தூதன்

செகாவ், 1897, மார்ச் 22-ம் தேதி மாலை. அவர் மாஸ்கோவில் தன் நண்பரும் நம்பிக்கைக்குரியவருமான அலெக்ஸி சுவோரினுடன் இரவு உணவிற்குச் சென்றார். இந்த சுவோரின் ஒரு மிகப்பெரிய செல்வந்தர். சொந்தமாக செய்தித்தாட்களும் பதிப்பகமும் இருந்தன. போரோடினோயுத்தத்தில் ஒரு பிரைவேட்டாக இருந்தவர். செகாவைப் போலவே அவரும் பண்ணை அடிமை ஒருவரின் பேரன். அவர்களுக்கிடையே இருந்த பொதுவான அம்சம், இருவரின் ரத்த நாளங்களிலும் ஓடுகிற குடியானவர்களின் ரத்தம். இதைத் தவிர அரசியல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் அவர்கள் வெவ்வேறு துருவங்கள். இருந்தாலும் செகாவின் நெருக்கமான தோழர்களில் சுவோரினும் ஒருவர். அவருடைய தோழமையை செகாவ் பெரிதும் விழைந்தார்.

வழக்கம் போலவே அவர்கள் முன்பொரு காலத்தில் டவுன் ஹாலாக இருந்த ஹெர்மிடேஜ் என்ற நகரத்தின் மிகச்சிறந்த உணவகத்திற்குச் சென்றனர். அங்கே வரிசையாக வழங்கப்படும் ஒயின்களும் மது வகைகளும் காபியும் கொண்ட ஒரு பத்து அடுக்கு உணவைச் சாப்பிட்டு முடிக்க மணிக்கணக்கில், ஏன் பாதி இரவு கூட ஆகிவிடும். செகாவ் எப்போதும் போல கருப்பு சூட், இடுப்பளவு கோட், அவரது வழக்கமான பின்ஸ்-நே மூக்குக் கண்ணாடி என நேர்த்தியாக உடையணிந்திருந்தார். அன்றிரவு அவர் இருந்த தோற்றம், அக்கால கட்டத்தில் எடுக்கப்பட்டிருந்த அவரது புகைப்படங்களில் இருப்பது போலவே இருந்தது. அவர் இறுக்கமின்றி கலகலப்பாக இருந்தார். நடனப் பயிற்சியாளரோடு கை குலுக்கிவிட்டுத் திரும்பி விசாலமாக இருந்த உணவறைக்குள் நுழைந்தார்.

அலங்காரச் சர விளக்குகளால் அவ்வறை பிரகாசமாக ஒளியேற்றப்பட்டிருந்தது. அழகாக உடையணிந்த ஆண்களும் பெண்களும் மேசைகளின் முன் அமர்ந்திருந்தனர். வெயிட்டர்கள் இடைவிடாமல் ஊடாடிக் கொண்டிருந்தனர். சுவோரினுக்கு எதிரே அவர் உட்கார்ந்ததுமே திடீரென எந்த முன்னெச்சரிக்கையுமின்றி அவர் வாயிலிருந்து ரத்தம் பொங்கி வழியத் தொடங்கியது. சுவோரினும் இரு வெயிட்டர்களும் அவரைக் கைத்தாங்கலாக ஆடவர் அறைக்கு அழைத்துச் சென்று ஐஸ் பொட்டலங்களை வைத்து ரத்தப் போக்கை நிறுத்த முயற்சித்தனர். சுவோரின் தனது ஓட்டலுக்கே அவரை அழைத்து வந்து சொகுசு அறை ஒன்றில் செகாவிற்கு படுக்கை ஏற்பாடு செய்தார். அதன் பின் மீண்டும் ஒரு முறை ஏற்பட்ட ரத்தப் பெருக்குக்குப் பிறகு சயரோகத்திற்கும் இதர சுவாச நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பதில் பிரசித்தி பெற்ற ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட ஒப்புக்கொண்டார். சுவோரின் அங்கு வந்து அவரைப் பார்த்த போது மூன்று இரவுகளுக்கு முன் அந்த உணவகத்தில் நிகழ்ந்த “அவமதிப்பிற்காக” செகாவ் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். ஆனாலும் சீரியஸாக எதுவும் கிடையாது என்று விடாமல் வலியுறுத்தினார். “ஒரு பெரிய பேஸினில் ரத்தமாகத் துப்புகிறபோதும் அவர் வழக்கம் போலவே சிரிப்பும் கிண்டலுமாக இருந்தார்” என்று சுவோரின் அவரது நாட்குறிப்புகளில் குறிப்பிட்டார்.

அவருடைய தங்கை மரியா செகாவ் மார்ச் இறுதியில் மருத்துவமனைக்கு வந்து செகாவைப் பார்த்தாள். சீதோஷ்ண நிலை மிக மோசமாக இருந்தது. புயலும் ஆலங்கட்டி மழையுமாக எங்கு பார்த்தாலும் குவியல் குவியலாக பனி உறைந்து கிடந்தது. மருத்துவமனைக்குச் செல்ல வண்டியை கையாட்டி அழைக்கவே அவளால் முடியாதிருந்தது. ஒரு வழியாக வந்து சேர்ந்த போது அச்சமும் கவலையும் அவளை ஆட்கொண்டிருந்தன.

“ஆண்டன் பாவ்லோவிச் மல்லாந்து படுத்திருந்தார். அவர் பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அவரை நலம் விசாரித்த பிறகு என் உணர்ச்சிகளை அவரிடமிருந்து மறைத்துக் கொள்வதற்காக மேஜைக்கருகே நகர்ந்துவிட்டேன்.” மரியா, தனது Memoirs-ல் எழுதினாள். அங்கிருந்த ஷாம்பெய்ன் பாட்டில்கள், கேவியர் ஜாடிகள், நலம் விரும்பிகள் அளித்த பூங்கொத்துகளுக்கு மத்தியிலிருந்த ஒரு விஷயம் அவளைக் கலவரப்படுத்தியது. செகாவின் நுரையீரல்களை வல்லுநர் ஒருவர் வரைந்து வைத்திருந்த சித்திரம். நோயாளியிடம் அவருக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை விளக்குவதற்காக மருத்துவர் வரைகிற படம் அது. நுரையீரல்கள் நீலநிறத்தில் வரையப் பட்டிருந்தன. ஆனால் மேற்பகுதிகள் சிவப்பால் நிரப்பப்பட்டிருந்தன. “அவை முற்றிலும் சீரழிந்து போயிருப்பதை நான் உணர்ந்துகொண்டேன்,” என்று மரியா எழுதினாள்.

மற்றொரு பார்வையாளர் லியோ டால்ஸ்டாய். நாட்டின் மகத்தான எழுத்தாளர். தங்களுக்கிடையே வந்திருப்பதில் அம்மருத்துவமனை ஊழியர்கள் புல்லரித்துப் போயிருந்தனர். ரஷியாவின் மிகப்பிரபலமான மனிதர்? ஆம், “முக்கியத்துவமற்ற” பார்வையாளர்கள் மறுக்கப்பட்டாலும் செகாவைப் பார்க்க வந்திருக்கும் அவரை அவர்கள் அனுமதித்துத்தானாக வேண்டும். நீண்டுவளர்ந்த தாடியும் உக்கிரமான பார்வையும் கொண்ட அம்முதியவரை நர்ஸ்களும் டாக்டர்களும் அதீதப் பணிவோடு வரவேற்று செகாவின் அறைக்கு அழைத்துச் சென்றனர். ஒரு நாடகாசிரியராக செகாவின் திறமை குறித்து அவர் பெரிதாக சிலாக்கியம் கொண்டிராவிட்டாலும் (அந்த நாடகங்கள் தேங்கிப் போயிருப்பதாகவும் எவ்வித அறப் பார்வையும் கொண்டிராதவையாகவும் டால்ஸ்டாய் கருதினார். “உங்களது பாத்திரங்கள் உங்களை எங்கே கொண்டு செல்கின்றன? சோபாவிலிருந்து பண்டக அறைக்கு, அங்கிருந்து மீண்டும் சோபாவிற்கு” என்றார் ஒருமுறை) டால்ஸ்டாய்க்கு செகாவின் சிறுகதைகள் பிடித்திருந்தன. அதற்கு மேலும் அந்த மனிதரை அவருக்குப் பிடித்திருந்தது. அவர் கார்க்கியிடம் பேசும்போது, “ஒரு பெண்ணைப் போல பணிவாக, அமைதியாக, என்ன ஓர் அழகான மகத்தான மனிதர்! அவர் நடப்பது கூட ஒரு பெண்ணைப் போலத்தான் இருக்கிறது. அற்புதமான மனிதர்,” என்றார். டால்ஸ்டாய் அவரது ஜர்னலில் (அக்காலத்தில் அனைவருமே ஒரு ஜர்னலோ அல்லது டைரியோ எழுதி வந்தனர்) “செகாவை நேசிப்பதில் மகிழ்வுறுகிறேன்,” என்று எழுதினார்.

டால்ஸ்டாய் தனது உல்லன் தலைக்குல்லாவையும் கரடித்தோல் கோட்டையும் கழற்றிவிட்டு செகாவின் படுக்கையை ஒட்டியிருந்த நாற்காலியில் அமர்ந்தார். செகாவ் சிகிச்சையில் இருப்பதால் விவாதிப்பதற்கல்ல, பேசுவதற்குக்கூட அனுமதிக்கப்படாமலிருந்ததை அவர் பொருட்படுத்தவில்லை. ஆன்மாவின் சாசுவதத்தைப் பற்றிய அவரது தத்துவங்களை கவுன்ட் பிரசங்கம் செய்யத் தொடங்க அவர் செவிமடுக்க வேண்டியதாக இருந்தது. அந்த வருகையைப் பற்றி பிற்பாடு செகாவ் எழுதினார்: “அறம், அன்பு போன்ற அடிப்படையான மெய்ம்மைகளால் நாமெல்லோருமே (மனிதர்களைப் போலவே விலங்குகளும் கூட) மரணமின்றி சாசுவதமாக ஜீவித்திருப்போம் என்றும், இச்சூட்சுமத்தின் சாரமும் இலக்குகளும்தான் நமக்கு மர்மமாக இருக்கின்றனவென்றும் டால்ஸ்டாய் நம்புகிறார்… அத்தகைய சாசுவதத்தால் எனக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. இது எனக்குப் புரியவும் இல்லை. லேவ் நிகோலயேவிச் எனக்குப் புரியாததற்காக ஆச்சரியப்பட்டார்.”

இருப்பினும் டால்ஸ்டாயின் வருகை மூலம் வெளிப்பட்ட அவரது அக்கறை செகாவைக் கவர்ந்திருந்தது. ஆனால் டால்ஸ்டாயைப் போலன்றி செகாவிற்கு மரணத்திற்குப் பின்பான வாழ்வில் நம்பிக்கை இல்லை, எப்போதும் இருந்ததுமில்லை. அவருடைய ஐம்புலன்களுக்குப் புலப்படாத எந்தவொன்றையும் அவர் நம்பியதில்லை. வாழ்க்கை குறித்தும் எழுத்து குறித்தும் அவரது கண்ணோட்டத்தை யாரோ ஒருவரிடம் கூறும்போது, “என்னிடம் ஓர் உலகளாவிய, அரசியல், மத, தத்துவப் பார்வையே கிடையாது. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொன்றை மாற்றிக்கொண்டே இருக்கிறேன். எனவே என் நாயகர்கள் எப்படி காதலிக்கின்றனர், மண முடிக்கின்றனர், குழந்தைகள் பெற்றெடுக்கின்றனர், இறக்கின்றனர், எந்த விதத்தில் பேசுகின்றனர் என்ற விவரங்களோடு மட்டும் என் எல்லைகளை குறுக்கிக் கொள்ளவேண்டியிருக்கிறது,” என்றார்.

“குடியானவன் ஒருவனுக்கு சயரோகம் வந்துவிட்டால், “இனி எதுவும் என்னால் செய்ய முடியாது. பனி உருக ஆரம்பித்ததும் வேனிற்காலத்தில் போய்ச் சேர்ந்துவிடுவேன்’ என்பான்,” என்று அவரது எலும்புருக்கி நோய் கண்டறியப்படுவதற்கு முன் செகாவ் குறிப்பிட்டிருந்தார். (பின்னர் செகாவே கோடைக்காலத்தில் ஒரு வெப்ப அலை வீச்சின்போது இறந்துபோனார்). ஆனால் செகாவிற்கே வந்திருப்பது சயரோகம்தான் என்று உறுதியானதும் அதன் தீவிரத்தைக் குறைத்து மதிப்பிட்டே வந்தார். இறுதிவரை அந்த நோயை ஏதோ பல நாட்களாக தொந்தரவளித்து வரும் மூக்கடைப்பைப் போல பாவித்து, அதனை சீக்கிரத்திலேயே அடித்து விரட்டிவிட்டு புதுத் தெம்போடு மீண்டெழுந்துவிட அவரால் முடியும் என்பது போலவே ஒரு தோற்றத்தை உருவாக்கி வந்தார். அவருடைய இறுதி நாட்களில் கூட குணமடைவதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி திடமான நம்பிக்கையுடன் பேசி வந்தார். அவர் இறந்து போவதற்கு சில நாட்கள் முன்பு அவருடைய தங்கைக்கு எழுதிய கடிதத்தில் அவர் “குண்டாகி” வருவதாகவும் அவர் பேடன் வெய்லரில் இருப்பதால் உடல் நலம் முன்னேறி சுமாராக இருப்பதாகவும் எழுதியிருந்தார்.

பேடன் வெய்லர் என்பது பேஸலுக்கு அருகில் கருங்காட்டின் மேற்குப் பகுதியில் அமைந்திருந்த நீரூற்றுடன் கூடிய ‘ஸ்பா’ எனப்படும் ஓர் ஆரோக்கிய வாசஸ்தலம். அநேகமாக அந்நகரின் எல்லா இடங்களிலிருந்தும் வோழ் மலைச்சிகரங்கள் தென்படும். அந்த நாட்களில் காற்று சுத்தமாக பரவசமூட்டுவதாக இருந்தது. ரஷியர்கள் அந்த மூலிகை வெந்நீரூற்றில் குளிக்கவும், மரங்களடர்ந்த பெருஞ்சாலைகளில் உலாவவும் பல வருடங்களாக வருகை புரிந்துகொண்டிருந்தனர். ஜூன் 1904-ல் செகாவ் அங்கு சென்றது மரணமடைவதற்காக.

அம்மாத ஆரம்பத்தில் அவர் மாஸ்கோவிலிருந்து பெர்லினுக்கு சிரமம் மிகுந்ததொரு ரயில் பயணத்தை மேற்கொண்டிருந்தார். அவர் மனைவியும் நடிகையுமான வோல்கா நிப்பரும் உடன் சென்றாள். 1898-ல் The Seagull ஒத்திகையின் போது அவளை சந்தித்திருந்தார். சமகாலத்தவர்கள் வோல்காவை அற்புதமான நடிகை என்று வர்ணித்தனர். திறமையும் அழகும் மிக்க அவள் அந்த நாடக ஆசிரியரை விட ஏறக்குறைய பத்து வருடங்கள் இளையவள். செகாவ் அவளால் உடனடியாக கவரப்பட்டிருந்தார். ஆனாலும் மணம் புரிந்துகொள்வதை விட சரசங்களில்தான் அவருக்கு ஆர்வமிருந்தது. எண்ணற்ற பிரிவுகளும் கடிதங்களும் தவிர்க்க முடியாத ஊடல்களும் நிறைந்த மூன்று வருட காதலுக்குப் பின் 1901-ம் வருடம் மே 25-ம் தேதி மாஸ்கோவில் எளியமுறையில் அவர்கள் மணம் புரிந்தனர். செகாவ் அளவற்ற மகிழ்ச்சியில் திளைத்தார். வோல்காவை அவரது “குதிரைக் குட்டி” என்றும், சில வேளைகளில் “நாய்”, “நாய்க்குட்டி” எனவும் செல்லமாக அழைத்தார். “சின்ன வான்கோழி” என்றும் அல்லது வெறுமனே “என் ஆனந்தமே” என்றும் அவளைக் குறிப்பிட்டுப் பேசுவதில் பிரியம் கொண்டிருந்தார்.

டாக்டர் கார்ல் இவால்டு என்ற நுரையீரல் நோய் சிகிச்சையில் பெயர் பெற்றிருந்த மருத்துவரை பெர்லினுக்குச் சென்று செகாவ் ஆலோசித்தார். நேரில் கண்ட ஒருவரின் கூற்றுப்படி செகாவை பரிசோதித்து முடித்தபின் அந்த மருத்துவர் தன் கைகளை தலைக்கு மேல் உயர்த்தி பெருமூச்செறிந்துவிட்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் அறையை விட்டு வெளியேறி விட்டாராம். எந்த சிகிச்சையும் பலனளிக்காத அளவுக்கு அவர் உடல்நிலை சீரழிந்திருந்தது. அந்த டாக்டர் இவால்டு தனக்கு மாய வித்தைகள் எதுவும் செய்யத் தெரியாததற்கும், அவரால் குணப்படுத்த முடியாத அளவுக்கு அவர் நலிவுற்றிருப்பதற்காகவும் தன் மீதே கடும் கோபம் கொண்டிருந்தார்.

செகாவ் தம்பதியினரை அவர்கள் தங்கியிருந்த ஓட்டலில் சந்தித்த ஒரு ரஷியப் பத்திரிகையாளர் இவ்வாறு செய்தி அனுப்பியிருந்தார்: “செகாவின் நாட்கள் எண்ணப்பட்டுவிட்டன. மிகக் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருப்பதாகத் தெரிகிறார். எந்நேரமும் இருமிக்கொண்டிருக்கிறார். கொஞ்சம் அசைந்தாலும் மூச்சு வாங்குகிறது அவருக்கு. ஜுரம் கொதித்துக் கொண்டிருக்கிறது”. இதே நிரூபர் அவர்கள் பேடன் வெய்லருக்கு ரயிலேறும்போது பாட்ஸ்டம் நிலையத்தில் சந்திக்க நேர்கிறார். “ஸ்டேஷனில் இருந்த குட்டையான படிக்கட்டில் ஏறுவதற்குக் கூட செகாவ் மிகவும் சிரமப்பட்டார். வெகு நேரத்திற்கு பாதி படிக்கட்டிலேயே உட்கார்ந்து மேல் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தார்” என்று அவர் எழுதினார். உண்மையில் செகாவிற்கு உடம்பை அசைத்தாலே உயிர் போகிறாற்போல வலித்துக் கொண்டிருந்தது. கால்களில் நிரந்தரமாக வலி தாங்க முடியாதபடி இருந்தது. உள்ளுறுப்புகள் முறுக்கிக்கொண்டு வலித்தன. நோய் அவருடைய குடலையும் தண்டுவடத்தையும் பாதித்து விட்டிருந்தது. இந்த நிலையில் உயிர் வாழ அவருக்கு ஒரு மாதம்தான் இருந்தது. ஆனாலும் தன் உடல்நிலையைப் பற்றி “பொறுப்பேயற்ற அலட்சியத்தோடு” செகாவ் பேசிவந்ததாக வோல்கா கூறினாள்.

பேடன் வெய்லரின் ஸ்பாவிற்கு பல்வேறு நோய்களுக்கு நிவாரணம் பெற வருகின்ற வசதிபடைத்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த பல மருத்துவர்களில் டாக்டர் ஷ்வோரரும் ஒருவர். அவருடைய நோயாளிகளில் சிலர் முதுமை நோயில் நலிவுற்றிருப்பவர்கள், மற்றவர்கள் தமக்கு ஏதேதோ வியாதிகள் இருப்பதாக கற்பனை செய்துகொண்டு மௌட்டியமடைந்த வயதானவர்கள். ஆனால் செகாவின் நோவு விசேஷமானது: சிகிச்சை பலனளிக்காதபடிக்கு அவரின் இறுதிக் கட்டத்திற்கு வந்துவிட்டது தெளிவாகத் தெரிந்தது. மிகவும் புகழ் பெற்றிருந்த எழுத்தாளர். டாக்டர் ஷ்வோரருக்குக்கூட அவர் பெயர் தெரிந்திருந்தது, ஒரு ஜெர்மன் பத்திரிகையில் அவரது சில கதைகளைப் படித்திருந்தார். அந்த எழுத்தாளரை ஜூன் மாத ஆரம்பத்தில் அவர் பரிசோதித்தபோது அவரது எழுத்துக்கலையின் மீதான தனது ரசனையை வெளிப்படுத்தினார், ஆனால் அவரது மருத்துவ மதிப்பீடுகளை தனக்குள் வைத்துக் கொண்டார். அதற்கு பதிலாக கொக்கோ, வெண்ணெய் சேர்த்த ஓட்ஸ் கஞ்சி, ஸ்ட்ரா பெர்ரி தேநீர் ஆகியவற்றை மட்டும் பரிந்துரை செய்தார். கடைசியாகக் குறிப்பிட்டது செகாவ் இரவில் நிம்மதியாகத் தூங்குவதற்காக என்று கூறப்பட்டது.

அவரது மரணத்திற்கு மூன்று வாரங்களுக்கு முன் ஜூன் 13-ம் தேதி செகாவ் அவருடைய அம்மாவிற்கு எழுதிய கடிதத்தில் அவரது ஆரோக்கியம் சீரடைந்திருப்பதாக எழுதினார். “அனேகமாக ஒரு வாரத்தில் முற்றிலும் குணமாகி விடுவேன் என்று நினைக்கிறேன்,” என்று அக்கடிதத்தில் எழுதியிருந்தார். இப்படியெல்லாம் அவர் எழுதிக் கொண்டிருந்ததற்கும் பேசிக் கொண்டிருந்ததற்கும் என்ன காரணமென்று யாருக்குத் தெரியும்? அவருக்குள் என்ன இருந்திருக்கும்? அவருக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். அவரே ஒரு மருத்துவர். அவர் இறந்துகொண்டிருந்தார், அதுதான் அப்பட்டமான தவிர்க்க முடியாத நிதர்சனம். எனினும் அவர் ஓட்டல் அறையின் பால்கனியில் உட்கார்ந்துகொண்டு ரயில்வே கால அட்டவணைகளைப் படித்துக் கொண்டிருந்தார். மார்செய்ல்ஸிலிருந்து ஒடிஸாவிற்குச் செல்லும் படகுப் போக்குவரத்து நேரங்களை விசாரித்தார். ஆனாலும் அவருக்குத் தெரிந்திருந்தது. அதுவும் அத்தகைய நிலைமையில் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். இருந்தும் அவர் கடைசியாக எழுதிய கடிதமொன்றில் அவருடைய தங்கையிடம் ஒவ்வொரு நாளும் தனக்கு வலிமை கூடிக்கொண்டே வருவதாக எழுதியிருந்தார்.

இலக்கியப் பணிகளில் இருந்த ஆர்வம் இப்போது அவருக்கு சுத்தமாக இல்லை. கொஞ்ச காலமாகவே அது இல்லாமலிருந்தது. The Cherry Orchard-ஐ அதற்கு முந்தைய வருடம்தான் ஏறக்குறைய முடிக்க முடியாமல் முடித்தார். அவர் வாழ்க்கையிலேயே செய்த மிகக் கடினமான விஷயம் அந்த நாடகத்தை எழுதுவதாகத்தான் இருந்தது. இறுதியில் ஒரு நாளைக்கு அவரால் ஆறு அல்லது ஏழு வரிகள் மட்டுமே எழுத முடிந்தது. “நான் நம்பிக்கையிழக்கத் தொடங்கிவிட்டேன்” என்று வோல்காவிற்கு எழுதினார். “ஓர் எழுத்தாளனாக நான் தீர்ந்துபோய்விட்டதாக உணர்கிறேன். ஒவ்வொரு வார்த்தையும் மதிப்பிழந்து எதற்கும் பலனில்லாததாக என்னைத் தாக்குகிறது.” ஆனால் அவர் நிறுத்தவில்லை. 1903 அக்டோபரில் அந்த நாடகப் பிரதியை எழுதி முடித்தார். கடிதங்களையும், நோட்டுப் புத்தகங்களில் எழுதிய குறிப்புகளையும் தவிர்த்து அவர் எழுதிய கடைசிப் படைப்பு அதுதான்.

1904, ஜூலை 2-ம் தேதி நள்ளிரவுக்கு சற்று கழித்து வோல்கா, டாக்டர் ஷ்வோரரை கூட்டிக்கொண்டு வர ஆள் அனுப்பினாள். நிலைமை தீவிரமாகிவிட்டது. செகாவ் பிரக்ஞை இழந்துவிட்டார். அடுத்த அறையில் ரஷியர்கள் இரண்டு பேர் விடுமுறைக்கு வந்து தங்கியிருந்தனர். வோல்கா அங்கு விரைந்து விஷயத்தைக் கூறினாள். அந்த இளைஞர்களில் ஒருவன் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தான். மற்றவன் புகைப்பிடித்துக்கொண்டு எதையோ படித்துக் கொண்டிருந்தான். அவன் எழுந்து டாக்டர் ஷ்வோரரை அழைத்துவர ஓடினான். “அந்தக் கொடூரமான ஜூலை ராத்திரியின் நிசப்தத்தில் அவன் ஓடுகையில் அவனது காலணிகளுக்கடியில் அரைபடும் சரளைகளின் நரநரப்பை இன்னமும் என்னால் கேட்க முடிகிறது” என்று வோல்கா பிற்பாடு தன் நினைவுக் குறிப்புகளில் எழுதினாள். செகாவ் ஹலூஸினேஷன்களில் இருந்தார். அந்த அல்லெழுச்சியில் கடலோடிகளைப் பற்றியும் எதற்காகவோ ஜப்பானியர்களைப் பற்றியும் பிதற்றிக் கொண்டிருந்தார். அவர் மார் மீது ஐஸ் ஒத்தடம் கொடுக்க வோல்கா முயன்றபோது “வெறும் வயிறாக இருக்கும்போது ஐஸ் வைக்காதே” என்றார்.

டாக்டர் வந்து சேர்ந்தார். படுக்கையில் மூச்சுத் திணறியபடி படுத்திருந்த செகாவின் மீது வைத்த பார்வையை விலக்காமல் அவரது பையைத் திறந்து சிகிச்சை சாதனங்களை வெளியிலெடுத்து வைத்தார். நோயாளியின் பார்வை முழுசாக விரிந்து வியர்வையில் நெற்றிப்பொட்டு பளபளத்துக் கொண்டிருந்தது. டாக்டர் ஷ்வோரரின் முகம் எதனையும் வெளிக்காட்டவில்லை. அவர் உணர்ச்சி வசப்படும் இயல்பினரல்ல, ஆனால் செகாவின் முடிவு நெருங்கிவிட்டிருப்பதை அறிந்திருந்தார். இருந்தும் அவர் தன்னால் இயன்றவரை முயன்று பார்க்க சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு மருத்துவர். எவ்வளவுதான் நொய்ம்மையாக ஒட்டிக்கொண்டிருந்தாலும் செகாவ் தன்னுடைய உயிரை இன்னும் பற்றிக் கொண்டிருக்கிறார். டாக்டர் ஷ்வோரர் தோலிற்கடியில் செலுத்தும் ஊசி மருந்தாக கற்பூரக் கரைசலைத் தயார் செய்து செலுத்தினார். அது அவரது இதயத் துடிப்பை அதிகரிப்பதற்காக செய்யப்படும் சிகிச்சை. ஆனால் அந்த ஊசி பலனளிக்கவில்லை – உண்மையில் எதுவுமே பலனளித்திருக்கப் போவதில்லை. எனினும் அந்த டாக்டர் வோல்காவிடம் ஆக்ஸிஜன் சிலிண்டர்களைத் தருவிக்க உத்தேசித்திருப்பதாகக் கூறினார். திடீரென்று செகாவ் சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்து கோபத்துடன், ஆனால் நிதானமாக, “என்ன பிரயோசம்? அவை வந்து சேரும்போது நான் பிரேதமாகிவிட்டிருக்கப் போகிறேன்,” என்றார்.

டாக்டர் ஷ்வோரர் தனது பெரிய மீசையை முறுக்கியபடியே செகாவை முறைத்துப் பார்த்தார். எழுத்தாளரின் கன்னங்கள் குழிகளாக ஒட்டிக்கொண்டு சாம்பல் நிறத்தில் இருந்தன. சுவாசம் முரட்டுத்தனமாக தடுமாறிக் கொண்டிருந்தது. நேரம் நிமிடக் கணக்கிற்கு எண்ணப்பட்டுவிட்டதை டாக்டர் ஷ்வோரர் அறிந்தார். ஒரு வார்த்தையும் பேசாமல் வோல்காவுடன் கலந்தாலோசிக்காமல் சுவரில் டெலிபோன் ஒன்று மாட்டப்பட்டிருந்த கவிதை மாடத்தை நோக்கிச் சென்றார். அந்தக் கருவியை இயக்குவதற்கான செயல்முறை விளக்கத்தைப் படித்தார். குமிழ் ஒன்றை விரலால் அழுத்திக்கொண்டு தொலைபேசியின் பக்கவாட்டிலிருந்த கைப்பிடியைத் திருகினால் இணைப்பு ஏற்பட்டு ஹோட்டலின் அடித்தளத்தில் அமைந்துள்ள சமையலறையோடு தொடர்பு கொள்ள முடியும். ரிஸீவரை எடுத்து அந்த வழிகாட்டலுக்கிணங்க இயக்கினார். அந்த அகால வேளையில் சமையலறையில் அந்தத் தொலைபேசி அடித்தது. கடைசியில் யாரோ வந்து எடுத்ததும் டாக்டர் ஷ்வோரர் அந்த ஹோட்டலில் இருக்கும் மிகச்சிறந்த ஷாம்பெய்ன் பாட்டில் ஒன்றை ஆர்டர் செய்தார். “எத்தனை கோப்பைகள்?” என்று கேட்கப்பட்டதற்கு அத்தொலைபேசியின் ஒலி வாங்கியில் “மூன்று கோப்பைகள்!” என்று கத்தினார். “சீக்கிரம், காதில் விழுந்ததா?” அகத்தூண்டலின் மிக அபூர்வமான தருணங்களில் ஒன்று அது. தவிர்க்க முடியாமல் முற்றிலும் பொருத்தமாக அமைந்துவிட்ட அச்செய்கை பின்வந்த காலங்களில் சுலபமாக கவனிக்கப்படாது போயிருக்கலாம்.

ஷாம்பெய்ன் வந்தது. கொண்டுவந்த இளைஞன் பொன் நிறக் கேசம் கலைந்து மிகவும் களைப்பாகத் தெரிந்தான். அவனது சீருடை கசங்கி இஸ்திரி மடிப்பின்றி இருந்தன. அவசரத்தில் சட்டைப் பித்தான் ஒன்றை மாற்றிப் போட்டிருந்தான். அவனைப் பார்ப்பதற்கு நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த (அநேகமாக நாற்காலியில் உட்கார்ந்தபடியே கண்ணயர்ந்திருந்த) ஒருவனை நட்ட நடு இரவில் தூரத்தில் ஒலித்த தொலைபேசி மணிச்சத்தம் எழுப்பி – ஓ கடவுளே! – மேலதிகாரி ஒருவர் அவனிடம் அறை எண் 211-க்கு ஒரு பாட்டில் மோவெட் கொண்டுசெல்ல உத்தரவிட்டதைப் போலிருந்தது. “சீக்கிரம், காதில் விழுந்ததா?”

அந்த இளைஞன் ஒரு சில்வர் ஐஸ் பக்கெட்டில் ஷாம்பெய்னும், ட்ரேவில் மூன்று கிரிஸ்டல் கோப்பைகளையும் வைத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தான். முரட்டுத்தனமாக யாரோ மூச்சு வாங்குகிற சத்தம் கேட்டுக்கொண்டிருந்த இன்னோர் அறையை நோக்கி கழுத்தைத் திருப்பி ஆராய்ந்தபடியே மேஜையின் மேல் இடம் பண்ணிக்கொண்டு பக்கெட்டையும் கோப்பைகளையும் அமைத்தான். அது ஒரு பயங்கரமான பெரும் மன வேதனையளிக்கக்கூடிய சத்தம். அந்தத் திணறல் ஒலி மேலும் மோசமாக அதிகரிக்க, இளைஞன் தன் முகவாய்க்கட்டை காலர் மீது அழுத்தும்படி தலையைக் குனிந்துகொண்டு பார்வையை அகற்றினான். தன்னை மறந்தவனாக திறந்திருந்த ஜன்னல் வழியே இருண்டிருக்கும் நகரத்தை வெறித்தான். மிகப்பெரிய மீசை வைத்திருந்த அந்த ஆஜானுபாகுவான மனிதர் அவன் உள்ளங்கைக்குள் சில நாணயங்களைத் திணித்தார் – தொடுகையிலேயே அது மிகப் பெரிய டிப்ஸ்தான் என்று உணர்த்தியது – அறையின் கதவு திடீரெனத் திறக்கப்பட்டதை அந்த இளைஞன் பார்த்தான். வெளியே வந்து நடையில் நின்று கையைப் பிரித்து அந்த நாணயங்களைப் பார்த்துத் திகைத்தான்.

எல்லா விஷயங்களையும் ஒழுங்குமுறையோடு செய்கிற அம்மருத்துவர் பாட்டிலின் கார்க்கை லாவகமாகத் திறக்கத் தொடங்கினார். கொண்டாட்டங்களில் போல அது வெடித்துத் திறக்காமலிருக்கும்படி எவ்வளவு இயலுமோ அந்தளவுக்கு மெதுவாக மூடியைத் தளர்த்தித் திறந்தார். மூன்று கோப்பைகளிலும் ஊற்றிவிட்டு, கைப்பழக்கமாக கார்க்கை எடுத்து பாட்டிலின் வாயை அடைத்தார். ஷாம்பெய்ன் கோப்பைகளை படுக்கைக்குக் கொண்டு சென்றார். வோல்கா, தான் பற்றியிருந்த செகாவின் கையை தற்காலிகமாக விடுவித்தாள். (அந்தக் கரம் தன் விரல்களைச் சுட்டெரித்துவிட்டது என்று பின்னர் வோல்கா எழுதினாள்) அவர் தலைக்குப் பின் இன்னொரு தலையணையை அமைத்தாள். சில்லென்ற ஷாம்பெய்ன் கோப்பையை செகாவின் உள்ளங்கையைத் திறந்து வாகாக வைத்து அவருடைய விரல்களை இறுக்கி மூடினாள். அவர்கள் – செகாவ், வோல்கா, டாக்டர் ஷ்வோரர் -பார்வைகளைப் பரிமாறிக் கொண்டனர். அவர்கள் தமது கோப்பைகளை தொட்டுக்கொள்ளவில்லை. எந்த டோஸ்டும் இல்லை. எந்த விஷயத்துக்காக அவர்கள் பருக இருக்கிறது? மரணத்திற்காக? செகாவ் எஞ்சியிருந்த தன் சக்தியை ஒன்று கூட்டியெழுப்பி, “ஷாம்பெய்ன் அருந்தி பல காலமாகிவிட்டது,” என்றார். கோப்பையை தன் உதடுகளுக்குக் கொண்டுவந்து மெதுவாக உறிஞ்சினார். ஓரிரண்டு நிமிடங்கள் கழித்து அவர் கையிலிருந்து காலிக் கோப்பையை வோல்கா வாங்கி படுக்கையை ஒட்டியிருந்த முக்காலியின் மேல் வைத்தாள். செகாவ் ஒருக்களித்துப் படுத்தார். கண்களை மூடி பெருமூச்செறிந்தார். ஒரு நிமிடம் கழித்து அவர் சுவாசம் நின்றது.

டாக்டர் ஷ்வோரர் செகாவின் கையை போர்வைக்குள்ளிருந்து எடுத்தார். விரல்களை செகாவின் மணிக்கட்டில் வைத்து அழுத்திக்கொண்டு உள் பாக்கெட்டிலிருந்து தங்க கடிகாரம் ஒன்றை மூடியைத் திறந்தபடியே வெளியே எடுத்தார். கடிகாரத்தின் விநாடி முள் மெதுவாக மிக மெதுவாக சுற்றியது. அது மூன்று முறை சுற்றி முடிக்கும்வரை நாடித்துடிப்பின் எந்த அறிகுறியாவது தெரிகிறதாவென்று காத்திருந்தார். அப்போது அதிகாலை மூன்று மணி. அறையில் புழுக்கம் இன்னும் இருந்தது. பேடென் வெய்லர் பல வருடங்களாகக் காணாத மிக மோசமான உஷ்ண அலையின் பிடியிலிருந்தது. அறையின் எல்லா சன்னல்களும் திறந்திருந்தன. ஆனால் காற்று வீசுவதற்கான எந்தத் தடயமும் இல்லை. கருப்பு இறக்கைகளுடன் ஒரு பெரிய அந்துப்பூச்சி சன்னல் வழியாகப் பறந்து வந்து மின்விளக்கின் மீது முட்டாள்தனமாக மோதியது. டாக்டர் ஷ்வோரர் செகாவின் மணிக்கட்டை விடுவித்தார். “எல்லாம் முடிந்தது” என்றார். கடிகாரத்தின் மூடியை மூடி உள் பாக்கெட்டில் திரும்ப வைத்துக்கொண்டார்.

வோல்கா உடனே கண்களைத் துடைத்துக்கொண்டு தன்னை ஒருங்கமைத்துக் கொண்டாள். டாக்டர் வருகை புரிந்ததற்காக நன்றி தெரிவித்துக்கொண்டாள். அவர் அவளுக்கு தூக்க மருந்து ஏதாவது தேவைப்படுமா என்று கேட்டார். லாடெனம், அல்லது வெலீரியன் சில துளிகள்? அவள் தலையை ஆட்டினாள். ஆனாலும் அவளிடம் ஒரு கோரிக்கை இருந்தது: அதிகாரிகளிடம் தெரிவிப்பதற்கு முன், செய்தித் தாட்கள் கண்டுபிடிப்பதற்கு முன், செகாவை தன் பொறுப்பில் வைத்திருக்க முடியாத நிலை ஏற்படுவதற்கு முன், அவரோடு கொஞ்ச நேரம் தனியாக இருக்க விரும்பினாள். இதற்கு டாக்டர் உதவி செய்ய முடியுமா? இப்போது நிகழ்ந்ததை கொஞ்ச நேரத்திற்கு வெளியிடாமல் இருக்க முடியுமா?

டாக்டர் ஷ்வோரர் அவரது மீசையை விரலின் பின்பக்கத்தால் தடவினார். ஏன் முடியாது? விஷயம் இப்போது தெரிந்தாலும் அல்லது சில மணி நேரங்கள் கழித்து வெளிவந்தாலும் என்ன வேறுபாட்டை அது ஏற்படுத்திவிடப் போகிறது? செய்ய வேண்டி மிச்சமிருக்கும் ஒரே விஷயம் இறப்புச் சான்றிதழை நிரப்புவதுதான். அவர் சில மணி நேரம் தூங்கியெழுந்தபின் காலையில் கூட அவரது அலுவலகத்தில் செய்துவிடலாம். டாக்டர் ஷ்வோரர் தலையசைத்து ஒப்புக்கொண்டு கிளம்பத் தயாரானார். சில ஆறுதல் வார்த்தைகளை முணுமுணுத்தார். வோல்கா தலையசைத்தாள். “இது ஒரு கௌரவம்” என்றார் டாக்டர் ஷ்வோரர். அவர் பையை எடுத்துக்கொண்டு அறையை விட்டு, சொல்லப் போனால், வரலாற்றை விட்டு வெளியேறினார்.

மிகச் சரியாக இதே நேரத்தில் தான் ஷாம்பெய்ன் பாட்டிலிலிருந்து கார்க் வெடித்துத் தெறித்தது. நுரை பொங்கி மேசையின் மீது வழிந்தது. வோல்கா செகாவின் படுக்கைக்கு அருகில் சென்றாள். ஒரு சிறிய ஸ்டூலில் அமர்ந்து அவர் கையை எடுத்து வைத்துக்கொண்டு அவ்வப்போது அவர் முகத்தை வருடிக் கொடுத்தபடி இருந்தாள். “மனித அரவம் எதுவுமேயில்லை. தினசரி ஓசைகள் அழிந்திருந்தன,” அவள் எழுதினாள். “அங்கிருந்தவை அழகும், அமைதியும், மரணத்தின் கம்பீரமும் மட்டுமே.”

கீழே தோட்டத்திலிருந்து பறவைக் கூச்சல்கள் கூப்பிடத் தொடங்கிய விடியல் நேரம் வரை அவள் செகாவுடனேயே இருந்தாள். அதன்பின் மேசைகளும் நாற்காலிகளும் இழுக்கப்படும் சத்தங்கள் கீழிருந்து வந்தன. கொஞ்ச நேரத்திலேயே குரல்கள் எழும்பி அவளை அடைந்தன. கதவு தட்டப்பட்டது. அதிகாரி யாராவது வந்திருப்பார் என்றுதான் முதலில் அவளுக்குத் தோன்றியது – மருத்துவப் பரிசோதகர் அல்லது கேள்விகள் கேட்கவும் படிவங்களை நிரப்பவும் ஏதாவது ஒரு போலீஸ்காரர், அல்லது ஒருவேளை டாக்டர் ஷ்வோரரே கூட செகாவின் உடலைப் பதப்படுத்தி ரஷியாவிற்கு அனுப்பி வைப்பதற்காக மார்டிஷியன் யாரையாவது அழைத்து வந்திருக்கலாம்.

ஆனால் வந்திருந்தது சில மணி நேரங்களுக்கு முன்பு ஷாம்பெய்ன் எடுத்து வந்த அதே பொன்னிறக் கேசம் கொண்ட இளைஞன். ஆனால் இம்முறை அவனது சீருடைகள் கூரான மடிப்போடு நேர்த்தியாக இஸ்திரியிடப்பட்டிருந்தன. அவனது ஒயிலார்ந்த பச்சை சட்டையின் அனைத்துப் பொத்தான்களும் சரியாக மாட்டிவிடப்பட்டிருந்தன. பார்ப்பதற்கு வேறு ஆளாக இருந்தான். நல்ல விழிப்போடு இருந்தது மட்டுமல்லாமல் அவனுடைய செழிப்பான கன்னங்கள் மென்மையாக ஷேவ் செய்யப்பட்டிருந்தன. முடி கச்சிதமாக வாரியிருந்தான். அவனைப் பார்க்க மற்றவர்களுக்கு உதவி செய்வதில் சந்தோஷம் அடைபவனைப் போலத் தெரிந்தது. அவன் கையில் பிடித்திருந்த பீங்கான் ஜாடியில் மூன்று மஞ்சள் ரோஜாக்கள் நீண்ட காம்புகளோடு செருகப்பட்டிருந்தன. அவன் காலணிகள் ஓர் அழகான க்ளிக்கை எழுப்ப அதனை வோல்காவிடம் நீட்டினான். அவள் பின்னகர்ந்து அவனை அறைக்குள் அனுமதித்தாள். கோப்பைகளையும் ஐஸ் பாக்கெட்டையும் டிரேவையும் எடுத்துச் செல்ல வந்திருப்பதாகக் கூறினான். மேலும், உஷ்ணம் அதிகமாக இருப்பதால் காலை உணவு தோட்டத்தில் பரிமாறப்படும் என்ற உபரித் தகவலையும் கூற விரும்பினான். இன்றைய வானிலை அதிகம் சிரமப்படுத்துவதாக இல்லையென்று அவன் நம்பினான். சீதோஷ்ணத்திற்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டான்.

அப்பெண் கவனம் தொலைந்திருப்பவளாகக் காணப்பட்டாள். அவன் பேசும்போது அவள் கண்களைத் திருப்பி தரைவிரிப்பில் இருந்த எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள். கைகளைக் கட்டி முழங்கைகளைப் பிணைத்துக் கொண்டாள். இதற்கிடையில் இன்னமும் பூச்சாடியைப் பிடித்துக்கொண்டு சமிக்ஞைக்காக காத்திருந்த இளைஞன், அந்த அறையின் விவரங்களை ஆராய்ந்தான். திறந்திருந்த சன்னல்களின் வழியே பிரகாசமான வெயில் வெள்ளமாகப் பாய்ந்திருந்தது. அறை சுத்தமாக, எதுவும் கலையாமல் ஏறக்குறைய தீண்டப்படாமல் இருந்தது. நாற்காலிகளில் வீசப்பட்டிருக்கும் துணிகள், இறைந்துகிடக்கும் காலணிகள், காலுறைகள், பெல்ட்டுகள், உள்ளாடைகள் என்று எதுவுமே கண்ணில் படவில்லை. ஹோட்டல் அறையின் கனத்த மேசை நாற்காலிகளைத் தவிர எஞ்சியிருந்தவை எதுவுமில்லை. அந்தப் பெண் இன்னமும் தரையையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்ததால் அவனும் கீழே குனிந்து பார்க்க, அவன் காலுக்கடியில், ஷூவின் முனைக்கருகே கார்க் ஒன்று தரையில் கிடந்தது. அந்தப் பெண் அதனைப் பார்க்கவில்லை, வேறெதையோ பார்த்துக் கொண்டிருந்தாள். இளைஞன் குனிந்து அந்த கார்க்கை எடுக்க விரும்பினான். ஆனால் கைகளில் ரோஜாக்கொத்தை வைத்துக்கொண்டு அசந்தர்ப்பமாக எதையாவது செய்து தன் மேல் கவனத்தை ஈர்க்கிறாற்போல் நடந்துகொண்டால் அசம்பாவிதமாகிவிடுமோ என்று பயந்தான். தயக்கத்தோடு கார்க்கிலிருந்து பார்வையை விலக்கி விழிகளை உயர்த்தினான். அச்சிறிய மேஜையின் மீதிருந்த இரண்டு கண்ணாடிக் கோப்பைகளையும் மூடியின்றி பாதி காலியாக இருந்த ஷாம்பெய்ன் பாட்டிலையும் தவிர எல்லாமும் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மீண்டும் ஒருமுறை பார்வையைத் திருப்பினான். திறந்திருந்த கதவு வழியாக மூன்றாவது கோப்பை அந்தப் படுக்கையறையில் முக்காலியின் மீது இருப்பது அவனுக்குத் தெரிந்தது. ஆனால் படுக்கையில் இன்னமும் யாரோ படுத்திருக்கிறார்கள்! முகத்தை அவனால் பார்க்க முடியில்லை, ஆனால் போர்வைக்கு அடியிலிருந்த உடல் கொஞ்சமும் சலனமின்றி இருந்தது. அந்த உருவத்தைக் குறித்துக்கொண்டு வேறெங்கோ கண்களைத் திருப்பினான். விளங்க முடியாத ஏதோ ஒரு காரணத்தால் ஒருவித அமைதிக் குலைவு அவனைப் பீடித்தது. அவன் தொண்டையைக் கனைத்தபடி தன் எடையை மற்றொரு காலுக்கு மாற்றினான். அந்தப் பெண் இன்னமும் தலை உயர்த்திப் பார்க்கவோ அல்லது மௌனத்தைக் கலைக்கவோ இல்லை. அவன் கன்னங்கள் சூடாவதைப் போல இளைஞன் உணர்ந்தான். இதற்கு முன் யோசித்திருக்காவிட்டாலும் திடீரென ஒரு  யோசனை அவனுக்கு உதித்தது. தோட்டத்தில் காலை உணவு எடுத்துக்கொள்ள விருப்பமில்லாவிட்டால் மாற்று ஏற்பாடு அவனால் செய்ய முடியும். அவள் கவனத்தைத் திருப்ப இருமினான். அவள் திரும்பவில்லை. மதிப்பு மிக்க வெளிநாட்டு விருந்தினர்கள் விருப்பப் பட்டால் அவர்களது அறையிலேயே காலை உணவு எடுத்துக் கொள்ளலாம் என்றான். தேவைப்பட்டால் ஒரு ட்ரேவை அவனால் மகிழ்ச்சியோடு எடுத்துவர முடியும் என்றான் அந்த இளைஞன். (அவன் பெயரைப் பற்றி எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை. அநேகமாக மகாயுத்தத்தில் அவன் மடிந்திருக்க வேண்டும்) இரண்டு ட்ரேக்கள் என்று திருத்திக் கொண்டான். படுக்கையறையின் பக்கமாக மீண்டும் ஒருமுறை நிச்சயமில்லாமல் பார்வையை செலுத்தினான்.

அவன் அமைதியுற்று காலருக்குள் விரலைச் செலுத்தித் தேய்த்துக் கொண்டான். அவனுக்குப் புரியவில்லை. அந்தப் பெண் கவனிக்கிறாளா என்பது கூட நிச்சயமாகவில்லை. இப்போது வேறு என்ன செய்வதென்று விளங்காமல் பூச்சாடியை ஏந்தியபடி நின்றிருந்தான். ரோஜாக்களின் இனிய நறுமணம் அவன் நாசியை நிரப்பி விளங்கமுடியாத வேதனையை உண்டாக்கியது. அவன் காத்திருந்தான். அவன் அங்கே நின்றுகொண்டு, உபசாரங்கள் கூறிக்கொண்டு, பாரத்தை கால் மாற்றிக் கொண்டு பூக்களை ஏந்தியபடி நின்றிருக்கையில், அவள் வேறெங்கோ – பேடன் வெய்லரிலிருந்து தொலைவில் ஏதோ ஓரிடத்தில் – சமைந்து போயிருந்தாள். சட்டென்று அவளுக்குத் தன் வயம் திரும்பியது. முகம் வேறோர் உணர்ச்சி பாவத்தை மேற்கொண்டது. அவள் விழிகளை உயர்த்தினாள், அவனை நோக்கினாள், தலையை உலுக்கிக் கொண்டாள். அவளைப் பார்ப்பதற்கு எதற்காக, இந்த இளைஞன் நம் அறையில் பூக்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருக்கிறான் என்று புரியாமல் திணறுவதைப் போலிருந்தது. பூக்கள்? அவள் பூக்கள் எதையும் ஆர்டர் செய்யவில்லை.

கணங்கள் கடந்தன. தனது கைப்பை இருக்குமிடத்திற்குச் சென்று சில நாணயங்களை அள்ளினாள். வங்கி நோட்டுகள் சிலவற்றையும் கூடவே எடுத்தாள். இளைஞன் தன் உதடுகளை நாக்கால் மீட்டிக் கொண்டான். மறுபடியும் மிகப் பெரிய டிப்ஸ் ஒன்று வருகிறது. ஆனால் எதற்காக? அவன் என்ன செய்ய வேண்டுமென அவள் கேட்கப் போகிறாள்? இத்தகைய விருந்தினர்கள் முன்பு அவன் இதுவரை காத்திருந்ததில்லை. மீண்டும் ஒரு முறை தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான்.

காலை உணவு வேண்டாம், என்றாள் அப்பெண். எப்படியிருந்தாலும் இப்போது வேண்டாம். இந்த நேரத்தில் முக்கியமான விஷயம் உணவு அல்ல. அவளுக்கு வேறோர் உதவி தேவைப்படுகிறது. அவன் சென்று ஒரு மார்டிஷியனை அழைத்துவர வேண்டும். அவள் சொல்வது அவனுக்குப் புரிகிறதா? ஹெர் செகாவ் இறந்துவிட்டார், தெரிகிறதா? Comprenez-Vous? இளைஞனே? ஆண்டன் செகாவ் இறந்துவிட்டார். இப்போது கவனமாகக் கேள், என்றாள். அவன் கீழே சென்று வரவேற்பறை மேஜையில் உள்ள யாரிடமாவது இந்த நகரத்தில் உள்ள மிகச் சிறந்த, மதிப்பு மிக்க மார்டிஷியன் யாரென்று விசாரிக்க வேண்டும். நம்பிக்கை வாய்ந்தவராக இருக்க வேண்டும். அக்கறையோடும் ஒழுங்கான நடத்தையோடும் பணிபுரிபவராக இருக்கவேண்டும். சுருக்கமாகச் சொன்னால் ஒரு மகத்தான கலைஞனுக்கு தகுதி வாய்ந்த ஒரு மார்டிஷியனாக இருக்கவேண்டும். இந்தா, என்று அவனிடம் பணத்தை அழுத்தினாள். கீழே உள்ளவர்களிடம் நான்தான் உன்னிடம் விசேஷமாக இந்த வேலையை செய்துமுடிக்கவேண்டுமென்று பணித்திருக்கிறேன் என்று சொல். கவனிக்கிறாயா? நான் என்ன சொல்கிறேன் என்பது உனக்குப் புரிகிறதா?

அந்த இளைஞன் அவள் கூறுவதை வாங்கிக் கொள்ளத் திணறினான். அந்தப் பிறிதொரு அறையின் திக்கில் மறுபடியும் பார்ப்பதைத் தவிர்த்தான். ஏதோ சரியில்லையென்று உணர்ந்திருந்தான். அவன் மேற்சட்டைக்குள் இதயம் படுவேகமாக அடித்துக் கொள்வது அவனுக்கு உறைத்தது. நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்புவதை உணர்ந்தான். பார்வையை எங்கே திருப்புவது என்று அவனுக்குத் தெரியவில்லை. அந்த பூச்சாடியை கீழே வைக்க விரும்பினான்.

தயவுசெய்து எனக்காக இதைச் செய், என்றாள் அந்தப் பெண். உன்னை நன்றியுடன் நினைத்திருப்பேன். கீழே இருப்பவர்களிடம் நான் வற்புறுத்துவதாகக் கூறு. அதையே சொல். உனக்கோ, அல்லது இந்த விஷயத்திற்கோ தேவையில்லாத கவனத்தை எழுப்பிவிடாதே. இது அத்தியாவசியம் என்று மட்டும் சொல். நான் கேட்டுக்கொண்டேன் என்று மட்டும் – அவ்வளவுதான். காதில் விழுகிறதா? புரிந்ததென்றால் தலையை ஆட்டு. எல்லாவற்றையும் விட முக்கியம், ஊரைக் கூட்டக்கூடாது. எல்லா ஆரவாரங்களும் மொத்தமாகச் சேர்ந்து விரைவிலேயே வந்துவிடும். மோசமான கட்டம் கடந்துவிட்டது. நாம் ஒருவரை ஒருவர் புரிந்திருக்கிறோமா?

இளைஞனின் முகம் வெளிறிப் போயிருந்தது. பூச்சாடியை இறுகப் பிடித்துக்கொண்டு விறைப்பாக நின்றான். ஒரு வழியாக தன் தலையை அவனால் அசைத்துக் காட்ட முடிந்தது.

ஹோட்டலிலிருந்து செல்வதற்கு அனுமதி கிடைத்த பின் அவன் அமைதியாக, தயக்கமேயின்றி, எவ்விதமான பதட்டமும் இன்றி மார்டிஷியன் வீட்டிற்குச் செல்ல வேண்டும். மிக முக்கியமான தூது ஒன்றிற்காக அவன் அமர்த்தப்பட்டிருப்பதாக நடந்துகொள்ளவேண்டும். வேறெதுவுமில்லை. அவன் முக்கியமான தூதுப்பணியில்தான் ஈடுபட்டிருக்கிறான், என்றாள். இது அவன் நடையை குறிக்கோள் கொண்டதாகச் செய்ய உதவுமானால், அவன் தன்னை ஒரு ஜனத்திரள் மிகுந்த சாலை நடைபாதையில் ரோஜாப் பூக்கள் கொண்ட பீங்கான் ஜாடி ஒன்றை மிக முக்கியப் பிரமுகர் ஒருவருக்காக எடுத்துச் செல்வதைப் போல கற்பனை செய்துகொள்ள வேண்டும். (அவள் அமைதியாக ஏறக்குறைய தன்னம்பிக்கையோடு உறவினர் அல்லது நண்பர் ஒருவரிடம் பேசுவதைப் போலப் பேசினாள்). அவன் பார்க்கச் செல்கிற அந்த மனிதர் அவனை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் மலர்களோடு அவன் வந்து சேர்வதற்காக ஒருவேளை பொறுமையின்றி காத்திருப்பதாகக் கூட அவன் தனக்குத் தானே கூறிக் கொள்ளலாம். இருப்பினும் அவ்விளைஞன் பதட்டமடைந்து ஓடவோ அல்லது தனது சீரான துரித நடையை துண்டிக்கவோ கூடாது. அவன் ஏந்திச் செல்லும் ஜாடி ஞாபகமிருக்கட்டும்! அவன் வேகமாக நடக்கவேண்டும்; எவ்வளவு முடியுமோ அந்தளவிற்கு எல்லா நேரங்களிலும் கண்ணியமாக தன் நடத்தை இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மார்டிஷியனின் வீட்டை அடையும் வரை நிற்காமல் சென்று கதவின் முன் நிற்க வேண்டும். பித்தனை கதவொலிப்பானை ஒன்று, இரண்டு, மூன்று முறை அவன் அடிப்பான். ஒரு நிமிடத்தில் மார்டிஷியனே வந்து கதவைத் திறப்பார்.

மார்டிஷியன் சந்தேகமின்றி நாற்பது வயது கொண்டவராக, அல்லது ஆரம்ப ஐம்பதுகளில் வழுக்கையாக, திடமான உடற்கட்டோடு ஸ்டீல் பிரேம் கண்ணாடி மூக்கின் நுனியில் தொற்றியிருக்கும்படி இருப்பார். அவர் பணிவான தற்பெருமையற்ற மனிதராக, மிகவும் நேரடியான அத்தியாவசியமான கேள்விகளை மட்டும் கேட்பவராக இருப்பார். ஏப்ரன்! ஆம், ஒருவேளை அவர் ஏப்ரன் அணிந்து கொண்டிருக்கலாம். அவரிடம் நீ சொல்லிக் கொண்டிருக்கும்போது தன் கைகளை கருப்பு டவல் ஒன்றில் துடைப்பவராகக்கூட இருக்கலாம். அவர் உடைகளில் மெலிதான பார்மால்டிஹைடு வீச்சம் இருக்கும். ஆனால் அது பரவாயில்லை. இளைஞன் கலவரப்படக்கூடாது. அவன் இப்போது ஏறக்குறைய முதிர்ந்த பருவத்தினன். இத்தகைய விஷயங்களுக்கு பயப்படவோ அசூயை கொள்ளவோ கூடாது. அவன் கூறுவதை மார்டிஷியன் கேட்டு முடிப்பார். கட்டுப்பாடும் இசைவான நடத்தையும் கொண்டவராக இருக்கும் இந்த மார்டிஷியன் இத்தகு சந்தர்ப்பங்களில் நம்மை அச்சமூட்டுபவராக இல்லாமல் பயங்களைப் போக்குபவராகத்தான் இருப்பார். வெகு காலத்திற்கு முன்பிருந்தே மரணத்தை அதன் பல்வேறுவித வேடங்களிலும் வடிவங்களிலும் சந்தித்து பரிச்சயம் கொண்டிருப்பவர்; மரணம் அவருக்கு இப்போதெல்லாம் எவ்வித ஆச்சர்யத்தையும் அளிப்பதில்லை, புதைத்திருக்கும் ரகசியங்களும் அவற்றில் இருக்கவில்லை. இந்த மனிதரின் சேவைதான் இன்று காலை தேவைப்படுகிறது.

மார்டிஷியன் பூஞ்சாடியை வாங்கிக் கொள்கிறார். இளைஞன் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரே ஒருமுறை மட்டும் மிக லேசான ஆச்சரிய ஜொலிப்பு, அசாதாரணமாக எதையோ கேட்ட அறிகுறி மார்டிஷியனிடம் வெளிப்படுகிறது. மரணமுற்றவரின் பெயரை இளைஞன் குறிப்பிட்ட கணத்தில் அந்த மார்டிஷியனின் புருவங்கள் சிறிதே உயர்கின்றன. செகாவ் என்றா சொன்னாய்? ஒரே நிமிடம், வருகிறேன்.

நான் சொல்லிக் கொண்டிருப்பது உனக்குப் புரிகிறதா? வோல்கா இளைஞனிடம் கேட்டாள். கோப்பைகளை வைத்துவிடு. அவற்றைப் பற்றிக் கவலைப்படாதே. கிரிஸ்டல் கோப்பைகளையும் மற்றவற்றையும் மறந்துபோ. இந்த அறை அப்படியே இருக்கட்டும். நீ போய் வா. இப்போது எல்லாம் தயாராக இருக்கிறது. நாங்கள் தயாராக இருக்கிறோம். நீ கிளம்புகிறாயா?

ஆனால் இளைஞன் அந்தக் கணத்தில் அவன் காலணியின் முனைக்கருகே இன்னமும் கிடக்கும் கார்க்கைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தான். அதனை எடுக்க வேண்டுமென்றால் பூஞ்சாடியை இறுகப் பிடித்தபடி அவன் குனியவேண்டும். அவன் இதைச் செய்வான். அவன் தலைசாய்த்துப் பணிந்தான். கண் திறந்து கீழே பார்க்காமலேயே அதைத் தேடிப்பிடித்து உள்ளங்கைக்குள் வைத்து மூடிக் கொண்டான்.

 

நன்றி: Where I’m calling from

Raymond Carver

Vintage – 1989

ரேமண்ட்கார்வெர்

தமிழில்: ஜி.குப்புசாமி


ரேமண்ட் கார்வெர் :

(1938 – 1988)

அமெரிக்காவின் வடமேற்கு பசிபிக் கரையோர கிளாட்கனியில் பிறந்த ரேமண்ட் கார்வெர் 70-80-களில் புதுப்புது வடிவங்களிலும் உள்ளடக்கங்களிலும் அமெரிக்கச் சிறுகதைகளுக்குச் செழுமை சேர்த்தவர். நுரையீரல் புற்றுநோயில் 1988-ல் மரணமுறுவதற்கு சில வருடங்களுக்கு முன்னர்தான் அவருக்குரிய இலக்கியப் புகழையும் கவனிப்பையும் பெற்ற இவர், மரணத்திற்குப் பிறகு பெரும் வாசகர் கூட்டத்தை அல்ல – ரசிகர் கூட்டத்தை சம்பாதித்து, ஏறக்குறைய புனித அந்தஸ்தைப் பெற்றிருப்பது மிகவும் சுவாரசியமான விஷயம். இவரது கல்லறைக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளப்படுவதும், இவரது வாழ்க்கை வரலாற்றைச் சித்திரப் புத்தகங்களாக வெளியிடுவதும், ஹார்ட்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் வில்லியம் ஸ்டெல்லின் தலைமையின் கீழ் கார்வெர் படைப்புகள் குறித்து தொடர்ந்தேர்த்தியான ஆய்வுகள் நடத்தப்படுவதும், அவர் மீது இலக்கிய வழிபாடு நடத்தப்படுவதும் அமெரிக்க இலக்கிய உலகின் வினோத முகத்திற்கு உதாரணங்கள்.

எர்னெஸ்ட் ஹெமிங்வேவுடனும், ஆன்டன் செகாவ்வுடனும் ஒப்பிடப்படும் இவர் பிரதானமாக சிறுகதைகளும், குறிப்பிடத்தக்க அளவில் கவிதைகளும் எழுதி வந்திருக்கிறார். வறுமையுடனும் குடிப்பழக்கத்துடனும் போராடிச் சீரழிந்த இவரது வாழ்க்கையின் ஒரே பிரகாசமான அம்சம், தெஸ் கல்லஹெர் என்ற கவிஞர் மனைவியாக அமைந்தது. இவரது கரடுமுரடான வாழ்க்கையின் அலைச்சல்கள் Will you Please be Quiet, Please (1976), What we Talk About When We Talk About Love (1981), Cathedral (1983) போன்ற தொகுப்புகளில் சிறுகதைகளாக காணக்கிடைக்கின்றன.

தன் வாழ்வின் பெரும்பகுதியை உரிய கவனிப்பையே பெற்றிராமல் கழித்த கார்வெர் தன்னுடைய ஏராளமான படைப்புகளை பல்வேறு நூலகங்களுக்கும், வெளியீட்டாளர்களுக்கும், பத்திரிகை முதலாளிகளுக்கும் வந்த விலைக்கு விற்று வந்திருக்கிறார். கார்வெர் இறந்த பிறகு அடைந்திருக்கும் அசாதாரண புகழின் விளைவாக அவருடைய கதைகள் தற்போது ஒவ்வொன்றாகக் கண்டெடுக்கப்பட்டு அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இக்கதை 1999-ம் ஆண்டு ஓஹியோ மாநில பல்கலைக்கழக ஆவணக் காப்பகத்தில் கவனிப்பாரற்றுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு இதே தலைப்பில் இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட கதைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது.

நாளை வெகு தூரம்
ஜி.குப்புசாமி

இந்தத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட மொழிபெயர்ப்பு சிறுகதை.

நன்றி :ஜி.குப்புசாமி அவர்களுக்கு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.