எறும்பு தின்னி Pangolin (Manis crassicaudata)

 தமிழகத்தில் காணும் காட்டுயிர்களில் எறும்புதின்னி ஓர் இரவாடிப்பாலூட்டியாகும்.அரியமாறுபட்ட உடலமைப்பும் வாழும் முறையிலும் தனித்து விளங்குகிறது.  எறும்பு தின்னி, எறும்பு உண்ணி, அழுங்கு, அலுங்கு என பல பெயர்களில்அந்தந்தபகுதிகளில்பலவாறு அழைக்கப் படுகிறது.ஆசியாவில்வெப்பமண்டல காடுகள் முதல் வறண்டபாலைவனங்கள்வரைஎறும்புதின்னிகள்(Pangoli)பலவிதமான வாழ்விடங்களில் வாழ்கின்றன.

உலகில் எட்டு வகையான எறும்பு தின்னிகள் உள்ளன. ஆசியாவில் நான்கு எறும்புதின்னி இனங்கள் காணப்படுகின்றன. அவை இந்திய எறும்புதின்னி (Indian Pangolin), சீன எறும்புதின்னி (Chinese Pangolin), சுந்தா எறும்புதின்னி (Sunda Pangolin) மற்றும் பலவன் எறும்புதின்னி (Palawan Pangolin) ஆகியவைகளாகும். இந்தியாவில் காணப்படும் எறும்புதின்னிகள் உயர்ந்த இமய மலைபோன்ற பகுதிகளிலும் அதாவது 2500 மீட்டர் உயரத்திலும் மற்றும் வறண்ட பகுதிகளிலும் பரவலாகக் காணலாம். ஆசிய நாடுகளான பங்களாதேஷ் பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இலங்கையிலும் இவை காணப் படுகின்றன. ஆனால் சீனாவில் காணப்படும் எறும்பு தின்னி இங்கு காணப்படும் எறும்பு தின்னியிலிருந்து மாறுபட்டதாகும்.

தமிழகத்தில் முன்னர் அதாவது 30 ஆண்டுகளுக்கு முன் காணப்பட்ட எண்ணிக்கையிலிருந்து தற்போது மிகவும் குறைந்த எண்ணிக்கையில் அரிதாக எங்காவது காணப்படுகிறது.   இவை வனங்களிலும் அதனை ஒட்டிய வேளாண்காடுகளிலும் மற்றும் வறண்ட பகுதிகளிலும் காணலாம்.

இந்தியாவில், தமிழகத்தில் காணப்படும் எறும்பு தின்னி இந்திய எறும்புதின்னி என அழைக்கப்படுகிறது. இவை தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை இவற்றைச் சார்ந்த வன காடுகளிலும் அதனை ஒட்டிய வேளாண்மை புரியும் பூமிகள், தரிசு நிலங்கள்(காடுகள்) போன்றவற்றிலும் காணலாம். எறும்பு தின்னிகள் பொதுவாக ஒதுங்கி வாழும் இயல்புடையது. அமைதியானது.

அதன் உடலில் பெரிய செதில்கள் ஒன்றுடன் ஒன்று வரிசையாக அமைந்துள்ளன. அவை கவசமாக செயல்படுகின்றன. புலி போன்ற வேட்டை விலங்குகளுக்கு எதிராக தற்காப்புக்காக இது தன்னை ஒரு பந்து (வால்வேஷன்) போன்று சுருட்டிக் கொண்டு படுத்துக் கொள்ளும்.அதன் செதில்களின் நிறம் அதன் சுற்றுப்புறங்களில் பூமியின் நிறத்தைப் பொறுத்து மாறுபடும் (பச்சோந்தி போலல்லாமல்). மோப்ப சக்தியின் மூலம் அதன் நீண்ட கால் நகங்களைப் பயன்படுத்தி மண் மேடுகளிலிருந்தும் பள்ளங்களிலிருந்தும் தோண்டி கரையான்களை பூமிக்குள்ளிருந்து 3 முதல் 5 மீட்டர் ஆழம் வரை எடுத்துன்கிறது. அதன் செதில்கள் முன் கால்கள் வரை வலிமை கொண்டதாக இருக்கும். இது மாலை மங்கியதும் இரை தேட வெளிவரத் தொடங்கும்.  கதிரவன் எழுமுன் தன் இருப்பிடமான ஆழமான பொந்துக்குள் சென்று உறங்கிவிடும்.

எறும்புதின்னிகளின் உடலமைப்பானது பிற பாலூட்டிகளிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட அமைப்பினைக் கொண்டதாகும். தலை முதல் வால் வரை சுமார் 84–122 செ.மீ (33–48 அங்குலம்) நீளமும், வால் பொதுவாக 33–47 செ.மீ (13–19 அங்குலம்) நீளமும், 10–16 கிலோ எடையும் கொண்டிருக்கும். பெண் பொதுவாக ஆணை விடச் சிறியது. சிறிய கண்கள் கொண்ட கூம்பு வடிவ தலையையும், மூக்கும் முகமும் குழல் போன்று நீளமானதாகவும் இளஞ்சிவப்பு-பழுப்பு நிற தோலைக் (செதில்) கொண்டிருக்கும். இது சக்திவாய்ந்த கால்களைக் கொண்டுள்ளது, கூர்மையான நகம் கொண்ட இதற்கு பற்கள் இல்லை. ஆனால் செரிமானமாவதற்கு வயிற்றில் தசைகள் உள்ளன.  இந்த பாதுகாப்பு செதில்கள் கடினமானவை மற்றும் கெரட்டினால் (keratin) ஆனவை (கான்டாமிருகத்தின் கொம்பில் உள்ளது போன்று). இது மொத்தம் 160-200 செதில்களைக் கொண்டுள்ளது, அவற்றில் 40–46% வால் மீது அமைந்துள்ளது. செதில்கள் 6.5–7 செ.மீ (2.6–2.8 அங்குலம்) நீளம், 8.5 செ.மீ (3.3 அங்குலம்) அகலம் மற்றும் 7–10 கிராம் எடை கொண்டவை. மொத்த உடலில் நான்கில் ஒரு பங்கு முதல் மூன்றில் ஒரு பங்கு வரை தோல் மற்றும் செதில்கள் உள்ளன.

இச்செதிற் போர்வை வெங்கச்சங்கற்களைப் (வெண்மையும் ஆரஞ்சும் கலந்த வண்ணத்தை உடைய கல்) போன்ற தோற்றமளிக்கும். செதில்கள் இதன் வாழ்நாள் முழுவதும் வளர்ந்து கொண்டே இருக்கும் நமது உடலிலுள்ள தலைமுடியைப் போல. இவ்வமைப்பு எதிரிகளான புலி, சிறுத்தை போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் கவசமாக பயன்படுகிறது. எதிரிகள் தன்னருகே வந்தால் அல்லது துன்புறுத்த நேரிட்டால் பந்து போன்று சுருண்டு (வால்வேஷன்) கொள்ளும். அதாவது தலையை பின்னங் கால்களுக்கிடையில் வைத்து சுருண்டு தோற்றமளிக்கும் வகையில் படுத்துக்கொள்ளும். எதிரிகள் இதனை புரட்டினாலும் விலகாது நிமிராது கடிக்கவும் இயலாது.  இச்சூழலில் அசைவின்றி நீண்ட நேரம் சுருண்டு கிடப்பதால் எதிரிகள் பெரும்பாலும் விட்டுவிட்டுச் சென்று விடுகின்றன. எவ்வித ஆபத்தும் இல்லை என்று உணர்ந்தவுடன் மீண்டும் பழைய நிலைக்கு வந்து நகரத் தொடங்கும். (ஆனால் மனிதன் மட்டும் மிக எளிதாக சுருண்டு கிடக்கும் எறும்புதின்னியை எடுத்து பையிலோ அல்லது இடையில் குச்சியினைச் செருகியோ தூக்கிச் சென்று விடுகிறான்.)

இச்செயல் இவை உயிர்வாழ்வதற்கு முக்கியமாக பயன்படுகிறது.   மெதுவாக ஊர்ந்து செல்லும் பொழுது ஒரு வித உணர்வினால் ஆங்காங்கே பூமிக்கடியில் இருக்கும் கரையான்கள், எறும்புகள் போன்றவற்றைத் தனது கூரிய முழுமையான நகங்களைக் கொண்டு குழி பறித்து உணவினைத் தனது கூர்மையான வாயினுள்    உள்ள நீண்ட நாக்கினைச் செலுத்தி தனக்கு வேண்டிய இரையை எடுத்து உண்ணும். நாக்கானது பசைத்தன்மை கொண்டு தன் உடல் நீளத்தைவிட அதிக நீளம் கொண்டிருக்கும்.

எறும்புதின்னிகள் பெரும்பாலும் ஆண்டில் எப்பொழுது வேண்டுமானாலும் இணை சேர்கின்றன. ஆனால் வளர்க்கப்படும் (உயிரியல் பூங்கா போன்றவற்றில்) எறும்பு தின்னி மே மற்றும் ஜூன் மாதங்களைத் தவிர பிற மாதங்களில் எப்போது வேண்டுமானாலும் இணை சேருகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. இத் தருணங்களில் ஆணும் பெண்ணும் ஒரே பொந்தில் அல்லது குகையில் வாழ்கின்றன. 65 முதல் 70 நாட்கள் சினைகாலமாகும். ஒன்று முதல் இரண்டு குட்டிகள் ஈனும். பிறக்கும்போது குட்டிகள் மெல்லிய உரோமங்கள் போன்ற செதில்களைக் கொண்டும், கண்கள் திறந்தபடியும் சுமார் 400 கிராம் எடையும், சுமார் 30 சென்டிமீட்டர் நீளமும் கொண்டிருக்கும்.

சிறுவனாக இருந்தபோது எறும்புதின்னி பற்றிப் பல செய்திகள் கேள்விப் பட்டுள்ளேன். தோட்டத்தில் நாய்கள் குரைப்பதைக் கண்டு பார்க்கையில் சாளை அருகே எறும்பு தின்னி ஊர்ந்து வருவதைக் கண்டு இதைப் பிடித்துக் கொண்டு விட்டு விட்டதாகவும் கூறுவர். இதனைப் பார்க்க வாய்ப்பு ஒரு முறைதான் கிடைத்தது. மழைக்காலங்களில் சில நேரங்களில் சில பகுதிகளில் அதாவது கிராமத்திற்குள் இரவு நேரங்களில் வந்து விடுவதுண்டு.  அங்கனம் வருவதை மக்கள் ஏற்பதில்லை.  இது தங்களது அழிவுக்கு காரணம் என்றும் பின்னால் கேடு விளைவிக்கும் என்றும் எண்ணி இதனை பிடித்து எரித்து விடுவது அல்லது பலர் கூடி தொலை தூரத்திற்கு எடுத்துச் சென்று வனத்தை ஒட்டிய பகுதிக்குள் சென்று விட்டுத் திரும்புவதும் முன்னர் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதனால் இதனை ஊர் அழிஞ்சி எனக்கூறி வந்தனர்.

பின்னாளில் ஒரு முறை மதுக்கரை அருகே பாலக்காடு செல்லும் சாலையில் மரப்பாலத்திலிருந்து வடக்கே செல்லும் தர்மலிங்கேசுவரர் மலைக்கோயில் ஒன்றிற்கு உறவினரின் குழந்தைகளுக்கு காதுகுத்தும் (காதணி) விழாவிற்காக   அதிகாலையில்  சென்றிருந்தேன்.  தற்போது கோயிலில் உள்ளதைப் போன்ற படிகள் அந்நாட்களில் இல்லை. ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் இருந்தது. இவ்வளவு பெரிய மண்டபங்கள் போன்றவைகள் அந்நாளில் எழுப்பப் பட்டிருக்கவில்லை. மலை மேலிருந்து பார்க்கும் பொழுது வடபுறம் அடர்ந்த காடாக முன்னர் இருந்தது. ஏராளமான பறவைகளைக் காண நேர்ந்தது. யானைகளையும் பார்க்கலாம் என அங்குள்ள பெரியவர் ஒருவர் கூறியதால் சில நாட்கள் கழித்து ஒரு முறை இரவு நேரத்தில் அங்கு சென்று தங்கினோம். அப்பகுதியில் யானைகள் வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆனால் யானை மற்றும்  பிற பாலூட்டிகளொன்றையும் காணவில்லை.

வைகறை நேரத்தில் கீழே இறங்கிச் சென்று பறவைகளைத் தேடலாம் எனச் சென்ற பொழுது அப்பகுதியில் தூரத்தில் ஒரு மாறுபட்ட உருவம் தரையில் மெதுவாக ஊர்ந்து வருவதைக் கண்டு அருகில் செல்வதற்குள் முட்புதர்களுக்குள் சென்று மறைந்துவிட்டது. அது மாறுபட்ட தோற்றமளித்ததால் மீண்டும் 10 நாட்கள் கழித்து அதே பகுதிக்குச் சென்று அது யாதென்று விளக்கொளியில் (டார்ச்சு) தேடலானோம். அப்பொழுது அங்கு எறும்பு தின்னி ஒன்று குட்டியை சுமந்தபடி செல்வதை டார்ச் ஒளியில் காண நேர்ந்தது. உடனடியாக படமெடுக்க முயலுகையில் அது மறைந்துவிட்டது. அதன்பின் அப்பகுதியில் காண இயலவில்லை.

பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து சத்தியமங்கலம் வனப்பகுதியில் அமைந்துள்ள தூக்கநாயக்கன்பாளையம் வனச் சரகத்திற்குட்பட்ட குன்றி என்னும் மலை கிராமப் பகுதிக்கு வனத்திற்குள் நடந்து போகும் வழியில் கல்லூத்துப் பகுதியில் எறும்புதின்னி செல்வதை மாலையில்  காணநேர்ந்தது.  அது கோடைகாலமாகும். மீண்டும் அடுத்த நாள் மாலை 4 மணி முதலே காத்திருந்து பார்க்கையில் நீர் தேங்கியிருந்த குட்டைக்கு எறும்பு தின்னி ஒன்று சரிவில் இறங்கியது. அதனை படம் ஆக்கினேன்.

அதன் பின் ஒரு மாதம் கழித்து மற்றொரு பகுதியில் (இரவில்) ஓடை அருகே நீருக்குள் நின்றிருந்ததைப் படமாக்கினோம். தொடர்ந்து எறும்புதின்னியைப் பற்றி தெரிந்து கொள்ளவும் படமாக்கவும் முயற்சித்து பின்னர் கைவிட நேர்ந்தது. இரவாடியான இப் பாலூட்டியை இரவு நேரத்திலேயே அதிகம் தென்படுகின்றது. ஆனால் யானைகளின் நடமாட்டம் கல்லூத்து மற்றும் குன்றி வழியில் எப்பொழுதும் இருப்பதால் கண்காணிக்கவும் படமாக்கவும் முடியவில்லை.  மழைக் காலமும் ஏற்றதாக இல்லை.

பொதுவாக எறும்புதின்னி நீர் அருந்துவதில்லை என்பர் ஆனால் நாங்கள் பார்த்த எறும்பு தின்னி இருளத் தொடங்கும் முன்பு நீரினைத் தேடி வந்து சில நேரம் நீரினுள் நின்று மெய்மறந்து நீர் அருந்துவதைப் பார்த்தது மட்டுமன்றி படமும் எடுத்தோம். தன் உடல் சூட்டினைப் போக்குவதற்காக இங்ஙனம் செய்கிறது. நன்றாக நீந்தக் கூடியது. கோடைகாலம் தவிர்த்து பிற காலங்களில் நீர்நிலை அருகே காணமுடிவதில்லை. எறும்புதின்னிகள் எறும்புகள், கரையான்கள் மற்றும் புழுக்களை /லார்வாக்களை சாப்பிடுகின்றன. இவைகளுக்கு பற்கள் இல்லாததால், எறும்புதின்னிகளுக்கு இத்தகைய உணவுகளை உ.ண்பதற்கு ஏற்றவாறு அவற்றின் நாக்கு ஒட்டும் பசை கொண்டு அமைந்துள்ளது. இதனுடைய நாக்கானது சில நேரங்களில் இதன் உடலை விட அதிகமான நீளம் கொண்டிருப்பதால் ஆழமான குழிக்குள்ளும் எளிதில் நாக்கினை நீட்டி இரையைப் பிடிக்கக் கூடிய தன்மை உடையது. ஒரு எறும்புதின்னி நாளொன்றுக்கு சுமார் 20,000 பூச்சிகள் (Insects) அதாவது  ஆண்டொன்றிற்கு சுமார் 70 மில்லியன் பூச்சிகள் (Insects)  உட்கொள்கின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது தாவர இனங்களுக்கு பாதுகாப்பாக அமைகிறது. இது மட்டுமின்றி, அவற்றின் பெரிய மற்றும் நீளமான நகங்கள் கொண்டு நிலத்தடியில் தோண்டப்படுவதால் (உணவுக்காக) கரையான்கள் மற்றும் பூச்சிகளை அழிக்கும் திறன் கொண்டவையாகத் திகழ்கின்றன. இவ்வாறு செய்யும்போது மண் கலக்கப்பட்டு காற்றோட்டமாகி, மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களின் தரத்தை மேம்படுத்துகிறது, இச்செயல் வனம் மற்றும் வேளாண் காடுகளை செழிக்கச் செய்கின்றன.

எறும்பு தின்னிகள் நாளுக்கு நாள் அழிந்து வருவதற்குக் காரணம் அவைகள் வாழும் சூழல் அழிக்கப்பட்டு வருவதும், அவைகள் வேட்டையாடப் படுவதும் முதற் காரணங்களாகும். வனத்தை ஒட்டிய பகுதிகளெல்லாம் நவீன முறையில் வேளாண்மை செய்யப்பட்டு உரங்கள், மருந்துகள் போன்றவைகளை உபயோகப்படுத்துவதால் எறும்புதின்னிகளுக்கு வேண்டிய முக்கிய உணவுகளான கரையான்கள், எறும்புகள் போன்றவைகள் அழிந்து போவதும் காரணமாகும்.

எறும்பு தின்னியை  சில பகுதிகளில் சிலர் பிடித்து அதனை இறைச்சியாக உட்கொள்கின்றனர். மேலும் இதனை உயிருடன் அல்லது கறி, ஓடுகளை (செதில்) விற்பனை செய்கின்றனர். இதனால் இவைகள் மிகவும் அழிந்து வருகிறது.

உலகில் எறும்பு தின்னிகள் சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில் வாங்கப் படுவதால் இது முக்கிய வியாபார பொருளாக விளங்குகிறது. இதன் முழு உடலும் இறைச்சிக்காகவும், மருந்துக்காகவும் பயன்படுத்தப் படுகின்றன.  இதன் மூலம் நல்ல வருவாய் கிடைப்பதால் சிலர் இதனை பிடித்து உயிருடனோ அல்லது கொன்றோ இதன் உடல் பாகங்களையும் விற்கின்றனர் இதற்கென பெரிய நகரங்களில் வாங்கும் வியாபாரிகள் உள்ளனர். இவர்கள் மூலம் வெளிநாடுகளுக்கு கள்ளத்தனமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனைத் தடுக்க பல துறை அதிகாரிகள் பலவகைகளில் முயன்றும் தடுத்தும் வருகின்றனர். இருப்பினும் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பாரம்பரிய மருத்துவம் மற்றும் நாட்டுப்புற வைத்தியங்களில் எறும்புதின்னிகளின் செதில்கள் பயன்படுத்தப் படுகின்றன. இது விஞ்ஞான ஆய்வுகளின்படி மெய்ப்பிக்கப்படவில்லை.

எட்டு வகை எறும்புதின்னிகளின் இனங்கள் தேசிய மற்றும் சர்வதேச சட்டங்களின் கீழ் பாதுகாக்கப் படுகின்றன. ஆயினும் இன்னும் எறும்புதின்னிகளின் சர்வதேச சட்டவிரோத வர்த்தகம் அதிகரித்து தான் வருகிறது குறைந்தபாடில்லை என்பதுதான் உண்மை.

எறும்பு தின்னிகள் இக்காலங்களில் அழிந்து வருவதற்கு முக்கிய காரணங்களாக சிலவற்றைக் கூறலாம். முதன்மையானவைகள் விற்பனை, உணவுக்காக வேட்டையாடுதல், வாழும் சூழல் அழிந்து வருவது, போதிய உணவின்மை போன்ற காரணங்களால் நாளுக்கு நாள் இவைகள் அழிந்து வருவதென்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

இதனைத்தடுக்க இந்தியாவில் 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் நாட்டில் காணப்படும் இரு பாங்கோலின் இனங்களுக்கும் மிக உயர்ந்த பாதுகாப்பை வழங்கியுள்ளது.

வேட்டையாடுதல், எறும்புதின்னிகளைப் பிடித்தல், அல்லது ஒருவர் அதன் செதில்களை வைத்திருத்தல் போன்றவற்றிற்கு மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும், மேலும் இந்தச் சட்டத்தின் கீழ் ரூ .10,000 க்கு குறையாத அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இத்தகைய கடுமையான சட்டங்கள் இருப்பினும்,  இவ்வுயிரினத்தை அழிவிலிருந்து காக்க வனங்களை ஒட்டிய கிராமப்பகுதிகளிலும், வேளாண்மை புரியும் மக்களிடமும் இவ்வுயிரினங்கள் பற்றி எடுத்துக் கூறுவதும், இயற்கை ஆர்வலர்களும் வனத்துறையினரும் கண்காட்சிகள், சிலைட்சோ மற்றும் ஒளிப்படங்கள் போன்றவற்றை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி எறும்புதின்னி மட்டுமன்றி பிற காட்டுயிர்களையும் நேசிக்கவும் காத்தலும் அவசியம் என உணர்த்துதல் வேண்டும். இதனால் மனிதனால் ஏற்படும் அழிவிலிருந்து காத்தல் இயலும்.

 உலக எறும்புதின்னி (பங்கோலின்) தினமாக ஆண்டுதோறும் பிப்ரவரி மூன்றாவது சனிக் கிழமையன்று கொண்டாடப்படுகிறது.


டி.ஆர்.ஏ.அருந்தவச் செல்வன்

Email: [email protected]

+919344773499

I am agriculturist by profession. I have been speaking, writing and conducting slide shows, 
exhibitions giving interviews to create awareness in the endangered environment. These have 
appeared in many books and Medias. I have received many awards. 

 

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.