1.என்ன நடக்கிறதென்று யாருக்குத் தெரியும்
மணித்துளிகளின் மறுபக்கம்
என்ன நடக்கிறதென்று யாருக்குத் தெரியும்?
எத்தனை எத்தனை சூர்யோதயங்கள்
அந்த மலைக்குப் பின்னாலிருந்து!
தொலைவில் திரளுமந்த மிளிர்மேகம்
முன்பெத்தனை முறை
பொன்னுடல் நடுங்க இடிமுழங்கியிருக்கிறது!
இந்த ரோஜா நஞ்சாகிப்போனது.
அந்த வாள் உயிர் அருளியது.
நான் ஒரு சாலையின் முடிவில்
பூக்கள் அசையும் ஒரு புல்வெளியைக் குறித்து
யோசித்துக் கொண்டிருந்தேன்
பிறகு சேற்றுக்குள் என்னைக் கண்டேன்.
மானுடத்தின் மகத்துவம் குறித்து
நான் யோசித்துக் கொண்டிருந்தேன்
தெய்வீகத்தினுள்ளேயே என்னைக் கண்டேன்.
2, முழுநிலவு
கதவு திறந்திருக்கிறது
சில்வண்டு ரீங்கரித்துக்கொண்டிருக்கிறது
நீ நிர்வாணமாய்த்தான் வலம் வரப்போகிறாயா
அவ்வயல்களினூடே?
அழிவிலாத நீர் போல
எல்லாவற்றினுள்ளும் நுழைந்து வெளியேறிக் கொண்டிருக்கிறாய்.
நீ நிர்வாணமாய்த்தான் திரியப்போகிறாயா
அக்காற்றினில்?
துளசிச்செடி தூங்கவில்லை
எறும்பு சுறுசுறுப்பாய் இயங்குகிறது
நீ நிர்வாணமாய்த்தான் உலவப்போகிறாயா
வீட்டில்?
3.ஒவ்வொரு இதழாய்ப் பிய்த்தேன்.
ஒரு ரோஜாவைப் போல
ஒவ்வொரு இதழாய்ப் பிய்த்தேன் உன்னை
உள்ளிருக்கும் உன் ஆன்மாவைக் கண்ணுற.
என்னால் அதைப் பார்க்கவே இயலவில்லை.
ஆனாலும் சூழ்பரப்பு யாவிலும் எங்கெங்கும்
நிலத்தின் கடலின் நீள் எல்லைவரையிலும்
ஏன் அந்த முடிவிலியிலும் கூட வியாபகம் கொண்டிருந்தது
அளப்பரியதும் உயிர்ப்புமான ஒரு பரிமளம்.
4.சமுத்திரங்கள்
என் படகு பெரிதாய் எதிலோ மோதியுடைந்து
ஆழ்கடலுக்குள் மூழ்கிவிட்ட உணர்வு
ஆனால் எதுவும் நடக்கவில்லை
எதுவும் இல்லை… நிசப்தம்.. அலைகள்…
எதுவும் நடக்கவில்லையா?
அல்லது எல்லாமே நடந்துமுடிந்துவிட்டதா?
இப்போது நாம் அமைதியாய் நின்றிருப்பது
அடுத்த பிறவியிலா?
தமிழில் : கீதா மதிவாணன்
——
ஆசிரியர் குறிப்பு:
ஜுவான் ரமோன் ஜிமெனெஸ் (1881-1958) ஸ்பெயினைச் சேர்ந்தவர். ஓவியம் பயின்றவர். லத்தீன் அமெரிக்க நவீனத்துவ இயக்கத்தின் முக்கியத்துவம் வாய்ந்த ஆளுமை. தாகூரின் கவிதைகளை ஸ்பானிஷில் மொழியாக்கம் செய்துள்ளார். Palatero and I என்ற உரைநடை கவிதை நூலினை எழுதியுள்ளார். இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றவர் . இங்கு மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கும் கவிதைகள் Lorca & Jimenez: Selected poems : Robert Bly நூலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை.
கீதா மதிவாணன்: ஆஸ்திரேலியா நாட்டில் சிட்னி நகரத்தில் வசிக்கும் கீதா மதிவாணன் “என்றாவது ஒருநாள்” (ஹென்றி லாசன் எழுதிய ஆஸ்திரேலியக் காடுறை கதைகளின் மொழிபெயர்ப்பு) என்ற நூலை வெளியிட்டுள்ளார் கீதமஞ்சரி எனும் வலைத்தளத்தில் படைப்புகளை எழுதி வருகிறார்.
தேர்ந்த சொல்லாடல் .. கவிதைகளை ஒழி பெயர்ப்பு என்று சொல்லிவிட முடியாதபடியான வார்த்தைத் தேர்வுகள் வாழ்த்துக்கள்.