மலரினும் மெல்லிது


சார், கிப்ட் பொண்ணுக்கா? மாப்பிள்ளைக்கா?”  என்று கேட்டாள் அந்த மஞ்சள் நிற சுடிதார் அணிந்த பெண்.  காலை ஒன்பது மணிக்கு கடை திறந்தவுடன் உள்ளே நுழைந்தவன், இன்னும் எதையும் தேர்வு செய்யவில்லையென்கிற புகார், முகத்தில் தெரிந்தது.

அவள் கேட்டதும், பத்தரை மணிக்கு முகூர்த்தம் என்பது நினைவுக்கு வந்து பதற்றம் அதிகமானது. ”லவ்வருக்கு”, என்றேன். உடனே, உளறிவிட்டேன் என்பது புரிந்து அவளை பார்த்தேன்.

அவள் சற்று திகைத்து, பிறகு நிதானமானாள். ”இல்லைங்க, நீங்களும் ஒரு மணி நேரமா பாக்குறீங்க. எந்த மாதிரி தேடுறீங்கன்னு தெரிஞ்சாதானே, ஹெல்ப் பண்ணலாம்?”, என்றாள்.  அவள் முகத்தில் கருணை அரும்பியிருந்ததை கண்டதும் எரிச்சலானது.

”இல்லை, நானே பார்த்துட்டு கூப்பிடுறேன் ”

அவள்,  எடுத்து காண்பித்த பொருட்களை, திரும்பி தூசிதட்டி மேலே வைக்க ஆரம்பித்தாள். உண்மையில், இந்த திருமணத்துக்கு செல்லக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். அவசர வேலை என்று சென்னை கிளம்பிவிடவேண்டும். அந்த நாளன்று, ஊரில் இருக்ககூடாது. நான் வரவில்லையென்பது, அவளுக்கு காலம் முழுவதும் உறுத்தவேண்டும். அவள், அமெரிக்காவின் ஏதோ ஒரு மூலையில், அவ்வளவு முறைச் சொல்லியும், அவளது திருமணத்திற்க்கு நான் வரவில்லையென்பதை நினைத்து, மனம் வருந்தி, சன்னலோரத்தில் அமர்ந்து ஆகாயத்தை பார்த்துக்கொண்டிருப்பதை கற்பனை செய்திருந்தேன். ஆனால், எந்த திட்டமுமின்றி நாட்கள் கடந்துவிட்டது. எதிர்வீட்டில் இருந்துக்கொண்டு திருமணத்துக்கு செல்லாமல் தவிர்க்க இயலாது. அம்மா, இழுத்துப்போட்டுக்கொண்டு ஷோபாவின் திருமண வேலைகளை செய்தாள்.

வெறுங்கையுடன், திருமணத்துக்கு செல்ல முடியாது. தரப்போகும் பரிசுபொருள், அவளுக்கு வாழ்நாள் முழுவதும், எனது நினைவுகளை கடத்தவேண்டும். அப்படி ஒரு கலைப்பொருள் இந்த ஊரில் கிடைக்காது. திருச்சி காதிகிராப்ட் சென்று வாங்கவேண்டும். சந்தனத்தில் செய்த அழகான சிலைகள் அவளுக்கு பிடிக்கும். இரண்டாயிரம் ரூபாய் ஆகலாம். முதல் நாள் போய் வாங்கிவிடலாமென்று நினைத்திருந்தேன். அந்த திட்டமும் தள்ளிப்போட்டு நிறைவேறாமல் போனது.

மேஜையில் பரப்பியிருந்த பொருட்களில், பிள்ளையார் சிலையை திரும்பவும் எடுத்து பார்த்தேன். ஷோபாவுக்கு, பிள்ளையார் சிலைகள் பிடிக்கும். ஒவ்வொரு பிறந்த நாளுக்கும், நான் தரும் பரிசுகளை ஆர்வத்துடன் எதிர்நோக்குவாள். என்னுடைய தேர்வு குறித்து, மகிழ்ச்சி கொள்வாள். வெள்ளி நிற பிள்ளையாரில் அழகான தங்க நிறத்தில், தும்பிக்கை மட்டும் ஒட்டவைக்கபட்டதுபோல் தனியே நின்றிருந்தது, திருத்தமாக இருந்தது. இதையே வாங்கிவிடலாம். ஆனால், இந்த சிலை, காதலின் நினைவுகளை தருமா?

வெள்ளி நிறத்தில் இரு கைகள் மட்டும் தொட்டுக்கொண்டிருக்க, கீழே இதய வடிவில் சட்டகம் இணைத்திருந்த பரிசுபொருள் இன்னும் பொருத்தம் என்று தோன்றியது. அந்த இதயத்துக்குள் சிறிய சங்கிலிகள் தொங்கின. ”தங்க சங்கிலி, மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ..இனி தஞ்சம், மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ..”, அது அந்த சிவபிரசாத்தின் தோள்கள். பரிசுபொருளை உற்றுப்பார்த்தேன். அந்த கைகளில் ஒன்று, மற்றொரு கையில் மோதிரம் இடுகிறது. ஆக, இந்த பரிசு அவர்களது ஜோடிபொருத்தத்ததை வியந்து, எங்கிருந்தாலும் வாழ்க என்று சொல்லிக்கொடுக்கும் திருமண பரிசு. இது, என்னுடைய நினைவுகளை எந்த விதத்திலும் தரபோவதில்லை. உண்மையில் இங்கிருக்கும் எந்த பரிசுபொருளும், அப்படி ஒரு நினைவை அவளுக்கு தரபோவதில்லை. இனியொரு புது வாழ்க்கை. அமெரிக்காவில் டிரைவ் செய்யாமல் முடியாது, என்று திருமுருகன் டிரைவிங் ஸ்கூலில் கார் கற்றுக்கொள்ளும்போதே, அவள் இங்கு பற்றியிருந்த அனைத்தையும் உதிர்த்தெழுந்துவிட்டாள். இனி எப்போதும் அவள் இங்கு வரபோவதுமில்லை. இந்த ஊரில் ஒருபோதும் இருக்ககூடாது. இன்றிரவே சென்னைக்கு பஸ் ஏறிவிடவேண்டும்.

”அதோ அந்த கிப்ட்டை எடுங்க”

”இந்த டேபிள் கிளாக்கா?”, அந்த மஞ்சள் நிற சுடிதார் பெண் வியந்தாள்.

”ஆமாங்க அதுதான்”, மஞ்சள் நிற ஓடு போன்ற பிளாஸ்டிக் பாக்ஸ் நடுவில் கடிகாரமிருந்தது. வலதுபக்கம் விஜய்காந்த் படம் ஒட்டியிருந்தது. இடதுபக்கம் ஏதோ ஒரு நடிகை. அந்த பெண் நம்பமுடியாதவளாய் அதை திருப்பி பார்த்தாள். எழுபத்திஐந்து ரூபாய் என்று ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது.

என் முகத்திலிருந்த தீர்மானத்தை உணர்ந்து, கடிகாரத்தை எடுத்து அதில் படிந்திருந்த தூசியைத் துடைத்தாள். கிப்ட் பேக் செய்தாள். ”ஹாப்பி மேரிட் லைப்”, என்று அவளே லேபிள் ஒட்டி என் பெயரை எழுதுவதற்காக பேனாவை நீட்டினாள். ”இல்லை பேரு வேண்டாம், நீங்க கொடுங்க”. பணம் செலுத்தி எடுத்துக்கொண்டு திருமண மண்டபம் விரைந்தேன்.

மண்டபத்து வாசலில் தாஸ் குழு கிளார்னெட் வாசித்துக்கொண்டிருந்தார்கள். ”என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்.. நல்ல நாளில், கண்ணன் மணிதோளில்…”. கண்ணீர் திரண்டது.

பிளாஸ்டிக் பையில் கிப்ட்,  உடன் உள்ளே சென்றேன். வாயிலில் ஷோபாவின் அப்பா அகலமான சரிகை வேட்டியணிந்து  நின்றிருந்தார். கையிடுக்கில் கேஷ்பேக். ”என்ன குணா இது? ப்ரெண்ட் கல்யாணத்துக்கு இவ்வளோ லேட்டா வர்றே?”, என்றார்.

”வேலை விஷயமா ஒரு டெலிபோன் இண்டர்வியூ இருந்துச்சு.” எந்த கம்பெனி? என்று கேட்பார் என முகத்தை பார்த்தேன். “சரி, சரி உள்ளே போ” என்றார். ஒரு நல்ல வேலை அமைந்திருந்தால், இது எல்லாமும் மாறியிருக்க கூடும்.

ஊரின் மிகப்பெரிய மண்டபம். பதினைந்து வரிசைகளாக நாற்காலிகள் போட்டிருந்தார்கள்.  வாசலிலிருந்து மணமேடை தூரமாகத் தெரிந்தது. மேளசத்தத்தை மீறி, புரோகிதரின் குரல் மண்டபத்தில் எதிரொலித்தது.   மேடையை ஆக்ரமித்து புகைப்படம் எடுப்பவர்கள் விளக்குகளை வைத்திருந்தனர். ஷோபா, கரும்பச்சை நிறத்தில் பட்டு உடுத்தியிருந்தாள். அவன் குனிந்து ஏதோ சொல்ல புன்னகைத்தாள்.  காலியாக கிடந்த முதல் நாற்காலியில் உட்கார்ந்தேன். அட்சதை தட்டை தூக்கிக்கொண்டு வந்தவர், என்னிடம் கொடுத்து ”பாஸ் பண்ணுங்க சார்” என்றார்.  கெட்டிமேள ஓசையெழ, கூட்டம் பரபரப்பானது. ஷோபாவின் கழுத்தில் தாலி கட்டினான், அமெரிக்க இஞ்சினியர் சிவபிரசாத். மேடையிலிருந்த ஷோபாவின் தாய், கண்களை துடைத்துக்கொண்டாள். அருகிலிருந்த பெரியவர், கோவிலில் சாமி தரிசனம்போல் கைகளை குவித்து கும்பிட்டார். அட்சதை பறந்தது. நானும் கையிலிருந்ததை எடுத்து தூவியபோது, என்னை மீறி, ”நல்லா இருக்கணும்” என்று முணுமுணுத்தேன். தாலிகட்டி முடிந்த அடுத்த நொடியில், அருகிலிருந்த அத்தனை வரிசையும் காலியானது. சாப்பிடுவதற்க்காக அனைவரும் மேல் தளத்திற்க்கு சென்றனர். சிலர் மட்டும் பரிசுபொருட்களை எடுத்துக்கொண்டு மேடையருகே சென்றனர்.

கையிலுள்ள பரிசை, யாரிடமாவது கொடுத்துவிட்டு வெளியேறிவிடவேண்டும். ஏன், மேடைக்கு சென்று கொடுத்தாலென்ன? என்று தோன்றியது. அவள் எப்படி என்னை எதிர்கொள்வாள்? அந்த திருமண அலங்காரத்தில் ஷோபாவை இன்னும் அருகாமையில் பார்க்கத்தோன்றியது. போட்டோ கூட எடுப்பார்கள். அந்த படமே பழைய நினைவுகளை தரட்டுமே.  கிப்ட் பேக்கை எடுத்துக்கொண்டு, மேடைக்கு சென்றேன். அருகே செல்லச்செல்ல ஷோபா அந்த கரும்பச்சை பட்டுபுடவையில் தேவதை போல் துலங்கி வந்தாள். அழகான கண்கள் மைதீட்டப்பட்டு இன்னும் பெரிதாக தெரிந்தது. ஒருகணம், அந்த கண்களில் ஏற்படபோகும் மாற்றத்தை தவறவிடகூடாது. அந்த ஒரு கணமே என்றென்றைக்கும் ஆறுதலளிக்கும் ஒன்றாக எஞ்சப்போவது. அருகில்சென்றதும், அவளிடம் பரிசை கொடுப்பதா, இல்லை சிவபிரசாத்திடம் கொடுப்பதா என்று தடுமாறினேன். சிவபிரசாத் பட்டுவேட்டி சட்டையில் குறுக்காக துண்டு கட்டி, உயரமாக நின்றான். அழகாக சிரித்தான். எனக்கு முன்பு சென்றவரிடம், வாங்கிய பரிசை பின்பக்கம் நின்ற தோழியிடம் கொடுத்துவிட்டு நிமிர்ந்து, என்னை பார்த்தாள் ஷோபா. என்னை அவள் உணர்ந்த அந்த  நொடி, என்னுடைய ஷோபாவை பார்த்தேன். சட்டென்று முகம் மலர, ”ஏய் குணா இந்த பக்கம் வா” என்று கத்தினாள். ”இது குணா” என்று சிவபிரசாத்திடம் அறிமுகப்படுத்தினாள். அவன் கைகொடுத்தான். நான் என்ன சொல்வது என்று புரியாமல் யோசித்தேன். கிப்டை வாங்கிகொண்டு ”தேங்கஸ்டா” என்றாள்.  புகைப்படம் எடுக்க தோதாக அருகில் நிறுத்தினாள். அவளுடைய வெண்மையான தோளில் அரும்பியிருந்த வியர்வை துளிகளை அருகில் பார்த்தேன். ” ஹாப்பி மேரிட் லைப்” என்று முணுமுணுத்தேன். புகைப்படம் எடுத்தவுடன் இறங்கி நடந்து மண்டபத்தை விட்டு வெளியே வந்தேன்.

இலக்கில்லாத கோபமும், சோகமும் எழுந்தது. பஸ்ஸ்டாண்டு சென்று பழக்கடை குட்டி மற்றும் அவனது நண்பர்களை பார்க்கலாம் என்று தோன்றியது. இந்த நேரத்தில் எந்த சிந்தனையுமின்றி அவர்கள் பேசுவதை கேட்பது ஒன்றே செய்யகூடியது. முன் தினம் பஸ் ஸ்டாண்டில் நடந்த சண்டையை பற்றியோ,   பாரில் நிகழ்ந்த கைகலப்பு பற்றியோ விவரிப்பார்கள். அந்த வன்முறையை மனம் நாடியது.

குட்டி, எப்போதும் அணியும் காவிவேட்டி, கறுப்பு காட்டன் சட்டையுடன், பழக்கடை உள்ளே கல்லாபெட்டியில் உட்கார்ந்திருந்தான். என்னை பார்த்தவுடன் எழுந்து வெளியே வந்தான்.  கடைபையனை அழைத்து மெக்டவல் விஸ்கி ஆஃபும், வாட்டர் பாட்டிலும் வாங்கி வரச்சொன்னான் குட்டி. கொடவுனுக்காக ஒதுக்கியிருந்த கடைக்குள் சென்று குடித்தோம். ”ஆத்து மண்டபத்துக்கு போகலாமா?”, என்றான் குட்டி. திரும்பவும் ஒரு குவார்ட்டர் வாங்கி வேட்டிக்குள் சொருகிகொண்டு பைக்கில் ஆறு நோக்கிச்சென்றோம். தெப்பக்குளம் கீழ்கரையும், வடகரையும் சந்திக்கும் இடத்தில், அந்த பாதை ஆறு நோக்கிச்சென்றது. முழுவதும் கருவைகாடு மண்டி, ஒரு ஆள் நடக்கும் அளவுக்கு மட்டும் பாதை தெரிந்தது. கொஞ்ச தூரம் சென்று ஆற்றை நெருங்கிய இடத்தில் இடதுபுறம், செங்கல்லால் கட்டப்பட்ட அந்த இடிந்த மண்டபம் இருந்தது. பெரும்பாலும் குடிக்கவும், கஞ்சா புகைக்கவும் மட்டுமே அந்த மண்டபம் பயன்பட்டுவந்தது. பைக்கை தள்ளாடி நிறுத்தினான் குட்டி. இறங்கியவுடன் வேட்டியை சரிசெய்து கட்டினான். அரை அடி கத்தி ஒன்று, காக்கி நிறை உறையுடன், வேட்டிக்குள்ளிருந்து கீழே விழுந்தது. திரும்பவும் எடுத்து சொருகிகொண்டான். உள்ளே நடந்தோம்.

உள்ளே கிடந்த கல் தூணில் யாரோ படுத்திருப்பது தெரிந்தது. விரட்டிவிடும் முனைப்பில் ”யாருடா அது ?” என்று குரல் கொடுத்தான் குட்டி.கைகளை தலைக்குவைத்து படுத்திருந்தார், அவர். நாங்கள் அருகில் சென்றதும், படுத்தபடியே சிரித்தபடி ”என் பேரு சைமனுங்க” என்றார்.

குட்டி,  ”நாங்க வரோம், என்ன அமர்த்தல் மயிரா படுத்திருக்கே? எழுந்திரு முதல்லே” என்றான்.

அவர் எழுந்து உட்கார்ந்தார். ”சந்திரசேகரன் டாக்டரு வீட்டுலே சமையவேலை பாக்குறேண்ணே. ஞாயித்துகிழமை மத்தியானம் மட்டும் லீவு. ஆத்துக்கு நடந்து வந்தேன். களைப்பா இருந்துச்சு..அப்படியே உறங்கிட்டேண்ணே” என்றார்.

சைமன் மீசையில்லாது குறுந்தாடி வைத்திருந்தார். அந்த தாடியும் பெரிய பிராயசைகளின்றி முகத்தில் ஒட்டியிருந்தது. முகத்தில் சிறிய கோணல் இருந்தது. சராசரி உயரம்.  வெள்ளை நிறத்தில் வேட்டியணிந்திருந்தார். எழுந்து உட்கார்ந்தபோதுதான் அந்த வேட்டி, கைலி போல் இருபக்கமும் மூட்டப்பட்டிருந்தது தெரிந்தது. முழுக்கை கோடுபோட்ட மங்கலான சந்தன நிறத்தில் சட்டை.   சாலையில் செல்லும் எத்தனையோ முகங்களில் ஒன்றாக இருந்தார். ஒருபோதும் கவனம் ஈர்க்காத முகம். சிரித்தபோது மட்டும் அவர் முகம் வேறொன்றாய் ஆனது. எந்த கருத்துமில்லாது, வேடிக்கையாய் சிரிக்கும் குழந்தைமுகம். கண்களும் அந்த சிரிப்பில் முழுவதும் கலந்திருந்தது.

அவரது நிதானமும், சிரிப்பும் குட்டியை தடுமாற்றம் கொள்ள செய்தது.

”சரி, நாங்க பாட்டுக்கு மப்புலே வர்றோம். நீ படுத்துகிட்டே பதில் சொல்றே? உனக்கு பயமா இல்லியா?” என்றான் குட்டி.

”உங்களை எனக்கு தெரியாது. தெரியாத மனுசன், என்ன பெரிய தீமையை செஞ்சுபுடமுடியும்ண்ணே?”, என்றார் சைமன்.

”சரி சைமன், நீங்க படுத்துக்குங்க”, என்றேன்.

குட்டி, மண்டபத்தின் பக்கவாட்டில் சமதளமாக இருந்த இடத்தை துண்டால் தட்டி சுத்தம் செய்தான். அதில் அமர்ந்தோம். பிறகு குவார்ட்டர் பாட்டிலை எடுத்து, இரண்டு பிளாஸ்டிக் கப்பில் ஊற்றி, தண்ணீர் கலந்தான்.  மதிய வெயிலில் நன்கு ஏறியிருந்தது. இருப்பினும் உடனே எடுத்து குடித்தேன். குட்டி யோசனையாக பார்த்தான். பிறகு கப்பிலிருந்து ஒரு மிடறு அருந்தினான்.

”கல்யாணத்துக்கு போகபோறதில்லைன்னு சொன்னீங்க?”, என்று கேட்டான் குட்டி.

”நைட்டு ரதிமீனாலே  டிக்கெட் போட்டுடு குட்டி. இனி இங்கே இருக்க முடியாது. முன்னாடியே போயிருக்கணும். ”

”இதுக்குதான் அப்பவே சொன்னேன், குணா. நீங்கதான் ரொம்ப நிதானமா இருந்தீங்க.”

”இரண்டு பேரும் பேசிகிட்ட முடிவுதான். ஆனா, அவளால அப்படி பட்டுனு விட்டுடமுடியுங்குறதுதான் ரொம்ப வலியா இருக்கு.”

”பட்டுன்னு விட்டுறதுதாண்ணே நல்லது.”, என்றார் சைமன். அப்போதுதான் அவரை கவனித்தேன். திரும்பவும் படுக்காமல்  எங்களை நோக்கி உட்கார்ந்திருந்தார். ”புண்ணை குத்தி கிளறி என்ன செய்யபோறோம்? கிட்டாதாயின் வெட்டென மற, இல்லிங்களா?”, என்றார்.

”எந்த ஊரு உங்களுக்கு?” என்று கேட்டான் குட்டி.

”சொந்த ஊரு திருமருகல் பக்கம்ண்ணே. தப்பா நினைச்சுகாதீங்க. நீங்க ப்ரெண்ட்சு ஏதோ பேசிகிட்டு இருந்தீங்க. என்னமோ தோணுச்சு சொல்லிட்டேன்” , என்றார் சைமன்.

”அது பரவாயில்லை. சரியாதான் சொல்லியிருக்கீங்க. இங்கே எப்படி வேலைக்கு வந்தீங்க?” என்று கேட்டேன்.

சொந்தமா நிலமில்லை அண்ணே. ஊருலே வன்னியர் பூக்கடையில் கூலிக்கு பூ கட்டுவேன். கோவிந்தராசு குரூப்லே சமைய வேலைக்கும் போவேன். அப்படி கத்துகிட்டதுதான் சமையல் வேலை. சிங்கப்பூரு வரைக்கும் சுத்தினாலும், உப்பு இங்கேன்னு எழுதியிருக்கு. வந்துட்டேன்.

குட்டி எழுந்து கல்தூண் மறைவில் நின்று சிகரெட் பற்றவைத்தான். சைமனிடம் பேசவேண்டுமென்று தோன்றியது. அவர் பக்கமாக திரும்பி உட்கார்ந்து ”சிங்கப்பூர் எப்போ போனீங்க?” என்றேன்.

பத்து வருஷம் முந்திங்க. அக்கா மவ எஸ்தரை கல்யாணம் கட்டிக்க சொன்னுச்சு, அம்மா. ஓரளவுக்கு வருமானம் வந்ததால, நானும் ஒத்துக்கிட்டேன். எஸ்தருக்கும் என்மேல பிரியம் உண்டு. பன்னிரெண்டாவது வரை படிச்சவ. எந்த பிடிப்பிமில்லாம சுத்திட்டு இருந்தவனை, அவதான் கதிக்கு கொண்டுவந்தா. நிலம் வாங்கணும், வீடு கட்டணும், மோட்டரு பைக்கு வாங்கணுன்னு எப்பவும் அந்த பெரிய கண்ணை விரிச்சு சொல்லிக்கிட்டே இருப்பா. அப்போதான், ஊர்லே இருந்து சிங்கப்பூர்லே வேலைபார்த்த காதர் பாய், என்கிட்டே ”சிங்கப்பூர்லே தெரிஞ்சவரு பூக்கடை வைச்சுருக்காரு. வர்றியான்னாரு?”. கல்யாணம் கட்டி ஒரு மக பொறந்துட்டா. இனியும் இப்படியே அன்றாட காய்ச்சியா இருக்ககூடாது மாமா. நீ ஊருக்கு போன்னு சொன்னுச்சு எஸ்தரு. டூரிஸ்டு விசா. ஓவர் ஸ்டே அடிச்சிக்கணும்ன்னு சொல்லி ஏத்திவிட்டாங்க. போய் இறங்குன உடனே வந்து கூப்பிட்டுகிட்டாங்க.

தேக்காலே இருந்துச்சு அந்த கடை. என்னோட சேர்த்து ஆறு பேர் இருந்தோம். காலைலே ஆறு மணிக்குள்ளே குளிச்சு முடிச்சி, பூ கட்ட உட்காருவோம். மல்லிப்பூ, சாமந்தி, ரோசா, முல்லைப்பூ இப்படி திண்டுக்கல்லுலே இருந்து வந்து லோடு கணக்குலே இறங்கும். பெரிய கல்யாண மாலை, சாமிக்கு போடுறது சின்ன மாலை, கல்லறைக்கு போடுறதுன்னு கட்டிகிட்டே இருப்போம்.

சைமன் பேசிக்கொண்டே போனார். பொதுவாக நாலு வாக்கியத்துக்கு மேல் கவனம் குவிக்காத குட்டியே லயித்திருந்தான். சைமன் தொடர்ந்தார்.

பெரிய மாலைகள் கட்டுறது நுணுக்கமான வேலை. கணேசன் அண்ணன்கிட்டே தான் நான் கத்துகிட்டேன். இரண்டு கையை சேர்த்து வைக்குற தண்டிக்கு மல்லிப்பூ மாலை ஆர்டரு வரும். ரோசாப்பூ மாலையை விட, மல்லிப்பூ மாலை கட்டுறது சிரமம்.வாழை நாரை கிழிச்சி, பத்து பத்து பூவா சேர்த்து கட்டி, அதை சுத்தி மாலையை கட்டணும். காலைலே சீனாகாரன் வந்து மாலையை உதறி பார்ப்பான். சமயத்துலே கீழே தட்டி பார்ப்பான். மல்லிபூ உதிராம இருக்கணும். ரொம்ப இறுக்கி கட்டினா, காம்பு அறுந்துபோவும். விட்டுகட்டினா, பூவு உதிர்ந்துகொட்டிடும். நடுவுலே நிக்குற அந்த பிடி கிடைச்சிட்டா, அப்பதான் அவன் நல்ல வேலைகாரன். ஒரு வழியா பிடி கிடைச்சி, முதல்முதலா அமைஞ்ச மாலை இன்னும் மனசிலே இருக்கு

கொஞ்சம் நிதானித்தார் சைமன். பிறகு கோணலாய் சிரித்துக்கொண்டு சொன்னார் “பிடி கிடைச்சிட்டுன்னு தான் கட்டுறோம். அப்படியும் சில பூ உதிர்ந்துடும். அதுக மனசு அப்படி. என்ன செய்றது? “

ஒரு கிலோ பூ கட்டினா, இரண்டு வெள்ளி சம்பளம். கைவிரலெல்லாம் பழுத்துபோயிடுமுண்ணே. பத்து மணிக்கு ரொட்டி தருவாங்க. ஒன்றரை மணிக்கு சோறு. அப்படியே ஒரு மூலைலே உட்கார்ந்து சாப்பிடுவோம். திரும்பவும் கட்ட ஆரம்பிச்சா, ராத்திரி வரைக்கும் வேலை போவும். அலுப்பு தெரியாம இருக்க, பெரிய ஸ்பிக்கர் வச்சு, நம்ம பாட்டுக போடுவாங்க. ”காத்திருந்து, காத்திருந்து, காலங்கள் போகுதடி” பாட்டு வந்தாக்க, மனசு கனத்து போயிடும். ஆம்பலாபட்டு சதிசுக்கு டி.ராஜேந்தர் பாட்டுன்னா உசுரு, திட்டச்சேரி கணேசன் அண்ணனுக்கு சிவாஜி பாட்டு. நைட் ஆயிடுச்சுன்னா, அங்கேயே ஆளுக்கு ஒரு பக்கமா படுத்துப்போம். ஏழு வருசம் இப்படி போச்சு, தேக்காவை விட்டா  சிங்கப்பூருலே வேறு ஒரு இடமும் தெரியாதுண்ணே. வெளியே தெருவே போனா வீண் வம்பு. போலிஸ் புடிச்சா, கோர்ட்டுக்கு கொண்டு போயிடுவாங்க. அதுனால ஒவ்வொரு மாசமும் ஊருக்கு பணம் அனுப்பிடுவேன். ஞாயித்து கிழமை மட்டும் எஸ்தருகிட்டே போனிலே பேசுவேன். அது நெனைச்ச மாதிரியே வீடு கட்டினோம். நிலம் கொஞ்சம் குத்தகைக்கு பிடிச்சு அண்ணன் விவசாயம் செஞ்சாரு.

”எதுக்கு பின்னே, திரும்பவும் சமையல் வேலைக்கு வந்தீங்க? என்றான் குட்டி.

மெலிதாய் சிரித்தார் சைமன். ”ஏழு வருசத்துலே நல்லா நிமிர்ந்துட்டோம். எஸ்தரையும், பிள்ளையும் விட்டுப்புட்டு இனி எதுக்கு இங்கே கிடக்குனும்னு போலிஸ்லே போய் சரண்டர் ஆனேன். அவங்களே டிக்கெட்டு போட்டு ஊருக்கு அனுப்பிவைச்சாங்க. ஊருக்கு வந்தா, பத்து வயசுலே, பெரிய மனுசி மாதிரி நிக்குறா என்னோட பொண்ணு கிளாரா. கட்டிபுடுச்சி அழுதேன்.  இரண்டு மாசம் குலதெய்வத்துக்கு கிடாவெட்டி, ஊரு கோயிலுக்கு டொனேசன் கொடுத்து, நானும் ஒரு ஆளாகிட்டேன்னு நிமிர்ந்து நடந்தேன். அது பொறுக்கலை அந்த சாமிக்கு.”

”ஏன், சைமன் என்னாச்சு?”

நான் இல்லாதப்ப, என்னோட அண்ணாருக்கும், எஸ்தருக்கும் தொடுப்பாயிடுச்சுண்ணே. முதல்லே ஊருலே, குடிக்கபோற பார்லே அரசபுரசலா காதுலே விழுந்துச்சு. அவங்ககிட்டே, என் எஸ்தரு விசுவாசமானவன்னு சண்டை பிடிச்சேன்.  அப்புறம் எனக்கே தெரியுற மாதிரி ஆயிடுச்சு. சரி, காடு கரையெல்லாம், அவ பேருலேதானே இருக்கு. பொண்ணை நல்லா பாத்துக்கட்டும்ன்னு, ஒரு நா விடியற்காலைலே, என் பாட்டுக்கு கிளம்பி வந்துட்டேன்.

”அண்ணனே இப்படி செஞ்சாரா? உங்க வொய்ப் செஞ்சது துரோகம்ங்க.” என்றான் குட்டி.

அட, ஆம்பிளைக நமக்கு, வெறுமையை தீர்த்துக்க எத்தனையோ இருக்கு. குடிக்குறோம். காசை எண்ணியெண்ணி பார்த்துட்டு சந்தோஷப்பட்டுக்குறோம்.  நிலவை பார்த்துட்டு உறங்குறோம். அதுக என்ன செய்யும்? ஏழு வருசம் ஒருத்தன் வாழ்க்கைலே இல்லைன்னா, எத கண்டு அது நிறையும்? என்னமோ நடந்துடுச்சு. எனக்கொண்ணும் குறையில்லை.

குட்டியும் நானும் பேச்சற்று அமர்ந்திருந்தோம். சைமன் மெதுவாக  பிரிந்திருந்த சட்டை பொத்தான்களை போட்டபடி எழுந்தார். ”நாழியாயிடுச்சுண்ணே. நைட்டு சாப்பாடு ஆக்கணும்.”, என்றார்.

”பஸ்ஸ்டாண்ட்லே குட்டி பழக்கடை தெரியுமா? நம்மளுதுதான். எவனாவது பிரச்சினை செஞ்சா அங்கே வாங்க, பார்த்துக்கலாம்” என்றான் குட்டி.

”தெரியாத மனுசன், என்ன பெரிய தீமையை செஞ்சுடமுடியும்ண்ணே?” என்றார் சைமன்.


  • ரா.செந்தில்குமார்

6 COMMENTS

  1. காதலித்தவனை கைவிட்டு எந்த குற்ற உணர்வுமில்லாத ஷோபா ஒரு பக்கம். இழந்த காதலை நினைத்து இடிந்து போகும் குணா ஒரு பக்கம். இவர்கள் இருவருமே படித்தவர்களாய் தோன்றுகிறார்கள்.ஆனால் பாமரனான சைமன் மனைவியின் மரபுக்கு முரணான செயலில் உள்ள நியாயத்தை உணர்ந்து வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து விலகுவது ..அற்புதம்.. பல சமயங்களில் படித்தவர்களைவிட பாமர்ர்களதான் வாழ்வை அதன் அத்தனை கூறுகளுடன் ஏற்று வாழ்கிறார்கள் என்பது அழகு நடையில் தரப்பட்டிருக்கிறது..தொடரட்டும் இந்த இலக்கிய பயணம்!

  2. கதையின் விவரிப்பு, காட்சிகள், வார்த்தைகள் எதுவும் நடைமுறை வாழ்க்கையை விட்டு பிரியவே இல்லை.

    பூ கடையில் பல ஆண்டுகள் வேலை பார்த்த அனுபவத்தில் எழுதியது மாதிரி இருக்கிறது மாலை கட்டுவதை விபரித்த விதம்.

    குட்டி தனது ஆதரவை ஆள் மற்றும் செல்வாக்கு பலத்தை காட்டுவதும் அதை எளிய முறையில் சைமன் கையாள்வதும் மிகவும் சிறப்பு.

    மனதில் தெளிவிருந்தால் எதைவும் எளிதாக கையாளலாம் என்பதை சுருக்கமாகவும் ஆழமாகவும் சொல்கிறது சைமனின் கதாபாத்திரம்.

    தீமை தெரிந்தவர்களால் மட்டுமே வருகிறதோ என்ற ஐயமும் எழுகிறது.

    ஒரு நல்ல கதையை படித்தால் என்ன தீமையா வரப்போகிறது.

  3. தெரியாத மனிதன் என்ன தீமையை செய்திட முடியும்?” என்ற கேள்வியின் வாயிலாக தெரிந்த மனிதர்கள் தான் ஏமாற்றுகிறார்கள், துரோகம் செய்கிறார்கள் என்ற செய்தியும் அடங்கியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.