந்து நாங்கள் அவனோடு வார்த்தைகளை வைத்து பேசினோம்.

எனது மகனின் பெயர் பூ-ச்சேன். ஒலிப்பேழையை இயக்க வைத்து, அது என்ன பறவை என்று கேட்பேன். அவனும் சிட்டுகுருவி என்பான். சில சமயங்களில் நான் என் மகனை பார்த்து பூ-ச்சேன்! எந்தப் பறவையோட குரலை நீ கேட்க விரும்புகிறாய்? என்று கேட்பேன். அவனும் சற்றே யோசனை செய்துவிட்டு நீர்க்காகம் என்றும், குயில் என்றும் சொல்லுவான். பிறகு அப்பறவையின் குரலை போட்டுக் காட்டுவேன்.

நாங்கள் எங்கள் மகனோடு பேச ஆரம்பித்தோம். மனநிலை பாதித்தவர்கள் படிக்கும் பள்ளியிலேயே அவனும் சேர்த்துக் கொள்ளப்பட்டான். ஒரு சில ஆசிரியர்கள் மட்டுமே அவனோடு பேசிப் பழக சிரமப்பட்டார்கள். அந்தப் பள்ளியிலே ஹாண்டல், பாக் போன்றவர்கள் இயற்றிய இசையை கேட்டுக்கொண்டே இருப்பார்கள். எனது மகனும் இசையை ரசிக்க ஆரம்பித்தான். இசையின் மீது நாட்டம் வந்தபின், எனது மகன் பறவையின் குரலையும், அதன் பெயரையும் திடீரென்று சுத்தமாய் மறந்து போனான். அவனுக்கு 16 வயது ஆனபோது வலிப்பு நோய் வந்து, இரண்டு கண்களால் பார்க்கும் சக்தியை இழந்து போனான். ஒரு கண்ணை மூடிக்கொண்டு மற்றொரு கண்ணால் பார்க்க முடிந்தது. ஆனால் இரண்டு கண்களால் ஒரே சமயத்தில் பார்க்க முடியவில்லை. இதனாலே அவனால் பியானோவையும், இசை குறியீடுகளையும் சரிவர கவனிக்க முடியவில்லை. அதனால் அவன் இசைக்கும் இசையில் பிழைகள் வர ஆரம்பித்தன. சங்கடப்பட்டான். இதனால் பியானோ வாசித்ததை நிறுத்தி விட்டான். அவனது அம்மா ஐந்து வாரத்தில் பாக்கின் இசையை எழுத்தில் வடிக்கும் கலையைக் கற்றுக் கொடுத்தார். ஐந்தே ஐந்து வாரத்தில் பாக்கின் இசையை பென்சிலால் எழுதினான். முதலில் மிகவும் சுலபமானவற்றை எழுதிப் பழகினான். ஒரு வருடத்தில் அவனே இசையமைப்பாளராகி விட்டான்.

அவன் உருவாக்கிய இசை இரண்டு குறுந்தகடுகளில் கிடைக்கின்றன. நீங்கள் அவைகளை பார்கிலேயில் உள்ள டெலிகிராப் அவென்யூவில் வாங்கினீர்கள். சரிதானே!

ஆமாம். 18 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கே வந்தபோது என் பையனை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். இரண்டு நாட்களுக்கு முன்பு நான் இங்கே அப்போது ஆற்றிய உரையை நினைத்து பார்த்தேன்.

டவர் ரெக்கார்ட்ஸ் என்ற கடைக்குச் சென்று, பிசாரோ இயற்றிய இசையின் குறுந்தகடுகள் சிலவற்றை வாங்கினேன். அங்கேதான் என் மகன் இயற்றிய இசை கொண்ட இரண்டு குறுந்தகடுகளை வாங்கினேன். இன்று காலைதான் அவைகளைப் போட்டு கேட்டேன்.

உங்கள் மகன் நில்ஸின் கனவுகளை நனவாக்கிவிட்டான். பறவைகளோட இறக்கைகளில் உட்கார்ந்து பறப்பது நில்ஸின் கனவு. உங்கள் மகனோ பறவைகளின் குரலோடு…

ஆமாம். பறவைகளிடமிருந்து நில்ஸ் கற்ற மாதிரி என் மகனும் கற்றுக் கொண்டு, நில்ஸ் கடைசியில் சொன்ன மாதிரி ”நான் மனித இனத்தைச் சேர்ந்தவன்.. நான் மனிதன்.” என்று என் மகனும் சொல்லலாம். என் மகனின் இசையமைப்பைக் கொண்ட குறுந்தகடுகளைக் கேட்ட பின்னர் ”நானும் மனிதன் தான்” என்று நினைத்தேன்.

ஹீலிங் ஃபேமிலிஎன்ற புத்தகத்தில் உள்ள மகனின் இசை அவனின் மனதை வெளிப்படுத்துவதோடு, மனதையும் திடமாக்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறீர்கள்.  அத்தோடு இலக்கியமோ, இசையோ நாம் எதை உருவாக்கினாலும், நம்மிடையே உள்ள விரக்தி மனப்பான்மை வெளியேறும் போது நம்மை அறியாமலேயே நாம் குணமடைகிறோம். மீண்டும் ஜென்மம் எடுக்கிறோம் என்பதிலே பெருத்த மகிழ்ச்சியடைகிறோம். இந்த மாதிரி வலியும், வலியிலிருந்து விடுதலை பெறுதலும் ஒன்றாய் இணையும் போது, கொஞ்சம் கொஞ்சமாய் இணைந்து பிரிக்க முடியாத நிலைக்குப்போகும்போது, கலைஞனின் படைப்பு முழுமையடைவதோடு அதனால் ஏற்படும் மகிழ்ச்சி மற்றவர்களையும் சென்றடைகிறது என்று கூறியிருக்கிறீர்கள்

அதனோடு வேறு சில கருத்தையும் நான் இந்த தருணத்திலே சேர்க்க வேண்டும். அந்த புத்தகத்தை எழுதிய பின், என்னிடம் பலர் பல கேள்விகளை கேட்டனர். பல விமர்சகர்கள் ”என்ன இது? ஓஏ திடீரென்று இப்படி மாறிவிட்டார்? அமைதியே உருவானவராயிற்றே இவர். என்னமோ தன் மகனின் இசையை கேட்டாராம். அந்த குறுந்தகடு இவரை குணப்படுத்திவிட்டது என்கிறாரே! இது உண்மைக்கு புறம்பானது. நம்பமுடியாததும் கூட” என்று சொன்னார்கள். ஒவ்வொரு மனிதனின் வேதனையும் ஏதோ ஒன்றினால்தான் குணமடைகிறது. அவரவரின் நம்பிக்கையை பொறுத்தது. என் மகனின் இசையை கேட்கும் போதெல்லாம் நான் இதுவரை அடைந்த துயரங்கள் எல்லாம் விலகிப்போவதை உணர்கிறேன். அவனது இசையால் அவனது துயரங்களும் விலகிப் போகின்றன. அவன் சந்தோஷப்படுகிறான். ஆக நானும் என் மகனும் ஒரே திசையில்தான் செல்கிறோம். அவனது இசையைக் கேட்கும் யாராவது சந்தோஷமாக இருந்தால், அவரும் எங்கள் திசையில் தான் செல்கிறார். என் மகனோடு அவரும் குணமடைகிறார்.

ஆக நீங்கள் சொல்வது உங்கள் மகன் தன் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கிறார் என்று. மற்றவர்களுக்கு அவர் நல்லதொரு எடுத்துக்காட்டு. வாழ்க்கைச் சக்கரத்தை உருட்ட, அந்த வேளையில் ஈடுபடும்போது தங்களின் வேதனையை மறந்து தங்களை தாங்களே குணப்படுத்திக் கொள்ள…

ஆமாம்… அதேதான் நானும் அப்படிச் செய்யவே விரும்புகிறேன். எனது மகனின் இசை எனது இலக்கியத்திற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

கருப்பொருள் எழுத்தாளரை தேர்ந்தெடுக்கிறதா? அல்லது எழுத்தாளர் கருப்பொருளை தேர்ந்தெடுக்கிறாரா?

நாடின் கோர்டிமர் கதை, சூழ்நிலை, கருப்பொருள் எதையுமே நாம் தேர்ந்தெடுப்பதில்லை என்பதைப் பற்றி எழுதியிருக்கிறார். கருதான் எழுத்தாளனை தேர்ந்தெடுக்கிறது. நேரமும் காலமும் தான் நம்மை எழுத்தாளனாக்குகிறது. நேரத்திற்கு நாம் நிச்சயம் மதிப்பு கொடுக்க வேண்டும் என் அனுபவத்தை வைத்து சொல்ல வேண்டுமானால், நானும் நாடின் கோர்டிமரைப் போலவேதான் நினைக்கிறேன். மனநிலை பாதிக்கப்பட்ட பிள்ளையின் குடும்பத்தைப் பற்றி எழுதும் முயற்சியையும் நான் செய்யவில்லை. முடிந்தவரை இதுபோன்ற கருப்பொருளிலிருந்து நான் கழட்டிக் கொள்வேன். ஆனால் இத்தகைய கருப்பொருள்கள் என்னை தேர்ந்தெடுக்கும்போது நான் என்ன செய்ய முடியும்? இதனால்தான் என்னால் தொடர்ந்து எழுத முடிகிறது.

இன்னுமொரு கட்டுரையில், அடிப்படையில் என் எழுத்து என் சொந்த விவகாரங்களில் ஆரம்பித்து, பின் சமூகத்தோடும், நாட்டோடும், உலகத்தோடும் சேர்ந்து கொள்கிறது என்று எழுதியிருக்கிறீர்களே.

என் எழுத்து என்னோடும் என் குடும்பத்தினரோடும் ஆரம்பித்து, சமூகத்தோடு தொடர்புகொண்டு பின் உலகத்தோடு தொடர்பு கொள்கிறது என்று கருதுகிறேன். என்னை என் குடும்பத்தினரோடும் பின் உலகத்தினரோடும் இணைப்பது எனக்கு சுலபமாகவே இருக்கிறது. ஏனென்றால் எல்லா இலக்கிய படைப்புகளுமே ஆழ்ந்த உட்பொருள் கொண்டவையே. எனவே நம் குடும்பத்தினரைப் பற்றி எழுதும்போது, உலகத்தினரோடு நம்மை இணைத்துக்கொள்ள முடிகிறது. ஆனால் நான் என்னையும் என் குடும்பத்தினரையும் சமூகத்தோடு இணைக்கவே ஆசைப்படுகிறேன். சமூகத்தினரோடு நம்மை இணைத்துக்கொள்ளும் போது சொந்தக் கதைகளை எழுதமாட்டோம். ஆனால் சுதந்திரமான ஒரு நாவலை எழுதுகின்றோம்.

‘எ ஹீலிங் ஃபேமிலி’ என்ற புத்தகத்தில், ஒரு ஊனமுற்ற குழந்தைக்கு குடும்பத்தில் முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் கற்ற பாடங்களினால் பரந்து கிடக்கும் சமுதாயம் அது போன்ற குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதையும் சமுதாயம் அவர்களிடமிருந்து என்னவெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறீர்கள். சுருங்கச் சொல்லின், குணப்படுத்தும் குடும்பத்தை உருவாக்கினால், குணப்படுத்தும் சமுதாயத்தையே உருவாக்கலாம் என்று சொல்லியிருக்கிறீர்களே!

ஆமாம், நான் அப்படித்தான் நம்புகிறேன். ஆனால் ஒரு ஊனமுற்ற பையனின் குடும்பத்தினருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதில் எனக்கு விருப்பமில்லை. தனியானதொரு குடும்பத்தை சமூகத்தோடு சேர்த்துப் பிணைக்கும்போதுதான் அதற்கு சமூக அந்தஸ்து கிடைக்கிறது. அப்படி பிணைக்க முடியாமல் போனால், நம் அனுபவத்தின் மூலம் கிடைக்கும் சொந்த விவகாரங்களைப் பற்றித்தான் எழுத முடியும். என் மகனைப் பற்றிய முதல் நாவல் ‘ ஏ பெர்சனல் மேட்டர்’ அதை நான் எழுதிய போது முக்கியமான ஒன்றை தெரிந்து கொண்டதாக உணர்ந்தேன். அதாவது சொந்த விவகாரம் என்று ஏதும் கிடையாது என்பதை, நமக்குள் இருக்கும் தொடர்பை நாம் கண்டுகொள்ள வேண்டும். அதாவது நமக்கும் சமூகத்திற்கும் உள்ள தொடர்பினை.

எழுத்தாளன் தான் வாழும் காலத்திய அரசியலில் என்ன பங்கு வகிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

சமூகத்திற்கு நமது கடமையை செய்வதுதான் அரசியல் ஆகும். ஆட்சியைப் பிடிப்பதில் எனக்கு எந்த ஆசையும் இல்லை. என் நண்பர்களில் சிலர் ஆட்சியாளர்களாகியிருக்கிறார்கள்.

நீங்கள் ஹென்றி கிஸ்ஸின்ஜெராக ஆசைப்படவில்லையா?

ஹென்றி கிஸ்ஸின்ஜெரோடு நான் கருத்தரங்களில் கலந்து கொண்டேன். கருத்தரங்களின் முடிவுரையில் பேசிய கிஸ்ஸின்ஜெர் குரோதமான சிரிப்போடு, ‘நயவஞ்சகமான முயல் இந்த கார்ட்டூன் படத்தில் சிரிக்கிறது…. ஓஏ-வின் நயவஞ்சகமான சிரிப்பை போல” என்று சொன்னார்.

நான் நயவஞ்சகமானவன் இல்லை. ஆட்சியாளர்களைப் பார்த்து, சில சமயங்களில் நயவஞ்சகமாய் சிரிப்பது உண்டு. கொள்கைகளை உருவாக்கும் அரசியல்வாதி இல்லை நான். ஆனால் மனித வாழ்க்கையை வைத்து கொஞ்சம் அரசியல் பண்ணவேண்டும் என்று நினைக்கிறேன். அதையும் என் இலக்கியப் படைப்புகளின் மூலமே செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன்.

எப்படி?

சற்றே மெல்லிய குரலில் நான் இப்போது அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லுவேன்.

உங்களுடைய நாவல்களில் நீங்கள் கையாளும் மனித நேய கருப்பொருள் சர்வாதிகார ஆட்சியை ஒழித்துக்காட்ட வழிவகுக்குமா?

நான் ஹிரோஷிமா சென்றபோது, அங்கே மருத்துவர் ஷிஜிடோ என்னிடம் “என்ன செய்வது என்ற யோசனையில் மூழ்கிப் போவதை விட நீ எதையாவது செய்து கொண்டிரு” என்று சொன்னார். எனவே இளைஞர்களை ஊக்குவிக்கும் சக்தி என்னிடம் இருக்கிறது என்று நம்புகிறேன். இவர்களை மிகப்பெரிய சக்தியாக மாற்ற என்னால் இயலும். ஜப்பானில் தீவிரவாதம் தன்னை அறியாமலேயே வளர்ந்து கொண்டிருக்கிறது. இது ஆபத்தானதாகவும் மாறலாம். இதைப் பற்றி தாக்கி எழுதினால் இளைஞர்களுக்கு உண்மை புரியலாம். துவக்குவதுதான் முக்கியம்.

இந்த இளைய சமுதாய புத்தி ஜீவிகள் இது போன்ற பிரச்சனைகளை சீர்தூக்கி ‘ஏ பெர்சனல் மேட்டர்’ புத்தகத்தில் வரும் கதாநாயகன் பேர்ட் பிரச்சனைகளை சந்திப்பதைப் போல சந்திப்பார்கள் என்று சொல்கிறீர்களா?

ஆமாம். ஜப்பானிய இளைய சமுதாய புத்திஜீவிகளை நான் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நிஜத்தை சந்திக்க தயாராகுங்கள்.

நீங்கள் எழுதிய பல புத்தகங்கள் இளைஞர்களை மையமாக வைத்தே எழுதப்பட்டவை. நிப் தி பட்ஸ், ஷட் தி கிட்ஸ், என்று இன்றும் பல. உலகை மாற்றும் எண்ணங்கள் இவர்களிடமிருந்து வரலாம் என்று எதிர்பார்கிறீர்களா?

என்னுடைய நாவலின் முடிவில், என் கதாநாயகன் புதியதொரு சமுதாயத்தை உருவாக்குகிறான். புதிய மதம் என்று கூட சொல்லலாம். புத்த மதமும் இல்லை. கிறிஸ்துவ மதமும் இல்லை. ஆன்மாவிற்கு தேவைப்படும் ஒரு மதம் ஒரு நாள் தலைவர் மக்கள் முன்னே நின்று விவிலியத்தைப் படித்துக் காட்டுகிறார். விவிலியத்தில் இடம் பெறும் எஃகபீசியன்ஸ் கடிதம். அதில் இரண்டு வார்த்தைகள். அதாவது ”புதிய மனிதன்” சிலுவையில் ஏற்றப்பட்டபின் மீண்டும் உருவெடுக்கிறார் இயேசுபிரான் புதிய மனிதனாக பழைய மனிதனின் பழைய சட்டையை கழட்டி விட வேண்டியது தான். புதிய மனிதனால் தான் புதிய சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க முடியும். இளைஞர்கள் புதிய மனிதர்களாக மாறவேண்டும். வயது முதிந்தவர்கள் புதிய மனிதர்களை உருவாக்க முயற்சி எடுக்க வேண்டும் இதுவே எனது கொள்கை. என் சிந்தனையெல்லாம் ஜப்பானில் இளைஞர்களை பற்றித்தான்.

எதிர்காலத்திற்காக இளைஞர்கள் தங்களை எப்படி தயார்படுத்திக் கொள்ள வேண்டும்? எழுத்தாளர்களாக எப்படி உருவாகலாம். புதிய மனித சமுதாயத்தைப் படைக்க இவர்கள் என்ன முயற்சி எடுக்க வேண்டும்?

சுதந்திரமாக செயல்படக் கூடியவர்களாக இருக்க வேண்டும். நிமிர்ந்த நெஞ்சம் உடையவர்களாக இருக்க வேண்டும்.

உங்கள் கதாநாயகன் பேர்டை போலவா?

ஆமாம். இரண்டாவதாக அவர்களுக்கு கற்பனாசக்தி அதிகமாக இருக்க வேண்டும். மற்ற உருவங்களை ஏற்றுக் கொள்ள கற்பனை தேவையில்லை. புதியதொரு உருவத்தை உருவாக்க கற்பனாசக்தி தேவை. இது நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம். நிமிர்ந்த நெஞ்சத்தோடு கற்பனை வளத்தோடும் – நல்லதொரு மனிதனாக வாழ இவை இரண்டும் போதும்.

“அதிக நம்பிக்கையும் இல்லாமல், அதிக விரக்தியுமில்லாமல் அவரால் முடிந்தவற்றை உடல் நலம் குன்றிக்கிடப்பவர்களுக்கு செய்கிறார்” என்றும் ”அவர் தான் உண்மையான மனிதர்” என்றும் மருத்துவர் ஷிஜிடோவைப் பற்றி சொல்லியிருக்கிறீர்களே.

பிரெஞ்சு நாட்டு மனித நேய கருத்துக்களில் எனது பேராசிரியர் ஒரு நிபுணர். அவர் என்னிடம் சொல்லும் போதெல்லாம் ”மனித நேயம் என்பது என்ன? அதிக நம்பிக்கையும் வைக்காமல் அதிக விரக்தியும் கொள்ளாமல் வாழ்வதே. இதுவே இன்றைய மனித நேயம்.” எனது பேராசிரியரின் கருத்தை நான் ஷிஜிடோவிடம் சொல்ல, அவரும் ”உண்மைதான். என் வாழ்க்கையின் அனுபவத்தை வைத்தே இதைப்புரிந்து கொண்டேன்” என்றார்.

பார்கிலேவுக்கு மீண்டும் வந்ததிற்கும், உங்களது கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி. மீண்டும் வாருங்கள்.

உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.


தமிழாக்கம் : ராஜ்ஜா 

 

நன்றி திசைகள் எட்டும், ஜப்பானியச் சிறப்பிதழ்

1 COMMENT

  1. முழுதும் வாசித்ததில் மனதுள் ஆழமாக இறங்கியதும் அட ஆமால்ல என்றும் தோன்றியவை:ஒவ்வொரு மனிதனின் வேதனையும் ஏதோ ஒன்றினால்தான் குணமடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.