அம்மா

“அப்பா….” குட்டி கரடி அழைத்தது.

“என்னடா கண்ணு…?” அப்பா கரடி திரும்பியது.

“அம்மா உயிரோட இருந்திருந்தா இப்படி என்னை பசியோட இருக்க வெச்சிருப்பாங்களா?”

“அய்யயோ கண்ணே!  நீ என்னடா சொல்றே.?” அப்பா கரடி அழுத குட்டியின் கண்களை துடைத்தபடி கேட்டது.

“ஆமாம்பா. எனக்கு பசி வந்து எத்தினி நாழி ஆவுது. நீ இன்னும் எனக்கு கொண்டு வரலியே. நானா போய் தேடிக்கிறேன்னாலும் கூடாதுன்னு தடுக்கிறயே.” பசி தாங்காமல் குட்டி கரடி மீண்டும் அழுதது.

“அய்யயோ தவறு என்னுடையதுதான். ஒரு தாய் இல்லா குட்டியை இப்படி பட்டினி போட்டுட்டேனே” என்ற அப்பா கரடி உடன் ஒரு பெரம்பு கூடையை எடுத்துக்கொண்டு தேன் கூடு கட்டி இருக்கும் ஆல மரம் நோக்கி சென்றது.

அந்த மரத்தில் தான் எத்தனை தேன் கூடுகள். ஆகா இதில் ஒன்றை நம் குட்டிக்கு கொடுத்தால் அவனுக்கு இன்று முழுதும் பசியே இருக்காது என்று எண்ணிய கரடி மெல்ல மெல்ல கிளை பிடித்து ஏறியது. ஒரு பெரும் தேன் கூட்டை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து பிரம்பு கூடையில் போட்டது. அதே சமயம்  இதை கண்டு கொண்டிருந்த ஒரு சிறு குரங்கு குட்டி தேன் கூட்டை பிரித்து போட போட கூடைக்குள் குதித்து கூட்டை ரசித்து ருசித்து உறிஞ்சி உண்டது. ஆக தேன் கூடு பிரித்து கூடையில் போட்ட மன திருப்தியுடன் கூடையை கவனிக்காமல் வெறும் கூடையுடன் வீட்டுக்கு வந்தது அப்பா கரடி.

“குட்டி தம்பி. இந்தாடா கண்ணு. வேணும் அளவு சாப்பிடு. ” அப்பா பெருமையுடன் கூடையை வைத்தது.

குட்டி ஆர்வத்துடன் ஓடி வந்து திறக்க அதற்கு அதிர்ச்சி. மீண்டும் ஆக்ரோஷத்துடன் அழ ஆரம்பித்தது.

“ஏய் ஏண்டா அழுற தம்பி.?”

“போப்பா நீ நல்லா ஏமாத்திட்டே. இதுல ஒண்ணுமே இல்லியே.”

“ஓ. நான் மண்டுதான். ஓட்டை பெரம்பு கூடை எடுத்துட்டு போனா எப்படி இருக்கும். சரி. அழாதே. இப்ப அந்த புது கூடையை எடுத்துட்டு போய் தேன் கூட்டை கொண்டு வர்றேன்.” அப்பா வேகமாக கிளம்பியது.

மீண்டும் மிகவும் சிரமப்பட்டு கிளை பிடித்து ஏறி ஒரு கூட்டை பிரித்தது. அதை கூடையில் போடும் போது அதே குட்டி குரங்கு அதையும் தின்று விட்டது. இப்போதும் மக்கு கரடி கூடையை கவனிக்காமல் அதை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தது.

“அடே தம்பி இப்ப பாருடா அப்பா எவ்வளவு கொண்டு வந்திருக்கேன்னு.” கூடையை வைத்தது.

இம்முறை குட்டி அழவில்லை.

“அப்பா…அப்பா..”

“என்னடா குட்டி தம்பி..?”

”ஒரு தாய் இல்லா குட்டியோட நிலைமை எவ்வளவு கொடூரம்னு இப்பதாம்பா உணருகிறேன். நீ பாவம். நீ என்ன அம்மா ஆக முடியுமா?” குட்டி விரக்தியுடன் பேசவும் அப்பா கரடி அதிர்ந்து போனது.

”ஏய் தம்பி! நான் என்னடா அப்படி உனக்கு குறை வெச்சிட்டேன். ஏன்டா இப்படி பேசறே.?” வருத்தத்துடன் கேட்டது.

”ம். இப்பவும் கூடையை நீயே பாரு.”

அப்பா கரடி கூடையை பார்த்தது. வெறும் கூடை. அப்ப நான் பிரிச்ச அந்த தேன் கூடு…..? கரடி கோபம் கொண்டது. வெகுண்டது. ஏதோ என்னமோ நடக்குது. இதை நான் சும்மா விடமாட்டேன்னு வேமகா கூடையை எடுத்துக்கொண்டு கிளம்பியது.

அப்பா இந்த வாட்டி நானும் வர்றேன்பா. என்னமோ ஒரு சக்தி இருக்குப்பா. அதுதான் என்னமோ செஞ்சு எல்லாத்தையும் சாப்பிடுது. நீங்க தேன் கூட்டை பிரிங்கப்பா. நான் மறைந்திருந்து வேடிக்கை பார்க்கிறேன். என்னன்னு கண்டு பிடிக்கலாம்னு சொன்னதும் குட்டியின் சாமர்த்தியத்தில் மெச்சிய அப்பா கரடி அதையும் அழைத்துக்கொண்டு கிளம்பியது. இம்;முறை மிக மிக சிரமப்பட்டு மரம் ஏறியது. குட்டி லாவகமாக ஏறி ஒரு அடர்ந்த கிளைகளின் மறைவில் மறைந்து கொண்டது. ஒரு தேன் கூட்டை பிரித்து கூடையில் போடவும் கரடி குட்டி மறைந்திருப்பது தெரியாமல் குட்டி குரங்கு அதை தின்று விட்டது.

“ஓ. இதுதான் விஷயமா? அப்பா ஏமாந்தது இந்த குட்டி குரங்கிடம்தானா? ” கரடி குட்டி நினைக்கும் போதே அப்பா கரடி கூட்டை பிரித்து போட போட குரங்கு குட்டி அவரச அவசரமாக தின்று தீர்த்தது.

“குட்டி மவனே போகலாமா? ”அப்பா கேட்டது.

“ம். ம்.. போகலாம். ஆனா என்ன இன்னிக்கு விரதம்தான்.”

“எலே என்னடா சொல்லுதே நீ.?”

“ஆமாம்பா. நீங்க போட்ட தேன் கூட்டை எல்லாம் ஒரு குட்டி குரங்கு தின்னிடுச்சு.”

“என்ன குட்டி குரங்கா?  அதுவா இத்தினி வாட்டி என்னை ஏமாத்தியிருக்கு?. அதை என்ன செய்யறேன் பார்” என்ற அப்பா கரடி கோபத்துடன் அங்கும் இங்கும் நோட்டம் விட்டது. குட்டி ஒரு கிளையில் படுத்து இருந்தது. உடன் தாவி அதை பிடித்து இழுத்து வந்தது. குட்டி கரடிக்கும் மகிழ்ச்சிதான். இதுதானே நம் உணவை திருடியது. அப்பா இதற்கு நல்ல அடி கொடுக்கப்போறார் என்று பார்த்தபடி இருந்தது.

குரங்கு குட்டியின் கழுத்தை பிடித்த கரடி அதை அடிக்க ஆரம்பித்தபோது குட்டி உரக்க குரலிட்டு  “அய்யோ அம்மா.. அம்மா.. காப்பாத்து. என் உயிருக்கு ஆபத்து. ம். நான் என்ன கத்தினாலும் நீ வரமாட்டியே. அய்யோ இப்ப என்னை யாரு காப்பாத்துவாங்க” என்று குரங்கு குட்டி அழுது புலம்பவும் கரடி குட்டி தன் தந்தையை தடுத்தது.

“அப்பா அடிக்காதீங்க. இது ஏதோ அதனுடைய அம்மாவை பற்றி சொல்லிச்சு. என்னனு கேட்போம்.”

அப்பா கரடி இறுக்கியிருந்த குரங்கு குட்டியின் கழுத்தை தளர்த்தியது.

“டேய் நீ யாருடா? நான் பிரிச்ச தேன் அடையை நீ ஏன் தின்னே? அது தப்பில்லியா.? இப்ப உன்னால என் மகன் பட்டினி. சொல்லு.” அப்பா கரடி அதை உலுக்கியது.

“கரடி அய்யா ! மன்னிச்சிடுங்க. நான் நாலு நாளா பட்டினி. ஒரே மயக்கம். அப்பதான் தேன் கூட்டை பிரிச்சி நீங்க கூடையில போட்டீங்க. உடனே எடுத்து தின்னு பசியாறினேன். நாலு நாள் பட்டினியில எவ்வளவு சாப்பிட்டேன்னு தெரியாம நீங்க பிரிச்சது எல்லாத்தையும் சாப்பிட்டது என் தப்புதான். என் அம்மா இருந்திருந்தா என்னை பட்டினியா இருக்க விட்டிருக்க மாட்டாங்க.” குரங்கு குட்டி அழுதது.

“ஏன் இப்ப உன் அம்மா எங்கயாம்…?” அப்பா கரடி ஒரு கேள்விக்குறியுடன் பார்த்து கேட்டது.

குரங்கு குட்டி அழுதது.  “கரடி மாமா நாலு நாள் முன்னால நானும் அம்மாவும் இந்த மரத்துலதான் ரொம்ப மகிழ்ச்சியா இருந்தோம். அம்மா எனக்கு பால் கொடுத்துட்டு இருந்தாங்க. அப்பத்தான் எதிர்பாராத அதிர்ச்சி ஏற்பட்டது. திடீர்னு கிளைக்கு கிளை தாவி வந்த ஒரு சிறுத்தை எப்படியோ கண் இமைக்கும் நாழியில் என் அம்மாவை பிடித்து செல்ல நானும் எவ்வளவோ முயன்றேன். என் கால் அடிபட்டு வலி ஏற்பட்டதுதான் மிச்சம். என் தாய் அந்த பொல்லாத சிறுத்தைக்கு இரையாயிட்டாங்;க. நானும் அழுதேன். புரண்டேன். என்ன பிரயோசனம். கால் குணமாகாததால் எங்கும் சென்று இரை தேட முடியவில்லை. அப்போதுதான் நீங்கள் தேன் கூட்டை பிரிக்கவும் நான் ஒரு வெறியுடன் பசி அடங்க சாப்பிட்டு விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். ஏன் உங்கள் குட்டியை நான் பட்டினி போட்டதற்கு என்னை கொன்று விடுங்கள்” என்றது குட்டி குரங்கு.

அப்பா கரடிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. குட்டி கரடி ‘ஓ’வென அழுதது.

“அப்பா பாவம்பா இந்த குட்டி. இதுவும் என்னை மாதிரி அம்மாவை இழந்தது. இதை ஒண்ணும் செய்துடாதீங்கப்பா. எனக்கு துணையா இதை விளையாட வீட்டுக்கு நாம அழச்சிட்டு போகலாம். பாவம் இதற்கும் யாரு இருக்கா.? நானும் தாய் இல்லாதவன். இதுவும் தாய் இல்லாத குட்டி. அதனால் நாங்கள் ஒத்துமையாக இருந்து விளையாடி இரைதேடி ஜாலியாக இருப்போம்” என்றதும் அப்பா கரடி மகிழ்ச்சி அடைந்தது.

“சரிடா குட்டி மகனே. இந்த பயலையும் வீட்டுக்கு அழச்சிட்டு போவோம்”ன்னு சொல்ல குரங்கு குட்டி ஆனந்தம் அடைந்து குட்டி கரடியை கட்டிக்ககொண்டது.

“மாமா கொஞ்சம் நில்லுங்க.” குட்டி குரங்கு கூறவும் கரடியும் அதன் குட்டியும் ஆர்வத்துடன் நிற்க, குரங்கு குட்டி தன் அடிபட்ட காலுடன் ஏற முடியாமல் மரம் ஏறி இரு தேன் கூடுகளை பிரித்து அதை கூடையில் போட்டது.

“மாமா நீங்களும் குட்டியும் தான் பட்டினி. நான் முழுதும் சாப்பிட்டு வயிறு நிரம்பிவிட்டது. நீங்கள் இருவரும் சாப்பிடுங்கள் என்றதும் அப்பா கரடி மகிழ்ச்சியுடன் அதை தடவிக்கொடுக்க குட்டி கரடி கட்டிக்கொண்டு பின் தேன் கூட்டை ருசித்து உண்டது.

இப்போது அந்த பெரும் கூடையில் தன் கரடி குட்டியையும் குட்டி குரங்கையும் வைத்துக்கொண்டு அப்பா கரடி வீடு நோக்கி சென்று கொண்டு இருந்தது.

குட்டிகள் இரண்டும் ஜாலியாக கூடைக்குள்ளேயே விளையாடிக்கொண்டிருந்தன.

 

நீதி:

சிறார்களே. ஒரு தாய் எவ்வளவு முக்கியமானவள் என்பதை உணர்ந்து கொண்டீர்களா? தாயை மதித்து போற்ற வேண்டும். அவள்  தெய்வத்துக்கும் மேலானவள். சரியா.?

 

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.