என் அன்புக்குரிய குழந்தைகளை விட்டுவிட்டு…


நான் பாதி உறக்கத்திலிருந்தபோது, வெளியில் விளையாடிய மகள் கயானோ, வீட்டிற்குள் வந்தது போல் இருந்தது. குளுமையான தன்னுடைய கன்னத்தை என் கன்னத்துடன் வைத்து அழுத்தி சிறிது நேரத்திற்குப் பிறகு, “ஆகா! அப்பா, எவ்வளவு இனிமையான வாசனை உங்களிடம் இருக்கிறது!” என்று சொன்னாள். இந்தக் குழந்தையை விட்டுவிட்டு, ஐயோ, இந்த உலகத்திலிருந்து நான் விரைவில் கிளம்ப வேண்டும்!

அவளது குழந்தைத்தனமான அப்பாவித்தனம் எவ்வளவு நேசமானது! நான் தூங்கிவிட்டேனா என்பதை உறுதி செய்த பின்பு ரகசியமாகப் பதுங்கி வருகிறாள். அம்மாவின் வாசத்தை மறந்த மகள், குறைந்த பட்சம் தன் அப்பாவின் வாசத்தையாவது சுவாசிக்க ஆசைப்படுகிறாள்.

போரின் நெருப்புப் பிழம்பில் தாய் இறந்து விட, தந்தை அதிசயமாக உயிர் பிழைத்தார்.  ஆனால் தந்தையும் விரைவில் அவளை விட்டுப் பிரிந்து செல்லப் போகிறார்  என்னும் அவளுடைய விதி அவளுக்குத் தெரியுமா?

பட்டுப்போன ஒரு மரம் கடைசியாகக் கீழே விழும் வரை தன் பொந்துகளில் தங்கும் சிறு பறவைகளைக் காற்றிலிருந்தும் மழையிலிருந்தும் பாதுகாக்கும் எனச் சொல்லுவார்கள். தொடர்ந்து சீராக வளர்ந்து வரும் நோயுடன் நான் படுக்கையில் கிடக்கிறேன். என் கடைசி மூச்சு இருக்கும் வரை பாதுகாப்பான அடைக்கலம் கொடுக்கும் மரம் போல இந்தச் சிறு குழந்தைக்குக் கண்டிப்பாக இருக்க விரும்புகிறேன்.

இந்த உலகிலிருந்து என் உடல் மறைந்த பிறகு, என்னுடைய கல்லறையிலிருந்து திரும்பி வரும் இந்தக் குழந்தை இந்த அறையில் எந்த இடத்தில் அமர்வாள்? புகார் சொல்வதென்றால் யாரிடம் கூறுவாள்?

இனி அவள்: அலமாரியிலிருந்து என் போர்வைகளை இழுப்பாளா, நெடுநாளாய் அதில் இருக்கின்ற தந்தையின் வாசத்தில் தன் முகத்தைப் புதைப்பாளா, துயரத்தில் தன் பால் பற்களை நறநறவென்று கடிப்பாளா, தன் அம்மா மற்றும் அப்பாவுடன் விளையாடக் கூடிய ஒரு கனவு வீட்டிற்குத் தேம்பியபடிச் செல்வாளா?

இப்படிச் சிந்திக்கிற பொழுது, அந்த நாட்களில் திடீரென இந்த அறை விசாலமாக மாறி, மாலையில் மறையும் சூரியனின் கதிர்களால் ஒளிர்ந்து அமைதியாகக் காட்சி அளிப்பதை என்னால் கிட்டத்தட்டப் பார்க்க முடிகிறது.

நான் இங்கு இல்லாமல் போகும் அந்த நாட்களை நினைக்கும் போது, குறைந்தபட்சம் இந்தக் குழந்தை தன் ஆடையின் பொத்தான்களைத் தானாகப் போட்டுக்கொள்ளும் வரையாவது, எவ்வழியிலாவது உயிரைப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

தந்தை மகள் என்னும் எங்கள் உறவில் உள்ள விதியின் கோரத்தை நான் முன்கூட்டியே எதிர்பார்த்தேன். நான் எப்பொழுது மருத்துவக் கல்லூரியில் பட்டம் வாங்கி கதிரியக்கச் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற முடிவு செய்தேனோ, ரேடியம் மற்றும் எக்ஸ்-ரே –வைப் பயன்படுத்தி ஆய்வு செய்ய என்னை அர்ப்பணித்தேனோ அப்பொழுதே தெரியும்.

எதிர்பார்த்தபடியே, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி எலும்பு மஜ்ஜை புற்றுநோய் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரத்தச் சோகை வடிவத்தில் கதிர்வீச்சு நோய் என் உடலை ஆட்கொண்டது. இது, என் ஆய்வைத் தொடங்கி 13 ஆண்டுகளுக்குப் பிறகு, மற்றும் நியாயமற்ற போர் சுமத்திய ஐந்து ஆண்டுகள் வேலைப் பளுவிற்குப் பிறகு நேர்ந்தது. நோய் உறுதி செய்யப்பட்ட பிறகு அநேகமாக இன்னும் மூன்று ஆண்டுகள் நான் வாழ்வேன் என கணிக்கப்பட்டது. தவிர்க்க முடியாத ஏதோ ஒன்று என்னைத் தாக்கியதை உணர்ந்தேன்.

நோய் கண்டறியப்பட்ட நாளின் இரவில், என் அன்புக்குரிய மனைவியிடம் அனைத்தையும் சொன்னேன். அமைதியாக நான் சொல்வதைக் கேட்ட பிறகு, நெஞ்சு துடிதுடிக்க, “நாம் வாழ்கிறோமோ அல்லது சாகிறோமோ அனைத்தும் கடவுளின் மகிமைக்காகவே இருக்க வேண்டும்” என்றார்.

இதைக் கேட்டதும் நான் முழுமையாக என் அமைதியைத் திரும்பப் பெற்றேன். இப்போது நான் என் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படத் தேவை இல்லை. இறுதியாகச் சரிந்து விழும் வரை, அமைதியாக, அச்சமின்றி என் ஆய்வகத்தில் நான் தொடர்ந்து பணியாற்ற முடியும்.

புதுப்பிக்கப்பட்ட ஆர்வம் மற்றும் உற்சாகத்துடன் மறுநாளிலிருந்து  என் ஆய்வில் கவனம் செலுத்தினேன். புதிய மனிதராக, என் வேலையில் மூழ்கிப் பணி செய்யும் ஆற்றலைப் பெற்றேன். விரக்தியில் முகிழ்க்கும் தைரியம் இதுதானோ? என நான் வியந்தேன்.

போர் மேலும் மேலும் தீவிரமானது. திரும்பத் திரும்ப விமானங்கள் பொழிந்த குண்டுகளால் பல்கலைக்கழக மருத்துவமனை நோயாளிகளால் நிறைந்தது. என் ஆய்வகம் ஏறக்குறைய மருத்துவ முகாம் மருத்துவமனை போலானது. மாலை வேளையில் என் கால்கள் சக்தி இழந்து அடிக்கடி சதைப் பிடிப்பு ஏற்பட்டது. மாடிப்படியில் நான் ஏறும் போது செவிலியர் ஒருவர் என்னைப் பிடித்துத் தள்ள வேண்டியிருந்தது. என்னைப் பார்த்து நானே சிரித்துக்கொண்டேன். எனது குறிப்பேடுகள் மற்றும் புத்தகங்களைச் சுமந்து உதவி செய்ய மாணவர்கள் ஓடி வந்தார்கள். எல்லாரும் நல்ல முறையில் பார்த்துக் கொண்டதால் மகிழ்ச்சியாகவும் பரபரப்பாகவும் என் வேலையில் ஈடுபட்டேன்.

இப்படி இருக்கும் பொழுது, திடீரென்று நாகசாகியில் அணுகுண்டு போடப்பட்டது. கண்ணைக் குருடாக்கும் அளவுக்கு பளீரென்று வந்த ஒளியை என் கதிரியல் ஆய்வகத்திலிருந்து பார்த்தேன். அந்த நேரத்தில் என் நிகழ்காலம் மட்டும் அடித்துச் செல்லப்படவில்லை. எனது கடந்த காலம் அழிக்கப்பட்டது. என் எதிர்காலம் நிர்மூலமாக்கப்பட்டது. என் அன்புக்குரிய பல்கலைக்கழகம், என் அன்புக்குரிய மாணவர்களுடன் என் கண் முன்னால் பெரிய நெருப்புப் பந்தாக மாறியது.

நான் இறந்தபிறகு குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும்படி என் மனைவியிடம் ஒப்படைத்தேன். இப்போதோ, என் வீட்டின் சிதைவுகளில் இருந்து எரிந்த அவளின் எலும்புகளை ஒரு வாளியில் சேகரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். சமையல் கட்டில் அவள் இறந்து சாம்பலாகக் கிடந்தாள்.

என்னைப் பொருத்தவரை நான் ஏற்கெனவே நாள்பட்ட கதிரியக்க நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறேன், தற்போது கூடுதலாகக் கடுமையான கதிரியக்க நோயினால் பாதிக்கப்பட்டுள்ளேன். இதனுடன் சேர்த்து என் உடலின் வலது புறத்தில் ஏற்பட்டுள்ள காயங்களினால் நான் எதிர்பார்த்த நாளை விட வெகு விரைவிலேயே அசைய முடியாமல் போனது. நல்ல வேளையாக இரண்டு குழந்தைகளுக்கும் எவ்வித காயமும் இல்லை. ஒரு பக்கம் அதிர்ஷ்டம் இருந்ததினால் அவர்களது பாட்டியுடன் மலையில் இருக்குமாறு முன்பே அனுப்பிவிட்டோம்.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நான் மேற்கொண்ட ஆராய்ச்சியின் பயனாக, ஆய்வுக்குப் பயன்படுத்திய எக்ஸ்-ரே படங்கள், குறிப்புகள், வரைபடங்கள், புள்ளிவிவரங்கள் நிறைய இருந்தன. போர் முடிந்த பிறகு அனைத்தையும் சேர்த்து அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளாக வெளியிடத் திட்டமிட்டிருந்தேன். இவை அனைத்தும் கருப்பு, சிவப்பு தீப்பிழம்புகளாக ஆய்வக ஜன்னல்களின் வழியே வெளியேறின. மறுநாள் காலையில் அனைத்தும் சாதாராண சாம்பலாகி இருந்தன. நரகத்தில் தள்ளப்பட்டது போன்று விரக்தியடைந்தேன். இதில் ஆச்சரியப்பட எதுவும் இருக்கிறதா?

அந்த நம்பிக்கையின்மை அரை நாள் கூட நீடிக்கவில்லை. ஏனென்றால் என் கண் முன்னால் தெரிந்த ஆய்வு செய்ய வேண்டிய முற்றிலும் புதிய நோயைப் பார்த்த பிறகு புதிய நம்பிக்கைப் பிறந்தது. விரைந்து தழுவிக் கொண்டேன். மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய நாடுகளில் வாழும் அறிஞர்கள் எவரும் உலகில் எங்கேயும் இதற்கு முன்னால் இந்த நோயைப் பார்த்ததில்லை. மருத்துவ வரலாற்றில் முதல் நேரடிச் சாட்சிகளாக நாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். “இது அணு குண்டு நோய் இந்தப் புதிய நோய் குறித்து நான் ஆய்வு செய்வேன்”.

இதை முடிவு செய்த பிறகு அந்த நொடிவரை இருண்ட மனச்சோர்வுடன் இருந்த என் இதயம் திடீரென்று பிரகாசமானது. நம்பிக்கை மற்றும் தைரியத்தால் நிரப்பப்பட்டது. அறிவியல் அறிஞர்களுக்கே உரிய ஆர்வம் என்னை உந்தித் தள்ளியது.  இரத்தம் வடிந்த, கட்டுப் போட்ட என் உடல் உற்சாகத்தைத் திரும்பப் பெற்றது. உண்மையிலேயே, நான் அமர்ந்திருந்த சூடான பாறையிலிருந்து துள்ளிக் குதித்தேன்.

அணுகுண்டு வீச்சினால் பாதிக்கப்பட்ட மக்கள் எண்ணற்றோர் பல்வேறு விதமான நோய்களுக்கு ஆளாகி இருந்தார்கள். ஒருவர் பின் ஒருவராக இறந்தார்கள். அதிர்ஷ்டமற்ற இந்த மக்களுக்கு எப்படியாவது உதவ வேண்டுமே என்கிற துயரச் சிந்தனை என்னை வதைத்தது.

மருத்துவ அறிஞராக வாழ்வது எவ்வளவு முக்கியம் என்பதை இதற்கு முன் என் வாழ்க்கையில் நான் ஒருபோதும் நினைத்தது இல்லை. நோயுற்றவர்களைப் பார்ப்பதற்காக உடல் வலியுடனும் ஊன்று கோலுடனும் மலைகள், ஓடைகள், நிலப்பரப்பு எனப் பரந்துபட்ட எல்லா இடங்களுக்கும் இரண்டு மாதங்கள் சென்றேன். அந்தோ! எனக்கு ஏற்பட்டிருந்த அணுகுண்டு நோய் தீவிரம் அடைந்ததும் அதை நிறுத்த வேண்டியதாயிற்று.

நோயிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நான்  குணமாகிக் கொண்டிருந்தபோது, மக்கள் கவலையுடன் பேசிக்கொள்வது என் காதில் விழுந்தது.

“அணுகுண்டு விழுந்த இடத்தில் இனிமேல் வாழ முடியாதாம்ல”

“மனிதர்கள் வாழ முடியாது என்பது மட்டுமல்ல , தாவரங்கள் கூட வளராதாம்”

இந்த இடம்தான் என்றல்ல, வதந்திகள் எங்கும் பரவின. கட்டிலில் படுத்தபடி நான் யோசித்தேன், குண்டுகளில் இருந்து பொழியப்பட்ட கதிர்வீச்சுத் துகள்கள் மற்றும் மண்ணில் கலந்த கதிரியக்கத் தன்மை நீண்ட நாட்கள் உயிர்ப்புடன் இருக்கும் என்பது நம்பக்கூடியதாக இல்லை. இந்த வகையான கதிரியக்கத்தன்மை விரைவாகக் குறைந்துவிடும். இது ஆரம்பக் கட்டத் தத்துவார்த்த முடிவு.  இந்த வகையான குண்டு என்பது முதல் முறை அனுபவம் என்பதால் முறைப்படியான ஆய்வு செய்யாமல் எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. இதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

தாமதம் சிறிதும் இன்றி இதை ஆய்ந்து அறிய ஆவலுடன் இருந்தேன். சின்ன ஒரு கருவிகூட இல்லாமல் நாங்கள் வைத்திருந்த அனைத்தும் அழிந்து போனதால், என் ஆவல் ஏக்கமாகவும் விரக்தியாகவும் மாறியது.

எப்படியாகினும், கருவிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் சில ஆய்வுகளை நான் செய்ய வேண்டும். குண்டு விழுந்த மைய இடத்தின் (Epicenter) அருகிலிருந்து சில கண்ணாடித் துண்டுகளைச் சேகரித்து ஆய்வு செய்தேன். வெளிர் ஊதா நிறத்திலிருந்த பல்வேறு பால் டப்பாக்களைப் பார்த்தேன். மைய இடத்திற்கு எந்த அளவு அருகிலிருந்ததோ அந்த அளவிற்கு டப்பாக்களின் மேலிருந்த சாயம் தெளிவாகத் தெரிந்தது. எனவே, குண்டு விழுந்த மைய இடத்திற்கு அருகே, ஒரு வலுவான எஞ்சிய கதிரியக்கத்தன்மை இருப்பதாக முடிவு செய்தேன்.

மண்ணில் வாழ்ந்த எறும்பு, மண்புழு போன்ற உயிரினங்களையும் கூர்ந்து கவனித்தேன். ஒருவேளை அதிகப்படியான கதிரியக்கத் தன்மை மண்ணிலிருந்தால் இதுபோன்ற சிறிய உயிரினங்கள் அழிந்து மறைந்திருக்கும். எனினும்,  குண்டு விழுந்த ஏழு வாரங்களுக்குப் பிறகு மைய இடத்திற்கு அருகில் எறும்புகள் பல்வேறு வரிசையில் செல்வதைப் பார்த்தேன். மண் புழுக்கள் வளைந்து நெளிந்து செல்வதை மூன்று மாதங்களுக்குப் பிறகு கவனித்தேன். இந்தச் சிறிய உயிரினங்கள் உயிர் வாழ்கிறதென்றால் அவைகளை விடப் பெரியவனாகிய மனிதனும் வாழ முடியும். மனிதரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அளவுக்கு கதிரியக்கத் தாக்கம் இருக்க வாய்ப்பில்லை எனக் கருதினேன்.

பணி முடித்துத் திரும்பிய சில போர் வீரர்களைக் கண்டேன். சிதைந்த தங்கள் வீடுகளைக் கொஞ்சம் சுத்தம் செய்துவிட்டு, சிறு குடிசை அமைத்து வாழத் தொடங்கினார்கள். அவர்களின் உடல் நிலையைப் பரிசோதிக்க அவர்களைச் சென்று சந்தித்தேன். உறுதியாக, குண்டு வெடித்த பிறகு சுமார் இரண்டு வாரங்களுக்கு ஆபத்து அதிகம் தெரிந்தது. ஆனால் அதன் பிறகு ஆபத்தான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.

இப்படி அந்தச் சூழ்நிலையில் என்னால் இயன்றதைச் செய்தேன். எனினும், மற்றப் பல்கலைக்கழகங்களில் இதே துறையில் இருக்கும் அறிஞர்கள் என்னுடன் இணைந்து பணியாற்றத் தேவையான அனைத்துக் கருவிகளுடன் வந்தது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. மருத்துவர் இஷிகவா மற்றும் பேராசிரியர் சுகவாரா இருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். எல்லோரும் இணைந்து பணியாற்றி துல்லியமான தரவுகளைப் பெற்றோம்.

இரத்தம் எடுக்கப்பட்டபோது ஏற்பட்ட வலியையும் மற்ற பரிசோதனைகளையும் தாங்கிக்கொண்டு என் இரண்டு குழந்தைகளும் முக்கியமான பங்களிப்பினைச் செய்தார்கள். எனவே எங்களால் விரைவாக ஒரு முடிவுக்கு வர முடிந்தது. அதாவது குண்டு விழுந்த பகுதியில் வாழ்வதில் பாதிப்பு இல்லை என்பதை எடுத்துச் சொன்னோம். அருகாமை ஊர்களில் தஞ்சம் புகுந்திருந்த எங்கள் மக்களிடம், விரைவாகத் திரும்பி வருமாறு அழைத்தோம். சிதைவுகளைச் சரிசெய்து விரைந்து புனரமைப்பைத் தொடரச் சொன்னோம். இந்த வகையில் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டிய விசயங்களில் கவனம் செலுத்தினேன்.

என் காய்ச்சல் விடாமல் தொடர்ந்து இருந்தது. பல வேளைகளில் 38 டிகிரி செல்சியஸ்க்கும் மேல் போனது. இருப்பினும் கைத்தடியின் உதவியுடன் என்னால் எங்கும் நடந்து சென்று உதவி செய்ய முடிந்தது. போரின் தீச் சுடரில் ஆயிரக்கணக்கில் உயிரிழந்தவர்களுடன் தங்கள் வாழ்வையும் இழந்த பல்வேறு மாணவர்கள் மற்றும் என் மனைவிக்காக ஆறு மாதங்கள் துக்கம் அனுசரித்தேன். தலைமுடி வெட்டாமல், தாடி மழிக்காமல், சில நாட்கள் குளிக்காமல் கூடச் சென்றேன். எனக்குத் தெரிந்த பலர் எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாக நினைத்தார்கள்.

இடிபாடுகளிலிருந்து என் மனைவியின் எலும்புகளை நான் சேகரித்த இடத்தில் எனக்குச் சிறிய குடிசை ஒன்றை நண்பர்கள் கட்டிக் கொடுத்தார்கள். அங்கிருந்து எரிந்து சிதைந்த பல்கலைக்கழகத்தைப் பார்க்க முடிந்தது. செபங்களை ஒப்புக்கொடுப்பதற்காகக் காலையிலும் மாலையிலும் அந்தச் சிதைவுகளைப் பார்த்தேன். இதைத் தவிரப் பார்ப்பதற்கு அங்கு வேறு என்ன உண்டு? வயதானவர்கள் யாராவது தம் உறவினரின் எலும்புகளைத் தேடி எப்போதாவது வருவது என் பார்வையில் பட்டது.

பல்கலைக்கழகத்திற்கான தற்காலிகக் கட்டிடம் ஓமுரா நகரில் கட்டப்பட்டது. தொடர்வண்டியில் தினந்தோறும் இரண்டு மணி நேரம் பயணிப்பது எனக்குக் கஷ்டமாக இருந்தது. பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது என் உடலில் பிசுபிசுவென வியர்வை ஒட்டிக்கொள்ளும். மூச்சுத் திணறலில் தடுமாறுவேன், சத்தமாகப் பேச முடியாது. உண்மையாகவே, என் மாணவர்களை நினைத்து வருத்தப்படுவேன். போதுமான மூச்சு வாங்குவதற்காக வகுப்பு நேரத்தில் நான்கு அல்லது ஐந்து முறை கண்டிப்பாக நான் உட்காரவேண்டியிருந்தது. அதனால் குறைவாகவே பாடம் நடத்த முடிந்தது.

தப்பிப் பிழைத்த மாணவர்கள் சிலரின் உடலில் காயங்கள் ஆறாமல் இருந்தன,  பாடம் நடத்திய என் வலது முகத்தை மறைத்தபடி காய வடு இருந்தது. ஆன போதிலும், அந்த நாட்களில் நடத்திய பாடங்கள் என் நினைவில் பசுமையாக உள்ளன.

பாடம் நடத்திக்கொண்டிருந்த என் சக ஆசிரியர்கள், குறிப்பெடுத்துக் கொண்டிருந்த பல மாணவர்கள் குண்டு வீச்சில் இறந்து விட்டார்கள். உண்மையைத் தேடிக் கண்டு பிடிக்கும் வாய்ப்பு பிழைத்திருக்கும் எங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் நினைக்கும் போதே எங்கள் பணியின் மகத்துவம் ஒரு வகையான நடுக்கத்தைத் தந்தது.

பாடம் நடத்திவிட்டு என் அலுவலகத்திற்கு நான் திரும்பும் வேளையில், உடலின் மொத்தச் சக்தியையும் இழந்து விடுவேன். பொருட்கள் சேமிப்பு அறையில் வீசப்படும் பொம்மை போல நாற்காலியில் விழுவேன்.

பாடம் நடத்துவது, ஆசிரியர்களின் கூட்டங்களில் பங்கெடுப்பது எனத் தொடர்ந்து வேலை செய்தேன். உடல் வலிமை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து 1946, ஜுலை மாதக் கடைசியில் நாகசாகி, மத்தியத் தொடர்வண்டி நிலையத்தில் சரிந்து விழுந்தேன். விழும் அந்த நாள் வரை வேலை செய்தேன். ஒருவழியாக மாலையில் என் குடிசைக்குச் சென்று விட்டாலும், அதன் பிறகு பயனற்றவனாகப் படுத்த படுக்கையானேன்.

என் இரத்த மாதிரியில் எல்லா வகையான இயல்பான மற்றும் நோயுற்ற துகள்கள் கலந்திருக்கின்றன. பாடப்புத்தகம் இல்லாத அந்த நாட்களில் மாணவர்கள் படிப்பதற்கு உகந்த சிறந்த ஆய்வுப் பொருளாக என் இரத்தம் இருந்தது, இதை அறிந்த மருத்துவர் தொமோநாகா இரத்த மாதிரி எடுக்கும் போது சற்று கூடுதலாகவே எடுத்தார். மீதம் உள்ள இரத்தத்தை மாணவர்களுக்குக் கொடுத்தார். இதன் மூலம், படுக்கையில் கிடந்தாலும், பாடம் நடத்த முடியாமல் இருந்தாலும் இந்த வகையிலாவது என் மாணவர்களுக்கு உதவியாக இருக்கிறேனே என உணர்ந்தேன்.

இரத்தப் புற்றுநோயின் விளைவாக என் தோல் அருவருப்பாக ஊதா நிறத்திற்கு மாறியது. என் கை மற்றும் கால் மெலிந்தது. அதற்கு மேல் மெலியமுடியாதபடி எலும்புகள் தடுத்தன. நான் இளைஞனாகக் கூடைப்பந்தாட்ட அணியில் விளையாடிய போது நேர்த்தியான உடற்கட்டுடன்  171 சென்டி மீட்டர் உயரம் மற்றும் 71 கிலோ எடையுடன் இருந்தேன். எனவே நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னைப் பார்க்க வரும் என் நண்பர்கள் என்னைப் பார்த்ததும் கண்ணீர் வடிக்கிறார்கள்.

என் சதை எவ்வளவு தூரம் விரிந்து கொடுக்க இயலுமோ அவ்வளவு தூரம் என் வயிறு வீங்கி இருந்தது. உடலின் மற்ற பகுதிகள் அனைத்தும் மெலிந்து இருந்தன. நான் அடிவயிறு வீங்கிய பச்சைத் தவளை போல் இருந்தேன். என் இடுப்பின் அளவு 91 சென்டி மீட்டர். ஒன்பது மாத கர்ப்பிணியின் வயிறு போல் இருந்தது. வழக்கமாக உள்ளங்கை அளவு சிறியதாக இருக்கும் மண்ணீரல் மிகப்பெரியதாக வீங்கியது. வயிற்றின் இடது பாதியில்  இடம் போதாமல் வலது பாதியிலும் ஆக்கிரமித்தது.

மண்ணீரல் விரிந்து அதன் முழு அளவை அடைந்துவிட்டதால், வெளியில் இருந்து ஏதாவது ஒன்று என் அடிவயிற்றைத் தாக்கினால் அது வெடித்துவிடும். உள் இரத்தக் கசிவினால் இறந்துவிடுவேன். இது டைனமைட் குச்சியை வயிற்றில் சுமந்திருப்பது போன்றது. ஒரு விநாடி கூட கவனக் குறைவாக நான் இருக்க முடியாது.

இயற்கையிலேயே பெற்றோரைக் கட்டி அணைக்கப் பிள்ளைகள் விரும்புவார்கள். பள்ளியில் இருந்து திரும்பியதும் “நாங்கள் வந்துவிட்டோம்” என உற்சாகமாகக் கத்தி என் மேல் குதித்து விழ குழந்தைகள் விரும்பினார்கள். அப்படி அவர்கள் என் மேல் விழுந்தால் அந்த நொடியிலேயே மண்ணீரல் வெடித்துவிடும். எனவே என்னைக் கவனித்துக் கொண்ட மருத்துவர் தொமோநாகா “அப்பாவுக்கு ரொம்ப பக்கத்தில போயிடாதீங்க” என என் குழந்தைகளிடம் சொல்லி இருந்தார். அவர் சொன்னதைக் குழந்தைகள் கேட்டார்கள். தந்தைக்கு அருகில் வந்து மகிழ்ந்து கட்டிப் பிடிக்கும் மற்றும் வயிற்றில் உள்ள “குழந்தை”யுடன் விளையாடும் தங்களின் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டார்கள். அவர்கள் எப்போதும் சற்று தூரத்திலிருந்துதான் பேசுவார்கள்.

உலகில் உள்ள சராசரி தந்தை போல், என் குழந்தைகளை உயர்த்திப் பிடிக்க, தலைகீழாகத் தொங்க வைக்க, கிச்சுகிச்சு மூட்டி சந்தோசத்தில் கத்துவதைக் கேட்க எனக்கும் ஆசையாக இருக்கிறது. ஆனால் இவற்றை நான் செய்தால், என்றாவது ஒரு நாள் நான் தூங்கும் போது குழந்தைகள் கவனக் குறைவாக என் மீது குதிப்பார்கள், படுக்கைக்கு அருகில் அல்லது தவறுதலாக என் மீது விழுவார்கள். எனவே புத்தகங்கள் மற்றும் மருந்து புட்டிகளை என் கட்டிலைச் சுற்றி வைத்தேன். வேண்டுமென்றே என் இதயத்தைக் கல்லாக்கிக்கொண்டு என் அன்புக்கு வேலி அமைத்தேன்.

ஒருமுறை, விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்த கயானோ, நான் தூங்குகிறேனா என்பதை உறுதி செய்துகொண்டு மெதுவாக என் அருகில் வந்தாள். தன் தந்தையின் வாசத்தை நுகர்ந்தாள். இந்தச் சூழ்நிலையில் உண்மையாகவே ஒரு குழந்தையைப் போலவே நடந்துகொண்டாள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நானுமே என் மகளின் வாசத்தை நுகர்ந்து மகிழ்ந்தேன். இரத்தப் புற்று நோய் (Leukemia[1])எனச் சொல்லும் போது, தூய்மையான வெள்ளை இரத்தம் உணர்ச்சியற்று உடலில் ஓடுகிறது போல என நினைக்கத்  தோன்றும். அதற்கு நேர்மாறாக அந்த நாளில், என் இரத்த நாளங்களில் சூடாக ஏதோ  பாய்வது போல் இருந்தது.

இந்தக் குழந்தையைக் கட்டி அணைக்க ஆசைப்பட்டேன். நாய் தன் குட்டியுடன் விளையாடுவது போல நேரம் போவதே தெரியாமல், கனிவாகக் கடிக்க, உலுக்க, எச்சில் பண்ண, உடலை ஒட்டி அணைக்க ஆசை வருகிறது. நான் அப்படிச் செய்தால் இந்தக் குழந்தை சந்தோசத்தில் மூச்சு விட முடியாமல் கண்ணில் நீர் வரும் வரை அடக்க முடியாமல் சிரிப்பாள்.

குழந்தை, தன் தந்தையின் அன்பைச் சில விநாடிகளாவது பெற்று மகிழும் அந்த நேரத்தில் என் மண்ணீரல் வெடித்து விட்டால் என்ன செய்வது? இதைச் செய்ய என் மனம் சம்மதிக்கவில்லை.

என் குழந்தை அனாதை ஆகும் நேரத்தைக் குறைக்க ஆசைப்படுகிறேன். அதற்காக, ஒரு மாதம், அல்லது ஒரு நாள்  அல்லது குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது கூடுதலாக வாழவே நான் ஆசைப்படுகின்றேன். என் வாழ்க்கை ஒரு நிமிடம் அல்லது ஒரு நொடியாவது கூடுதலாக இருக்க வேண்டும் என நான் இரந்து மன்றாடுகிறேன். அதன் வழியாக இக் குழந்தை யாருமற்றவராக உணரும் நேரம் குறையும் அல்லவா!

சகுரஜிமா[2] மலையிலிருந்து புறப்படும் புகை போல வெடித்துக் கிளம்பத் தயாராக இருக்கிறது என் அன்பு. அவ்வன்பை, உணர்ச்சியைக் காட்டாமலும் குழந்தைகளைத் தள்ளி வைத்தும் கட்டுப் படுத்துகிறேன். நான் எந்த அளவு கடுமையாக என் அன்பை அடக்குகிறேனோ அதைவிட அதிகமாக வேகமாக அது வெளிப்படப் பார்க்கிறது. என் தலைமாட்டில் ஹிபாச்சி[3] இருக்கிறது.  அதின் மேலுள்ள பாத்திரத்திலிருந்து வெளியேறும் நீராவிக்கு ஒத்ததாக இருக்கிறது. இரத்தத்திலும் சதையிலும் சேர்ந்து பிறந்த ஈர்ப்பல்லவா இது!

ஒருவேளை அம்மா இருந்தால் இந்தக் குழந்தை அப்பாவை விட்டு விட்டு தாயைக் கட்டித் தழுவிக் கொள்வாள். ஐயோ! தாய் இறந்துவிட்டாரே! அவரின் வாசம் நிலைத்திருக்கும் எந்தப் பொருளும் இல்லையே! இதுதான் உன் அம்மா எனக் காட்டுவதற்கு ஒரு நிழற்படம் கூட போரின் நெருப்பிலிருந்து தப்பவில்லையே!.

அந்த நாளில் தூங்குவது போல் நான் தொடர்ந்து பாசாங்கு செய்துகொண்டிருந்தேன். கயானோ துணிந்து என் கன்னத்துடன் அவள் கன்னத்தை வைத்து அழுத்தினாள். அவள் கன்னம் படிப்படியாகச் சூடானது.

பொக்கிசத்தை மற்றவர்களிடம் இருந்து மறைத்து அவள் ரகசியமாக சந்தோசப்படுவது போல இருந்தது. ஆனாலும், கயானோ மெல்ல அமைந்த குரலில் “அப்பா” என்றாள். உண்மையில் அவள் என்னை எழுப்புவதற்காகக் கூப்பிடவில்லை. மாறாக, அவளின் சிறிய இதயத்தில் குடிகொண்டிருந்த எண்ணங்கள் கொஞ்சம் கசிந்து வெளியேறியது.


[1] Leukemia, என்பதற்கு ஜப்பான் மொழியின் நேரடி மொழிபெயர்ப்பு, வெள்ளை இரத்த நோய்.

[2] ஜப்பானில் உயிர்ப்புடன் இருக்கும் முக்கியமான எரிமலைகளுள் ஒன்று .

[3] ஹிபாச்சி என்பது சாம்பலும் நெருப்புக் கரியும் உள்ள அரைவட்டத்திலான பாத்திரம். தண்ணீர் அல்லது தேநீர் எப்போதும் சூடாக இருக்க வேண்டும் என்றால் இதன் மேல் பாத்திரங்களை வைத்திருப்பார்கள்.


தகாஷி நாகாய்

தமிழில்: சூ..ஜெயசீலன்

 

ஆசிரியர் குறிப்பு

[tds_info]

ஜப்பான் நாட்டில் மட்சியூ மலைக் கிராமத்தில், 1908, பிப்ரவரி மூன்றாம் தேதி தகாஷி நாகாய் (Takashi Nagai) பிறந்தார். நாகசாகி மருத்துவப் பல்கலைக்கழகத்தில் படித்து மருத்துவரானார். மருத்துவராக, ஆராய்ச்சியாளராக, எழுத்தாளராக, அணுக்குண்டு வீச்சின் சாட்சியாக வாழ்ந்து 1951 மே முதல் தேதி 43-வது வயதில் மறைந்தார். தம் மரணப் படுக்கையில், மகன் மகோடோ (13), மகள் கயானோ (7) இருவருக்கும் மருத்துவர் நாகாய் தகாஷி எழுதிய புத்தகம் ஆங்கிலத்தில் “Leaving my beloved children behind” என வெளிவந்தது.

தமிழ் மொழிபெயர்ப்பு வெகு விரைவில் என் அன்புக்குரிய குழந்தைகளை விட்டுவிட்டு என்னும் தலைப்பில் வெளிவர இருக்கிறது.  புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஒரு கட்டுரையின் மொழிபெயர்ப்பு இது.

 

மொழிப்பெயர்ப்பாளர் :

அருட்தந்தை சூ.ம.ஜெயசீலன் இராமநாதபுரம் மாவட்டம் ஆண்டாவூரணியில் பிறந்தவர்.  இதமான, கவித்துவமான, உணர்வுப்பூர்வமான எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இவரின் “இது நம் குழந்தைகளின் வகுப்பறை” நூல் சென்னை புத்தகத் திருவிழா 2017-இல் சிறந்த கல்வி நூல் விருது பெற்றது, கல்வியியல் பாடத்திட்டத்திலும் இடம்பெற்றுள்ளது. இதுவரை இவரின் 16 நூல்கள் வெளி வந்துள்ளன. தற்போது இவர், பிலிப்பைன்ஸ் நாட்டில் உளவியல் பாடத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவராக இருக்கிறார்.

[/tds_info]

2 COMMENTS

  1. குறைந்த பட்சம் தனது ஆடையின் பொத்தான்களை தானாக போடும் வரையிலாவது ….இங்கு கசியத் தொடங்கிய கண்ணீர்…
    சரிந்து விழும் வரை பணி செய்த அர்ப்பணிப்பு மிக்க அணு ஆராய்ச்சியாளராக, அன்பை வேலியிட்டு மறைக்கும் ஆனால் குழந்தைகளுக்காக கூடுதலாக ஒரு நொடியாவது வாழத் துடிக்கும் அன்பு தந்தையாக, இப்படியும் ஒரு மனிதரா என வியக்க வைக்கிறார் தகாஷி நாகாய்…
    நெஞ்சம் கனக்க ஒரு மாமனிதரை அறிந்து கொண்ட நிறைவு.
    அருமையான தேர்வு…நல்ல மொழிபெயர்ப்பு

    • Really I feel happy for you.You are blessed with beautiful and powerful mind. And you are so smart. Your writings are make me to think my being this world… My words won’t be enough .. to wish you… And we thank God for you…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.