கரிய பூனை

ப்போது நான் சொல்லவிருக்கிற மிகக் கொடூரமான, அதே சமயம் மிக இயல்பான, கதையின்பால் உங்களது நம்பிக்கையைக் கோரவோ எதிர்நோக்கவோ இல்லை. என் சொந்த புலன்களே தான் கண்டவற்றை நம்ப மறுக்கும்போது உங்களிடம் அதனை எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனமாகத்தான் இருக்கும்.   என்றாலும், நான் பைத்தியம் இல்லை – நிச்சயமாக நான் இவற்றைக் கனவு காணவும் இல்லை, ஆனால் நாளையே நான் மரணிப்பேன் என்பதால் இன்று என் சுமைகளை இறக்கிவைக்கிறேன். வீட்டில் நடந்த சில சாதாரண நிகழ்வுகளை, அப்படியே சுருக்கமாக, எந்த சொந்தக் கருத்துகளையும் இடைச்செருகாமல், இந்த உலகத்தின் முன் காட்சிப்படுத்துவதே என்னுடைய இப்போதைய நோக்கமாகும். இந்நிகழ்வுகள் என்னை அச்சுறுத்தியும் வேதனைப்படுத்தியும் சிதைத்தும் விட்டன. என்றாலும் நான் அவற்றைப்பற்றியெல்லாம் சொல்லப்போவதில்லை. மற்றவர்களுக்கு அது பரோக்கை(baroques) விடக் குறைவான அகோரத்துடனே காட்சியளிக்கக்கூடும், ஆனால் என்னை அது மிகவும் அச்சுறுத்திவிட்டது. புத்திக்கூர்மையுடைய யாரேனும் வரக்கூடும் – என்னைவிட அதிக நிதானமும் தர்க்க சிந்தையும், குறைந்த உணர்வெழுச்சியும் கொண்ட அறிவாளி எவரேனும் நான் இப்படி அச்சத்துடன் விவரிக்கிற சம்பவங்களில் வெறும் சாதாரண நிகழ்வுகளின் தொடர்ச்சியை அடையாளம் கண்டு எனது பயத்தைக் குறைக்க முடியும்.

குழந்தைப்பருவத்திலிருந்தே நான் எனது மென்மையும் மனிதாபிமானமும் மிக்க குணநலத்திற்காகப் பெயர் பெற்றிருந்தேன். என் இதயத்தின் மென்மை அவ்வளவு வெளிப்படையாக இருந்ததனால் நான் என் சகாக்களின் கேலிக்கும் கூட ஆளாகியிருக்கிறேன். குறிப்பாக, எனக்கு விலங்குகள் மீது அதீத ஆர்வம் இருந்தது, என் பெற்றோர் என்னை விதவிதமான செல்லப்பிராணிகள் வளர்ப்பிலும் ஈடுபடுத்தியிருந்தனர். நான் இவற்றுடன்தான் என் பெரும்பான்மையான நேரத்தைச் செலவிட்டேன், அவைகளுக்கு உணவளிப்பதிலும் சீராட்டுவதிலும் கிடைத்ததைப் போன்ற மகிழ்ச்சி எனக்கு வேறெதிலும் கிடைக்கவில்லை. இந்த பிரத்தியேக குணம் நான் வளர்ந்தபோதும் இயல்பாகத் தொடர்ந்து, பெரியவனான பிறகு எனது முக்கியமான பொழுதுபோக்குகளில் ஒன்றாக மாறியது. விசுவாசமும் புத்திக்கூர்மையும் நிறைந்த நாய்களை வளர்த்துப் பழக்கப்பட்டிருப்பவர்களுக்கு, எனது இந்தப்பொழுதுபோக்கினால் விளைகிற மனநிறைவின் தன்மை பற்றியோ உச்சபட்ச மகிழ்ச்சி பற்றியோ விளக்க வேண்டிய சிரமம் இருக்காது.   மனிதர்களின் நட்பில் வெளிப்படுகிற அற்பத்தனங்களையும், அதன் நம்பகத்தன்மையிலிருக்கும் பலவீனங்களையும் நேரடியாக அடிக்கடி அனுபவித்துப் பழகியவர்களின் இதயங்களுக்கு, சுயநலமற்ற தியாக குணம் நிறைந்த ஒரு விலங்கின் அன்பில் ஏதோ ஒரு ஆறுதல் கிடைத்துவிடத்தான் செய்கிறது.

எனக்குச் சீக்கிரமே திருமணமாகிவிட்டது, எனக்கிருக்கும் அதே பழக்கத்தை மனைவியிடமும் கண்டதில் மகிழ்ச்சி அடைந்தேன்.  செல்லப்பிராணிகள் வளர்ப்பில் எனக்கிருக்கும் விருப்பத்தைக் கண்ட அவள், அவற்றில் வெகுவாக அங்கீகரிக்கப்பட்ட வகைகளை வாங்குவதற்கான எந்த வாய்ப்பையும் நழுவவிடவில்லை. எங்களிடம் பறவைகளும், தங்க மீனும், அழகான ஒரு நாயும், முயல்களும், சிறிய குரங்கும், ஒரு பூனையும் இருந்தன.

கடைசியாகக் குறிப்பிட்ட அந்த விலங்கு ரொம்பவும் பெரியதும் அழகானதும் ஆகும். முழுவதும் கறுப்பு நிறம் கொண்ட அது வியக்கத்தக்க அளவு புத்திசாலித்தனமும் கொண்டது. சிறிதும் மூடநம்பிக்கையற்ற என் மனைவி, அதன் அறிவுக்கூர்மையைப் பற்றிப் பேசும்போதெல்லாம், கருப்புப்பூனைகள் மாறுவேடத்தில் வந்த சூனியக்காரர்கள் என்னும் பழைய நம்பிக்கையைப் பற்றி அடிக்கடி குறிப்பிட்டாள். இந்தக் கருத்தில் அவள் ரொம்பவும் தீவிரமாக இருந்தாள் என்று சொல்லவில்லை – இப்போது அது நினைவிற்கு வந்ததால் சொல்கிறேன், வேறொரு காரணமும் இல்லை.
ப்ளூடோ – இதுதான் அந்தப் பூனையின் பெயர்- எனது பிரியத்திற்குரிய செல்லப்பிராணியாகவும் விளையாட்டுத்துணையாகவும் இருந்தான்.  நான்தான் அவனுக்கு உணவளிப்பேன், வீட்டில் நான் எங்கே சென்றாலும் அவனும் உடன் வருவான். வெளியே செல்லும்போது தெருவிலும் அவன் என்னைத் தொடராமல் செய்வதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.

பல ஆண்டுகளுக்கு எங்களது நட்பு இதேபோல் தொடர்ந்தது.  இதற்கிடையே, நாசகார மதுப்பழக்கத்தால் (வெட்கத்துடன் ஒப்புக்கொள்கிறேன்), எனது நடத்தையும் குணநலனும்  தீவிரமாக மோசமடைந்தன. நாளுக்குநாள், மேன்மேலும் உணர்ச்சிவசப்படுகிறவனாகவும், எரிச்சலூட்டக்கூடியவனாகவும், மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதவனாகவும் ஆகிக்கொண்டே சென்றேன். என் மனைவியிடம் அத்துமீறிய வார்த்தைகளைப் பிரயோகிக்கிற துயரத்திற்கு ஆளானேன். இதன் நீட்சியாக நான் வன்முறையையும் கூட வெளிப்படுத்தினேன். போலவே, என் செல்லப்பிராணிகளும் என் நடத்தையில் ஏற்பட்ட மாற்றங்களை உணர நேர்ந்தது.  அவற்றைத் தவிர்த்தது மட்டுமல்லாமல் மோசமாகவும் நடத்தினேன்.  முயல்களையும், குரங்கினையும், நாயையும்கூட அவை தவறுதலாகவோ அன்பினாலோ என் வழியில் வந்த போது எந்த மன உறுத்தலுமின்றி துன்புறுத்தினேன். ஆனால் ப்ளூட்டோவைப் பொறுத்தவரை அப்படி நடந்துகொள்ளாமல் என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளும் அளவிற்கு அதன் மேல் இன்னும் அன்பு மீதமிருந்தது. ஆனால் என் நோய் என்னை மீறியது – குடிப்பழக்கம் என்பது என்ன மாதிரியான ஒரு நோய்! – இறுதியாக, வயது அதிகமாகிக்கொண்டே போய் சிடுசிடுப்பை வெளிப்படுத்தத் துவங்கிய ப்ளூடோவும் என் மோசமான நடத்தையின் விளைவுகளை எதிர்கொள்ளத் தொடங்கியது.

ஓர் இரவு, நகரத்தில் சுற்றிவிட்டு அதீத போதையில் வீடு திரும்பிய போது அந்தப் பூனை என் வருகையைக் கண்டுகொள்ளாமல் தவிர்ப்பதாகக் கற்பனை செய்து கொண்டேன். அவனை இறுகப்பற்றித் தூக்கினேன்; என் வன்முறையைக் கண்டு அஞ்சிய அவன் பற்களால் என் கரத்தில் சிறிய காயத்தை ஏற்படுத்திவிட்டான். உடனடியாக ஏதோ சாத்தானின் ஆத்திரம் எனக்குள் புகுந்து விட்டது. அதன்பிறகு எனக்கு என்னைப் பற்றியே தெரியவில்லை. என் உண்மையான ஆன்மா உடனடியாக என் உடலில் இருந்து நீங்கிவிட்டது; போதையினால் வலுப்பட்டிருந்த, சாத்தானைவிடக் கொடிய ஒன்று, என் உடலின் ஒவ்வொரு இழையையும் ஆக்கிரமித்துத் தூண்டியது.  என் மேலங்கியின் பாக்கெட்டிலிருந்து ஒரு பேனாக்கத்தியை எடுத்த நான் அதைத் திறந்து, பரிதாபமான அந்தப் பூனையின் தொண்டையை இறுகப்பற்றியவாறு ஒரு கண்ணை அதன் விழிக்கோளத்திலிருந்து வெட்டி எடுத்தேன். சபிக்கத்தக்க அந்த அக்கிரமத்தைப் பற்றி எழுதுகையில் நான் வெட்கமடைகிறேன், தகிக்கிறேன், நடுங்குகிறேன்.
இரவில் ஏற்பட்ட தீச்சிந்தையையும் சினத்தையும் தூங்கிக் கடந்து, அதிகாலையில் தெளிவாக எழுந்த போது, நான் செய்துவிட்ட தவறை எண்ணி பாதி அச்சமும் பாதி குற்ற உணர்வும் கொண்டேன்; ஆனால் அவ்வுணர்வு ரொம்பவும் பலவீனமானதாகவும் மேலோட்டமானதாகவும் இருந்தது – என் ஆன்மா உணர்வற்றுத்தான் இருந்தது. மீண்டும் அதீதமாய் குடித்து என் செயலின் நினைவுகளனைத்தையும் போதைக்குள் மூழ்கடித்தேன்.

கொஞ்சம் கொஞ்சமாகப் பூனை குணமடைந்தது. கண் இல்லாமல் போய்விட்ட அந்த விழிப்பள்ளம் நிஜமாகவே ஒரு பயங்கரமான தோற்றத்தைத் தந்தது, ஆனால் அங்கே அது வலியை உணர்ந்ததாய்த் தெரியவில்லை. வழக்கம்போல வீட்டினுள் சுற்றித் திரிந்தாலும், என்னைக் கண்டாலே ஓடி ஒளிய ஆரம்பித்தது; எதிர்பார்த்ததுதான். ஒரு காலத்தில் என்னை மிகவும் நேசித்த அந்த உயிரியானது இப்போது என்னிடம் காட்டிய வெளிப்படையான வெறுப்பினைக் கண்டு துயருறும் அளவிற்கு, துவக்கத்தில் என்னிடம் என் பழைய இதயம் மிச்சம் இருந்ததுதான். ஆனால் சீக்கிரமே இது எரிச்சலைத் தந்தது. அடுத்ததாக, இறுதியானதும் எப்போதைக்குமானதுமாக, ’வக்கிரம்’ என்னும் பண்பு என்னை ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டது.  தத்துவங்கள் இக்குணத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. வக்கிரம் என்பது மனித மனதின் ஆதி உணர்ச்சிகளில் ஒன்று – மனிதனின் நடத்தையைத் தீர்மானிக்கிற அடிப்படை புலன்கள் அல்லது உணர்வுகளின் விளைவுகளில் ஒன்று – என்பதில் நான் அதிக உறுதியாய் இருக்கிறேன். ஆன்மா என்பதன் இருப்பில் கூட எனக்கு அத்தனை உறுதி இல்லை எனச் சொல்லலாம். தான் அதனைச் செய்யக்கூடாது என்கிற ஒரே காரணத்திற்காக மட்டுமே தன் மனம் எத்தனையோ அத்தகைய தீய/அற்ப செயல்களில் நூறுமுறை ஈடுபடுவதை உணராத மனிதர்கள் யாரேனும் இருக்கிறார்களா? ஒரு சட்டம் மீறப்படக்கூடாது என்பதை அறிந்ததால் மட்டுமே, எல்லா நியாய உணர்வுகளையும் தாண்டி, அதனை மீறிவிட வேண்டும் என்கிற தீராத வேட்கை நம் எல்லோருக்கும் இருக்கிறதுதானே? வக்கிரம் என்னும் உணர்வு என்னை வென்றெடுத்துவிட்டது என்பதைத்தான் சொல்கிறேன். தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்வதற்கு இந்த ஆன்மா கொண்டிருக்கும் அர்த்தமற்ற ஏக்கமும்  — தன் குணநலனில் வன்முறையைச் சூடிக் கொள்ளும் விருப்பமும் – தவறு செய்யும் பொருட்டு மாத்திரமே தவறு செய்யும் பண்பும்தான், அப்பிராணியான அந்த விலங்கிற்கு நான் ஏற்படுத்திய காயத்தை முழுமைப்படுத்தும் செயல் நோக்கி என்னைத் தூண்டின.  ஒருநாள் காலை, மிக நிதானமாக அந்த விலங்கின் கழுத்தில் சுருக்கிட்டு அதை ஒரு மரத்தின் கிளையில் தொங்க விட்டேன்; கண்களிலிருந்து ஆறாய் பெருகி வழியும் கண்ணீரும், இதயத்தில் மிகவும் கசப்பான குற்றவுணர்வுமாய் அதனைத் தூக்கிலிட்டேன்;  அது என்னை நேசித்திருக்கிறது என்பதை அறிந்ததாலும், அதை வெறுப்பதற்கு எந்தக்காரணத்தையும் தரவில்லை என்பதாலும் தூக்கிலிட்டேன்; நான் ஒரு பாவத்தைச் செய்கிறேன் என அறிந்ததாலும் இறப்பற்ற என் ஆன்மாவை – அப்படி ஒன்று இருக்குமாயின் –  அக்கொலைபாதகச் செயல், அதீத கருணையும் உச்சபட்ச அதிகாரமும் உடையவரான தெய்வத்தின் கருணைக்குத் தகுதியற்றதாக்கி,  ஆபத்திற்குள்ளாக்கும் என அறிந்ததாலும் தூக்கிலிட்டேன்.

இந்தக் கொடூரமான செயலை நான் நிகழ்த்திய தினத்தின் இரவில் தீயின் கூக்குரல்களால் தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்டேன். என் படுக்கையின் விரிப்புகளிலெல்லாம் தீப்பிழம்புகள். ஒட்டுமொத்த வீடுமே தகதகத்துக் கொண்டிருந்தது. மிகுந்த சிரமப்பட்டுத்தான் என் மனைவியும் வேலையாளும் நானும்  அப்பெருந்தீயிலிருந்து உயிர்பிழைத்தோம். எல்லாமும் முற்றிலுமாக அழிந்திருந்தது. என் ஒட்டுமொத்த செல்வமும் விழுங்கப்பட்டுவிட்டது, அதன்பிறகு நான் மிகுந்த  விரக்தியில் வீழ்ந்துவிட்டேன்.

நடந்துவிட்ட அழிவிற்கும் நான் செய்த குரூரத்திற்கும் இடையே ஒரு தொடர்பினை கற்பித்துக் கொள்ளும் அளவிற்குப் பலவீனமாக இல்லை நான். என்றாலும், சங்கிலி போன்ற சில தொடர் நிகழ்வுகளை இப்போது விளக்குகிறேன் – சாத்தியமுள்ள எந்த ஒரு தொடர்பினையும் சொல்லாமல் விட்டுவிடக்கூடாதென நான் விரும்புகிறேன். தீவிபத்து நிகழ்ந்ததற்கு மறுநாள் நான் அழிவின் தடங்களைப் பார்வையிட்டேன். ஒரே ஒரு சுவரைத் தவிர மற்ற அனைத்தும் உள்ளே சரிந்திருந்தன. மீதமிருந்த அந்த ஒரு சுவர் வீட்டின் நடுவில் தடுப்பாக இருந்த ஒரு மெல்லிய சுவர் ஆகும். எனது படுக்கையின் தலைப்பகுதி அதனை ஒட்டித்தான் போடப்பட்டிருந்தது. அச்சுவரின் பூச்சு தீயின் தாக்கத்தை வெகுவாக தாக்குப்பிடித்திருந்தது –அந்தப் பூச்சு சமீபத்தில்தான் இடப்பட்டிருந்தது என்பதை நான் அதற்குக் காரணமாய்  கற்பித்துக் கொண்டேன். இந்தச் சுவரின் அருகே பலரும் நெருக்கமாகக் கூடியிருக்க, அதில் பெரும்பாலானோர் ஒரு குறிப்பிட்ட பகுதியைக் கூர்ந்தும் ஆர்வமாகவும்  கவனித்து ஆராய்ந்து கொண்டிருந்தனர். அவர்களிடமிருந்து ஒலித்த, “விநோதம்” “அதிசயம்” போன்ற வார்த்தைகள் எனது ஆர்வத்தைத் தூண்டவே, அங்கே நெருங்கியபோது, வெண் தளத்தில் செதுக்கப்பட்ட குவி ஓவியம் போல ஒரு மிகப்பெரிய பூனையின் உருவத்தை அதில் கண்டேன். நிஜமாகவே வியப்பூட்டும்படியான துல்லியத்துடன் இருந்தது அவ்வுருவம். அந்த விலங்கின் கழுத்தில் ஒரு கயிறும் இருந்தது.

முதன்முதலில் அந்த பூதஉருவைப் – ஆமாம் அதைவிடக் குறைவாய் என்னால் அதனை மதிப்பிட முடியவில்லை – பார்த்ததும் எனக்கு அதீத ஆச்சரியமும் அச்சமும் ஏற்பட்டது. ஆனால் அதன்பிறகு, சிந்தனை எனக்குத் துணை வந்தது. வீட்டிற்கு அருகிலுள்ள தோட்டத்தில்தான் அந்தப் பூனை தூக்கிலிடப்பட்டது என்பது என் நினைவிற்கு வந்தது. தீயினால் ஏற்பட்ட கூச்சலைத் தொடர்ந்து தோட்டம் முழுக்க உடனடியாகக் கூட்டம் கூடிவிட்டது. அவர்களில் யாரேனும்தான் அந்த விலங்கை மரத்திலிருந்து கத்தரித்து, திறந்திருந்த ஜன்னல் வழியாக என் அறைக்குள் எறிந்திருக்க வேண்டும். என்னைத் தூக்கத்திலிருந்து எழுப்புவதற்காகத்தான்  அவர்கள் அப்படிச் செய்திருப்பார்கள். கீழே விழுந்த மற்ற சுவர்கள் இந்தப் பிணத்தைப் புதிதாகப் பூசப்பட்டிருந்த சுவரின்மீது அழுத்த, அதிலிருந்த சுண்ணாம்பும் பிணத்திலிருந்த அமோனியாவும் சேர்ந்து இந்த உருவப்படத்தைத் தோற்றுவித்திருக்க வேண்டும்.

இவ்வாறாக, இப்போது விவரித்த இந்த அதிர்ச்சிகரமான நிகழ்வுகளைப் பற்றி,  உடனடியாக நான் என் அறிவைச் சமாதானப்படுத்திவிட்டாலும், என் கற்பனையில் ஓர் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்த அது தவறவில்லை. என் மனசாட்சியை இந்த தர்க்கம் சமாதானப்படுத்த இயலவில்லை என்பதும் நிஜம். பல மாதங்களுக்கு அப்பூனை பற்றிய துர்சொப்பனங்களிலிருந்து என்னால் மீள முடியவில்லை; இக்காலத்தில் குற்ற உணர்வு போன்ற – ஆனால் அது இல்லை – ஓர் உணர்வு என்னில் தோன்றத் துவங்கியது. அந்த விலங்கின் இன்மை குறித்து வருந்தும் அளவிற்குச் சென்ற நான், அடிக்கடி என்னைப் பீடித்துக் கொண்டிருந்த மோசமான கற்பனைகளுக்கிடையே, அதே இனத்தைச் சேர்ந்த அதே போல் தோற்றத்தைக் கொண்ட ஒரு செல்லப் பிராணியை அதன் இடத்திற்குக் கொண்டு வர விரும்பினேன்.

ஓர் இரவு நான் பாதி கிரக்கத்திலும், அவமானத்திற்கும் கீழான இருட்குகைக்குள்ளும், அமர்ந்திருந்த போது ஒரு கரிய பொருள் என் கவனத்தை ஈர்த்தது; குடித்தனப்பகுதியின் தளவாடங்களில் முதன்மையானதாய் இருந்த, ஜின் அல்லது ரம் நிரம்பிய பீப்பாய்களில் ஒன்றின் மேல் அது ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது.  சில நிமிடங்களுக்கு அந்தப்பீப்பாயின் மேற்பகுதியையே தொடர்ந்து பார்த்தேன் நான் – என்னால் உடனடியாக அதை அடையாளம் காணமுடியவில்லை என்பது இப்போது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது. எழுந்து அதை நெருங்கிய நான் கரங்களால் தொட்டேன். அது ஒரு கருப்புப் பூனை – ரொம்பவும் பெரியது – ப்ளூட்டோவைப்போல மிகப் பெரியது. மட்டுமல்லாது ஒரே ஒரு அம்சத்தைத் தவிர அது முற்றிலுமாக ப்ளூட்டோவைப் போலவே இருந்தது. ப்ளூட்டோவின் உடலில் எந்த இடத்திலும் வெண்முடிகள் கிடையாது; ஆனால் இந்த விலங்கினுடைய   மார்பு முழுவதுமாக தெளிவற்ற வெண்ணிறம் பரவியிருந்தது.

நான் தொட்டதும் சட்டென எழுந்துகொண்ட அது, சப்தமாகச் சீறியபடி என் கையில் தேய்த்தது. என் கவனத்தை ஈர்த்தது குறித்து அது மகிழ்ச்சியடைந்தது போல் தோன்றியது. இதுதான்; நான் தேடிக் கொண்டிருந்தது இதையேதான். இதை உடனடியாக வாங்கிக் கொள்ள விருப்பம் கொண்டு நில உடைமையாளரிடம் விசாரித்த போது அவர் அது தன்னுடையதில்லை என்றார், அதைப்பற்றி அவருக்கு எதுவுமே தெரியாது – இதற்குமுன் அதனைக் கண்டதும் இல்லை.

அதனைத் தொடர்ந்து தடவியபடி இருந்த நான் வீட்டிற்குச் செல்லக் கிளம்பிய போது, அதுவும் என்னுடன் வர விரும்புவது போல நடந்துகொண்டது. அதை அனுமதித்த நான் அவ்வப்போது குனிந்து அதைத் தட்டிக் கொடுத்தபடியே தொடர, என் வீட்டினை அடைந்தவுடன் அது உடனேயே அங்கு இயல்பாகத் தன்னைப் பொருத்திக் கொண்டதோடு, என் மனைவிக்கு மிகவும் விருப்பமானதாகவும் மாறிவிட்டது.

என்னைப் பொறுத்தவரை, விரைவிலேயே அதன் மீது எனக்கு வெறுப்பு தோன்ற ஆரம்பித்ததை உணர முடிந்தது. நான் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் எதிரானதாகும் இது; அது ஏன் அல்லது எப்படி எனத் தெரியவில்லை – சந்தேகத்திற்கிடமற்ற அதன் அன்பு என்னை அருவருப்பிற்கும் வெறுப்பிற்கும் உள்ளாக்கியது. கொஞ்சம் கொஞ்சமாக இந்த அருவருப்பும் வெறுப்பும் கசப்புணர்வாகத் திரள ஆரம்பித்தன. நான் அந்த உயிரியைத் தவிர்க்க ஆரம்பித்தேன்; ஒருவித வெட்க உணர்வும் முன்பு நான் செய்த கொடூரத்தின் நினைவும் இவ்வுயிரியைத் தாக்குவதிலிருந்து என்னைத் தடுத்து வைத்திருந்தன.; சில வாரங்களுக்கு நான் அதனை அடிக்கவோ அதன்மீது வன்முறையைப் பிரயோகிக்கவோ இல்லை; ஆனால் மெதுவாக – ரொம்பவும் மெதுவாக – நான் அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாத வெறுப்புடன் நோக்கத் துவங்கி, அதனுடைய குரூரமான இருப்பிலிருந்தும் தொற்றிக்கொள்ளும் வன்மத்திலிருந்தும் சப்தமின்றி வெளியேறத் துவங்கினேன்.

அந்த விலங்கின் மீதான என் வெறுப்பினை அதிகப்படுத்தியது எதுவென்றால், ப்ளூட்டோவைப் போலவே அதற்கும் ஒரு கண் இல்லாமல் இருந்தது என்பதை அதனை வீட்டிற்கு அழைத்துவந்த மறுநாள் காலை நான் கண்டுகொண்டதே ஆகும். ஆனால் இதே காரணம்தான் என் மனைவியை அதன் மீது இரக்கமும் அன்பும் கொள்ளத் தூண்டியது. முன்னரே சொன்னதுபோல, முன்பொருசமயம் எனது எளிமையும் தூய்மையுமான மகிழ்ச்சிகளுக்குக் காரணமாயிருந்த ப்ரத்தியேக குணமான மனிதாபிமானம் அவளிடமும் அதீதமாய்க் காணப்பட்டது.

அதன் மீதான எனது வெறுப்பினூடாக, என் மீதான அதன் அன்பு அதிகரித்துக் கொண்டே செல்வது போல் தோன்றியது. அது எவ்வளவு பிடிவாதமாக என் பாதங்களைத் தொடர்ந்தது என்பதை வாசிப்பவர்களுக்குப் புரியவைப்பது மிகச் சிரமம். நான் உட்காரும்போதெல்லாம் அது உடனடியாக என் நாற்காலிக்குக் கீழே புகுந்து கொள்ளும், என் முழங்காலின் மீது தொற்றி வெறுப்புமிக்க அதன் தழுவல்களால் என்னை மூழ்கடிக்கும்.  எழுந்து நான் நடக்கத்துவங்கினால் என் பாதங்களுக்கிடையே புகுந்து கிட்டத்தட்ட என்னைக் கீழே விழச் செய்துவிடும், அல்லது அதன் நீண்ட கூர்மையான நகங்களை என் ஆடையில் பதித்துத் தொற்றி மார்பின் மீது ஏறும். அது போன்ற சமயங்களில் ஒரே அடியில் அதனைக் கொன்று வீழ்த்த மனம் விரும்பினாலும், நான் அதைச் சிரமப்பட்டுத் தவிர்த்துவந்தேன்: முன்னரே நான் செய்த குற்றத்தின் நினைவு ஒரு காரணமென்றால், அந்த விலங்கின் மீதான என் பயம்தான் – ஆம், ஒப்புக்கொள்கிறேன் – முக்கியமான காரணமாக இருந்தது.

ஒரு பூனையின் இயல்பான தீக்குணங்கள் பற்றிய பயம் அல்ல அது – என்றாலும் அதை வேறு எப்படி விளக்குவது என்பதில் நான் தோற்றுத்தான் போவேன். அதை ஒப்புக்கொள்ள எனக்குத் தயக்கமாகத்தான் இருக்கிறது – ஆமாம், தயக்கம் தான்! இந்தக் குற்றவாளிக் கூண்டில் இருக்கும் போது கூட அதை ஒப்புக்கொள்ளத் தயக்கமாய் இருக்கிறது – அந்த விலங்கு எனக்குள் ஏற்படுத்திய அச்சமும் பீதியும், அது எப்படிப்பட்ட கோரமான கொள்ளிவாய் உருவத்தை (chimæra) வரித்துக் கொள்ளக்கூடுமோ என்கிற கற்பனையால் தோன்றியதுதான். இந்த விநோதமான விலங்கை, நான் கொன்ற அந்த விலங்கிலிருந்து வெளிப்படையாக வேறுபடுத்திக் காட்டிய அந்த வெண்மார்புப் பகுதியைக் – ( நான் அது பற்றி முன்னரே சொல்லியிருக்கிறேன் ) – குறித்து என்னைக் கவனப்படுத்தினார்  மனைவி. அந்த அடையாளம் பெரியதாக இருந்தாலும் தெளிவற்றதாக இருந்தது என்பதை வாசகர் நினைவில் கொண்டிருப்பார்; ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக – கண்ணுக்கே புலப்படாத வகையில் – அது ஒரு அழுத்தமான விளிம்பினை வரித்துக் கொண்டது; இது வெறும் கற்பனை என்றும் கூட நீண்ட காலத்திற்கு மறுத்துப் போராடியது என் புத்தி. – சொல்வதற்கே நடுக்கம் தருகிற ஒரு வடிவமாக அது இப்போது மாறிவிட்டது – வேறெதனையும் விட இதற்குத்தான் நான் அஞ்சினேன் – இதனைத்தான் நான் வெறுத்தேன்— இதனால்தான் அவனை என்னைவிட்டு ஒழித்துக்கட்டத் தைரியமில்லாமல் தவித்தேன் –  இப்போது அது ஒரு – கொடூரமான  —  பயங்கரமான – தூக்குமேடையின் உருவமாய் மாறிவிட்டது! ஐயோ!  அச்சம் மற்றும் குற்றத்தின் – துயரம் மற்றும் மரணத்தின் – இயந்திரமே!

இப்போது நான் நிஜமாகவே, மனிதகுலத்திற்கு விதிக்கப்பட்ட சாபங்களையெல்லாம் விஞ்சுகிற அளவிற்கு மோசமாகச் சபிக்கப்பட்டுவிட்டேன். ஒரு கொடூர விலங்கு – அதன் சக உயிரியை நான் கண்டிக்கத்தக்க வகையில் அழித்திருக்கிறேன் – ஒரு கொடூர விலங்கு, உயர்ந்த இறைவனைப் போலத் தன்னை வரித்துக்கொண்ட மனிதனாகிய எனக்கு இவ்வளவு தாங்கமுடியாத துயரத்தைக் கொணர்ந்துவிட்டது  ஐயோ! நிம்மதி என்னும் ஆசீர்வாதம், பகலிலும் இரவிலும், முற்றிலுமாக எனக்கு மறுக்கப்பட்டுவிட்டது.  பகலில் அந்த விலங்கு  ஒரு நொடி கூட என்னை விட்டுப் பிரியவில்லை; இரவிலோ, ஒவ்வொரு மணிநேரமும் விளக்கவியலாதபடி அச்சமூட்டும் கனவுகளிலிருந்து விழித்த போதெல்லாம், அதன் சூடான சுவாசத்தை என் முகத்திலும் அதன் பிரம்மாண்டமான எடையை என் இதயத்தின் மேலும் எப்போதைக்குமாக உணரத் துவங்கிவிட்டேன். நிஜ உருவு போல் உணரவைத்த இந்தக் கொடுங்கனவினை தவிர்ப்பதற்கான சக்தியே எனக்குச் சாத்தியப்படவில்லை.

இத்தகைய சித்திரவதையின் அழுத்தங்களுக்கடியில், கொஞ்சமாய் என்னில் எஞ்சியிருந்த நல்லியல்புகளும் ஒடுங்கிவிட்டன. தீய எண்ணங்களே என் ஒற்றைத் துணையாகின – அதீத இருண்மையும் அதீத தீமையும் நிரம்பிய எண்ணங்கள். பார்க்கிற எல்லாப் பொருட்கள் மீதும் எல்லா மனிதர்கள் மீதும் வெறுப்பை உமிழ்கிற அளவிற்கு என் குணம் மோசமாகியது. கட்டுப்படுத்த முடியாதவாறு,  எதிர்பாராமலும் அடிக்கடியும் என்னிடமிருந்து வெடிக்கத் துவங்கிய  கோபங்களுக்கு, ஐயோ!, புகார்களற்ற, பொறுமை நிறைந்த என் மனைவியே இப்போதெல்லாம் இலக்கானாள்.

ஒருநாள், ஏதோ சிறிய வேலைக்காக, வறுமையின் பொருட்டு நாங்கள் வாழ நேர்ந்துவிட்ட ,எங்கள் பழைய கட்டிடத்தின் நிலவறைக்கு அவள் என்னுடன் வந்தாள். செங்குத்தான படிகளில் கீழிறங்குகையில் என்னை நெருக்கமாகத் தொடர்ந்த அந்தப்பூனை என்னைக் கிட்டத்தட்ட தலைகுப்புறத் தள்ளியதில் ஆத்திரத்தில் எனக்குப் பித்தேறியது. என் கரங்களில் இதுநாள் வரை குடிகொண்டிருந்த குழந்தைத்தனமான அச்சத்தையெல்லாம் மறந்த நான், கோடரியை எடுத்து அந்த விலங்கின் மேல் குறிவைத்துத் தாக்க ஓங்கினேன். அது அப்படியே நிகழ்ந்திருந்தால் நான் விரும்பியவாறே அந்த விலங்கு உயிரை விட்டிருக்கும். ஆனால் ஓங்கிய என் கைகள் மனைவியின் கைகளால் தடுக்கப்பட்டன.  இந்த இடைஞ்சலால் அரக்கத்தனத்தினையும் விடத் தீவிர ஆத்திரம் கொண்ட நான், அவள் கைகளிலிருந்து எனது கையை விடுவித்து அந்தக் கோடரியை அவள் மூளையில் இறக்கினேன். சிறு முனகலும் கூட இன்றி அவள் அப்படியே வீழ்ந்து மரித்தாள்.

இந்தக் கொடூரமான மரணம் நிகழ்ந்தபிறகு பிணத்தை மறைப்பதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபடத் துவங்கினேன். பகலிலாயினும் இரவிலாயினும், அண்டைவீட்டாரின் கண்ணில் படாமல் என்னால் அதனை வெளியே கொண்டுசெல்ல முடியாது எனத் தெரிந்தது. பல திட்டங்களை ஆலோசித்தேன். ஒரு சமயம், பிணத்தை சிறுசிறு துண்டுகளாக்கி எரித்துவிடலாமா என யோசித்தேன்.  இன்னொரு சமயம், நிலவறையின் தரையினைத் தோண்டி அதனுள் புதைத்துவிட எண்ணினேன்.  பிறகு முற்றத்தில் இருக்கும் கிணற்றில் பதித்துவிடத் தீர்மானித்தேன், பிறகு ஒரு வணிகப் பொருள்போலப் பெட்டியில் இட்டு அடைத்து வழக்கமான ஏற்பாடுகளைச் செய்து ஒரு சுமைகூலியின் மூலம் வீட்டைவிட்டு வெளியேற்றிவிட யோசித்தேன். இறுதியாக இவை எல்லாவற்றையும் விட மிகச் சிறந்தது எனத் தோன்றிய  ஒரு திட்டத்தைக் கண்டுகொண்டேன். மத்திய காலத் துறவிகள் தங்களது பலியாட்களுக்குச் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது போல, அந்தப் பிணத்தை நிலவறையின் சுவருள் அறைந்து புதைக்க முடிவுசெய்தேன்.

இது போன்ற ஓர் செயலுக்கு எங்கள் நிலவறையின் சுவர்கள் மிகப் பொருத்தமாயிருக்கும். தளர்வாகக் கட்டப்பட்டிருக்கும் அதில் சமீபத்தில்தான் மேலோட்டமாகச் சாந்திடப்பட்டிருந்தது. காலநிலையில் நிலவிய ஈரப்பதமானது இன்னும் அதனை இறுகிப் போகாமல் வைத்திருந்தது. மட்டுமல்லாது, ஒரு சுவரில் புகைபோக்கிக்காகவோ அடுப்பிற்காகவோ தவறாக இடைவெளி விடப்பட்டு, பின் அது வெறுமனே நிரப்பப்பட்டு, மற்ற சுவர்களைப் போலத் தோற்றம் கொள்ளவைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்திலிருக்கும் செங்கற்களை எளிதாக உடனடியாக அகற்றி அதற்குள் பிணத்தை வைத்து முன்பு போலவே மூடிவிட முடியும் என்று நம்பினேன். பிறகு வேறு எந்தக் கண்களும் அங்கே சந்தேகத்திற்கிடமான எதையும் உணரமுடியாது.

எனது இந்தத் திட்டம் வெற்றிகரமாகவே முடிந்தது. கடப்பாரை கொண்டு எளிதாக செங்கற்களை அகற்றிய நான், கவனமாகப் பிணத்தை அதனுள் நேராக நிறுத்தி, கொஞ்சம் சிரமத்துடன் சுவரின் முழுவடிவத்தையும் முன்பு போலவே கட்டமைத்துவிட்டேன். மிகமிக எச்சரிக்கையுடன் முன்னரே வாங்கி வைத்திருந்த காரை மணல் மற்றும் மூடி கொண்டு, முன்பிருந்ததிலிருந்து வித்தியாசப்படுத்த முடியாதபடியான ஒரு கலவையைத் தயாரித்து புதிதாக எழுப்பிய செங்கல் அமைப்பின் மீது பூசினேன். வேலை முடிந்த போது எல்லாம் சரியாக இருப்பதாக திருப்தி ஏற்பட்டது. கலைக்கப்பட்டதற்கான ஒரு சிறிய அடையாளம் கூட சுவரில் இல்லை. தரையில் கிடந்த குப்பைகள் கூர்ந்த கவனத்துடன் நீக்கப்பட்டன. சாதித்துவிட்ட எண்ணத்துடன் சுற்றிலும் பார்த்த நான், “இறுதியாக, இங்காவது என் உழைப்பு பிரயோஜனப்பட்டதே!” என எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

இத்தனை துயரங்களையும் விளைவித்த அந்த விலங்கினைத் தேடுவதுதான் என் அடுத்த இலக்கானது; அதைக் கொன்றுவிடுவது என நான் மிகவும் உறுதியாக முடிவு செய்துவிட்டேன். என் கண்ணில் மட்டும் அது பட்டால், உடனடியாக அதன் விதி முடிவிற்கு வந்துவிட்டிருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை; ஆனால் என் முந்தைய கோபத்தைக் கண்டு எச்சரிக்கையுற்ற அந்த தந்திரமான விலங்கு என்சினத்தின் முன்னால் வராமலேயே தவிர்த்து வந்தது.  வெறுக்கத்தக்க அந்த உயிரினம் காணாமல் போனதனால் என் இதயத்தில் ஏற்பட்ட ஆனந்தத்தைப் பற்றி விளக்குவதோ கற்பனை செய்வதோ இயலவே இயலாது. இரவு நேரத்திலும் அது தோன்றவில்லை – இப்படியாக அது வீட்டிற்கு வந்த தினத்திற்குப் பிறகு முதன் முறையாக ஒரே ஒரு இரவில் நான் நிம்மதியாகவும் நன்றாகவும் உறங்கினேன்; கொலை செய்ததால் ஆன்மாவில் ஏற்பட்ட சுமையையும் மீறி நான் உறங்கி விட்டிருந்தேன்!

இரண்டாவது மூன்றாவது நாட்கள் கடந்தும், என்னை வதைக்கும் அந்த உயிரி திரும்பிவரவில்லை. மீண்டும் நான் ஒரு சுதந்திர மனிதனாகச் சுவாசிக்க ஆரம்பித்தேன். அந்த சைத்தான் பயத்தில் எப்போதைக்குமாக அங்கிருந்து ஓடிவிட்டது! இனி நான் அதனைப் பார்க்கத் தேவையில்லை! என் மகிழ்ச்சி உச்சபட்சமாய் இருந்தது! நான் செய்த தீச்செயலின் உணர்வு என்னை எவ்விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை. சிலர் விசாரித்தார்கள், ஆனால் எல்லாவற்றிற்கும் உடனடியாக பதிலளிக்கப்பட்டுவிட்டது. ஒரு விசாரணை கூட மேற்கொள்ளப்பட்டது – ஆனால் எதுவுமே கண்டறியப்பட முடியவில்லை. என் எதிர்காலம் பாதுகாக்கப்பட்டுவிட்டதாய் உணர்ந்தேன்.

கொலை நடந்த நான்காவது நாளில், திடீரென வீட்டிற்கு வந்த காவல் படையினர் வளாகம் முழுவதும் மிகத்தீவிரமாகச் சோதனையிட்டு விசாரிக்க ஆரம்பித்தனர். யாராலும் கண்டறியமுடியாதபடி நான் அதனை மறைத்திருந்ததால், எனக்கு எந்தப் பதற்றமும் தோன்றவில்லை.  அலுவலர்கள் என்னையும் அவர்களது தேடுதலில் இணைந்து கொள்ள அழைத்தனர். எந்தவொரு இடத்தையும் விடவில்லை. இறுதியாக மூன்றாவதோ நான்காவதோ முறையாக அவர்கள் நிலவறைக்குள் இறங்கினர். நான் கொஞ்சம்கூட நடுங்கவில்லை. குற்றமற்ற ஒருவரின் இதயம் போல என் இதயம் நிதானமாகத் துடித்தது.  நிலவறையின் ஒவ்வொரு மூலைக்கும் நடந்தேன். கைகளை மார்பின் குறுக்காகக் கட்டி, பதட்டமின்றி முன்னும் பின்னும் நடந்தேன். மிகவும் திருப்தியடைந்த காவலர்கள் கிளம்பத்தயாரானார்கள். என் இதயத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி கட்டுக்கடங்காததாக இருந்தது. இந்த வெற்றியின் பாதையில், நான் நிரபராதி என்பதை இருமடங்காக நிரூபிக்கும் வகையில் அவர்களிடம் ஒரே ஒரு வார்த்தை சொல்ல வேண்டுமெனத் தவித்தேன்.

குழுவினர் படியில் ஏறிக் கொண்டிருக்கையில், “மதிப்பிற்குரியோரே,” என்றழைத்து இடைமறித்த நான், “உங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்தது குறித்து மிகவும் மகிழ்கிறேன். உங்கள் நலனிற்காகப் பிரார்த்திக்கிறேன், உங்களுக்கு இன்னும் சற்று மரியாதை செய்ய விழைகிறேன். அதாவது, உயர்ந்தோரே, இது—இந்த வீடானது மிகச் சிறப்பாகக் கட்டப்பட்டதாகும்” என்றேன். (ரொம்பவும் சாதாரணமாக எதையாவது சொல்ல வேண்டுமென்கிற வெறியில், நான் என்ன சொன்னேன் என்பதே எனக்குச் சுத்தமாகத் தெரியவில்லை.)  — “இது பிரமாதமாகக் கட்டப்பட்ட வீடு என்றும் சொல்லலாம். இந்த சுவர்கள் – நீங்கள் கிளம்புகிறீர்களா மதிப்பிற்குரியோரே? — இந்த சுவர்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்டுள்ளன.” இந்த இடத்தில், துணிச்சல் தந்த வெறித்தனத்தால், பயங்கரமாகப் படபடத்த நான், என் கையிலிருந்த பிரம்பால், சுவரின் உள்ளே என் அன்பு மனைவியின் பிணம் இருக்கிற  அதே இடத்தில் தொட்டுக் கொண்டிருந்தேன்.

ஆனால் தெய்வமே, இந்தச் சாத்தானின் நச்சுப்பற்களிலிருந்து என்னைக் காத்து விடுவித்தால் என்ன! எனது பதட்டம் ஏற்படுத்திய அதிர்வுகள் அடங்கிய அடுத்த நொடிக்குள்ளாக, கல்லறைக்குள்ளிருந்து ஒரு குரல் எனக்குப் பதிலளித்தது! ஒரு குழந்தையின் தேம்பல் போல, முதலில் ஒடுங்கியும் பிசிறுகளோடும்   ஒலித்த அந்த சப்தம் பிறகு நீண்டும் சப்தமாகவும் விடாமலும் கூச்சலாய் வெளிப்படத்தொடங்கியது. சித்திரவதைப்படும் சபிக்கப்பட்டோரின் துயரமும் சித்திரவதை செய்யும் சாத்தான்களின் மகிழ்ச்சியும் கலந்து அச்சத்தினால் பாதியும் வெற்றியினால் மீதியுமென, நரகத்திலிருந்து மட்டுமே ஒலிக்க வாய்ப்புள்ள தாறுமாறான இரக்கமற்ற  — ஒரு ஊளை – ஓலம் போன்ற கூச்சல்!


என் சொந்த எண்ணங்களைப் பற்றிப் பேசுவது முட்டாள்தனம். மூர்ச்சையுற்ற நான் தடுமாறி எதிர்சுவருக்கு நகர்ந்தேன். உச்சபட்ச பயத்தாலும் அதிர்ச்சியாலும் படியிலிருந்த குழு ஒரு நொடி அசைவற்று நின்றது. அடுத்த நொடி, வலுமிக்க ஒரு டஜன் கைகள் அந்தச் சுவரின் மீது மோதத் துவங்கின. அது மொத்தமாக அப்படியே விழுந்தது. ஏற்கனவே வெகுவாகச் சிதைந்து ரத்தம் உறைந்திருந்த பிணம், பார்ப்பவர்கள் முன்பு நிமிர்ந்து நின்று கொண்டிருந்தது. தந்திரத்தால் என்னைக் கொலை செய்யத் தூண்டிய,  கூக்குரலால் தூக்கிலிடுபவன் கையில் என்னைப் பிடித்துக் கொடுத்த அந்தக் கொடூர விலங்கு, சிவந்த பெரிய வாயுடனும் பிழம்பாய் தகித்த ஒற்றைக் கண்ணுடனும் பிணத்தின் தலையின் மேல் அமர்ந்திருந்தது. அந்தச் சாத்தானையும் நான் கல்லறைக்குள் சிறைப்படுத்தியிருந்திருக்கிறேன்.

எட்கர் ஆலன் போ,

தமிழில் : இல. சுபத்ரா.


எட்கர் ஆலன் போ: (1809 – 1849)

அமெரிக்க இலக்கிய ஆளுமைகளில் முக்கியமானவரான எட்கர் ஆலன் போ, துப்பறிவு

புனைவு(Detective Fiction) திகில் புனைவு (Horror Fiction) பாணிகளின் முன்னோடியாகக்

கருதப்படுகிறார். கவிஞர் சிறுகதையாசிரியர் விமர்சகர் தொகுப்பாளர் என பன்முகம் காட்டிய

போ, எழுத்தை மட்டுமே வருமானத்திற்கான வழியாகக் கொண்டு வாழமுனைந்து வறுமையில்

வாடினார்.

மனித மனதின் குரோதங்களை வெளிப்படுத்துகிற இவரது கதைகள் அதனைத் தொடர்ந்து அவன்

அடைகிற குற்ற உணர்வையும் அதனால் வாழ்வில் ஏற்படுகிற சிதைவையும் மிகவும் அழுத்தமாக

முன்வைக்கின்றன. ஒன்றிற்கொன்று நெருங்கிய தொடர்புடைய The Black Cat மற்றும் The Tell

tale heart கதைகள் இவ்வகைமைக்கான கச்சிதமான எடுத்துக்காட்டுகளாகும். சிக்கனமான

சுவாரஸ்யமான மொழிநடை இவரது படைப்புகளின் சிறப்பம்சமாகும்.

திகில் மற்றும் துப்பறிவு மட்டுமல்லாது பகடியும் நகைச்சுவையும் கூட அவரது படைப்புகளின்

அம்சமாய் இருந்தன. அவற்றில் பல திரைப்படங்களாகவும் நாடகங்களாகவும்

நிகழ்த்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இவை தவிர்த்து, அண்டவியல் மறைமொழியியல்

போன்ற துறைகளிலும் இவர் ஆர்வம் கொண்டிருந்தார்.

தனக்குப் பின்பு எழுத வந்தவர்களின் படைப்புகளில் தாக்கம் செலுத்திய விதத்தில், வில்லியம்

ஃபாக்னருக்கும் டி.எஸ். எலியட்டிற்கும் இணையாக வைக்கப்படுகிறார் போ. அவர் வாழ்ந்த பல

வீடுகள் அருங்காட்சியகங்களாக மாற்றப்பட்டுள்ளன.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.