சித்தலிங்கையா: நினைவில் நிலைத்திருக்கும் ஆளுமை

11.06.2021 அன்று தமிழுலகம் நன்கறிந்த கன்னட எழுத்தாளர் சித்தலிங்கையா தன் அறுபத்தேழாவது வயதில் தீநுண்மி தொற்றின் காரணமாக இயற்கையெய்தினார். அரசு மரியாதையோடு அவருடைய இறுதிப்பயணம் நடந்து முடிந்தது. அவருடைய மறைவையொட்டி இந்தியப் பிரதமர், கர்நாடகத்தின் முதல்வர், அமைச்சர்கள், பத்திரிகைகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், தலித் அமைப்பினர், சமூக ஆய்வாளர்கள், பல்வேறு கட்சியினர் என அனைவருமே இரங்கல் செய்தி விடுத்தனர்.

சித்தலிங்கையா பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். கவிஞர் ஜி.எஸ்.சிவருத்ரப்பா காலத்தில் அவர் உருவாகி வந்ததுபோல, அவர் தம் காலத்தில் பல மாணவமாணவிகளை உருவாக்கினார். அவரிடம் பயின்ற பலர் இன்று ஆற்றல் மிக்க ஆய்வாளர்களாகத் திகழ்கிறார்கள். பெங்களூரில் கன்னட விரிவுரையாளராகவும் கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பவராகவும் விளங்கும் மலர்விழி, சித்தலிங்கையாவிடம் பயின்ற மாணவி. அவர்கள் அனைவரும் சித்தலிங்கையாவுக்கு அஞ்சலி செலுத்தி தம் துயரத்தைப் பகிர்ந்துகொண்டனர்.

கர்நாடக மாநில சட்ட மேலவை உறுப்பினராக சித்தலிங்கையா இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு சேவையாற்றினார். கன்னட வளர்ச்சித்துறை இயக்குநராக செயல்பட்ட அனுபவமும் அவருக்கு உண்டு. கர்நாடக நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கும் குழுவிலும் அவர் உறுப்பினராகச் செயல்பட்டிருக்கிறார். அவரால் பயனடைந்த அனைவரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இன்று அவரைப் பாராட்டிச் சொல்லும் எல்லாப் பெருமைகளுக்கும் உண்மையாகவே தகுதி கொண்டவர் சித்தலிங்கையா. வாழும் காலத்தில் நட்பை நாடிச் செல்வதிலும் தன்னை நாடிவரும் நட்பை ஏற்றுக்கொள்வதிலும் அவர் ஒருநாளும் தயக்கம் காட்டியதில்லை. வேறுபாடு பாராட்டியதுமில்லை. கருத்துவேறுபாடு கொண்ட எதிர்த்தரப்பினரோடும் வெறுத்து ஒதுக்கிறவர்களோடும் கூட அவர் அன்பு பாராட்ட விழைந்ததை  பலரும் ஒரு குற்றச்சாட்டாகவே வைத்ததுண்டு. ஆனால் அதை அவர் பொருட்படுத்தியதில்லை. அடையாளம் சார்ந்து ஒருவரைப் பார்ப்பது என்பது ஒரு படிகம் வழியாக பார்ப்பதற்குச் சமமான செய்கை என அவர் கருதினார். அந்தப் பார்வைக்கு நிறவேறுபாடுகளைத் தவிர வேறு எதுவும் தென்படாது என்றும் கூறினார். ஒரே ஒரு விழுக்காடு ஒத்த பார்வை இருப்பவர்களோடு கூட சேர்ந்து வேலை செய்யவே தனக்கு விருப்பம் என்று தெளிவுபடுத்தினார். கடந்த சில ஆண்டுகளாகவே மேடைகளில் அதை வெளிப்படையாகவே பேசினார்.

பேராசிரியர், ஆய்வாளர், மேடைப்பேச்சாளர், சட்ட மேலவை உறுப்பினர், தலித்துகள் ஆதரவைப் பெற்றவர் போன்ற நிலைகளுக்கு அப்பால் அவர் ஒரு எழுத்தாளர் என்பது முக்கியமான அடையாளமாகும். என்றென்றும் நிலைத்திருக்கும் அடையாளம். எழுபதுகளில் ஒரு புதுவிதமான கவிதைமுறைக்கு அவர் தொடக்கப்புள்ளியாக அமைந்தார். நாட்டார் பாடல்களின் அமைப்பில் ஓசையுடன் பாடத்தக்க அழகான கவிதைகளை அவர் எழுதி இலக்கிய மேடைகளில் பாடினார். அந்தப் பாடல்கள் கேசட் வடிவத்தில் பரவி மாநிலமெங்கும் ஒலித்தன.

நாட்டுப்புறப்பாடல்கள் அனைத்தும் மக்களுடைய தொடக்ககாலக் கலைவடிவம். திரும்பத்திரும்ப வலியுறுத்திச் சொல்வதன் வழியாக ஓர் அழுத்தத்தையும் உண்மையையும் உணரவைக்கும் ஆற்றல் அவற்றுக்கு உண்டு. அந்த வடிவத்தின் சாயலை சித்தலிங்கையா நவீன காலத்துக்கு ஏற்றவகையில் தன் கவிதைகளில் பயன்படுத்திக்கொண்டார். ஒரு கழுதையை முன்வைத்து அவர் எழுதிய ஒரு கவிதை கர்நாடகம் முழுக்க பிரபலமாகி அனைவரும் பாடிய காலமுண்டு.

ஓர் ஊரில் துணிவெளுக்கும் சித்தையா வசித்துவருகிறான். அவனுக்கு மனைவி, மக்கள் யாரும் இல்லை. அவனிடம் இருப்பது ஒரே ஒரு கழுதை மட்டும்தான். கழுதைக்கு அவன் தோழன். அவனுக்கு கழுதை தோழன். அந்தக் கழுதையை அவன் குழந்தையைக் கொஞ்சுவதுபோலக் கொஞ்சுவான். கழுதையுடன் சேர்ந்து ஒரே தட்டில் சாப்பிடுவான். ஒருநாள் அதிகாலை அந்தக் கழுதை திடீரென இறந்துவிடுகிறது. கழுதையைத் தூக்கிச் சென்று ஊருக்கு வெளியே குழி தோண்டி அடக்கம் செய்கிறான். பாசமிகுதியால் தேங்காய் பழம் வைத்து, வத்தி கொளுத்தி, கற்பூரம் ஏற்றி வணங்குகிறான். பிறகு திரும்பிப் பார்க்காமல் அந்த ஊரைவிட்டே சென்றுவிடுகிறான். சந்தைக்குப் போகும் வழியில் தற்செயலாக ஒரு வியாபாரி அந்தப் பக்கம் வருகிறான். ஏதோ ஒரு மேட்டில் பூப்போட்டு பூசை நடந்திருப்பதைப் பார்த்துவிட்டு, நெருங்கிவந்து வணங்கிவிட்டுச் செல்கிறான். அன்று அவன் வியாபாரத்தில் கொழுத்த லாபம் கிடைக்கிறது. அதற்குப் பிறகு அதுவே அவனுக்கு வழக்கமானது. ஒவ்வொரு நாளும் அவன் லாபம் பெருகிக்கொண்டே செல்கிறது. நீண்ட காலத்துக்குப் பிறகு பக்தி மிகுதியால் அந்த மேடு இருந்த இடத்தை  ஒரு கோவிலைக் கட்டுகிறான் வியாபாரி. கோவில் பிரபலமாகிவிடுகிறது. அங்கு வந்து வணங்கிவிட்டுச் செல்கிறவர்கள் வாழ்க்கையில் செல்வம் புரள்கிறது. அதைக் கேள்விப்பட்டு அந்த ஊர் ராஜாவும் ராணியும் கோவிலுக்கு வருகை புரிகின்றனர். கோவிலுக்கு உள்ளேயும் வெளியேயும் திருவிழாக்கூட்டம். தற்செயலாக வெளியூருக்குப் போயிருந்த சித்தையன் சொந்த ஊருக்குத் திரும்பி வருகிறான். தான் கழுதையைப் புதைத்த இடத்தைப் பார்க்க ஆசையோடு நெருங்கி வருகிறான். காவலுக்கு நின்றிருந்த காவலர் அவன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிட, வாசலுக்கு வெளியே அவன் கலங்கி நிற்கிறான். அந்நியமாதல் தத்துவத்தை மிக எளிய முறையில் காட்சிப்படுத்தும் இக்கவிதை சமூக முரணையும் புரிந்துகொள்ள துணை செய்கிறது. நாட்டுப்புறப்பாடல்போல இசைக்கப்படும் இக்கவிதையை ஒருமுறை கேட்டால் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும்.

இருபதாண்டு இடைவெளியில் மூன்று தொகுதிகள் வெளியானதற்குப் பிறகு அவர் உரைநடை எழுதத் தொடங்கினார். ஊரும் சேரியும் என்னும் தலைப்பில் அவருடைய சுயசரிதை மூன்று பகுதிகளாக வெளிவந்து அவருக்குப் பெருமையைத் தேடித் தந்தது. அச்சுயசரிதைப் பகுதிகள் கன்னட இலக்கியத்துக்கு அவர் வழங்கிய அருங்கொடை.

வழக்கமாக எல்லா ஆளுமைகளும் எழுதுவதுபோல சித்தலிங்கையா இச்சுயசரிதையை காலவரிசையில் எழுதவில்லை. தன் நினைவில் திரண்டெழும் அனுபவக்குறிப்புகளை முன்னும் பின்னுமாக அதன் இயல்பான போக்கில் எழுதித் தொகுத்திருக்கிறார். எந்தக் குறிப்பிலும் அவர் தன்னை மையப்படுத்திக்கொள்ளவில்லை. மாறாக, தன் நினைவில் வாழும் மனிதர்களை முன்னிறுத்தவே அக்குறிப்புகளைப் பயன்படுத்திக் கொள்கிறார். எங்கும் ஆவேசமோ, சீற்றமோ, கண்டனமோ இல்லை. மாறாக கருணையும் நகைச்சுவையும் அவலமும் பகடியும் நிறைந்திருக்கின்றன. வாழும் காலத்தில் தான் கண்ட மனிதர்களுக்கு ஒரு தனித்துவமான இடத்தை சித்தலிங்கையா தன் சுயசரிதை வழியாக உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும். இந்த மண்ணில் சித்தலிங்கையாவின் நினைவுள்ள வரையில் அவர்களுடைய நினைவுகளும் வாழும்.

ஒரு குறிப்பு: எழுபதுகளில் ஒரு பெரிய போராட்டம் வெடித்தது. கர்நாடகத்திலிருந்து பெல்காமைப் பிரிக்க அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தும் போராட்டம். அதையொட்டி எங்கெங்கும் ரயில்களை நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது. மாணவப்பருவத்தில் இருந்த சித்தலிங்கையா அப்போராட்டத்தில் கலந்துகொண்டார். பெங்களூரிலிருந்து பம்பாய் நோக்கிச் செல்லும் ரயிலை சிறீராமபுரத்துக்கு அருகில் இருப்புப்பாதையை மறித்து நிறுத்தவேண்டும் என்று திட்டமிடப்படுகிறது. சிறீராமபுரம் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் பகுதி. அங்கு வாழ்ந்த கோவிந்தராஜ் என்பவர் கன்னட மொழியோடும் கர்நாடகத்தோடும் நல்லிணக்க எண்ணம் கொண்டவர். சிறீராமபுரத்தில் கன்னட வளர்ச்சிக்காக பாடுபடுபவர். அவரும் நான்கு கன்னடிய நண்பர்களும் ரயிலை நிறுத்தும் பொருட்டு முழக்கமிட்டபடி இருப்புப்பாதையில் படுத்துவிடுகிறார்கள். தொலைவில் ரயில் நிற்காமல் வேகமெடுத்து வரும் ஓசை கேட்டதும் ஒவ்வொருவராக நால்வரும் இருப்புப்பாதையைவிட்டு எழுந்து விலகியோடி விடுகிறார்கள். உறுதியோடு முழக்கமிட்டபடி தண்டவாளத்திலேயே படுத்திருந்த கோவிந்தராஜை நசுக்கி கூழாக்கிவிட்டு ரயில் கடந்து போய்விடுகிறது.

இரண்டாவது குறிப்பு: சித்தலிங்கையாவின் நெருங்கிய நண்பர் புட்டப்பா. அவருடைய தந்தைக்கும் தாய்க்கும் நடுவில் ஏதோ பிரச்சினை. தாயின் உடல்நிலையைக் காரணம் காட்டி அவரை விலக்கி வைத்துவிடுகிறார் தந்தை. சிறுவனான புட்டப்பா தந்தையிடம் வளர்கிறார். தந்தை இன்னொரு திருமணம் செய்துகொள்கிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தாய் சற்றே குணமானதும் தந்தையோடு மோதி சிறுவனைப் பிரித்து அழைத்துக்கொண்டு சென்றுவிடுகிறார். துரதிருஷ்டவசமாக ஒரு சில ஆண்டுகளிலேயே அவர் மறைந்துவிடுகிறார். அதற்குப் பிறகு தாய்மாமன் ஆதரவில் வளர்கிறார் அவர். அவரும் சில ஆண்டுகளில் மறைந்துவிட, வேறு வழியில்லாமல் தந்தையை நாடி வருகிறார். அதற்குள் அவருடைய சிற்றன்னை நான்கு குழந்தைகளுக்குத் தாயாகிவிடுகிறார். ஆயினும் தந்தை அவரை ஏற்றுக்கொண்டு படிக்கவைக்கிறார். இடைவிடாத முயற்சியால் தொடர்ந்து படித்து பட்டம் பெற்று அரசு வேலையில் சேர்கிறார் புட்டப்பா. தலித் சமிதி முன்னணியிலும் தொண்டாற்றுகிறார். எல்லா இடர்ப்பாடுகளையும் சகித்துக்கொண்டு ஒவ்வொரு அடியாக நம்பிக்கையோடு முன்னேறி பிரகாசமான ஓரிடத்தை தன் வாழ்வில் உருவாக்கிக்கொண்ட புட்டப்பா மகத்தான மனிதர்.

மூன்றாவது குறிப்பு: சேரியில் இரவுப்பள்ளியின் ஆசிரியராகப் பணியாற்றுகிறார் ஒருவர். அர்ப்பணிப்புணர்வு மிக்க ஆசிரியர் அவர். தன்னிடம் படிக்கும் ஒவ்வொரு மாணவனும் எழுத்தறிவு பெற்று உயர்ந்த நிலையை அடையவேண்டும் என்னும் கனவுகள் நிறைந்தவர். ஆனால் வறுமையில் வாடுபவர். அவரிடம் அவசரத்துக்கு மணி பார்க்க ஒரு கைக்கடிகாரம் கூட இல்லை. ஒவ்வொரு நாளும் யாராவது ஒரு பையனை கடிகாரம் இருக்கும் வீட்டுக்குச் சென்று ஒன்பது மணியாகிவிட்டதா என பார்த்துவிட்டு வருமாறு அனுப்பிவைப்பது அவர் வழக்கம். ஒருநாள் துடுக்கான ஒரு மாணவன் “உங்களிடம் ஏன் கைக்கடிகாரம் இல்லை?” என்று அப்பாவித்தனத்துடன் கேட்கிறான். அவர் அவனுக்கு நேரடியாக பதில் சொல்லாமல அவனுக்கு ஒரு கதையைச் சொல்கிறார். ஆசிரியர் பணிக்கு வருவதற்கு முன்னால் தான் ஒரு விமான ஓட்டியாக பணியாற்றியதாக தன் கதையைத் தொடங்குகிறார் அவர். அப்போது அவர் தன் கையில் ஒரு தங்கக்கடிகாரத்தைக் கட்டியிருக்கிறார். ஒருநாள் விமானத்தை ஓட்டிக்கொண்டு செல்லும்போது திடீரென அவருக்கு தாகமெடுக்கிறது. அப்போது விமானம் கடல் மீது பறந்துசெல்கிறது. அவர் மெதுவாக கடல்மட்டத்துக்கு  விமானத்தை தாழ்த்தி தண்ணீரை எடுப்பதற்காக ஜன்னல் வழியாக கைகளை நீட்டுகிறார். தண்ணீரை அள்ளும்போது கடிகாரம் கையிலிருந்து நழுவி கடலுக்குள் விழுந்துவிடுகிறது. வறுமையை கற்பனைக்கதையால் மறைத்துக்கொண்டு பாடம் சொன்ன அந்த ஆசிரியர் எவ்வளவு மகத்தானவர்!

நான்காவது குறிப்பு: ஆண்டாளம்மா என்னும் ஆசிரியை தொடக்கப்பள்ளியில் சித்தலிங்கையாவுக்கு பாடமெடுத்தவர். ஒருநாள் வகுப்பில் ஏழைப்பிள்ளைகள் எல்லாரும் எழுந்து நிற்கும்படி மாணவர்களிடம் சொல்லிவிட்டு, எழுந்து நின்ற ஒவ்வொருவருக்கும் அரசு இலவசமாக அனுப்பியிருந்த புத்தகங்கள், நோட்டுகள், எழுதுபொருட்கள் எல்லாவற்றையும் கொடுக்கிறார். அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்த சித்தலிங்கையாவுக்கு எதுவும் கிடைக்கவில்லை. பெரிய வீட்டுப் பிள்ளை போலும் என எண்ணி ஆசிரியையும் அமைதியாக இருந்துவிடுகிறார். ஒருநாள் அவரைப் பார்ப்பதற்காக அவருடைய தந்தையார் கந்தலான ஓர் ஆடையை உடுத்திக்கொண்டு பள்ளிக்கு வருகிறார். அவருடைய கோலத்தைக் கண்ட பிறகே அவருடைய குடும்பத்தின் ஏழ்மையை ஆசிரியை புரிந்துகொள்கிறார். உடனே அவருக்கு இலவச நோட்டுகள், புத்தகங்கள் என அனைத்தும் கிடைக்க வழி செய்கிறார். பாசத்தோடு பாடம் நடத்திய அந்த ஆசிரியை பற்றிய குறிப்பு நெகிழ்ச்சியூட்டுவதாக உள்ளது.

கோவிந்தராஜ், புட்டப்பா, பைலட் ஆசிரியர், ஆண்டாளம்மா போல ஏராளமான மனிதர்களைப் பற்றிய நினைவுக்குறிப்புகளால் சித்தலிங்கையாவின் சுயசரிதை நிறைந்திருக்கிறது. அவர் ஒருவருடைய சுயசரிதை அல்ல அந்தப் புத்தகம். அவர் தன் மனத்தில் நிறைத்துக்கொண்ட எண்ணற்ற மனிதர்களைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகள். சித்தலிங்கையா சொல்லவில்லை என்றால் இவர்களைப்பற்றி யார் சொல்லப் போகிறார்கள்? சித்தலிங்கையாவின் சுயசரிதை இருக்கும் வரையில் இந்த எளிய மகத்தான மனிதர்களைப்பற்றிய குறிப்புகளும் நிலைத்திருக்கும்.

ஊரும் சேரியும் வழியாக சித்தலிங்கையா நம் நினைவில் என்றென்றும் நிலைத்திருப்பார். சித்தலிங்கையாவுக்கு அஞ்சலி. 


பாவண்ணன்

[email protected]

Previous articleதேவதேவன் கவிதைகள்.
Next articleபறத்தல்
பாவண்ணன்
பாவண்ணன் குறிப்பிடத்தக்க மூத்த தமிழ் எழுத்தாளர். ரசனையை அடிப்படையாகக்கொண்டு இவர் எழுதிய பல இலக்கியக் கட்டுரைகள் அழகியல் விமர்சகர்களின் வரிசையில் வைத்துக் குறிப்பிடப்பட வேண்டியவர். சிறுகதை, கவிதை, நாவல், குழந்தைப்பாடல்கள், கட்டுரைகள், திரைப்பட விமர்சனங்கள் எனப் பல தளங்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக, கன்னட மொழியிலிருந்து பல முக்கியமான ஆளுமைகளைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் சிறுகதை, நாவல், கவிதை, சுயசரிதைகள் என ஏராளமான படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.