தாண்டவம்


’போயிட்டு வந்திருதேன்’ என்று சத்தம் கொடுக்கும் போது ஈஸ்வரி வெளியே வந்து ‘நானும் உங்ககூட வந்து அவங்க ரெண்டு பேர் காலிலேயும் விழுந்து கும்பிடணும் தான். ஆனால் இப்படி வரமுடியாத நிலைமை ஆயிட்டுது. என்ன பண்ண?’ என்று வருத்தப்பட்டாள்.

‘நீ வராட்டா என்ன, நீ செஞ்சு கொடுத்த உளுந்த வடையும் சிறுபருப்புப் பாயசமும் தான் எங்க கூட வருதே’ என்ற தாண்டு மாமா கையில் பாயசத் தூக்கும் சம்படமும் இருந்தது. ‘கூடப் பிறந்த அக்கா செத்து மாசங் கழியதுக்குள்ள நீ எப்படி வெளிய வருவேன்னு அவங்களுக்குத் தெரியாதா என்ன. அதைப் பத்தி ஒண்ணும் இல்லை. இந்த வருஷம் கும்பிடாட்டா, அடுத்த வருஷம் கும்பிட்டால் போச்சு’, என்று மாமா நான் காரை எடுத்து வெளியே விடுவது வரை நடையிலேயே நின்றார். ஈஸ்வரி அங்கே தூண் பக்கத்தில் நின்றால் தான் முடியும். கதவைச் சாத்தி நாதாங்கி போட்டுவிட்டு உள்ளே போக வேண்டும்.

‘கல்யாணம் ஆகி அறுபத்தியோரு வருஷம் ஆச்சுண்ணா வெங்குப் பிள்ளைக்கு என் சமவயசு அல்லது என்னை விடக் கூடுதல் இருக்கணும். அஞ்சு பொட்டப் பிள்ளைகளையும் கட்டிக் கொடுத்து, ரெண்டு மகன்களுக்கு ரெண்டு மருமக்கமாரை எடுத்து, இத்தனை வயசுக்கு அம்மையப்பரா ரெண்டு பேரும் ஆயுசோட இருக்கணும்னா கொடுப்பினைதான். முன்னைப் பின்னை எனக்குத் தெரியாதுண்ணாலும் அதனால தான் நானும் உங்கூட வாரேன்னு சுந்தரத்துக்கிட்ட சொல்லீட்டேன்’ தாண்டு மாமா செருப்புக்குள் காலை நுழைத்துக் கொண்டே ஈஸ்வரியிடம் சொன்னார்.  தாண்டு மாமாவின் இரண்டு கால் சுண்டு விரல்களுக்கும் வெளியே இருந்த ஆறாவது விரல்களைப் பார்த்தபடியே ஈஸ்வரி இருந்தாள்.

‘அப்போ நாங்க வந்திருதோம். கதவைச் சாத்திக்கோ’ என்று வெளியே வரும் போது நான் கார் முன்கதவை எனக்கு இடது புறம் திறந்து வைத்திருந்தேன்.

‘தூக்குச் சட்டியைக் காலுக்கு அடியில வச்சுக்கிடட்டுமா. சாயாம இருக்கும்லா?’ என்று கேட்டுக்கொண்டே தாண்டு மாமா ஏறினார். ஒரு முறையில் தாத்தா. இன்னொரு முறையில் அவர் எனக்கு மாமா. ’நீ எப்படி வேணும்னாலும் கூப்பிடு. தாத்தான்னாலும் சரிதான். மாமான்னாலும் சரிதான். ஆட்சேபணையே கிடையாது. எப்படிக் கூப்பிட்டாலூம் சரி. எம் பேரு தாண்டவராயன் தான். அதில மாத்தம் இல்லை’ என்று சிரிப்பார்.

வயது எண்பது இருக்கலாம். வயதைக் கேட்டால் சொல்ல மாட்டார். ‘வயசைச் சொன்னா என்ன மெடலா கொடுக்கப் போறான்? அல்லது மாசா மாசம் பென்ஷனா இருக்கட்டும்னு எவனாவது மணியார்டர் அனுப்பப் போறானா? இன்னைக்கு முழிச்சா நேத்து நான் இருந்தது தெரியும். அதுக்காக நாளைக்கு இருப்பம்ணு சொல்ல முடியுமா?’ நாளைக்குக் கத்தப் போகிற காக்கா ‘தாண்டு ரெடியா?’ன்னு இன்னைக்கு செவ்வாய்க் கிழமை காலையில வந்து ஓட்டு மேல உக்காந்து என் கிட்டே கேக்கப் போகுதா?’ என்று சொல்லிவிடுவார்.

தாண்டு மாமாவுக்கு ஏறி உட்கார்ந்து கார்க் கதவைச் சாத்தியதும் ஈஸ்வரிக்குக் கை அசைக்கவேண்டும் என்ற விருப்பம் இருந்திருக்கிறது. ‘அடுப்படியில சோலி இருக்கு போல. உள்ளே போயிட்டா. ஆளைக் காணோம்’ என்று அவர் சொல்வதில் இருந்து நான் புரிந்துகொண்டேன். உட்கார்ந்தவர் கீழே உள்ள லீவரை விடுவித்து சீட்டைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டார். ‘வாங்கினதே வாங்கினே. சோப்பு டப்பாவிலே, கொஞ்சம் பெரிய சோப்பு டப்பாவா வாங்கியிருக்கப் படாதா? முட்டுத் தட்டுது பாரு’ என்று முதல் தடவை ஏறி உட்கார்ந்ததும் அவர் சொன்ன போது, நான் என்ன செய்து பின்னால் இருக்கையைத் தள்ளினேன் என்பதைக் கவனித்து அடுத்த தடவை அவரே செய்துகொண்டார்.

‘நீங்க ஓட்டுவீங்க. நான் பக்கத்தில உக்காந்துக்கிட்டு வரலாம்ணுல்லா நினைச்சேன்’, வண்டியின் எஞ்சினை முடுக்கின அதிர்வில், நேற்று சாமி படத்தின் முன்னால் வைத்த பன்னீர்ப் பூக்கள் அதிர்வதைப் பார்த்துக் கொண்டே சொன்னேன். அவரையும் அந்தப் பூக்களின் நீண்ட காம்புகள் நகர்வது தொந்தரவு செய்திருக்கவேண்டும்.

‘ரெண்டும் துடியாத் துடிக்கே’ என்று அந்தப் பூக்களை நகர்த்தி வைத்தார். நான் சொன்னதை அவர் கேட்கவில்லை என்று நினைத்தேன். முழுதாக அந்தப் பூக்களிலிருந்து விரல்களை அப்புறப் படுத்தியபின் பழைய முகத்துடன் ‘உங்களுக்கு எல்லாம் கிண்டலாப் போச்சு’ என்று என்னைப் பார்த்தார்.

தாண்டு மாமா குரலும், கயத்தாத்துச் சித்தப்பா குரலும் ஒன்று போல இருக்கும். அது ஆண்குரல் பெண்குரலோடு சேர்த்தியில்லை. தொண்டைக்குழிக்கும் நாசிக்கும் இடையில் இருந்து வருகிறது அது. நிரம்ப நிரம்பத் தண்ணீர் கிடக்கும் ஆழக் கிணற்றில் வெயில் நேரத்தில் ஒரு சருகு விழும்போது அலை அலையாக நிழல் அசையுமே அப்படி இருக்கும். சந்தோஷமான நேரங்களில் அல்லது கெட்ட வார்த்தை சொல்லி மாமா யாரையாவது கேலியாக முதுகில் அடிக்கையில் அந்தக் குரல் ரொம்ப நன்றாக இருக்கும்.

ராதா அத்தை தவறிப் போவதற்கு முன் தாண்டு மாமா அத்தையைக் கூப்பிடுவதை என் சின்ன வயதில் கேட்டிருக்கிறேன். அத்தை பெயரைச் சொல்லி மாமா கூப்பிட்டுக் கேட்டதே இல்லை. ‘ஏட்டீ’ என்று தான் கூப்பிடுவார். மெதுவாகக் கூப்பிடுவதே கிடையாது. சத்தமாகத்தான் இருக்கும். அந்தச் சின்ன அழைப்பை ஒரு குழறல் போல அவர் உச்சரிக்கையில் அவ்வளவு பிரியம் தெரியும். காணாமல் போய்க் கிடைப்பது மாதிரி இருக்கிற அந்தக் குரலைப் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது.

‘உங்களைக் கிண்டல் பண்ண முடியுமா மாமா? நீங்க தான் ‘நான் ஓட்டுதேன், நான் ஓட்டுதேன்’னு ஆசப்படுவீங்க. அதான்.’  நான் வேண்டும் என்றே அப்படிச் சொன்னேன். தாண்டு மாமா ஏதாவது பெண்கள் பேச்சை எடுத்துப் பச்சையாக. ‘நான் ஓட்டுனதைப் பத்தி உனக்கு என்ன தெரியும்?’ என்று சொல்வார், சொல்ல வேண்டும் என நினைத்தேன்.

மாமா இங்கே வந்த பத்து நாட்களில், கார் வாங்கியிருக்கிறேன் என்று தெரிந்ததும், மறுநாள் உதயத்தில் இருந்து ‘எனக்குச் சொல்லிக்கொடு டே. ரெண்டு தடவை பக்கத்தில இருந்து இன்னின்னது இப்படி இப்படிண்ணு சொல்லு போதும். மூணாந்தடவை ஒத்தையில நானே ஒரு ரவுண்டு உன்னைக் கூட்டிக்கிட்டுப் போயிருதேன்’ என்று கேட்டுக்கொண்டே இருந்தார். அவருடைய வயது ஒன்றுதான் யோசனையாக இருந்தது. மற்றப்படி அவர் சொன்னால் செய்யக் கூடியவரே.

ஆழ்வார்குறிச்சியில் இருந்து அம்பாசமுத்திரம் வரைக்கும் பத்து வருஷத்திற்கு முன் அவர் பொட்டல் புதூர் யானைமேல் தனியாக வந்திருக்கிறார் என்பது உண்மைதான். எவ்வளவு தூரத்திற்கு தாண்டு மாமா அவருடைய பிராயத்தில் ஹார்வி மில் துரையின் குதிரையில் ஏறி மணிமுத்தாறில் இருந்து மாஞ்சோலை குதிரை முக்கு வரை போய்விட்டார் என்பது உண்மை என்பதைச் சொல்ல முடியாது. அவரிடம் கேட்டால் ‘இதில பொய் சொல்லுததுக்கு என்னடே இருக்கு?’ என்று மட்டும் பதில் சொல்வார். இதற்கு முன்பு நான் வைத்திருந்த ராஜ்தூத் மோட்டார் சைக்கிளை வேல் முருகன் ஒர்க் ஷாப்பில் இருந்து ஒருதடவை அவரே ஓட்டிக்கொண்டு போய்க் காட்டி, அவருடைய ஊர் பால் சொசைட்டிக்காரர் ஒருவரிடம் ’பால் அடிக்க’ உபயோகமாக இருக்கும் என்று சரியான விலைக்கு விற்றுக் கொடுத்தார்.

‘சரி. இந்தானைக்கு நீ கதவைத் திறந்து இறங்கி இங்கே வந்து உக்காரு. என் கையில சாவியைக் கொடு நான் ஓட்டுதனா இல்லையா பார்ப்போம்’ என்றார். என்ன இருந்தாலும் அந்தக் காலத்து ஆள் இல்லையா. கோபப்படுவதே தெரியாமல் சிரிப்போடு சிரிப்பாக முகத்தை வைத்தபடி அவருக்குச் சொல்ல முடிந்தது. நான் சமாதானமாக, ‘நான் வண்டியை ஸ்டார்ட் பண்ணீட்டேன். இப்ப நான் ஓட்டுதேன். வரும் போது நீங்க ஓட்டுங்க. வெங்குப் பெரியப்பா வீட்டில் இறங்கும் போதே சாவியை உங்ககிட்டே தந்திருதேன். சரியா?’ என்று ஸ்டீயரிங்கில் இருந்து இடது கையை எடுத்து அவர் தோளில் வைத்தேன்.

‘இப்ப என்னடே என்கிட்ட மிஸ்டேக்? ஃபஸ்ட் கியர் போட்டு, க்ளட்சில இருந்து காலை பைய்ய எடுத்து ஆக்ஸிலேட்டர் கொடுக்கதுக்குள்ள வண்டி ஆஃப் ஆயிருது. நீ பார்க்க, உன் கண் எதிரிலேயே ரெண்டு மூணு தடவை அப்படி ஆயிப் போச்சு. அவ்வளவுதானே. நீ சொல்லுத மாதிரியே அங்கே இருந்து வீட்டுக்கு வரும் போது பாரு. வண்டி நிக்குதா. பறக்குதாண்ணு நீயே சொல்லுவே’ என்றார். தாண்டு மாமாவின் குரல் அவருடைய வழக்கமான கீச்சுத் தன்மையைவிட எங்கோ ஒரு இடத்தில் வலுவடைந்த மாதிரி இருந்தது. வாளி நிரம்ப இறைத்த தண்ணீர், வாளியில் இருந்து தளும்பி தளப் என்று கிணற்றுக்குள் சிந்துவது அது.

நான் தாண்டு மாமாவைப் போலவே பேசுகிற கயத்தாத்துச் சித்தப்பா முகத்தை நினைவு படுத்திக்கொண்டேன். அவருடைய துவரை துவரையாக அம்மன் தழும்பு விழுந்த முகத்தில் நிரம்பியிருக்கும் சாந்தம் இவருக்கு வர வேண்டும் என்று நினைத்தேன். ‘போகப் பத்துப் பதினஞ்சு நிமிஷம். அங்கே ஒரு அரைமணி நேரம். அல்லது முன்னே பின்னே. உடனே புறப்பட்டிற வேண்டியதுதான்’ என்று ரோட்டைப் பார்த்துக்கொண்டே சொன்னேன். இன்னைக்கு லீவு நாள் தான். பெரிய ட்ராஃப்ஃபிக் எல்லாம் ஒண்ணும் இருக்காது. தாராளமா நீங்க ஓட்டிக்கிட்டு வரலாம்’ என்று அவரை மெதுவாக உரையாடலில் வலது பக்கத்தில் டிரைவர் சீட்டில் உட்காரவைக்க முயன்றேன்.

‘என்னத்துக்குப் பேச்சை மாத்தணும். நான் என்ன சின்னப் பிள்ளையா? ‘என்று கண்ணாடிக்கு முன்னால் இருந்த பாதையைப் பார்த்துக்கொண்டே வந்தார். வலது பக்கம் திரும்புகையில் வேகம் குறைத்து. இரண்டாம் கியருக்கு வந்து பாதிவண்டி இடது பக்கம் போனதும் ஸ்டீயரிங்கை வலது பக்கம் சுழற்றி ஹார்ன் கொடுப்பதையே கவனித்தார். இண்டிகேட்டர் சத்தம் அவருக்குப் பிடித்திருந்தது. அது அடங்கக் காத்திருந்தவர், என்னைப் பார்க்காமல் முன்பக்கம் பார்த்துக்கொண்டே சொல்ல ஆரம்பித்தார்.

‘உனக்குத் தெரியாது சுந்தரம். நான் வெளிக்குத் தெரியாமல் கார் ஓட்டப் படிச்சு ரெண்டு மூணு நாள் ஆயிட்டுது. எல்லாம் மனசுக்குள்ளேயே ஆக்கும். தூக்கத்திலேயும் முழிப்பிலேயும் எத்தனை தடவை கியர் போட்டு, எத்தனை தடவை நின்னு, எத்தனை தடவை ஸ்டார்ட் பண்ணியிருப்பேன் தெரியுமா? அது கணக்குக்கு விடை வருத மாதிரி.. எப்ப வருதுன்னு தெரியாம டக்குன்னு வந்திட்டுது. எப்போ தண்ணி உன்னைச் சரின்னு ஏத்துக்கிட்டுது. எப்போ உன்னை நீச்சல் அடிக்க விட்டுதுன்னு உனக்குச் சொல்லத் தெரியுமா? அது ஒரு முகூர்த்தம். அப்படித்தான் சொல்லணும்.

அதே மாதிரி உன் வண்டியும் என்னைச் சரின்னு ஏத்துக்கிட்டுது. ஓட்டீட்டுப் போன்னு சொல்லீட்டுது. சொல்லப் போனால் நான் பாவூர்ல உங்க அத்தை வீடு இருக்கித நடுத்தெரு வரைக்கும் இதை ஓட்டிக்கிட்டுப் போயிட்டு வந்துட்டேன்’ என்று சொன்னார். அவர் குரல் கமறியது. ‘ஏட்டீ’ என்று அவர் அத்தையைக் கூப்பிடுகிற குரல் கேட்டது. தாண்டு மாமாவின் ராதா அத்தை வீட்டுக்கு நானும் போயிருக்கிறேன். நாங்கள் போயிருந்த அன்றைக்கு ஒரு பசு ஈன்று இருந்தது. நான் அந்தக் கன்றுக்குட்டியையும் அதனுடைய தொப்புள் கொடியையும் பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறேன்.

தாண்டு மாமா அந்தக் கன்றுகுட்டி மாதிரிதான் பக்கத்தில் இருந்தார். அதே கண்களும் இமையும் தான். வீட்டிலிருந்து புறப்படும் போது இருந்ததை விடவும் தாண்டுமாமாவின் கண்கள் பருத்துவிட்டது போலவும் ரெப்பை மயிர்கள் நீண்டுவிட்டதாகவும் இருந்தது.

’இன்னும் அஞ்சு நிமிஷம் தான் மாமா. வெங்குப் பெரியப்பா வீடு வந்திரும்” என்று நான் சொல்லும் போது, ஒரு பெரிய வாகை மரம் எச்சமும் நிழலுமாகப் படர்ந்து கிடந்தது. குஞ்சம் குஞ்சமாகப் பூக்கள். ஒன்று உதிர்ந்து தாண்டு மாமாவுக்கு முன் கண்ணாடியின் வெளிப்பக்கம் அப்பியது. அடுத்து அடுத்தும் இரண்டு மூன்று வாகை மரங்கள். இந்த அளவு பெரியதில்லை. ஒன்றில் மரம் முழுவதும் நெற்று நெற்றாகத் தொங்கின. கிளிச்சத்தம் கேட்டது. தாண்டு மாமா இந்த இடத்தில் வேறு ஒருவராக மாறிவிட்டார். அவர் குரலில் அப்படி ஒரு மிருது வந்து விட்டது.

‘ஆச்சரியமா இருக்குடே. நல்ல சென்டரா இருக்கிற ஒரு டவுணுக்குள்ள இப்படி வாகை நெத்தும் கிளிச் சத்தமுமா இருக்கதைப் பார்க்க என்னமோ பண்ணுது. மருதுவும் வாகையும் செழிப்புக்கு அடையாளம் தெரியுமா. தேசாந்திரம் போறவங்க மருத மரத்தை ஒட்டிக் கண்ணை மூடிக்கிட்டுப் போனா அப்படியே ஒரு ஆத்துப் பக்கத்துல போயிச் சேர்ந்துரலாம். அதே மாதிரிதான் வாகையும். பத்து கிளி இருபது கிளி படை படையா உக்காந்து எந்திரிச்சுப் போகிற மரம்னா சும்மாவா?’

தாண்டு மாமா கொஞ்சம் ஒருவித மௌனத்தில் இருந்த அந்த இரண்டு மூன்று நிமிடங்களுக்குள் வெங்குப் பெரியப்பா வீடு வந்துவிட்டது.

‘இறங்குவமா?’ என்று கேட்டேன். மாமா தூக்குச் சட்டியையும் சம்புடம் இருந்த பையையும் எடுத்துக்கொண்டு இறங்கி வெளியே நின்றார். ‘லாக் பண்ணீட்டியா?’ என்றார். அந்தச் சத்தமும் வெளிச்சமும் கேட்டதும். ‘இதைக் கொஞ்சம் பிடி’ என்று தூக்குச்சட்டியை என் கையில் கொடுத்தவர். கார் பானெட் பக்கம் எக்கிக் குனிந்து கண்ணாடியை ஒட்டிக் கிடந்த வாகைப் பூவை எடுத்து சட்டைப் பையில் வைத்துக்கொண்டார்.

எனக்கு வெங்குப் பெரியப்பா வீட்டு மரக்கதவு ரொம்பப் பிடிக்கும். அகலம் அகலமான மரச் சட்டங்களால் செய்யப்பட்ட அந்த இரட்டைக் கதவுகளில் ஒரு மிகப் பழைய காலத்தின் பச்சைப் பெயிண்ட் வெயில் தின்ற நிறத்துடன் மிச்சம் இருக்கும். தச்சன் எப்போதோ இழைத்த வழவழப்பு எல்லாம் போய்க் கீறலும் திரடும் விழுந்து, கீல்கள் இறங்கின தொய்வு. இரண்டு கதவுகளையும் இணைத்திருக்கும் உச்சியில் கனத்த இரும்பு ’பானா’க் கொண்டியை அகற்றுகையில் அடுத்த பக்கத்துக் கதவின் மரத்தின் மேல் விழுகிற அந்த சத்தம். அது விழுந்து விழுந்து உண்டாக்கிய ஈயம் நிறப் பள்ளம்.

தாண்டு மாமா என்னை விடவும் அந்தக் கதவுகளை விரும்பியவர் போல, நாங்கள் உள்ளே போனதும், அந்தக் கொண்டியை இட்டார். ’நாட்பட்ட மரம். நம்மளைப் போல தோல் எல்லாம் சுருங்கி வயசாளியா தெரியுது’ என்றார், கீழே வாசலில் இரண்டு முக்கோணத்தைப் பட்டையாக மாற்றிச் செருகின மாதிரி ஒரு நட்சத்திரக் கோலம். ‘சிம்ப்ளா இருக்கு’ என்று சொல்லியவர், கோலப்பொடி மினுக்கத்துக்குத் தக்க ஒரு கோணத்துக்குத் தன்னை நகர்த்திக்கொண்டார்.

உள்ளே இருந்து புல்புல்தாரா வாசிக்கிற சத்தம் கேட்டது. ‘யாருடே?’ என்று சைகையில் தாண்டு மாமா கேட்டார். நான் ‘வெங்குப் பெரியப்பா தான்’ என்று தணிந்த குரலில் சொன்னேன். ‘அப்படி ஒண்ணு உலகத்தில இருக்குங்கிறதே எனக்கு எல்லாம் மறந்து போச்சு. பேரைப் பாரேன். புல்புல்தாரா” என்று சொன்னவர் அவர் பக்கமாக வளைந்து கிடந்த மாதுளம் பூவையும் பிஞ்சையும் இன்னும் தணித்துப் பார்த்துவிட்டுக் கையை எடுத்ததில் அது வேகமாகப் பழைய இடத்துக்குத் திரும்பியது.

‘யே. அந்தக் காலத்துப் பாட்டுல்லா. சட்டுன்னு ஞாபகம் வரமாட்டெங்கே’ என்று தாண்டுமாமா சொல்லவும். ‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ? மாமா’ என்று நான் சொன்னதும், ‘அது எப்படிடே உனக்குத் தெரியும். அது எங்க காலத்துப் பாட்டுல்லா?’ என்று ஆச்சர்யப்பட்டார்.

‘பெரியப்பாவுக்குப் பிடிச்ச பாட்டு. முன்னாலயே அவங்க வாசிச்சு நான் கேட்டிருக்கேன்’ என்றேன். ’பாம்பு மாதிரியில்லா சுத்தி சுத்தி லலிதா ஆடுவா’ என்று என்னிடம் சொன்னவர், ‘கல்யாணம் ஆகி, எத்தனை வருஷம் ஆச்சுன்னு சொன்னே, அறுவத்தி மூணா?! லலிதான்னா பின்னே என்ன சும்மாவா?’ என்று சந்தோஷமாகச் சிரித்தார். ‘பாட்டு முடிஞ்சு ஜெமினி பக்கத்துல வந்து லலிதா உக்காந்திருப்பா. நாம உள்ளே போவோம்’ என்று செருப்பைக் கழற்றினார்.

‘பெரியப்பா’ என்று சத்தம் கொடுத்துக்கொண்டே உள்ளே போனேன். தாண்டு மாமா கூடவே வந்தார். முதல் சத்தத்திலே வெங்குப் பெரியப்பா எழுந்திருந்து வந்துவிட்டார். சட்டை போடவில்லை. மைனர் செயின் நெஞ்சில் கிடந்தது. தொந்தியைப் பொத்திக் கட்டியிருந்த சாரம் கரண்டைக்கு மேல் நின்றது. இரண்டு கைகளையும் கூப்பி, ‘வணக்க்கம்’ என்று அழுத்தமாகச் சொல்லி. ‘வாங்க சுந்தரம்’. என்றார்’. வலது கையில் தங்கக் காப்பும் சிவப்பாக இப்போது எல்லோரும் கட்டிக்கொள்ளும் சாமிக் கயிறும்.

‘இது தாண்டு மாமா.’ என்று சொன்னதும் மறுபடியும் மாமாவைப் பார்த்து ‘வணக்க்கம். வாழ்க வளமுடன்’ என்று சொல்லிவிட்டு நாற்காலியில் கிடந்த தேங்காய்ப் பூத்துண்டை எடுத்து மேலே போட்டுக்கொண்டார். தாண்டு மாமாவுக்கு மரியாதை செய்வது போல உட்காரச் சொன்னார். அந்த இரண்டு பிரம்பு நாற்காலிகளும் சாயம் போன பச்சை நிறத்தில் தான் இருந்தன.

தாண்டு மாமா எந்தத் தயக்கமும் இல்லாமல் உரையாடலை ஒரு நாடக பாவனையில் துவக்கிவிட்டார். ‘நீங்க லேசா உக்காரச் சொல்லியாச்சு. நான் ஏதாவது பூச்சி, பொட்டு ஏதாவது சுவர் ஓரமா நெளிஞ்சுக்கிட்டுக் கிடக்கான்னு பார்த்துட்டுல்லா உக்கார வேண்டியது இருக்கு. பாட்டு முடிஞ்சு போச்சு சரிதான். இன்னும் மத்தது படத்தை சுருக்கியிருக்குமா தெரியலையே’ என்றார்.

வெங்குப் பெரியப்பா, ‘ யே.. யப்பா’ என்று அவரே சத்தமாகக் கையைத் தட்டிக்கொண்டு சிரித்தார். துண்டை அகற்றி மறுபடி போர்த்திக் கொண்டார். தலையணையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு, ‘அப்பமே வந்துட்டேளா. நான் கவனிக்கவே இல்லை’ என்று சொன்னார்.

வெங்குப் பெரியப்பாவையே அளந்து எடுப்பது போலப் பார்த்துக்கொண்டே இருந்த தாண்டு மாமா, பேச ஆரம்பித்தார். ஒடுங்கின மாதிரி இருக்கும் அவர் குரல் விரிந்து ஒலித்தது. ‘நல்ல வேளை நீங்களும் எங்களைப் பார்க்கலை. நாங்களும் உங்களைப் பார்க்கலை. இப்படிப் பார்க்கிறதை விட அப்படி விசுவரூபமாப் பார்த்தது தான் சரி.  இப்போ பார்க்கதுக்கு எனக்குத் தோளுக்கு இருக்கிற உங்க உயரம், வாசிப்பைக் கேக்கும் போது தேர் உச்சியில ஒரு கொடி படபடங்குமே அங்கே இல்லா இருந்தது’

தாண்டு மாமா கலகலப்பாகியிருந்தார். ’அடுத்தாப்லே விடாம நீங்க ரெண்டு மூணு வாசிச்சிருந்தா நடைக்கு அந்தப் பக்கம் நிண்ணு கண்ணை மூடிக் கேட்டுட்டு அப்படியே போயிருப்போம். ஈஸ்வரி கொடுத்துவிட்ட பாயாசத் தூக்கும் பலகாரப் பையும் கையில இருக்கப் போயி, உள்ளே வர வேண்டியது ஆயிட்டுது. உங்க ரெண்டுபேருக்கும் இன்னைக்குன்னு ஸ்பெஷலா செஞ்சு கொடுத்தது வம்பாப் போயிரக் கூடாதுல்லா?’

வெங்குப் பெரியப்பா அடுக்களையைப் பார்த்துத் திரும்பி, ‘விரதம், விரதம்’ என்று சத்தமாகக் கூப்பிட்டார். ‘வர வர சுத்தமாக் காது கேட்கமாட்டேங்குடே உங்க பெரியம்மைக்கு’ என்று என்னிடம் சொன்னார்.

தாண்டு மாமா, ‘வயசுண்ணு ஒண்ணு இருக்குல்லா’ என்று பொதுவாகச் சொன்னார்.

‘இத்தனைக்கும் என்ன விட ஆறு வயசு அனவிரதம் இளமை. நான் மூப்பு. எனக்கு இப்போ எம்பத்தி மூணு நடக்கு. அவளுக்கு ஐப்பசி வந்தா எழுவத்தி எட்டு வரும்’ என்றார். ‘ரெண்டு முட்டும் ஆப்பரேசன் பண்ணியாச்சு. வாக்கர் வச்சுக்கிட்டுதான் நடமாடுதா. ஆனா அதைத் தவிர ஒரு குறையும் இல்லை. ஏழும் ஏழு திக்கில நல்லா இருக்கு. எட்டாமதுல நாங்க ரெண்டு பேரும் இங்கே எங்க பாட்டில இருக்கோம்.’ வெங்குப் பெரியப்பாவுக்குத் தாண்டு மாமா போல ஒரு சம வயது ஆள் பேசுவதற்கு வேண்டியது இருந்தது போல. பாதி மூடிப் பாதி திறந்த மாதிரிப் பேச ஆரம்பித்திருந்தார்.

‘பெரியம்மை’ என்று சத்தம் கொடுத்தவாறே நான் உள்ளே போக எழுந்தேன். தாண்டு மாமா தன் கையில் வைத்திருந்த பையை நீட்டி, ‘யே ஐயா. சுந்தரம். இதையும் கொண்டு போயிரு’ என்னைக் கூப்பிட்டுச் சொன்னார். வெங்குப் பெரியப்பா முகத்துக்குக்குப் பக்கம் பையைக் கொண்டு போய் வாசம் காட்டி, ’உங்களுக்குப் பாயாசம். அனவிரதம் பெரியம்மைக்கு வடை’ என்றதும் அதை எல்லாம் தாண்டி அவர், ‘நாங்க ரெண்டு பேரும் நேரில வந்து துக்கம் கேட்க முடியாமல் போச்சு. அதைக்கூட அந்தப் பிள்ளை யோசிக்கலை பாரு. தேதியை ஞாவுகம் வச்சுக்கிட்டு என்னத்தை எல்லாமோ பண்ணிக் கொடுத்திருக்கு’ என்று ஈஸ்வரியின் பெயரைச் சொல்லாமல் கலங்கினார்.

எனக்கு வெங்குப் பெரியப்பா முகத்தை அப்படிப் பார்க்க முடியவில்லை. தாண்டு மாமா எழுந்திருந்து போய் புறங்கை கட்டிக்கொண்டு பட்டாசலில் மாட்டியிருந்த படங்களைப் பார்த்துக்கொண்டு நின்றார்.

பின்னாலேயே போன வெங்குப் பெரியப்பா, ‘நீங்க பார்த்துக்கிட்டு இருக்கதுதான் கல்யாணத்துக்கு அப்புறம் பொண்ணு மாப்பிளையுமா நாங்க முதல் முதல்ல எடுத்துக்கிட்ட போட்டோ. கல்பனா ஸ்டுடியோல எடுத்தோம். உங்களுக்குத் தெரியுதோ என்னவோ. சேலத்துல வேலை பார்க்கும் போது ஒருத்தர் இதைப் பார்த்தவுடனே, ‘அவங்க கேரீடா இருந்தாங்களோன்னு’ கரெக்டா கேட்டாங்க. போட்டோ எடுக்கும் போது மூத்தவ கோமதியை உண்டாகியிருந்தா. ரெண்டு மாசம்’.

தாண்டு மாமா அந்த போட்டோவை ரொம்ப நேரம் பார்த்துக்கொண்டே நின்றார். ‘வங்கி, ஒட்டியாணம் எல்லாம் போட்டிருக்காங்க’ என்றார். வேறு எங்கேயும் பார்வையை அகற்றவில்லை.

‘அந்த மூணாவது படத்தில சைடு போஸ்ல இருக்கதும் அவதான். மூக்கு அவளுக்கு நல்லா கத்தி மாதிரி இருக்குமா. படம் வாய்ப்பா அமைஞ்சிட்டுது’ வெங்குப் பெரியப்பா மாமா பக்கத்தில் நின்று அண்ணாந்து பார்த்துச் சொன்னார். மாமா பெரியப்பா பக்கம் திரும்பி ‘சவ்வாது வாசம் வருது’ என்றார். பெரியப்பா கீழே வெட்கப்படுவது போலக் குனிந்துகொண்டே, ‘நாந்தான் போட்டிருக்கேன். ரொம்ப காலப் பழக்கம்.’ என்றார்.

தாண்டு மாமா, ’அவங்களுக்கு மூக்குத்தி நல்லா இருக்கு. ’ஓவல் சைஸ் மவுண்ட்டில் ஒட்டி ஃப்ரேம் போட்டது அதை விட அழகு’ என்றார். ‘ஆமா, நான் கூட என்னமோ ஒண்ணு இதில நல்லா இருக்கேன்னு நினைச்சேன்’ வெங்குப் பெரியப்பா ஆமோதித்தார்.

‘பெரியம்மை உங்க படத்தைப் பார்த்து தான் ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்காங்க’ நான் அடுக்களையில் கொண்டு போய் பாத்திரங்களை வைத்துவிட்டுப் பெரியம்மையைக் கூப்பிட்டுக்கொண்டு வந்தேன்.

பெரியம்மை நெய் உருண்டை பிடித்து வைத்திருந்தாள். மகிழம்பூ பணியாரமும் அவளே சுட்டது தானாம். எள்ளுருண்டை பிடித்திருந்தாளாம். காலியாகிவிட்டதாம். நான் வருவேன் என்று தெரிந்தால் ’கூட நாலு எண்ணம் பிடிச்சிருந்திருப்பாளாம்.

பேச்சோடு பேச்சாக, ’வயசு குறைச்சல்லாத் தானே இருக்கும். என்ன செஞ்சுது அவளுக்கு?’ என்று ஈஸ்வரி அக்கா இறந்த துக்கம் விசாரித்தாள். ‘பிள்ளைகள் இரண்டு பேரையும் ஹாஸ்டலில் விட்டுட்டு ஆச்சியும் ஐயரும் மாத்திரம் இங்கே இருக்கேளாக்கும்’ என்று சடைத்துக் கொண்டாள். ‘கார் வாங்கியிருக்கியாமே. யாரோ சொன்னங்க’ என்று அதையும் விசாரித்தாள். பெரியம்மை சொன்னது எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டேனே தவிர, நான் சொன்னது எதுவும் அவளுக்குக் கேட்கவில்லை.

அவளே எலுமிச்சம் பழம் இருக்கும் இடத்தையும் கத்தி இருக்கிற இடத்தையும் காட்டி நறுக்கச் சொன்னாள். நாட்டுச் சர்க்கரை எவ்வளவு போடவேண்டும் என அளவு சொன்னாள். ‘ஒரு சிட்டிகை உப்புப் போட்டா நல்லா இருக்கும். எடுத்துக் கொடு. நீ கூடக் குறையப் போட்டுருவ. நான் போடுதேன்’ என்று நுள்ளிப் போட்டாள். ‘கொட்டையை வடிகட்டாண்டாம். அதிலேயே கிடக்கட்டும். அதுக்கு என்ன ருசியா இருக்குண்ணு தோணும். அதுல நாலு கிடந்தாத் தான் ருசி’ என்று சொல்லி மேல் தட்டில் வைத்திருந்த கண்ணாடி கிளாஸ்களில் நான்கை எடுத்துக் கொள்ள சொன்னாள். ‘எல்லாம் அவாள் மைனாரா இருந்த காலத்தில வாங்கி வச்சது’ என்று பெருவிரலை உதட்டுக்குச் சரித்துக் காட்டும் போது அனவிரதம் பெரியம்மை அவ்வளவு அழகாக இருந்தாள். ’பெரியம்மா, உன்னைக் கொஞ்சணும் போல இருக்கு’ என்று சொல்லி அவள் கன்னத்தைத் தொட்டு முத்திக் கொண்டேன்.

நடைவண்டி ஓட்டுவது போல பெரியம்மை வாக்கரை ஒவ்வொரு எட்டுக்கும் முன்னால் நகர்த்திக்கொண்டே வந்தாள். எடை குறைவாகவும் அவளுடைய உயரத்துக்குச் சரியாகவும் இருந்ததால் அந்த நகர்வில் எந்தக் கூனல் குறுகலும் இல்லை. அந்தந்தப் பறவைகளுக்கு உரிய நடையில் அது அது நடக்குமே. அப்படித்தான் இருந்தது. மாம்பழக் கலர் பட்டு பாதத்துக்கும் தரைக்கும் எந்த இடைஞ்சலும் இல்லாமல் விசிறியது. கை வளையல்கள் கூட வாக்கரைத் தூக்கிவைக்கும் போது பாதி சரிந்து நின்றுகொண்டன. அதை விடப் பெரியம்மை சொல்லிக்கொண்டது நன்றாக இருந்தது. தனக்குத் தன் காலில் நடக்க முடியவில்லை என்ற கவலையே அவளுக்கு இல்லை. ‘காக்கா, குருவி, மைனாவுக்கு எல்லாம் ரெண்டு காலையும் கொடுத்து கூட ரெண்டு ரெக்கையும் கொடுத்திருக்காம் லா’ என்று சொல்லிக்கொண்டே பெரியப்பாவும் தாண்டு மாமாவும் இருக்கிற இடத்துக்கு வந்தார். காது அவ்வளவாகக் கேட்காது என்பதால், நான் சுருக்கமாக ’இன்னொருத்தர் கூட வந்திருக்கிறேன்’ என்பதை மட்டும் சொல்லியிருந்தேன். பெயர், இன்னார் என்று எல்லாம் சொல்லவில்லை.

‘பைய வா’ என்று சொன்ன வெங்குப் பெரியப்பா உள் அறைக்குப் போய் இன்னொரு நாற்காலியை எடுத்துவந்து போட்டார். ‘இது தான் அவ சேர். எப்பவும் அதிலதான் இருப்பா. சாயணும்னா லேசாச் சாஞ்சுக்கிடலாம்.’ என்று தாண்டு மாமாவிடம் சொன்னார்.

தாண்டுமாமா நான் அனவிரதம் பெரியம்மையை அப்படிக் கூட்டிக்கொண்டு வருவதையே பார்த்துக்கொண்டு இருந்தார். நிறைய இடம் முன்னால் கிடந்தாலும் பெரியம்மை வரும் போது எழுந்திருந்து நின்று இடம் கொடுப்பது போல நெஞ்சில் கையை வைத்துப் பதற்றமாக நின்றார். ‘நீங்க உக்காருங்க’ என்று பெரியப்பா சொல்லியும் தாண்டு மாமா பெரியம்மை உட்காரும்வரை அப்படியே நின்றார். ’மெதுவா, பார்த்து’ என்று அவரே உட்காருவது போல மடங்கினது மாதிரிச் சத்தம் கொடுத்த தாண்டு மாமா முகம் இளகிக் கனிந்திருந்தது.

வெங்குப் பெரியப்பா அவர் இடத்தில் இருந்தபடியே, கையை நீட்டி, பெரியம்மை தோளில் வைத்து. ‘அவ்வோ பேரு தாண்டவராயன். ஈஸ்வரி வகையில, அவளுக்கு அம்மா வழிப் பெரியப்பா முறை’ என்று சத்தமாகச் சொன்னார். பெரியம்மை தாண்டு மாமாவைக் கும்பிட்டார். ‘சொன்னது சரியா காதில விழலை’ என்று வருத்தப் படுவது போல் கொஞ்ச நேரம் வெங்குப் பெரியப்பா தலையைக் குனிந்து கொண்டு இருந்தார். கால் பெருவிரலால் தரையில் சதுரம் போடுகிறது போல இருந்தது.

நான் உள்ளே போய் நான்கு தட்டுகளில் பண்டத்தை எடுத்துவந்தேன். கரைத்துவைத்திருந்த எலுமிச்சம் பழ ஜூசைக் கொண்டு வந்து கொடுத்தேன். ‘வீட்டாளும் நீதான். விருந்தாளும் நீதான்’ என்று அனவிரதம் பெரியம்மை சொன்னாள். ‘அந்த உளுந்த வடையில ஆளுக்கு ஒண்ணு கொண்டாந்து வையி. சரிய இருக்கு. நாங்க ரெண்டு பேருமா அம்புட்டையும் திங்கப் போறோம்’ என்றாள். தாண்டு மாமா பக்கம் பார்த்து, ‘அவ்வோ தட்டில வேணும்னா கூட ஒரு சீனி உருண்டை வையி. சாப்பிடட்டும்’ என்றாள். ‘அவளே பிடிச்சது’ என்று வெங்குப் பெரியப்பா சொன்னார்.

தாண்டு மாமா வேண்டாம் என்று சொல்லவில்லை. வாங்கிக் கொண்டார். ஒரு உருண்டையைக் கடிக்கும் போது, அது விண்டு சிந்தவும், அதைக் கீழே விழுந்துவிடாமல் அவசரமாக உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு ‘பூவா இருக்கு’ என்று சொன்னார். ஒரு தடவை வெங்குப் பெரியப்பாவையும் இன்னொரு தடவை அனவிரதம் பெரியம்மையும் பார்த்துக் கொண்டார். அவரே இதில் என்ன இருக்கு என்று தீர்மானித்தது போல பெரியம்மையைப் பார்த்து. ‘அந்தப் படம் ரொம்ப நல்லா இருக்கு’ என்று அந்த மூன்றாவது படத்தைக் காட்டினார். ‘அதில நீ ரொம்ப அழகா இருக்கியாம். அதைப் பார்த்ததிலே இருந்து சொல்லிக்கிட்டே இருக்காக’ என்று பெரியப்பா சந்தோஷமாகவும் சத்தமாகவும் பெரியம்மையிடம் சொன்னார்.

பெரியம்மையின் காதில் விழுந்ததோ என்னவோ. ‘போகட்டும், போகட்டும்‘, என்று சைகையில் சொல்வது போல அந்தரத்தில் கையை மேல்பக்கமாக அசைத்துக்கொண்டு சிரித்தார். தன் அழகை அல்ல, தனக்கு முன்னால் மொத்தமாக, பரிபூரணமாக இருக்கும் ஏதோ ஒரு அழகைக் கண்டுகொண்ட சிரிப்பாக அது இருந்தது.

எனக்கு பெரியம்மை, பெரியப்பா காலில் விழுந்து கும்பிடவேண்டும். பெரியம்மை இப்படிச் சிரிக்கையில், இப்படி ஒரு நிறைவில் அவள் சமைந்திருக்கையில் அவளுடைய பாதத்தைத் தொட்டுக் கொள்ள வேண்டும்.

‘ரெண்டு பேரும் எங்களுக்குத் திருநீறு பூசி விடுங்க’ என்று ஈஸ்வரியையும் சேர்த்து நினைத்துக் கொண்டு சொன்னேன். இதைச் சொல்லும் போதே தாண்டு மாமா அவர் நாற்காலியில் இருந்து எழுந்து நின்று கொண்டார்.

‘நம்ம கிட்டெ திருநாறு பூசணுமாம்’ வெங்குப் பெரியப்பா அனவிரதம் பெரியம்மை பக்கம் போய் நெற்றியில் திருநீறு பூசுவது போலப் பெரு விரலை அகற்றி, வாயையும் பொத்திக்கொண்டு நிற்பது போலச் செய்தார். பெரியம்மைக்குப் புரிந்துவிட்டது. என்னைப் பார்த்துச் சிரித்தாள். தாண்டு மாமா நிற்பதையும் பார்த்தாள்.

‘பூசை ரூமுல போயித் திருநீத்து மரவையை எடுத்துக் கிட்டு வா. கையோட ரெண்டு பத்தியைப் பொருத்தி வச்சிரு. தீப்பெட்டி அங்கனயே இருக்கும் பாரு’ என்று என்னிடம் சொல்லும் போதே நானே உள்ளே போயிருந்தேன். நிறைய தடவை பெரியம்மை இப்படிச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஈஸ்வரி வந்திருந்தால் ஒரு திரியை நிமிண்டிவிட்டு இரண்டு சொட்டு எண்ணெயையும் விட்டு விளக்குப் பொருத்தியிருப்பாள்.

நான் திருநீற்று மரவையோடு வரும் போது வெங்குப் பெரியப்பா அனவிரதம் பெரியம்மை உட்கார்ந்திருந்த நாற்காலியில் இருந்து அவரை எழுந்திருந்து நிற்க வைத்துக்கொண்டு இருந்தார். ‘நின்னுக்கிடுவே இல்லா. நிக்க முடியலைண்ணா உக்காந்துக்கோ. சரியா?’ என்று இடது காதுக்குள் சத்தமாகச் சொன்னார். தாண்டு மாமாவைப் பார்த்து, ‘இந்தக் காது சமயத்தில கொஞ்சம் கேக்கும்’ என்று சிரித்தார். சிரிக்க அவசியமில்லை. ஆனால் அதைப் பிறத்தியாரிடம் அப்படித்தானே சொல்லவும் முடியும்.

‘ரெண்டு பேரும் ஒண்ணா நில்லுங்க பெரியப்பா’ என்று சொன்னேன். வெங்குப் பெரியப்பா சாரம் கட்டினவாக்கில் தான் இருந்தார். குனிந்து பெரியம்மை சேலையைப் பாதத்தின் மேல் தழைந்து கிடக்கும்படி நிரவிவிட்டார். ‘சரியா இருக்கா’ என்று குனிந்து நிமிர்கையில் உண்டாகும் முனக்கத்தில் கேட்டுக்கொண்டார். ரொம்பவும் நிறைவான ஒரு முகத்தோடு பெரியம்மை பக்கத்தில் போய் நின்றார். தாண்டு மாமா அவர்கள் இருவரும் நிற்கிற கோலத்தையே அசையாமல் பார்த்துக்கொண்டு இருந்தார். வேகமாக நகர்ந்து வந்து, என் கையில் இருந்த மரவையை அவர் கையில் வாங்கிக்கொண்டு, ‘நீ கும்பிட்டுக்க ஐயா’ என்றார்.

நான் இரண்டு பேர் பாதங்களையும் தொட்டுக் கும்பிட்டு, வாயைப் பொத்திக் கண்ணை மூடிக்கொண்டு நின்றேன். பெரியப்பா உபதேசம் செய்வது போல் சத்தமில்லாமல் அவருக்குள் சொல்லி, என் உச்சியில் தெளித்து நெற்றியில் பெருவிரல் படுவதும் படாமலும் பூசினார்.

பெரியம்மை ‘வா’ என்று என் தோளை இறுக்கி அணைத்தார். சத்தமாக, ‘ஈஸ்வரியும் பிள்ளையும் குட்டியுமா நல்லா இரு’ என்று நெற்றி நிறையப் பூசிவிட்டார். கண்கள் இரண்டையும் பொத்தி, ஊதிவிட்டார்.

நான் நகரக் கூட இல்லை. தாண்டு மாமா தரையில் அப்படியே கைகளை உயர்த்திக் கும்பிட்டபடி முகத்தைக் கவிழ்த்திக் கிடந்தார். நான் மட்டும் அல்ல, பெரியப்பாவும் பெரியம்மையும் இதை எதிர்பார்க்கவில்லை. ‘ஏ…ஏ..’ என்று பெரியப்பா பதறினார். ‘எழுந்திருக்கச் சொல்லுடே’ என்று குனிந்தார்.

தாண்டு மாமா இடமும் வலமும் முகம் புரட்டித் தொழுதார். எழுந்திருந்து குனிந்து இரண்டு பேர் கால்களையும் தொட்டுக் கும்பிட்டுக் கண்களில் விரல்களைப் புதைத்தார். சட்டைப் பைக்குள் கையை விட்டுத் துளாவி அதில் வாடின தொய்வுடன் கிடந்த வாகைப் பூவை அனவிரதம் பெரியம்மை பாதங்களின் பக்கம் வைத்தார். வாயைப் பொத்தின கையுடன் நிமிர்ந்து, ‘ஆசீர்வாதம் பண்ணுங்க’ என்று நின்றார்.

‘என்ன இப்படிப் பண்ணிட்டிய/’ என்றார். ‘உங்களுக்குப் போயி நான் எப்படிப் பூச’ என்றார். விரல்களில் பதற்றம் இருந்தது. தாண்டு மாமா ஒன்றுமே சொல்லாமல் குனிந்து நின்றார். வெங்குப் பெரியப்பா எனக்குப் பூசினது போல் அல்லாமல், அவருடைய பெருவிரல் தாண்டுமாமா நெற்றியில் இந்தக் கடையில் இருந்து அந்தக் கடைசி வரை அழுந்தப் பூசிவிட்டார். அந்த நடுக்கம் நெற்றித் திருநீறிலும் தெரியத்தான் செய்தது.

தாண்டு மாமா, பெரியப்பா பாதங்களைத் தொட்டுவிட்டு, அதே வாக்கில் பெரியம்மை காலையும் தொட்டு நிமிர்ந்தார். பெரியம்மை ஏற்கனவே விரல்களுக்கு இடையில் திருநீறை வருடிக்கொண்டு இருந்தார். எனக்கு எப்படிப் பூசிவிட்டாரோ அதே சந்தோஷத்துடன் அதே அனவிரதச் சிரிப்புடன் திருநீறு பூசிவிட்டார். அவர் மறுபடியும் பாதம் தொட்டுக் கும்பிடும் அவகாசம் தருவது போல் அப்படியே நின்று அவர் நிமிர்ந்ததும் ‘நல்லா இருங்க’ என்றார்.

தாண்டு மாமா அந்த இடத்தில் அப்படியே நின்றார். லேசாகத் தள்ளாடியது போல இருந்தது. அப்படியே பின் பக்கமாக நகர்ந்து நாற்காலியில் உட்கார்ந்தார். அது ஏற்கனவே அவர் உட்கார்ந்திருந்த நாற்காலி இல்லை என்று அனிச்சையாக உணர்ந்து, எழுந்துபோய் அடுத்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார்.

‘என்னாமாது செய்யுதா மாமா?’ என்று கேட்டேன்.

‘கொஞ்சம் தண்ணி வேணும்னா குடிக்கச் சொல்லு டே’ என்று வெங்குப் பெரியப்பா சொன்னார். ‘இதை வேணும்னாக் கொடு’ என்று அனவிரதம் பெரியம்மை அவள் குடிக்காமல் அப்படியே வைத்திருந்த எலுமிச்சை கிளாசை நீட்டினாள்.

அதெல்லாம் ஒண்ணுமில்லை. நல்லா இருக்கேன்’ என்று தாண்டு மாமா சிரித்தார். எல்லாப் படிகளையும் ஏறி முடித்த பிறகு ஒரு சிரிப்பு உண்டாகுமே அப்படி இருந்தது அது.

‘வெங்குப் பெரியப்பாவை புல்புல்தாரா வாசிக்கச் சொல்லட்டுமா? ஒளிமயமான எதிர்காலம், மலர்ந்தும் மலராத எல்லாம் வாசிப்பாங்க. ராக்கம்மா கையைத் தட்டு உங்களுக்குப் பிடிக்குமா?’ நான் தாண்டு மாமாவிடம் கேட்பதை வெங்குப் பெரியப்பா பார்த்துக்கொண்டே இருந்தார்.

’வீட்டுக்குப் போவுமா?’ என்று தாண்டு மாமா சுருக்கமாகச் சொன்னார். இரண்டு பேரையும் அவர் விழுந்து கும்பிட்ட நேரத்தை அவர் அப்படியே சிந்தாமல் தன்னுடன் எடுத்துக்கொண்டு போக விரும்பும் சுருக்கம் அது என்று எனக்குத் தெரிந்துவிட்டது.

‘அப்போ நாங்க புறப்படுதோம். ஈஸ்வரியோட இன்னோரு தடவை வாரேன் பெரியப்பா. ஏதாவது வேணும்னா கூப்பிடுங்க” என்று சொல்லும் போதே கார்ச்சாவி இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொண்டேன்.

’நல்லது. பார்ப்போம்’ என்று தாண்டு மாமா எழுந்திருந்து விடைபெறும் முகத்தை அடைந்திருந்தார். அந்தக் கல்யாண ஃபோட்டோவையும் அனவிரதம் பெரியம்மை தனியாக இருக்கும் படத்தையும் பார்த்துக்கொண்டு நின்றவர், அப்படியே திரும்பி யாரை என்று இல்லாமல் இரண்டு பேரும் நிற்கிற பக்கம் கும்பிட்டுவிட்டு நடக்க ஆரம்பித்தார்.

‘நீ இரு. வாசல் வரைக்கும் போயி அவங்களை வழியனுப்பிட்டு வந்திருதேன்’ என்று பெரியப்பா சொன்னதையோ, பெரியம்மை உட்கார்ந்து இருப்பதையோ தாண்டு மாமா கவனிக்கவில்லை. செருப்பைப் போட்டு முன்னால் நடந்தவர் அந்த மரக்கதவுச் சொரசொரப்பைத் தடவிக்கொண்டு எனக்காக நின்றார்.

நான் கேட்பதற்கு முன்பே, ‘நீயே ஓட்டு. வார வழியிலே ரெண்டு மூணு வாகை மரம் நிண்ணுதுல்லா. அந்த இடத்தில மட்டும் கொஞ்சம் நிறுத்து’ என்று இடது பக்கம் ஏறி உட்கார்ந்துகொண்டார். நான் சுற்றி வந்து ஏறும் போது, லேசாகக் கார்க்கதவை நெகிழ்த்தி, பெரியப்பாவைக் கும்பிட்டுவிட்டுக் கதவைச் சாத்தினார். மிகக் குறைவான விசையுடன் கதவை மூடும் விதம் அவருக்கு வந்திருந்தது.

ஐந்து நிமிடத்திற்குள் அந்த வாகை மரம் வந்து விட்டது. வண்டியை நிறுத்தச் சொல்லிக் கீழே இறங்கினார். ’கொஞ்ச நேரம் நின்னுட்டுப் போவுமா?’ என்று என்னைக் கேட்டார். நானும் இறங்கினேன். வண்டிக்குள் உட்கார்ந்திருக்கும் போது பார்த்ததை விடத் தரை முழுவதும் பளீர் வெள்ளையில் ஒன்றின் மேல் ஒன்றாக எச்சம் சிதறியிருந்தது. சிதறலின் தெறிப்பில் அதன் கால்கள் நீண்டுபோயிருந்த ஒவ்வொரு வினோதத்துக்கு உள்ளே இருந்தும் ஒரு பறவை பறந்து போவதாக நினைத்துக் கொண்டேன். ரோட்டில் தகடாக நசுங்கினது போக, விளிம்பு மண்ணில் சாமரம் சாமரமாகச் சிவந்த வாகைப் பூக்கள். நீள நீளக் காம்புகள்.

தாண்டு மாமா அதற்கு அடுத்த மரத்தின் பக்கம் போய் அண்ணாந்து பார்த்துக் கொண்டு இருந்தார். இலையே இல்லாமல் மரம் முழுவதும் வைக்கோல பழுப்பு மஞ்சளில் விதைகள் புடைத்துத் தெரியும் நெற்றுகள்..

‘ஒரு கிளியைக் கூட இப்போ காணும் ’ என்று என்னிடமோ யாரிடமோ சொன்னார். நான் அவர் பக்கத்தில் போய் நின்றேன். முன்னால் கிடக்கும் ஒரு குவியலில் இருந்து கை வாக்கில் ஒரு குத்து அள்ளி, என்னிடம் நீட்டுவது போல இருந்தது தாண்டு மாமாவின் குரல்.

‘விரதம், விரதம்னு அவர் கூப்பிடும் போதுதான் எனக்கு ஸ்விட்சுப் போட்ட மாதிரி இருந்தது. நீ வேற முழுப் பெயரைச் சொல்லி அனவிரதம் பெரியம்மைண்ணு பேச ஆரம்பிச்சுட்டியா. அப்புறம் தான் எனக்கு எல்லாம் ஞாபகம் வந்துட்டது.’ அவர் மரத்து மூட்டுக்குப் பக்கம் போய் கீழே கிடந்த ஒரு காய்ந்த நெற்றை எடுத்துக் குலுக்கிக்கொண்டே என் பக்கம் வந்தார். ‘நல்லா இருக்குல்லா?’ என்று என் காது அருகில் வைத்து அசைத்தார். நன்றாகத்தான் இருந்தது.

‘முதல் முதல்ல எனக்குப் பார்த்த பொண்ணு பேரு அனவிரதம்தான். நான் எதுனாலயோ, எனக்குப் பிடிக்கலை வேண்டாம்னு சொல்லீட்டேன். சும்மா வெறும் அனவிரதம்கிற பெயரை மட்டும் வச்சுக்கிட்டுச் சொல்லுதேன். இவங்கதான் அந்த அனவிரதமா, அல்லது அது வேற இவங்க வேறேயா, அது எல்லாம் தெரியாது. வேறயாக் கூட இருக்கலாம். ஆனால் இவங்கதான் அதுன்னு எனக்குத் தோணிட்டுது.’ மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக அந்த நெற்றில் புடைத்திருந்த விதைகளைத் தாண்டு மாமா என்ணிக் கொண்டு இருந்தார். ஒரு தடவைக்கு மறு தடவை அதன் என்ணிக்கை மாறவா போகிறது?

‘அவங்களை, அவங்க ரெண்டு பேரும் இருக்க ஃபோட்டோவை, தனியா அவங்க இருக்கிற அந்த ஃபோட்டோவை எல்லாம் பார்க்க என்னமோ மாதிரி ஆயிட்டுது. என்னமோ மாதிரி ஆகிறது தானே சந்தோஷம். என்னமோ மாதிரி ஆகிறது தானே துக்கம் மாப்பிள்ளை’, தாண்டு மாமா என்னைச் சுந்தரம் என்று பெயர் சொல்லிக் கூப்பிடுவது உண்டு. இப்படிக் கூப்பிட்டதில்லை.

‘அதான் நீ கும்பிட்ட உடனே எனக்கும் கும்பிடணும்னு தோணீட்டுது. எது எதுக்கு எல்லாமோ சேர்த்து வச்சுத் தரையோடு தரையா விழுந்து கும்பிட்டாச்சு.’ என்றவர் என்னைப் பார்த்துச் சிரித்தார். எனக்குச் சிரிப்பு வரவில்லை. அவரையே பார்த்தபடி நின்றேன். அவரை விட இப்போது எனக்கு ஒரு கிளிச்சத்தம் கேட்டால் நல்லது என்று இருந்தது.

‘வண்டி சாவியைக் கொடு’ என்று கையை நீட்டினார்.

‘எடுக்கலை மாமா. வண்டியிலேயே தான் இருக்கு என்றேன்.

‘போவோம்’ என்று வலது பக்கமாகக் கதவைத் திறந்துகொண்டு ஏறினார். கையில் வைத்திருந்த வாகை நெற்றைச் சாமி படத்துக்கு முன் வைத்தார். நான் ஏறுகிற வரை காத்திருந்தார். குனிந்து லீவரைத் தளர்த்தி அவரளவுக்குச் சௌகரியமாக சீட்டைப் பின் தள்ளினார். வலது பக்கத்துக் கண்ணாடியைக் கையை நீட்டிப் பின்னால் வருகிற வண்டிகளை நிதானிக்குப்படி திருப்பிக் கொண்டார். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார்.

‘போலாமா’ என்றார்.

நான் தலையை அசைத்து, அவர் பக்கம் திரும்பிச் சிரிப்பதற்குள் வண்டி நகர ஆரம்பித்துவிட்டது. அடுத்தடுத்த கியருக்கு மாறும் போது தாண்டு மாமா பாதையையே பார்த்துக்கொண்டு இருந்தார்.

எந்தப் பக்கம் திரும்பவேண்டும் என்று கூடக் கேட்கவில்லை.


  • வண்ணதாசன்

நன்றி:

ஓவியம் : சுந்தரன்

உள் ஓவியம் :  displate.com

Previous articleபாவலர் தெங்கரைமுத்துப் பிள்ளை
Next articleகனலி இணைய இதழ் 10
வண்ணதாசன்
சி.கல்யாணசுந்தரம் அவர்கள் வண்ணதாசன் என்ற புனைபெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைபெயரில் கவிதைகளும் எழுதி வரும் மூத்த எழுத்தாளர். தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான வண்ணதாசன், தீபம் இதழில் எழுதத் துவங்கியவர். 1962 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது 'ஒரு சிறு இசை' என்கிற சிறுகதைத் தொகுப்பிற்காக இந்திய அரசின் 2016 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.

5 COMMENTS

  1. நன்றி கனலி! மனதைத் தொடும் மனிதநேயத்தை எவ்வளவு எளிமையாக இந்தக்கதை மாந்தர்கள் காட்டுகிறார்கள்.. பறவையைப்போல இலகுவாக வாக்கருடன் நடக்கும், பரிபூரண அழகைக் கண்டது போல் சிரிக்கும் அனவிரதம் பெரியம்மையும், காது கேளாத, வாக்கருடன் நடக்கும் மனைவியிடம் கரிசனம் காட்டும், அவரது அழகின் பெருமையை விருந்தினருடன் பகிர்ந்து மகிழும் பெரியப்பாவும் தேவதைகள்! கிளிகள் நிறைந்த வாகைமரங்கள் உள்ள சாலையைப் பார்க்க ஆசை வருகிறது!

  2. அப்படியே அவர்கள் நாலு பேரையும் நிப்பாட்டி வச்சு, அவர்கள் காலில் விழுந்து திருநீறு வாங்கனும்போல இருக்கு. மனதை நெகிழ்த்திய கதை.

    நன்றி

  3. என்னமோ மாதிரி ஆகிட்டது….. உணர்வுகளின் அதிர்வுகள்….

  4. எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும் அழகிய கவிதைப் பின்னல். வாழ்க்கையை இலகுவாகக் காணும் தாண்டு மாமாவுக்குள்ளும் எத்தனைக் கனம். ஆழ்கிணற்றுக் கல்லாட்டம் மனத்தின் அதியாழத்தில் புதைந்துகிடக்கும் ரகசியங்களை எல்லாம் எப்படி வெகு எளிதாக வெளிக்கொணர்ந்து விட்டது ஒற்றை வாகைப்பூ. தாண்டு மாமா மட்டுமில்லை, வாசிக்கும் நாமும் வெங்கு பெரியப்பா, அனவிரதம் பெரியம்மையின் பாதங்களில் வீழ்ந்து ஆசி வாங்கிக்கொண்ட நிறைமன உணர்வு.

  5. வண்ணதாசனின் முத்திரை பதிந்த அழகான கதை. கதை மாந்தர்கள்
    அன்பின் குளத்தில் குளித்தெழுந்து நிற்கிறார்கள். மகிழ்ச்சி.
    –பிரதீபன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.