தடம்

விட்டுச்சென்ற  வேதனை  மட்டுமே  அவள் மனதில்  நிற்கிறது. கொட்டித்தந்த  சந்தோஷம்  விலகிப்போய்விட்டது. கண்ணைக்  கூசிய  வெளிச்சத்தில்  வாழ்ந்துவிட்டு  இப்போது  பொட்டு  வெளிச்சத்திற்கும் அவள் துழாவும்படியாகிவிட்டது.

‘ இதுதான்  வாழ்க்கையா…..வெறுமையோடிய  ஆளோடியில்  ஒற்றை  அணிலாய்  வாழ  பழகிக்கொள்ள  இன்னும்  எத்தனை  காலம்  பிடிக்கும்.

அவன்  விட்டுப்போன  சுவடுகள்  காய்ந்தாலும்  மனதினுள்ளே  சுரந்து  தளும்பும்  அவனின்  ஞாபகச்சுவடுகள்  வற்றுமா…..’

அவள்  தவித்து  தளர்ந்து  சரிந்தாள்.

இவ்வளவுதான்  வாழ்க்கை  என்று  சதைப்பிண்டத்தை  சாம்பலாக்கி  பானையிலிட்டு  துணி  முடிந்து  தந்துவிட்டு  உறவுகள்  போனபிறகு  வீட்டினுள்ளே  வெயில்கூட  நுழைய  மறுத்து  வெறுமை  கூட்டிற்று.

அவன்  நின்று, பேசி, சிரித்து, துயில்  கொண்ட  இடங்களெல்லாம்  ஆளற்ற  அந்தகாரத்தில்  தவித்தன. கொல்லைப்புறத்தில்  அவன்  போடும்  பிடி  சோற்றுக்காக  படிக்கல்லில்  வந்தமரும்  காகம்  தலை  ஆட்டி  கண்கள்  மினுங்க  ஆளைத்தேடி  அசந்து  போனது.

அடுப்பினுள்ளிருக்கும்  சாம்பல்  சரித்து, புது  விறகு  புகுத்தி, தணலூட்டி  சோறு  சமைக்க  ஆளின்றி  ஒற்றை  பருக்கைக்கும்  ஏது  வழி.

அவளின்  கன்னத்தில்  இரு  தாரைக்கோடுகள்  சரிந்த வண்ணமிருந்தன. கைவிரல்களில்  பரவிய  நடுக்கத்தில்  இறுகப்பற்றியிருந்த  கொடிக்கம்பி  அதிர்ந்தது.

கொடியில்  ஒருவாரமாக    காய்ந்து  கொண்டிருந்த  பழுப்பேறிய  பனியன்  அவனின்  உடல்பாரமின்றி  சரிந்து  தொங்கிற்று. தங்க  பிரேமிட்ட  மூக்குக்  கண்ணாடிகூட  முகமிழந்த  வேதனையில்  மேசையிலிருந்து  நழுவத்துடித்தது.

அவள்  உலர்ந்து  கிடந்த  உதடுகளை  ஈரப்படுத்த  திராணியற்று  அமர்ந்திருந்தாள். மாடத்தில்  விபூதி  மடலின்  கீழே ஒரு  சிட்டிகை  விபூதி.

‘ விபூதியில்லா  நெற்றி  பாழ்’ என்று  கூறி  தினமும்  அவன்  அணியும்  விபூதியில்  துளி  கடைசியாய்  சிந்தியது.

மாலையிட்டு, அக்னி  வலம்  வந்து  கடைசிவரை உடன்வருவேன்   காப்பாற்றுவேன்  என்று  வாக்குறுதி  தந்து, சுண்டு  விரல்  பிடித்து  வசந்த  வாழ்க்கைக்குள்  அழைத்து  வந்தவன், வந்த  சுவடு  காய்வதற்குள்  உறவு  துய்த்து  போனால்  இனி  உறவு  கொண்டாட  எவர்  இருக்கிறார்  அவளுக்கு?

அவள்  ஞாபக  அடுக்குகளில்  உறைந்து  கிடந்த  அவனின்  நினைவுகள்  உருகி  வழிந்து  கண்ணீராய்  கசிந்தது. எத்தனை, எத்தனை  வார்த்தைகள்  அவன்  பேச, அவள்  மட்டுமா  கேட்டிருக்கிறாள்……முற்றத்து  வழியே  அந்த  பால்  நிலவுமல்லவா  முகம்  நீட்டி ரசித்திருக்கிறது.

அவனின்  அணைப்பும்  அதுதந்த  வெம்மையும்  அவளை  வெண்ணையாக  உருகச்செய்து  திரவமாக்கியதை  எண்ணி, எண்ணி  அவள்  திடசிற்பமாக  சமைந்திருந்தாள்.

அணிந்திருந்த  மெட்டியை  கழற்றியபிறகும்  அது  விட்டுச்சென்ற  தடம்  விரல்களில்  அழுத்தமாய்  பாவிக்கிடந்தது.

ஞாயிறுகளின்  உக்கிர  மதிய  நேரங்களில்  அவள்  மடியில்  தலைசாய்த்துக்  கண்ணுறங்கும்  அவனின்  தோற்றம்  களைத்துக்  கிடக்கும்  கடவுள்  போலவே  அவளுக்குத்  தோன்றும்.

மரங்கள், பறவைகளின்  பிரியன்  அவன். அவைகளைப்பற்றி  அழகாய்  கவிதை  சொல்லுவான்.

” காக்கை  எச்சம்

உள்ளே  விருட்சம்!

வெல்த்  அவுட்  ஆஃப்  வேஸ்ட்

போட்டியில்,

அந்த  காக்கை

வென்றது  கோப்பை!”

என்றான்  ஒருமுறை. அவள்  கரைந்துபோனாள்.

குளிர்  மார்கழியின்  அதிகாலைப்பொழுதில்  நடுங்கும்  விரல்களுடன்  அவன்  கைப்பிடித்து  நடைப்பயிற்சி  செய்யும்போது  சாலையோர  வாகையும், கொன்றையும்  தலையசைத்து  தங்களை  ரசிப்பதாகவே  அவளுக்குத்  தோன்றும்.

அவன்  தோளில்  புதைந்து  எதிர்வரும்  பிரச்சனைகளிலிருந்து  மீண்டுவிடலாம்  என்பது  அவளது  அப்போதைய  நம்பிக்கையாக  இருந்தது. மாலையின்  மந்தகாசப்பொழுதுகள்  அவன்  வரவை  எதிர்நோக்கும்  ஆவலை  அவளுக்குள்  திணிக்கும்.

காலை, மாலைக்கு  இடைப்பட்ட  நேரத்தில்  அவனுடைய  பிரிவு  அவளை  அச்சத்தில்  ஆழ்த்தும். கடிகார  முட்களை  உடைத்து  போடக்கூட  அவள்  எண்ணியிருக்கிறாள். இனி  எத்தனை  கடிகாரங்களை  உடைத்தாலும்  அவன்  வரப்போவதில்லை.

முடிவற்ற  சூன்யம்  எங்கும்  நிறைந்து  கிடந்தது. பாதையெங்கும்  தணல்நெருப்புகள். பயணம்  காலத்தின்  கட்டாயம். பயணித்தே  ஆகவேண்டிய  கொடுமை. முடிந்துவிடக்கூடிய  பயணம்தான். ஆனால்  முற்றுப்புள்ளி  கண்ணுக்குத்  தெரியவில்லை.

உடன்வந்த  வழித்துணை  பாதியில்  விட்டுவிட  தணல்துண்டு  பயணம்  அவளுள்  தவிப்பை  உண்டாக்கிற்று. அவள்  தண்ணீர்  மொண்டுக்  குடித்தாள். எச்சில்  படாத  தொண்டைக்குள்  தண்ணீர்  இறங்கி  கத்தியாய்  கிழித்தது.

நிற்க  திராணியற்று  நடுங்கிய  கால்கள்  வெட்டிப்போட்ட  கீரைத்தண்டுகளாய்  துவண்டு  போயின. பார்வையற்றவனின்   கைக்குக்  கோல்  தரும்  நம்பிக்கை  அவளின்  மனதுக்கு  இனி  யார்  தரப்போகிறார்கள்  என்று  யோசித்து, யோசித்து  அவள்  சோர்ந்திருந்தாள்.

காலை  விடிந்தது, மாலை  வந்தது, இரவு  கவிந்தது. மாற்றத்தின்  பிடிக்குள்  உலகம்  இயங்க, மாயையின்  பிடிக்குள்  அவள்  முடங்கியிருந்தாள். தனிமை  அவளைத்  தின்று, தின்று  ஓய்ந்தது. வெறுமை  அவளை  சுற்றி, சுழன்று  களைத்தது.

அவனின்  பிரிவை  எண்ணிய  நிமிடத்தில்  அவளிடமிருந்து  வெளிப்பட்ட  பெருமூச்சுகள்  வளிமண்டலத்துக்கு  வலியைக்  கொடுத்தன. பிறப்பும், இறப்பும்  இயற்கை  என  அறிந்திருந்த  மனசு  இழப்பின்  பெருஞ்சுமையில்  இமயமலையின்  பாரத்தை  உணர்ந்தது.

அவளுக்கு  நன்றாக  ஞாபகமிருக்கிறது. அன்றொருநாள்  ஒரு  தேன்சிட்டு  தத்தி, தத்தி  வீட்டுக்குள்  வந்துவிட்டது. முற்றத்தில்  உலர வைத்திருந்த  பருப்புமணிகளைக்  கண்டு  குண்டுமணிக்கண்களை  மினுக்கியபடி  தாவிவந்த  சிட்டு  அவளைக்கண்டு  திகைத்தது.

செல்லும்  வழி  புரியாமல்  பதறி  அங்குமிங்கும்  பறந்தது. அவன், அவளை  இழுத்து  தன்னோடு  சேர்த்து  கதவின்  பின்புறம் மறைந்து  கொண்டான். சற்றுநேரம்  தவித்த  சிட்டு  ஆள், அரவமற்ற  நிம்மதியில்  மெல்ல  முறத்தினருகில்  வந்தது. இரண்டு, மூன்று  பருப்புமணிகளை  தன்  அலகில்  சேகரித்து  முற்றத்து  கம்பிகளின்  இடையே  பறந்து  போனது.

அவன், அவளை  விடுவித்தான். அவன்  இறுகப்பற்றியிருந்த  இடுப்பில்  அவனின்  கைரேகைகள்  பதிந்திருக்க்ககூடும்  என்கிற  கணிப்பில்  அவள்  இடுப்பைத்  தடவிப்  பார்த்தாள். புரிந்தவன்  கண்சிமிட்டி  சிரித்தான்.

அவளுடைய  சிரிப்பைக்  கண்களில்  உள்வாங்கி  மனதில்  நிரப்பிக்கொள்ளும்  அவனின்  புடம்போட்ட  அன்பில்  அவள்  அநேக  தடவைகள்  உயிர்த்திருக்கிறாள்.

இன்றோ  உயிரோடு  மரிக்கவைத்துவிட்டு   அவன்  போய்விட்டான். என்றோ  சூடிய  மல்லிகைப்பூவின்  வாசம்  கூந்தலின்  வேர்வரை  பரவிவிட்டவிபோல்  அடிக்கடி  வாசித்து  உயிர்வதை  செய்தது.

சூடான  மணற்பரப்பில்  சொட்டும்  முதல்மழை  வாசத்தைக்  கிளப்புவது போல அவனுடைய  முதல்  ஸ்பரிசம்  அவள்  பெண்மைக்கு  வாசத்தைத்  தந்தது. அவனின்  அருகாமை, கிளைபரப்பி  நின்ற  மர  நிழலின்  குளிர்ச்சியைத்  தந்தது.

அவன்  அடிக்கடி  அவள்   கண்களை  ஆழ  ஊடுருவி  எதையோ  தேட  முயற்சிப்பான். ஒரு  கூரான  கத்தியை  உள்செலுத்தி  இழுப்பது  போலிருக்கும்  அவன் பார்வையின்  வீச்சு.

சர்க்கரைப்  பாகில்  தேன்  கொட்டியதுபோல  அவ்வளவு  தித்திப்பான  வாழ்க்கை. இருவருக்கும்  திகட்டவில்லை. அங்குலம், அங்குலமாக  ரசித்து  வாழ்ந்தனர். புல்நுனி  பனித்துளிக்கூட  அவர்களின்  ரசனைக்குரியதாக  இருந்தது.

இன்றோ  ஈரம்  உலர்ந்த  ஆடை  போல  அவள்  சுயவுணர்வற்றுப்போய்  கிடந்தாள். அவளுடன்  துக்கம்  அனுஷ்டிக்கும்  முகமாக  வானமும்  நிலவு, நட்சத்திரமற்று  நிர்வாணமாயிருந்தது. தனிமையை  தன்னகத்தே தக்க வைத்து  அதுவும்  தவித்துக்  கிடந்தது.

அவளையுமறியாமல்  உறங்கிப்போயிருந்த  அந்த  நடுநிசிப்பொழுதில்  எழுந்த  நரியின்  ஊளையில்  அவள்  அரண்டு  எழுந்தாள். மேலே  இயங்கிக்கொண்டிருந்த  மின்விசிறி  கிழித்தனுப்பிய  காற்று  வியர்த்திருந்த  அவள்  உடல்பட்டு  நனைந்து  போனது.

அடிவயிற்றில்  எதுவோ  கிளம்பி  விர்ரென  நெஞ்சுக்கூட்டின்  வழியே  பயணித்து  தொண்டைக்குள்ளிருந்து  விடுபட்டு  குபீரென  வெளியே  வந்து  விழுந்தது. உடல்  வெடவெடக்க  அவள்  மெல்ல  எழுந்துச்  சென்று  வாயலம்பினாள்.

தலை  கிறுகிறுக்க, கண்கள்  செருக  சுவர்  பிடித்து  தடுமாறி  அமர்ந்தாள். தனிமையின்  பிடிக்குள்  கட்டுண்டு  கிடந்தவளின்  மணி  வயிற்றுக்குள்  சிறு  துணுக்காய், சதைக்கோளமாய்  அவனின்  மிச்சம், தனிமைக்கு  பழக்கப்படாதவளுக்காய்  அவன்  விட்டுச்சென்ற  தடம்.


ஐ. கிருத்திகா           

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.