பாவலர் தெங்கரைமுத்துப் பிள்ளை


தெங்கிரிமுத்து என்று விளிப்பார் அவரை. வயதொத்தவர் தெங்கிரி என்றும். எமக்கவர் தெங்கிரிமுத்துப் பாட்டா. கொஞ்சம் விடம் என்றாலும் கைகால் முடக்காது, ஆளை வேக்காடும் வைக்காது. பெயர்த் திரிபின் இலக்கணக் குறிப்பு எழுதச் சொல்வோர், அவர் பெயரைத் தென்கிரி முத்து எனத் திருத்துவார். கிரி எனில் மலை என உரையும் எழுதுவார். எடுத்துக்காட்டாகக் கைலயங்கிரி, சிவகிரி, என்று மேற்கோள் காட்டுவார். தென்கிரி எங்ஙனம் தெங்கிரியாயிற்று என்பதற்கு தொல்காப்பிய அல்லது நன்னூல் நூற்பா ஏதும் ஆதாரம் காட்டுவார்.

ஆனால் அவர் இயற்பெயர் தென்கரைமுத்து. அவர்கள் குலதெய்வம் சித்தூர் தென்கரை மகராஜன் சாஸ்தா பெயரால் வந்த பெயர். சாஸ்தாவை நாட்டு வழக்கில் சாத்தா என்பார்கள். மற்றபடி சாத்தான், சைத்தான் என்போருக்கும் சாத்தாவுக்கும் தொடர்பில்லை. அந்தப் பக்கம் பல ஊர் மக்களுக்கு சாஸ்தா வழிபடு தெய்வம். எந்த ஊர் என்பவரே, சில ஊர்களைச் சொல்லவா? மேலக்கருங்குளம் – வில்லுடையார் சாஸ்தா, ஆரல்வாய்மொழி – பரகோடி கண்டன் சாஸ்தா, சின்ன மூலக்கரைப்பட்டி – தெய்வேந்திரமுடையார் சாஸ்தா, சுசீந்திரம் – சேரவாதல் சாஸ்தா, பூலா உடைய கண்டன் சாஸ்தா, ஆசிரமம் – அஞ்சனம் எழுதிய சாஸ்தா, ஒழுகினசேரி – எங்கோடி கண்டன் சாஸ்தா, வீரநாராயணமங்கலம் – நீர் நிறை காவு கொண்ட சாஸ்தா, இறச்சகுளம் – எருக்கலை காவு கண்ட சாஸ்தா, சீராங்குளம் – புளியங்காவு அய்யன் சாஸ்தா இன்னும் பல உண்டு. நமக்கு இங்கே இடம் போதாது.

எனவே தென்கரையைத் தென்கிரி என்னல் தகுமோ? மேலும் குறிப்பாகச் சொன்னால் தென்கரைமுத்துப்பிள்ளை. படைப்பிலக்கியம் ஆசிரியர் கூற்றாகவோ, கதாபாத்திரங்கள் தம்மிடையேயான உரையாடல் ஆகவோ சாதிப்பெயர் பயன்படுத்தக்கூடாது என்ற சட்டம் ஒன்று நடப்பில் உண்டு – சமூக நீதிச்சட்டம் 1967, உட்பிரிவு – 69, திருத்தம் – 234. எனவே தற்சமயம் மார்க்சீய, அம்பேத்காரிய, பெரியாரிய  கோட்பாட்டு எழுத்தாளர்கள் நீங்கலாக மற்றெவரும் சாதிப்பெயர் பயன்படுத்துவதில்லை. என்றாலும் இந்தக் கதாசிரியனுக்கு, பின்னவீனத்துவம் இந்த மண்ணில் வேர்பிடித்து விருட்சமாக வளரும் முன்பே, வெள்ளாள சாதி எழுத்தாளன் எனும் பெரும் பழி இருப்பதால், அவரை எவரும் பொருட்படுத்துவதில்லை. ஆனால் சுயசாதியினரே அவரைக் கௌரவக்கொலை செய்ய முகாந்திரங்கள் உண்டு.

மேலும் காலத்தைக் கன வேகமாக பின்னோக்கி ஓட்டுவதற்கும், கதை நடக்கும் சூழலைச் சட்டெனப் புலப்படுத்தவும் பழைய பெயர்கள் உதவும். பெயருடன் சாதி அடையாளம் அன்று இருந்ததை இன்று இந்தக் கதாசிரியன் என்ன செய்ய இயலும். இங்கு வேண்டுமானால் நாமக்கல் இராமலிங்கம், கவிமணி தேசிய விநாயகம்,..சிதம்பரம் எனக் குறுக்கலாம். ஆனால் விஷ்ணு சக்காராம் காண்டேகரையும், இரவீந்திரநாத் தாகூரையும் கோபாலகிருஷ்ண கோகலேயையும் எவரால் என்ன செய்ய இயலும்?

கதாபாத்திரத்தின் பெயரைப் பரதேசியா பிள்ளை என்பதற்கும் பரதேசி என்பதற்கும் வாசிப்பு அனுபவத்தில் வேறுபாடு உண்டு. காலத்துக்கு ஏற்ப அப்பா பேரைத் தாத்தா பேரைத் திருத்த முடியுமா? காலத்தின் தொன்மை சுட்ட, புதுமைப்பித்தன் கழுதைமேல் ஏறிப் பயணியர் சவாரி செய்ததாகச் சொன்னதைப் போன்றது இது. தமிழ்க்கதையின் வரலாற்றைத் தொடங்கியவனையும் அவர் திருநெல்வேலி சைவப்பிள்ளைமார் என்றுதானே கட்டுடைத்தார்கள். வேலுப்பிள்ளை பிரபாகரனை யாழ்ப்பாணத்து வேளாளன் எனப் பேதையர்கள் பிரச்சாரம் செய்யவில்லையா? தம் இனத்தவர் நீங்கலாக, மற்றவர் யாவரின் கோவண சுத்தம் பார்ப்பது முற்போக்கு விதி எனவாயிற்று.

எனவே எவர் என்ன சொன்னாலும் இந்தக் கதாபாத்திரத்தின் பெயர் தென்கரை முத்துப்பிள்ளை என்றும், அது மக்கள் நாவில் தெங்கிரிமுத்து என்று தங்கிப் போயிற்று என்றும் இந்தக் கதாசிரியன் நிறுவுகிறான். மேலும் அவர் பெயரில் இருக்கும் பிதுரார்ஜித சொத்து, ஒன்றேகால் சென்ட் பூமியில் அமைந்த ஓட்டுப்பணி வீட்டுப் பத்திரம் அவர் பெயரை பொய்சொல்லாமெய்யன் பிள்ளையின் ஏகபுத்திரன் தென்கரைமுத்துப்பிள்ளை என்றுதானே உறுதி செய்கிறது!

தெங்கரைமுத்து இன்றிருந்தால் நூற்று முப்பத்திரண்டு வயது ஆகி இருக்கும். ‘‘அதெப்படிவே உமக்குத் தெரியும்? என்று கேட்பீர்கள். மனம் என்பது மாயை, குறளி, பித்து, பேய், குரங்கு எனப் பற்பல புகன்றுள்ளனர் ஞானியர். முற்போக்கோ நற்போக்கோ, மனமது அந்தரங்கமாகப் பேசத்தானே செய்யும் எந்தக் கதாசிரியனுக்கும்?

‘அதெப்படிவே தெரியும் ஒமக்குண்ணு ரொம்ப லேசாக் கேட்டிரலாம்! அவ்வளவு முன்யோசனை இல்லாமலாவே, ஒருத்தன் கதை எழுத வருவான்? எனக்குப் பந்திரெண்டு வயசிருக்கச்சிலே தெங்கரைமுத்துப் பாட்டாவுக்கு அறுவதாங் கல்யாணம். உமக்கு விளங்கும்படியா தமிழ்ல சொன்னா சஷ்டியப்த பூர்த்தி. இல்லேண்ணா மணிவிழா. ஊர்ச் சாப்பாட்டு அடியந்திரமெல்லாம் ஒண்ணுமில்ல. சொக்காரன்மாருக்கும் சம்மந்தக்காரளுக்கும் வீட்டுமட்டுக்குமான அரிசி வைப்பு. ஆனா காலம்பற எட்டரைமணிக்கு அம்மன்கோயில்லே அரிசிப்பாயசம் வச்சு விளம்பினா வழக்கமா தீவாரனை முடிஞ்சு பூசாரிப்பாட்டா ஒரு ஆப்பை பாயசம் ஊத்துவாரு பாத்திரம் கொண்டு போணும் எவ்வளவு பெரிய பாத்திரம் கொண்டு போனாலும் ஒரு ஆப்பைதான். பண்ணையாரு வீட்டுப் பிள்ளையள்னா அரை ஆப்பை கூட ஊத்துவாரு அது அவருக்க சமூக நீதி

ஆனா அன்னைக்கு பெரிய வெங்கல உருளியில பாயசம் வச்சு தெங்கரைமுத்துப் பாட்டாவும் அவுரு வீட்டு ஆத்தாவும் எங்கள ரெண்டு வரிசயா நிக்கச் சொல்லி, கொண்டுகிட்டுப் போன தம்ளரு, போணி நெறய ரெண்டாப்ப மூணாப்ப ஊத்தித் தந்ததை என்னுண்ணு மறக்க முடியும் அறுவது வருசஞ் செண்ணும்? புளிச்சேப்பம் இருக்கப்பட்டவனுக்கு வேணும்ணா அயத்துப் போகும்! பசியேப்பம் வந்து கெடக்கப்பட்டவனுக்கு மறக்க ஒக்குமா?

ஆனால் சொல்ல வந்த காரியம் அதுவன்று! தெங்கரைமுத்துப் பாட்டா நல்லா பாட்டுப் படிப்பார். பாட்டுப் படிக்கிறது என்றால் சினிமாப் பாட்டல்ல. இல்லையென்றால் ‘தலை வாரிப் பூச்சூட்டி உன்னைப் பாடசாலைக்குப் போவென்று சொன்னார் உன் அன்னை’ போன்று பாரதிதாசன் பாட்டுப்போலவும் இல்லை. அவரே சொந்தமாக இட்டுக்கட்டி பாடுவார். அதுக்காச்சுட்டி அவர் கரந்தைத் தமிழ்க்கல்லூரி, பேரூர் தமிழ்க்கல்லூரி என்று புலவருக்கெல்லாம் படித்தவரில்லை. பின்னே கதைத் தலைப்பு பாவலர் தெங்கரைமுத்துப் பிள்ளை என்று நீங்கள் வல்லடி வழக்குக்கு வரலாகா! சுமாரா கவிதை எழுதப்பட்டவனை எல்லாம் தமிழ்ச் சமூகம் பாட்டுப் பணிமனை – மன்னிக்கவும் – பனிமலை, கவிதைக் கருங்கயம் என்றெல்லாம் பாடம் எழுதிக்கொடுத்துப் பாராட்டவில்லையா? எல்லாம் பணம் ஐயா பணம். பாதாளச் சாக்கடை வரை பாயும்!

தெங்கரைமுத்து பாரம்பரியமாகக் கல்வி மறுக்கப்பட்ட இனத்தவர் இல்லை. கும்பிச் சோற்றுக்கும் மாற்றுத்துணிக்கும் வழி இருந்தது. ஆத்திசூடியும் கொன்றைவேந்தனும் பதினாறாம் வாய்ப்பாடு வரை எண்சுவடியும் மனப்பாடம்தான். என்றாலும் உள்ளூர்ப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு ஆண்டுப் போரில் மூன்று முறை தோற்று பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டு வெகு விமரிசையாக வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

இன்று அவர் ஓர்னேர் உழவு மாடும், இரண்டு எருமையும், நான்கு தெங்கும் ஒரு தவிட்டு முருங்கையும் கறிவேப்பிலை மரமும், கோழிக்கூடும் பத்துப்பதினைந்து நாட்டுக்கோழிகளும், ஒண்ணரைக்கோட்டை விதைப்பாடு வயக்காடு பாட்டமாக வைத்துக் காலந்தள்ளும் சம்சாரி. சம்சாரி என்றால் குடும்பஸ்தன் என்றும் ஒரு பொருள். இங்கு விவசாயி என்று அர்த்தம்.

கி.ராஜநாராயணன் தனது வயிற்றெரிச்சலைக் காட்ட ஒருமுறை எழுதினார், ‘சம்சாரிண்ணா சர்க்காருக்க அகராதியிலே நாய்க்குப் பொறந்த பயண்ணு அர்த்தம்’ என்று.

பாவலர் தெங்கரைமுத்துப்பிள்ளை உள்ளூர் பத்திரிகை எதிலும் எழுதவில்லை. ‘தைமகளே வா’ என்று தொடங்கும் அல்லது ‘ஒளித் திருநாளே’ என்று தொடங்கும் கவிதை எந்த வாரமலரிலும் எழுதவில்லை. என்றாலும் பாவலர் அவருக்குப் பட்டப் பெயராயிற்று. செத்தாடு தூக்கி, தேங்காமுறி, கட்டமண்ணு சாடி, கோழிக் களவாணி என்ற பட்டப் பெயர்கள் போல இதுவுமொன்று.

பாட்டு இட்டுக்கட்டிப் பாடுவார் என்றாலும் அவருக்கு விருத்தம், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, அகவற்பா, கட்டளைக் கலித்துறை, வஞ்சி விருத்தம் என்று ஒரு ஈரமண்ணும் தெரியாது. நேரசை தெரியாது, நிரையசை அறியார். வெண்சீர் வெண்டளை என்றால் அது மொச்சைக் கொட்டை போல ஒரு பயிறா, பக்கா என்ன விலை என்பார். ஈதெல்லாம் அறியக் கிடைத்திருந்தால் ஏதாவது பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவர் ஆகி இருப்பாரே! அதற்கும் இன்று மேலது நீங்கலாக அறுபது லட்சம் கைமணி கொடுக்கவேண்டும் என்கிறார்கள்.

ஒரு ஆசு வச்சுப் பாடுவார். இவர் போன்றவரையே ஆசுகவி என்றாரோ என்னவோ! நானும் கொஞ்சம் பாட்டெல்லாம் கேட்டிருக்கிறேன். நீங்கள் காவடிச் சிந்து கேட்டிருக்கிறீர்களா? சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் பெயர் கேட்டதுண்டா? அவரை யார் என்று எண்ணுகிறீர்? 

‘சென்னி குளநகர் வாசன் – தமிழ்

  தேறும் அண்ணாமலை தாசன் – செப்பும்

செகமெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையில் புனை

                                                  தீரன்; அயில் வீரன்!

அப்படிப் போகும் பாட்டு எங்கே கேட்டிருக்கப் போகிறீர்கள்? நமக்கு டூயட் பாட்டு, குத்துப்பாட்டு, குடிகாரன் பாட்டு, கானாப்பாட்டு கேட்டால்தான் சங்கதி மனதிலாகும்! எழுதினால் பாரத ரத்னா உறுதி!

காவடிச் சிந்து போல கொலைச்சிந்து என்று ஒன்றுண்டு. அதை எவரும் சபாக்களில் பாடுவதில்லை. வேண்டுமானால், ‘உன் மண்டையைப் பாறையில் மோதிக் கொல்வான் டா என் பேரன்’ என்பதை ஒத்த ஐந்தாம் தரத்து சினிமா அலப்பறைப் பாடல்களை அப்பிரிவில் எடுத்துக் காட்டலாம். வஞ்சத்தில், சூதில் கொலைப்பட்டுச் செத்த ஊர்ப்புறத்து ஊச்சாளி – சட்டம்பி பேரில் பாடப்பட்டது. பழைய சினிமாப் பாட்டுப் புத்தக அளவில் அச்சடித்து கனகமூலம் சந்தை, தாலியறுத்தான் சந்தை முகப்புகளில் நின்று பாடியும் கூவியும் விற்றனர். புத்தக விலை காலணா, அரையணா இருந்தது.

பாட்டுன்னா எப்படி?

நானொரு பாடகன் இல்லை. எனக்குத் தெரிந்த விதத்தில் இப்போது பாடிக்காட்டவும் இயலாது. வேண்டுமென்றால் எழுதிக் காட்டலாம். எனது கிராமத்துக் குருக்கன்மாரிடம் இளம்  வயதில் கேட்டு மனப்பாடம் ஆனது.

சண்டாளன் மருதநாயகம் பிள்ளை – அவன்

சாதீல வெள்ளாளஞ் செட்டி – அவன்

இருக்கது எடக்குடி மேடு – அவன்

கெடக்கது குறக்குடித் திண்ணை – பயல்

குடிக்கது கூத்தப்பனை கள்ளு’

என்று இப்படி நீண்டு போகும். கேட்ட வயதில் யாம் கள்ளுண்டதில்லை. இன்றோ பனங்கள், தென்னங்கள், ஈச்சங்கள் பரிச்சயம் உண்டு. இனி எங்கே கூந்தல் பனை கள்ளு? எவரோ சொன்னார்கள் இரயிலடிக் கற்றாழையின் நடுத்தண்டு பத்தடி உயரம் வளர்ந்து பூக்கும்போது அதிலும் கள் இறக்குவார் என.

சண்டாளன் மருதநாயகம் பிள்ளை மெட்டில் இட்டுக்கட்டிப் பாடுவார் தெங்கரைமுத்து. அவரின் பாடல் பெற்ற மனிதரின் கல்யாண பௌருஷ குணங்கள் இருக்கும் அதில். தனிப்பட்ட முறையில் நாம் உமக்கதைப் பாடிக் காட்டி விடலாம். ஆனால் எழுத இயலாத எமக்கு செய்வினை – ஏவல் வைத்துவிடுவார்கள் வாரிசுகள். அதாவது நம்ம சோலிய முடிச்சுப் போடுவா”. இப்பவே நம்மீது குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக்காம்பு என்ற குற்றப்பத்திரிகை உண்டு.

வீட்டு முகப்பில், தெருப்படிப்புரையில் வட்டச் சம்மணம் போட்டு உட்கார்ந்திருப்பார். காலையில் உளுந்தங்கஞ்சி குடித்த மிதப்புத் தெரியும் முகத்தில். எவளேனும் கிழிந்த ஜெம்பர் போட்டுக் கொண்டு புல்லறுக்கவோ, விறகு பொறுக்கவோ, வயலில் ஏரடிக்கும் மணவாளனுக்குக் கஞ்சி கொண்டோ போவாள். பார்த்தவுடன் பாட்டுச் சொல்வார் – மார்கழி தை…. மார்பு கிழிஞ்சிருக்கு தை என்று. 

தண்ணீர்க் குடம் இடுப்பில் ஏந்தி வீட்டுக்குப் போகும் கொழுந்தி முறைக்காரியிடம் கேட்பார், ஏட்டி! ஒங்க வீட்டிலே மத்தியானம் என்னது? அவள் சொல்வாள், கஞ்சியும் காணத்துவையலும் என்று. தெங்கரைமுத்துப் பாட்டாவிடம் பாட்டு கொப்பளிக்கும் –

கஞ்சிக்கு காணம் கொண்டாட்டம்

கதைகெட்ட மூளிக்குக் கோவம் கொண்டாட்டம்

என்று.  கொழுந்தியாள் திருப்பித் தொடுப்பாள்,

இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம்

ஏலாச் சோம்பிக்குப் பாட்டு கொண்டாட்டம்

என்று. தெரு நடையில் நின்று வேடிக்கை பார்க்கும் தெங்கரைமுத்துப்பிள்ளை மனையாட்டி விசாலாட்சி என்ற சாலாச்சி சொல்வாள், அப்பிடிப்போடு ஆக்கங்கெட்ட அத்தானுக்கு என்று.

அப்போது வீணை எஸ். பாலச்சந்தர் இயக்கிய சினிமா ஒன்று வெளியாகி இருந்தது பொம்மை எனும் பெயரில். அவரே இசையமைத்த படம். பாடியது ஜேசுதாஸ். பெரும்பாலும் அப்பாடல் அவரைத் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகம் செய்த பாடலாக இருக்க வேண்டும். ‘நீயும் பொம்மை நானும் பொம்மை, நினைத்துப் பார்த்தால் எல்லாம் பொம்மை’ என்று தொடங்கும். அதன் நகல் போல் பாடல் ஒன்றைக்கட்டி மெட்டுப் போட்டார் தெங்கரைமுத்து.

‘தெங்கரை கையில் சாலாச்சி பொம்மை

சாலாச்சி கையில் காமாச்சி பொம்மை

காமாச்சி கையில் மீனாச்சி பொம்மை’ 

என்று. சாலாச்சி அவர் மனைவி விசாலாட்சி. காமாச்சி அவர்கள் மருமகள் காமாட்சி. மீனாச்சி அவர் மகன் மீனாட்சிநாதன்.

பாட்டைக் கேட்டு நடப்பவர் பாடபேதம் செய்வார்.

அதென்ன வே! பாட்டை மாத்திப் படிக்கேரு! சாலாச்சி கையிலே தெங்கரை பொம்மைண்ணுல்லா வரணும்? என்று. தெங்கரைமுத்துப்பிள்ளை முதுகுக்குப் பின் நின்று சாலாச்சி வலிச்சம் காட்டுவாள்.

பல பகடித் திருக்குறள் யாத்ததுண்டு பாவலர். பலதும் கெட்டவார்த்தைக் குறள்கள். இவண் பகர நீதமில்லை. எடுத்துக்காட்டுக்கு ஒன்று தரலாம்.

‘பொடி போட்டு வாழ்வாரே வாழ்வார் – மற்றெல்லாம்

சளி பிடித்துச் சாவார்’

என்று. நீதிநூல் பாடல் போல் ஒன்று சொல்வார் –

மோண்டபின் உதறாக் குஞ்சான்

பேண்ட பின் கழுவாக் குண்டி

என்று நீளமாக.

வாழைக்குலை களவாங்க, தேங்காய்க்குலை வெட்ட, பின்னிரவுகளில் வீடுமாறிப் படுக்க என்று பூனை போல் பம்மி நடப்பவர் தெங்கரைமுத்துவின் பாட்டுக்கு நாணி மேலும் பம்மினர். நந்திக்கலம்பகம், அறம் பாடுதல் பற்றி எல்லாம் அவ்வூர் மக்கள் அறிந்திருக்கவில்லை என்றாலும், ‘பாவி சண்டாளன் பாட்டாட்டுல்லா ஏசுகான்’ என்றனர். எக்காலம் ஆனாலும் பாடல், செய்யுள், கவிதைக்கு மக்கள் கிலேசப்பட்டனர் போலும். ஒருவேளை கனவில் போலீஸ் லாத்தி  படிமமாக வரும் போலும்.

தெங்கரைமுத்துப்பிள்ளையை எவ்விதத்திலேனும் மடக்கிவிடவேண்டும் என்று கதுக்கட்டி இருந்தார் பாட்டினால் தீப்பட்டவர். ஆனால் அவருக்கு கள், சாராயம், கஞ்சா, அபின், சுவர் முட்டி, களவுப் புணர்ச்சி எனும் ஒழுக்கக் கேடுகள் இல்லை. சொன்ன வாக்குப் பேணுகிறவர். கற்புப் புணர்ச்சியே சரிவரச் செய்வாரா என்பதை அவர் இல்லக்கிழத்தியார் விசாலாட்சி அம்மையார்தான் கோர்ட் கூண்டேறி நின்று Sworn Statement கொடுக்க வேண்டும். இரவு இரண்டு தேங்காய்த் தோசை கூடுதலாகத் தின்பார் என்பதை ஒழுக்கக்கேடாகக் கொள்ளல் தகாது.

‘தோள் கண்டார் தோளே கண்டார்

தொடுகழல் கமலத்தன்ன

தாள் கண்டார் தாளே கண்டார்’

என்பது கம்பன்.

‘தோள் கண்டார் தோளே கண்டார்

தோளில் இரு கிளிகள் கண்டார்’

என்பது கண்ணதாசன்.

‘கோல் கண்டாள் கோலே கண்டாள்

கோலில் குறுமுடிகள் கண்டாள்’

என்பது தெங்கரைமுத்துக் கவிராயர்.

இந்தக் கணத்தில் இக்கதாசிரியனுக்கு பெரும் மனச்சோர்வு ஏற்படுகிறது. ‘செவம் நெனச்சத எழுத முடியாம என்ன பின்னவீனத்துவம்?’ என. இப்போது நமக்குக் கிடைக்கும் விறலி விடு தூது நூல்கள் யாவுமே ஆங்கிலேயர் ஆணைக்கு ஏற்பத் தணிக்கை செய்யப்பட்டவை. மூலத்தை இன்று காணோம் என்பது பகை முரண். இன்று வெளியாகும் ஆங்கிலப் புத்தகங்களை அதே தணிக்கை நெறிகளுக்கு ஆட்படுத்துவார்களா அவர்கள்? இன்று சினிமா நடன அசைவுகளும் பாடல் வரிகளும் மறைபொருள் வசனங்களும் பேசாத காமத்தையா முன்னூறு ஆண்டுகளுக்கு முந்திய புலவன் பாடியிருக்கப் போகிறான்?

உள்ளூரில் நடந்த கோயில் கொடையின்போது, மத்தியானம் உச்சிக்கொடை நடந்து கொண்டிருந்தது. கோயில் படிப்புரைச் சுவரில் சாய்ந்து கணியான் ஆட்டம் பார்த்துக் கொண்டிருந்தாள் பெண்ணொருத்தி. அவளின் வசக்கேடான இருப்பைக் கண்டு திகைத்துப் பாப்புனைந்தார் தெங்கரைமுத்து.

‘குத்துக்கல்லு உச்சிப் பேய்ச்சி அம்மனுடைய!

  ஏ அம்மனுடைய!

தோதகத்தி மண்டலத்தைக் கண்டேனே ஐயா!’ 

பாட்டு, வில்லுப்பாட்டு மெட்டு. குத்துக்கல்லு உச்சிப் பேய்ச்சி அம்மன் எனப் பாடல் பெற்ற பெண்ணின் செவிகளுக்கு, சின்னாட்களில் செய்தி எட்டிவிட்டது. தன்னைப் பற்றிய பாடல் ஒன்று ஊரில் வைரலாகப் போய்க் கொண்டிருக்கிறது என்று. அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பாடல் மறுபதிவு செய்யப்பட்டு, நவீன தமிழ் இலக்கியவாதியின் உலகத் தரத்துச் சிறுகதை ஒன்றின் மூலம் சில நூற்றாண்டுகள் வாழப் போகிறது என்பது அவள் அறியாதது.

அதுகூட அவளுக்கு வருத்தம் இல்லை. வருத்தம் என்றால் ஈழத் தமிழில் பிணி, நோய், தீனம், சுகக்கேடு, ரோகம், சொவத்தப்பு என்று பொருள். பாடல் பெற்றவள் மனம் நோவு வந்து மெலிந்தது. உச்சிப் பேய்ச்சி அம்மன் என்று புனையப் பெற்றவள் பெயர் உண்மையில் உண்ணாமுலை. ஒரு நாசூக்கு கருதி யாவரும் உண்ணாமலை என்றே விளித்தனர். அபிதகுசாம்பாள் எனச் சூட்டப்பட்டிருந்தால், இந்தச் சள்ளை இருந்திருக்காது. நமக்குத் தமிழில் பேண்டால் பீ, பிற மொழிகளில் பேண்டால் களபம், சந்தனம்.

இந்தக் கதாசிரியனுக்கு மாதம் ஒருமுறையேனும் ஆண் அல்லது பெண் குழந்தைக்கு நல்ல பெயர் பரிந்துரைக்கும்படி கோரிக்கைகள் வரும். தமிழில் நல்ல பெயருக்கா பஞ்சம்? ஆனால் சிக்கல் அங்கு இல்லை. குழந்தையின் பிறந்த நட்சத்திரக் கணக்கின்படி பை, போ, பௌ எனும் எழுத்துக்களில் ஒன்றில் தொடங்குகிற பெண்பால் பெயர் சொல்லுங்கள் என்பார்கள். நாமோ தமிழ் வளர்த்துவதில் ஒரு நல்லாயுளைத் தொலைத்தோம். இயலாது எனல் ஆகுமா?

சிலகாலம் முன்பு உற்சாகமாக நண்பர் ஒருவர் சொன்னார் தன் பெண்ணுக்கு நிதம்பா என்று பெயர் சூட்டியுள்ளதாக. நல்லாருக்குங்க!” என்பதைத் தாண்டி நாம் வேறென்ன புகல இயலும்? அந்தப் பெயருக்கென்ன கேடு என்பவர் அகராதி பாருங்கள் ஐயா!

உண்ணாமுலைக்கு எப்படியானாலும் குத்துக்கல்லு உச்சிப் பேய்ச்சி என பட்டப் பெயர் ஏற்பட்டு நிலைத்து விட்டது. நமது இனமானத் தலைவர்களுக்கு சொந்தப்பெயர் மறந்து போகும் அளவுக்குப் பட்டங்கள் நிலைத்து விடுவதைப் போல. அதைப் பட்டியலிடப் போனால் பத்து பக்கங்கள் ஆகும். கொள்ளையடித்த பணத்தில் சொத்து வாங்கும்போதும், தேர்தலுக்குப் போட்டியிட விண்ணப்பம் எழுதும்போதும் மட்டுமே சொந்தப் பெயர் நினைவுக்கு வரும். சிலர் பெற்றோர் வைத்த பெயரையே அதிகாரபூர்வமாகத் திருத்திக் கொள்வார்கள். கண.சேனாவரையர், புல. அடியார்க்கு நல்லான், செவ. நச்சினார்க்கினியன் என்பது போல. அவரெல்லாம் யாரென்று கேளாதீர். முன்னொட்டைத் தொலைத்து விட்டால் தொல்காப்பிய உரையாசிரியர்கள்.

கழுத்தில் விழுந்த மாலை கழற்ற முடியவில்லை என்பது போலாகிவிட்டது உண்ணாமுலைக்கு. தெங்கரைமுத்து அவளுக்கு முறைக்கு அத்தான். ‘காலறுவானுக்குக் கண்ணவிஞ்சு போகாதா?’ என்று மனதுக்குள் வைதாள். பிராயத்தில் அவளைப் பெண் கேட்டதும் தெரியும்! ‘அதுக்காச் சுட்டி இருவத்தஞ்சு வருசம் செண்ணு இப்பிடியா மானம் கெடுப்பா?’

வழக்கம் போல ஆற்றுக்குக் குளிக்கப் போனாள் உண்ணாமுலை. காலம்பற புழுங்கலரிசியும் சிறுபயிறும் வெந்தயமும் பூண்டும் தேங்காய்த் துருவலும் போட்டுக் கஞ்சி. வறுத்தரைத்த கொத்தமல்லித் துவையல். காலை ஆகாரக்கடை ஒதுங்கி, மத்தியானத்துத் தண்டங்கீரைப் புளிக்கறிக்கும் கீரைத் துவையலுக்கும் நறுக்கி வைத்துவிட்டுக் குளிக்க வந்தாள். குளிச்சுக்கிட்டுப் போய், உலை ஏத்தி, தேங்காய் திருவி, கறிக்கரைச்சு, குழம்பு கூட்டிப்போட்டுத் துவரனும் வைத்தால் கடை ஒதுங்கும். நல்ல எருமை மோர் உண்டும். நார்த்தங்காய் ஊறுகாயும்.

கொண்டு வந்த ஐந்தாறு துணிகளைச் சோப்புப் போட்டு குத்திப் பிழிஞ்சு அலசி வைத்த பின்பு, உள் பாவாடையை நெஞ்சுகட்டிக் குளிக்க இறங்கினாள். மழை பெய்து வெள்ளம் வடிந்து, கலங்கல் எல்லாம் தெளிந்து, பதநீர் நிறத்தில் ஓடிக்கொண்டிருந்தது ஆறு. குளிரக் குளிர முங்கிக் குளிப்பது சுகம். மேலேறி வந்து, முதல்படியில் நின்று மேலுக்கு சோப்புப் போட்டாள். படித்துறையில் வேற்றாள் யாருமிலா சுதந்திரம். கூச்சமின்றி உள்ளும் வெளியுமாக சோப்புத் தேய்த்துக் கொண்டிருந்தபோது, உண்ணாமுலையின் மதனி முறைக்காரி மாலையம்மை குளிக்க வந்தாள். குனிந்து கறண்டை, குதிங்கால், முட்டு, தொடை, உள்தொடை என்று சோப்பு நுரைக்க நின்றவளைப் பார்த்தாள்.

நிமிர்ந்து பார்த்த உண்ணாமுலை கேட்டாள்.

யாரு மாலயம்ம மயினியா? இப்பெல்லாம் தெனமும் குளிக்கேளா? வாருங்கோ ஆத்துல தண்ணி போகு நல்ல அலசிக் குளிங்கோ! அப்பிடியே ஒங்க துணியை கல்லுப்படியிலே போட்டுட்டு எனக்குக் கொஞ்சம் முதுகு தேச்சு விட்டிருங்கோ உங்க கை படதுக்குக் குடுத்து வச்சிருக்கணும்…”

ஒருத்தருக்கு ஒருத்தர் செய்யக்கூடிய சகாயம்தான். ஆற்றில் இறங்கி, லயமாக முதுகு தேய்த்துத் தந்தவாறு, சன்னமான குரலில் மாலையம்மை மதனி, உண்ணாமுலை சம்மந்தியிடம் கேட்டாள்.

ஏட்டி உண்ணாமலை! இன்னைக்குத்தான நான் பாத்தேன்! அவன் தெங்கரைமுத்தண்ணன் பாட்டுப் படிச்ச மாரிதான் இருக்கு, காடடஞ்சு உனக்க ரெண்டாமத்த குட்டி பொறந்த பெறகு முடியே வழிக்கல்லியாட்டி செவம்…”

சும்மாருங்க மயினியோ! செவம் எங்க சமயம் கெடைக்கு? நீங்களே பாக்கத்தான செய்யியோ, நான் படப்பட்ட பாட்டை? வீடு, களம், வயிலு, தோப்பு, மாடுண்ணு…”

அதுக்காச் சுட்டி? ஒரு இது வேண்டாமாட்டீ? ராத்திரி அவன் கிட்டயே படுக்கமாட்டானாட்டி?

ஆங் ஏன்? நீங்களே கேளுங்களேன் உங்க அருமாந்த தம்பி கிட்டே! நல்ல கததான் பேசுகியோ! தெனமும் சவுட்டணும் சவத்து மூதிக்கு கார்த்திய மாசத்து நாய் கெணக்க குடும்பக் கட்டுப்பாடு செய்ததுனால பொழச்சேன் இல்லாட்டா ஏழோ எட்டோ ஆயிருக்கும்!”

சாமர்த்தியம்தான் போ கொண்டுக்கிட்டுத் திரியா, கொறச்சலு இல்லாம செவம் செறையா இருக்காதாட்டீ? சடை போட்டுப் பின்னிப் பூவும் வச்சுக்கிடுவா போலிருக்கு, மூதி!”

அப்பம் மயினி நீங்களே செய்து விட்டிருங்களேன்…”

அதுக்கென்னட்டீ மத்தியானம் சாப்பிட்ட பெறவு வீட்டுக்கு வா அண்ணாச்சி தோப்புக்குப் பொயிருவாரு பிள்ளையோ பள்ளிக்கூடம் விட்டு வர அஞ்சுமணி ஆவும் திமுரு புடிச்ச மூளி பேசுகதைப் பாரேன் கொறச்சலு இல்லாம…”

துவைத்து முறுக்கிப் பிழிந்து வைத்திருந்த துணிகளைச் சேகரித்து வலது தோளிலும் தண்ணீர் கோரி நிறைந்த பித்தளைக் குடத்தை இடது இடுப்பிலும் தூக்கிக் கொண்டு, உண்ணாமுலை மாலையம்மை மதனியிடம் சொன்னாள்.

ஒரு நா தெங்கரைமுத்து முடிவானுக்கு இருக்கு பாத்துக்கிடுங்கோ மயினி!”

ஏ முட்டி? என்ன செய்யப் போற அவனை?

என்ன செய்வனா? ஒரு நா சாலாச்சி அக்கா இருக்கப்பட்ட நேரம் பாத்து வீட்டுக்குப் போயி, கண்டாங்கியைத் தூக்கிக் காட்டீட்டு சொல்லுவேன் யத்தான், இதைக் கொஞ்சம் விர்த்தியா செரச்சு விட்டிருங்கோண்ணு பாட்டுல்லா படிக்கான் பாட்டு…”

ஏட்டி! உனக்கென்ன வட்டா?

என்னத்த கிறுக்குங்கே மயினி? ஒண்ணுலே எனக்கு அவன் செரச்சு விடணும் இல்லாட்டா இனிமே இந்த புளிச்ச கெட்ட வார்த்தை பாட்டுப் படிக்கதை நிறுத்தணும்…”

இடுப்பில் குடமும் தோளில் துணிகளுமாக விசுக் விசுக் என்று நடந்து போனாள், குத்துக்கல்லு உச்சிப் பேய்ச்சி!


  • நாஞ்சில் நாடன்

நன்றி 

ஓவியம்: சுந்தரன்

4 COMMENTS

  1. கும்பமுனி க்கு கொரோனா நோவா. தென்கரை முத்து மேல அருள் இறங்கி பாட்டனை முன்னிட்டு பகடிப் பாட்டா பாடுதாரு நாஞ்சிலாரு .

  2. தாண்டவம் என்ற பாகு மாதிரி நெகிழ்ந்த மனிதரின் கதையைச் சொல்லி நம்மை நெகிழ்த்தி விட்டார் வண்ணதாசன். தாண்டவ மாமாவின் இதயத்துள்ளிருந்து தலைகாட்டிய அனுவிரதம் நினைவை மின்னலெனத் தீற்றி ஒட்டுமொத்த கதையில் தாண்டவத்தை கால்மாற்றி வாசகமனதில் ஆடவைத்து விட்டார். வெங்கிட்டு பெரியப்பா -அனுவிரதம் தம்பதியினரின் மனமொத்த வாழ்வு தாண்டவத்தின் மனதில் இழப்பின் வலி தாண்டவமாடியிருக்குமோ…என்று வாசகமனதை கதைக்க விடுகிறார்.மனம் கவர்ந்த கதை.

  3. நாஞ்சில் நாட்டின் இயல்பான வாழ்க்கையினை ரத்தமும் சதையுமாக எழுதுவதில் தான் ஒரு கில்லாடி என நாஞ்சில்நாடன் மீண்டும் நிரூபித்து இருக்கிறார். பகடி கலந்து இருப்பதால் படிக்க இனிமையாக உள்ளது. இடையே நாஞ்சில் நாட்டு உணவுஅயிட்ட மெனுவும் உள்ளது சிறப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.