சம்ஸ்காரம்

வராகமங்கலம் என்ற ஊர் இன்று இல்லை. முண்டையான கூரையற்ற வீடுகளும், இடுப்பளவு வளர்ந்த நாணல் புதரும் மட்டுமே ஊர் என்ற ஒன்று அங்கே நின்றதற்கான சான்றாக இன்று எஞ்சியிருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டில் நாயக்க மன்னன் வேதமங்கலமாக அதை ஸ்தாபித்தார் என்று கூறும் செப்பேடுகள் கிடைத்துள்ளன. ஆனால் இன்று அரசின் பதிவேடுகளில் வராகமங்கலம் என்ற பெயரே கிடையாது. நடுக்காலத்தில் எப்போதோ அந்த ஊருக்கு பாப்பனேரி என்று பெயர் மாற்றப்பட்டது. அக்ரகாரத்து மனிதர்கள் மட்டும் தங்கள் ஊரை விடாப்பிடியாக வராகமங்கலம் என்றே சொன்னார்கள். இன்று ஏரி வற்றிவிட்டது. ஊரின் கடைசி வாசியும் 1991-ல் இறந்துபோனார். இப்போது இந்தியப் பெருநிலத்தில் திக்குக்கொருவராக வாழும் சில முதியவர்களின் பெயரின் முதல் எழுத்தில் மட்டுமே அது ஊராக எஞ்சியிருக்கிறது. காற்றில் எங்கோ, கண்ணுக்குத்தெரியாத வலைப்பின்னலாக. ஒவ்வொரு பெயரும் பூமியிலிருந்து மறையும்போது அதுவும் மறைந்துபோகும்.

 

இன்று வராகமங்கலத்துக்குப் போகவேண்டுமென்றால், சைனீஸ்தந்தூரி உணவகங்கள் இருபுறமும் முளைத்துள்ள பரபரப்பான நான்குவழிச்சாலையிலிருந்து இறங்கிப் பல தசாண்டுகள் தூரம் நிலத்துக்குள் சென்றுகொண்டே இருக்கவேண்டும். செல்லச்செல்ல புதியமுளைகள் ஒடுங்கி ஒடுங்கி நிலம் தனக்குள்ளாகவே பேசிக்கொள்ளும் கலைந்த ஓசைகள் கேட்க ஆரம்பிக்கும். காற்றோசைகள், மண்ணோசைகள், மண்ணுக்கடியில் நீரோசைகள். பிறகு கல்லின் உறைந்த மௌனங்கள். தூரத்தில் மேற்குமலைகளின் வளைகள் வெள்ளிக்கனவுபோல் நின்றுகொண்டிருக்கும்.

கோதண்டராம வாத்தியாரின் காலத்தில் வராகமங்கலத்தில் அப்படித்தான் இருக்கும். சத்தமே இல்லாமல். ஆறு மணிக்கு மேல் வெளிச்சமும் இருக்காது. ஏனென்றால் தெரு விளக்குகள் இல்லாத கிராமம் அது. ஊரில் ஆரம்பப்பள்ளி என்றுமே இருந்ததில்லை. ஆரம்பச் சுகாதார மையத்துக்கும் பக்கத்து ஊருக்கு ஐந்து கிலோமீட்டர் நடக்க வேண்டும்.

ஆனால் வராகமங்கலத்தில் கோயில்களுக்குப் பஞ்சமில்லை. ஒரு மாரியம்மன் கோயில், ஒரு முனியப்பசாமி கோயில் உட்பட, ஊர்ப்பெயருக்குக் காரணமான ஒரு சிறிய பூவராகமூர்த்திக் கோயிலும் இருந்தது. அடிதளத்தைப்பார்த்தால் முன்னூராண்டுகால பழமையும், புராணத்தைப்பார்த்தால் மூவாயிரமாண்டுகால ஐதீகமும் கொண்ட கோயில் அது. சீதை பிரிந்த துக்கத்தில் ராமன் அலைந்த நாட்களில் இந்தக்கோயிலில் நின்று பூஜித்துப் போனதாக ஐதீகம். அப்போது பூமாதேவி அருளி, ராமனை தெற்கே சென்று மகளை மீட்க வழிகாட்டுகிறாள்.

ராமேஸ்வர யாத்திரைக்காரர்கள் முன்பொரு காலத்தில் இந்தக்கோயிலில் தரிசிக்காமல் தெற்கே போக மாட்டார்கள் என்று சொல்லப்பட்டது. இப்போது போனால் கோயிலிருந்த இடத்தில் புல் பாசி மண்டியக் கல் மட்டுமே இருக்கும். கோதண்டராம வாத்தியார் காலத்திலேயே கோயில் வழிபாடு நின்றுபோனது. ஏன் நின்று போனதென்றால் – அது அப்படித்தான், அந்தக் கோயிலின் கர்மா அது, என்று கோதண்டராம வாத்தியாரே சொல்லியிருக்கக்கூடும்.

வராகமங்கலம் கோதண்டராம வாத்தியாரின் குடும்பம் அந்தக்கோயிலிருந்த வரையில் அங்கே பூஜை செய்து வந்தார்கள். கோதண்டராம வாத்தியாரின் பால்ய காலத்தில், அவருடைய அப்பா சேதுராம வாத்தியார் அங்கே பூஜை செய்துகொண்டிருந்தபோது, ஒரு நாள் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கர்ப்பக்கிருகத்தின் மேற்குச்சுவர் உட்புறமாக இடிந்து விழுந்துவிட்டது. விஷயம் கேட்டு சேதுராம வாத்தியார் ஓடிச்சென்று பார்த்த போது, காலகாலமாக நின்றதுபோலவே, அந்தக் கல் நொறுங்கல்களுக்கிடையேயும், வராகமூர்த்தி பூதேவியைத் தூக்கிய தொடையில் தாங்கிப்பிடித்தவாரு நின்றுகொண்டிருந்தார். அதைக் கண்ட சேதுராம வாத்தியார் ஆற்றாது கண்ணீர் விட்டார்.

பல ஆண்டுகளாகவே கோயில் பராமரிப்புக்கு நிதிவேண்டும் என்று முதலில் ஜமீன்தாரிடமும், பிறகு அரசாங்கத்திடமும் அவர் கோரிக்கொண்டிருந்தார். அப்போதெல்லாம் போதிய நிதி வரவில்லை. இப்போது கோயில் மறுகட்டுமானம் செய்யப்படும் என்று அவருக்கு உறுதியளித்தார்கள். அது நடக்கும் வரையில் தெய்வங்களுக்கு வழிபாடு நின்றுவிடக்கூடாது என்பதால், வராகரும் பூதேவியும் சகல பரிவாரங்களோடு பக்கத்து ஊர் பெருமாள் கோயிலுக்குக் கொண்டுசெல்லப்பட்டார்கள். வழிபாட்டில் குறை வந்துவிடக்கூடாது என்பதால் அவர்களுடன் ஐம்பொன்னில் செய்த உற்சவர் சிலைகளும், வெள்ளிப்பெட்டிகளில் அலங்கார நகைகளும் அவர்களுடன் போயின.

புதிதாக மணமாகிப்போன பெண்ணைப் பார்க்கச்செல்லும் தந்தை போல் சேதுராம வாத்தியாரும் சில காலம் பக்கத்தூரில் அந்தக்கோயிலுக்குப் போய்க்கொண்டே இருந்தார். அரசாங்கத்துக்கும் மாதாமாதம் கடிதம் எழுதினார். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. வராகமங்கலத்தின் ஒழிந்த கோயிலில் சரிந்த கல் நொறுங்கல்கள் மட்டும் அப்படியே ஊமையாக நின்றன.

கோயில் பராமரிப்பு வேலை நின்ற பிறகு சேதுராம வாத்தியார் ஜோதிடம் பார்த்தார். வீட்டுப்பூஜைகள் செய்து வைத்தார். ஆனால் அவர் அகம் கோயிலிலேயே இருந்தது. ஒவ்வொரு நாளும், தவறாமல், ஒழிந்த, மண் சரிந்த அந்த ஆலயத்தின் கருவரை முன்னால் கைகூப்பி கண்ணீர் மல்கி நின்றார். கற்குவியல்களாக நின்றது கருவறை. அவரை உள்ளிருந்து எட்டிப்பார்க்கும் தெய்வம் அங்கு இல்லை.

அப்பாவை பின் தொடர்ந்து சென்ற பாலகன் கோதண்டராமனையும்  கண்களேயில்லாத கோயில் தரிசனத்தின் பித்து ஆட்கொண்டது.  அந்த அறைக்குள் கற்களுக்கிடையே சரிந்த ஒளி, பெயர்ந்த பீடத்தின் வெறுமை, அதன் மேல் கோலோச்சிய தூய ஆகாசம். வெறித்த கண்களுடன் அச்சிறுவன் அவற்றுக்கு முன்னால் நின்றான். யாருக்கான பீடம் அது? அந்தச்சிறுவனால் அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. ஆகவே நேரம் தவறாமல் ஒவ்வொருநாளும் வந்து ஒருநாளாவது பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அங்கே தரிசனம் செய்தான்.

ஒரு நாள், கோதண்டராமன் அப்பாவிடம் போய், அப்பா எனக்கு வேதங்களைச் சொல்லிக்கொள்ள வேண்டும், என்றான். அவனை சேதுராம வாத்தியார் அத்தியாயனத்துக்கு அவனுடைய மாமாவின் அகத்துக்கு அனுப்பினார். சில ஆண்டுகளில் அவன் கோதண்டராம வாத்தியாராகத் திரும்பி வந்தான். கோதண்டராமனுக்கு விவாகம் நடந்தது. குழந்தை பிறந்தது.  அப்போதே அக்ரகாரமும் சரி, ஊரும் சேரியும் சரி, மெல்ல மெல்ல ஒழிந்துபோக ஆரம்பித்தது. இளையவர்கள் படிப்பும் வேலையும் தேடி வெளியூர்களுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். முதியவர்கள் இறந்தபோது வீடுகள் ஒவ்வொன்றாக ஒழிந்தன.

பல்லாங்குழியின் கடைசி ஆட்டத்தில் “வழித்து-வழித்து-வழித்துத்” தேய்ப்பதுபோல், கோதண்டராமன் அக்ரகாரத்து வீடுகளைத் தாண்டிப்போகும்போது “வழித்து, வழித்து”த்தான் போகவேண்டியிருந்தது.

சேதுராம வாத்தியாரின் பதிமூன்றாம் நாள் காரியம் நடந்தபோது கேட்டார்கள் வெளியூர்களிலிருந்து வந்திருந்த தாயாதிகள் எல்லோரும். கோதண்டராமா, நீயோ அத்தியாயனம் பண்ணியிருக்கிறாய். பிள்ளையும் ஆகிவிட்டது. பட்டினத்துக்குப்போனால் பிழைப்புத் தேறுமே, என்று.

கோதண்டராம வாத்தியாருக்கு அப்போது ஒரு நரைமுடிக்கூட இல்லை. நெருப்பு நிறம். முழு தாடி. ஒளிவீசிய கண்கள்.  “நான் பிராமணன், எனக்கு என் கர்மா இருக்கிறது,” என்றார்.

“உன் கிருகத்தைப் பார்ப்பதும் உன் கர்மம் தான்,” என்று ஒரு பாட்டனார் சொன்னார்.

“தன் பிழைப்புக்கு மட்டும் கர்மா பண்ணுகிறவனா பிராமணன்?  ஊர் பிழைக்கத்தானே கர்மா பண்ண வேண்டும்?” என்றார் கோதண்டராம வாத்தியார். “மழை வரவில்லையென்றால் பிராமணன் ஷத்திரியனைப்போல் களஞ்சியத்தைத் திறந்து தானியம் வினியோகிக்கமுடியுமா? அல்லது சூத்திரனைப்போல் கிணறு வெட்ட முடியுமா? அவன் கர்மா மழைக்காகத் தேவர்களை நிறைவு செய்ய யாகம் பண்ணுவது. மழை வருகிறதென்றால் அதனால் தான். அதை அவன் தானே பண்ண முடியும்?”

“அதை இந்த ஊரில் இருந்து தான் பண்ண வேண்டும் என்றில்லையே?”

“முன்னகாலம் மாதிரி சதுர்வேதிமங்கலத்துக்குப் போகச்சொன்னால் போகிறேன். பக்கத்து ஊர்களுக்குச்சென்று வேண்டிய காரியங்களைச் செய்கிறேன். ஆனால் பட்டினத்திற்குப் போய் என் சம்ஸ்காரம் மாறிப்போனால் அப்புறம் நான் என்ன பிராமணன்? என் கர்மாவுக்குத்தான் என்ன பலன்?” என்றார் கோதண்டராம வாத்தியார்.

“இவன் ஏன் இப்படி ஆகிவிட்டான்?” என்றார்கள் அவர் வீட்டிலிருந்து நடந்து போனவர்கள்.

“என்ன ஆகிவிட்டது? இதுவும் ஒரு வைராக்கியம் தானே?” என்றார் இன்னொருவர்.

“வைராக்கியமா? தெய்வம் இல்லாத ஊராகிவிட்டது, ஒரு பிராமணனாவது கடைசிவரை நிலைக்கவேண்டும் என்று சொல்கிறான். பித்துக்குளி.” என்றார் மூன்றாமவர்.

“அவன் அப்பா பூஜை செய்த கோயிலில் சுவாமி ஒழிந்தார் என்பதற்காக இவனே இந்த ஊரில் பழிவாங்கும் தெய்வம் மாதிரி உட்கார்ந்துகொள்ளப்போகிறானா என்ன?”

“வைதீகனுக்கு எதற்குத் தெய்வம். அவனுக்குத் தெய்வமெல்லாம் இரண்டாவதுதான். கர்மா தான் எல்லாம்.”

“தெய்வானுக்கிரகம் இல்லாமல் என்ன கர்மம்?”

“கர்மம் இல்லாமல் ஏது அனுக்கிரகம்?”

“அதில்லை. இவனுக்கு தானே வராகமூர்த்தி என்று நினைப்பு. அதனால் தான் பன்றி மாதிரி தந்தங்களை மண்ணில் புதைத்து நகரமாட்டேன் என்று வீம்புப்பண்ணுகிறான்”

“இது வராகம் இல்லை,” அவர்களில் பெரியவர் சொன்னார். “வேரறுத்துப் பிடுங்குவதுதான் வராகம். அது மண்ணை உழுதுபோட்டுத் திருப்பிவிடும்.”

கோதண்டராம வாத்தியாருக்கு ஒரே மகன் இருந்தான். ராமு. அவருடைய பாரியாள் தங்கம்மா இரண்டாம் பிரசவத்தின் சமயத்தில் இறந்து போனாள். ராமு வளர்ந்து பெரியவனானான். அப்போது அக்ரகாரத்தில் தங்கிய கடைசி மூன்று குடும்பங்களில் ஒன்று வழியாக பாகீரதியின் ஜாதகம் வந்தது.

பாகீரதிக்கு அப்பா கிடையாது. அம்மா பட்டினத்தில் ஒரு குடும்பத்தோடு சமையல்காரியம் செய்தார். அங்கே மகளைக் கூட வைத்துக்கொள்ள முடியாது என்பதால் கிராமத்தில் அவளுடைய அப்பா வழி உறவுக்காரர் வீட்டில் அமர்த்தியிருந்தாள். அங்கே பணக்கஷ்டம். இனி எத்தனை நாள் அவளை வைக்கமுடியும் என்ற உரசல் இருந்தது. இந்த வேளையில் ராமுவின் வரன் வந்தது. பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இருபக்கமும் இல்லாததால் கல்யாணம் சுமுகமாகவும், சீக்கிரமாகவும் நடந்துமுடிந்தது.

பாகீரதி வராகமங்கலத்துக்குப் போனபோது இரும்புநிறக் கூந்தலுடைய ராணி ஒருத்தி மூன்றாம் முறையாக நாட்டை ஆட்சி செய்ய வந்திருந்தாள். அவளுக்குக் கொடுங்காரி என்று பெயர் இருந்தது. ஆனால் அவள் கழுகுப்பார்வையில் கூட வராகமங்கலம் விழுந்திருக்காது. எலிக்குஞ்சுபோன்ற சின்ன மூஞ்சியும், இளைத்த உடலும் கொண்டிருந்த பாகீரதி போன்ற பெண்ணை அவள் ஒரு முகமாகவே கண்டிருக்கமாட்டாள். ஆனால் அப்படி பல பாகீரதிகள் இருந்தார்கள், அந்நாட்களில்.

பாகீரதிக்கு சாந்தி கல்யாணம் பண்ணிவைக்க இன்னும் ஒரு வருஷம் ஆனது. அதற்குள் பாகீரதி அந்த வீட்டோடு ஒன்றிவிட்டாள். இல்லத்தை தனதாக்கிக்கொண்டாள். அவளுக்கு வேறொரு இல்லமோ, ஊரோ, பூர்வீகமோ, கடந்தகாலமோ இல்லை, இருக்கவேயில்லை, இருந்திருக்கவே வாய்ப்பில்லை, என்பதுபோல.

அடுத்த வருடம், பாகீரதி சினை கொண்டாள்.

அவளுக்கு நான்காவது மாதம். வைகாசி அக்னி நட்சத்திரம். உச்சிவேளையில் தண்ணீர் கொண்டுவர ராமு கிணற்றுக்குப்போயிருந்தான். வெளிச்சம் நேராகக் கண்ணில் விழுந்ததில் அவன் கால் ஒரு கணம் கல்லில் இடறி படிக்கல்லில் தலை அடிப்பட்டு கிணற்றில் விழுந்தவன் இறந்துபோனான்.

அதன்பிறகு வீட்டில் பாகீரதியும் கோதண்டராம வாத்தியாரும் மட்டும் தான்.

“பட்டினம் போய் பிழைப்பைப் பார்க்கலாமே” என்ற அறிவுரை அப்போதும் அவ்வப்போது சொல்லப்பட்டது. ஆனால் இப்போது கோதண்டராம வாத்தியாருக்கு வயதும் அனுபவமும் மேலும் பிடி கொடுத்திருந்தது.

“எங்கள் ஜன்ம வாசனை. பிராரப்தம். இந்த கஷ்டத்தை அனுபவிக்கிறோம். கண்டதையும் பட்டுக்கொண்டு மேலும் மூட்டை சேர்க்க வேண்டுமா என்ன?” என்று நிதானமாகக் கேட்டார்.

ஆனால் ஊரிலும் அப்படிக்கேட்கும் ஆட்கள் ஒவ்வொருநாளும் அருகிக்கொண்டே வந்தார்கள். நிலமெல்லாம் அத்தனை பசி. வேலை எங்கு கிடைத்தாலும் செய்தார்கள். அக்ரகாரமே கிட்டத்தட்டக் காலியாகிவிட்டது.

குடலை குமட்டி எடுத்துவிடுவாள் என்பதுபோல பாகீரதிக்கு ஏழாம் மாதம் வரை மசக்கை இருந்தது.

“உன் விதி இப்படியா இருக்க வேண்டும்,” பாகீரதி இடுப்புச்சுமையை தாங்கியபடி வந்து நிற்கும்போதெல்லாம் கோதண்டராம வாத்தியார் சொல்வார். அவர் கண்களில் கண்ணீர் வந்து நிற்கும். அந்த நாட்களில் மேலும் அரை மணி நாம ஜபம் பண்ணுவார். கிணற்றிலிருந்து இன்னொரு குடம் தண்ணீரை மோண்டு மீண்டும் குளிப்பார். குளித்துக்குளித்துக் கழுவிவிடலாம் என்பதுபோல்.

பாகீரதி கோதண்டராம வாத்தியாருக்கு வேண்டிய பணிவிடைகளையெல்லாம் செய்தாள்.

விறகு பொறுக்கினாள். இரண்டு வேளை சுடு தண்ணீர் வைத்துக்கொடுத்தாள். கிழங்கு பிடுங்கினாள். அவர் சமையலுக்கான சுற்றுவேலைகளையெல்லாம் பண்ணினாள். துணி கசக்கினாள். தாழ்ந்த கூரையில் ஒழுகல்களைக்கூட அவளாகவே அடைத்தாள்.

மசக்கையைப் பார்த்து பெண் குழந்தை என்று பயந்தாலும் பாகீரதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. நிறைய முடியுடன், சிறிதாக, கைகால்களை முறுக்கிக்கொண்டு.

கோதண்டராம வாத்தியார் அந்த வட்டாரத்தில் கிடைத்த ஹோமம், புண்யாஜனம், சிராத்தம் எல்லாம் செய்து கொடுத்தார். பக்கத்து ஊர்களுக்குப் போய்வரவும் ஆரம்பித்தார். அப்படிப் போவதென்றால் காலமே போனால் மத்தியானத்துக்கு மேல் ஆகிவிடும் அவர் வர. அவர் வந்ததும் தான் அந்நாட்களில் பாகீரதிக்குச் சாப்பாடு. மற்றநாட்களில் பெரும்பாலும் அகத்திக்கீரை. அதலைக்காய். களி.

குழந்தை வளரவேண்டும் என்று பாகீரதி வற்றிப்போனாள்.

குழந்தை எந்நேரமும் பூனைக்குட்டிக் குரல் கொடுத்து அவள் நெஞ்சை கடித்துக்கொண்டே இருந்தது. பால் வந்தால் வரும். வராதபோது சின்ன உடம்பு துடித்துத் துடித்து அதிர குழந்தை கதறும். அவளுடைய காம்பை ஆவேசமாக வாயால் பிடித்துக் கடித்து இழுக்கும். நகத்தால் கீறும்.

ஒரு வழியாக, பசி ஆறியோ, இல்லை பசி மீறியோ, அது உறங்கும்.

அது மடியில் உறங்கிக்கொண்டிருக்க பாகீரதி முற்றத்தில் பருக்கைகளை முதுகில் சுமந்து ஓடிக்கொண்டிருக்கும் எறும்புக்கூட்டங்களை பார்த்துக்கொண்டிருப்பாள்.

ஒரு நாள், அவள் அப்படி அமர்ந்திருக்கையில், ஒரு குரல் கேட்டது.

“தாயீ. சோறு.”

உடம்பில் தண்ணீர் பட்டு எட்டு பத்து நாள் ஆகியிருக்கும் என்று மதிக்கத்தக்க ஒரு பண்டாரம். வற்றி இளைத்த வெற்று உடம்பெங்கும் தெருவிலும் மண்ணிலும் படுத்துப் புரண்ட புழுதி. வெள்ளைப்பற்கள், கருப்பான முகம், களைத்து மங்கிய கண்கள். அந்த ஊரில், அப்படி ஒருவன், எப்படி எங்கிருந்து வந்தான் என்றே பாகீரதிக்குப் புரியவில்லை. ஆனால் அவன் கண்களிலிருந்த பசி அவளுக்குப் புரிந்தது.

“தாயீ, சோறு”

பாகீரதி  குழந்தையை விரித்தத்துணியில் கிடத்திப்போட்டு எழுந்தாள். தனக்காகக் காலையில் செய்துவைத்திருந்த மோர்கூழைப் பாதியாக்கி ஒரு பச்சை மிளகாயை அறுத்து அதை வந்தவனுக்கு ஒரு இலையில் வைத்து நீட்டினாள்.

“தாயீ. உக்காந்து சாப்பிட்டு நாளாச்சு. இப்படி ஒரு ஓரமா இருந்துகிட்டு சாப்பிட்டுப் போகட்டுமா?”

பாகீரதி தலையசைத்தாள். அவன் முற்றத்தில் உட்காரப்போக, “அங்கே எறும்பு இருக்கு,” என்று சொல்லி வாசல் படியிலிருந்து உள்ளே நகர்ந்தாள். அவன் மேல் படியில் இலையை வைத்து கீழ் படியில் உட்கார்ந்து பசி வேகத்தோடு அள்ளி அள்ளி வாயில் போட்டுச் சாப்பிட்டான்.

“தாயீ ஒரு வாய் தண்ணி.”

அவன் முன்னால் ஒரு சொம்பு நீர் வைக்கப்பட்டது.

அவன் உண்டு முடித்து இலையை மடித்து அதை செடி பக்கமாக போடப்போனான். அப்போது எதிரே கோதண்டராம வாத்தியார் உள்ளே வந்தார். முகத்துக்கு முகம் பார்த்துக்கொண்டார்கள். அவன் உடனே ஒதுங்கினான்.

பாகீரதி வேகமாகப் படியை பிரட்டித் துடைத்தாள். அவர் உள்ளே செல்ல வழிவிட்டு ஓரமாக நின்றாள்.

அவரும் படியை மிதிக்காமல் உள்ளே போனார்.

சாயங்காலம் அவர் சாப்பிடும் வேளையில், கோதண்டராம வாத்தியார் அவளிடம், “யாரம்மா அது?” என்றார்.

பாகீரதி, “தெரியாதப்பா,” என்றாள்.

“தெரியாதவர்களுக்கெல்லாம் இப்பிடி வாசலில் உட்கார வைத்து விளம்புகிறாயே?” என்றார் கோதண்டராம வாத்தியார்

“கண்ணைப்பார்த்தால் பசியென்று தோன்றியது,” என்றாள் பாகீரதி.

“வாஸ்தவம் தான் அம்மா. கொடுத்து அனுப்பிருக்கலாமே? இங்கேயே உட்கார வேண்டுமா?” என்றார் கோதண்டராம வாத்தியார்.

“தெய்வமென்று நினைத்து விளம்பினேன்,” என்றாள் பாகீரதி

“தெய்வமும் கர்ம பந்தத்தைத் தாண்டியதில்லையம்மா,” தட்டிலிருந்த துளிச்சாதத்தை பிசைந்துகொண்டே சொன்னார் கோதண்டராம வாத்தியார். “இங்க கோயில்ல ஆண்டாண்டு காலமா இருந்து அருள் பண்ண தெய்வம். ஒரு நாள் அப்படியே ஒழிந்து போகவேண்டுமென்று அதற்கு விதி அல்லவா?”

பாகீரதி கொட்டு ரசத்தை மரக்கரண்டியால் மெல்ல அவர் பக்கம் தள்ளினாள். “ம்,” என்றாள்.

ரசம் விட்டுக்கொண்டே, “சம்ஸ்காரம் மாரக்கூடாதம்மா,” என்றார்.

இரவு பாகீரதி புழக்கடையில் குழந்தையை மடியில் கிடத்தி உட்கார்ந்தாள். அன்றும் குழந்தை பால் குடிக்கச் சிரமப்பட்டது. கடித்துவைத்தது. அழுது ஒருவழியாக ஓய்ந்து விரலைச் சப்பியபடித் தூங்கியது.

பாகீரதி முன்னும் பின்னுமாக ஆடியபடி அதன் முகத்தைப் பார்த்தாள். அன்று வந்தவன் கண்களிலும் அதே பசி. அந்தப் பசி அவளுக்குத் தெரியும். அது எப்படிக் கெஞ்சவைக்கும் என்றும்.

குழந்தையும் பசி வந்தால் முதலில் கெஞ்சும். முலையுடன் பேரம் பேசுவதுபோல். கெஞ்சினால் முலை மறைத்துவைத்திருக்கும் பாலை இரங்கி கொடுத்துவிடும் என்பதுபோல். ஆனால் எப்போது பால் வரும் எப்போது வராது என்று அவளாலேயே சொல்ல முடியாது.

அப்போது பாகீரதிக்கு அன்று கோதண்டராம வாத்தியார் சொன்னது ஞாபகம் வந்தது. தெய்வங்களுக்கே கர்ம பந்தங்கள் உண்டு என்றார். அப்படியென்றால் மனிதர்கள் எம்மாத்திரம்?

“ஈஸ்வரா,” ஈனசுவரத்தில், ஒரு மூச்சாக மட்டும் அந்த சப்தம் அவள் உதடுகளிலிருந்து இறங்கியது. கங்கையைப் பிடித்து வைத்ததுபோல் அவள் முலைப்பாலையும் அந்த ஈஸ்வரன் பிடித்து வைத்திருந்தானா? அதுவும் கர்ம பந்தமா?

என்ன ஆட்டம் இது?

“எல்லாம் பிராரப்தம்,” என்று கோதண்டராம வாத்தியார் சொல்வார்.

பாகீரதி குழந்தையைப் பார்த்தாள். பசியில் அழுது வாடி வதங்கியிருந்தது அதன் முகம்.

சாலையில் நடக்கும்போது எதையாவது தொட்டுவிட்டால் கொல்லையில் வந்து கழுவிக்கொள்வது மாதிரி இதையும் கழுவித்துடைத்துவிட முடியாதா?

இருந்தாலும் குழந்தை உடலில் சதை போட்டிருந்தது. தன்னிடம் கிடைத்த பாலை குடித்ததில் போட்ட சதை. “என் சதை!” அன்று வந்து சாப்பிட்ட பண்டாரம் பாகீரதியின் கண்முன்னால் வந்தான். அவள் உணவை சாப்பிட்டவன். அடுத்த நொடியே, “ஈஸ்வரா!” என்றாள். என்ன யோசனை இது! பிராரப்தம்! பிராரப்தம்! பதறிக்கொண்டே இருந்தது அவள் சித்தம்.

அவர்களுடைய பாடு அப்படியே போனது. கோதண்டராம வாத்தியார் வாய்ப்புக் கிடைத்த சம்ஸ்காரங்களுக்கெல்லாம் போய் ஒரு பிராமணராக உட்கார்ந்தார். அவருக்கு அங்கே ஒரு வேளை சோறு உண்டு. தட்சிணைப்பணத்தை மட்டும் வைத்து பாகீரதி வீட்டை நடத்தினாள். வராகமங்கலத்தில் இருந்துகொண்டு வேறு வேலை எதுவும் அவள் நினைத்திருந்தாலும் செய்திருக்க முடியாது. அதற்கு பக்கத்தூர்களுக்குப் போகவேண்டும். ஆலையிலோ தீப்பெட்டித் தொழிற்சாலையிலோ வேலை கிடைக்கும். ஆனால் ஊரிலிருந்து ஊருக்கு, தொட்டுத்தொட்டு, மின்கம்பியில் மின்சாரத்தைப்போல அவள் பயணிப்பது கோதண்டராம வாத்தியாருக்கு உவக்கவில்லை.

ஒரு நாள், மதியம் மூன்று மணி வாக்கில், கோதண்டராம வாத்தியார் திரும்ப வந்தார். பக்கத்து ஊரில் ஒரு ஆண்டுநிறைவு. கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், ஆயுஸ் ஹோமம் எல்லாம் உண்டு. குழந்தையின் அப்பா மேற்கில், எண்ணை விளையும் ஏதோ ஒரு நாட்டில் வேலையாக இருந்தார். ஊருக்கு விடுமுறையில் வந்திருந்தார். அவர் சம்ஸ்கிருத உச்சரிப்பு நன்றாக இருந்தது. அங்கே ஆசாரங்களைப்பார்ப்பது கஷ்டம், இருந்தாலும் முடிந்த அளவு எல்லாமே பார்க்கிறேன் என்று கோதண்டராம வாத்தியாரிடம் சொன்னபோது அவர் சந்தோஷப்பட்டார்.

அந்த வீடு பெரியது. இரண்டடுக்கு. கீழ் அடுக்கில் வைதீக காரியங்கள் நடந்தன. மேல் அடுக்கில் விருந்தினர் உபசாரம் நடந்தது. குழந்தையின் அம்மா தன்னுடைய தோழிகள் சிலரையும் அழைத்திருந்ததாகத் தெரிந்தது. வண்ணப்புடவைகளின் மினுக்கம் அவ்வப்போது மாடிக்குப்போகும் படிகளின்மேல் தென்பட்டது.

காரியங்கள் முடிந்து வாத்தியார்களுக்கு கீழேயே இலைபோட்டார்கள். சிரார்த்தங்களில் எள்ளுருண்டையும் பிரண்டைத் துவையலும் சாப்பிட்டுச் சலித்துப்போன கோதண்டராம வாத்தியாருக்கு பால் பாயசமும் தவலை வடையும் நல்ல ருசியாகவே இருந்தது. குழந்தையின் அம்மா படித்தவள் என்றாலும் நல்லவளாக இருந்தாள். பார்த்துப் பார்த்துப் பரிமாறினார். கிளம்பும்போது, “மாமா, உங்கள் இல்லத்தாருக்கு,” என்று ஒரு அடுக்கை நீட்டினாள்.

கோதண்டராம வாத்தியார் வந்ததும் அதை பாகீரதி பக்கமாக வைத்தார். “இந்தாம்மா. உனக்குத்தான்,” என்றார்.

கோதண்டராம வாத்தியார் போய் படுத்த பிறகு, குழந்தைக்கும் பால் கொடுத்துத் தூங்கவைத்தபிறகு, பாகீரதி அடுக்கைத் திறந்தாள்.

கீழ் அடுக்கில் கொஞ்சம் பாயசமும், இரண்டு வடையும் இருந்தது.

குழந்தையின் முகத்தைப் பார்த்துக்கொண்டே பாகீரதி மெல்ல மெல்ல அதில் இருந்தவற்றைச் சாப்பிட்டாள். ஒவ்வொரு வாயாக, அவள் மென்று மசித்து உண்டாள். ஒரு பருக்கைக்கூடப் பல் இடுக்கில் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டாள்.

கடைசித்துளி பாயசமும் வழித்துத் துடைத்த பிறகு, அவள் மேல் அடுக்கைத் திறந்தாள். சரக்கென்று மூச்சைப் பிடித்தாள்.

பருத்திப்பஞ்சினால் செய்ததுபோல் வெள்ளைவெளேரென்று கோபுர வடிவில் ஒரு வஸ்து அதில் வைக்கப்பட்டிருந்தது. கோபுரத்தின் கலசம் போல் இளஞ்சிவப்பு நிறநுரை அதன் மேல் படிந்திருந்தது.

அந்த நுரையின் நிறம் தான் அவளை முதலில் ஈர்த்தது. நுரையை ஒரு விரலால் அள்ளி பாகீரதி முகத்தருகே கொண்டு வந்தாள். மென்மையாக, பறந்துவிடுமென்பதுபோல், பாரமே இல்லாததாக இருந்தது. அதிலிருந்து சீனி, வெண்ணெய், ரோஜாப்பூ என்று மாறிமாறி வாசம் எழுந்தது. சொகுசான, மெத்தான, இனிய வாசம்.

கோதண்டராம வாத்தியாரின் குறட்டை சப்தம் கேட்டுத் தன்னை உலுக்கிக்கொண்டாள். இல்லை, வேண்டாம், என்பதுபோல் கையை உதறி, அடுக்கை மூடி வைத்து, அருகே இருந்த சொம்பு ஜலத்தைக் கையில் விட்டுக் கழுவிக்கொண்டாள்.

பாகீரதி குழந்தையின் முகத்தைப் பார்த்தாள். ஏனோ, கோதண்டராம வாத்தியார் சொன்ன அந்த காட்சி அவள் கண் முன்னால் வந்தது. கண்களேயில்லாத கோயில். தெய்வம் ஒழிந்துபோன கருவறைப்பீடம்.

அவள் பார்வை பட்டது தெரிந்ததுபோல் குழந்தை சிணுங்கி விழித்தது. தன்னைப் பார்க்கும் அம்மாவின் கண்களைப் பார்த்தது. சினேகமாகச் சிரித்து ஒரு மாதிரி கண்ணைச் சுழற்றிச் சப்புக்கொட்ட ஆரம்பித்தது. “ங்கா” என்று எதிர்பார்ப்புடன் கேட்டது. விரலை எடுத்து வாயில் வைக்கப்போனது.

பாகீரதி வேகமாக அதன் விரலைத் தட்டிவிட்டு அந்த இடத்தில் தன் விரலை வைத்தாள்.

குழந்தை விரலைத் தயக்கத்துடன் நக்கி அம்மாவைப் பார்த்தது. பிறகு வேகமாக நக்கியது. வடை, நெய், ரோஜாப்பூ என்று விரலில் தங்கியிருந்த எல்லா வாசங்களும் குழந்தையை வெறிகொள்ளச்செய்ய, அது அந்த விரலை மொத்தமாக வாய்க்குள் இழுத்துக்கொண்டு நம்நம்நம்மென்று ரசித்து ரசித்துக் கடிக்கத் தொடங்கியது.

 

 

8 COMMENTS

  1. காணாமல் போன ஊரைக் கண்முன் நிறுத்திய கதை. இனி இடிந்து பராமரிபின்றி புதர் மண்டிக்கிடக்கும் நூற்றாண்டுகள் பழமையான கோயில்களைப் பார்க்கும்போதெல்லாம் அதன் பின்னால் கோதண்டராம வாத்தியார், பாகீரதி போன்ற கதைமாந்தர்கள் பலர் அரூபமாக நினைவில் வந்து போவர்!

  2. எடுத்துரைப்பு அருமை.வாழ்த்துகள் படைப்பாளிக்கு.

  3. ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பும் குறையவில்லை. எப்பொழுதுதான் கோதண்டராம வாத்தியாருக்கு விடியும் என்ற வருத்தமும் தீரவில்லை. வாழ்த்துக்கள் !

  4. நல்ல எழுத்து. சம்ஸ்காரம் என்ற வார்த்தை கதையில் எப்படி எப்படி வருகிறதென்று பார்க்கும்போது கதை மேலும் விரிகிறது.

  5. அருமையான சிறுகதை. நல்ல நடை. வாழ்த்துகள் தோழி…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.