பக்குவத்தின் கதை

ந்து மணித்தியாலங்களைக் கடந்தும் இரண்டரைப் பனைமர உயரமுள்ள அந்த ஆலமரத்தின் உச்சியிலிருந்து வடக்கு நோக்கி நெற்றியில் கையை வைத்து ஒளியை மட்டுப்படுத்தி கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் சந்திரலிங்கம். அவரது மனைவி தலையில் பெரிய கட்டுடன் வைத்தியசாலையிலிருந்து நேராக ஆலமரத்தடிக்கு வந்திருந்தார்.

சந்திரலிங்கம் சரியாக நான்கு மணித்தியாலங்களுக்கு முன் ஆதிகோவிலடிக் கடற்கரைக்கு சென்று “தமிழ்நாட்டுக்கு போகவேண்டும், யாராவது ஓட்டியை பிடிச்சு விடு, எவ்வளவு காசு என்றாலும் கொடுக்கலாம்”, என சரசுவதி ஆச்சியை ஆக்கினை செய்தார். அவர் சரசுவதி ஆச்சியிடம் வாடிக்கையாக மீன் வாங்குபவர். பதிலாக தன் தோட்டத்தில் விளைகின்ற மரக்கறிகளைப் பார்த்துப் பாராமல் கொடுப்பார்.

சந்திரலிங்கத்தின் ஆக்கினை தாங்காமல் சரசுவதி ஆச்சியின் கணவர், தான் குடிக்கவென வைத்திருந்த கசிப்பை குடிக்கக் கொடுத்து நிறைவெறியில் சாரம் கழண்டு விழ விழ கூட்டிவந்து ஆலமர மடத்தில் படுக்கவைத்துவிட்டு அவரது வீட்டுக்கு போய் சொன்னார். வீடு பாதி வைத்தியசாலை பாதி என்று திரிந்த சந்திரலிங்கத்தின் மகள், தகப்பனை அழைத்துச் செல்லவென ஆலமர மடத்தடிக்கு வந்தபோது அவர் ஆலமர உச்சியில் ஏறியிருந்திருந்தார். 

இவ்வளவும் நடந்துகொண்டிருக்க காரணமான அந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் நிகழ்ந்திருந்தது. சந்திரலிங்கத்தின் மனைவி அந்த நிகழ்வை இலங்கை வானொலி விசேடச் செய்தியில் கேட்டிருந்தார். வெங்காயத்திற்கு நீர் இறைத்துக்கொண்டிருந்த தன் கணவனுக்கு அந்தச் செய்தியை சொல்லிவிடும் அவசரத்தில் உணவையையும் எடுத்துக்கொண்டு தோட்டத்திற்கு ஓட்டமும், நடையுமாக சென்று, செல்வி.ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் சாவடைந்தார் என்ற அந்தச் செய்தியை தான் முதலில் சொன்னார். ஒருகணம் திகைத்த சந்திரலிங்கம் “என்னடி வேசை சொல்லுறாய்?” என்று மண்வெட்டியால் ஓங்கி தலையில் அடித்துவிட்டார். பின் நிலைகுலைந்து தடுமாறி நின்ற மனைவியின் கையை பிடித்து தரதரவென்று இழுத்துக்கொண்டு வீட்டுக்கு ஓடினார். வானொலியைப் போட்டு இலங்கை வானொலி சேவையை கேட்டபோது அது திரும்பத் திரும்ப செல்வி.ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் சாவடைந்தார் என்ற ஒரே செய்தியை சொல்லிக்கொண்டிருந்தது. வானொலிக்கு ஓங்கி ஒரு உதைவிட்டார்.    பின் நேரே ஆதிகோவிலடிக் கடற்கரைக்கு சென்று யாராவது இராமேஸ்வரம் போகிறார்களா என்று விசாரித்துப் பார்த்தார். யாருமில்லாது போக, பேப்பயலுகள் என்று திட்டியபடி கடலுக்குள் இறங்கி நடந்தார்.

எந்த நேரமும் சனம் நிறைந்திருக்கும் கடற்கரை அது. கருவாடும், காகங்களும், கட்டுமரங்களும், மனிதர்களுமென கரை முழுதும் காய்ந்து கொண்டே இருக்கும். இரவு முழுதும் நீரின் மேல் உறங்கியும், உறங்காமலும் இருந்தவர்கள் ஆங்காங்கே அமைக்கப் பட்டிருக்கும் கொட்டில்களில் இருந்து பொழுதைப் போக்குவார்கள். சந்திரலிங்கம் கடலுக்குள் இறங்கிப் போவதை, கடற்கரைக் கொட்டில் ஒன்றில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தவர்கள் கண்டபோது, முதலில் அது ஒரு சாதாரண நிகழ்வு என கவனத்தில் எடுக்கவில்லை. அவர் முருகைக் கற்களைத் தாண்டிய பின்தான் தற்கொலை செய்யத்தான் போகிறார் என்று அவர்களுக்குத் தோன்றியது. “டேய் தாலியறுத்தது நில்லுடா”, என்று விரட்டிச் சென்று கடலுக்குள்ளேயே ஆளை அமத்தி அரை மயக்கத்துடன் இழுத்துவந்தார்கள். 

வலையில் பொத்தல் பார்த்துக்கொண்டிருந்த சரசுவதி ஆச்சியின் கணவன், என்ன கூட்டம் கூடி இருக்கிறது என்று பார்க்க வந்த போதுதான் அவரைப் பார்த்தார். “அட பக்குவமா, என்ன நடந்தது?”  என்று கேட்டபோது, நிமிர்ந்து பார்த்த அவர் பதட்டமேதுமில்லாமல்,  “உடம்பெல்லாம் சொறி அதுதான் உப்புத்தண்ணியில குளிக்க வந்தனான். கடலுக்க இறங்க உவங்கள் அள்ளிக் கொண்டுவந்து போட்டுட்டாங்கள்”, என்று சொன்னார். பின் மெதுவாக எழும்பி  மண் ஒட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து உதறிக் கட்டிவிட்டு, நின்று நிதானமாக அவர்களை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தார். பின் நேரே நடந்து சரசுவதி ஆச்சியின் வீட்டுக்கு சென்றார். அதன் பின் நிகழ்ந்தவைகளையே மேலே வாசித்திருந்தீர்கள்.

சந்திரலிங்கம் எதைச் செய்தாலும் அதில் ஒரு பக்குவம் இருக்கும். கடிக்கவெனக் குலைத்து வரும் நாயைக் கூட பக்குவமாகத் தான் கையாள்வார். எந்தவித சத்தமுமில்லாமல் ஆடாமல் அசையாமல் அந்த இடத்தியிலேயே குந்தி இருந்துவிடுவார். ஆக்ரோஷமாக வந்த நாயும் என்னவோ எதோ என்று மெதுவாக வந்து ஆளைச்சுற்றி மணந்துப் பார்த்துவிட்டு திரும்பிப் போய்விடும். என்ன காரியமென்றாலும் எந்த அவரசமோ அவதியோ அவரது நடவெடிக்கைகளில் இருக்காது. அதனால் ஊரில் உள்ளவர்கள் அவரை பக்குவம் என்றும் அழைப்பார்கள். ஒருமுறை பக்குவம் என்ற பெயருக்கு யாரோ மொட்டைக் கடிதம் எழுதி போட்டிருந்தார்கள். தபால்க்காரரும் தேடிக் கொண்டுவந்து கொடுத்திருக்கிறார். அவர் அதனைக் கிழித்துப் பார்த்து பின் அது தனக்கு வந்த கடிதம் இல்லை என்று தபால் கந்தோரில் கொண்டுபோய் தபாலதிபரிடம் கொடுத்து சொல்லியிருக்கிறார்.

இவ்வளவு அற்புதமான மனிதருக்கு அறிமுகமான பல இடங்களிலும் கல்யாணத்துக்காகப் பெண் கேட்டு ஆள் அனுப்பியும், யாரும் பெண் கொடுக்க மறுத்துவிட்டார்கள். மிதிச்சால் மிதிச்ச இடத்து புல்லும் சாகாது, அப்படியொரு நல்ல மனிதன் என்று சொன்னார்களே தவிர அவருக்கு பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை. அதற்கு ஒரேயொரு காரணம் தான். அவருக்கு நடிகை ஜெயலலிதாவிடம் இருந்து வந்த கடிதம். அதில் காதலுடன் ஜெயலலிதா என்று கையொப்பமிட்டிருப்பார். அதை ஊரெல்லாம் காட்டி ஜெயலலிதாவும் தானும் காதலிப்பதாகச் சொல்லித் திரிந்திருந்ததால், அவரை அரைப் பைத்தியம் என்ற கதை ஊருக்குள் பெருகியிருந்தது

வெண்ணிற ஆடை படத்தை யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில் பார்த்த பின் சந்திரலிங்கம் ஜெயலலிதாவை அந்தரங்கமாக நேசிக்கத் தொடங்கினார். அடிமைப் பெண் படத்தையும் பார்த்தபின் வாழ்வே ஜெயாவுடன் தான் என்று தீர்மானித்துவிட்டார். தீர்மானித்தது சரி, அதை எப்படி ஜெயலலிதாவுக்கு தெரியப்படுத்துவது இரண்டு மூன்று நாட்களாக வைரவர் கோயில் மடத்தில் குறுக்கு நெடுக்காக கிடந்தும், இருந்தும் யோசித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்தார். நேரே போவது, அதற்கு முன் ஒரு கடிதம் எழுதுவது, அதில் தன் காதலையும் சொல்வது.

தீர்மானித்த பின், எழுந்து கோயில் கிணற்றில் தோய்ந்து வைரவருக்கு நேர்த்தி வைத்தார். வழமையாக ஆலமரத்தின் கீழ் இருக்கும் பிள்ளையாரையும் வணங்கித்தான் செல்வார். அன்று பிள்ளையார் பக்கமே செல்லவில்லை. வீட்டுக்கு சென்று தோட்டத்தில் நின்ற வாழையில் கப்பல்குலை ஒன்றை வெட்டிக்கொண்டு ஜேபி மயில்வாகனர் வீட்டுக்குச் சென்றார்.

ஊரில் என்ன கடிதமென்றாலும், அது அரச மந்திரிமாருக்கு என்றாலும், அல்லது வெளியிடங்களில் இருக்கும் பிள்ளைகளுக்கு, என்றாலும் எல்லோரும் கடிதம் எழுத மயில்வாகனரிடம் தான் போவார்கள். அவரும் அவர்கள் கொண்டுவரும் பொருளுக்கு ஏற்ப சூடு சுரணை ஏத்தி கடிதம் எழுதி வாசிச்சும் காட்டுவார். அவர்கள் கையொப்பம் இட்டதும், கடித உறையில் வைத்து முகவரியை எழுதி நிறைவாக கொடுப்பார்.

மயில்வாகனர் கடிதங்களை எழுதவும், வாசிச்சுச் சொல்வதற்காகவும் இதர அலுவல்களைச் செய்வதற்காகவும், வீட்டின் முகப்போடு சேர்த்து சரிவாக ஒரு பத்தி இறக்கி வைத்திருக்கிறார். அதற்குள் ஒரு மேசை இரண்டு கதிரைகள். தவிர ஒரு பனைமரக் குத்தி. தன்னைத் தேடி வருபவர்கள் தராதரத்தை பொறுத்து தானே எழுந்து அழைத்துவருவார். அவர்களுக்குத்தான் கதிரை. மற்றவர்கள் பனங்குத்தியில் தான் இருக்கவேண்டும். சும்மா ஒரு சாட்டுக்கு, ஏன்டாப்பா கதிரையில் இரன் என்று சொல்லுவார். ஆனால் அவர்கள் பனங்குத்தியில் தான் இருக்கவேண்டும். மாறி கதிரையில் இருந்தவர்களை ஏதாவது ஒரு சாக்கு வைத்து, “என்னதான் எனக்கு சமனாக நீ கதிரையில் இருந்தாலும் பார், உனக்கு இது விளங்கேல்லை. அதுக்கு தாண்டாப்பா அது அது அங்கங்கு இருக்கணும் என்றது”, என முகத்தை முறிக்குமாப் போல சொல்லிவிடுவார்.

அதிகாலை நான்கு மணிக்கே எழுந்துவிடும் மயில்வாகனர் தான் வளர்க்கும் கிடாய்க்கு ஆலமர இலை பொறுக்கி வரவென்று கோயிலடிக்கு செல்வார். ஆனால் பிரதான காரணம் அதுவல்ல. என்னதான் கல்வீடு கட்டி வீட்டோட கக்கூசு கட்டி வச்சிருந்தாலும், அவருக்கு அதில் குந்தி இருந்து காலைக்கடன் கழிக்க இயலவில்லை. நாலுசுவருக்க எப்படிப் போகும் என்றுதான் கேட்பார். வயல் வெளியில் போய் நல்ல வெளிச்சம் படுற இடமாக குந்தி இருந்திட்டு, குளத்தில் கழுவி பின் வாசிகசாலையில் அன்றைய நாள் பத்திரிக்கைகளை வாசிச்சு முடித்துவிட்டு வீடு வருவார். அப்படியே ஆரம்பிக்கும் அவரது நாள். எப்படியும் வாசலில் இரண்டு மூன்று பேர் காத்திருப்பார்கள். அவர்களைப் பார்த்த உடனேயே அவர்களைக் கொண்டு செய்விக்கவேண்டிய வேலைகள் நினைவுக்கு வந்துவிடும். “என்ன கந்தா உன்னைத்தான் நினைச்சன். வேலியெல்லாம் கழண்டு போச்சு. உனக்கு எப்ப நேரம் வரும்?”, என்று கேட்பார். “அய்யா இப்பவே அடைச்சிடுறன்”, என்று சொல்லி கந்தன் அந்த வேலையை தொடங்குகையில்தான் கந்தனுடைய அலுவலைப் பார்க்கத் தொடங்குவர். 

வாசலில் வாழைக்குலையைச் சுமந்து கொண்டு நின்றவரைப் பார்த்து புன்னகைத்தார் மயில்வாகனர். வராதவன் வந்திருக்கிறான், எதோ பெரிய அலுவல் போல என தனக்குள் சொல்லிக்கொண்டு, அட! பக்குவமா, வா. என்ன வாழைக்குலையோடு? சரி, உதில வை. வா! வந்து இதிலை இரு”, என்று எழுந்து வந்து வந்து வரவேற்றார். “விசயத்தச் சொல்லு”, என்று கொப்பியும் கையுமாக தொடங்கினார். முதல் விடய குறிப்புகளை எடுத்துவிட்டு பிறகு தான் தன் மொழியில் கடிதத்தை எழுதுவது அவரது வழமை. 

சந்திரலிங்கத்திற்கு கடிதத்தைத் தொடங்குவதற்கான முதல் வரி தோன்றவேயில்லை. ஜெயலலிதாவுக்குவிற்கு எழுதும் கடித முதல்வரி எப்படி இருக்கவேண்டும். அவளது கண்களைப் பற்றியா அல்லது வட்டமுகம் பற்றியா, நெற்றியில் இருந்த பொட்டு பற்றியா அல்லது அவளது வெள்ளைக் கலரில் இருந்தா என்று பெரிய குழப்பமாக இருந்தது. மயில்வாகனர் கொப்பியும் கையுமாக பக்குவத்தை பார்ப்பதுவும், அவர் கண்களை விலக்கி அங்குமிங்கும் பார்ப்பதுவுமாக சில நிமிடங்கள் கழிந்தன. இறுதியாக கண்களை நேரே பார்த்த பக்குவம் ஒன்றுக்கு இருந்திட்டு வருவதாக ஆள்காட்டி விரலைத் தூக்கி காட்டினார். ‘அதுக்கே இவ்வளவு தவிச்சனி? போ, போட்டு கெதியா வா. எனக்கும் வேற அலுவல் இருக்கு’, என்கிறார்.

மூத்திரம் பெய்வதுபோல குந்தி இருந்து யோசனையில் மூழ்கினார் சந்திரலிங்கம். திடீரென கையை உதறிக்கொண்டு எழுந்து வந்து, அய்யா எழுதுங்கோ! அம்மம்மா, காற்று வந்து என்னைத் தொட்டுப் பாடும், அது உந்தன் பேரை சொல்லி நாணும்” என்று சொல்லிவிட்டு இருந்துவிட்டார். அதற்குப் பிறகு எதுவுமே வரவில்லை எல்லாமே சூனியமாகி இருந்தது அவருக்கு. நிமிர்ந்து பார்த்த மயில்வாகனர்,  சரி மிச்சத்தையும் சொல்லும்”, என்கிறார். “நீங்களா ஏதாவது எழுதித் தாங்கோ. கூடவே நான் சுகம் கேட்டதாகவும் எழுதுங்கோ காணும்”, என்று இழுத்தார். சரி ஆருக்கு என்று கேட்டபோது மெதுவாக வீட்டுக்குள் எட்டிப் பார்த்துவிட்டு அவரைப் பாராமல் ஜெயலலிதாவுக்கு என்று சொன்னார். அப்போதுதான் கடிதம் யாருக்கு என்ற விடயமே மயில்வாகனருக்குப் புரிந்தது. திரும்பி வாழைக்குலையைப் பார்த்தார். நல்ல பழம். ஒரு கறுப்பு கூட இல்லை என்று எண்ணியபடி, “சரி, இரும் எழுதுறன்”, என்றுவிட்டு எழுதத்தொடங்கினார்.

எழுதியதை மடித்து கவரில் வைத்த ஒட்டியபின்தான் சந்திரலிங்கத்துக்கும் முகவரியும் தெரியாது என்ற விடயம் தெரிந்தது. என்னவழி என யோசித்தவர், நடிகை ஜெயலலிதா தமிழ்நாடு சென்னை இந்தியா என்று எழுதி கொடுத்துவிட்டார். பின்னொரு நாளில் மயில்வாகனத்தார் தனக்கு சென்னைக்குள் தான் தமிழ்நாடு இருக்கிறது என்றது சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனால் பதில் கிடைத்தததும் சென்னைக்குள்தான் தமிழ்நாடு இருக்கிறது என்பது உறுதியாகிவிட்டது என்று சொல்லியிருந்தார் என்பது வேறு கதை.

கடிதத்துடன் அலைந்த சந்திரலிங்கத்திற்கு கல்யாணமும் நடந்தது. ஆள் அதன் பிறகு நல்ல திருத்தம் எனலாம். ஆனாலும் இடைக்கிடை புழுக்கிண்டுவதுபோல ஏதாவது செய்துவிடுவார். அப்போதெல்லாம் அவரது மனைவி, மாமி மாமி எண்டு காலை சுத்திக்கொண்டு திரிஞ்ச என்னை அறுவாள் ஏமாத்தியல்லோ சோத்தை தந்துவிட்டாள்”, என்று திட்டுவது நிகழும்.

இனி யாரும் பெண் கொடுக்கமாட்டினம் என்ற நிலைமை வந்தபோது வேற வழியில்லாமல் தமையனிடம் போய் நின்றார் சந்திரலிங்கத்தின் தாய். அவருக்கு சில மனக்குறைகள் இருந்தாலும் சொத்துக்கள் தங்களுக்குளேயே இருக்க வேண்டும் என்ற நினைப்பில் சம்மதம் சொல்லிவிட்டார். அன்று இரவே சந்திரலிங்கத்தையும் தமையன் மகளையும் ஒன்றாக இருத்தி சோறு கொடுத்தார்கள். அடுத்தநாள் அவர்கள் இருவரும் முன்பு நேர்த்தி வைத்த வைரவர் கோவிலுக்கு ஒன்றாக சென்ற போதுதான் ஊர்ச் சனத்துக்கு கல்யாணம் நடந்த விடயம் தெரியவந்தது. அன்றிலிருந்து ஊர்ச்சனம் சந்திரலிங்கத்தின்  மனைவியை ஜெயலலிதா என்று அழைக்கத் தொடங்கினர். 

“ஒருபனைக்கள்ளு உடம்புக்கு நல்லம். உங்களுக்குத்தான் வேண்டினது குடியுங்கோ”, என்று கணவனை வற்புறுத்தி குடிக்கக் கொடுப்பார். அதுவரை கள் என்றால் என்னவென்றே தெரியாதிருந்த சந்திரலிங்கம் அதன் பின் தினசரி அரைப்போத்தல் கள்ளு குடிப்பது வழமையாயிற்று. மகனுக்குத் தானே கள்ளு என நம்பியிருந்த சந்திரலிங்கத்தின் தாய் அதில் அரைவாசியை மருமகள் குடித்துவிடுவதைக் கண்டும் காணாமலும் இருந்துகொண்டார். சின்னஞ்சிறுசுகள் கொஞ்சம் குடிச்சால் ஒன்றாயிருந்து நல்லாயிருக்கும் என தனக்குள் சொல்லிக்கொள்ளுவார். 

அரைப்போத்தல் முழுப்போத்தலாகி, இரண்டு மூன்று என்று மாறிய நேரங்களில் மட்டும்தான் சந்திரலிங்கம் நாட்டுப் பிரச்சனை பற்றி பேசத்தொடங்குவார். போதையேறும்வரை அதுகுறித்து எந்த அபிப்பிராயமும் அவரிடமிருந்து வந்துவிடாது. யாழ்ப்பாணக் கோட்டையை கைப்பற்றப் புலிகள் சண்டை தொடங்கியநாளில், ஒருவர் கோட்டையில் விரைவிலே புலிக்கொடி பறக்கும் என்று சொன்னபோது சுற்றிவரப் பார்த்து, அவையின்ர கொட்டையில தான் பறக்கும் என்று சொல்லிவிட்டார். அதை அறிந்த புலிகள் அவரைக் கூப்பிட்டு இரண்டு கிழமைகள் வல்வெட்டித்துறையில் இருந்த முகாமுக்கு காலையும் மாலையும் போராளிகள் குளிக்கவென பெரிய தொட்டியை தண்ணீர் நிரப்பி விடவேண்டும் என்று தண்டனை கொடுத்தார்கள். அதன் பின் சுவருக்கும் காது இருக்கிறது, பாத்துக் கதையுங்கோ என்று மட்டும் சொல்லுவார். அதை தவிர்த்து வேறு வார்த்தைகளே அவரிடமிருந்ததில்லை. மீட்பு நிதி என்ற பெயரில் ஐந்து பவுன் கேட்டபோதுகூட மறுபேச்சு பேசாமல் கொண்டுபோய் கொடுத்திட்டு நீங்கள் திருப்பித் தரவேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்திருந்தார். பின்வந்த காலத்தில் ஈழம் மலர்ந்தே தீரும் என்று ஜெயலலிதா முழங்கியபோது.. நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமாக கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டே திரிந்திருந்தார். அந்த நேரங்களில் எல்லாம் ஜெயலலிதாவைக் குறித்து “என்னதான் இருந்தாலும் அந்தக் காலத்து சிங்கியடா அவள்”, என்று பெருமூச்சுடன் சொல்லுவார். 

இவ்வளவையும் மூச்சுவிடாமல் பக்கத்தில் நின்ற சரசுவதியின் கணவருக்கு சொன்ன சந்திரலிங்கத்தின் மனைவி, அவரின் காதோடு, “அந்த நேரங்களிலை கூட உந்தாள்  என்னை ஜெயலலிதா என்டுதான கூப்புடுறது. நானும் எதோ ஊர்ச்சனம் கூப்புடுறதால சொல்லுறார் என்றாலோ நினைச்சன். இவ்வளவு காலமும் அறுவான் விழுந்து சாகட்டும் விடுங்கோ”, என்று தன்  தலையில் அடித்துக்கொண்டு கூறினார்.  அதைக்கேட்ட சரசுவதி ஆச்சியின் கணவர் ஒரு கணம் யோசித்தார். பின்னர், பிள்ளை நீ ஜெயலலிதா கூப்பிடுறேன், வாங்கோ, என்று அவனைக் கூப்பிடு .. என்று கூறினார். 

சந்திரலிங்கத்தின் மனைவி அப்பா, நான் ஜெயலலிதா கூப்பிடுறேன் இறங்கி வாங்கோ என்று உரத்து சத்தமிட்டார். முதல்தரம் அசையாத சந்திரலிங்கம் மூன்றாவது தரமும் அதேபோல அழைத்தவுடன் மளமளவென்று இறங்கத்தொடங்கினார். கீழே இறங்கியவர் இறங்கிய வேகத்தில் மனைவியின் கன்னத்தில் அறைந்தார். எளிய வேசை என தனக்குள் திட்டியபடி  வீடு இருந்த திசையில்  நடக்கத் தொடங்கினார்.


-நெற்கொழு தாசன்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.