என்புதோல் உயிர்


ல்லக்கு மெல்ல நகர்ந்தது. வெளியில் நிலவொளி தவழ்ந்தது. முன்னே ஐந்து பல்லக்கும், பின்னால் ஐந்து பல்லக்கும் வர, நடுவில் புனிதவதியின் பல்லக்கு. உற்ற துணையாக உடன்வரும் உறவினர்கள் உறக்கமின்றிப் பேசிக்கொண்டு வந்தார்கள். சிலர் பல்லக்கில் உட்கார்ந்து கால் வலி கண்டது என்று இறங்கி நடந்து வந்தார்கள்.

புனிதவதி தன்னுடைய பயணத்தைப் பற்றி நினைத்துப் பார்த்தாள். கப்பல்களில் இருந்து பொருட்களை ஏற்றுவதும், இறக்குவதுமாக இருக்கும் துறைமுகத்தில் இருந்து பெருஞ்சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். பொழுது குளிரத் தொடங்கும் மாலைப் பொழுதில்தான் வேலைகள் உற்சாகமாக நடக்கும். சுமை இறக்குவோர்கள் சத்தம் போட்டுக்கொண்டு வேலை செய்வார்கள். வியாபாரிகள் பொருட்களை வாங்கிச் செல்ல விலை பேசிக் கொண்டிருப்பார்கள். நவரத்தினங்களில் இருந்து, தின்பண்டங்கள் வரை எல்லாம் வாங்கலாம் துறைமுகத்தில்.

வியாபாரம் தழைத்தோங்கும். தன்னுடைய நகரத்திற்குச் சப்தமே ஆதாரம். நள்ளிரவுகளில் சப்தம் பெருகும். மக்கள் ஓரிடத்தில் நின்றுகொண்டே இருக்க மாட்டார்கள். பொருட்கள் கைமாற வேண்டும் என்றால் மனிதர்கள் சுற்றி வர வேண்டும்.

ஓய்வின்றி மனிதர்கள் பொருள் தேடி விரைந்து கொண்டிருக்கும் காரை நகரத்தின் பெரும் செல்வந்தரின் மனைவி நான். என் தந்தையோ தனதத்தன். தனத்திற்கு அதிபதி. இதோ நான் பயணித்துக் கொண்டிருக்கும் இந்தப் பல்லக்குப் போதும் என் செல்வ வளமையை எடுத்துக் காட்ட.

நிலவொளி, என் பல்லக்கில் பதிக்கப்பட்டுள்ள மாணிக்கக் கற்களின் ஒளியினைப் பார்த்து, தடுமாறி, சூரியன் வந்துவிட்டானோ என்ற ஐயத்தில் மேற்கு நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. பல்லக்கில் தொங்கும் திரைச்சீலைகள் சீனத்து மென்பட்டு. மென்பட்டில் வரையப்பட்டுள்ள சித்திரங்கள், கையருகில் வானத்து நட்சத்திரங்களை வாரி இறைத்துக் கொண்டிருந்தன.

என் உடலின் இளமை, எனக்குச் சுமையாக நின்று, என்னை வருத்துவதுபோல், செல்வமும் சுமையாகவே நிற்கிறது. உடலில் இருந்து கமழ்ந்து கொண்டிருந்த சந்தனத்தின் வாசமும், ஜவ்வாதின் மணமும் என்னை அலைக்கழித்தன. பருத்த இரு கொங்கைகள், நீரோட்டத்தில் இருக்கும் தென்னை குருகுகளாகப் பருத்திருந்தன. விழிகளில் பெருக்கெடுத்தோடும் நீர், என்னின் இளமுலையை தட முலையாக வளர்த்திருந்தது.

பரமதத்தனுடன் வாழ்ந்த நாள்கள் வண்ணம் மங்கிய ஓவியம்போல், நினைவுகளில் வலுவிழந்து நிற்கின்றன. கொடும் பிரிவெனும் துயரைத் தந்துவிட்டுச் செல்லக் காரணம் என்ன?

இரண்டு மாங்கனிகள் என்னுடைய வாழ்க்கையை நிராதரவாக்கி விடுமா? உணவின் சுவை கூட்டுவதற்காக கனிந்த கனியா அவை? என் இல்லற வாழ்வில் கொடிய சூறாவளியைக் கொண்டு வருவதற்காக இறைவனால் படைக்கப்பட்ட கனியா?

உனக்குக் கொடுக்கப்பட்ட கனியை, நீ உணவிற்காக இல்லம் வரும்பொழுதே கொண்டு வந்திருக்கலாம். வருவதற்குமுன் கொடுத்துவிட்டாய்.

அடியார்கள் என்றாலே சோதிக்க வருபவர்கள் தானோ? உணவுத் தயாராகிக் கொண்டிருக்கிற வேளையில், “அம்மா, உணவிடு” என்று வந்து நின்றவருக்கு நான் சொல்ல முடியும்? “உணவுத் தயாராகிக் கொண்டிருக்கிறது, கறியமுதோடு இன்னும் சிறிது நேரத்தில் உணவு படைப்பேன்” என்றதற்கு, அடியார், “பசி பொறுக்க இயலாது தாயே, இருப்பதைக் கொடு” என்றார். நீர் சோறு மட்டுமே இருக்கிறது என்பதைச் சொல்லியும், உணவுண்ண விருப்பம் தெரிவித்தார் அடியார்.

நீர் சோற்றை அடியாருக்குக் கொடுக்கச் சென்ற கணத்தில்தான் நீ கொடுத்துவிட்ட இரண்டு மாங்கனிகள் கண்ணில் பட்டன. இருப்பது நாமிருவர். ஆளுக்கொரு மாங்கனி. என் பங்கை அடியாருக்கு வழங்கிவிடலாம் என்று, நீர் சோற்றுடன், மாங்கனியையும் கொடுத்தேன். நீர் சோற்றுக்கும் மாங்கனிக்கும் மிகப் பொருத்தம் என்று வயிறு குளிர்ந்த அடியார் என்னை வாயார வாழ்த்திச் சென்றார்.

உச்சியிலிருந்து மேற்கு நோக்கி சாயத் தொடங்கிய பிற்பகல் வேளையில், நான் உனக்குப் படைத்திட்ட உணவில் என்ன குறை? நீ விரும்பி கேட்கிறாய் என்றவுடன், இறையருளால் இன்னொரு மாங்கனியையும் பெற்று வழங்கினேனே? “இதோ வருகிறேன்” என்றுகூடச் சொல்லாமல் வெளியில் சென்ற நீ இத்தனை ஆண்டுகளாக எங்கு சென்றாய்?

காரணம் அறியாமல் கணவன் விட்டுச் சென்ற மனைவிக்கு என்னென்ன அவப்பெயர் உண்டாகும் என்று என்றாவது நினைத்திருக்கிறாயா? நம் உறவினர்கள் எல்லோரும் என்னைச் சந்தேகித்தார்கள். என் நடத்தையில் இருந்த பிறழ்ச்சியினால்தான், நீ யாரிடமும் சொல்லாமல் வெளியேறிவிட்டாய் என்று என் பத்தினித்தன்மையை ஐயுற்றார்கள். வெளியில் சொன்னால் உனக்கு அவமரியாதை என்று நீ இரவோடு இரவாக வேறு தேசம் சென்றுவிட்டதாகச் சொல்கிறார்கள்.

மயிலுக்கு ஒப்பான மென்நடையும், இளைய பெண் மானைப் போன்ற என் தோற்றமும், பார்ப்பவரை ஈர்க்கும் என் இரு பருத்த முலைகளும், அவர்களின் அச்சத்திற்கு வலுவூட்டின. பேடை மயிலென இவள் இருந்திருந்தால், பரமதத்தன் வேறு இடம் செல்ல வேண்டிய அவசியம் என்ன என்று வணிகர்களின் வியாபாரக் கூச்சலுக்கிடையில் விவாதம்.

அடியார்களுக்கு உணவிடுகிறேன், அடியார்களின் புகழ் பாடுகிறேன் என வீட்டிற்குள் எப்பொழுதும் அந்நிய ஆடவர்களின் நடமாட்டம் என்ற புறணி. பிறந்தது முதல், தாய் வீட்டில் பழகிய நற்குணமான, அடியார்களுக்கு உணவிடுதலும் பெருமானின் புகழைப் பாடுதலும் நீ வீட்டைவிட்டு வெளியேறியவுடன் எனக்கு அவப் பெயர்களைத் தேடித்தந்தன.

என் பதியே, உன்னில் பாதி நான். உன் இல்லற வாழ்வின் இணையாக என்னை ஏற்ற நீ, காரணங்கள் ஏதும் சொல்லாமல், கள்வனைப் போல் வெளியேறியதேன்? பசி எனும் பெருநெருப்புப் பிடித்த வயிற்றுடன் நம் இல்லம் அணுகுவோருக்கு உணவிட முடியாமல், அனலில் இட்ட நெய்யென நான் கொழுந்துவிட்டு எரிந்ததை நீ அறிவாயா?  பகல் முழுக்க அன்னமிட முடியா பெரு நெருப்பு. இரவு முழுக்க, உன் பிரிவின் பெரு நெருப்பு. இவ்வுடல் நெருப்பின் யாக குண்டமாக மாறிவிட்டது.

காரணம் சொல்லாமல் வெளியேறினாய். நீ வெளியேறியதின் காரணம் சிந்தித்தும், கேட்பவர் வார்த்தைக்கு, விடைகூற முடியாமலும் நான் இருக்கும் நிலையை அறிந்திருப்பாயா? புள்ளினங்களின் இனிய சங்கீதம் தேவையில்லை, உன் குரலொலியே நூறு புள்ளினங்களின் இனிமை என்று புகழ்வாய். இறைவனின் புகழைக்கூட நான் இப்பொழுதெல்லாம் பாட முடிவதில்லை. “கட்டிய கணவன் கைவிட்டுச் சென்ற பெண்ணுக்கு இறைவழிபாடும், துதியும் தேவையா?” என்று என்னை இகழ்ந்தனர்.

உன் அன்பையும் பாதுகாப்பையும் நான் இழந்து நின்றதைவிட உறவினர்களிடையே பெற்ற அவமதிப்புகளும் இழி சொற்களுமே என்னை வருத்தின.

காவல் நிரம்பிய பாண்டியர் அரசாளும் மதுரையம்பதியில் நீ இருப்பதாக வந்த சேதியில்தான் என் உயிர் துளிர்த்திருக்கிறது.

என்னுடன் வரும் பெண்களைப் பார்! அவர்களிடம் என்னைப் பற்றிய கவலை இருப்பதைவிட, நீ ஏன் என்னை விட்டுச் சென்றாய் என்பதை அறியும் ஆவல்தான் அதிகம். நானோ, உன் நாவிலிருந்து வரப்போகும் சொற்களுக்காகக் காத்திருக்கிறேன். என்னைக் குற்றவாளி கூண்டிலிருந்து விடுவித்துவிடுமா உன்னுடைய சொற்கள்?

மதுரையைச் சென்றடைந்த பல்லக்கு, பரமதத்தனின் திருமாளிகையின் முன்னால் நின்றது. தன்னுடைய மனதுக்கினிய மணாளனின் முன், பிச்சை கேட்கும் அடியார்போல் வாசலில் நிற்கும் அவலம் புனிதவதியின் கண்களில் நீர் பெருக்கியது. அவள் தட முலைகள் கண்ணீரில் நனைந்தன. கண்களை இறுகி மூடிக் கொண்டாள்.

காரணமே சொல்லாமல் கிளம்பி வந்தவன், இத்தனை ஆண்டுகளில் ஒருமுறைகூடக் கண்ணில் படாமல், வேறு நாடு வந்து, மாளிகைகட்டி வாழ்கிறான் என்றால் என்ன பொருள்? ‘என் நினைவுகள் அற்றுப் போயின, நான் இனி அவனுக்குத் தேவையில்லை’ என்பதுதானே இதன் பொருள்? காரணம் எதுவாயினும் எனக்குச் சொல்ல வேண்டியதில்லை என்று முடிவுக்கு வந்துவிட்டவனிடம் இருந்து என்ன நீதி கிடைத்துவிட முடியும்?

அசையும் திரைச் சீலையின் வழியே பரமதத்தன் குடியிருப்பதாகச் சொன்ன திருமாளிகைக் கண்ணில் பட்டது. செல்வத்தின் செழிப்பு அதன் அமைப்பில் பிரதிபலித்தது. இல்லற வாழ்வின் மகிழ்ச்சி, வாசலில் இடப்பட்டிருந்த கோலத்தில் தெரிந்தது. இல்லத்தின் உள்ளே இருந்து வந்த இனிமையான நெய் விளக்கின் மணத்தில் நிறைந்த மனமொத்த நல்வாழ்வு புரிந்தது.

ஏழு ஆண்டுகளாகத் தான் வடித்த கண்ணீரின் துயரம் வீணானது. பிரிவுத் துயரில் வதங்கிக் கொண்டிருக்கிறேன் என்பதை உணர்வதற்கான நினைவுகள்கூட அவனிடம் மீதம் இருக்காது என்பதை உணர்ந்தபோது புனிதவதிக்குத் தலை சுற்றியது.

பல காத தூரங்களைக் கடந்து, பரமதத்தனின் வீட்டின் முன்னால் நின்றுகொண்டு என்ன யாசிக்கப் போகிறோம்? இல்லற வாழ்வா? இரு மாங்கனிகளுக்கு இடையில் என்றோ நழுவிப் போனதே அது?

அடியார்களுக்கு உணவு படைத்து இறை சேவை செய்வதற்காக, தனக்கு வேண்டிய பரமதத்தனின் மனைவி என்ற அடையாளமா? இனி, அது அடையாளம் மட்டுமே. தனக்கு உரிமையில்லாமல் போன அவனிடம் கோருவதற்கு ஒன்றுமில்லை. உடலின் வனப்பையெல்லாம் அனுபவித்து மகிழச் செய்ய, அவனை வேண்டி நிற்கப் போகிறோமா? திருமணத்தில் அணிந்த மலர்மாலையில் இருந்து கமழ்ந்த நறுமணம் மறைவதற்குள், தன்னைவிட்டு வெளியேறிய கணவனிடம் இந்த உடலுக்கு இனி என்ன சுகம் கிடைக்கும்? அவனுக்காகவே காத்திருந்த உடல்.

புனிதவதியின் கண்களில் பெருக்கெடுத்துக் கொண்டிருந்த கண்ணீரின் ஊற்று அடைபட்டது. ஆண்டுகள் பலவாக அழுது ஆற்றிக் கொண்டிருந்த புனிதவதி, தன் வாழ்க்கையின் இல்லற வாழ்க்கை முற்றுப்புள்ளியை நோக்கிச் சென்றதை அறிந்தாள்.

திருமாளிகையின் உள்ளிருந்து, மலர்க்கொத்துப் போன்ற சிறு  குழந்தையுடன் பரமதத்தன் ஓடி வருவது தெரிந்தது. அவன் பின்னால் இள மயிலின் நளினத்துடன் ஒரு பெண்மணி. தன்னைப் பார்த்த, பரமதத்தனின் முகத்தில் தெரிந்த அச்சத்தில் இருந்து எல்லாம் புரிந்தது.

பல்லக்கின் அருகில் ஓடிவந்து நின்றான் பரமதத்தன். உறவினர்கள் கூடினர். கவலை, ஆச்சர்யம், மகிழ்ச்சி என ஆளுக்கொரு உணர்வுக் கலவையில் நின்றிருந்தார்கள். பரமதத்தன் பல்லக்கின் திரையை விலக்க முற்படவில்லை. அவன் இருகரம் உயர்த்தித் தன்னை வணங்குவதுபோல் நிற்பது தெரிந்தது.

“மந்திரத்தில் மாங்கனி அருளும் வல்லமை படைத்த புனிதவதியே, உன்னுடன் வாழ்வதற்கு எனக்குத் தகுதியில்லை. நீ தெய்வத்தன்மை பொருந்தியவள். வணங்குவதற்கு ஏற்றவள். இறைவியைப் போன்ற உன்னை என் மணவாட்டியாகப் பெற்றது என் முன் ஜென்ம பேறு. இறைவியைத் தொழுவதுதான் சிறந்தது. நான் தொழுவதற்குரிய சிறந்த பெண்ணாகிய புனிதவதியே, என்னைப் பொறுத்தருள்வாய். உன்னைவிட்டு விலகுவது என்று மந்திர மாங்கனியை கண்ட க்ஷணத்திலேயே நான் முடிவு செய்துவிட்டேன். உலகு தொழத் தோன்றியவள் நீ. என் இல்லத்தின் மனையாளாக இருப்பது பொருத்தமல்ல. திரை கடந்து சென்றேன். செல்வங்கள் சேர்த்தேன். இவளை மணமுடித்தேன். உன் நினைவுகளை மறக்க முடியாமல்தான் என் மகளுக்குப் புனிதவதி என்று உன் திருநாமத்தை வைத்துள்ளேன். எம்மை ஆசீர்வதியும் தாயே” என்று சொல்லிய பரமதத்தன், தன் மனைவி மகளுடன் புனிதவதி இருந்த பல்லக்கின் முன் விழுந்து வணங்கினான்.

புனிதவதிக்கு உடல் நடுங்கியது. இல்லற வாழ்வின் நாயகன், தன் காலில் விழுவதா? அவள் தொழத்தக்கவளா? ‘அம்மையே’ என்றழைக்கிறானே? உடல் நாணியது.

பல்லக்கைக் கிளம்பச் சொன்னாள்.

நீண்டு அலைபாயும் இந்தக் கருங்கூந்தலை இனி அவனுடைய விரல்கள் மேவி விடாது. பிறை நிலவை ஒத்த இந்த நெற்றியில் அவனுடைய திருநாமம் சொல்லி, திலகம் பொலியாது. குவளை மலர்களைப்போல் சிவந்த சிறு இதழ்களில் அவனின் இதழ்கள் தேன் பருகாது. அவன் விரும்பி ஏற்கும் என்னிரு கொங்கைகளை அவனுடைய மென்விரல்கள் தீண்டாது. இளமையின் வனப்பில் மிளிரும் இந்த உடல் இனி அவனுக்குத் தேவையில்லை.

உடலுக்கு நாதனாக இருந்த பரமதத்தன், என்னை நீங்கிவிட்டானா? நான் உடன் உறைவதற்கு ஏற்றவள் அல்ல, தொழுவதற்கு ஏற்ற தெய்வத்தன்மைப் பொருந்தியவள் என்று என்னைப் புறக்கணித்து விட்டானா?

பொங்கும் இளமையுடன் கணவன் கைவிட்டுச் சென்ற அவச்சொல்லுடன் தான் வாழ வேண்டுமா? இந்த உடல் வனப்பையும் இளமையையும் என்ன செய்வேன்? உடன் வந்தவர்கள் பரமதத்தன் தன்னை விலகிய காரணம் புரிந்திருப்பார்கள். தன்மேல் படிந்திருந்த யூகங்களின் தூசி மண்டலம் இனி மெல்ல விலகலாம். பரமதத்தன் தொட்ட இந்தப் பழைய உடலுடன் இனியொரு புதுவாழ்வு தனக்கில்லையென்ற எண்ணம் துளிர்த்தது.

பல்லக்குப் பெரும் ஆலமரக்காட்டை கடந்து கொண்டிருந்தது. தண்ணென்ற குளிர்ச்சியும், புள்ளினங்களின் இனிமையான குரல்களும் புனிதவதியின் கண்ணில் பட்டன. ஆலமரக்காடு.

புனிதவதியின் நெஞ்சுக்குள் சிறு ஒளி.

பல்லக்கை நிறுத்தச் சொன்னாள். திரைச்சீலைகளை விலக்கி, சுற்றுப்புறம் பார்த்தாள். மரங்களைத் தவிர வேறொன்றும் கண்ணில் படவில்லை. தன் இல்லத்தைத் தவிர வேறோரு இடத்தில் தன் பாதங்கள் பட்டறியாத புனிதவதி ஆலமரக்காட்டில் இறங்கினாள்.

உடன் வந்தப் பெண்கள் வியந்தார்கள். கணவன் கைவிட்ட துயரத்தில் புனிதவதிக்குச் சித்தம் கலங்கியதோ என்று ஐயுற்றார்கள். புனிதவதி, தன்னை இங்கே விட்டு, எல்லோரையும் ஊர் திரும்பச் சொன்னாள். மருண்டு நின்றது கூட்டம்.

“ஆலமரக்காடே இனி என் வசிப்பிடம். திருவாலங்காட்டு இறைவனே இனி என் அடைக்கலம். பரமதத்தனுக்குச் சொந்தமான இந்த உடலின் வனப்பைத் துறப்பேன். பிறர் என் அழகைப் பார்த்து, விருப்பம் கொள்ளவும், பரிவு காட்டவும் இடம் கொடுக்காமல், உடலின் தசைகள் வற்றி, யாரும் பார்க்க விரும்பாத பேயுரு கொள்வேன். தனக்கு வேண்டாதபோது, மயில் தன் இறகுகளை உதிர்ப்பதுபோல், நான் என் உடலின் வனப்பை உதிர்ப்பேன். திருவாலங்காட்டு இறைவனின் பெருமைகளைப் பாடிக்கொண்டு, பேயுருவில் நான் உலா வருவேன்.”

“பேயுருவா?” அதிர்ந்தார்கள் உடன் வந்த பெண்கள்.

“தெய்வத்தன்மை பொருந்தியவள் என்று பரமதத்தன் கூறினானே? தெய்வாம்சம் பொருந்திய நீ பேயுரு கொள்ளலாமா?”

“பேயும் தெய்வம்தான். என்னை ஆளும் ஆலமரச்செல்வன் பேயுருவில்தான் ஆலமரக்காட்டில் குடியிருக்கிறான். காமனை எரித்த மூன்றாவது கண்ணுடன் அவன் ஊர்த்துவத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறான். சிவனிடம் தோற்ற காளி, தில்லையின் புறப்பகுதியில் குடியேறினாள். பரமதத்தனிடம் தோற்ற நானும் ஆலமரக்காட்டிற்கு குடியேறுகிறேன். அங்கே அகந்தை அழிந்தது. எனக்கோ இளமையும் காமமும் தொலையட்டும்.”


“சுடலை பூசி, சுடலைக் காட்டில் ஈசன் திருநடனம் புரிகிறான். பேயும் பிசாசுகளும், அவனின் திருநடனத்தைக் கண்டு களிக்கின்றன.”

“கூகைப் பேய்களும், குறு நரிகளும், பருந்துகளும், ஆந்தைகளும் அலறும் சுடலைக் காட்டில் பேய்களுடனும் பிசாசுகளுடனும் நீ தனித்திருக்க இயலாது மகளே. இறந்தவர்கள் வாழுமிடமது. உயிருள்ள நீ, பேய்களுடன் வாழ இயலாது.”

“உயிர் நீங்கிய உடல் எல்லாம் பிணமே. பரமதத்தன் என் உயிராக இருந்தான். அவன் நீங்கிய இந்த உடல் இனி பிணமே. பிணம் இருக்க வேண்டிய இடம் சுடலைக் காடு. என் நாமமும் இனி அழியட்டும். புனிதவதி என்ற பெயர் மறைந்து, ‘காரைக்காற் பேய்’ என்றே நான் அழைக்கப்பட வேண்டும்.”

“இறைவனின் அமைதி ரூபங்கள் எத்தனையோ இருக்க, சுடலை பூசி ஆடும் இறைவனின் காலடியைத் தேடிச் செல்வது உனக்கு அழகல்ல மகளே. பேய்களும் பிசாசுகளும் வாழ்விலிருந்து வெளியேறியவை.”

“வஞ்சிக்கப்பட்டவர்களும், நிராசையில் மறித்தவர்களும், கைவிடப்பட்டவர்களுமே பேய்களாக மாறுகிறார்கள். கைவிடப்பட்டவர்களுக்காகவே இறைவன் சுடலையில் காத்திருக்கிறான். அவன் வாழ்வின் நிராசையில் உள்ளவர்களைத் தன் நடனத்தின்மூலம் மகிழ்விக்கிறான். சுடுகாட்டில் திருநீறு பூசி மண்டை ஓடுகளுடனும், எலும்புகளால் ஆன மாலைகளுடனும் இறைவன் ஆடும் நடனத்திற்கு நான் பண்ணிசைப்பேன். கணவனைப் பிரிந்ததால், அடியார்களுக்குச் சேவை செய்ய முடியாமல் போன நான், அவன் காலடியிலேயே அமர்ந்து, அவன் புகழ் பாடுவேன்.

கட்டிய மனைவியை தாயே என்றழைத்து, பரமதத்தன் என்னை நிராகரித்தான். அன்னையில்லா இறைவனுக்கு இன்று முதல் நான் அன்னையாவேன். அவனின் அன்னையும் நான்தான். அவனின் முதல் பக்தையும் நான்தான். அவனின் காலடியில் வெறும் என்புடம்புடன் அமர்ந்திருப்பேன். அறவன் ஆடும்போது, அவன் அடியில் நான் இருக்க வேண்டும் என்பது மட்டுமே என் பிறவி விருப்பம்.

என் வாழ்வின் இன்பத்திற்குத் தடையாக இருந்தது இரண்டு. என் இளமையின் வனப்பு. பொலியும் தசையழித்து, எலும்புரு கொள்கிறேன். பரமதத்தன் என்னைவிட்டுச் செல்லக் காரணம் என் தெய்வத்தன்மை. தெய்வத்தன்மைத் தொலைத்து பேயுரு கொள்கிறேன். ஊர்த்துவத் தாண்டவம் ஆடும் இறைவன் இனி என்னையும் ஆட்கொள்வான்.”

புனிதவதி விழுதுகள் நிறைந்து அடர்ந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்தாள்.

அவள் உடலின் தசைகள் சுருங்கத் தொடங்கின.


  • அ.வெண்ணிலா     

நன்றி

ஓவியம்: சுந்தரன்

Previous articleவாராணசி கவிதைகள்
Next article“எழுத்து என் மூச்சு என்று சொல்லமாட்டேன்.” -எழுத்தாளர் நா.விச்வநாதன் உடனான நேர்காணல்
Avatar
தமிழக எழுத்தாளரும், கவிஞரும் ஆவார்.கவிஞர், சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர், நாவலாசிரியர், ஆசிரியர், சிறு பத்திரிகை ஆசிரியர் என பன்முக ஈடுபாடுகளுடன் தமிழ் உலகில் இயங்கிவருகிறார்.பெண்ணியம் சார்ந்த கருத்துகளை முன்னெடுத்து இலக்கியம் படைத்து வருவது வெண்ணிலாவின் தனித்துவமாகும். அன்றாட வாழ்வின் இன்னல்களை புனைவுகள் ஏதுமின்றி படைப்பாக்குவது இவரது ஆற்றலாகும். இவர் எழுதிய படைப்புகள் ஆங்கிலம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நூல்கள் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி அளவிலான பாடத்திட்டங்களில் பாடமாகவும் இடம்பெற்றுள்ளன. 2009-2010 ஆம் ஆண்டு காலத்தில் தமிழகத்தின் சமச்சீர் கல்வி பாடத்திட்டக் குழுவில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி புதிய பாடப்புத்தக உருவாக்கத்தில் பங்களிப்பு வழங்கியுள்ளார்.

4 COMMENTS

  1. மாங்கனிகளுள் ஒன்றை மனைவியும் ருசிக்கட்டுமென்னும் மனம் படையாதவனா பரமதத்தன்? எல்லாம் அறிந்தவன் எனில் வேண்டியதைத் தாராமல் வேறொன்றை அதீத ருசியோடு அருளியதேன் அந்தப் பரமன்? இறைவனின் அருளைப் பெற்றதால் துணைவன் தன் காதலைத் துறத்தலென்ன நீதி? கொண்டவளின் பெருமை தன்னிலும் துளி உயர்ந்தாலும் உடலால் தள்ளி நிற்பதும் உள்ளத்தால் தள்ளி வைப்பதும்தானே அன்றுதொட்டு இன்றுவரை அவன் கையாளும் ரகசிய உத்தி. இரண்டைக் கொடுத்து நான்காக்கி, இல்வாழ்வைக் கெடுத்து துறவாக்கி, பெண்ணுரு அழித்துப் பேயாக்கி உண்மை உணர்த்திவிட்டான் ஆண்டவனும் அன்றே. இவனும் சிவனும் ஒன்றல்ல, இருவர் தொழுதல் நன்றல்லவென்றே.

    • அ.வெண்ணிலா வின் ‘என்புதோல் உயிர்’ சிறுகதை புனிதவதியின் உணர்வுகள், இளமைப் பருவத்தின் வாட்டம்.. இறுதியில் ஆலமரக்காடு வாசம் என வாசிக்க வாசிக்க ஏக்கப் பெருமூச்சு.அருமையான நடை.
      –தஞ்சிகுமார்.

  2. கணவனின் துரோகத்துக்கும், ஊராரின் பழிக்கும் பதிலாக கருணையைப் பரிசளித்த காரைக்குடிப் பேய்! தனக்கும் சேர்த்தேதான்! தெய்வத்தன்மை இடையூறானால் பேய்த்தன்மை கொண்டு கருணை செய்!!
    நன்றி வெண்ணிலா மேம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.