உலக முடிவு (World End)- நர்மி.


 

அந்த காலையில் என் கால்களுக்கு நான் மிகுந்த நன்றியுடையவளாக இருந்தேன். ஏனெனில் பூமியின் சுவர்க்க நிலத்தை நோக்கி அது அன்று என்னை நடத்திச் சென்றது. நடக்க நடக்க கால்கள் கற்றுத்தருகின்றன , நீண்டு நடக்கவும் , நிலைத்து நிற்கவும். இயற்கையின் பிரமிக்கிற அடைவுகளின் முன்,  பாதைகளின் முன் நான் மௌனித்து நிற்கின்றேன். ஒரே சுழல்வட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பாதங்கள் எவ்வளவு துயரம் நிறைந்தவை. ஓர்டன் சமவெளியெங்கும் நிற்கின்ற இந்த சாம்பர் மான்களைப் பார்த்ததன் பின்னர் ஹங்கேரிய கவிஞன் பெரன்க் யுஹாஸ் ( Ferenc  juhasz) இன் கவிதையொன்று எனக்கு ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒர்டன் சமவெளியினை பார்த்ததன் பின்னர் இந்த சாம்பர் மான்களில் ஒன்றாக மாறி இந்தப் புல்வெளிகளில் திரியக்கூடாதா என்றிருந்தது. நகரத்தின் இறுக்கத்திலிருந்து ஒவ்வொரு மனிதனுமே இப்படிப்பட்ட வெளியில் தொலைந்து போகவே விரும்புவான். ” மானாக மாறிய சிறுவன் மர்மங்களின் வாசலில் கூக்குரலிடுகிறான் ” என்ற கவிதையது. மானாக மாறிய அவனை தாய் மீண்டும் வீட்டிற்கு அழைப்பாள் . அதற்குப் பதிலாக மானாக மாறிய நான் திரும்பிப் போக முடியாது என்பதை  பெரன்க் இப்படி எழுதியிருப்பார்.

 

” அன்னையே ! நான்

திரும்பிவர முடியாது

என்னை அழைக்காதே

நான் திரும்பி வந்தால்

என் கொம்புகள் உன்னைக்

குத்திக் கிழித்துவிடும்

என் கொம்பின்

ஒவ்வொரு கூரிய கிளையும் கல்லறை மெழுகு திரிகள்

நான் வந்தால்

எரிந்து போவாய் நீ

நம் வீடும் பாழாகிவிடும்

என் தந்தையின் எலும்புகளையும்

நான் தோண்டி எரிப்பேன்….

 

என்று மானின் குரலில் அவன் கதறுவதுபோல அந்தக் கவிதை நீண்டுசெல்லும். இயற்கையின் அமானுஷ்யங்களில் ஈர்க்கப்பட்ட, வசீகரிக்கப்பட்ட ஒரு ஆன்மாவின் நிலைகூட இறுதியில் அத்தகையது தான். அன்று என் மனநிலைகூட அத்தகையது தான்.

 

மனதிற்கினிய ஒரு இடத்தில் இயற்கைக்கு வெகு அருகாமையில் சிறிய ஒரு குடிசையொன்றைக் கட்டிக்கொண்டு வாழ்நாள் எல்லாம் இயற்கைக்கு அருகில் ஒரு எளிய வாழ்க்கை வாழ்ந்துவிட முடியுமானதாக இருந்தால் எப்படியிருக்கும்..? உண்மையில் அப்படிப்பட்ட இரசனையான மனிதர்கள் இந்த ஒர்டன் சமவெளியில் வாழ்ந்திருக்கிறார்கள். தன் அன்றைய எளிய வாழ்வின் மிகச்சிறிய வட்டத்திற்குள் அன்றைய தேவையைப் பூர்த்தி செய்தபடி , மரங்களின் பூக்கும் பருவத்தையும், உதிரும் பருவத்தையும் வைத்து காலத்தைக் கணித்தபடி , வசந்தத்தையும் , மழையையும், பனிக்காலத்தையும் கணித்தபடி ஓட்சையும், பார்லியினையும் பயிரிட்டபடி, இந்த குளிருக்குச் சுவைமிகுந்த போதையான பானங்களைத் தயாரிக்கத் தெரிந்தபடி ஆடுகளையும், மாடுகளையும் இந்த மலைமுகட்டிலும் , சமதரையிலும் மேய்த்தபடி  மனிதர்கள் இங்கு வாழ்ந்திருக்கின்றார்கள். இயற்கையோடு இயைபான ஒரு வாழ்க்கை.

 

 

அத்தகைய நிலத்தின் ஒர்டன் சமவெளியை ஊடறுத்து இருக்கிற உலக முடிவினை ( World End) நோக்கித்தான் அந்த காலை நடந்துகொண்டிருந்தோம்.  ” உலக முடிவு” அமானுஷ்யமும் , கவித்துவமும் நிரம்பிய இடம். கண்டி நகரத்திலிருந்து சில மணி தூரங்கள் நாங்கள் செல்ல வேண்டியிருந்தது. 3159.8 எக்டேர் பரப்பளவைக் கொண்ட ஒர்டன் சமவெளியின் உள்ளேதான் உலகத்தின் முடிவு இருக்கிறது. 4000 அடி (1200 m) ஆழமுள்ள ஒரு செங்குத்து பாறையைத் தொடர்ச்சியாகக் கொண்டு மொத்தம் இதனுடன் சேர்ந்து மூன்று செங்குத்து பாறைகளை உலகத்தின் முடிவு நிலம் என்கின்றார்கள்.

 

 

3159.8 எக்டேர் பரப்பளவையும்  2130 மீட்டர் (7000) அடி உயரத்தையும் கொண்ட இந்த இயற்கையின் சுவர்க்க வெளியில் வாழ்ந்த மகா எளிய மனிதர்கள் நிச்சயமாக உலகின் தலைசிறந்த இரசிகனாக இருந்திருக்கக்கூடும். வெறும் வாய் வார்த்தைகளுக்காக நான் அப்படிச் சொல்லவில்லை. இந்த இடம் அத்தகையது. இயற்கையின் சுவர்க்கபூமி போல, உலகின் முதல் ஆணும் , முதல் பெண்ணும் வாழ்ந்திருந்த இடம்போல ஒரு வெளி இது. இங்குள்ள புல்லில் இருந்து ,மரங்கள், பூக்கள், பறவைகள், நீர்வீழ்ச்சி, நதிகள் என ஒவ்வொன்றும் இலங்கைக்கே உரிய தனித்துவமானவை. இங்குள்ள 98 வகையான பறவைகளில் 21 மட்டும்தான் இலங்கைக்குரியது.  பெரும்பாலான பறவைகள் அயல்நாடுகளில் இருந்து இங்கு வருகின்றன.  இந்த பூமி அவர்களின் குளிர்கால வாசஸ்தலம் போன்றது.  உலகின் அழகும் , கவித்துவமும் சேர்ந்த இயற்கையின் பிரமாண்டம் எல்லாம் பறவைகளுக்கு எப்போதும் தெரிந்திருக்கின்றது.

 

ஒர்டன் சமவெளியில் வாழ்ந்த மகா எளிய மனிதர்களுக்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் ஒருவனின் ஒரு நாள் எப்படியிருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கின்றேன். சாம்பர் மான்கள் நிரம்பி வழிகின்ற அந்த சமவெளியிலும் , மலைமுகட்டிலும் , மண்ணையும் , மரத்தையும் கொண்ட சிறு குடில்கள் இருந்திருக்கும். சில வேளைகளில் காட்டுயானைகள் நிறைந்த இந்தப்பகுதியில் மனிதன் பாதுகாப்பிற்காக மரங்களின் மேல் மரவீட்டை அமைத்திருக்கக்கூடும். மரப்பொந்துகளின் உள்ளே வசித்திருக்கக்கூடும். பெலிவுல் , பொகவந்தலா, அக்ரா ஆறுகளில் யானைகள் கூட்டம் கூட்டமாக நீர் அருந்திக்கொண்டும் , சேற்றில் விளையாடிக்கொண்டும்  இருந்திருக்கலாம்.

 

புல்லின் பனித்துளியைப் போர்வையாக்கி கோடிக்கணக்கான நட்சத்திரங்களையும் , நிலவினையும் சாட்சியாக வைத்து அந்த மலைவாசிகள் அவர்கள் காதலிகளைப் புணர்ந்திருக்கக்கூடும். இந்த ஒர்டன் சமவெளியில் கிடைக்கின்ற  நெலு (Strobilanthes sp) , போவிட்டியா ( Osbeckia sp) , பினர ( Exacum trioervium)  போன்ற இலங்கை தேசத்துக்கு மட்டுமே உரித்தான மலர்களை அவர்கள் அவர்களின் காதலிக்கு காதல் பரிசுகளாகக் கொடுத்திருக்கலாம். பலவர்ண ஓர்கிட் மலர்களில் மலர்கிரீடம் செய்து அவர்களது காதலிகளுக்குச் சூட்டி இயற்கையைச் சாட்சியாக வைத்து மணம் முடித்திருக்கலாம். அவர்களின் குழந்தைகள் இந்த புல்வெளியில் பிறந்திருக்கலாம். பாலுக்கும் , இறைச்சிக்கும் மந்தைகளை அவர்கள் கூடாரத்தில் வளர்த்திருப்பார்கள்.

 

ஒவ்வொரு அதிகாலையிலும் அவர்கள் அந்த மந்தைகளை ஒர்டன் சமவெளியிலிருந்து மலைமுகட்டின் உச்சிக்கு மேய்ச்சலுக்காகக் கொண்டு சென்றிருப்பார்கள். மலைமுகட்டின் முடிவில் உலக முடிவில் அமர்ந்தபடி இந்த வாழ்வை வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம், இல்லை வாழ்வைக் கொண்டாடிக்கொண்டு இருந்திருக்கலாம். நிச்சயம் அவர்கள் இசைப்பிரியர்களாக இருந்திருப்பார்கள். காட்டு மூங்கில்களில் புல்லாங்குழல்கள் செய்து  யாரோ ஒருவன் இந்த உலகமுடிவின் பாறையுச்சியில் அமர்ந்தபடி இசைத்துக்கொண்டிருந்திருப்பான். அது மலைகள் தோறும் எதிரொலித்திருக்கும். சூரிய அஸ்தமனத்திற்குப் பின் தன் மந்தைகளை அழைத்துக்கொண்டு அவன் கூடாரத்திற்குத் திரும்பியிருப்பான். குடிலின் முன்பாக நெருப்பு மூட்டியபடி சாம்பர் மான்களின் இறைச்சிகளை அவன் நெருப்பில் வாட்டியிருப்பான். பார்லியைக்கொண்டு அவர்கள் மதுபானத்தைத் தயாரித்திருப்பார்கள். அதை சுவைத்தபடி காதலுடன் வாழ்ந்திருப்பார்கள்.

 

இங்குள்ள கலோபியம் வகை , சிஸ்ஜியம் வகை, இராட்சச மரப்பன்னம் போன்ற மரங்களில் கோடிக்கணக்கான பறவைகள் கூடுகட்டி குஞ்சுகள் பொறித்து வாழ்ந்திருக்கும். நிச்சயம் இயற்கையோடு இணைந்த அழகும் , காமமும், காதலும் நிறைந்த வாழ்வொன்று அந்த மனிதர்களுக்கு இருந்திருக்கும்.

 

அதிசயம் என்னவென்றால் இன்றும்கூட அந்த நிலம் அப்படித்தான் இருக்கின்றது. இயற்கையின் ஆசீர்வாதம் நிரம்பிய பூமியாக. இங்குள்ள தொடுபலை மலைபற்றி சுவாரஸ்யமான கதையொன்று உள்ளது. சீதையை இந்தியாவிலிருந்து கடத்திய இராவணனின் புட்பக விமானம் இந்த மலையில்தான் தரையிறங்கியது என்று சொல்கிறார்கள். இப்படிப்பட்ட இடம் சீதையை எப்படி கவராது போனது. நிச்சயம் கவர்ந்திருக்கும். இப்படி இங்கிருக்கின்ற புல்லிலிருந்து மலை வரை ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு சுவாரஸ்யமான கதைகள். இப்படியெல்லாம் நினைத்தபடியே புல்வெளிகளையும், மலை முகடுகளையும் கடந்தபடி உலக முடிவினை அடைந்தோம். உலகத்தின் முடிவு நிலத்தையடைவது என்பது ஒரு பயணியின் மிகப்பெரிய கனவாக இருக்கக்கூடும். பயணங்களை நேசிக்கின்ற , கவித்துவமான நிலங்களில் எல்லாம் தன் கால் பதிக்கவேண்டும் என்று நினைக்கின்ற மனிதர்கள் நிச்சயம் பயணம் செய்யவேண்டிய இடமாக உலக முடிவைச் சொல்வேன்.

 

உலகத்தின் முடிவின் நிலம் இப்படித்தான் இருந்தது, உலகத்தின் முடிவு இவ்வளவு அழகானதா எனப் பிரமிக்கின்ற அளவு. எதுவுமற்ற ஒரு வெளி.

பறவையின் உதிர்ந்த இறகின் அசைகின்ற லாவகம் இருந்தால் எதுவுமற்ற இந்த மலைமுகட்டின் ஆழத்திற்குச் சென்று உலாவ முடியும். ஆனால் பாருங்கள் எடையற்ற இறகு ஒன்று எப்போதும் எதுவுமற்ற வெளியில் காற்றிற்கு ஏற்ப  மிகவும் உயர்ந்து பறக்கும். லாவகமாக அசைந்து கொடுக்கும்.

 

எதுவுமில்லாத  ஒன்றைப் பார்ப்பதற்கு உங்களுக்கு நீண்ட பொறுமை வேண்டும், நிறைய சக்தி வேண்டும்,  துணிவு வேண்டும். மனிதன் குழம்புவது எதுவுமற்ற ஒரு வெளியில்தான். உருவமற்ற ஒன்றை ஆகர்சிப்பது எப்படியென அவனுக்குத்  தெரியாது .  அதன் முன் மண்டியிடுவது எப்படியெனத் தெரியாது. அதனிடத்தில் எதுவும் இல்லாது மௌனியாகுதல் எப்படியெனத் தெரியாது. உருவமற்ற ஒன்றை அவன் மறக்க முனைகிறான். உருவமற்ற ஒன்றை நிறைத்துக்கொள்கிற அளவு அவன் வாழ்வோ மனதோ போதுமானதாக இல்லை. இந்த உலகிற்கு  அப்பாற்பட்ட எதற்கும் உருவமில்லை. இருப்பதெல்லாம் எதுவுமற்ற ஒரு வெற்று வெளி .மாயையான ஒரு வெளி தான் எல்லாம்.

 

 

 

வெற்றுத்தாள்கள் போலவும் பஞ்சுக்குழம்புகள் போலவும் இருக்கிற இந்த மாயை நிறைந்த சூனிய வெளியில் நீங்கள் உங்கள் வானவில்லை வரையுங்கள். உங்கள் நம்பிக்கையின், காதலின், வெறுப்பின், இருப்பின் ,இன்மையின், ஒரு துளியை தெளியுங்கள் உங்களுக்கான ஒரு மாய நம்பிக்கையைப் பிடித்துக்கொண்டு வெளியே வாருங்கள்.

 

எதுவுமற்ற ஒன்றுதான் மனிதனை குழப்பமடையச்செய்கிறது. கற்றதும் அறிந்ததும் சூனியவெளியில் எதுவுமற்றதாகின்றது. இந்த உலக முடிவின் நிலம் இதுவரை நீங்கள் உங்கள் பயணங்களில் கண்டடையாத முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை உங்களுக்குத் தரக்கூடும்.

 


  • நர்மி
Previous articleஒரு நேர்காணல் -ச.இராகவன்
Next articleகு.அ.தமிழ்மொழி கவிதைகள்
Subscribe
Notify of
guest
9 Comments
Most Voted
Newest Oldest
Inline Feedbacks
View all comments
Radhi
Radhi
2 years ago

👌…

Raja Narmi
Raja Narmi
2 years ago
Reply to  Radhi

❣️

Kulashekar T
Kulashekar T
2 years ago

உலக நிலத்தின் கடைசிப் புள்ளி. அதிசயங்களும், பரவசங்களும் நிறைந்திருக்கிறது. கற்றதும் பெற்றதும் சூனிய வெளியில் எதுவுமற்றதாகிறதை உணர்கிற தருணம், இயற்கை இதயப்பூர்வமாக ஏந்திக் கொள்கிறது. தீரா அன்பின் பிரிய வந்தனங்கள் நர்மி!

Raja Narmi
Raja Narmi
2 years ago
Reply to  Kulashekar T

❣️❣️❣️❣️❣️❣️

நரேஷ்
நரேஷ்
2 years ago

“உலக முடிவிற்கே” சென்று வந்த உணர்வை ஏற்படுத்திய கட்டுரை!

Raja Narmi
Raja Narmi
2 years ago

Naresh Sri Lanka vanthathum povam

நரேஷ்
நரேஷ்
2 years ago
Reply to  Raja Narmi

நிச்சயமா, குடும்பமா ஒரு விசிட் 🙂♥

M.M.Bysel
M.M.Bysel
2 years ago

கட்டுரை முடிவை நோக்கி நகர்ந்து அண்மைக்கே வருகிறது. எழுத்து நடை புதுமை

Raja Narmi
Raja Narmi
2 years ago
Reply to  M.M.Bysel

நன்றி ❣️