“ஆதிக்க மனோபாவத்துக்கு எதிராகவே எனது திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன” – மசாகி கோபயாஷி


திரைப்பட அழகியலுக்கும், ஆக்ரோஷமாக வெளிப்படும் சமூக விழிப்புணர்வு திரைப்படங்களுக்கும் இடையில் ஒரு மெல்லிய இணைப்பைப் பின்னுவதாக மசாகி கோபயாஷியின் திரைப்படங்கள் கருதப்படுகின்றன. இவரது புகழ்பெற்றத் திரைப்படமான ஒன்பது மணிநேரம் தொடர்ந்து ஓடக்கூடிய The Human Condition போருக்குப் பிந்தைய ஜப்பானில் நிலவும் முரண்களையும் பாசாங்குத்தனங்களையும் அடிக்கோடிட்டுக் காண்பித்தது. ஸ்டூடியோக்களில் நிலவும் மேட்டிமைத்தனத்துக்கு எதிராகவும் இயங்கியவர் கோபயாஷி. அவரது சமகாலத்திய இயக்குனரான அகிரா குரோசாவைப் போலவே சமகாலத்திய பிரச்சனைகளை வரலாற்றுப் பின்புலத்தில் கட்டமைத்து சாமுராய் பாணியிலானத் திரைப்படங்களாக உருவாக்கியிருக்கிறார். Harakiri, Kwaidan ஆகிய அவரது திரைப்படங்கள் மகத்தானப் படைப்பாக்கங்களாக இன்றளவும் போற்றப்படுகின்றன. நிறுவப்பட்ட ஆதிக்க மனோபாவத்துக்கு எதிராகவும், நிலப்பிரபுத்துவத்துக்கு எதிராகவும் இவரது திரைப்படங்கள் இயங்குகின்றன. அவற்றைக் கிட்டத்தட்ட வெளிபாட்டுத்தன்மை ஒன்றுகலந்த யதார்த்த பாணியில் உருவாக்கினார். மசாகி கோபயாஷியிடம் 1993-ம் வருடத்தில் பீட்டர் கிரில்லியால் மேற்கொள்ளப்பட்ட நேர்காணலின் தமிழாக்கம் இது.

[ads_hr hr_style=”hr-dots”]

Masaki kobayashi | மசாகி கோபயாஷி

[ads_hr hr_style=”hr-fade”]

பொதுவாக, கதை ஓட்டத்துக்குத் துணை புரிவதாகவே திரைப்பட இசை பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சில நேரங்களில் கதையோடு மோதுவதாகவும் இசை செயல்படுகிறது. இவ்வகையில் பயன்படுத்தப்படும் இசை அதிக ஆற்றல்மிக்கதென்று கருதுகிறீர்களா?

நான் இசையைப் பயன்படுத்தும் முறை… படப்பிடிப்பையும், படத்தொகுப்பையும் நிறைவு செய்ததற்குப் பிறகு இறுதியாகவே இசையமைப்பாளரிடம் நமது காட்சிகளைத் திரையிட்டுக் காண்பிப்போம். நிச்சயமாக, திரைப்பட அரங்கத்திற்கு அவர் வருகை புரிந்திருப்பார், தயாரிப்பு காலகட்டத்தில் படம் பற்றிய செய்திகளைத் தினசரிகளில் வாசித்தறிந்திருப்பார். ஆனால், திரைப்படம் காட்சிரீதியாக முழுமையுற்றதும் – இதனை நாம் rough cut என்று சொல்வோம் –இசையமைப்பாளரிடம் நாம் காண்பிப்போம். பாருங்கள், அதன்பிறகு இசையமைப்பாளருடன் மோதல், அதாவது இயக்குனருக்கும் இசையமைப்பாளருக்குமான யுத்தம் துவங்குகிறது. இந்தத் தருணத்தில் படத்தில் இசை சேர்க்கப்பட்டிருக்காது. வசனமும் கூட சேர்க்கப்பட்டிருக்காது. வெறும் ஒலிகள் – யதார்த்த சூழலில் பதிவாகியிருக்கும் ஒலிகள்தான் படத்தில் நிறைந்திருக்கும். நானும் டாகிமிட்சூவும் (Takemitsu) அமர்ந்து, இந்தப் பிம்பங்களைப் பார்க்கும்போது, அவர் அந்தப் பிம்பங்களுக்கு எதிர்வினை செய்கிறவரைப்போல உணருவார். இதுதான் டாகிமிட்சூ படைப்பின் கருப்பொருள் பற்றி ஆழமாக சிந்திக்கத் துவங்கும் நிலை, இசையை எப்படி படத்தில் சேர்க்க வேண்டும், எந்தவகையிலான இசை/ ஒலி வீரியமிக்கதாக இருக்கும், அல்லது எங்கு இசை சேர்க்கப்பட்டால் அது பிம்பங்களில் உள்ளிறங்கியிருக்கும் யதார்த்த உணர்நிலையை பாழ்படுத்தும்; இவை எல்லாம்தான் டாகிமிட்சூ வியக்கத்தக்க வகையில் புரிந்துகொள்ளும் கூறுகள். இயக்குனரின் காட்சி பிம்பங்களுக்குள் நுழையும், அதனை ஆழமாக புரிந்துகொள்ளும் திறன் அவரிடத்தில் இருக்கிறது. அவர் ஒரு அற்புதமான மனிதர்.

Kwaidan திரைப்படத்தில், குறிப்பாக Kurokami (கருப்பு மயிர்) பகுதியில் இசை சர்ரியலாகவும், ஹைப்பர் ரியலாகவும் தோன்றியது. குறைந்தபட்சம் என்னுடைய அனுபவம் அதுதான். உங்களுடைய நோக்கம் என்னவாக இருந்தது?

அது மிகவும் துல்லியமானதுதான். ஆமாம், ஏனெனில் அந்தத் திரைப்படத்தின் இயக்கமே அவ்வகையிலான விளைவை உண்டுபண்ணுவதைத்தான் நோக்கமாக கொண்டிருந்தது. அதனால் rough cut-ஐ திரையிட்டபோது, உடனடியாக டாகிமிட்சூ இந்த அணுகுமுறைதான் நம்பகத்தன்மையை அளிக்கிறதென்று கருதி, அசலான சத்தங்களை எதிரொலிப்பு செய்வதே சரியானது என்றும் தீர்மானித்தார். அந்தக் காட்சிக்கு தேவையான ஒலி என்பது பச்சி ஒலிதான் (Pachi Sound), அதாவது மரம் வெட்டப்படும் ஓசைதான் என்று எனக்கு அவர் விளக்கம் அளித்தார். அந்த உண்மையான ஒலியைப் பதிவுசெய்த அவர்கள், இறுதிக் கலவையில் மின்னணு முறையில் மாற்றியமைத்தனர். உதாரணமாக, Kurokami-ல் வீட்டு நினைவு அழுத்தும் கதாநாயகன் மீண்டும் நிலத்துக்குத் திரும்பி, தனது மனைவி வசிக்கும் அறையை நோக்கி நீண்ட பாழடைந்த மண்டபத்தின் ஊடாக செல்கையில், அந்தத் தளம் அவனைக் கைவிட்டுவிடுகிறது. அந்தச் சமயத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் ஒலியான, மரத்தின் ஒரு பகுதியை கிழித்தெடுக்கும் அசலான மரத்தின் தசை கிழிக்கப்படும் ஓசை. ஆனால், டாகிமிட்சூ இந்த ஒலியை திரைப்பிம்பங்களுடன் பொருந்துமாறு ஒரே சமயத்தில் பயன்படுத்தவில்லை. ஒரு பீட்டை ஒலிக்கச் செய்துவிட்டு, பின் அமைதியை ஒரு நொடி நிலைக்கச் செய்துவிட்டு, அதன்பிறகே இசையை அறிமுகம் செய்கிறார். இவ்வகையில், பார்வையாளர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, இசையின் நேரத்தை லேசாக டாகிமிட்சூ மாற்றியமைத்துவிட்டார். விளைவு மிகவும் தெளிவாக அமைந்துவிட்டது. கதை மெல்ல அவிழ அவிழ, அவர் இந்த விளைவை மேலும் உச்சத்துக்குக் கொண்டுசெல்வார், அல்லது அதற்கு மாறாக நுட்பமான இசையை இழையோடச் செய்வார், இசையை அவர் பிம்பங்களுடன் பொருத்துவது என்பது மிகவும் அறிவார்த்தமான தீர்ப்புகளை அடிப்படையாகக் கொண்டது.

இசையை காட்சியின் செயல்களுடன் பொருத்தமில்லாமல் அமைப்பதால் உண்டாகும் விளைவு என்ன?

விளைவுகளைப் பற்றி எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், இசையைத் தடுமாறச் செய்வதன் மூலமாக, பார்வையாளர்கள் நிச்சயமாக தங்களைப் பாதுகாப்பற்றவர்களாக உணருகிறார்கள். டாகிமிட்சூ தொடர்ச்சியாக இதுபோன்ற ஒன்றைச் செய்துவிடுகிறார். உதாரணமாக, Tokyo trails-ல் வெடிகுண்டு காட்சிக்கு பிறகு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய படைவீரர்களை அந்தந்த நாடுகளின் பிளாசாக்களில் அணிவகுத்துச் செல்லும்போது, அவர் இசையைப் பயன்படுத்துகிறார் என்றாலும், அதனைச் சற்றே மாறுபட்ட விதத்தில் பயன்படுத்துகிறார். அவர் இசையை மிகச் சரியாக காட்சிகளுக்குள் பொருந்துவதாக உபயோகிக்கவில்லை, மாறாக அவர் காட்சிகளுடன் சிறிது விளையாடவே செய்கிறார். குறிப்பிட்ட மெளனத்தை காட்சியில் படரச் செய்துவிட்டு, அதன்பிறகே இசையுடன் பார்வையாளர்களை ஒன்றிணையச் செய்கிறார்.

இவ்விளைவு பார்வையாளர்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவதாக இல்லையா?

ஆமாம். ஆனால், எதிர்பார்க்கப்பட்ட வகையில் பார்வையாளர்களை நகர்த்திச் செல்வதற்கு பதிலாக, அவர் ஒரு பீட்டைத் தவிர்த்துவிடும்போது, அதன் விளைவு அதற்கு நெரெதிராக, எதிர்பாராததாக, எதிர்பார்க்கப்பட்டதில் இருந்து சிறியளவில் விலகியதாகவும் இருக்கிறது.

உங்களுடைய திரைப்படங்களில் இந்த விளைவு மேலும் வலிமையுடையதாகவே இருக்கிறது. ஆனால் இவ்வகையில் டாகிமிட்சூவின் இசை கூடுதல் வலிமையானதாக இருப்பதாக நீங்கள் நினைக்கவில்லையா?

ஆமாம். ஆனால் எந்தத் தருணத்திலும் டாகிமிட்சூ கணித்துவிட முடிகின்ற நேரடித்தன்மை உடைய மனிதர் அல்ல. மேலும் மேலும் தீவிரமாக ஆராய்கின்ற, விளைவுகளை எப்படி மேலும் விஸ்தரிப்பது என்பதைக் கணக்கிடுகின்ற மனிதர் அவர்.

அதிக ஆர்வமில்லாத இசையமைப்பாளரிடம் இதுவொரு ஜிம்மிக் வேலை போல ஆகிவிடுகிறது. ஆனால், டாகிமிட்சூவின் ஆராயும் பண்பு வியப்பிற்குரியது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ம்ம்ம். நீங்கள் இயக்குனருடைய கனவை வைத்திருக்கிறீர்கள்; பிம்பங்களின் தொகுப்பு. டாகிமிட்சூ அந்தப் பிம்பங்களின் பிரத்யேகமான கண்ணோட்டத்தில் இருந்தே தனது தீர்மானங்களை முடிவுசெய்கிறார்.

போர்க் காலம் மற்றும் போருக்கு முந்தைய காலம் எப்படி இருந்த? Harakiri போன்ற ஒரு திரைப்படத்தை, போருக்கு முன்னால் உங்களால் இயக்கியிருக்க முடியுமா?

அதற்கு வாய்ப்பு இருந்திருக்காது. தணிக்கை உச்சபட்ச கடுமையுடன் அனைத்தையும் அணுகியது. எனது குருவான கெய்சுகி கினோஷிட்டா 1944-ல் Army என்ற திரைப்படத்தை இயக்கினார். அது தன்னளவிலேயே முழுமையான ஒரு போர் எதிர்ப்பு திரைப்படம். சிறந்த திரைப்படமும் கூட. ஆனால், அதன்பிறகு திரைப்படங்கள் இயக்கும் பணியில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகிய அவர், ஏதோவொரு கிராமப்புறப் பகுதிக்கு குடியேறிவிட்டார்.

நீங்களும் ஒரு இராணுவ வீரர்தான். நீங்கள் சீனாவிலா இருந்தீர்கள்?

மஞ்சூரியா, ஹார்பினின் புறநகர்ப் பகுதியில் ஏதோவொரு இடத்தில் இருந்தேன்.

நீங்கள் முன்னணி சண்டையில் பங்கெடுத்தீர்களா?

நான் முன்னணி போரில் ஒருபோதும் பங்கேற்கவில்லை. ஏனெனில், அங்கு அதிகளவில் சண்டை நடைபெறவில்லை. சோவியத் யூனின் ஒரு எதிரி பிரதேசமாகக் கருதப்பட்டதால் மஞ்சூரியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கண்டோவின் இராணுவம் முக மூர்க்கமாக இருந்தது. உடனடியாக நிகழலாம் என்று கருதப்பட்ட சோவியத் யூனினின் தாக்குதலை எதிர்கொள்வதற்காக ஜப்பான் இராணுவத்தின் மிகச் சிறந்த மற்றும் கூருணர்வுமிக்கவர்கள், பிரபலமற்ற கண்டோவின் இராணுவத்தில் குவிக்கப்பட்டிருந்தார்கள். அதனால்தான் எங்களது போர் விளையாட்டு மூர்க்கமானதாகவும், வன்முறை நிறைந்ததாகவும் இருந்தது. மிக மோசமான விளைவுகளை உண்டுபண்ணிய பெரிய இயந்திரத் துப்பாக்கிகளின் பின்னால் நான் நிலைநிறுத்தப்பட்டிருந்தேன்.

அந்தச் சமயத்தில் போருக்கு எதிரான மனப்பான்மை உங்களிடம் இருந்ததா?

ஆமாம். மாணவப் பருவத்திலேயே இருந்தது. எனது குடும்பத்தினர் எப்போதுமே தனிநபர் சுதந்திரங்களில் ஈடுபாடு உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் இந்த நம்பிக்கையில் மிகுந்த அர்ப்பணிப்புடன் இருந்தனர். அதனால், போர் வெடித்தபோதும், அதற்குள் நான் இழுக்கப்பட்டபோதும் இராணுவ அமைப்பை ஒருபோதும் நான் விரும்பியதில்லை. பட்டம் பெறுவதற்கு என்னால் தேர்ச்சிப் பெற முடியாமல் இருந்த ஒரே விஷயம் என்றால் அது இராணுவப் பயிற்சிதான். அந்த வகுப்புகளை முழுமையாக வெறுத்த நான், வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு விளையாடிக் கொண்டிருப்பேன்(ஹூக்கி) . அவர்கள் நான் தேர்ச்சிப் பெறுவதை விரும்பவில்லை. ஆனால், வகுப்புத் தலைவன் ஆசிரியரிடம் என் சார்பாக முறையிட்டதால், இறுதியில் எனக்கு தேர்ச்சி வழங்கப்பட்டது. அந்த அளவிற்கு இராணுவப் பயிற்சியை நான் வெறுத்தேன். அதனால் நான் இராணுவத்தில் நுழைந்தபோது என்னைப் போன்ற ஒருவனுக்கு என்ன நேரும் என்பது குறித்து எனது நண்பர்கள் அனைவரும் மிகுந்த அக்கறையுடன் இருந்தனர்.

பிறகு என்ன நடந்தது?

ம்ம்ம். The Human Condition-ல் ஹாஜி எதிர்கொள்ளும் அனைத்துவிதமான சூழல்களையும் நானும் எதிர்கொண்டேன். அங்கிருந்து உயிர்தப்ப வேண்டுமென்றால், எனது உடலை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதையும், இல்லையெனில் அங்கிருந்து உயிருடன் தப்பமுடியாது என்பதையும் உணர்ந்தேன். நான் மிகத் தீவிரமாக முயற்சித்தேன். எனது உடல் வலுவுடையதாக மாறியது. நான் முழு நினைவுடனேயே எதுவும் என்னை வீழ்த்திவிட முடியாத வகையில் பயிற்சிகளை மேற்கொண்டேன். இராணுவத்தில் அதிகாரிக்கான பதவிக்கு வேட்பாளராக – கல்லூரி அல்லது நடுநிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற எவரும் அதிகாரி பதவிக்கான வேட்பாளருக்கு தகுதியுடையவரே – நான் நுழைந்தபோது என்னை அதிர்ச்சியடைய செய்தது என்னவென்றால், மற்ற அனைவருமே கல்வியறிவு இல்லாதவரே. சொற்ப எண்ணிக்கையிலானவர்களாலேயே நடுநிலைப் பள்ளியைத் தாண்டி செல்ல முடிந்திருக்கிறது. ஜப்பானியக் கல்விமுறையால் மிகுந்த ஏமாற்றமடைந்தேன். ஒரு சராசரியான கல்வியைப் பெற்றிருந்தால் அவர்களில் பலரும் தங்களைத் தனித்துவம் மிகுந்தவர்களாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்க முடியும். அத்தகைய மனிதர்களால் தாக்கப்படுவதில் இருந்து தற்காத்துக்கொள்ள எனது உடலை நான் ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதை உணர்ந்தேன். அல்லது இதுபோன்ற சூழலில் இருந்து என்னால் தப்பிக்க முடியாது. வியக்கத்தக்க வகையில் எனது திசையை நான் மாற்றிவிட்டேன். 1936-ம் ஆண்டு பிப்ரவரி 26 சம்பவத்தைத் தூண்டிய அசாபுவின் மூன்றாவது படைப்பிரிவில் நானிருந்தேன். அந்தச் சம்பவம் முடிந்த உடனேயே, படைப்பிரிவின் முக்கிய அமைப்பு மஞ்சூரியாவுக்கு கப்பலேறிவிட்டது. மூன்று மாத பயிற்சி காலத்திற்கு பிறகு, இந்த அசாபுவின் மூன்றாவது படைப்பிரிவில் சேருவதற்கு நாங்கள் அனுப்பப்பட்டோம். மூன்று மாத பயிற்சிகாலத்தின் மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டபோது, நான்தான் அதில் முதல் இடத்தைப் பெற்றிருந்தேன். இப்படித்தான் மஞ்சூரியாவில் உள்ள ஹார்பின் அருகில் ஒரு பகுதியில் மூவாயிரம் ஆண்களுடன் நானும் சேர்ந்திருக்கும் நிலை ஏற்பட்டது. அதுவொரு மகத்தான மாற்றமாகும்.

மஞ்சூரியாவுக்கு அனுப்பட்ட நீங்கள், கடைசிவரையில் அங்கேயே இருந்தீர்களா?

யுத்தத்தின் காரணமாக, தெற்கே நிலைமை ரொம்பவும் மோசமடைந்திருந்ததால், காண்டோ இராணுவத்தின் மிகச் சிறந்த படை வீரர்கள் அங்கு அனுப்பட்டனர். அது ஷோவாவின் பத்தொன்பதாவது ஆண்டு (1944) என்று கருதுகிறேன். நாங்கள் பிலிபைன்ஸுக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால், அப்போது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் எல்லா இடங்களிலும் இருந்தன. அதனால் எங்களால் பிலிபைன்ஸுக்கு செல்ல முடியவில்லை. விளைவாக, நாங்கள் ஒகினாவாவை நோக்கிச் சென்றோம். ஆனால், அவ்விடம் முன்னதாகவே ஜப்பானியப் படைகளால் முறியடிக்கப்பட்டிருந்தது. எங்களால் அங்கும் செல்ல முடியவில்லை என்பதால், ஒகினாவாவில் இருந்து சிறிது தொலைவில் இருந்த மியாக்கோஜிமாவுக்கு சென்று நிலைபெற்றோம். ஒருவேளை ஒகினாவாவிலோ அல்லது பிலிபைன்ஸிலோ அல்லது லெய்டே தீவிலோ தரையிறங்கியிருந்தால், நான் பிழைத்திருப்பேனா என்று சந்தேகமாக இருக்கிறது. தற்செயலாக மியாக்கோஜிமாவில் நாங்கள் தங்கிவிட்டதால், இப்போது உங்கள் முன் நான் உயிருடன் இருக்கிறேன்.

உங்கள் திரைப்படங்களுக்கு மீண்டும் திரும்புவோம். முதல் திரைப்படமான Harakiri குறித்துக் கேட்க விரும்புகிறேன். இந்தத் திரைப்படத்தை எடுத்ததன் நோக்கம் என்ன?

தற்கொலை சடங்குதான் டிராமாவின் முக்கியப் புள்ளியாக இருந்தது. மூங்கில் கத்தியால் தனது வயிற்றைக் கிழிக்கும் தருணம், அதுதான் இந்தத் திரைப்படத்தை இயக்குவதற்கான முடிவை எடுக்கும்படி செய்தது. அதனால்தான் அக்காட்சி அவ்வளவு தீவிரமாக இருக்கிறது. உண்மையில், மூங்கில் கத்தியால் வயிற்றைக் கிழிப்பது சாத்தியமில்லாதது. திரைக்கதையில், அந்தக் கதாப்பாத்திரம் மூங்கில் கத்தியால் வயிற்றைக் கிழிக்கிறது என்று மட்டுமே எழுதப்பட்டிருந்தது. ஆனால், பிம்பங்களால் இதனை நிகழ்த்தித் தொகுப்பது சிரமம் மிக்கதொரு செயலாகும். ரொம்பவும் கடினமானது. அதனால் அந்தக் காட்சியை படம்படிப்பதற்கு முந்தைய தினத்தில், இன்னமும் அந்தக் காட்சி எவ்வாறு அமைய வேண்டும் என்று ஸ்டோரிபோர்டில் தீர்மானத்தை எட்டியிருக்காத சமயத்தில், நான் மதுவருந்தச் சென்றேன். உங்களுக்கே தெரியும், ஸ்டோரிபோர்டுகளைக் கற்பனை செய்வது என்பது செறிவூட்டுவது மற்றும் கவனம் செலுத்துவதோடு தொடர்புடையது என்பதோடு விடை கிடைத்திராத ஒரு கேள்வியை மீண்டும் மீண்டும் ஆராய்ந்து கொண்டிருக்கும்போது, திடீரென உங்களுக்கு ஒரு பார்வையைக் கொடுப்பதாகவும் இருக்கிறது. கிட்டத்தட்ட இசை செய்யும் அதேவகையிலான பணிதான் இதுவும். எப்படியிருந்தாலும், மூங்கில் கத்தியால் வயிற்றைக் கிழிக்க வேண்டுமென்றால், அந்தக் கத்தி ரொம்பவும் உறுதியாக இருக்க வேண்டும். மேலும், நீங்களாக வலிந்து உங்களது உடலை அதற்குள் செலுத்தி, கத்தி உங்களது உடலில் துளையிடுவதற்கு அனுமதிக்க வேண்டும். அதுதான் எனது நோக்கமாக இருந்தது. அதனை கற்பனை செய்துவிட்ட உடனேயே, அதனது தொடர்ச்சியான பிம்பங்கள் எளிதாகவே கிளைத்துவிட்டன. நிச்சயமாக நான் மது அருந்திக் கொண்டிருந்தேன், அதனால்தான் இவ்வளவு குரூரமான திசையில் எனது மனமும் கற்பனையும் சென்றிருக்கிறது என யூகிக்கிறேன். நிதானமாக நான் செய்திருந்த ஸ்டோரிபோர்டுகளில் இருந்து குடிபோதையில் செய்திருந்த ஸ்டோரிபோர்டுகள் வேறுபட்டிருந்தன. அதனால் கேமிராமேனான யோஷியோ மியாஜிமாவிடம் இந்த இரண்டில் எது சிறந்தது என்று கேட்டேன். ”நீங்கள் குடிபோதையில் வரைந்ததுதான் சிறப்பானது” என்று அவரும் பதில் கொடுத்ததால்தான், அந்தக் காட்சி அவ்வளவு குரூரமாக இருக்கிறது. அந்தக் காட்சி திட்டமிடலுக்கு நான் அவ்வளவு தூரம் சென்றதற்கு காரணம், அக்காட்சி அப்படி குரூரமாக வெளிவர வேண்டும் என்று கருதியதால்தான். டாகிமிட்சூவின் இசை அக்காட்சியில் அற்புதமாக இருந்தது. அவர் பிவாவைப் (Biwa) பயன்படுத்தினார். பிவா இசைக்கருவியில் இயல்பாகவே இழையோடியிருக்கும் சோகவுணர்ச்சி, காட்சிக்குள் துக்கத்தின் சின்னமாக நுழைந்துவிட்டிருந்தது. அதனால்தான், அக்காட்சியின் குரூரத்தன்மை குறைக்கப்பட்டிருக்கிறது. டாகிமிட்சூவின் இசைக்கு நன்றி. நான் அந்த இசையைப் பெரிதும் விரும்பினேன்.

நிலப்பிரபுத்துவத்தைப் பற்றி என்ன கருத்தை நீங்கள் உருவாக்குகிறீர்கள்? எந்தச் செய்தியை நீங்கள் வெளிப்படுத்த விரும்பினீர்கள்?

ம்ம்ம். நிறைய இருக்கும் என்று நினைக்கிறேன். எனது திரைப்படங்கள் வெளியாகும்போதெல்லாம், இதே வகையிலான கேள்வியை எதிர்கொள்கிறேன். செய்தித்தாள்கள் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த விரும்புகின்றன. எனது திரைப்படத்தின் பேசுபொருள் அல்லது நான் வலியுறுத்தும் கருத்து என்ன என்பது பற்றியெல்லாம் கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஆனால், திரைப்படங்களை அவ்வகையில் நான் உருவாக்குவதில்லை. குறிப்பிட்ட ஒரு கருத்தில் இருந்து துவங்குவதற்கு பதிலாக, திரைப்படத்தை உருவாக்கும் செயல்பாட்டில் கதையை நான் வளர்த்தெடுக்கையில் கருத்துக்கள் தாமாகவே அதில் பிரதிபலித்துவிடுகின்றன. இதுதான் எனது வகையிலான திரைப்பட உருவாக்கம். அதனால், பத்திரிகையாளர்கள் ”உங்கள் படத்தின் கருத்து என்ன?” என்பது போன்ற கேள்விகளை எழுப்பும்போது, நான் அதற்கு பதில் சொல்வதில்லை. அடுக்கடுக்காக கருத்துக்களை அள்ளி தெளிப்பதில்லை.

சமூகவியலாளர்களும் வரலாற்றாசிரியர்களும் அனைத்து விதமான கோட்பாடுகளையும் ஆராய்ந்து பார்ப்பார்கள். ஆனால் திரைக்கதையை ஷினோபு ஹாஷிமோடோவுடன் இணைந்து எழுதியவராக இந்தத் திரைப்படத்தை உருவாக்க உங்களுக்கு இருந்த நோக்கம் என்ன?

ம்ம்ம். நிச்சயமாக நிலப்பிரபுத்துவத்துக்கான எங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த விரும்பினோம். அதுதான் முக்கிய நோக்கமாக இருந்தது. ஆனால், அதோடு வரலாற்றை ஏமாற்றுவது தொடர்பான கேள்வியும் இருந்தது. உறுதிசெய்யப்பட்ட வரலாற்றில் பதிவு செய்யப்படாமல் இருக்கும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சம்பவத்தை விவரிப்பதும் நோக்கமாக இருந்தது. அப்படியொரு சம்பவம் நடந்தது குறித்து எந்தப் பதிவும் இல்லை. எதுவும் நடக்காததைப்போல மெளனமே மிஞ்சுகிறது. இதுவே ஒரு வரலாற்று மோசடிதான். உண்மையில், படத்தில் நான் வெளிப்படுத்த விரும்பிய மையக் கருத்து இதுவாகவும் இருக்கலாம்.

போர் மற்றும் போருக்கு பிந்தைய வரலாறு காரணமாக ஜப்பான் மேற்கத்தியமயமாக்கப்பட்டுள்ளது என்று ஜப்பானின் மேற்கத்திய அறிஞர்களும் பலரும் வலியுறுத்துகிறார்கள். ஜப்பான் எப்படி அமெரிக்கமயமாக்கப்பட்ட ஜப்பானாக மாறியது என்று அமெரிக்கர்கள் பெருமை பேசுகிறார்கள். உங்களுடைய கருத்து என்ன? போர் மற்றும் போருக்குப் பிந்தைய சூழல்களால் ஜப்பானின் அடிப்படை மாறிவிட்டதா?

நிச்சயமாக சில விஷயங்கள் மாறியிருக்கின்றன. தெருவில் நடக்கையில், பெரும்பாலான குறியீடல்கள் ஆங்கிலத்தில்தான் உள்ளன. கிட்டத்தட்ட ஜப்பானியக் குறியீடுகளை நம்மால் பார்க்கவே முடியவில்லை என்றுதான் நினைக்கிறேன். பெரும்பாலானவை ஆங்கிலத்திலோ அல்லது பிற ஐரோப்பிய மொழிகளிலோதான் இருக்கின்றன. இந்த வகையில் பார்த்தால், மிக மிக அதிகமாக அமெரிக்கமயமாக்கப்பட்டிருக்கிறது. ஜப்பானிய மொழியே பெரிதும் ஆங்கிலத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. நமது தினசரி உரையாடல்களும் கூட மாறியிருக்கிறது. இதனை கவனிக்கும்போது, ஜப்பானின் கலாச்சாரத்தையும், அதன் பாரம்பரியத்தையும் சிலர் பாதுகாக்க விரும்புகிறார்கள் என்பது இயல்பானதாகத்தான் தெரிகிறது. அமெரிக்கமயமாக்கப்பட்ட ஜப்பான் எப்படி மாறிவருகிறது என்பதைப் பார்ப்பது எனக்கு அசெளகர்யத்தையே கொடுக்கிறது. அமெரிக்க கலாச்சாரத்தை இறக்குமதி செய்வது தொடர்பாக சிந்திக்க நாம் பழக வேண்டும். உங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றாலும், ஜப்பான் மேலோட்டமாக எப்படி மெல்ல மெல்ல அமெரிக்காவாக மாறிவருகிறது என்பதை கவனிக்காமல் இருக்க முடியாது. அமெரிக்காவை உண்மையில் புரிந்துகொள்வதற்கும், அதனது நல்ல அம்சங்களை நமது கலாச்சாரத்துடன் இணைப்பதற்கும் எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. நாமெல்லாம் அமெரிக்காவை சிறந்த நாடாகக் கருதிய காலம் ஒன்று இருக்கிறது. அது நான் மாணவனாக இருந்த காலம். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அற்புதமானத் திரைப்படங்களை அப்போது பார்த்துக் கொண்டிருந்தோம். எனது இளம்பருவத்தில், உலகத்தை அறிந்துகொள்வதற்கு எங்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பு திரைப்படங்கள் மட்டும்தான்; அது ஒரு வகையிலான திரைப்படத்துறையின் பொற்காலம் என்றும் சொல்லலாம். பிரான்க் காப்ரா, ஜான் போர்ட் என பல அறிவார்த்த திரைப்பட இயக்குனர்கள் இருந்தார்கள். இந்த இயக்குனர்கள் உருவாக்கிய திரைப்படங்களால் நான் பெரிதும் கவரப்பட்டிருந்தேன். அதோடு, அவர்களுடைய அனைத்துத் திரைப்படங்களும் அமெரிக்காவின் சராசரி மனிதர்களைப் பற்றியதாகவே இருந்தது – நடுத்தர வர்க்கத்தின் சிறப்பம்சம் என்ன என்ற கேள்வியே அவற்றில் தொடர்ச்சியாக இருந்தது. அமெரிக்கத் திரைப்படங்களால் ஆழமாக ஈர்க்கப்பட்டிருந்தோம். அத்தகைய பிரகாசமான, கட்டுப்பாடுகள் இல்லாத உலகத்தைக் கண்டு ஆச்சர்யப்பட்டோம். ஆனால், அந்த ஆண்டுகளில் உலகம் முழுவதிலுமே திரைப்படங்கள் மிகச் சிறப்பாக இருந்தன. இளம்பருவத்தில் இத்தகையத் திரைப்படங்களால் நாங்கள் பெரிதும் தூண்டப்பட்டிருந்தோம்.

பிரான்க் காப்ரா மற்றும் ஜான் போர்ட் ஆகியோரின் திரைப்படங்களில் நீங்கள் பார்த்த அமெரிக்காதான் உண்மையான அமெரிக்கா என்று நீங்கள் நம்பினீர்களா?

ஆமாம். எனது அனுபவம் அப்படித்தான் இருந்தது. ஜான் போர்டை பொருத்தவரையில், The Grapes of Wrath போன்ற சமூக நோக்குடைய திரைப்படங்களும் இருக்கின்றன. அப்போது தயாரிக்கப்பட்டத் திரைப்படங்களில் நிச்சயமாக இவை அதிகம் ஆழம் கொண்டவையாக இருந்தன.

இதேபோல, ஜப்பானியர்களைப் பற்றிய அறிமுகமில்லாத அமெரிக்கர்கள் ஹராகிரி அல்லது யூத் ஆஃப் ஜப்பான் போன்ற திரைப்படங்களைப் பார்ப்பது என்றால் என்ன? அந்தத் திரைப்படங்கள் அசலான  ஜப்பானையே பிரதிபலிக்கின்றன என்று அவர்கள் நம்ப வேண்டும் என விரும்புகிறீர்களா?

ஆமாம். இரண்டு திரைப்படங்களுமே வரலாற்று முன்னோக்கைப் பெறுவதற்கு முற்றிலுமாக பொருத்தமானவை என்பதே எனது கருத்து. சமகால அல்லது போருக்குப் பிந்தைய ஜப்பானைப் புரிந்துகொள்வதற்கும் கூட அவை உதவுகின்றன. ஆனால், அந்தத் திரைப்படங்களைப் பார்க்கும்போது, இயக்குனரின் நோக்கங்கள் குறித்த விழிப்பைப் பெற்றிருக்க வேண்டியது மிக அவசியமானது. இல்லையெனில் தவறாக புரிந்துகொள்ளப்படலாம். பார்வையாளர்கள், “என்னவொரு காட்டுமிராண்டித்தனமான நாடு” என்று நினைத்து விலகிச் செல்லவும் வாய்ப்பிருக்கிறது. கதாநாயகனின் மனிதநேயத்தின் அகலத்தை வெளிப்படுத்துவதில் சடங்குத்தன்மையிலான தற்கொலைக் காட்சி பெரிதும் துணைபுரிகிறது என்று கருதியே அக்காட்சியை நான் வைத்தேன். கான்ஸில் ஹராகிரியைத் திரையிட்டபோது, மூங்கில் கத்தியால் வயிற்றைக் கிழிக்கும் காட்சியில் எல்லோரும் அதிருப்தியில் விசிலடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் மெல்ல மெல்ல காட்சிகள் வளர்ந்து செல்லும்போதுதான் – மிகுனி மற்றும் நகாடாய் ஒருவரையொருவர் எதிகொள்ளும் காட்சி, கடந்த காலத்தின் ஃபிளாஷ்பேக்குகளுக்கு பின் – அமைதியானார்கள். இந்தக் கூறுகள் திரைக்கதையில் தாமதமாகவே வருகின்றன. அப்போதுதான் பார்வையாளர்கள் நகாடாயியின் மனிதநேயம் மலர்ந்து வருவதை உணருவார்கள். இந்த உணர்வுகள் பார்வையாளர்களின் மனதில் நுழைந்ததுமே அவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள். அதனால், அவர்களால் படத்தைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது என்றே நான் நம்புகிறேன்.

சர்வதேசத் திரைப்பட விழாக்களில், திரையிடலுக்குப் பிறகு எப்போதும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருப்பார்கள். அங்கு பெரிய பிரச்சனையாக மூங்கில் கத்தியால் வயிற்றைக் கிழிக்கும் காட்சியே விவாதிக்கப்பட்டது. ஏனெனில், ஐரோப்பியப் பத்திரிகையாளர்கள் அக்காட்சியை அதீதமான மிருகத்தனம் நிரம்பியது என்று கருதினார்கள். உங்களிடம் இப்போது விவரித்ததைப்போலவே அவர்களிடமும் அக்காட்சியின் நோக்கம் குறித்து விவரித்தேன். அதன்பிறகு, பத்திரிகையாளர்கள் அவர்களுக்குள் விவாதிக்கத் துவங்கிவிட்டார்கள். இறுதியில், இயக்குனரின் பார்வையும் அவர் சொல்வதும் சரிதான் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்கள். ஆனால், அந்த விவாதத்தில் என்னை வெகுவாகக் கவர்ந்தது என்னவென்றால், அது மிகவும் வெளிப்படையாகவும், நேரடியாகவும் இருந்தது என்பதுதான்.


தமிழாக்கம் : ராம் முரளி

ராம் முரளி தீவிர இலக்கிய வாசகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்.

[ads_hr hr_style=”hr-fade”]

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.