நகர்தல்

பிரதீப் இளங்கோவன்

அப்பெரிய கட்டிட அலுவலகத்தில், கண்களை விழுங்கிக்  கொண்டிருக்கும் கணினி இயந்திரங்களுக்கும் காத்திருக்கும் இரண்டு விடுமுறை நாட்களை எண்ணிக் கொண்டு கனவுலகில் ஆழ்ந்திருந்த என்னை  அமோதித்தவர்களுக்கும் மத்தியில் அந்த கிழவியின் குரல் பழுதடைந்த பழைய ரேடியோ ஒலியாய் கரகரத்தது.  அதுவரை என்னை அறியாத மற்ற அணிக் கூட்டத்தின் மனிதர்களும் குறிப்பாக இருவது அல்லது முப்பது வயதை ஒத்தியிருந்த பெண்களும் என்னை அநியாய அக்கிரமங்கள் நிறைந்த மனிதராக பார்த்தார்கள். ஏனெனில் அக்கிழவி என்னை “பொம்பள பொறுக்கி” என்று கத்தினாள். மார்டினாவின் மாமியாரான அப்பெண்ணை நான் அன்று தான் ஆச்சிரியத்தில் இல்லாமல் பயத்தோடு முதன் முதலில் பார்த்தேன். அப்பெண்ணை வெளிவர சொல்லி போராடினேன். வெளியிலும் என்னை பல மோசமான வசை சொற்களை வைத்து திட்டினாள். அதன்பின் எப்போதும் எனை மரியாதையாக கையாளும் மேலாளரும் ஏளன பார்வையுடன்,

“Pradeep, you can have affair or something, it’s none of my business. But, it should not progress to my company ”

இதை எதுவும் அறியாத மார்டினா வாட்சப்பில் சிவப்பு நிற இதயத்தை இணைத்தபடி செய்தி அனுப்பியிருந்தாள்.

Hi, Darling. Bhoomika will sleep early. Come ASAP.

மார்டினாவை  நினைக்கும்போதெல்லாம் இப்போதும் கூட அடி வயிற்றில் இருந்து மேல் தொண்டை வரை ஒரு ஆனந்தம் பொங்குகிறது. பாலைவன மண்டையைப்       பிளக்கும் வெயிலில் நீரின்றி உலர்ந்து கறுகறுத்திருக்கும் உதட்டிற்கு அணைக்கட்டு நீர் பேய்ச்சி அடிப்பதுபோல அவள் என் வாழ்வை அமிர்தப் படுத்தினாள். அவள் இல்லையெனில் லாரியில் அடிபட்டு நசுங்கி  தரையோடு தரையாகவோ  ரயில் தண்டவாளத்தில் உடல் பாகங்கள் பிரிந்து முண்டமான நிலையில் உடலின் சொந்தக்காரரைக்  கண்டுபிடிக்க முடியாத அவல நிலையில் நான் இறந்து போயிருப்பேன்.

மார்டினாவிற்கும் எனக்குமான உறவிற்கு பிள்ளையார் சுழியிட்டவன் அப்துல்தான். சக பணியாளரும் உயிர் நண்பனும்மான  அப்துல் போல் ஒருவன் இல்லையனில் எனக்கு மார்டினா கிடைத்திருக்க மாட்டாள். அப்துலின் இருபத்தி எட்டாவது பிறந்தநாள் விழாவிற்கு அழைப்பு கொடுக்க எனக்கு அவன் மொபைலில் அழைப்பு கொடுத்துக் கொண்டே இருந்தான். அச்சமயத்தில் எனது மகன் ராகுல் அவனது அம்மாவுடனே வாழ வேண்டுமென நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்திருந்த சோதனையில் நான் அப்பொழுது மூழ்கி இருந்தேன். நான் ஒரு ‘குடிகாரன்’ என்று என் மனைவி நீதிமன்றத்தில் மகனை அவள்  வசம் இழுத்திருந்தாள். அன்றோடு என் வாழ்வு முடிந்தது என்று நினைத்தேன். மகனைப் பிரிந்து இருப்பதை நினைத்தால்  இப்போதும் கசப்பற்று தொடங்கும் திங்கள் கிழமையின்  காலை நினைவில் வருகிறது. எனக்கு அவனை அந்தளவிற்கு பிடிக்கும். ஆனால், மிக முக்கியமான மாற்றத்தை நிகழ்த்தவே அன்று அப்துல் நான் அவனது மொபைலின் அழைப்பை ஏற்காமல் இருந்த போதிலும் அதனைப் பொருட்படுத்தாமல் எனக்கு வாட்சப் செய்தி அனுப்பியிருந்தான்.

Dai..Asshole..enakaaga ilanalum naan solirunthenla Martina nu oru ponnu, ava nalake varuvaa, athukagavathu ne varanum

அச்சமயத்தில் அருந்திய மது எனது வீடே சுற்றும்படியாக எனக்கு போதையை அளித்தது. உயிரியல் பூங்காவின் மிருகமாக நான் கூண்டிலும் எனது மனைவியும் மகனும் வெளியிலும் என்னைப் பார்த்து சிரிப்பது போல பிம்பக் காட்சிகள் தோன்றின. அவனது செய்தி எனக்குள் எரிச்சலை ஏற்படுத்தியது. கோவத்தின் உச்சத்தில் இருந்தேன். இருப்பினும் அவனது மனது புண் படாத வண்ணம் பதில் அனுப்பினேன்.

Paakalam da… Judgement came today, I am very much depressed and moreover not in a mood to celebrate your birthday tmrw.. U have fun dude

செய்தி அனுப்பிவிட்டு நான் என் மொபைலை தூக்கி வைத்துவிட்டு படுக்கையில் தூங்க சென்றேன். ஏனோ! எனக்கு புரியவில்லை, துக்கம் வாயை கிழித்தெறிந்தாலும் என்னால் தூங்க முடிகிறது. இரண்டோ அல்லது  மூன்றோ மணி நேரம் ஆழந்த உறக்கத்திற்கு பிறகு விழித்தேன். விழித்தவுடன் நேரம் பார்க்க என் மொபைலை தேடினேன். சிகரெட் பற்ற வைத்தபடியே ஹாலிற்கு சென்று மொபைலை கண்டெடுத்தேன். மணி இரண்டு ஆகியிருந்தது.  வாழ்க்கை பற்றிய எண்ணங்கள் வர தொடங்கின. நானே சமைத்து துணிகளை சுத்தம் செய்ய வேண்டிய கடமைகள் பயத்தை ஏற்படுத்தின. ராகுலை பற்றி சிந்தித்தேன். அவன், நான் அவனை மிஸ் செய்வது போல அவன்  என்னைச் செய்வானா? பதில் தெரியவில்லை. அவன் சின்ன பையன். ஆறாம் கிளாஸ் படிக்கிறான், பாவம். மொபைலைப் பார்த்தேன், அப்துல் பதில் அனுப்பியிருக்கின்றான், நான் தூங்கும் முன்னே  அனுப்பியிருந்தான்.

Poda Mayiru.. En birthday ku solala. It’s about yourself, life has to move on in any fucking way and u need to celebrate it da …yosi da

அவன் சொன்னது எனக்கு அப்போதுதான்  நன்கு புரிந்தது. வாழ்க்கையில் எதுவும் கைக்கூடாத நிலையிலும் வாழ்க்கையை நகர்த்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. கடிகாரத்தின் சிறிய மற்றும் பெரிய முள்ளாக  காலத்தைக் கடக்க வேண்டிய அவசியம் உள்ளது. சிறிய முள்ளாக அன்பையும் பெரிய முள்ளாக பணத்தையும் சுமக்க வேண்டிய கடமை உயிர் பிரியும் வரை  உள்ளது. மார்டினா என்ற அன்பிற்கோ இல்லை என்றாலும் அவன் பிறந்தநாள் விழாவிற்கு சென்றால் ஒரு மனசோர்வாவது  நீங்கும் என்று தோன்றியது. அங்கு செல்ல முடிவெடுத்தேன். அப்துல்லிற்கு பதிலும் அனுப்பினேன்.

Sry da, I had a terrible hangover and slept. I am coming tomo. HBD dude. Last bachelor birthday enjoy da

மார்டினாவை புகைப்பட வாயிலாக  உடனே பார்க்க வேண்டும் போல இருந்தது. ஆனால், அப்துலிடம் கேட்க சங்கடமாக இருந்தது. அப்துலின் முகப்புத்தகம் சென்று தேடினேன். அப்துல்லின் அக்கௌன்டில் ‘Martina’ என்று தேடியபோதும் அப்படி ஒரு நபர் இல்லை. அப்பொழுது தான் மார்டினா, அப்துல் காதலிக்கும் இந்துவின் தோழி என்று நினைவில் வந்தது. இந்துவின் வழியாக மார்டினா கிடைத்தாள். ஆனால், மார்ட்டினாவின் புகைப்படமற்று பிரபல நடிகையான ஜோடி போஸ்டரின் “Silence of the lambs” புகைப்படம் இருந்தது. போஸ்டர், மேக நிற மேற்சட்டையுடனும் ஊதா நிற கீழ் ஆடையுடனும் இருந்தாள். மார்டினாவின் Alter ego ஜோடி போஸ்டராக இருக்கக் கூடும் அல்லது போலி கணக்கின் வழியாக தன்னை மறைத்துக் கொள்ளும் Sock Puppet ஆகவும் அவள் இருக்கக் கூடும்.

நான் ரசிக்க விரும்பும் பெண்கள் சிவப்பு நிற புடவையுடன் வந்தால் போதுமென நான் நினைப்பத்துண்டு. என் அம்மா சிவப்பு நிற புடவையில் தான் இவ்வுலகை  விட்டு பிரிந்தாள். என் அம்மாவுக்கு நீண்ட தலைமயிர் வேறு. பிட்டம் வரையும் அகலம். அன்றிரவு அப்துலின் பிறந்தநாள் விழாவில் மார்டினாவும் அப்படி இருப்பாள் என்று எண்ணினேன். ஆனால், அவள் ஜீன்ஸ் சட்டையுடனும்  கீழ் ஆடையுடனும் தலைமயிர் குறைவாகவும் டாம்போய் கோணத்தில் காட்சியளித்தாள்.

மதம் கடந்து திருமணம் செய்து கொள்ள இருக்கும் அப்துலும் இந்துவும் நண்பர்களை மட்டுமே அந்த நிகழ்வில் அழைக்க நினைத்தனர். அவர்களைப் பொறுத்தவரை பெரிய வயதை எட்டியவர்கள் குழப்பவாதிகள். ஆடலும் பாடலோடும் அலங்கரித்த அந்நிகழ்வில் எனக்கு மார்டினாவிடம் பேச நேரம் அமையவில்லை. மார்டினா பெரும்பாலும் கையில் லொட லொட வென இருந்த பருத்தி பையை ஏந்தியபடி இந்துவிற்கு பின்னால் திரிந்துக் கொண்டிருந்தாள். சாப்பாடு நேரத்தில் புபட் முறைக்கு நான் சென்றபோது இந்துவும் அப்துலும் நேரடியாக என்னை அவளுக்கு அறிமுகம் செய்தார்கள்.

“மார்டினா நான் சொல்லிருக்கேன்ல பிரதீப்னு”

எனக்காக அப்துல் யோசிப்பதைப் போலவே இந்துவும் மார்டினாவிற்கு யோசிக்கிறாள் என்று எனக்கு புரிந்தது. அவள் “நான் சொல்லிருக்கேன்ல” என்றபோது “இவன் தான் உனக்கானவன் மார்டினா” என்பது போல இந்துவின் பார்வை துடிதுடிப்பு நிறைந்து அக்கறையுடன் மார்டிவின்மேல் விழுந்தது. மார்டினாவும் “இஸ் ஹீ?” என்றபடியே தனது புருவத்தை தலைகீழிட்ட யூ வடிவத்தில் உயர்த்தினாள்.

” யா, ஐ ரெம்மம்பர்”

எனது கோட் ஆடையின் டையைச் சரி செய்தபடியே நான் மார்டினாவிடம் கைக் கொடுத்தேன்.

” ஹாய், ஐ அம் பிரதீப் இளங்கோவன்”

கமுக்கமாக அப்துல் இந்துவை யாரோ அவளை தேடுவதாக உள்ளே அனுப்பி அவனும் நாங்கள் இருவரும் தனியாக பேசுவதற்காக உள்ளே விரைந்தான். நான் ஆனந்தமாக பேச தொடங்கினேன்.

முதலில் சுமாராக மூன்று நிமிடங்கள், இவருவரும் பணிபுரியும் நிறுவனம், ஆரோக்கியம், பிள்ளைகள் என பேசினோம். தொடர்ந்து மார்டினாவும் சாப்பிட தொடங்கியதால், என்னால் அந்த உரையாடலை சம்பிரதாயமற்ற உரையாடலாக மாற்ற சிரமம் இருந்தது. அவளது சிறு கூந்தல் அவளது முகத்தினை உரசும் போதெல்லாம் அதனை பின்னால் இழுத்துக் கொண்டாள். அந்நேரங்களில் அவள் உதடுகளின் வழியாக இரு பற்கள் தெரியும் வண்ணம் நமட்டு சிரிப்பு சிரித்தாள். அப்படியொரு அழகை நான் இதுவரை பார்த்ததில்லை. அதை வர்ணிக்கவே அவளிடம் சொல்லிவிடவே எனக்கு தோன்றியது. ஆனால், என்னால் ரசிக்க மட்டுமே முடிந்தது.  என்ன பேசுவது என்று அறியாமல் திணறி ஏதோ கேட்க தொடங்கினேன்.

“நீங்க எப்படி வந்தீங்க?”

சாப்பிட்டு முடித்துவிட்டு. அவள் கை அலம்பும் இடத்திற்கு நகர தயாரான நிலையில் பதிலளித்து நடக்க தொடங்கினாள்.

“கார்ல தான். அப்புறம் நீங்க ‘மார்டினா’ னே கூப்பிடுங்க, அதான் எனக்கு பிடிக்கும். இதோ வந்திடுறேன்”

நான்  நொந்து போனேன். பேச முடியாத விரக்தியில். “பக்…” என்று கத்தி புல் நிறைந்த அவ்விடத்தை காலால் உதைத்தேன். இங்கு வந்து உடனே கிளம்பிவிடுவாள் என்ற எதார்த்தம் வலித்தது. என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தேன். எண்ணாவது வாங்க வேண்டும் என்று தோன்றியது. பாக்கட்டில் சிகரெட் இருக்கிறதா என்று தேடினேன். இல்லாதபோது மொபைலை எடுத்தேன். பையன் முகப்புத்தகம்  வழியாக செய்தி அனுப்பியிருந்தான்.

Appa miss you so much

Amma scolding for no reason

I want to stay with you

சில நேரங்களில் உலகில் ஏற்படும்  வழக்கமானதொரு நிகழ்வு கூட நம்மைக் கலங்கடிக்க செய்யும். என் மனைவி மற்றொரு ஆண்மகனிடம் உறவு வைத்திருந்தாலும் ஒரு அம்மாவாக அவள் மகனை திட்டுவதெல்லாம் இயல்பானதொரு விடயம் தான். இருப்பினும், ஏதோ அன்று நான் மனமுடைந்து போனேன். அவனிடம் வந்த அந்த எழுத்துக்கள் என்னை வேதனையில் ஆழ்த்தியது. என்னை அறியாமல் பயங்கர கோபம் வந்தது. கோவத்தோடு கோட் ஆடையின் டையை இழுத்ததில் அதன் முடிப்பு அவிழ்ந்து தளர்த்து இறங்கியது. கோட் ஆடையையும் கழட்டி வீசினேன். மறுபடியும் “பக்……” என்று மிக சத்தமாக கத்தினேன். திரும்பிவந்த மார்டினாவும் ஏதும் புரியாமல் பார்த்தாள். அப்பொழுது விழாவிற்கு வந்த பெரும்பாலான ஆள்கள் என்னையே பார்த்து நின்றுக் கொண்டிருந்தார்கள். இந்துவும் அப்துலும் ஓடி என் அருகில் வந்தனர்.  மார்டினாவே விசாரித்தாள்.

” Pradeep, what happened?”

“மச்சான் என்ன ஆச்சு?”

“Nothing just leave me alone”

மறுபடியும் கத்தி, வீட்டின் புல்வெளியில் இருந்து எனது கார் நின்றிருந்த பார்க்கிங் பகுதி வரை வேகமாக நடந்தேன். யாரும் பின்தொடர வில்லை. உள்ளே ஏறும்முன் திரும்பி மார்டினாவைப் பார்த்தேன்.

“நீ ரொம்ப அழகா இருக்க மார்டினா”

கத்தியபடியே, காரை எடுத்தேன். வீட்டிற்கு போய் நன்கு தூங்கினேன்.

*         *         *        *          *           *            *

 மார்டினா 

Pradeep is already here. Where r u. Come fast

இந்துவிடம் வந்த வாட்சப் தகவல் எனை ஆனந்தத்தில் ஆழ்த்தியது. இந்து, நான் பிரதீபுடன் வாழவேண்டும் என்று விரும்பினாள். நேற்று வீடு வந்து வெளிப்படையாக என்னிடம் இதைக் கூறினாள். காரில் அமர்ந்திருந்த நான் வீட்டை மூடிக்கொண்டிருந்த மகள் பூமிகாவுகாக காத்திருந்தேன். பிரதீப் பற்றிய எண்ணத்தில் தான் வண்டியில் அமர்ந்திருந்தேன். கட்டிக் கொண்ட அந்த மனிதருடன்  வாழ்ந்த இந்த வாழ்க்கை மிகப் பெரிய சலிப்பை எனக்கு தந்துவிட்டது. அவரின் அம்மாவை போல ஒரு பெண்ணை சீரியல் கதாப்பாத்திரத்தில் கூட வடிவமைக்க முடியாது. பொறுத்தது போதும். பூமிகாவிற்காகத் தான் இவ்வளவு நாள் பொறுத்துக் கொண்டேன். அவள் புரிந்துக் கொள்வாள்.

அந்த மனிதரைப் பற்றி எண்ணும்போதுதான் அவர் அவரின் மொபைல் சார்ஜர் எடுத்துவர சொன்னது நினைவில் வந்தது. பூமிகாவை பார்க்க வந்தபோது இங்கேயே விட்டுச் சென்றுவிட்டாராம். காருக்கு அருகில் வந்த பூமிகாவிடம் சொன்னவுடன், அவள் மறுபடியும் ஓடி வீடு திறந்து எடுக்கச் சென்றாள். திரும்பும்போது வலது உள்ளங்கையில் ரத்தத்தோடு பூமி வந்தாள். நான் பதறி போனேன். அவளை உள்ளே வர சொல்லி  காரிலிருந்த எயிட் பாக்ஸில் இருந்து மருந்து எடுத்து வைத்துவிட்டு நன்குச் சுற்றிக் கட்டினேன். அவள் அழுவதை நிறுத்தினாள். நான் அந்த மனிதரின் வீட்டிற்கு காரை நகர்த்தினேன்.

வெளியில் போனில் இருந்த அவர் நேரடியாக கட் செய்து காரை நோக்கி வந்தார். நான் காரிலே அமர்ந்திருந்தேன். கீழே இறங்கிய பூமிகா அவரைக் கட்டிபிடித்து கன்னத்தில் முத்தமிட்டு பாட்டியைப் பார்க்க உள்ளே ஓடினாள். அவர் என்னிடம் பேச தொடங்கினார்

“உள்ள வா மார்டினா பேசலாம்”

“பேச ஒன்னும் இல்ல. உங்க அம்மாவ நான் பார்க்க விரும்பல. அவங்களும் திருந்த போவதில்லை, நீங்களும் உங்க சந்தேக புத்திய மாத்தப்போறதில்ல. சீக்ரம் டைவோர்ஸ்  பண்ணனும். என்ன ப்ரொசீஜர்னு பாருங்க. இனிமேலாவது என்ன நிம்மதியா இருக்கவிடுங்க. அவ கையில இப்போ வரும்போது அடிப்பட்ருச்சு அவள பார்த்துக்கோங்க. நான் வரேன்”

நான் அவர் மீண்டும் பேசும் முன்னே காரை எடுத்தேன். மனைவியின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க தெரிந்த மனிதருக்கு மகளின் கையில் உள்ள காயத்தைப் பார்க்க முடியவில்லை. அப்துலின் பிறந்தநாள் விழாவிற்குள் நுழைந்தேன்.

பிரதீப் கறுப்பு நிற கோட் சூட்டுடனும் அடர்ந்த தாடியுடனும் திடகாத்திரமான உடல் வாக்குடன் அழகாகவே காட்சியளித்தான். முகப்புத்தகத்தில் அவனது மகன் மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை காட்டிலும் நேரில் அம்சமாகவே இருந்தான்.

பிரதீப் எளிதாக என்னுடன் பேச தொடங்கினான். பேசும்பொழுது  Flirt செய்வதாக எனக்கு தோன்றவில்லை. Flirt செய்தாலும் நன்றாக இருந்திருக்கும்.ஆனால், என்னைப் போன்ற பெண்களை ‘lesbian’ என்று பெண்களேவும் இப்படி இருப்பதினால் அத்துமீறலாமென்று ஆண்களும்  நினைப்பது அதிகம்தான். அதனால் எளிதில் முடிவிற்கு வரமுடியாது, போக போகத்தான் தெரியவரும். கலப்பில்லாத மனிதனாக இருப்பானென்று தோன்றுகிறது. இந்துவின் பரிந்துரை என்பதே நம்பிக்கை.

“நீ ரொம்ப அழகா இருக்க மார்டினா”  என்று அவன் கிளம்பியபோது மீண்டும் எப்பொழுது பார்ப்பேனென்று தெரியவில்லை.

அவன் கத்திவிட்டு சென்ற பிறகு இந்துவும் இதைப்பற்றி பேச தயங்கினாள். நானும் அவளிடம் ஏதும் கேட்கவில்லை. இந்து அன்றிரவு நானும் அவளும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டாள். இருநூறு இதயங்கள் வந்திருந்தன. அவள் பதிவிட்ட மற்ற படங்களிழும் பிரதீப் காணவில்லை. அப்துலின் கணக்கு வழியாக பிரதீப்பின் கணக்கில் நுழைந்துப் பார்த்தேன். முகப்புத்தகத்தில் பதிவிட்ட அதே படமும் இன்ஸ்டாவிலும் இருந்தது. வேறெந்த பதிவும் இல்லை. நான் பிரதீப்பிற்கு செய்தி அனுப்பவோ நட்பில் இணைந்து கொள்ளவோ ஒரு தயக்கம் இருந்தது. அது கண்டிப்பாக பெண்களுக்கு வருகின்ற அகந்தை குணமோ திமிரு பிடித்த அகங்கார குணமோ இல்லை. அது தயக்கமே.  அதன் பிறகு நான் தனிமையில் வாழ தொடங்கிய எதற்கும் உதவாத வாழ்வை வாழ தொடங்கினேன்.

இரண்டு வாரங்கள் அப்படியே ஓடியது. நான் வேலைக்கு செல்வதும், மகளைப் பள்ளிக்கு அழைத்து வருவதும், சமையல் செய்வதுமென நாட்கள் பறந்தது. ஒரு இரவு திடீரென பிரதீப் ஒரு புகைப்படத்தை பதிவு செய்திருந்தான். அவன் தரையில் அமர்ந்துக் கொண்டு சோகமாக இருப்பது போல காட்சியளித்தான். ஜாக் அண்ட் ஜோன்ஸ் முழுக்கை சட்டையுடனும் ட்ராக் பாண்ட் அணிந்தபடி அமர்ந்திருந்தான். கீழே சேவலியர் டி பாரிஸ் பிராந்தி மது போத்தலும் ஒரு சிறிய தட்டில் மீன் வறுவலும் இருந்தன. புகைப்படத்துடன் அதை குறித்த விரவமும் இருந்தது. அது விரவமாக இல்லாமல் புலம்பலாகவே இருந்தது.

Nothing left. Only these non-living bastards. Loneliness sucks. #Loneliness

நூற்றி எட்டு இதயங்கள் பெற்ற அப்படத்துக்கு எனக்கு தெரியாத பல நபர்கள் கருத்து தெரிவித்தார்கள். நான் பொறுமையாக அனைத்தையும் படித்தேன். சிலர், அவன் மனைவியை விட்டு பிரிந்ததை தெரிந்து ஆறுதல் சொன்னார்கள். சிலர், தெரியாமல் என்ன காரணம் என கேள்வி எழுப்பினார்கள். இரண்டே நபர்கள் திட்டினார்கள். அப்துலும் இந்துவும் மட்டுமே.

adbulrahman27  Some people deserve that Mr.Pradeep. They can ruin things easily

indu_1410    @pradeepelangovan  Like Einsten said, “In the middle of difficulties lies opportunity”  Sometimes in this world we need to be an opportunist. Understand the world idiot.

எனக்கும் அந்த இரண்டு வாரங்களில் தயக்கம் குறைந்திருந்தது. அவனிடம் பேசிவிடலாம் என்று தோன்றியது. இன்ஸ்டாவில் நான் பேச முற்பட்டபோதே அவனிடமிருந்து ரிக்வஸ்ட் வந்தது. நான் மகிழ்ந்தேன். அழைப்பை ஏற்றேன். பிரதீப் ஒரு படி மேல வந்து மெசேஜூம் செய்தான்.

pradeepelangovan  Hi, sorry for that day. I behaved like a psychosis patient. I was disturbed by my son’s message

martina1989  Its okay I am a parent too

Happy to be in touch

அதன் பிறகு இருவரும் நன்றாக பேச தொடங்கினோம். மூன்று நாட்களிலே நல்ல நண்பர்களாக மாறியிருந்தோம். நடுவே நான் எண் கேட்டு வாட்சப்பில் பேசலாம் என்றேன். இன்ஸ்டாவில் பேச எனக்கு பிடிக்கவில்லை. வாட்சப்பில் பேச தொடங்கினோம்.தொடர்ந்து பிடித்த படங்கள் பற்றி பேச ஆரம்பித்தபோது தான் ‘ஜோடி போஸ்டர்’ பற்றிய அவன் கேள்வி வந்தது.

Whatsapp, Instagram, Facebook elame Jodie foster pic dp ya irku avlo pudikuma avangala?

Romba pudikum. Whatever role is given she will nail the shit out. “The Brave One” parthu thaan nan intha look la irken

நட்பின் பிடியில் சிக்கிக் கொண்டிருந்த எங்களது உரையாடல், அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. காதலுக்கான வேலை தொடங்கபடாமல் நாட்கள் கழிந்தன. பிரதீப் மட்டும் வாழ்க்கையில் நன்கு அமைந்துவிட்டால் வாழ்வை அவனுடன் கழித்துவிடலாம் என்று தோன்றியது. சிறு வயதிலிருந்தே என் வாழ்வில் வருகின்ற பெண்கள் என்னை தொல்லை செய்துக் கொண்டே இருக்கிறார்கள். முதலில், என் அம்மா நான் நினைவில் தெரிந்து அவளைப் பார்த்தது இல்லை. எனக்கு தாய் பாசமென்றால் என்னவென்பதே தெரியாத வண்ணம் என்னை தவிக்கவிட்டு சென்றாள். இரண்டாவது, அப்பா மறுமணம் செய்துக் கொண்ட சித்தி, நாசூக்காக அப்பாவே என்னை  ஆசிரமத்தில் சேர்க்கும் அளவு அவரை வசீகரித்து என்னை வேதனையில் தள்ளினாள். இப்போது என் மகள், பூமிகாவும் அவளின்  அப்பா பற்றி தெரியாமல், அனைவரும் ஒன்றாக வாழலாம் என்று சொல்லி என்னைக் காயப்படுத்துகிறாள். பிரதீப்புடன் பேச தொடங்கிய முதல் நான் அவளுடன் சரியாக பேசுவது இல்லையாம். அந்த ராட்சசி சொல்லி கொடுத்து இப்படி பேசுகிறாளோ என்னமோ!

ஆண்களிலும் அப்பா ஏமாற்றினார். பூமிகாவின் அப்பாவும் ஏமாற்றமே தந்தார். பிரதீப் எப்படி இருக்க போகிறான்? எவ்வாறு என்னிடம் அன்பு வைத்துக் கொள்வான்? பூமிகாவுடன் பாசமாக நடந்துக் கொள்வானா? தெரியவில்லை. ஆனால், பதில் தெரிந்து கொள்ள வேண்டுமென்று முடிவு செய்தேன். பிரதீப்பிடம் வெளியே சந்திக்கலாம் என்று கூறி அவனிடம் காதலைச் சொல்லிவிட நினைத்தேன். அவனிடம் ஒப்புதலும் பெற்றேன். அவனே அழைத்துப் போவதாகவும் அவனே காரை எடுத்து வருவதாகவும் சொன்னான். அதிலே செல்லலாமென்று சொன்னான். அவன் இங்க வந்தபோது நான் ஆடை மாற்றிக் கொண்டிருந்தேன். எனது அறையிலிருந்து வெளிவந்தபோது அவன் ஹாலில் பூமிகாவுடன் பேசிக் கொண்டிருந்தான். நான் காப்பி தந்தபோது, பூமியைப் பார்த்துக் கொள்ள இந்துவும் வந்திருந்தாள். இருவரும் நேராக அவனது காரில் என் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் பெரிய காபி கடையிற்கு சென்றோம்.

கடையில் ஆங்காங்கே குடும்பத்தோடு வந்திருந்த தம்பதிகள்தான் அதிகமிருந்தனர். காதல் ஜோடிகளும் இருவது வயதை ஒத்த நபர்களே இருந்தார்கள். என்னையும் பிரதீப்பையும் போல முப்பது வயதை தாண்டிய ஆட்கள் யாரும் ஜோடியாக இல்லை. பூமிகா வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்துவை இப்படி தொந்தரவு செய்வது எனக்கு பிடிக்கவில்லை. அந்த ஆளிடமும் சொல்லி என்னால் புரிய வைக்க முடியாது. இன்றோடு எல்லாம் சரியாக வருமென தோன்றியது. பிரதீப்பிடம் காதலைச் சொன்னேன்.

“எனக்கு ஓ.கே தான் மார்டினா. பட் பூமிகாவிற்கு என்ன பிடிக்கலனு நினைக்கிறேன்”

“அவ புரிஞ்சிப்பா பிரதீப். சின்ன பொண்ணு, ஆறாவதுதான படிக்கிறா, வேறேதாவது இருந்தா சொல்லு”

” நான் லீகலா பிரிஞ்சிட்டேன். நீதான் இன்னும் பிரியல. எங்க வீட்லதான் கிறிஸ்துவ பெண்ணானு வாயப் பொலப்பாங்க”

“கிறிஸ்துவ பெண்ணா? யாரு?”

“நீதான, எங்க வீட்ல அப்பாதான் ஏதாவது சொல்லுவார். பார்த்துக்கலாம்”

“அய்யோ! பிரதீப், நான் கிறிஸ்துவ பெண் இல்ல, போனவாரம் வீட்ல பிள்ளையார் சதுர்த்தி அப்போ பூஜ பண்ண போட்டோ கூட வாட்சப்ல போடேன்ல, நீ தப்பா நெனச்சுட்டு இருந்துருக்க ”

“அது நீ மத நம்பிக்கை இல்லாத பெண்னு நினைச்சேன், இன்ஸ்டால கூட ‘ஹாப்பி பக்ரீத்’ போஸ்ட் இருந்தது,  என்ன சொல்ற? அப்ப ‘மார்டினா’ பெயரு?”

“அதுவா….”

” சிரிக்காம சொல்லலு…”

“சின்ன வயசுல எங்க அப்பா குடிச்சிட்டு நடந்து வந்தப்போ ஒரு கார் ஏத்திட்டு போயிருச்சு, நடு ரோட்ல கிடந்த என் அப்பாவ அந்த நடுராத்திரி ஹாஸ்பிட்டல்  சேர்த்த ஆங்கிலோ இந்திய பெண்தான், மார்டினா. அதனால எங்க அப்பா..”

” நிறுத்து..எனக்கு புரிஞ்சிருச்சு… நான் என்ன பண்றது, அப்துல் கிட்டயும் கேட்க முடியாது. ஏன்னு உனக்கு தெரியும்”

நான் பகிரங்கமாக சிரித்தேன். மனிதர்கள் எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள். பெயரின் மூலம் மதத்தை அறிந்து தன் மத பெண்ணையோ ஆண்னையோ மட்டும் காதலிக்க முற்படுகிறார்கள். அதற்கு ஏத்தாற்போல பழகுவதை கணக்கிட்டு கொள்கிறார்கள். இது எப்படிப்பட்ட சாபமாக இருந்திருக்க வேண்டும். மறுபுறம் பெயரின் மூலம் மதம் அறியாத மாதிரியான பெயரை வைக்க முடியுமா? எந்தளவிற்கு  பிற்போக்கான செயலைச் செய்துக் கொண்டிருக்கிறோம். நான் யோசித்து பார்த்து பகிரங்கமாக சிரித்துக் கொண்டிருந்தேன். பிரதீப் என்னைக் கட்டி பிடித்தான். நான் உடனே இருவரும் ஒன்றாக சிரித்தபடி ஒரு செல்பி எடுத்துக் கொண்டு, பச்சை நிற இதயத்தோடு “Confirmed” என்று சேர்த்து   வாட்சப் ஸ்டேடஸ் போட்டேன்.

எனது மகளையும் அவனது மகனையும் இருவரும் நேசிக்க வேண்டும் என்பது, அவர்களது படிப்பு பற்றி, நாங்கள் முறையான திருமணம் செய்துக் கொள்வது, வேண்டுமென்றால் எங்களுக்கென ஒரு பிள்ளை என்று அடுத்தக்கட்ட வாழ்க்கைப் பற்றி  பேசிக் கொண்டோம். பில்லைக்  கட்டிக் கொண்டு வெளிவரம் பொழுது, அங்கு அந்த மனிதர் பூமிகாவோடு வந்தார். நான் மகிழ்வாக இருந்தால், அவருக்கு பிடிக்காது போலும். நடு ரோட்டில் அப்பெரிய மக்கள் கூட்டத்திற்கு மத்தியில், அவர் பிரதீப்பை அடித்தார்.

பூமிகாவை நான் முறைத்தேன்.

அன்று பிரதீப் காரிலே நான்  வீட்டிற்குச் சென்றேன்.  காரில் மன்னிப்பு கேட்டுக் கொண்டே வந்தேன்.

*         *         *        *          *           *            *

பூமிகா

எனக்கு இந்து ஆன்டியைப் பிடிக்கவேயில்லை. தேவையின்றி அம்மாவின் மனதை மாற்றுவதாக தோன்றுகிறது. அப்துல் அங்கிள் பிறந்தநாளிற்கு அழைப்பு கொடுக்கவந்த இந்து ஆன்டி அம்மாவிடம் ஏன் இப்படி சொல்ல வேண்டும்?

“இப்படியே எவ்ளோ நாள் இருப்ப மார்டினா, உனக்காக இல்லனாலும் பூமிகாக யோசி. பிரதீப் உனக்கு ஏத்தவனா இருப்பான். நல்லவன்”

அன்று அப்பாவின் சார்ஜர் எடுக்க உள்ளே வந்தபோது. எப்படியாவது அம்மாவை அந்த பிரதீப் மனிதரைச் சந்திக்காமல் பண்ண வேண்டும் என்று தோன்றியது. ஒரு வேலை இந்த இந்து ஆன்டிச் சொன்னதுபோல அம்மாவுக்கு அவரைப் பிடித்துவிட்டால்? அதனால் கிட்சனில் இருந்த ஒரு கிளாஸ் புட்டியை வேண்டுமென்று உடைத்தேன். அது உடைந்து நொறுங்கியது. அதிலிருந்த ஒரு துண்டை வைத்து எனது உள்ளங்கையில் லேசாக கிழித்தேன். ரத்தம் சரளமாக வந்தது. வெளியே அம்மா போக வேண்டாம் என்று உள்ளே அழைத்து செல்வாள் என்று நினைத்தேன். ஆனால், அம்மா கட்டு மட்டும் போட்டுவிட்டு கிளம்பினாள். அம்மாவுக்கு என்னை விட சந்திக்காத அந்த மனிதர் முக்கியமாக போனது எனக்கு வலித்தது. கையின் காயம் கூட இப்படி வலிக்கவில்லை.

அப்பாவைக் கட்டிக்கொண்டு உள்ளே வந்தவுடன் பாட்டி காயத்தை விசாரித்து அம்மாவை எங்கே என்று கத்தினாள். நான் பாட்டியிடம் பிரதீப் மனிதரின் விவகாரத்தைச் சொன்னேன். பாட்டி கோவத்தோடு அப்பா உள்ளே வந்தவுடன் பேச தொடங்கினாள்.

“டேய், அவ உள்ள வர மாட்டாளாம்?”

“அம்மா, ஏதோ பிரென்ட் பிறந்தநாள் விழாவுக்கு போறாளாம்”

” லூசு, பிள்ளைக்கு அடிப்பட்டிருக்கு அத விட்டுட்டு அவ எவனையோ பார்க்க போறாளாம்”

“என்ன சொல்ற?”

“இதோ இவகிட்ட கேளு”

அப்பாவிடமும் நான் பிரதீப் மனிதரை பற்றிச் சொன்னேன்.

“நினைச்சேன் அம்மா, இவ புத்தி எப்பவும் ஒரு ஆண் பற்றியே சிந்திக்கும்.”

“எனக்கு இது மேல ஆரம்பத்துல இருந்தே பிடிக்கல, நீதான் எவனோ சொன்னான்னு ஆசரம்பத்தில வளர்ந்த இந்த அனாதையே கட்டிக்கிட்ட,அம்மா இல்லாம வளர்ந்தது, எப்படி இருக்கும்?”

“அம்மா, எனக்கென்னவோ இவ இப்போ வேணாம்னு தோணுது”

“அப்பா”

அம்மாவை அப்படி சொல்லாதீங்க என்று சொல்லவேண்டும் என்று எனக்கு தோன்றியது. அவர் செவி மடித்துக் கேட்க தயாராகயில்லை.

“”பெங்களூர்ல ….” என்று அவர் ஏதோ சொல்லும்போது நான் அப்பாவின் மொபைலில் விளையாட அறைகுள் சென்றேன்.

அதன்பிறகு அம்மாவும் நன்றாகத்தான் என்னுடன் நேரம் கழித்தார்கள். ஆனால், எப்போதும் இரவு என்னுடன் அரட்டை அடிக்கும் அம்மா திடீரென நிறுத்திக் கொள்வது எனக்கு ஆச்சிரியமாக இருந்தது. அம்மா போனில் மூழ்கி கிடப்பதாக எனக்கு தோன்றியது. தொலைவில் இருந்து பார்க்கும் பொழுது அம்மா யாருடனோ வாட்சப்பில் பேசிக் கொண்டிருப்பதாக எனக்கு தோன்றியது. அது யாராக இருக்க முடியும் என்று என்னால் யோசிக்க முடியவில்லை. அக்கணத்தில் நான் அந்த பிரதீப் மனிதரை மறந்தே போய்விட்டேன்.

அம்மா குளிக்க சென்ற சமயம் ஒரு நாள் நான் அம்மா பேசிக் கொண்டிருக்கும் நபர் அந்த  பிரதீப் மனிதர் என்று தெரிந்துக் கொண்டேன்.

ஒரு நாள் அம்மா சமயலறைகுள் வேலையாக இருந்த நேரம், நான் அம்மாவின் பக்கத்தில் நின்றுக் கொண்டு பேசத் தொடங்கினேன்.

” அம்மா நான்  ஒன்னு கேட்டா… பதில் சொல்வியா?”

“அப்பறமா கேளு.. வேலைல இருக்கேன்ல”

“உனக்கு இப்போலாம் என்கிட்ட பேச நேரமே இல்லைல  அம்மா”

தோசைக்  கரண்டியை கீழ் வைத்து அம்மா என்னையே பார்த்தாள். முகத்தை மாற்றி என்னருகில் வந்து எனது இரு கைகளையும் பிடித்தாள்.

“ஏன் அப்படி பேசுற?”

“இல்லமா ராத்திரிதான் நம்ம பேசிக்க முடியும். ஆனா நீ இப்போலாம் போன்லயே கிடக்குற”

“நீ அப்படி நெனைக்கிற அப்படி இருந்திருந்தா என மன்னிச்சிரு”

“அதுக்கு சொல்லல அம்மா, நீ யார்கிட்ட போன்ல பேசிட்டு இருக்க?”

“பிரதீப்னு ஒரு பிரண்ட் பூமி”

அம்மா ஏதாவது பொய் சொல்வாள் என்று எதிர் பார்த்தேன். ஆனால், உண்மையே சொன்னாள்.

“அம்மா நம்ம தாத்தா வேற கல்யாணம் பண்ணிக்கிட்ட அப்புறம் தான உன்ன ஆசிரமத்துக்கு அனுப்பினார்?”

“ஆமா பூமி, ஏன் இதுலாம் புதுசா கேட்டுட்டு இருக்க?”

“இல்லமா அதுமாரி நீயும் புது கல்யாணம் பண்ணா என்ன வெளிய அனுப்பிருவியா?”

“பூமிகா மண்டைய உடைச்சுருவேன். நான் அப்படி பண்ணுவேன்னு நீ நெனைக்கிறியா. அப்படிலாம் பேசி என் மனச நோகடிக்காத உள்ளே போ, உன் பாட்டிகிட்ட நல்ல பழக்கம் இருந்தா அத மட்டும் கத்துக்கோ..போ உள்ள”

நான் எனது அறைக்கு ஓடினேன்.

அந்த பிரதீப் மனிதரை முதன்முதலில் நேரில் எங்கள் வீட்டில்தான் பார்த்தேன். என் அம்மா வெளியே போவதாக சொன்ன அன்று பிரதீப் வீட்டிற்கு வந்தார். தாடியைப் பார்த்து பயமாக இருந்தது.  வந்தவர் நேராக எங்களது ஹால் சோபாவில் அமர்ந்துக் கொண்டார். என்னைப் பார்த்தவுடன், “ஹாய் பூமிகா, you are looking beautiful”. நான் பதிலளிக்காமல் சோபாவின் ஓரமாக அமர்ந்துக் கொண்டேன். அவரது முகம் ஏமாற்றம் அடைந்தது. அது எனக்கு பிடித்தது.

வேறெதுவும் பேச முடியாமல் அவரது கார் சாவியின் கீ சயினில் இருந்த Thor புகைப்படத்தில் கை  வைத்து, “இது யாருனு தெரியுமா” என்றார்.

நான், “Non-Living Bastard” என்றேன்.

அவர், “What…..” என்ற போது அம்மா வெளிவந்தாள்.

“வா பிரதீப், Coffee or  Tea? ” என்றாள்.

“Anything” என்றதும் அம்மா உள்ளே போனாள். நான் அவரிடம் சொல்ல நினைத்ததை வேகமாக சொல்லி உள்ளே ஓடினேன். “இதோ பாருங்க, எனக்கு அம்மானா ரொம்ப பிடிக்கும், எங்கள பிரிச்சு என்ன வெளிய அனுப்பிடாதீங்க”.

அதன்பிறகு வந்த இந்து ஆன்டியும் பிரதீப் மனிதரும் பேசிக் கொண்டார்கள். நான் உள்ளே இருந்தபடி அதை கேட்டுக் கொண்டிருந்தேன். அவர்கள் பேசியதில் முக்கியமாக என் அப்பாவும் அம்மாவும் இருக்கின்ற புகைப்படம் ஒன்றைப் பார்த்துவிட்டு, அவர் “அதுதான் மார்டினா அஸ்புன்ட்?” என்றார். இந்து ஆன்டி ஆமாமென்றதும். அவர்  “அவருக்கு முன் மார்டினா ‘Trophy Wife’  ஆக இருக்கிறாள்” என்றார். எனக்கு அவர் சொன்ன வார்த்தையிற்கு அர்த்தம் புரியவில்லை. ஆனால், அவர்கள் சிரித்தார்கள். அம்மா வந்தவுடன் அம்மாவும் அவரும் கிளம்பினார்கள். அம்மா என் கன்னத்தில் முத்தமிட்டு கிளம்பினாள்.

இந்து ஆன்டியை உள்ளே அனுப்ப நான் பிரட் சாண்டவிச் கேட்டு, போனும் விளையாட கேட்டேன். ஆன்டி தந்து உள்ளே சென்றவுடன், நான் “Trophy Wife” கூகிள் செய்து கோவமடைந்தேன். அப்பாவுடன் அதை உடனே போனில் சொன்னேன். அம்மாவும் அந்த மனிதரும் வெளியே சென்றதையும் சொன்னேன். அப்பா வீட்டிற்கு வருவதாக போனைக் கட் செய்தார்.

வீட்டிற்கு வந்தவுடன் இந்து ஆன்டியிடம், “நீ அவளுக்கு பிரன்ட்டா இல்ல மாமாவா?” என்று கத்தினார்.

இந்து ஆன்டி, “Mind your language” என்றாள்.

“உனக்கு என்னடி மரியாத?, அவ சொன்னான்னு நீ பொண்ண பார்த்துக்க வந்திருக்க வெக்கமா இல்ல உனக்கு?

இந்த போட்டோவ பாரு. யாராவது இத பார்த்து “என்ன ‘confirmed'” கேட்டா நான் என்னடி சொல்வேன்?”

அது என்ன புகைப்படம் என்று எனக்கு தெரியவில்லை. அதன் பிறகு, அப்பா என்னை அழைத்துச் சென்றார்.

நாங்கள் இருவரும் கடைக்கு வந்தபோது, அம்மாவும் அந்த பிரதீப் மனிதரும் வெளியே வந்துக் கொண்டிருந்தார்கள். அம்மா என்னைப் பார்த்து முறைத்தாள். அப்பா, இந்தளவு கோவம் வைத்தால் வழக்கம்போல அம்மாவை அடிப்பார் என்று நான் பயந்தேன். இரண்டு முறை அவ்வாறு நிகழ்ந்துள்ளது. ஆனால், அப்பா அந்த பிரதீப் மனிதரை அடித்தார். வெளியில் இருந்த அத்தனை மனிதர்களும் பார்த்தார்கள். அம்மா அப்பாவை திட்டினாள். அப்பா, “பூமிய நான் கூட்டிட்டு போறேன், நீ நல்ல இவன் கூட ஊர் சுத்திட்டு வா” என்று என்னை அவரது வண்டியில் ஏற்றினார். “இப்போ உனக்கு சந்தோசமா பூமிகா” என்று அம்மா சொன்னது நான் வீடு செல்லும்வரை கேட்டுக் கொண்டே இருப்பதுபோல உணர்ந்தேன். பெரும் தவறு செய்துவிட்டதாக எனக்கு தோன்றியது.

வீட்டுக்கு வந்தவுடன் அப்பா பாட்டியிடம் அம்மாவைப் பற்றி பேசத் தொடங்கினார். நான் பாட்டியின் போனிலிருந்து அம்மாவுக்கு அழைத்தேன். அம்மா எடுக்கவில்லை. பிறகு, அம்மாவுக்கு தகவல் அனுப்பினேன்.

Amma sorry ma pls take my phone this is Bhoomika

மீண்டும் அழைத்தபோது அம்மா போனை எடுத்தாள். அம்மா, “நீ இன்னும் அவங்கள சரியா புரிஞ்சிக்கல பூமி, இனிமே உங்க அப்பா என்னப் பண்ண போறாரார்னு தெரியல, அவர்கிட்ட சொல்லி இங்க வந்துரு” என்று அம்மா சொன்னவுடன், நான் பயந்தேன்.

பயத்தோடு அப்பாவிடமும் வீட்டுக்கு போகவேண்டுமென  கூறினேன். அப்பா,                       “மரியாதையா உள்ளே போ” என்று கத்தினார். நான், “இல்லப்பா, நான் போகணும், அம்மாவ பார்க்கணும் போல இருக்கு” என்றேன். “ஒரு வாட்டி சொன்னா புரியாதா? உள்ளே போ” என்று என்னைத் தள்ளிவிட்டார்.

நான் பயந்தேன். பயத்தில் அழுகை வந்தது. உள்ளே சென்றேன். அமைதியாக அறைக் கட்டுலில் படுத்தேன். பாட்டி  உள்ளே வந்தாள். “வீட்டுக்கு போணுமா பூமிகா?”

“ஆமா பாட்டி ப்ளீஸ் அப்பாட்ட சொல்லுங்க, இல்லனா அம்மாகிட்டயாவது சொல்லுங்க”

“எனக்கு அந்த பிரதீப் இருக்கிற அட்ரஸ் தா, நான் அப்பாகிட்ட சொல்றேன்”

“வீட்டு அட்ரஸ்லாம் தெரியாது பாட்டி, பேஸ்புக்ல அவரோட ஆபீஸ் அட்ரஸ்தான் பார்த்திருக்கேன்”

பாட்டி அதை என்னிடம் அப்பாவின் போன் மூலம் பெற்றுக் கொண்டு, வெளியே போனாள். ஆனால், என்னை அனுப்ப பாட்டியும் எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. நான் அந்த அறையிலே கிடந்தேன். கொஞ்ச நேரம் கழித்து அப்பா உள்ளே வருவதுபோல இருந்தது. நான் தூங்குவது போல நடித்தேன். அப்பா பாட்டியிடம் பேசியதை நான் ரகசியமாக கேட்டேன்.

“பெங்களூரு போயிறலாம் அம்மா, பூமிகா கூட்டிட்டு நாளைக்கு காலைல கிளம்பிருவோம். மார்டினா பூமிகா இல்லாம இருந்தா நம்ம பக்கம் வந்துருவா வேலையும் விட்டுருவா. திமிரு குறைஞ்சிரும் ” என்றார்.

அன்று இரவு எனக்கு உணவு கொடுக்க கதவை திறந்த நேரம் நான் வீட்டை விட்டு ஓடினேன். பெயரைச்  சொன்னபடியே  அப்பாவும் பின் தொடர்ந்தார். எப்படியோ பக்கத்து தெருவில் இருந்த ஒரு ஆட்டோவிற்கு பின்  நான் ஒழிந்துக் கொண்டேன். அப்பா நான் இல்லாத வேறொரு திசையில் என்னைத் தேடி ஓடினார். அத்தெருவில் யாரும் இருந்ததாக எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒரு பையன் சைக்கிளில் வந்துக் கொண்டிருந்தான். அவனிடமிருந்த போனை வேகமாக பெற்று அம்மாவுக்கு டயல் செய்தேன். அம்மாவின் போன் ஸ்விட்ச் ஆப் நிலையில் இருப்பதாக செய்திவந்தது. நான் என்னச் செய்வதென்று தெரியாமல் அழுதேன்.

” அழுவாத நீ எங்க போகணும்னு சொல்லு, நம்ம சைக்கிளில் போயிரலாம்” என்றான்

“இல்ல ரொம்ப தூரம் போகணும்” என்று அழுதேன்.

“சரி இரு” என்று யாருக்கோ டயல் செய்தான். “அப்பா வந்துருவாரு, உங்க வீட்ல விட்டுருவாரு, நீ பயப்புடாத” என்றான்.

அவனின் அப்பா வரும் வரை, நாங்கள் ஆட்டோவின் பின்னாலே ஒழிந்துக் கொண்டோம்.

அங்கு வந்தவர் பிரதீப் மனிதர். நான் யோசித்தபடியே காரில் ஏறினேன். நான் அந்த பையனிடம் சொல்லியதை அவன் பிரதீப்பிடம் கூறினான். நான் காரில் ஏறியபோது.

“அப்பா பத்திரமா கூட்டு போங்க, நான் சைக்கிள்ல டியூஷன் வந்தேன், போய்கிறேன்” என்றான். கார் கிளம்பும்போது அவனுக்கு நன்றி கூறி அவன் பெயரைக்  கேட்டு தெரிந்துக்  கொண்டேன்.

அடுத்த நாள் அம்மா என்னைப் பள்ளிக் கூடத்தில் இருந்து கூட்டிகிட்டு வரும்போது பிரதீப் வீட்டில் இருந்தார். அரை நாள் லீவ் போட்டதாக சொன்னார். டி.வி யில் Harry Styles பாடலான Watermelon Sugar பாடல் ஓடிக் கொண்டிருந்தது.

“யே மார்டினா, பூமிகா வாங்க ஆடலாம்”

அம்மாவும் பிரதீப் மனிதருடன் ஆடத் தொடங்கினாள். இருவரும் ஆடிக் கொண்டிருந்த போது நான் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது என் அப்பா  வீட்டிற்கு வந்தார். எனக்கு அவர்மேல் கோவம் வந்தது. அவர் வருவதற்குள் நான், “Family Time” என்று கதவைச் சாத்தினேன். அம்மாவும் பிரதீப் மனிதரும்  என்னைப் பார்த்து சிரித்தார்கள். நானும் அவர்களுடன் ஆடத் தொடங்கினேன்.

Watermelon Sugar high

Watermelon Sugar high

Watermelon Sugar high

 

 

1 COMMENT

  1. தமிழ் மண்ணுக்கு வெளியே தமிழர்கள் எப்படி மொழியை பண்புகளை இழந்து கானல் தேடித் திரிகிறார்கள். தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு மேம்படுத்திக்காமல் சிதைந்து போகிறார்கள் என்பதை நகர்வு சொல்கிறது. வாழ்வின் அர்த்தம் புரியாத பிறவிகளுக்கு இக்கதை பாடமுணர்த்தலாம். வாழ்த்துகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.