துப்பறியும் பென்சில் – 10


மனிதர்கள் 

கடத்தல் நடைபெற்றதில் இருந்து கடத்தல்காரர்களைக் கோட்டை விட்டது வரை பென்சில் மனிதர்கள் தகவல் சேகரித்து இருந்தனர்.

பச்சைநிற பென்சில் கோபமாகக் கத்தியது. “இந்த போலீஸ்காரர்கள் இப்படியா கோட்டை விடுவார்கள்?”

கைக்கு கிடைத்த கடத்தல்காரர்களைப் பிடிக்காமல் தப்பிக்க விட்டதற்கு பச்சைநிற பென்சில் மிகவும் கோபப்பட்டது.

இதுவரை நடந்த விசயங்கள் குறித்து தகவல் சேகரித்த பென்சில் மனிதர்கள் இராஜாஜி பார்க் சுவரில் அமர்ந்து கொண்டு பேசத் தொடங்கினார்கள்.

அப்போது மணி இரவு 11.

”குழந்தைகள் கிடைச்சிட்டாங்க. ஆனா, பணம் போச்சே.” என சிவப்பு பென்சில் கூறியது.

“போலீஸ்காரங்க.. சரியாதான் விசாரிச்சு இருக்காங்க. ஆனா, கடத்தல் காரங்க ரெம்ப சாதுர்யமா தப்பிச்சிட்டாங்க. அது எப்படின்னு தான் புரியலை”. என வெள்ளை நிற் பென்சில் யோசிக்க ஆரம்பித்தது.

“கடத்தல்காரர்கள் ரெம்ப டெக்னிக்கலா ஸ்ட்ராங்கா இருந்து, போலீஸ்சை சோர்வடைய வைத்து , அவுங்க அசந்த நேரம் பார்த்து பணத்தை எடுத்துட்டுப் போயிருக்காங்க.” எனப் பச்சைநிற பென்சில் பேசியது.

 “டெக்கினிக்கலா ஸ்ட்ராங்க இருந்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் சறுக்கி இருக்க வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு விசயமா யோசித்தால், ஓட்டையை அடைத்து விடலாம் ” என சிவப்பு நிற பென்சில் கூறியது.

இன்றைய செய்தித்தாளில் இருந்து ஒரு விசயத்தை படித்துக் காட்டுகின்றேன் என பச்சைநிற பென்சில் அன்றைய செய்தித்தாளைப் படித்தது.

நள்ளிரவில் தூக்கத்தில் வேன் ஓட்டி வந்ததால் டிரான்ஸ்பார்ம்மில் வாகனம் மோதி தீ விபத்து. தமுக்கம் பின்புறம் உள்ள டிரான்ஸ்பார்ம் வெடித்துச் சிதறல். ஒருமணிநேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு படையினர். இராஜாஜி பூங்கா பகுதியில் விடியவிடிய கரண்ட் இல்லாமல் மக்கள் தவிப்பு. மாருதி வேன் ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓட்டம். போலீஸ் தேடி வருகின்றது. வண்டி முழுவதும் எரிந்ததால் வாகனத்தை அடையாளம் காண முடியவில்லை. போலீஸ் தொடர்ந்து விசாரிக்கின்றது.

“நள்ளிரவில் வேன் மோதி டிரான்ஸ்பார்ம் வெடிப்பு என்ற செய்திக்கும் இந்த கடத்த்லுக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போல் தெரிகின்றது” எனச் சிவப்பு நிற பென்சில் மனிதன் கூறினான்.

“அப்பளக் கம்பெனிக்காரர்கிட்ட பணம் பெற்ற இரவு, அதே நேரத்தில்தான் டிரான்ஸ்பார்மில் வேன் மோதி உள்ளது. அதற்கும் கடத்தல்காரர்களுக்கும் சம்பந்தம் இருக்கும் போல் தெரிகின்றது.”  என மஞ்சள் நிற பென்சில் கூறியது.

“திட்டமிட்டு நடந்த சம்பவம் போல் இந்த வேன் மோதல் தெரிகின்றது. அவுங்க தப்பிக்கிறதுக்காக, இந்த மோதல் நடந்த மாதிரி இருக்கு.  வாங்க ஸ்டேசன் போவோம். என்னதான் இந்த போலீஸ்காரர்கள் பேசிக்கொள்கின்றனர் என பார்ப்போம்” என பச்சை நிற பென்சில் கூறியது.

சிவப்பு நிற பென்சிலும், பச்சை நிற பென்சிலும் வேன்மோதல் குறித்து விசாரித்துவிட்டு வருவதாக கூறியது. மஞ்சள்நிற பென்சிலும் வெள்ளை நிற பென்சிலும் தல்லாகுளம் ஸ்டேசன் சென்று வருவதாகக் கூறியது.

மீதிபென்சில்கள், மோதல் நடந்த இடத்தைக் காணச் செல்வதாகக் கூறின.

அனைத்து பென்சில்களும் சுவரில் இருந்து குதித்து, விசாரணையை தொடங்க கிளம்பினார்கள்.

அனைத்து பென்சில்களும் மனிதர்கள் போல் தங்கள் உருவத்தை மாற்றிக் கொண்டன.

தமுக்கம் மைதானத்தின் பின்புறம் அமர்ந்து இருந்த விடலை பசங்களிடம் சிவப்பு பென்சில் விசாரணையைத் தொடங்கியது. சிவப்பு பென்சில் பார்ப்பதற்கு போலீஸ்காரர் மாதிரி இருந்தது. அதனுடன் வந்த பச்சைநிற பென்சில் காவலர் உடை அணிந்து இருந்தது.

“இந்த வண்டி எரிச்சதைப் பார்த்தீங்களா?” என எதிரில் எரிந்த நிலையில் எலும்பாய் நின்ற வேனைப் பார்த்து சிவப்புநிற பென்சில் மனிதன் கேட்டான்.

“சார், நாங்க பார்க்கல”என ஒட்டுமொத்தமாக பசங்க பதில் அளித்தார்கள்.

”நீங்க எந்த ஏரியா?” கூட்டத்தில் நின்ற ஒருவனைப் பார்த்து பச்சைநிற பென்சில் மனிதன் கேட்டான்.

“சார் பக்கத்தில் தான் வீடு.”

“யாராவது வேன் எரிந்த போது வந்தீங்களா?” என பச்சைநிற பென்சில் மென்மையாக கேட்டது.

“சார், நான் வந்தேன்.” என ஒருவன் பதில் அளித்தான்.

“வண்டி என்ன கலரில் இருந்தது?” என சிவப்பு நிற பென்சில் மனிதர் கேட்டார்.

“வண்டி உள்ளே டிரைவர் இருந்தானா?”

“இல்லை சார். தப்பிச்சு ஓடிட்டதா சொன்னாங்க. போதையில் வண்டிய விட்டுட்டானாம்.”

“சரி, தினமும் இங்கதான் பேசுவீங்களா?” என பச்சைநிற பென்சில் மனிதன் கேட்டான்.

“வாரத்திற்கு மூணுநாள் இங்க சந்திச்சிக்குவோம்.”

“நேத்து எப்ப இங்க இருந்து கிளம்பினீங்க”

“நேத்து சம்பவம் நடக்கிறதுக்கு அரைமணிநேரத்திற்கு முன்னாடி தான் போனோம்.”

“சந்தேகம் படும்படி யாரையும் பார்த்தீங்களா?”

“இல்லை, சார்.”

அதற்குள் புதிதாக ஒருவன் வந்தான். அவன் பைக்கை நிறுத்தினான். இவர்கள் அருகில் வந்தான்.

“தம்பி யாரு?”

“சார், பிரண்டு” என கூட்டத்தில் ஒருவன் பதில் அளித்தான்.

“சந்தேகப்படும்படி யாரையும் நேத்து பார்த்தீங்களா?” என வந்தவனிடம் சிவப்புநிற பென்சில் மனிதன் கேட்டான்.

“சார், இப்பத்தான், எட்டுமணிக்கு போலீஸ் வந்து வீட்டில் விசாரிச்சிட்டு போனாங்க. நீங்க?” என வந்தவன் கேட்டான்.

“நாங்க க்யூ பிராஞ்ச். என்ன சொன்னீங்க?”

“எதுவும் தெரியாதுன்னு சொன்னோம்.”

“இப்படி பொறுப்பில்லாம பதில் சொல்லக்கூடாது. அப்புறம் போலீஸ்காரங்களை குறை சொல்றது. விசாரணைக்கு ஒத்துழைக்கணும்.”  என பச்சை நிற பென்சில் மனிதன் சொன்னான்.

“சார்.  யானை வளர்க்கிறா வீட்டுக்கு சைட்டில், ஒரு போர்ஸ் வேன் நின்னுச்சு. அந்த வண்டியின் டிரைவரும், வீட்டு புரோக்கர் பாஸ்கரும் ரெம்ப நேரமா பேசிகிட்டு இருந்தாங்க. நாங்க இங்க இருந்து கிளம்பும் போது அவுங்க தான் பேசினாங்க.  இன்னும் கொஞ்சம் நேரத்தில் அந்த வேன் வரும். அவரை விசாரிச்சா தகவல் கிடைக்கும்.”   என அக்கூட்டத்தில் இருந்த ஒருவன் கூறினான்.

 “ஓ அப்படியா! அந்த வண்டி யாரோடதுன்னு தெரியுமா?”

“சார்! புதுசா குடிவந்தவர். இங்க வந்து ஒருவாரம் தான் ஆகுது. வண்டி யானைக்காரங்க வீட்டுபக்கம் நிறுத்தக் கூடாதுன்னு சொன்னதால… இன்னைக்கு காலையில் தான் வீட்டைக் காலி பண்ணிட்டு போனாரு. அவர் சாமன்களைக் கட்டி கிளம்புறப்ப போலீஸ் விசாரிச்சாங்க. அவரும் தூங்கப் போயிட்டாராம். புரோக்கர் பாஸ்கரும் அப்படிதான் சொன்னார். காலையில் தான் தெரியுமாம்”  என புதிதாக வந்தவன் கூறினான்.

 “சரி, புரோக்கர் பாஸ்கர் போன் நம்பர் இருந்தா தாங்க.”  என புரோக்கரின் எண்ணை  பெற்றுக் கொண்டது சிவப்பு நிற பென்சில்.

இருவரும் தொடர்ந்து வீதிக்குள் விசாரித்தனர். பலரும் வேன் மோதிய சம்பவத்தைப் பார்க்கவில்லை என்றே கூறினார்கள்.

விசாரணைக்குபின் இருவரும் இராஜாஜி பூங்காவின் மதில் சுவரில் ஏறி அமர்ந்து கொண்டனர்.

துப்பாக்கி சண்டை நடந்த இடத்தைப் பார்வையிட்ட பென்சில்களும் அவர்களுடன் இணைந்து கொண்டனர்.

“நல்லா இருட்டா தான் இருக்கு. ரோடு வளைவா இருக்கிறதால் அந்தப் பக்கம் எது நடந்தாலும் , இந்தப் பக்கம் தெரிய வாய்ப்பில்லை.”  என ஊத நிற பென்சில் கூறியது.

“இரண்டு தடவை கடத்தல்காரர்கள் சுட்டு இருக்காங்க. ஒன்று போலீஸ்காரர் தோள்பட்டையில் உரசி சென்று சுவற்றில் மோதி உள்ளது. அதற்கான அடையாளம் தெரியுது. அந்த புல்லட்டை போலீஸ்காரங்க கை பத்தி இருக்கணும். இன்னொன்னு மரத்தில் பட்டு, கீழே விழுந்து கிடந்தது. அது என் கையில் இருக்கு. போலீஸ்காரங்க இதைக் கவனிக்கலை. வேப்ப மரத்தில் புல்லட் அடையாளம் இருக்கு. கீழே குப்பையில் விழுந்து கிடந்ததால், புல்லட் அதுக்குள்ளே புதைச்சு கிடந்தது. புல்லட்டை பார்த்தா கடத்தல் காரங்க நாட்டுதுப்பாக்கி பயன்படுத்தி இருப்பாங்கன்னு தெரியுது.” கருப்பு நிற பென்சில் கூறியது.

“செல்போன் தொழில் நுட்பம் தெரிந்த ஒருத்தனும், நாள்பட்ட கொள்ளைக்கர்ரனும் கூட்டு சேர்ந்து இதை பண்ணி இருக்காங்க. நிச்சயம் துப்புக் கிடைக்கும். எங்காவது தடயத்தை விட்டு இருக்கணும்.” என ஊத நிற பென்சில் கூறியது.

போலீஸ் ஸ்டேசன் சென்ற மஞ்சள் பென்சில் கோபத்துடன் வந்தது. உடன் சென்ற வெள்ளை நிற பென்சில் அதனை சமாதனப்படுத்திக் கொண்டே வந்தது.

“என்ன போலீஸ்காரங்க… கடத்தல் காரங்க வண்டி தான் டிரான்ஸ்பார்மில் மோதின வண்டின்னு சொல்லுறாங்க. ஆனா, யாருன்னு தெரியலைன்னு முழிக்கிறாங்க.  வண்டி மோதின நேரத்தில் யாரெல்லாம் போன் இந்த ஏரியாவில் யூஸ் பண்ணி இருக்காங்கன்னு பார்த்தா தெரியாதா? அதை விடு, வேனில் இருந்து தப்பி போனவன் எந்த டிவி கேமிராவிலும் அகப்படாமலா இருப்பான். கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல், பிள்ளைங்க கிடச்சிட்டாங்க. கடத்தல் காரங்க வண்டி டிரான்ஸ்பார்மில் மோதி சாவுன்ற மாதிரி கேஸ்சை முடிக்க பார்க்கிறாங்க.”

“சரி, சரி, கோபப்படாதே. அதான் நாம் துப்பறிகிறோமே! எப்படியும் துப்பு கிடைக்கும். யோசிப்போம். விசாரனையை ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிப்போம். உனக்கு யார் மீது எல்லாம் சந்தேகம்ன்னு சொல்லு. அங்க இருந்து விசாரிப்போம்.” எனச் சிவப்பு பென்சில் சமாதானப்படுத்தியது.

 “ஒரு கோடிக்கு பணம் கேட்டவுடன் அப்பளக்கம்பெனிக்காரனால் புரட்டமுடியும்ன்னு ரகசியம் தெரிஞ்ச ஒருத்தன் தான் இதை பண்ணி இருக்கணும். ஒண்ணு அவருக்கு சொந்தக்காரனா இருக்கனும். இல்லை, அவர் கம்பெனியில் வேலை பார்க்கிறவனா இருக்கணும்.”  என மஞ்சள் பென்சில் ஆவேசப்பட்டது.

 “சரி, விடியப் போகுது. நாம் கிளம்புவோம். பூங்காவில் கேட்டு இல்லைன்னு தெரிஞ்சா , புதுகேட் மாட்டிடப் போறாங்க. அப்புறம் நாம் காயிலாங்க் கடைக்குதான் போகணும். அதுமட்டுமல்ல , குழந்தைகள் விளையாடுறதை ரசிக்க முடியாது. குழந்தைகளோட ஆசைகளைக்  கொஞ்சமாவது  நிறைவேற்ற முடியாது.”  என வெள்ளை நிற பென்சில் கூறியது.

பென்சில் மனிதர்கள் அனைவரும் பூங்காவை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

“கூடவே இருக்கிறது, இந்த கணக்குபிள்ளை தான். அவன் வீட்டில் இருந்து  விசாரணையை ஆரம்பிப்போம்.” என மஞ்சள் பென்சில் கோபமாக பேசியது.

“சரி, நாம் இருவரும் காலையில் மனிதர்களாக மாறி அவரை விசாரிப்போம்.” என சிவப்பு நிற பென்சில் சமாதானப்படுத்தியது.

தொடரும்…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.