ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்


னது எதிர்பார்ப்புகளுக்கு நேர்மாறாக, நான் அச்சங்கொண்டிருந்த தினசரி வாழ்க்கை தான் தொடங்குவதற்கான சின்ன சமிக்ஞையையும் வழங்கவில்லை. மாறாக, தேசம் ஏதோவொரு வகைக் குடியுரிமைப் போரில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிந்தது, உண்மையான போரின் போதிருந்ததைக் காட்டிலும் மக்கள் “நாளை” பற்றி வெகு குறைவாகவே சிந்தித்ததாகத் தோன்றியது.

தனது பல்கலைக்கழக சீருடையை எனக்குத் தந்த பள்ளித்தோழன் ராணுவத்தை விட்டு வெளியேற்றப்பட்டான், நான் அவனுடைய சீருடையை அவனுக்கு திருப்பித் தந்தேன். பிறகு சொற்ப காலத்துக்கு நான் என்னுடைய நினைவுகளிலிருந்து, எனது இறந்த காலத்தின் அனைத்து நினைவுகளிலிருந்தும், விடுதலை செய்யப்பட்டதான தோற்றமயக்கத்தைக் கொண்டிருந்தேன்.

என் தங்கை இறந்து போனாள். நான் கூடக் கண்ணீர் சிந்த முடியும் என்கிற கண்டுபிடிப்பால் மேலோட்டமான மன-அமைதியை எனக்குள் தருவித்துக் கொண்டேன்.

சொனோகோவுக்கு சம்பிரதாய முறைப்படி நிச்சயம் நடந்தது, என் தங்கை இறந்த கொஞ்ச நாட்களில் திருமணம் செய்து கொண்டாள். இந்த நிகழ்வுக்கான எனது எதிர்வினையை – என்னுடைய தோள்களில் இருந்து ஒரு சுமை நீங்கியதைப் போன்ற உணர்வென்று அதை விவரித்தால் சரியாக இருக்குமா? நான் மகிழ்ந்ததைப்போல என்னிடம் நானே பாசாங்கு செய்தேன். காதலில் ஆசைகாட்டி மோசம் செய்தது நான்தான் அவளில்லை என்பதால் இது இயல்பானதே என்று எனக்கு நானே பெருமை பீற்றிக்கொண்டேன்.

விதி என்னை செய்யும்படி நிர்ப்பந்தித்த செயல்களை எனது விருப்பம் மற்றும் புத்திகூர்மையின் வெற்றிகள் என்று அர்த்தப்படுத்த நான் வெகுகாலம் வற்புறுத்தி வந்தேன், இப்போது இந்தத் தீய பழக்கம் ஒரு வகையில் வெறிபிடித்த முரட்டுத்தனமாக வளர்ந்திருந்தது. நான் புத்திகூர்மை என்றழைத்ததன் இயல்பில் முறைகேடான ஏதோவொன்றின் சாயல் இருந்தது, எதேச்சையான வாய்ப்பால் அரியணையில் அமர்த்தப்பட்ட கள்ளத்தனம் நிரம்பிய போலி உரிமையாளனின் சாயல். இந்த மட்டித்தனமான அடாவடிப் பேர்வழியால் தனது முட்டாள்தனம் நிரம்பிய கொடுங்கோன்மையின் மீது ஏவப்பட்ட தவிர்க்க முடியாத பழியுணர்வை முன்கூட்டி அறிய முடியவில்லை.

அடுத்த வருடத்தை நான் நிச்சயமற்று ஆனால் நன்மை மீது மட்டும் நம்பிக்கை கொண்டிருந்த உணர்வுகளோடு கழித்தேன். அக்கறையின்றி நான் செயலாற்றிய எனது சட்டப்படிப்புகள் தொடர்ந்தன, மேலும் பல்கலைக்கழகத்துக்கும் எனது வீட்டுக்குமிடையில் தானாகவே நான் போனதும் வந்ததும்… எதன் மீதும் நான் அக்கறை கொண்டிருக்கவில்லை, அல்லது வேறெதுவும் என் மீது அக்கறை கொண்டிருக்கவில்லை. ஒரு இளைய – பாதிரியைப் போன்ற உலகம் – புரிந்ததான புன்னகையை நான் கைவரப் பெற்றிருந்தேன். உயிரோடு இருக்கிறேனா அல்லது இறந்து விட்டேனா என எதுவும் புரியாத உணர்வு எனக்கிருந்தது. போரில் நிகழும் மரணத்தின் இயல்பான மற்றும் புறத்தூண்டுதலற்ற தற்கொலைக்கான எனது முன்னாள் விருப்பம் தற்போது முற்றிலும் வேரோடு அழிக்கப்பட்டதாகவும் மறக்கப்பட்டதாகவும் தோன்றியது.

உண்மையான வலியென்பது மிக மெதுவாகத்தான் வரமுடியும். துல்லியமாகச் சொல்வதெனில் அது காசநோயைப் போன்றது, நோய்க்குறிகள் பற்றி நோயாளி தெரிந்து கொள்ளுமுன்பே மிகுந்த இக்கட்டான நிலைமைக்கு வந்திருக்கும். ஒருநாள் நானொரு புத்தகக்கடையில் நின்றேன், மெல்ல மெல்ல புதிய வெளியீடுகள் மீண்டும் அங்கு தலைகாட்டத் தொடங்கியிருந்தன, முரட்டுத்தனமாக தாள்கள் பிணைக்கப்பட்ட ஒரு மொழிபெயர்ப்பை எடுக்க நேர்ந்தது. பிரெஞ்சு எழுத்தாளர் ஒருவரின் மிகைப்படுத்தப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. புத்தகத்தை நான் மனம் போன போக்கில் திறக்க அந்தப் பக்கத்தில் இருந்த ஒரு வரி என் கண்களில் சுடர் விட்டெரிந்தது. கூர்மையான அசௌகரியத்தின் உணர்வு என்னைப் புத்தகத்தை மூட நிர்ப்பந்தித்து அதை மீண்டும் அடுக்கில் வைக்கச் செய்தது.

மறுநாள் காலை பள்ளிக்குப் போகும் வழியில் எதுவோ என்னை சட்டென்று ஆக்கிரமித்தது, பல்கலைக்கழகத்தின் முதன்மை வாயிலுக்கு அருகிலிருந்த அதே புத்தகக்கடையின் முன் நின்று முந்தைய தினம் நான் பார்த்த புத்தகத்தை வாங்க வைத்தது. குடிமுறை விதிகள் பற்றிய விரிவுரையின்போது நான் புத்தகத்தை திருட்டுத்தனமாக எடுத்து, திறந்து கிடந்த என்னுடைய குறிப்பேட்டின் கீழ் மறைத்து, அதே வரியின் மீது ஆவேசத்தோடு படர்ந்தேன். முந்தைய தினத்தைக் காட்டிலும் அதிகமான அசௌகரியத்தின் துல்லிய உணர்வை அது இப்போது எனக்குத் தந்தது:

…….ஒரு பெண்ணினுடைய ஆற்றலின் அளவென்பது அவள் தன் காதலனை தண்டனைக்குட்படுத்தும் வேதனைகளின் தராதரத்தைப் பொறுத்தது……

பல்கலைக்கழகத்தில் என்னோடு சுமூகமான உறவிலிருந்த நண்பனொருவன் இருந்தான். வெகுகாலத்துக்கு முன்பு நிறுவப்பட்ட தின்பண்டங்களின் கடை அவன் குடும்பத்துக்குச் சொந்தமாயிருந்தது. முதல் பார்வைக்கு, அவன் சுவாரசியமற்ற, சுறுசுறுப்பான மாணவனாகத் தென்பட்டான்; வாழ்க்கை மற்றும் மனிதர்கள் குறித்து அவன் கொண்டிருந்த எரிந்து விழும் தொனியிலான குரலும், அவனும் என்னைப் போலவே மெலிந்த தேகக்கட்டைக் கொண்டிருந்தான் என்கிற சங்கதியும் சேர்ந்து, எனக்குள் பரிதாபத்துக்குரிய ஈர்ப்பை உருவாக்கியிருந்தது. ஆனால் என்னுடைய எரிச்சல் ஒரு அபிப்பிராயத்தை உருவாக்கும் மற்றும் சுய-தற்காப்புக்கான விருப்பத்தின் காரணமாக உருவானது, இதே மனநிலை அவனுக்குள் ஏதோவொரு சுய-நம்பிக்கையின் திடமான உணர்வில் வேரூன்றியிருப்பதாகத் தோன்றியது. அவனுக்கு எங்கிருந்து இந்த நம்பிக்கை வருகிறது என நான் அதிசயித்தேன். சிறிது காலம் கழித்து நான் இன்னும் கன்னித்தன்மையோடுதான் இருக்கிறேன் என்பதை அவன் யூகித்தான், பொங்கி வழியும் மேன்மையுணர்வு மற்றும் சுய-இகழ்ச்சியின் கலவையான குரலில், தான் விபச்சார விடுதிகளுக்கு சென்று வருவதை அவன் ஒத்துக்கொண்டான். பிறகு இந்த சமாச்சாரம் பற்றிய எனது உணர்வுகளை வெளிப்படுத்தினான்.

“…..எனவே நீ எப்போதாவது போக விரும்பினால், என்னை அழை. எப்போது வேண்டுமானாலும் நான் உன்னை அழைத்துப் போகிறேன்.”

“உம். நான் போக விரும்பினால், உறுதியாக… ஒருக்கால்.. நான் கூடிய விரைவில் முடிவெடுக்கிறேன்.” நான் பதிலளித்தேன்.

அவன் நாணமுற்றவனாக, என்றாலும், வென்றவனாகத் தோற்றமளித்தான். அவனுடைய வெளிப்பாடு என் நாணத்தின் உணர்வைத்தான் பிரதிபலித்தது; எனது தற்போதைய மனநிலையை அவன் முழுமையாக உணர்ந்ததாக நம்பியதாகவும், மிகச்சரியாக இதே போன்ற உணர்வுகளைத் தான் அனுபவித்த காலகட்டத்தைப் பற்றி அவன் நினைவுறுத்தப்பட்டதைப் போலவும் இருந்தது. நான் அலைக்கழிக்கப்படுவதாக உணர்ந்தேன். என் மீது சுமத்தப்பட்ட உணர்வுகளை உண்மையாகப் பெற்றிருக்க விரும்பிய, எனக்குள் ஏற்கனவே நன்கு-ஊறியிருந்த, அலைக்கழிப்பின் உணர்வு.

போலியான நாணமென்பதும் ஒருவகையான சுயநலம்தான், ஒருவரின் சொந்த விருப்பங்களின் பலத்தால் அவசியமானதாக மாறும் சுய-பாதுகாப்புக்கான ஒரு வழிமுறை. ஆனால் எனது உண்மையான விருப்பங்கள் சுய-சலுகையின் இந்த வடிவத்தைக் கூட அனுமதிக்காத அளவுக்கு வெகு ரகசியமாய் இருந்தன. மேலும் அதே நேரத்தில் கற்பனையான விருப்பங்களும் – அதாவது, பெண்கள் குறித்த எனது எளிமையான மற்றும் சுருக்கமான ஆர்வம் – இதுபோன்ற சுயநலத்துக்குத் தங்களுக்குள் எந்த இடமும் இல்லை என்பதைப் போல எனக்கு வெகு இறுக்கமான சுதந்திரத்தையே அளித்தன. ஆர்வத்தால் ஒரு பயனும் இருப்பதில்லை. உண்மையில், ஒரு மனிதனுக்கு இருக்கக்கூடிய மிக மோசமான நெறியற்ற விருப்பம் அதுதான்.

பரிதாபத்துக்குரிய ரகசியமானதொரு பயிற்சியை நான் வடிவமைத்தேன். நிர்வாணமான பெண்களின் படங்களை நிலையாக உற்றுப்பார்ப்பதன் மூலம் என் விருப்பத்தைப் பரிசோதிப்பதை அது உள்ளடக்கி இருந்தது…. எளிதாக யூகிக்கும் வகையில், என்னுடைய விருப்பம் ஆமாம் என்றோ இல்லை என்றோ பதில் சொல்லவில்லை. எனது அந்த தீய பழக்கத்தில் ஈடுபடும்போது, முதலில் என் வழக்கமான பகற்கனவுகளை விலக்கி, பிறகு மிகவும் கீழ்த்தரமான நிலைகளில் தோற்றமளிக்கும் பெண்களின் உருவங்களை மனதுக்குள் வலுக்கட்டாயமாக அழைத்து வருவதன் மூலம், நான் எனது விருப்பத்தை சீரமைக்க முயல்வேன். சில நேரங்களில் என் முயற்சிகள் வெற்றியடைந்ததாகத் தோன்றின. ஆனால் இந்த வெற்றியில் இருந்த ஏதோவொரு பொய்மை எனது இதயத்தை பொடிப்பொடியாக சிதைத்ததாகத் தோன்றியது.

கடைசியில், ஒன்று நீச்சலடிக்க வேண்டும் அல்லது மூழ்க வேண்டுமென நான் தீர்மானித்தேன். என் நண்பனை ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் ஐந்து மணிக்குக் குறிப்பிட்டத் தேநீர்க்கடையில் வந்து என்னை சந்திக்குமாறு தொலைபேசியில் கேட்டுக் கொண்டேன். போர் முடிந்த இரண்டாவது வருட ஜனவரியின் நடுவில் இது நிகழ்ந்தது.

“ஆகக் கடைசியில் நீ ஒரு தீர்மானத்துக்கு வந்து விட்டாய், இல்லையா?” அவன் தொலைபேசியில் உற்சாகமாகச் சிரித்தான். “பரவாயில்லை, நான் அங்கே இருப்பேன். கவனி – நான் நிச்சயமாக அங்கே இருப்பேன். நீ வராமல் போனால் உன்னை மன்னிக்கவே மாட்டேன்.”

தொலைபேசியை வைத்த பிறகும், அவனுடைய எக்காளச் சிரிப்பின் குரல் என் காதுகளில் எதிரொலித்தது. கண்ணுக்குப் புலப்படாத, திருகியதொரு புன்னகையால் மட்டுமே அவனுடைய எக்காளத்தை எதிர்கொள்ள முடிந்ததென்பதை நான் அறிந்திருந்தேன். என்றாலும் நம்பிக்கையின் கீற்றை உணர்ந்தேன், அல்லது, சரியாகச் சொன்னால், அதுவொரு கற்பனையான நம்பிக்கை. ஆபத்தான கற்பனை. வீண் தற்பெருமைதான் மக்களை துணிந்து இன்னல்களை சந்திக்கச் செய்யும். என் விசயத்தைப் பொருத்தவரை இருபத்து-இரண்டு வயதில் இன்னும் கன்னிப்பையனாகத்தான் இருக்கிறேன் என்று அறியப்பட விரும்பாத பொதுவான வீண் தற்பெருமைதான் இயங்கியது. இப்போது அதைப் பற்றி நினைக்கும்போது, என் பிறந்தநாளன்றுதான் இந்தத் தேர்வுக்கு என்னை நான் உறுதி செய்து கொண்டது…

ற்றவருடைய மனதைப் படிக்க முயல்வதைப்போல நாங்களிருவரும் ஒருவரையொருவர் உற்றுப்பார்த்தோம். தீவிரமான முகமோ அல்லது அகலமான இளிப்போ இரண்டும் சம அளவில் அபத்தமானதாகவே இருக்குமென்பதை இன்று என் நண்பனும் உணர்ந்திருந்தான், தன்னுடைய உணர்வுகளற்ற உதடுகளிலிருந்து சிகரெட் புகையை வேகவேகமாக ஊதித்தள்ளினான். சம்பிரதாயமாக சில வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்ட பிறகு இந்தக்கடையில் வழங்கப்படும் தின்பண்டங்களின் மோசமான தரம் குறித்து பொதுப்படையாக பேச ஆரம்பித்தான். சிரத்தையின்றி அதை கேட்டுக் கொண்டிருந்தவன் அவனை இடைமறித்தேன்:

“நீயும் கூட உனது முடிவில் தீர்மானமாக இருப்பாய் என நம்புகிறேன். ஏனெனில் முதல் முறை இது போன்ற இடத்துக்கு அழைத்துப் போகக்கூடிய மனிதன் வாழ்நாள் நண்பனாகவோ அல்லது வாழ்நாள் எதிரியாகவோ மாறிப்போவான் எனும் சந்தேகம் எனக்குண்டு.”

“என்னை பயமுறுத்தாதே. நான் எப்பேர்ப்பட்ட கோழை என்பது உனக்குத் தெரியும். ஒரு வாழ்நாள் எதிரியின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க எனக்குத் தெரியாது.”

“உனக்கு இந்தளவுக்கு உன்னைப் பற்றித் தெரிந்திருப்பது நல்ல விசயம்தான்.” தைரியமாக இருப்பதாக காட்டிக்கொள்ள, நான் வேண்டுமென்றே அவனை மட்டம் தட்டிப் பேசினேன்.

“அப்படியானால் சரி,” செயற்குழுவின் தலைவனைப் போன்ற கடுமையான தோற்றத்தோடு அவன் சொன்னான், “நாம் எங்காவது சென்று எதையாவது குடிக்க வேண்டும். புதிதாக ஆரம்பிப்பவனுக்கு அவன் நிதானத்தில் இருப்பது ரொம்ப சிரமமாக இருக்கும்.”

“இல்லை, நான் குடிக்க விரும்பவில்லை.” எனது கன்னங்கள் விறைப்பதை உணர்ந்தேன். “சிறிதளவு மதுவும் எடுத்துக் கொள்ளாமல்தான் நான் போகிறேன். அது இல்லாமல் போகும் தைரியம் எனக்குண்டு.” வேகமாக ஒன்றன்பின் ஒன்றாக மங்கலான சாலை வாகனத்திலும் பிறகு மங்கலான மேலே செல்லும் ரயிலிலும் சவாரி செய்தோம், பரிச்சயமில்லாத நிலையம், பரிச்சயமில்லாத தெரு, அருவருக்கும் குடியிருப்பு மனைகள் வரிசையாய் நின்றிருந்த முனை, மேலும் ஊதா மற்றும் சிவப்பு விளக்குகளின் கீழ் வீங்கியதாகத் தெரிந்த பெண்களின் முகங்கள். தெருவை உருக்குவதுபோல, ஒருவரையொருவர் மௌனமாகக் கடந்து சென்ற வாடிக்கையாளர்கள் தங்களுக்குள் உரசியபடி நடந்தார்கள், அவர்கள் ஏதோ வெறுங்காலில் நடப்பதைப் போல் அவர்களுடைய காலடியோசைகள் சந்தடியற்று இருந்தன. சின்னதொரு விருப்பத்தையும் நான் உணரவில்லை. பாதிமதியத்தின் தீனிகளுக்காக இரைஞ்சும் குழந்தைதான் நான் என்பதைப்போல, மிகத்துல்லியமாக, என்னை உந்தித்தள்ளியது எனது அசௌகரியத்தின் உணர்வென்பதைத் தவிர்த்து வேறொன்றுமில்லை.

“எந்த இடமானாலும் பரவாயில்லை,” என்றேன். “எந்த இடமானாலும் பரவாயில்லை, புரிகிறதா.” அங்கிருந்து திரும்பி பெண்களின் செயற்கையான கம்மிய குரல்களிடமிருந்து தப்பி ஓட வேண்டுமென்பதைப்போல உணர்ந்தேன்: “ஒரு நிமிடம் நில், அன்பே; ஒரே ஒரு நிமிடம் நில், அன்பே…..”

“இந்த வீட்டிலிருக்கும் பெண்கள் ஆபத்தானவர்கள்…… உனக்கு அவளைப் பிடித்திருக்கிறதா? கடவுளே, என்னவொரு முகம்! ஆனால் குறைந்தபட்சம் அந்த வீடுதான் சற்றே பாதுகாப்பானது.”

“முகத்தால் எந்த வித்தியாசமும் விளையப் போவதில்லை,” என்றேன்.

“அப்படியானால் சரி, வித்தியாசமாக இருக்க வேண்டுமென்பதற்காக மட்டும் நான் அழகானவளை எடுத்துக்கொள்கிறேன். பிற்பாடு என் மீது கோபம் கொள்ளாதே.”

நாங்கள் நெருங்கிச் சென்றபோது இரண்டு பெண்கள் ஏதோ அவர்களைப் பேய் பிடித்தது போல எங்களிடம் குதித்தோடி வந்தார்கள். நாங்கள் வீட்டுக்குள் போனோம், உள்ளே நுழைகையில் எங்கள் தலைகள் மேற்கூரையைத் தொடுவதாகத் தோன்றுமளவுக்கு அந்த வீடு மிகச் சிறிதாயிருந்தது. தன்னுடைய தங்கப்பல்லையும் ஈறுகளையும் வெளிப்படுத்திய புன்னகையைத் தந்து, நாட்டுப்புற உச்சரிப்பைக் கொண்டிருந்த மெலிந்தவள் என்னை மூன்று-படுக்கைகளுடனான அறைக்கு அழைத்துச் சென்றாள். கடமையுணர்வு என்னை அவளை அணைக்கச் செய்தது. என் கைகளுக்குள் இறுக்கி, நான் அவளை முத்தமிட இருந்தேன். அவளுடைய கனத்த தோள்கள் வெடிச்சிரிப்பால் பித்தேறியதாகக் குலுங்கின.

“அப்ப்ப்ப்ப்படிச் செய்யாதே! உதட்டுச்சாயம் உன் மேல் ஒட்டிக்கொள்ளும். இதோ இதுதான் சரி.”

வேசை தனது பெரிய வாயைத் திறந்தாள், அதன் தங்கப்பல் உதட்டுச்சாயத்தில் தீற்றியிருந்தது, தனது உறுதியான நாவை ஒரு குச்சியைப்போல வெளியே நீட்டினாள். அவளுடைய எடுத்துக்காட்டை வழிமொழிந்து, நானும் என் நாவை வெளியே நீட்டினேன். எங்கள் நாவுகளின் நுனிகள் தொட்டுக்கொண்டன…

அதிதீவிர வலியை நினைவுறுத்தும் உணர்வுக்குறை ஒன்றிருப்பதாக சொன்னால் அனேகமாக நான் புரிந்து கொள்ளப்படாமல் போகலாம். இது போன்ற வலியால், வெகு முனைப்பான, என்றாலும் துளிகூட உணரமுடியாத வலியால், என்னுடைய மொத்தவுடலும் மரத்துப்போவதை நான் உணர்ந்தேன். தலையணையின் மீது என் தலையை சாய்த்தேன்.

பத்து நிமிடங்களுக்குப் பிறகு என் இயலாமை குறித்து எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. எனது முழங்கால்கள் அவமானத்தால் நடுங்கிக் கொண்டிருந்தன.

 

டந்தது எதைப் பற்றியும் என் நண்பனுக்கு எந்த சந்தேகமும் இல்லையென்று நான் யூகித்தேன், மேலும் ஆச்சரியப்படும் வகையில், அடுத்த சில நாட்களில் நோயிலிருந்து மீண்டு வருவதைப் போன்ற உற்சாகமற்ற உணர்வுகளுக்கு என்னை முழுதாய் ஒப்புக்கொடுத்தேன். பயமென்னும் கடுந்துயரத்தோடு பெயர் தெரியாத நோயால் பாதிக்கப்பட்ட மனிதனைப் போலிருந்தேன்: அது குணப்படுத்த முடியாததாக இருந்தாலும், வெறுமனே நோயின் பெயரைத் தெரிந்து கொள்வது கூட தற்காலிக விடுதலையின் ஆச்சரிய உணர்வை அவனுக்குத் தருகிறது. மேலும், தன்னுடைய மனதுக்குள் அவன் தப்பிக்கவியலாத ஒரு நம்பிக்கையை இன்னுமதிகமாக முன்னுணருகிறான், அது, தனது தனித்த இயல்பில், நிரந்தர விடுதலையின் உணர்வை அவனுக்கு அதிகமாகத் தருகிறது. அனேகமாக நானும் கூட தகர்த்தெறிய வாய்ப்பேயில்லாத அடியை எதிர்பார்க்கும் இடத்துக்கு நகர்ந்திருந்தேன், அல்லது வேறு வழியில் அதைப் பற்றி சொல்வதென்றால், தப்பிக்க வாய்ப்பில்லாத விடுதலையின் அதீத உணர்வு.

தொடர்ந்த வாரங்களில் என் நண்பனை பள்ளியில் பலமுறை சந்தித்தேன், ஆனால் இருவருமே அந்த சம்பவத்தைப் பற்றி ஒரு தடவை கூட ஆலோசிக்கவில்லை. ஒரு மாதத்துக்குப் பிறகு மாலை வேளையில் என்னைச் சந்திக்க அவன் வந்தான், மற்றொரு மாணவனின் துணையோடு, எங்களுக்குப் பொதுவாக அறிமுகமான ஒருவன். அவன் பெயர் ட்டி (ஆங்கில எழுத்து T), பெண்களின் மாபெரும் காதலன், வீண் தற்பெருமையால் நிரம்பி, எந்தப் பெண்ணையும் வெறும் பதினைந்து நிமிடங்களில் தன்னால் சரிக்கட்ட முடியும் என்று சதா அலம்பித் திரிபவன். சொல்லி முடிக்குமுன்பே எங்களுடைய உரையாடல் தவிர்க்க முடியாத களத்துக்குக் கீழிறங்கியது.

“இனியும் அது இல்லாமல் நான் இருக்கமுடியாது – என்னால் என்னைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை,” என்னை நெருக்கமாகப் பார்த்தபடி, ட்டி சொன்னான். “எனது நண்பர்களில் யாராவது ஆண்மையற்றவர்களாக இருந்தால் உண்மையாகவே நான் அவர்கள் மீது பொறாமைப்படுவேன். அதற்கும் மேல், நான் அவர்கள் முன் மண்டியிடுவேன்.”

எனது முகம் நிறம் மாறுவதைக் கண்ட என் நண்பன் உரையாடலை ஒரு புதிய தளத்துக்குத் திருப்பி, ட்டியிடம் சொன்னான்:

மார்செல் ப்ரௌஸ்ட் எழுதிய புத்தகத்தை எனக்குக் கடன் தருவதாக நீ வாக்களித்தாய், நினைவிருக்கிறதா? அது சுவாரசியமாக இருக்கிறதா?”

“அது சுவாரசியமாக இருக்கிறதென்றுதான் நான் சொல்லுவேன். ப்ரௌஸ்ட் ஒரு சோடோமைட்டாக இருந்தார்.” அவனொரு அந்நியமொழி வார்த்தையைப் பயன்படுத்தினான். “பணியாட்களோடு அவருக்கு தொடர்பிருந்தது.”

சோடோமைட் என்றால் என்ன?” என்று கேட்டேன். அப்பாவியைப் போல பாசாங்கு செய்வதன் மூலம் நான் நம்பிக்கையிழந்தவனாக காற்றைத் துழாவிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன், இந்த சிறிய கேள்வியை ஆதரவாகப் பற்றிக்கொண்டு அவர்களுடைய எண்ணங்களைப் பற்றிய ஏதாவது தடயத்தை, என் மானக்கேட்டை அவர்கள் சந்தேகிக்கவில்லை என்பதற்கான ஏதாவது அறிகுறியைக் கண்டடைய முயன்றேன்.

“சோடோமைட் என்றால் சோடோமைட்தான். உனக்குத் தெரியாதா? அதுதான் தன்ஷோகுகா.”

“ஓ… ஆனால் ப்ரௌஸ்ட் அப்படியிருந்தார் என நான் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை.”

என்னுடைய குரல் நடுங்கிக் கொண்டிருந்ததென்பதை என்னால் சொல்ல முடியும். புண்பட்டதாகத் தோற்றம் தந்தால் எனது துணைவர்களுக்கு உறுதியான சான்றினை நானே தந்ததாக இருக்கும். வெளித்தோற்றத்துக்கு இப்படியொரு மானங்கெட்ட சமநிலையைப் பேண முடிந்ததை அசிங்கமாக உணர்ந்தேன். என் நண்பன் என்னுடைய ரகசியத்தை மோப்பம் பிடித்து விட்டது வெளிப்படையாகத் தெரிந்தது. எனது முகத்தைப் பார்ப்பதைத் தவிர்க்க தன்னாலான அனைத்தையும் அவன் செய்து கொண்டிருந்தான் என்று எனக்கு எப்படியோ தோன்றியது.

இறுதியில் எனது சபிக்கப்பட்ட விருந்தாளிகள் பதினோரு மணிக்குக் கிளம்பினார்கள், தூக்கமற்ற அந்த இரவில் என்னுடைய அறைக்குள் என்னை நானே அடைத்துக்கொண்டேன். புகைமண்டலமென உதிரம் ஆவியாகி அலைந்திடும் கனவுகள் கடைசியாக வந்து என்னைத் தேற்றும்வரை, நான் தேம்பியழுது கொண்டிருந்தேன். பிறகு, என்னுடைய மிக நெருங்கிய நண்பர்களான, வருத்தம் கொள்ளச்செய்யும் அந்த கொடூரமான கனவுகளிடம், என்னை நான் முழுமையாக ஒப்படைத்தேன்.

ஏதாவதொரு மாற்றம் அவசியமானதாக இருந்தது. பழைய நண்பனொருவனின் வீட்டில் நிகழ்ந்த சந்திப்புகளுக்கு, சோம்பலான உரையாடலையும் வெறுமையான பிற்பொழுதுகளையும் தவிர்த்து அவை என் மூளையில் எதையும் மிச்சம் வைக்கப்போவதில்லை என்பது தெரிந்தும், அடிக்கடி சென்றுவரத் தொடங்கினேன். நான் அங்கே போனது ஏனென்றால் அந்த கொண்டாட்டங்களுக்கு வந்த உயர்குடி மனிதர்கள் என்னுடைய வகுப்புத்தோழர்களைப் போலல்லாது, ஆச்சரியப்படும் வகையில் தோழமையோடும் எளிதில் அறிந்து கொள்ளக்கூடியவர்களாகவும் இருப்பதாகத் தோன்றினார்கள். அவர்களில் நிறைய புது பாணிகளால் ஈர்க்கப்பட்ட இளம்பெண்கள் இருந்தார்கள், ஒரு புகழ்பெற்ற சோப்ரானோ, வளர்ந்துவரும் பெண் பியானோ இசைப்பாளர், மேலும் சமீபத்தில்தான் திருமணம் ஆகியிருந்த நிறைய இளம் மனைவிகள். அங்கே நடனமிருக்கும், சிறிது குடியும், மேலும் தொட்டுப்பிடிக்கும் ஆட்டத்தின் காமம்சார்ந்த வடிவத்தை உட்படுத்திய முட்டாள்தனமான விளையாட்டுகளை விளையாடுவதும் இருக்கும். சில சமயங்களில் கொண்டாட்டங்கள் விடியும்வரை நீடிக்கும். அதிகாலை வேளைகளில் நடனமாடிக் கொண்டிருக்கையில் உறக்கம் கவிழ்வதை நாங்கள் அறிந்து கொள்வோம். பிறகு விழித்திருக்க வேண்டி நாங்கள் ஒரு ஆட்டத்தை விளையாடுவோம், தரையில் மெத்தைகளை விசிறி இசைப்பெட்டி சட்டென்று நிற்கும்வரை அவற்றைச் சுற்றி வட்டமாக நடனமாடுவோம். இந்தச் சைகையின்போது இருவர் இருவராக தலையணையின் மீது அமருவோம், தங்களுக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொள்ள முடியாதவர் ஏதாவது சாகசம் செய்யவேண்டும். நடனமாடுபவர்கள் மெத்தைகளின் மீது கும்பலாகச் சென்று வீழ்வது மாபெரும் கிளர்ச்சியை உண்டாக்கியது. விளையாட்டு தொடருகையில், பலமுறை இது நிகழ்த்தப்பட்டபோது, பெண்கள் கூட தங்களுடைய தோற்றம் குறித்து அக்கறையற்றவர்களாகத் தோன்றினார்கள்.

அனேகமாக அவளுக்கு சற்று போதையாயிருந்ததுதான் காரணமாயிருக்கலாம், ஆனால் ஒருமுறை அங்கிருந்த பெண்களில் மிகுந்த அழகோடிருந்தவள் அதீத உற்சாகத்தோடு சிரிப்பதை நான் எப்படியெல்லாம் பார்த்தேனென்பது எனக்கு நினைவிருக்கிறது, மெத்தையைப் பிடிக்கத் தோற்றுப்போன குழப்பத்தில் தனது பாவாடை தொடைகளுக்கு ரொம்ப மேலே ஏறிக்கிடப்பதை அவள் கவனித்திருக்கவில்லை. அவளுடைய தொடைகளின் சதை வெண்மையாக பளபளத்தது. சிறிது காலத்துக்கு முன்பு இது நிகழ்ந்திருந்தால், அனேகமாக இப்படியொரு சூழ்நிலையில், தங்களுடைய விருப்பங்களை விட்டு விலகியோடும் மற்ற இளைஞர்களின் வழியைப் பின்பற்றியிருப்பேன், மேலும் ஒருகணமும் மறந்திராத என் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதற்கான அனைத்துத் திறமைகளையும் பயன்படுத்தி உடனடியாக என் கண்களை வேறுபக்கம் திருப்பியிருப்பேன். ஆனால் அந்த குறிப்பிட்ட தினத்துக்குப் பிறகு நான் மாறியிருந்தேன். சின்னதொரு வெட்க உணர்வுமின்றி – அதாவது, என்னோடு உடன்பிறந்த வெட்கமின்மை பற்றிய சின்னதொரு வெட்க உணர்வுமின்றி – அந்த வெண்மையான தொடைகளை ஏதோவொரு உயிரற்ற பொருளின் ஒரு பகுதியை மட்டும் ஆராய்வது போல பொறுமையாக உற்றுப்பார்த்தேன்.

வெகுநேரம் எதையாவது உற்றுப்பார்ப்பதால் வரும் கசப்பான வலியால் திடீரென நான் தாக்கப்பட்டேன். வலி அறிவித்தது: நீ மனிதஜென்மம் கிடையாது. நீ இயல்பாகப் புணர்ச்சியில் ஈடுபட முடியாத ஜென்மம். நீயொரு மனிதத்தன்மையற்ற, ஏதோ வினோதமான, பரிதாபத்துக்குரிய மிருகம் என்பதைத் தாண்டி வேறொன்றுமில்லை.

 

(யுகியோ மிஷிமா எழுதிய ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் நாவலின் ஒரு பகுதி)


தமிழில் : கார்த்திகைப் பாண்டியன்

 

இந்நாவலை  “எதிர் வெளியீடு” வெளியிட்டுள்ளது. விலை ரூ 300

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.