ROAR வட்டமேசை: கோவிட்-19 & காலநிலை நெருக்கடி

பொதுமுடக்கத்திற்கும் இயல்பு வாழ்க்கைக்கும் இடையிலான மீள் செயல்பாடுகளின் அடிப்படையிலேயே தலைமுறைகள் தாண்டிய சூழலியல் போராட்டங்கள் அமையவிருக்கின்றன. இத்தகு வாய்ப்பை வசப்படுத்துவதற்கான வழிமுறைகள் என்ன?

-ROAR ஆசிரியர் குழு

கோவிட்-19, சமூக மற்றும் சூழலியல் சமநிலை குறித்தான நம் அனைத்து மதிப்பீடுகளையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தி உள்ளது. இந்த நோய்ப் பெருந்தொற்று, சமூக மற்றும் சூழலியல் அமைப்பையும் அசைவுகளையும் எவ்வித சலனத்திற்கும் உட்படுத்தாமல், காலநிலை மாற்றம் குறித்தான அதன் பார்வையை மாற்ற முனைந்துள்ளது. இந்நெருக்கடிக்குப் பிறகான காலகட்டத்திலும் எவ்வித மாற்றங்களுக்கும் உட்படாத இரண்டு விஷயங்கள் – காலநிலை மாற்றத்தால் உலகம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடியும், தொடர்ந்து அதைப் புறந்தள்ளி வரும் வர்த்தக உலகின் பார்வையும்.

வல்லரசுகள் சமகால உலகை அச்சுறுத்தி வரும் காலநிலை மாற்றம் குறித்து மெத்தனப்போக்கைக் காட்டிவரும் அதே வேளையில், கோவிட் பெருந்தொற்றை மிகவும் தன்முனைப்போடும் உத்வேகத்தோடும் எதிர்கொண்டுள்ளது. இந்த முரண்பட்ட பிண்ணனியில், இந்த நோய்த்தொற்றால் விளைந்த, (2008 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு) மிகப் பெரிய பொருளாதாரப் பின்னடைவை பொருத்திப் பார்க்க வேண்டும். இத்தகைய இரட்டை நிலைப்பாடுகள் மீண்டும் ஒருமுறை வல்லரசுகளின் நோக்கங்களையும் முன்னுரிமைகளையும் கேள்விக்குட்படுத்துகிறது.

அதே வேளையில், காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ள தேவையான பரந்துபட்ட செயல்பாட்டு மாற்றங்களை இந்தப் பெருந்தொற்று அடையாளப்படுத்தியுள்ளது. உலகம் தன்னை பொதுமுடக்கத்திற்கு உட்படுத்திக் கொண்ட காலகட்டத்தில், நீர்நிலைகள் மற்றும் காற்றின் தரக் குறியீடு மேம்பாடுகள் (குறிப்பாக நகர்ப்புறப் பகுதிகளில்) பல்வேறு நாடுகளிலும் பரவலான பேசுபொருளாக மாறிவிட்டிருந்தது. உலகளாவிய கரியமில உமிழ்வு கடந்த ஏப்ரலைக் காட்டிலும் 17% வரை குறைந்து இருந்தது.

இது போன்ற உத்வேகமளிக்கும் புள்ளிவிவரங்களின் மறுபுறம், பாரிஸ் காலநிலை உடன்படிக்கையின் சுற்றுச்சூழல் தர மேம்பாட்டு இலக்குகளை, இந்த உலகளாவிய பொதுமுடக்க காலகட்டத்திலும், அடைய முடியாதது முரண். கடந்த மே மாதம், வளிமண்டலம் மனித வரலாற்றின் உச்சபட்ச கரியமில அளவை [418 ppm (பத்து இலட்சத்தில் ஒரு பங்கு)] பதிவு செய்தது.

உலகம் எதிர்கொள்ளவிருக்கும் மிகப்பெரிய அளவிலான சூழலியல் மற்றும் சமூகப் பேரழிவுகளைத் தவிர்க்க, ஆண்டுதோறும் 7.6% என அடுத்த மூன்று தலைமுறைகளுக்கு நச்சு வெளியேற்றம் குறைக்கப்பட வேண்டும். குறிப்பாக 2035க்குள் வளர்ந்த நாடுகள் முழுமையாக கரியமில உமிழ்வைக் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும்.

உலகின் எதிர்காலக் போக்கு பொதுமுடக்கத்திற்கும் இயல்புநிலைக்கும் இடையிலான மீள் செயல்பாடுகளாலேயே தீர்மானிக்கப்படும். வல்லரசுகளின் பழைய இயல்புநிலையை இலக்காகக் கொண்ட செயல்பாட்டு திட்டங்களின் துரிதங்களுக்கிடையில், “வழமையான இயல்புநிலையே சிக்கல் என்றானபின், நம் இலக்கு அதுவாக இருக்க முடியாது” என்ற ஹாங்காங் சுவர் பிரசுரம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

நம் செயல்பாடுகள் உலக எரிபொருள் சந்தையின் கட்டுமானத்தைச் சிதைத்து, அதன் மீது கட்டி எழுப்பப்பட்ட முதலாளித்துவத்திற்கு எதிரான போக்கை உருவாக்குவதன் மூலமும், சந்தைப்படுத்தப்பட்ட விவசாய முறையை ஒழிப்பதன் மூலமும், மனிதனல்லாத உயிர்களுக்குமான சம அமைப்பு எனும் புதிய இயல்புநிலை என்ற சவாலை நோக்கியதாக இருக்க வேண்டும்.

உலக அரசியலில் கோவிட்-19இன் தாக்கத்தைக் கேள்விக்கு உட்படுத்தும் கட்டுரை வரிசையில், முதலில் உலகளாவிய சுற்றுச்சூழல் செயல்பாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறித்து ஆய்வறிஞர்களிடமும் அமைப்பாளர்களிடமும் கருத்துப் பகிர்வு கோரப்பட்டுள்ளது.

கை ஹெரோன், துணை ஆசிரியர்.

ஜான் பெல்லாமி ஃபாஸ்டர், தியா ரியோஃபிரான்கோஸ், லவினியா ஸ்டெயின்ஃபோர்ட், ஜியார்கோஸ் கல்லிஸ், மேக்ஸ் அய்ல், ப்ரையன் டோகர், ஹிலாரி மூர் ஆகியோருக்கு ROAR நன்றி பாராட்டுகிறது.

*** 

கோவிட் பெருந்தொற்றில் இருந்து சுற்றுச்சூழல் சார் இயக்கங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய படிப்பினை என்ன?

எல்லாமும் எல்லாவற்றாலும் தாக்கத்திற்குள்ளாகிறது: ஜான் பெல்லாமி ஃபாஸ்டர்

‘மனிதக் குரங்கில் இருந்து மனிதன் உருவானதில் உழைப்பு வகித்த பாத்திரம்’ (மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம்) என்ற தன் புகழ்பெற்ற கட்டுரையில், ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ், “எதுவும் இயல்பில் தனித்து இயங்க வல்லதல்ல. அனைத்தும் அனைத்தாலும், தாக்கத்தை ஏற்படுத்தவோ தாக்கத்திற்குள்ளாகவோ செய்கிறது. பல்வேறு அடுக்குகளில் பிணைந்துள்ள இந்த இயற்கை அசைவையும் தொடர் பரிமாற்றத்தையும் கருத்தில் கொள்ள தவறியதன் விளைவாக, சூழலியல் ஆராய்ச்சியாளர்கள் இயற்கையின் இயல்பைப் புரிந்துகொள்வதில் இருந்து விலக்கப்படுகிறார்கள்” என அவதானிக்கிறார்.

இதே ஏங்கெல்ஸின் நெருங்கிய மாணவரான பேர்ரி காமனரால் முன்வைக்கப்பட்ட, “அனைத்தும் அனைத்துடனும் பிணைக்கப்பட்டுள்ளது” என்பது சூழலியலின் முதல் விதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டபோதிலும், அதன் முழுமையான உட்குறிப்பு நவீனகால சூழலியலாளர்களுக்கு வசப்படாமலேயே தேங்கிவிட்டது. இதற்குக் காரணம் சுற்றுச்சூழல் என்பது மனித வாழ்க்கைக்குப் புறவயமான ஒன்றாக தொடர்ந்து அழுத்தமாக பேசப்பட்டு வருவதாகும். இந்த அணுகுமுறை கார்ல் மார்க்ஸ் முன்வைத்த மனிதச் சமூகத்தையும் சூழலையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த இயற்கை செயல்பாட்டுக்கூறுக்கு முரணானது. இவற்றின் விளைவாக நோய்களின் மூலக்கூறாய்வுகள் (etiology), சூழலியல் மாற்றத்திலிருந்து விலக்கப்பட்டு, மனிதச் சமூகத்தின் வாழ்வியல் பிண்ணனியில் மட்டுமே அணுகப்படுகிறது. இந்தத் தவறான அணுகுமுறையின் வீச்சை கோவிட்-19 தொற்று உணர்த்துகிறது.

சார்ஸ், மெர்ஸ், எச்1என்1 எனச் சமீப காலங்களில் எதிர்பாரா விதமாக விலங்குகளிடமிருந்து மனிதர்களிடையே பரவிவரும் நோய்களின் விளைவாக ஒருங்கிணைந்த ஒரு சுகாதார அணுகுமுறையை (one health approach) நோக்கி அறிவியலுலகம் நகரத் துவங்கி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக நோய்களின் மூலக் கூறாய்வுகளானது விலங்கியல் (zoology), நுண்ணுயிரியல் (microbiology), சூழலியல் (ecology), தொற்றுநோயியல் (epidemiology), கால்நடை மருத்துவம் (Veterinary medicine), பொது சுகாதாரம் எனப் பல துறைகளை உள்ளடக்கி, பெருந்தொற்றுகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த மேம்பட்ட நடைமுறைகளை ஏற்படுத்தி வருகிறது.

உலக வங்கி, உலகச் சுகாதார நிறுவனம், ஐக்கிய அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் ஆகியவை இணைந்து எளிமைப்படுத்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட, ஒருங்கிணைந்த சுகாதாரக் கொள்கையை கட்டமைத்தாலும், முதலாளித்துவத்தைக் கருத்தில் கொள்ளுதல், விவசாயம்சார் தொழிலையும் உலக வர்த்தகத் தொடர்புகளையும் கண்காணித்தல் போன்ற காரணங்களால் பெறுமதியான நோக்கங்களில் இருந்து விலகி இருக்கிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் கார்ல் மார்க்ஸ், குறுகிய கால இடைவெளிகளில் ஏற்படுகிற நோய்த்தொற்றுகளைச் சமூக வாழ்வியலிலும் மண்வள சுழற்சியிலும் ஏற்பட்ட சிதைவுகளின் வெளிப்பாடாக குறிப்பிடுகிறார். இந்தக் கருதுகோளை ஒட்டி, வரலாற்றுரீதியான பொருளியல் சார்ந்த வாழ்க்கைமுறையின் பிண்ணனியில், நோய்த்தொற்றில் முதலாளித்துவத்தின் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, நோய்த்தொற்று இயலில் ஒருங்கிணைந்த சுகாதார அணுகுமுறை உருவானது.

இந்தப் புதிய அணுகுமுறை சுற்றுச்சூழல் அமைப்பின் சீரழிவு, நகரங்களுக்கும் காடுகளுக்கும் இடையிலான இடைவெளி குறைவு, பரவலான ஒற்றை விவசாயமுறை உருவாக்கம், உலகமயமாக்கப்பட்ட வர்த்தகச் சங்கிலி போன்ற காரணிகளுக்கும் உயிரினங்களுக்கு இடையிலான நோய்ப் பரவலுக்குமான தொடர்பைப் புரிந்துகொள்ள முனைகிறது. மனிதச் சமூகம் எதிர்கொண்டுள்ள சூழலியல் நெருக்கடியின் (வளர்சிதை மாற்றத்தின்) முழுப்பரிணாமத்தைப் புரிந்துகொள்ள இ்த்தகு புரிதல் அவசியமாகும்.

வகுப்புபுவாத முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கும், ஒடுக்கப்பட்ட வறிய சமூகத்தின் சுகாதாரமற்ற நிலைக்கும் காரணமான பொது சுகாதாரக் கட்டமைப்பின் சிதைவைப் பேசுவதன் மூலம் புதிய தாராளமயமாக்கல் கொள்கையை கேள்விக்குட்படுத்துகிறது. இத்தகைய வர்க்கரீதியான, இனரீதியிலான இடைவெளிக்கும், கோவிட்-19 காலச் சுகாதார நெருக்கடிக்குமான தொடர்பின் காரணமாக புதிய போராட்டங்களுக்கான களம் உருவாகியுள்ளது. இதன் வெளிப்பாடே ஜார்ஜ் ஃப்ளாய்டு மரணத்தைத் தொடர்ந்து அமெரிக்காவில் ஏற்பட்ட சமூக எழுச்சி. ஏக காலத்தில், பூதாகரமாக வளர்ந்துவரும் முதலீடுகளின் இணைப்பயனாக பெருகிவரும் கரியமில வாயு பூமிக்கு அச்சுறுத்தலாகி இருக்கிறது.

அனைத்தும் அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறதெனில், 21ஆம் நூற்றாண்டு மனிதச் சமூகத்தின் முன்னுள்ள ஆபத்தை எதிர்கெள்ள சமூகச் செயல்பாட்டு கூறுகளில் புதிய நடைமுறைகளை ஏற்படுத்துவதைத் தவிர வேறு வாய்ப்பில்லை.

ஜான் பெலாமி ஃபாஸ்டர் (John Bellamy Foster), ஓரேகான் பல்கலைக்கழக பேராசிரியர், கட்டுரையாளர், Monthly Review இதழின் ஆசிரியர்; இவரது சமீபத்திய படைப்புகள் Monthly Review வெளீடுகளான The Return of Nature: Sociology and Ecology (2020) மற்றும் The Robbery of Nature: Capitalism and the Ecological Rift (இணை ஆசிரியர் Brett Clark, 2020)

***

நெருக்கடிகளின் பிணைப்பு: தியா ரியோஃபிரான்கோஸ்

அநீதிகளை நெருக்கடிக்கள் தோலுரிக்கின்றன. இதன் பிண்ணனியிலேயே சமூக எழுச்சியின் ஊடாக நெருக்கடிகளின் தீவிரத்தன்மை தங்கள் இருப்பை வலிமைப்படுத்த முனையும் எதிர்ப்புக் குரல்களுக்கு அதிகாரமளிக்கிறது. சமயங்களில் ஏற்றத்தாழ்வுகளுக்கிடையில் நடக்கும் அதிகாரப் போட்டியாகவும் நெருக்கடிகள் பார்க்கப்படுகிறது.

பிளவுபட்ட சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளுக்கிடையிலான இடைவெளியை அதிகரிக்கக் கூடிய, புதிய – சுகாதார, பொருளாதார, பருவகால – நெருக்கடிகள் சூழலியலாளர்களுக்கான, இந்த நோய்த்தொற்றின், முதன்மைப் படிப்பனையாகக் கருதப்படுகிறது. இவையே காலநிலை நெருக்கடிகளுக்குமான முதன்மை காரணிகளாகவும் உள்ளன.

ஒடுக்கப்பட்ட சமூகம், தனது எல்லைக்குள் அமைந்துள்ள நச்சுத் தொழிற்சாலைகளின் விளைவால் ஏற்பட்ட, ஆஸ்துமா போன்ற நீண்ட கால சுகாதாரச் சீரழிவுகள் மற்றும் இந்த பிண்ணனியில் கோவிட் பரவலால் விளைந்த மரணம் என இருமுனை நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. மறுபுறம் தெற்காசியா முதல் ஈக்குவடார் வரை இத்தகு சமூகங்கள் புயல், வெள்ள அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கின்றன.

சமீபத்தில் ஏற்பட்ட பரவலான ஐக்கிய அமெரிக்க எழுச்சி இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களின் நீட்சியாகவே பார்க்கப்படுகிறது. ஜார்ஜ் ஃப்ளாயிட் கொலையால் தூண்டப்பட்ட அமெரிக்க சமூக எழுச்சி, பின் உலகளாவிய எதிர்ப்புக்குரலாக, ஒருங்கிணைக்கப்பட்ட அதிர்வலைகளாக வெளிப்பட்டது.

இந்தத் தார்மீக ரீதியான கோபத்தின் ஆழத்தையும், கோரிக்கைகளின் தீவிரத்தையும் புரிந்துகொள்ள, ஒடுக்கப்பட்ட சமூகம் எதிர்நோக்கியுள்ள பலமுனை சமூக நெருக்கடிகளின் கொடூரத்தை அடையாளம் காணுதல் பிரதானமாகிறது. ஒரு மின்னாப்போலீஸ் (Minneapolis) சமுதாய ஒருங்கிணைப்பாளர், “காவல்துறையால் கொல்லப்படுவதற்கும் கோவிட் மரணத்திற்கும் இடையிலான சாத்தியக்கூறுகள் சமமானவை” என்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சூழ்ந்துள்ள பொருளாதார சீரழிவின் பின்னணியில், “இந்தச் சமூகக் கட்டமைப்பு தங்களுக்கானதல்ல என்பதே சமூகப்படிநிலையின் கடைசி தட்டு மக்களின் புரிதல்” என பால்டிமோரைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் குறிப்பிடுகிறார்.

சுரண்டலின் அடுத்த படிநிலையாக அடக்குமுறைச் சூழலிலும், நிலையற்ற, அபாயகரமான, வன்முறையை எதிர்நோக்கிய சூழலிலும் சமூகங்கள் ஒருசேர உழல நேரும்போது, இதன் ஒருங்கிணைந்த வெளிப்பாடாக நிகழும் சாதாரண நிகழ்வுகள்கூட குறுகிய காலத்தில் அதிதீவிரமான போராட்டமாக உருவெடுக்கும்.

பொதுமுடக்கத்தின் மந்தகதியிலான அகபுறச் சூழல்களிலும், இத்தகைய தொடர் நிகழ்வுகள் பெரும்பாலானோரின் கவனத்தை ஊடறுத்துச் சென்றுள்ளது. நியூயார்க் போராட்டக்காரர்கள் வரலாற்றின் மிகச் சரியான தருணத்தில் இருப்பதாகப் பதிவு செய்கிறார்கள். இவற்றிற்கு ஆதாரமாக, பொதுமுடக்கத்தின் தனிமைக்குப் பிறகான சமூகக் கூடுகையின் உற்சாகமும் கொந்தளிப்பான மனநிலையும் அமெரிக்க வீதிகளில் புலனானது.

இந்த போராட்டங்கள் சமூக எதிர்வினையின் உடனடி வெளிப்பாடாக நிகழ்ந்து விட்டிருந்தாலும், ஒரு பரவலான வெகுஜன போராட்டத்திற்குத் தேவையான ஒருங்கிணைப்பின் பின்னணியில் உள்ள Black Vision Collective மற்றும் Centro de Trabajadores Unidos en la Lucha போன்ற சமூக, தொழிலாளர் குழுக்களின் பங்களிப்பும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். பிற நீண்டகால இலக்குகளுடன் நிறவெறி ஒழிப்பு, காவல்துறை அதிகாரக் குறைப்பு, ஒடுக்கப்டோருக்கான 2016 இயக்கத்தின் அவசியத்தைக் களைதல் போன்ற இலக்குகளையும் பிணைத்தல் சாத்தியக் குறைவானது.

அதிகரித்துவரும் காலநிலை நெருக்கடி உட்பட அனைத்து நெருக்கடிகளும் சமூகத்தின் மீது திணிக்கப்பட்டதன் பிண்ணனியில் உலகப் பெருநிறுவனங்களின் சிந்தனை முரண்பாடுகளைப் பொருத்திப் பார்க்க வேண்டும். இந்த நெருக்கடிகளுக்கெதிரான சமுதாய எதிர்வினையாக, சமூக விலக்கல் போக்கைத் தவிர்த்து, விடுதலைப் போக்கை முன்னிறுத்த வேண்டும். நெருக்கடிகளுக்கும் அதன் மூலக் காரணிகளுக்கும் இடையிலான தொடர்பைக் கண்டறிவதன் மூலமே இதைச் சாத்தியப்படுத்த இயலும். நீண்டகால மறுசீரமைக்கப்பட்ட போராட்டத்திற்கான பின்புலமாக, பலமான அமைப்பைக் கட்டமைக்கும் நோக்கில் அடுத்தக் கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

தியோ ரியோஃபிரான்கோஸ் (Thea Riofrancos), Providence College அரசியல் அறிவியல் துறை உதவிப் பேராசியியர், Resource Radicals: From Petro-Nationalism to Post-Extractivism in Ecuador (ட்யூக் பர்கலைக்கழக பதிப்பு) நூலின் ஆசிரியர், A Planet to Win: Why We Need a Green New Deal (Verso Books) நூலின் இணை ஆசிரியர். Democratic Socialists of America’s Ecosocialist Working Groupஇன் வழிகாட்டி குழுவில் பணிபுரிகிறார்.

***

பயன் தரும் சர்வதேச ஒற்றுமை:லவினியா ஸ்டெயின்ஃபோர்ட்

காலனிய, முதலாளித்துவ அதிகார மையங்களின் தனிப்பட்ட நலன்களுக்காகச் சுற்றுச்சூழல் உட்பட அனைத்தும் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. இதனை மாற்றும் பொருட்டும், வளமான புவிசார் உயிர்களின் பொருட்டும், அவற்றை உள்ளடக்கிய சுற்றுச்சூழல் அமைப்புகளின் பொருட்டும், சூழலியல் இயக்கங்கள் அதிகார மாற்றத்தை நோக்கி பலமான முன்னெடுப்புகளை முன்வைக்க வேண்டும்.

ஆழ இணைந்து வேரோடி இருக்கும் இந்த நிர்வாக அதிகார மையங்கள், இயற்கை மீதும் சூழல்சார் உயிர்களின் மீதும் ஒரு உலகளாவிய வணிகப் பார்வையையும் மதிப்பையும் கட்டமைத்திருக்கின்றன. இத்தகைய அமைப்பு ரீதியான பார்வையின் மூலமாக நெறிப்படுத்தப்பட்ட அடிமைமுறையை உருவாக்கி, உயிர்கோளையும் (biosphere), பல்லுயிர்களின் வாழ்வாதாரக் கூறுகளையும், உழைப்பையும் ஒருசேர சுரண்டலுக்குள்ளாக்கி இருக்கின்றன. நல்வாழ்வுக்குரிய அனைத்து அம்சங்களையும் வணிக நோக்கில் உறிஞ்சும் ஒட்டுண்ணிகளாக வளர்ந்துவிட்டன.

மறுபுறம் அதிகார நடைமுறைச் செயல்பாடுகள் வேறு மாதிரியான சவாலாக உள்ளது. மனித வரலாறு நெடுகிலும் சமூகநீதி மற்றும் வளமான சமூகத்தை இலக்காகக் கொண்ட மனிதசக்தியின் மூலம், அதிகார ஆதிக்கம் எதிர்ப்புகளுக்கும் மாற்றங்களுக்கும் உட்பட்டே உள்ளது. பெண்களுக்கான வாக்குரிமை, 8 மணிநேர உழைப்பு, காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை என பெரும்பான்மை சமூகம், சிறுபான்மை அதிகார வர்க்கத்திடமிருந்து, தங்களையும் தங்கள் சார்ந்த சமூக அமைப்புகளையும் மீட்டெடுத்துள்ளது.

நீண்டகால பொருளாதார நோக்கிலேனும், அரசுகளால் உயிர் காக்கும் நடவடிக்கையாக, பொருளாதாரத்தை முடக்க முடியும் என நோய்ப்பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காட்டுகின்றன. சமூக நல அமைப்புகள், உணவு உற்பத்திச் சங்கிலி, பொதுப் போக்குவரத்து, பொதுச் சேவை மற்றும் நிர்வாக அமைப்புகளும் அதன் பணியாளர்களுமே சமூகத்தின் முதுகெலும்பு என்பதும் தெளிவாகி உள்ளது.

ஒருவேளை பெண்ணிய, இனவெறி எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு மற்றும் வணிக அமைப்புக்களுடன் சூழலியல் இயக்கங்களும் இணைந்து, இவற்றை முன்னிறுத்திய ஒரு பொருளாதார கட்டமைப்பை கட்டி எழுப்ப முடியுமேயானால் இவற்றின் மூலம் அபரிமிதமான சுரங்கச் செயல்பாடுகள், யூக வணிகம், சுற்றுலா, எரிபொருள்சார் விவசாயம் (fossil fuelled agriculture), அதீத நுகர்வு உள்ளிட்ட அனைத்து வடிவிலான சுரண்டலின் வளர்ச்சியைக் குறைக்க முனைந்தால்?

நாம் சார்ந்த சமூகத்தையும், அதன் இயக்கத்தை சார்ந்தியங்கும் சமூகங்களையும் ஒருங்கிணைத்து, ஜனநாயக அமைப்பை வேரூன்றச் செய்ய முனைவோமேயானால் இத்தகு ஒருங்கிணைக்கப்பட்ட ஆற்றலின் வலிமையுடன், லாபம், போட்டி, அதிகாரக் குவிப்பை மையமாகக் கொண்ட அமைப்புரீதியான இயக்கங்களை மாற்றி, தேவை, ஒற்றுமை, கூட்டியக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இயக்கங்களாக கட்டியெழுப்புவதன் மூலம் ஜனநாயக அமைப்பை வலுப்படுத்த முடியுமேயானால்?

வளர்ந்த நாடுகளின் அதிகாரமிக்க சூழலியல் இயக்கங்கள், மூன்றாம் உலக நாடுகளின் மீதான ஆதிக்கத்திற்கும் சுரண்டல்களுக்கும் வல்லரசுகளையும் பெருநிறுவனங்களையும் பொறுப்பாக்குவதன் மூலம், அச்சமூகங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக நிபந்தனைகளற்ற நிதி ஆதரவை உறுதிப்படுத்த முனைய வேண்டும். இதன் வழியாக சிலியின் மாபுச்சே சமூகம் முதல் நைஜீரிய ஓகனி சமூகம்வரை அனைத்து பூர்வகுடிச் சமூகங்களும் தங்களுக்குகந்த ஜனநாயக ரீதியான அதிகாரப்பகிர்வு நடைமுறையில் தங்களை மறுகட்டமைப்புக்கு உட்படுத்த முடியும்.

நீடித்த வளமான சமூகத்தைக் கட்டமைக்கும் பொருட்டு, கட்டற்ற சந்தை மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான பிடிப்பை அரசுகள் கைவிடுத்து, அபரிமிதமான உற்பத்தி மற்றும் சுரண்டலை மையப்படுத்திய சமூக பொருளாதாரத்திற்கு மாற்றாக, உலக நலனை முன்னிலைப்படுத்திய, வளங்கள் மற்றும் அதிகாரப் பகிர்வை ஒருங்கிணைந்து முன்னெடுக்க வேண்டும்.

லாவினியா ஸ்டெயின்ஃபோர்ட் (Lavinia Steinfort), Transnational Institute ஆய்வாளர். mPower திட்டத்தை இணைந்து செயல்படுத்துபவர். The Future is Public: Towards Democratic Ownership of Public Services (2020), Public Finance for the Future We Want (2019) மற்றும் எரிபொருள் சார்ந்த ஒப்பந்த சாசனத்தை அடிப்படையாகக் கொண்ட One Treaty to Rule them All (2018) போன்ற ஆய்வறிக்கைகளின் இணை ஆசிரியர்.

***

எதிர்மறைச் சூழலில் நம்பிக்கையை கண்டடைதல்: ஜியார்கோஸ் கல்லீஸ்

சூழலியல் இயக்கங்களின் முன்னுள்ள படிப்பினை என்பது விளைவுகளைத் தாண்டி, சூழ்நிலை மாற்றங்களுக்கிடையிலான கால அவசகாசத்தின் ஏற்ற இறக்கங்கள் ஆகும். குறுகிய கால இடைவெளியில் குறிப்பிடத்தக்க பூகோள/அமைப்புரீதியான மாற்றத்தை வரலாறு எதிர்கொண்டே வந்துள்ளது. இதன் தொடர்பிலேயே, வணிக நோக்கிலான உற்பத்தியை முன்னிலைப்படுத்திய, முதலாளித்துவ அமைப்பின் பலவீனங்களைக் குறுகிய காலத்தில் அடையாளப்படுத்திய கொரோனா பெருந்தொற்றை அணுக வேண்டி உள்ளது.

விரைவான பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு பின்னப்பட்ட வர்த்தக வழித்தடங்களின் ஊடாகவே நோய்ப்பரவலுக்கான சாத்தியக்கூறுகளும் வேகமும் அதிகரித்தன. கணிசமான வர்த்தகத் தொடர்புகளையும் கட்டமைப்புகளையும் கொண்ட வளர்ந்த நாடுகளைவிட வியட்நாம், கேரளா போன்ற அடுத்த நிலை பகுதிகளில் நோய்த்தொற்று கட்டுக்குள் இருந்தது. உற்பத்தி இலக்கக் குறியீடுகளின் பொருட்டு குறைக்கப்பட்ட பொதுச் சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு கட்டமைப்புகளுக்கான நிதி ஆதாரங்கள், நோய்ப்பரவலுக்கு எதிரான வல்லரசுகளின் நடவடிக்கைகளை வலுவிழக்கச் செய்திருந்தது.

பொருளாதாரத் ஸ்திரத்தன்மையை பாதிக்காத, காலநிலை நெருக்கடிகளுக்கெதிரான மெத்தனப் போக்கையே கொரோனாவிற்கு எதிராகவும் கடைப்பிடித்ததின் விளைவாக, கணிசமான உயிரிழப்புகளையும் பொருளாதார நெருக்கடியையும் ஒருசேர எதிர்கொள்ள நேரிட்டது. சூழலியல் செயற்பாட்டாளர்களின் எச்சரிக்கைகளின் நெடிய போராட்டங்களின் சாராம்சம் இத்தகைய நெருக்கடி நிலையே ஆகும்.

பொருளாதார அளவீடுகளைத் தாண்டி, உயிர்களின் மதிப்பை முன்னிலைக்கு இட்டுச் செல்லும், நெருக்கடி கால மனித இயல்பையே சூழலியல் இயக்கங்கள் ஆதார சக்தியாகக் கொள்ள வேண்டும். மாற்றங்களுக்கே உரித்தான தயக்கங்களோடும் எதிர்பார்ப்புகளோடும், தற்காலிகமாகவேனும் அரசியல் போக்கில் சுற்றுச்சூழல் முன்னிலைப்படுத்தப்படும். சுற்றுச்சூழல் நெருக்கடிகளுக்கெதிரான தற்காலிக சலனங்களைப் போலவே, குறுகிய காலத்தில் வரித்துக் கொண்ட நோய்த்தொற்றிற்கு எதிராக பாதுகாப்பு முன்னெடுப்புகளைப் புறந்தள்ளி, குடிமக்களின் பாதுகாப்பான வாழ்வாதாரத்திற்கு உத்திரவாதமளிக்கத் தவறிய அரசுகள் அன்றாடப் பணிச்சூழலுக்கு மக்களை இட்டுச் செல்கின்றன.

கருத்துக் கணிப்புகளின்படி பெருவாரியான மக்கள் தீர்க்கமான முன்னெடுப்புகளை எதிர்நோக்கி உள்ளனர். நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் முன்வைக்கும் சமூக இடைவெளி என்பதைத் தாண்டி, பாரபட்சங்களுக்கு இடமளிக்காத, அனைவருக்கும் பொதுவான, உளவியல்ரீதியாக இணக்கமான, செயல்திட்டங்களின் பொருட்டு, வாழ்வியல் முறை மாற்றங்களுக்கும் தயாராக இருக்கிறார்கள்.

நோய்பரவலுக்கான காரணிகளும் சாத்தியக்கூறுகளும் அறிவியலின் எல்லைக்குள் சுருக்கப்பட்டதற்குப் பிறகான காலகட்டத்தில், மனிதச் சமூகம் காலநிலைச் சமன்பாட்டை நோக்கிய முன்னெடுப்புகளைச் சுய உந்துதலுடன் மேற்கொள்ளும் என்பது அதீத கற்பனாவாதம். எனினும் ஹனா ஆரெண்டின் கூற்றுப்படி அரசியல் களம் முன்னுதாரணங்களற்ற செயல்திட்டங்களை முன்வைக்கக் கூடும். பரிச்சயமற்ற சூழல்கள் திறந்துவிட்டிருக்கின்ற புதிய சாத்தியக் கூறுகளுக்கான அரசியல்வெளியில் இருந்து, வளர்ச்சியின் சந்தடிகளற்ற, நீடித்த-நிலைத்த வாழ்வாதரத்தை இலக்காக கொண்ட இயக்கத்திற்கான ஆற்றலையும் நம்பிக்கையையும் முனைப்புடன் வார்த்தெடுத்தல் அவசியம்.

சமீபத்திய கருத்தரங்கில், “நேர்மறைச் சிந்தனையும் நம்பிக்கையும் இருவேறு விஷயங்கள். சாத்தியமற்ற சூழலிலும் போராடத் துணியும் எத்தனிப்பே நம்பிக்கை” என்றார் சூசன் பவுல்சன். நம்பிக்கையின் பிடிப்பு அதிகபட்சம் மீச்சிறு சாத்தியப்புள்ளியாக இருக்கலாம்.

ஜியார்கோஸ் கல்லீஸ் (Giorgos Kallis) ஒரு சூழலியல் பொருளாதார அறிஞர், அரசியல் சூழலியலாளர், மற்றும் பார்சிலோனா தன்னாட்சி பல்கலைக்கழகத்தின் ஆய்வு மற்றும் மேற்படிப்புக்கான கேட்டலானிய நிறுவனம் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் பேராசிரியர். Limits (ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக வெளியீடு, 2019) மற்றும் Degrowth (அஜெண்டா வெளியீடு, 2018) ஆகியவற்றின் ஆசிரியர்.

***

சமூகநீதி மேம்பாட்டிற்கான மூன்று அடிப்படை: மேக்ஸ் அய்ல்

கோவிட்-19 பரவலுக்குப் பிறகான சூழலியல் மேம்பாட்டு நடவடிக்கைகளின் பிரதான புள்ளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள மூன்று விஷயங்கள்: முதலாவதாக மேம்படுத்தப்பட்ட விவசாய நடைமுறைகள், இரண்டாவதாக சமச்சீர் சமூகத்திற்கானதாக இல்லை எனினும், மாற்றங்களுக்கான இயங்கு தளமாக உள்ள அரசாங்க/அரசியல் அமைப்புகள், இறுதியாக மூன்றாம் உலக நாடுகளும் சமரசமின்றி வரித்துக் கொள்ளத்தக்க சூழலியல் சீரமைப்பு நடவடிக்கைகள்.

நோய் உருவாக்கச் சங்கிலியின் முதல் கண்ணியில் இருக்கும் தொழில்முறை விவசாய நடைமுறைகளுக்கு மாற்றாக, சூழல்சார் (பசுமை) விவசாய முறைகள் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். உலகளாவிய சூழல்சார் (பசுமை) விவசாய இயக்கங்கள், விவசாயப் பணியாளர் இயக்கங்களின் தற்சார்பு விவசாய முன்னெடுப்புகளின் வாயிலாக, தொழில்முறை விவசாயத்தின் பிடியிலிருந்து நிலங்களை மீட்டு, லாப அளவீடுகளுக்கு அப்பாற்பட்ட, நீடித்த விவசாய உற்பத்தியை உறுதிசெய்யும் கட்டமைப்புகள் துரிதமாக நிறுவப்பட வேண்டும்.

சூழலியல் இயக்கங்களுடனும் தொழிலாளர் இயக்கங்களுடனும் பிணைந்து இயங்கும் விவசாயப் பணியாளர் நல அமைப்புகளின் குரல்கள், சூழலியல்வாதத்தின் பொருட்டான, ஒடுக்கப்பட்ட மக்களின் உன்னத அடையாளங்கள் ஆகும். இத்தகைய அமைப்புகளே அனைத்து தரப்பினருக்கான சுகாதாரமான உணவு உத்தரவாதம் அளிக்கக் கூடிய, நோய்பரவலுக்கு எதிரான, விவசாயக் கட்டமைப்புகள் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்க முடியும். இத்தகைய அமைப்புகளும் நடவடிக்கைகளுமே சமச்சீர் சமூக கட்டமைப்பை உறுதி செய்யக் கூடும்.

இரண்டாவதாக அரசாங்க அமைப்புகளின் தேவை. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளின் பகுதியாக அரசுகள் மேற்கொண்ட தேசிய அளவிலான பரிசோதனைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் விளைவாக, 90-களுக்குப் பிறகான காலகட்டத்தில் அரசுகள் மீது வைக்கப்பட்ட சமச்சீரான உற்பத்தி மற்றும் வளர்ச்சி குறைபாடுகள் சார்ந்த விமர்சனங்கள் தற்போது நீர்த்துவிட்டன.

சமூகத்தின் அனைத்துப் படிநிலைகளையும் உள்ளடக்கிய முன்னேற்ற நடவடிக்கைகள், பசுமைத் திட்டங்களுக்கான ஆதாரவளங்களை ஒதுக்கீடு செய்தல், அபரிமிதமான ஆற்றல் மற்றும் ஆடம்பர நுகர்வுகளைக் கட்டுக்குள் வைத்தல் போன்ற பரவலான நடவடிக்கைகளை அரசுகளே மேற்கொள்ள முடியும். அத்தகைய சூழலில், வளர்ந்த நாடுகளின் இந்நடவடிக்கைகளை வளச்சுரண்டல் புகார்களின் பேரில் இருட்டடிப்பு செய்யாமல், மூன்றாம் உலக நாடுகளில் இந்நடவடிக்கைகள் ஏற்படுத்திய தாக்கத்தை சூழலியல் இயக்கங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

இறுதியாக, சூழலியல் சீரமைப்பு நடவடிக்கைகள். கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால். ஆப்பிரிக்க நாடுகளில் எழுந்த கடன் ரத்து கோரிக்கைகள், சமூக மற்றும் ஜனநாயக அமைப்புகளின் குரல்களாக வளர்ந்த நாடுகளிலும் எதிரொலிக்கத் துவங்கிவிட்டிருந்தது. வளர்ச்சியை இலக்காக கொண்ட இந்தக் கோரிக்கைகள் மட்டுமே நீண்டகால நோக்கில் போதாது. சூழலியல் மற்றும் சமச்சீர் சமூகக் கட்டமைப்பை சிதைக்கக் கூடிய, சுற்றுச்சூழல் சுரண்டலுக்கும் சீரமைத்தலுக்கும் இடையிலான இடைவெளியைக் குறிக்கும் சூழலியல் சீர்கேட்டு அளவு குறைப்பை பிரதான இலக்காக கொள்ளுதல் அவசியம்.

சமூக ரீதியாகவும் சூழலியல் ரீதியாகவும் சமன்பாட்டை நிறுவ அரசு அமைப்புகளின் பங்களிப்பையும், அரசு நடவடிக்கைகளின் போதாமையையும் முன்னிறுத்திய மதிப்பீடுகளை முன்வைக்கும்போது, அவற்றின்முன் உள்ள குறைந்த அளவிலான வளங்களையும் வாய்ப்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தப் பின்னணியில் சீரமைப்பு நடவடிக்கைகள் – வளர்ந்த நாடுகளுக்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையில் – வளர்ச்சி சமன்பாட்டை எட்டும் களமாக இருக்கும். இந்த வகையில் நோய்ப் பெருந்தொற்று உலகளாவிய சமூக ரீதியான தொடர்புகளையும், அதன் பிண்ணனியில் இருக்க வேண்டிய சமநிலையின் அவசியத்தையும் முன்னிறுத்துகிறது.

மேக்ஸ் அய்ல் (Max Ajl), உணவு மற்றும் சுற்றுச்சூழல் இறையாண்மைக்கான துனிஷிய கண்காணிப்பு மையத்தின் உதவி ஆய்வாளர் மற்றும் வளைகுடாப் பகுதி விவசாய முன்னேற்ற ஆய்வாளர். இவரது A People’s Green New Deal நூல் ப்ளூட்டோ வெளியீடாக 2021இல் வரவிருக்கிறது.

***

அடிப்படை ஜனநாயகமும் எரிபொருள் பொருளாதாரமும்: பிரையன் தோக்கர்

மனித வரலாற்றின் மிக முக்கியமான காலகட்டம் இது. நோய்த்தொற்றுக்கு எதிரான ஆரம்பகட்ட தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் பரவலாக்கப்படும்வரை, ஜனநாயகத்திற்கு ஆதரவான குரல்கள் – ஹாங்காங் முதல் சான்டியாகோ வரையிலான – நகர வீதிகளை ஆக்கிரமித்திருந்தன.

காவல்துறையின் வரம்புமீறலுக்கும் நிறவெறிக்கும் எதிராக அமெரிக்க வீதிகளில் ஒலிக்கத் துவங்கிய குரல்களும் கிளர்ச்சியும், இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்த சமூக முடக்கம் உருவாக்கி இருந்த அழுத்தத்தின் தாக்கத்தில், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைக்கும் சர்வாதிகாரப் போக்கிற்கும் எதிரான உலகளாவிய எதிர்பொலிகளாக உருவெடுத்துவிட்டிருந்தது.

மனிதச் சமூகம் எதிர்நோக்கி இருந்த சுற்றுச்சூழல் சீர்கேட்டின் தீவிரமான விளைவுகளை மட்டுப்படுத்துவதாக நோய்ப்பரவல் தடுப்பு நடவடிக்கைகள் அமைந்திருந்தது. பொருளாதார முடக்கமும், நோயாளிகளின் எண்ணிக்கையும் சுற்றுச்சூழலுக்கு நியாயம் செய்வதாக மாறிவிட்டிருந்தது. வரம்புமீறிய அதிகார பலத்தைக் கொண்ட அரசு அமைப்புகள் – சுற்றுச்சூழல் சீர்கேடு உட்பட – எதிர்பாராத திரளான சமூக எதிர்வினைகளை எவ்வாறு அணுகக் கூடும் என்பதன் வெளிப்பாடு தான் நிறவெறிக்கு எதிரான அரசு அடக்குமுறைகள்.

மறுபுறம், பொதுமுடக்க காலகட்டத்தில் பெருநகர நீர்நிலைகள் மற்றும் காற்றின் தர மேம்பாடு, சுற்றுச்சூழல் சீர்கேட்டின் பிரதான காரணியான கரியமில வாயு வெளியேற்றம் ஏப்ரலில் 17% வரை குறைவு; ஆச்சரியமூட்டும் விதமாக நகர சாலைகளில் தனது ஆதிக்கத்தை கார்கள் இழந்துவிட்டிருந்தன.

பொதுமுடக்கத்தால் ஏற்பட்டிருந்த நுகர்வு வீழ்ச்சியாலும், கையாளுதல் செலவினங்கள் மற்றும் நெருக்கடிகளாலும் எரிபொருள் விலை எதிர்மறைக் குறியீடுகளை எட்டியிருந்தது. எரிபொருள் உறபத்தி மற்றும் நுகர்வு சார்ந்த ஒப்பந்தங்களும் பலனளிக்காத சூழலில், உலகளாவிய அளவில் எண்ணெய் தூர்ப்பன நிறுவனங்களின் பொருளாதார அஸ்திவாரத்தை அசைத்துப் பார்த்தது விலை வீழ்ச்சி. மறுபுறம் சில பெருநகரங்களில் பாதசாரிகளுக்கான சமூக இடைவெளியை உறுதிப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட போக்குவரத்துக் கட்டுப்பாடுகள், நீடித்த நகரக் கட்டமைப்புகளுக்கான சாத்தியக் கூறுகளை அடையாளம் காட்டி உள்ளது.

கற்பனைக்கப்பாற்பட்டதாகக் கருதப்பட்ட சமூக ஒழுங்குமுறைகளின் சாத்தியக்கூறுகளை அடையாளப்படுத்தி உள்ளது நோய்த்தொற்று காலகட்டம். நெருக்கடிகளுக்கு அடிபணியச் செய்யக்கூடிய, எதுவும் துரிதமாக மாறிவிடாது என்ற வீழ்ச்சி மனநிலையை மாற்ற மனிதச் சமூகம் முனைந்திருப்பதாக எரிசக்தி பொருளாதார வல்லுனர் சார்லஸ் கோமனாஃப் குறிப்பிடுகிறார். சமூகரீதியான இணக்கமும், பரஸ்பர உதவும் மனநிலையும் உலக அளவில் பெருகிவருகிறது.

நோய்பரவலின் வேகமும் தீவிரத்தன்மையைம் கட்டுக்குள் வைக்கப்பட்ட பிறகு, மேற்குறிப்பிட்ட நேர்மறைச் சமூக மாற்றங்களையும், அணுகுமுறைகளையும் தக்க வைக்கும் பொருட்டு, சமூகக் கட்டமைப்பில் நிர்வாகரீதியாகவும், செயல்பாட்டுரீதியாகவும் ஆழவேரூன்றிய, நிலைத்த கூட்டியக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

அரசு நிறுவனங்களால் சென்றடைய முடியாத கடைநிலை மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த, சமூகத்தின் விளிம்புநிலையிலிருந்து அனைத்து நிலைகளிலும் பரவலான ஒத்துழைப்பை உறுதிப்படுத்த வேண்டும். பொதுச் சுகாதார கட்டமைப்பை சிதைக்கக் கூடிய, மருந்து நிறுவனங்களின் இலாபத்தைப் பிரதானப்படுத்திய பார்வை மாற்றியமைக்கப்பட வேண்டும். முன்னுதாரணங்களற்ற அபாரமான ஒத்துழைப்பைச் சமூகத்தின் அனைத்து நிலைகளுக்கும் இடையில் நிறுவுவதன் மூலம், அதிகாரக்குவிப்பை நோக்கி நகரும் ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகளை மீட்டெடுக்க வேண்டும்.

“அசாத்தியமான முயற்சிகளை முன்னெடுக்காவிட்டால், கற்பனைக்கெட்டாத விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்” என்ற முர்ரே பூக்சின் (Murray Bookchin) உடைய நாற்பது வருட கூற்றின் பொருத்தப்பாட்டைத் தாண்டி, அதன் இன்றைய காலகட்டத்தின் நிதர்சனத் தேவை முக்கியமானது.

பிரையன் தோக்கரின் (Brian Tokar) சமீபத்திய பங்களிப்பு, Climate Justice and Community Renewal: Resistance and Grassroots Solutions; இணை ஆசிரியர் தம்ரா கில்பர்ட்சன் (வெளியீடு: Routledge, 2020)

***

நிபந்தனைகளுக்கு அப்பாற்பட்டு விலகி இருங்கள் அல்லது இணைந்திருங்கள்: ஹிலாரி மூர்

இனரீதியான சமத்துவத்தை மையப்படுத்திய சமூக அமைப்பைக் கட்டமைக்காமல் உலகைப் பாதுகாக்க முடியாது என்ற சிறுபான்மை மற்றும் அடித்தட்டு மக்கள் இயக்கங்களின் நீண்டகால கூற்றின் நிதர்சனங்களை நோக்கி பெரும்பான்மை சூழலியல் மற்றும் காலநிலை செயற்பாட்டாளர்கள் நகரத் துவங்கியுள்ளனர். நம் இயக்கத்தின் வரலாறு மெச்சத்தக்கதாக இல்லை. 1980-கள் வரையிலும்கூட இனப்பாகுபாட்டிற்கு எதிராக குறிப்பிடத்தக்க முன்னெடுப்புகளை வைக்காத நிலையில், 90-களில் நிகழ்ந்த பரவலான சமூக மாற்றமானது, சமுதாய வெற்றியுடன் மிகையாக அடையாளப்படுத்தப்பட்டது. 2010ஆம் ஆண்டு காலகட்டத்திற்குப் பிறகு நிர்வாகக் கட்டமைப்பில் சொற்பமாகவே, ஒடுக்கப்பட்ட மற்றும் பூர்வகுடிகளுக்கு, இடமளிக்கப்பட்ட நிலையில், இணக்கமற்ற பணிச்சூழல் காரணமாக குறிப்பிடத்தக்க அளவிலான மக்கள் வெளியேறினர். 2012ஆம் ஆண்டு வரையிலும்கூட தார்மீக அழுத்தத்தின் காரணமாகவே ட்ரேவான் மரணம் குறித்து பேச நேர்ந்திருந்தாலும், 2016ஆம் ஆண்டு ஆட்சி நிர்வாகத்தில் பரவலாக வெளிப்பட்ட ஆதிக்க தேசிய மனப்பாங்கிற்கு எதிரான நிலைப்பாட்டைப் பொது சமூகம் எடுத்தது.

சமூகநீதியை முன்னிறுத்திய தனிமனித முன்னோடிச் செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, இத்தகு நடவடிக்கைகளை காலம் தாழ்த்திய எதிர்வினையாக்கமாக கருத வேண்டியுள்ளது.

சமரசங்களுக்கிடமின்றி சமூக மற்றும் சூழலியல் சமத்துவத்தை நோக்கி செயல்பட இயலவில்லை எனில், விலகிவிடலாம் என்பதே சூழலியல் இயக்கங்களுக்கான தனிப்பட்ட அறிவுறுத்தல் ஆகும். நிர்வாகக் கட்டமைப்பின் அனைத்து மட்டங்களையும் சீர்திருத்திற்கு உட்படுத்தவில்லை எனில், காலப்போக்கில் இயக்கச் செயல்பாடுகள் நீர்த்துப் போகக் கூடும்.

கோவிட்-19 காரணமாகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூகப் பாதுகாப்பை முன்னிறுத்திய உலகளாவிய இயக்கங்களின் செயல்பாடுகளின் பின்னணியில், பரவலான சமூக மாற்றத்திற்கு உட்படுத்திக் கொள்ள தயாராக வேண்டும். ஆதிக்க சமூகங்களின் நலன்களை முன்னிலைப்படுத்திய பெரும்பான்மைவாத, வலதுசாரி மற்றும் தேசியவாத இயக்கக் கொள்கைகளின் அடிப்படையில், சூழலியல் மற்றும் சமூக நெருக்கடிகளை எதிர்கொள்வதிலும் மீட்டெடுக்கும் முயற்சிகளிலும் மந்தகதியிலான செயல்பாடுகள் ஏற்புடையதல்ல.

முன்னோடி சூழலியல் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து செயல்படுவதும், அதற்குத் தேவையான நிதி ஆதாரப் பெருக்கத்தின் மூலமாகவும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை உறுதிப்படுத்த வேண்டும். வல்லரசுகள் முதல் மூன்றாம் உலக நாடுகள் வரை பரவலாக, சூழலியல் மற்றும் காலநிலைச் சமன்பாட்டிற்கான குரல்களை வலுப்படுத்தும் விதமாக செயல்திட்ட வடிவங்களை மறுசீரமைப்புக்கு உட்படுத்த வேண்டும்.

இந்தப் பின்னணியில் ஆதிக்கவாத கொள்கைப் பிடிப்புள்ள தரப்பினர் இத்தகு செயல்பாட்டிற்கு வெளியில் இருப்பதால் குறிப்பிடத்தக்க பின்னடைவு இல்லையெனினும், அவர்களையும் உள்ளடக்கிய போராட்டமாக விடுக்கப்படும் அறைகூவல்கள் தார்மீக ரீதியான பொறுப்பை அவர்கள் மீது சுமத்தி, அறம்சார் சமூகத்தை விரும்பும் பெரும்பான்மை சமூகத்தினரை எளிதாக உள்ளடக்கி, ஒருங்கிணைந்த போராட்டம் முகம் அளிக்கும்.

ஹிலாரி மூர் (Hilary Moore), இனவெறி எதிர்ப்பு அரசியல் கல்வியாளர் மற்றும் எழுத்தாளர். ஜெர்மனியின் பெர்லினில் வசித்துவரும் இவர் Showing Up for Racial Justice அமைப்பிற்காகப் பணிபுரிகிறார். Burning Earth, Changing Europe: How the Racist Right Exploits the Climate Crisis-And What We Can Do About It (Rosa Luxembourg Stiftung, 2020) என்ற நூலைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்


மூலம்: ROAR Roundtable: COVID-19 and the climate crisis

தமிழில்: கோடீஸ்வரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.