நகுலனின் கவிமொழி

புதுக்கவிதையே நவீன கவிதையின் வடிவமென உருவாகி நிலைபெற்ற அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கவிதை எழுதிக்கொண்டிருந்த பிரமிள், சி.மணி, பசுவய்யா, வைத்தீஸ்வரன் போன்ற கவிஞர்களின் வரிசையில் எழுதிக்கொண்டிருந்தவர் நகுலன். அந்தப் பிரதான கவிஞர்கள் கட்டமைத்த உலகங்களிலிருந்து விலகி வேறொரு உலகை வேறொரு மொழியில் எழுத அவர் முயற்சி செய்தார். வேறொன்றாகக் காட்சியளிக்கும் இந்த அம்சமே மற்ற படைப்பாளிகளிடமிருந்து அவரைத் தனித்துவம் நிறைந்தவராக நிலைநிறுத்தியது. நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் மனம் மிக இயல்பாக உருவாக்கும் படிமங்களும் சொற்சேர்க்கைகளும் தமிழ்க்கவிதை உலகத்தின் அடையாளங்களாக திரண்டுவந்த வேளையில் வாழ்க்கையைப்பற்றிய ஒரு விமர்சனக்குறிப்பைப் போலவும் கசப்பையோ சலிப்பையோ முன்வைக்கும் ஒருசில கையறுநிலைச் சொற்களைப் போலவும் சொல்விளையாட்டு போலவும் தோற்றமளிக்கும் இன்னொரு வகையான அடையாளத்தை உருவாக்கியவர் நகுலன்.

’இருப்பதற்கென்றுதான் வருகிறோம் இல்லாமல் போகிறோம்’ என்னும் வரியை ஒருகணம் நினைத்துப் பார்த்தால், இந்த உண்மையை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். இவ்வரியில் இருப்பு என்னும் சொல்லை முன்வைத்து பகிர்ந்துகொள்ளும் ஒரு விமர்சனக்குறிப்பைத் தவிர வேறெதுவும் இல்லை. காலம்காலமாக இருப்பு என்னும் சொல்லுக்கே உரித்தானதாக இருக்கும் ஒரு தத்துவச்சாயல் இவ்வரி பூண்டிருக்கும் அழகான ஆபரணம். நகுலனின் வரியை வாசித்துவிட்டு அசைபோடும்போது, உண்மையில் நாம் அந்தத் தத்துவக்குறிப்பைத்தான் அசைபோடுகிறோம்.

உயிருடன் இருப்பது, புகழுடன் இருப்பது, செல்வத்துடன் இருப்பது, உறவுகளுடன் இருப்பது, நட்பு சூழ இருப்பது, அச்சத்தைத் துறந்து இருப்பது, காம மோக குரோதங்களைத் துறந்து இருப்பது என வகைவகையான இருத்தல்கள் இந்த உலகை நிறைத்திருக்கின்றன. இப்படி ஏதேனும் ஒன்றாக இருக்க விழையும் முயற்சியோடுதான் நம் வாழ்க்கை தொடங்குகிறது. ஆனால் எல்லா முயற்சிகளும் வெற்றியில் முடிவதில்லை. நம் முயற்சியை முன்னெடுத்துச் செல்வதற்குத் தோதான சூழல்கள் அமைவதில்லை. எதார்த்த உண்மைகள் நம் உறுதியைக் குலைத்துவிடுகின்றன. எல்லா அம்புகளும் இலக்கைத் தொடாமல் தரையில் விழுந்துவிடுகின்றன. நம் இருப்பே பொருளற்றுப் போய்விடுகிறது. இருப்புக்கும் இன்மைக்கும் ஒரு வேறுபாடும் இல்லை.

சடுகுடு விளையாட்டில் எதிர்த்தரப்பின் களத்தில் இறங்கி, ஒருவரையும் எட்டித் தொட்டு வெற்றியீட்ட வழியில்லாமல் வெறும் கையை வீசிக்கொண்டு திரும்பிவரும் விளையாட்டுவீரனைப் போல தொடங்கிய இடத்துக்கே திரும்பிவிடுகிறோம். சுருக்கமாக, விரும்பியது நடக்கவில்லை. சூழலோ நம்மை உதட்டைப் பிதுக்கி நாக்கு சப்புக்கொட்டி நிற்கவைத்துவிடுகிறது. சட்டென கவியும் வெறுமை. மெலிதான கசப்பு. நிராசை. சலிப்பு. அதன் விளிம்பில் இருந்து உதிரும் சொல்லின் தோற்றத்தில் நிற்கிறது நகுலனின் வரி. காலம்காலமாக இவ்வுலகில் தோல்வியைப்பற்றியும் கசப்பைப்பற்றியும் புழக்கத்தில் இருக்கும் ஒரு தத்துவப்பார்வையுடன் தன் வரியை அமைத்துக்கொண்டதுதான் நகுலனின் கவித்துவம். அதையே அவருடைய கவித்துவம் என்றும் சொல்லலாம்.

இந்தச் சொல்விளையாட்டை மிக இயல்பாகவே தமிழ்மரபிலிருந்து பெற்றுக்கொண்டார் நகுலன். ஆனால் தன் தத்துவப் பார்வையை  அவர் இருத்தலியல் வழியாக வகுத்துக்கொண்டார். அப்பார்வையை முழுமையாக இருத்தலியல் என்று சொல்லவும் முடியாது. எல்லாவற்றையும் மாயையாகப் பார்க்கும் பார்வையும் அதில் இருக்கிறது. எல்லாவற்றையும் இயற்கையின் ஆடலாகப் பார்க்கும் பார்வையும் அதில் இருக்கிறது. இருத்தலியல் பார்வைக்கு இசைவாக உள்ள ஒரு மரபுப்பார்வை என்று வேண்டுமானால் சொல்லலாம். இப்படிப்பட்ட  இணைப்புகளே, மற்ற தமிழ்க்கவிஞர்கள் ஒருவரும் செல்லாத திசையில் நகுலனைச் செலுத்திவைத்தன.

அந்தகக்கவி வீர்ராகவ முதலியாரின் ஒரு பாடலை நினைத்துக்கொள்ளலாம்.

     இம்பர்வான் எல்லை இராமனையே பாடி

     என்கொணர்ந்தாய் பாணாநீ என்றாள் பாணி

     வம்பதாம் களபமென்றேன், பூசும் என்றாள்

     மாதங்கம் என்றேன். யாம் வாழ்ந்தேம் என்றாள்

     பம்புசேர் வேழமென்றேன், தின்னும் என்றாள்

     பகடென்றேன், உழுமென்றாள் பழனந்தன்னை

     கம்பமா என்றேன் நற்களியாம் என்றாள் 

     கைம்மா என்றேன் சும்மா கலங்கினாளே

 

அரசனைப் புகழ்ந்து பாடி ஒரு பெரிய யானையையே பரிசைப் பெற்றுக்கொண்டு வீட்டுக்குத் திரும்புகிறான் கணவன். வீட்டில் காத்திருக்கும் மனைவி என்ன பரிசு கிடைத்தது என்று கேட்கிறாள். அவன் தனக்கு யானை கிடைத்தது என்று நேரிடையாகச் சொல்லாமல் சுற்றி வளைத்து, களபம், மாதங்கம், வேழம், பகடு, கம்பமா, கைம்மா என வேறுவேறு மாற்றுச் சொற்களைப் பயன்படுத்தி மறைமுகமாகச் சொல்கிறான். ஆனால் அந்த மறைபொருளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யாமல் அச்சொற்களுக்குரிய நேர்ப்பொருளில் புரிந்துகொண்டு உற்சாகமில்லாத குரலில் தன் போக்கில் கணவனுக்கு ஏதோ  பதில் சொல்கிறாள் அவன் மனைவி. இறுதியில் பரிசாக எதுவும் கிடைக்கவில்லை போலுமென எண்ணி கலக்கமடைகிறாள்.

தமிழ்க்கவிதையுலகம் இன்றளவும் இந்தப் பாடலை நினைவில் வைத்திருப்பதற்கு ஒரே காரணம் இதில் அடங்கியிருக்கும் சொல்விளையாட்டு மட்டுமே. வீரராகவ முதலியாருக்கு முந்தையை காலகட்டத்துக் கவிஞர்களில் பலர் தம் கவிதைகளில் யானையை வெவ்வேறு படிமங்களாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள். காதல், வஞ்சினம், இளமை, தாய்மை என பல உணர்வுகளோடு இணைத்து யானையின் படிமம் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. ’பிடிபசி களைஇய பெருங்கை வேழம்’ காதலியை நினைவூட்டும் வகையில் இருக்குமென ஒரு தோழி குறுந்தொகைப் பாடலொன்றில் உறுதியாகக் கூறுகிறாள். யானையை பல்வேறு படிமங்களாக வகுத்துவைத்திருக்கும் ஒரு மரபில் வீரராகவ முதலியார் யானை என்பதை ஒரு சொல்லாக மட்டும் சுருக்கி சொல்விளையாட்டை ஆடுகிறார். அவர் யானையை நேரில் பார்க்க முடியாதவர் என்பதையும் ஒரு சொல்லாக மட்டுமே உணரக்கூடியவர் என்பதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இயல்பாகவே யானையின் தோற்றத்தின் மீது கவனம் குவிவதற்கு மாறாக யானையைப் பற்றிய சொற்களை ஒட்டி அவர்  கவனம் திரும்பிவிடுகிறது. எவ்விதமான பெரிய மன எழுச்சிக்கும் வழிவகுக்கவில்லை என்றபோதும் பாட்டில் நிகழும் எளிய சொல்விளையாட்டே வீரராகவமுதலியாரின் பாடலை இன்றளவும் நிலையாக வைத்திருக்கிறது.

மரபிலிருக்கும் இந்தச் சொல்விளையாட்டையே நகுலன் தன் கவிதைவழியாக அமைத்துக்கொண்டார். இந்த நுட்பத்தை அவர் திறமையோடு கையாண்ட தருணங்களிலெல்லாம் அவரிடமிருந்து சிறந்த கவிதைகள் கிடைத்தன. கவனமில்லாமல் கையாண்ட தருணங்களில் கவிதைகள் சரிந்தன. நகுலனோ வெற்றிதோல்வியைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் தொடர்ந்து தன் போக்கில் எழுதிக்கொண்டே இருந்தார். அவரைச் செலுத்திய விசைக்கு மட்டுமே அவர் ஆட்பட்டிருந்தார்.

 

ராமச்சந்திரனா
            என்று கேட்டேன்
            ராமச்சந்திரன்
            என்றார்
            எந்த ராமச்சந்திரன்
            என்று நான் கேட்கவில்லை
            அவர் சொல்லவுமில்லை”

 

இது நகுலனின் புகழ்பெற்ற கவிதை. ஒரு சாத்தியப்பாட்டை கவிதை தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்வதுதான் இங்கு கவிதையின் அழகு. ஒரே பெயரில் பலர் ஒருவருக்குத் தெரிந்திருக்கலாம் என்னும் சாத்தியப்பாடும், பெயரோடு இணைந்து கவிஞர் ராமச்சந்திரன், டாக்டர் ராமச்சந்திரன், எழுத்தாளர் ராமச்சந்திரன், சமையல்காரர் ராமச்சந்திரன் என வெவ்வேறு அடையாளங்களுடன் ஒரு பெயர் இருக்கலாம் என்னும் சாத்தியப்பாடும் இணைந்து அந்தச் சொல்விளையாட்டுக்கு வழிவகுக்கிறது. அது உருவாக்கும் மெலிதான புன்னகையே  கவிதையின் வெற்றி. கவனிக்கவேண்டிய இன்னொரு அம்சமும் உண்டு. இந்த மண்ணில்தான் ராமச்சந்திரன் கடவுளின் பெயராகவும் இருக்கிறது. மனிதனின் பெயராகவும் இருக்கிறது. அப்படியென்றால் வாசலில் வந்து நின்றவர் மனிதனா, கடவுளா என்பது பெரிய கேள்வி. ஒரு சின்ன சொல்விளையாட்டில் புன்னகைக்கவைக்கும் பல கேள்விகளை உருவாக்கிக்கொண்டே இருக்கலாம்.

 

யாருமில்லா பிரதேசத்தில்

     என்ன நடந்துகொண்டிருக்கிறது?

     எல்லாம்.

    

இதுவும் நகுலனின் முக்கியமான கவிதைகளில் ஒன்று. இங்கும் ஒரு மொழிவிளையாட்டே இவ்வரிகளை கவிதையாக மாற்றுகிறது. என்ன என்னும் கேள்விக்கு எல்லாம் என்னும் பதிலில் வேகமாக பறந்துவந்து ஒரு மலர்மீது உட்காரும் ஒரு வண்ணத்துப்பூச்சியென சட்டென ஒரு தத்துவச்சாயல் படிந்துவிடுகிறது. ஒரு பிரதேசம் என்பது எப்போதும் மனிதர்கள் மட்டுமே நிறைந்திருக்கவேண்டுமா என்ன? அது மனிதர்களுக்கு மட்டுமே உரியதா என்ன? மனிதர்களின் தோற்றத்துக்கு முன்பும் இங்கு பிரதேசம் இருந்ததே? அப்போது இந்தப் பிரதேசத்தில் யார் இருந்தார்கள், அல்லது என்ன இருந்தது? இதற்கு முன்பு என்னென்ன நிகழ்ந்ததோ, அவையே இதற்குப் பிறகும் நிகழும். மரம், செடி, கொடி, பாறை, மணல் குன்று, குளங்களோடு மனிதர்களும் அடங்குவர். மனிதர்களுக்குத்தான் பிரதேசம் தேவையே தவிர, பிரதேசத்துக்கு மனிதர்கள் இருந்தே தீரவேண்டும் என்னும் அவசியமில்லை. அது இயங்கிக்கொண்டே இருக்கும் பேருண்மை. நினைக்க நினைக்க, விளையாட்டாக இணைந்துவிட்ட சொற்களில் தத்துவத்தின் எடை விசித்திரமான வகையில் பெருகிக்கொண்டே போகிறது.

எனக்கு

     யாருமில்லை

     நான்

     கூட!

இந்தக் கவிதையிலும் சுவாரசியமான ஒரு சொல்விளையாட்டைப் பார்க்கலாம். எனக்கு என்னும் சொல்லுக்கும் நான் என்னும் சொல்லுக்கும் இடையில் நிகழும் விளையாட்டு. நான் கூட என்னும் சொற்களைப் படிக்கும்போதே தானாக உருவாகும் புன்னகையே இக்கவிதையின் வெற்றி. எனக்கு யாருமில்லை, நான் தனியன் என்று இக்கவிதையை வாசிப்பதோ, புரிந்துகொள்வதோ, கவிதை விரிந்தெழும் சாத்தியப்பாடுகளைச் சுருக்கிவிடும். இங்கே நான் என்பதை பெளதிக இருப்பைக் குறிப்பதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. மாறாக, அது என் எண்ணங்கள், என் செயல்பாடுகள், என் வெற்றிகள், என் தோல்விகள், என் தகுதிகள், என் ஆற்றல், என் கல்வி, என் செல்வம் என நான் ஈட்டிய அனைத்தையும் சுட்டும் ஒரு குறியீட்டுச்சொல். இப்படி யோசிக்கும்போதே, நாமே அச்சொற்களுக்கு ஒரு தத்துவச்சாயலைக் கொடுத்துவிடுகிறோம். என்னை என் குடும்பம் கைவிடலாம், ஊர் கைவிடலாம், உற்றார் உறவினர் கைவிடலாம், உலகம் கூட கைவிடலாம்.  தனித்து விடப்படும் அக்கணத்தில் கூட என்னால் வாழ்ந்துவிட முடியும். தனிமையை ஒரு பாரமாகவோ தொல்லையாகவோ நினைக்கவேண்டிய தேவையே இல்லை. நான் ஈட்டிய அறிவும் செல்வமும் கலைகளும் வெற்றிகளும் ஆற்றலும் என்னோடு எப்போதும் இருக்கும். அந்தத் துணைக்கு நிகராகச் சொல்ல இவ்வுலகில் எதுவுமில்லை. ஆனால், நான் ஈட்டியவற்றால் கைவிடப்படுவேனெனில், அதுவே மிகப்பெரிய கொடுமை. அதுவே கடுமையான தனிமை. நான் யாருமில்லை என்னும் நகுலனின் சொற்களோடு இந்த விவரணையையும் இணைத்துப் புரிந்துகொள்ளும்போது, அது நம்மை வெகுதொலைவுக்கு அழைத்துச் செல்வதை உணரலாம்.

வழக்கம்போல்

என் அறையில்

நான் என்னுடன்

இருந்தேன்

கதவு தட்டுகிற மாதிரி

கேட்டது

”யார்”

என்று கேட்டேன்

”நான் தான்

சுசீலா

கதவைத் திற” என்றாள்.

எந்த சமயத்தில்

எந்தக் கதவு

திறக்கும் என்று

யார்தான்

சொல்ல முடியும்?

ஒரு காட்சியைப்போல நகுலன் இக்கவிதையைத் தொடங்கினாலும் அவர் அக்காட்சியை முழுமையாகத் தீட்டாமல் பாதியிலேயே திகைத்து நின்றுவிடுகிறார். ’நான்தான்’ என்று கதவுக்கு மறுபக்கம் நின்றிருக்கும் சுசிலாவின் குரல் கேட்ட கணமே அவருடைய கவனம் சிதறிவிடுகிறது. ஒருவித கிளர்ச்சியில் அல்லது மகிழ்ச்சியில் மனம் வானை நோக்கித் தாவும் பறவையென தாவியோடுகிறது. ’நான்தான்’ என்னும் பதிலைக் கேட்ட ஆனந்தத்தில், அத்தருணத்தையே அவர் தத்துவமயமானதாக  மாற்றி, அந்த இன்பத்தில் திளைக்கத் தொடங்கிவிடுகிறார். ’எந்தக் கதவு எந்தச் சமயத்தில் திறக்கும் என யாரால் சொல்லமுடியும்?’ என்று அவர் தனக்குக் கிடைத்த நற்பேற்றை நினைத்து நினைத்து மகிழ்ச்சியடைகிறார். கதவைத் திறந்து, வெளியே காத்திருப்பவரை உள்ளே அழைத்துக்கொள்வதைவிட, சுசீலா சொன்ன பதிலை ஒரு மந்திரச்சொல்லைப்போல தனக்குள் அசைபோடுவதையே அவர் மனம் விரும்புகிறது. வழக்கமான சொல்விளையாட்டில் திளைக்கும் அவர் மனம் பெளதிகக் கதவிலிருந்து அதிர்ஷ்டக்கதவுக்குத் தாவி, தத்துவத்தில் மூழ்கத் தொடங்குகிறது.

ஆனால் இந்த சொல்விளையாட்டுகளால் எல்லாத் தருணங்களிலும் எதிர்பார்த்த விளைவுகளை உருவாக்க முடிவதில்லை. சிற்சில தருணங்களில் எவ்விதமான எண்ண அலைகளையும் எழுப்பாமல் உறைந்து நின்றுவிடுகிறது.

வந்தவன் கேட்டான்       

            “என்னைத் தெரியுமா?”
            “தெரியவில்லையே”
            என்றேன்.
            “உன்னைத் தெரியுமா”?
            என்று கேட்டான்.
            “தெரியவில்லையே”
            என்றேன்.
            “பின் என்னதான் தெரியும்”
            என்றான்.
            “உன்னையும் என்னையும் தவிர
            வேறு எல்லாம் தெரியும்”
            என்றேன்!

தெரியும், தெரியாது சொல்விளையாட்டு எவ்விதமான எண்ண அலைகளையும் எழுப்பவில்லை. தரையில் பல முறை ஓங்கி ஓங்கி அடித்தும்கூட  மேல்நோக்கி எழாமல் தரையில் உருண்டோடும் பந்துபோல சொற்கள் தயங்கி நின்றுவிடுகின்றன.

எந்தப் புத்தகத்தை

     படித்தாலும்

     நமக்குள் இருப்பதுதான்

     புஸ்தகத்தில்

     எழுதியிருக்கிறது

     அதை மீறி ஒன்றுமில்லை!

என்ற கவிதையில் நிகழும் சொல்விளையாட்டு எவ்விதமான ஈர்ப்பையும் அளிக்கவில்லை.

வீட்டுக்கதவையும் அதிர்ஷ்டக்கதவையும் இணைத்து ஒரு சித்திரத்தை எழுப்பியதுபோலவே நகுலன் தீட்டிய இன்னொரு சொற்சித்திரம் அம்மாவுக்கு எண்பது வயதாகிவிட்டது. இதை நகுலனின் மிக முக்கியமான கவிதை என்று சொல்லலாம்.

அம்மாவுக்கு
எண்பது வயதாகிவிட்டது
கண் சரியாகத் தெரிவதில்லை
ஆனால் அவன் சென்றால்
இன்னும் அருகில் வந்து
உட்காரக் கூப்பிடுகிறாள்
அருகில் சென்று உட்காருகிறான்
அவன் முகத்தைக் கையை
கழுத்தைத் தடவித்
தடவி அவன் உருக்கண்டு
உவகையுறுகிறாள்
மறுபடியும் அந்தக் குரல்
ஒலிக்கிறது
”நண்பா, அவள்
எந்தச் சுவரில்
எந்தச் சித்திரத்தைத்
தேடுகிறாள்?”

முதுமையின் காரணமாக எதையும் கண்ணால் நேருக்கு நேர் பார்த்து அறியமுடியாத அம்மா தன் மகனை அருகில் அழைத்து தொட்டும் வருடியும் உணரும் அற்புதமான காட்சியை ஒரு சொல்லோவியமாக தீட்டிவைத்திருக்கிறார் நகுலன். முகத்தையும் கழுத்தையும் கையையும் தொட்டுத் தடவி மகனை உணரும் தாயின் நடவடிக்கைகள் படிப்பவரை நெகிழவைக்கின்றன. பெற்றெடுத்து, பாலூட்டி வளர்த்து தன் மடியையும் நெஞ்சையும் நிறைத்துக்கொண்டவள் அந்த அன்னை. தன் கண் முன்னாலேயே அக்குழந்தை வளர்ந்து பெரிதாவதைப் பார்த்து பூரித்தவள். குழந்தைமுகம். பால்யமுகம். கைவீசி ஆடித் திரிந்த சிறுவயது முகம். புத்தகப்பையோடு பள்ளிக்கு ஓடிய முகம். வாலிப முகம். எல்லாக் கட்டங்களிலும் எல்லா முகங்களையும் பார்த்துப் பார்த்து பூரித்தவள் அவள். எண்பது வயதையொட்டிய கட்டத்தில், பார்வைக்குறையின் காரணமாக அருகில் அழைத்து, தொட்டும் தடவியும் அவன் இருப்பை உணர்ந்து நிறைவெய்துகிறாள். பார்க்க முடியாத அன்றைய முகத்தைத் தொட்டுணர்வதன் வழியாக காலமெல்லாம் பார்த்துப் பார்த்து களித்த பலவேறு முகங்களை இணைத்துக்கொள்கிறாள்.  உணர்ச்சிமயமான அக்காட்சியுடன் ‘எந்தச் சுவரில் எந்தச் சித்திரத்தைத் தேடுகிறாள்’ என்னும் குரலை ஒலிக்கச் செய்து, தத்துவச்சாயலைப் படரவிட முயற்சி செய்கிறார் நகுலன். எல்லாச் சித்திரங்களிலும் இருப்பது ஒருவரே. ஆனால் அவளுக்குத் தேவையான சித்திரம் எது? எந்தப் பருவத்தின் உருவம் அவளுக்குத் தேவையாக இருக்கும்?

டில்லிக்கு ராஜாவானாலும் தல்லிக்குப் பிள்ளைதானே என்னும் பழமொழியை நினைத்துக்கொள்ள இது பொருத்தமான தருணம்.  ’மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு’ என்னும் திருக்குறளையும் நினைத்துக்கொள்ளலாம். தீண்டும் இன்பத்தின் மகத்துவத்தை தாயன்றி வேறு ஒருவராலும் அறியமுடியாது. தனித்துவமான அந்த இன்பத்தின் ஒரு துணுக்கை நகுலனின் கவிதை முன்வைக்கிறது. வழக்கமான தத்துவச்சாயலைக் காட்டும் இறுதி வரிகளுக்குப் பதிலாக எந்தச் சுவர், எந்தச் சித்திரம் என்றொரு புதிர்விளையாட்டின் பக்கம் திசைதிருப்பி விடுகிறார். அவள் தேடியடைவது எந்தச் சித்திரமாக இருந்தாலும், அந்தத் தேடல் சித்திரத்துக்காக மட்டுமல்ல, தீண்டும் இன்பத்துக்காகவும் என்னும் விடை ஒருவித நிறைவை அளிக்கிறது.

இந்தச் சொல்விளையாட்டும் புதிர்விளையாட்டும் நகுலனின் கவிதைகளில் மிக இயல்பாக தன் போக்கில் நிகழ்கின்றன என்பதைக் கவனிக்கவேண்டும். எவ்விதமான முயற்சியும் இல்லாமல் அது தானாகவே உருவாகிறது என்பதும்  தானாகவே அந்த இடத்துக்கு அந்த வரி வந்து சேர்கிறது என்பதும் மிகமுக்கியமானது. தன்னிச்சையான அந்த இணைப்பே நகுலனின் கவிமொழி. சில தருணங்களில் மட்டும் அந்த இணைப்பு ஏராளமான எண்ண அலைகளை ஊக்கம்கொண்டு கிளர்ந்தெழச் செய்கின்றன. சில தருணங்களில் தன் போக்கில் அமைதியாகக் கடந்து போகின்றன.

 

 

Previous articleபிரசாரம்
Next articleகடிதத்தில் நாவல்
பாவண்ணன்
பாவண்ணன் குறிப்பிடத்தக்க மூத்த தமிழ் எழுத்தாளர். ரசனையை அடிப்படையாகக்கொண்டு இவர் எழுதிய பல இலக்கியக் கட்டுரைகள் அழகியல் விமர்சகர்களின் வரிசையில் வைத்துக் குறிப்பிடப்பட வேண்டியவர். சிறுகதை, கவிதை, நாவல், குழந்தைப்பாடல்கள், கட்டுரைகள், திரைப்பட விமர்சனங்கள் எனப் பல தளங்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக, கன்னட மொழியிலிருந்து பல முக்கியமான ஆளுமைகளைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் சிறுகதை, நாவல், கவிதை, சுயசரிதைகள் என ஏராளமான படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.